விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-07-26
"விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்" எஸ். எம். கமால் அவர்கள் எழுதியது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சிக்கு முன்பே தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் வெடித்தது. பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மு, சிவகெங்கைச் சீமையில் மருதிருவர், மற்றும் பல எண்ணற்ற வீரர்கள் விடுதலைப் போரில் தம் இன்னுயிரை ஈந்த வரலாற்றை நாம் அறிவோம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில், வெள்ளையனை எதிர்த்து, தன்னாட்சிக்கு வீர சபதம் ஏற்று, போர்க்கொடி உயர்த்திய ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைப் பற்றிய வரலாறு இதுவரை முழுமையாக அறிய முடியாமலே இருந்து வந்துள்ளது. இப்பொழுது அந்தக் குறையினை டாக்டர் எஸ். எம். கமால் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்' எனும் இந்நூலைப் படைத்ததன் மூலம் நிறைவு செய்துள்ளார். அரசு ஆவணக் காப்பகத்திலிருந்து சேதுபதி மன்னரைப் பற்றிய பல அரிய உண்மைகளைச் சேகரித்து இந்நூலில் தந்துள்ளார். மறவர் பாண்டிய நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் நெய்தலும் பாலையுமாக அமைந்திருந்த பகுதியில் இயல்பாகவே கடின வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்கள் மறவர்கள். அவர்கள் வாழ்ந்த மண்ணிலே பயிர்தரும் விளைச்சல் இல்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் உயிர் வளர்க்கும் வீரம் இருந்தது. புகழ் இருந்தது. பெருமை தரும் போர் ஆற்றலும் நிறைந்து இருந்தது. மான உணர்வும் அஞ்சாமையும் விஞ்சிய இந்த மக்கள், பாண்டியர்களது மாசு துடைக்கும் தூசுப் படையாக இருந்தனர். பகைவரைப் பொருதி பொன்றாத வெற்றியையும் புகழையும் சேர்த்தனர். |