விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/செப்டம்பர் 2017/05
"என் சரித்திரம்", உ. வே. சாமிநாதையர் எழுதிய தன்வரலாறு ஆகும். இதில் 1855ஆம் ஆண்டு முதல் 1898ஆம் ஆண்டு வரை அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவை பதியப்பட்டுள்ளன. இதில் அவர் தமிழ் கற்ற வரலாறு, தமிழ் நூல்களைப் பதிப்பித்த வரலாறும் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக் கற்றால் ‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்ற இலக்கணத்துக்கு இதுதான் சரியான இலக்கியம் என்ற உண்மை தெளிவாகும். பேதங்களுக்கு அப்பாற்பட்ட போதம்தான் தமிழ்ஞானம் என்பது இந்நூலின் தொகுமொத்தப் பொருள் என்றால் அது மிகையாகாது. ’நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்ற தொடரை விளக்குவதற்காக இவர் மண்ணுலகில் பிறந்தார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது. டாக்டர் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரமும் மகாத்மா காந்திஜி அவர்களின் சத்திய சோதனையும் ஒரேதரம் உடையவை. இவற்றின் ஒவ்வோரெழுத்தும் வாய்மை நிரம்பிய வைர எழுத்துக்கள். என் சரித்திரம் கற்றால் தமிழார்வம் வரும். வந்த தமிழார்வம் வளரும். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுள் ஐந்தும், மூன்று பெரும் காப்பியங்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட பிற இலக்கியங்களும், இலக்கண நூல்களும் நின்று நிலவுவதற்குக் காரணம், டாக்டர் உ.வே.சா. அவர்களின் அயரா உழைப்பே என்பதை, இந்த மன்பதை அறியும். அந்த நூல்களைக் கற்கும் முன், ’என் சரித்திரம்’ என்னும் இந்த நூலைக் கற்க வேண்டும். இதனைக் கற்றால் தமிழ் நூல்களை அச்சுக்குக் கொண்டுவர அவர்பட்ட இன்னல்கள் புரியும். சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், ஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக்கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்திருந்தார்; தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு பொழுதுபோக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசி யென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசியன்று ஒரு வேளை மாத்திரம் உணவுகொள்ளும் விரதமுடையவர்; விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக்கொள்வதும் வழக்கமில்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசி யென்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக்கொண்டார். தஞ்சாவூராக இருந்தால் அரண்மனை ஜோதிஷர் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து அன்றன்று திதி, வார, நக்ஷத்திர, யோக, கரண விசேக்ஷங்கள் இன்னவையென்று பஞ்சாங்கத்திலிருந்து வாசித்துச் சொல்வார். அதற்காகவே அவருக்கு மான்யங்களும் இருந்தன. அரசருடைய பிரயாணத்தில் ஜோதிஷர் உடன் வரவில்லை. அதனால் ஏகாதசியை அரசர் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராதபடி விரதத்திற்கு ஒரு பங்கம் நேர்ந்ததைப் பற்றி வருந்திய அரசர் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியோர்களைக் கேட்கத் தொடங்கினர். |