விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-03-26

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு" பாவலர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதியது.

இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.

இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.

அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும், தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார்.

அவருடைய வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஒர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஒர் எழுச்சி வரலாறு.

இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ் மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர்வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பெரியாரின் பெற்றோர்

பெரியார் இராமசாமி 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்டர். தாயார் பெயர் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்றோர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள்.

வெங்கட்டர் ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பனிரெண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார். வெங்கட்டருக்கு 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத்தாயம்மாள் ஒரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காக கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்டர் வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஒயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக்கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார்.

ஒரு மரம் பழுத்து விட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்டர் பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள்.

(மேலும் படிக்க...)