விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2018-12-12
"கடவுள் வழிபாட்டு வரலாறு" பேரா. டாக்டர். ரா. சீனிவாசன் அவர்கள் எழுதியது.
யான் செல்லும் வழியில் எந்த மதத்துக் கோயில் தென்படினும், என்னை அறியாமல் என் இருகைகளும் கூப்பிக் கும்பிடும் ; சில இடங்களில் அரைக் கும்பிடாவது போடும். அப்படியிருந்தும், இந்நூலின் முற்பகுதியைப் படிப்பவர்கள் என்னை 'நாத்திகன்’ என்று கூறக் கூடும். நூல் முழுதும் படித்த பின் எனது கொள்கை புலனாகும். ஆத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் கடவுளர்களின் நிலைமையினும், யான் கும்பிடும் கடவுளர்களின் நிலைமை வேறு. கடவுளர்கள் எவ்வாறு கடவுளர்களானார்கள் என் பதிலேயே ஆத்திகரும் யானும் வேறுபடுகின்றோம். நூல் முழுதும் படித்தபின், நடுநிலைமையோடு தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன். நூல் முதல் என்னும் இந்தப் பகுதி, இந்த நூலின் எழுச்சிக்கு உரிய காரணத்தை விளக்கும் பகுதியாகும். சைவ சிந்தாந்தப் பற்று இளமையில் யான் முறுகிய கடவுள் பற்று உடையவனாக இருந்தேன் : திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஞானியார் மடத்தில் கல்வி பயின்றேன்; புலவர் பட்டம் பெற்றதும், மயிலம் அருள்மிகு பாலய சுவாமிகள் கல்லூரியில் பத்தொன்பதாம் வயதுத் தொடக்கத்திலேயே பிரிவுரையாளனாக அமர்ந்து பணியாற்றினேன் ; இந்த இரண்டு மடங்களின் தொடர்பினால் சைவப்பற்று-சைவ சித்தாந்தப் பற்று உடையவனாக இருந்தேன் ; சைவ சித்தாந்தக் கொள்கையைப் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றிப் பரப்பும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தேன். |