விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2018-09-06

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்" பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் எழுதியது. இந்நூல் மாணவர்கள் பழங்காலச் செய்திகளை உணர்ந்து இன்புறும் வண்ணம் உயர்நிலப் பள்ளித் துணைப்பாட நூல்களுக்கு என அரசாங்கத்தார் குறிப்பிட்டுள்ள முறைப்படி எழுதப் பெற்றதாகும். வெறும் செய்திகளை மட்டும் குறிப்பிடாமல் இடையிடையே இலக்கியச் சுவைப்பட இந்நூல் எழுதப்பட்டுள்ளமை அதனை ஒரு முறை கண்ணுறுவோர்க்கு நன்கு விளங்கும். அங்ஙனமே அயல்நாட்டுச் செய்திகளுடன் ஆங்காங்கு நம் தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்களும் குறிப்பிடப்பட்டி குத்தல் இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

பழைய பழக்க வழக்கங்களை உணர்ந்து போற்றுதல் நம் கடமையாகும். அவை இளமாணவர் உள்ளங்களில் பதியுமானல் அத்தகைய மாணவர், தம் பிற்காலத்தில் நம் முன்னேர்களைப் போன்று பெருமை பெறுவர் என்பதை உளங்கொண்டே இந்நூல் எழுதப் பெற்றது.

தோற்றுவாய்


1. கிரேக்க மரபினரின் பொது வாழ்வு

திருவளர்ந்தோங்கும் இந்நிலவுலகில் பல்வேறு நாடுகள் தோற்றம் அளிக்கின்றன. அவற்றுள் ஒன்று கிரீஸ் நாடாகும். அஃது எல்லாப் படியாலும் சிறந்து விளங்குகிறது ; காலத்தால் முந்தியது; கலையால் தலைசிறந்தது. இந்நாடு தமிழ் நாட்டோடு போட்டி இடவும் வல்லது ; இலக்கிய வளத்திலும் நாகரிக வாழ்விலும் ஒப்புயர்வற்றது. ஆகவே, அந்நாட்டு ஒழுகலாற்றை ஒருவாறு உணரவேண்டியது நம்மனோர் கடனாகும். ‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்’ என்று எண்ணுவதுபோல் நம் நாட்டுப் பெருமையும் சிறப்பும் மட்டும் அறிந்திருப்பதில் பயனில்லை. பிற நாட்டு வரலாற்றையும் நன்குணர்ந்து. பின் இரண்டினையும் சீர்தூக்கிக் காண்பதே அறிவுடைமையாகும். ஆகவே, கிரேக்க நாட்டு வரலாற்றைத் துணையாகக் கொண்டு, அதனை ஈண்டு அறிவோமாக.

அக்கேயர்கள் கிரீஸ் நகர் வருகை

கிருஸ்துப் பெருமான் பிறப்பதற்குப் பதின் மூன்று நூற்றாண்டுகட்கு முன், அஃதாவது ஏறக்குறைய மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மொழியைப் பேசும் மரபினரான அக்கேயர்கள் (Achaeans) கிழக்கு ஐரோப்பாக் கண்டத் தினின்றும் கிரீஸ் நகரம் வந்து குடியேறினர். இவர்கள் குடிபுகுமுன் உள்நாட்டுக் குடிகளான பண்டைய கிரீஸ் நகர மக்கள், மிகவும் உயர்வான நிலையில் நாகரிகம் வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அந்நிலையில் இருந்தனர் என்பதை, அவர்கள் அமைத்திருந்த அழகிய அரண்மனைகளும், அவற்றில் அமைந்திருந்த திண்மைமிக்க சுவர்களும், கோட்டை கொத்தளங்களும், நன்கு சான்று கூற வல்லனவாக இருந்தன. இன்னோரன்ன இயல்பு வாய்ந்த கட்டட அமைப்பினைக் கண்ட அக்கேயர்கள் கிரீஸ் நகரிலேயே தாம் வாழ உறுதிகொண்டு, அதற்கு ஆவன அமைத்துக் கொண்டனர். நல் வாழ்வுக்கு இது நல்லிடம் என்று கண்ட இடங்களில், மக்கள் குடியேறி வசிக்க விரும்புவது இயற்கை தானே! ஒரு நாட்டின் பண்டைய ஒழுகலாற்றை அறிதற்குப் பண்டைய ஓவியங்களும் கல்வெட்டுக்களுமே உற்ற துணையாவன என்பது வரலாற்றூசிரியர் துணிபாகும். நம் தமிழ்நாட்டுப் பழங்கால நாகரிகத்தினையுணர்வதும் இவற்றால் தான் என்பதையும் ஈண்டு நினைவுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும். இவர்கள் எம்முறையில் அங்கு வாழ்வதற்கான வளங்களையும், நலன்களையும் ஏற்படுத்திக் கொண்டனர் என்பதை அவர்களது கல் ஒவியங்களாலும், கல் வெட்டுக்களாலும் தெள்ளத் தெளிய அறிந்துகொள்ளலாம்.

(மேலும் படிக்க...)