விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2018-10-27
"சிலம்பின் கதை" பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் அவர்கள் எழுதியது. தமிழில் இராமாயணம் பாரதம் இவற்றிற்கு வந்துள்ள உரைநடை நூல்கள் போலச் சிலப்பதிகாரத்துக்கு இதுவரை யாரும் எழுத முன்வரவில்லை. அதனை இவ் உரைநடை நூல் நிறைவு செய்கிறது.
இதன் தனிச் சிறப்பு : மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது. மற்றும் “சிலப்பதிகாரக் கதை” பலரும் அறிந்தது. காவியத்தைப் படித்தவர் அறிவர் எனினும் உள்ளே உள்ள எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வகையில் இது எல்லாச் செய்திகளையும் தருகிறது: முழுமையாக அறிய உதவுகிறது. இது ஒரு “நாட்டுக் காவியம்” - தமிழ் நாடு, நாட்டு மக்கள் அவர்கள் வாழ்வியலைத் தெள்ளத்தெளியத் தருவது இது. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்மையின் உயர்வு, அறத்தின்பால் நம்பிக்கை இம்மூன்றும் தமிழ் மக்களின் உயர்ந்த கோட்பாடுகள். இவற்றைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது. இவ்வகையில் இதனை ஒரு “திருக்குறள்” என்றே கூறலாம். திருக்குறளின் விரிவாக்கமே சிலப்பதிகாரம் எனலாம். உரைநடையில் படிக்கிறபோது மொழிச்சிக்கல் ஏற்படுவது இல்லை; பொருள் விளக்கம் நாடத் தேவை இல்லை. இன்றைய தமிழ் நடை தெளிவான போக்குடையது; பண்பட்ட நடை எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். “வாசகர் நடை” என்று தமிழ் இலக்கியம் பயிலாத்வர் எழுதும் நடை பழங்காலத்து நிலை, இன்று தூய இனிய எளிய நடையில் தர முடிகிறது. இதுவும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. (மங்கல வாழ்த்துப் பாடல்) புகார் நகர் சோழநாடு காவிரி பாயும் வளமிக்க நாடு; அதன் தலைநகரம் உறந்தை எனப்படுவது; அதன் துறைமுகம் புகார் நகர் ஆகும். இதனைப் பூம்புகார் என்றனர். இது வணிகச் சிறப்புக் கொண்ட வளமான நகராக விளங்கியது. இச் சோழநாட்டை ஆண்ட மன்னர்கள் வீரமும், கொடையும், நீதி வழுவா ஆட்சியும் கொண்டவராகத் திகழ்ந்தனர். திங்களைப் போன்று குளிர்ச்சியும், ஞாயிறு போன்று ஆட்சியும், மழையைப் போன்று கொடைச் சிறப்பும் உடையவராகத் திகழ்ந்தனர். இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை.
இப்பூம்புகார் நகரில் செல்வச் சிறப்பும், கொடைச் சிறப்பும் உடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மாநாய்கன் என்பான் அச் செல்வன்; வறியவர்க்கு ஈந்து வான்புகழ் நாட்டினான். |