விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-06-24

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"நெஞ்சக்கனல்" நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதியது.

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சினைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது. இதற்கான சூழ்நிலையும் திறக்கிறது.

இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் ‘பெரிய’ குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். நான் நெருங்கியிருந்து கண்ட சில அரசியல்வாதிகளின் சாயல்களும் நான் விலகியிருந்து உணர்ந்த பல அரசியல்வாதிகளின் சாயல்களும் இதில் வராது என்று உங்களுக்கு இந்த முன்னுரையில் உத்தரவாதம் கொடுப்பது அவ்வளவு நியாயமாக இருக்க முடியாது அல்லவா? ‘ஆப்ஸர்வேஷன்’ எழுத்தாளனின் குணமாகுமா, குற்றமாகுமா? என்று உங்களைக் கேட்டால் நீங்கள் எப்படி முடிவு கூறுவீர்களோ  அப்படியே இது நியாயமுமாகலாம்; நியாயமாகாமலும் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய மனோதர்மத்தையே ஒரு நியாயமாக நிறுத்தித் திருவிழாவுக்குக் காப்புக் கட்டிக்கொண்டு கொடியேற்றுவதுபோல் அதனுயரத்தில் என்னுடைய சத்தியமான தேசிய நம்பிக்கைகளை ஏற்றி உயர்த்திவிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்குகிறேன். இதை இந்தச் சமயத்தில் எழுதுவதற்குச் சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எந்தச் சமயத்தில் எழுதினாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே; அதுதான் இந்தச் சமயத்திலும் காரணமாக இருக்கிறது; சிறப்பாகவும் இருக்கிறது. இனி. மேலே படியுங்கள்.

ஓ! ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே!

ஆம்! இப்போது நினைவு வருகிறது. இந்த நாவலைப் படிப்பதனால் என்ன இலாபம் என்று உங்களில் சிலர் கேட்கலாம்! அல்லது அப்படிக் கேட்க நினைக்கலாம்.

படிக்காமல் தவற விடுவதனால் நஷ்டம் நிச்சயமாக உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொன்னால் அப்படிச் சொல்வதற்காக என்னை மன்னிப்பீர்களா?

1

அந்த நிசப்தமே அங்கு ஒரு கெளரவமான சூழ்நிலை யைப் படைத்துக் கொடுப்பதாக இருந்தது. ஒரு மனிதனுடைய பிரவேசம் பல மனிதர்களுடைய பேச்சுக்களையும், குரல் விகாரங்களையும் ஒடுக்கி நிசப்தத்தைப் படைப்பது அந்த ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவும் இருக்கலாம்: பயமாகவும் இருக்கலாம். மரியாதையா, பயமா என்று விவாதித்து முடிவு காண்பதைவிட அந்த நிசப்தம் யாரோ ஒருவன் பலரிடமிருந்து ஒரே சமயத்தில் அடைகிற இரகசியமான வெற்றி என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

பலரிடையே ஆரவாரத்தையும், கிளர்ச்சியையும் படைக்க முடிகிறவன் எப்படித் தலைவனாகி விடுகிறானோ அப்படியே, சிலரிடையே நிசப்தத்தைப் படைக்கிறவனும் ஒரு தலைவன்தான். சொல்லப்போனால் நிசப்தத்திலிருந்துதான் ஆரிவாரமே பிறக்கிறது. ஆரவா ரத்துக்கு முந்திய நிசப்தம்தான் அந்த ஆரவாரத்தையே பிரித்துணர அடிக்கோடு போட்டுத் தருகிறது. மெளனத்தின் மறுபுறம்தான் ஆரவாரம். ஆரவாரத்தின் மறுபுறம் தான் மெளனம். பலரை நிசப்தமாக்கிவிட்டுத் தான் மட்டும் உரத்த குரலில் பேசுகிற ஒருவன் எப்படித் தலைவனோ அப்படியே, சிலரை நிசப்தமாக்கிவிட்டு அந்தச் சிலரின் மரியாதையை மெளனமாக வெல்கிறவனும் ஒரு தலைவன்தான்.

(மேலும் படிக்க...)