விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 15
இந்தியா சுதந்திரம் பெற்றது. காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஜவஹர்லால் நேருவின் திறமையும், புகழும், அயல் நாட்டுக் கொள்கையும் உலக நாடுகளிடையே இந்தியாவுக்குத் தனித்த ஸ்தானம் பெற்றுத் தந்தன.
சுதந்திர இந்தியாவின் மதிப்பை உணர்த்தி, அயல் நாட்டு உறவை பலப்படுத்துவதற்காக நாடு தோறும் ராஜீயத் தூதுவர்களை நியமித்தது அரசாங்கம். விஜயலக்ஷ்மி சோவியத் ரஷ்யா சென்றாள், இந்தியாவின் ராஜீயத் தூதுவராக.
அந்நாட்டில் சில மாதங்கள் பணிபுரிந்து விட்டு அவள் அமெரிக்கா சேர்ந்தாள். அமெரிக்கா, மெக்ஸிக்கோ தேசங்களில் இந்திய அரசியல் தூதுவராகப் பொறுப்பு வகித்தாள். சுதந்திர இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய கோஷ்டிக்குத் தலைமை வகித்து ஐக்கிய நாடுகளின் சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் அவளுக்கு கிட்டியது.
அந்தச் சபையின் தலைமைப் பதவி 1953-ம் வருஷம் விஜயலக்ஷ்மியை வந்து அடைந்தது. அறுபது நாடுகளிலிருந்து விஜயம் செய்யும் பிரதிநிதிகள் கொண்ட அந்தச் சபையில், தலைமை பீடத்தில் அமர்ந்து மென்மையும் உறுதியும் கலந்த வகையில் ஆட்சி புரியும் விஜயலக்ஷ்மியின் சாமர்த்தியத்தைக் கண்டு புகழாதவர்கள் இல்லை எனலாம்.
உலகில் வேறு எந்தப் பெண்மணிக்கும் கிட்டாத பெரும் பாக்கியம் தனக்கு வாய்த்திருப்பது, ‘உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ள கொளரவமே ஆகும்’ என்றுதான் அவள் கருதுகிறாள்.
’உலகிலே அச்சமும் அமைதியின்மையும் நீடிக்கின்றன. உலகத்தைக் கவிந்துள்ள பயம் நீங்குவதற்கு சமாதானம் பற்றிய உறுதி தேவை. எல்லா நாடுகளின் சுதந்திர உரிமையும் கெளரவிக்கப்பட வேண்டியது அவசியம்’ என்று, ஐ.நா.சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் கூறினாள்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காகவும் அமைதிக்காகவும் தீவிரமாக உழைத்து வந்த தனக்கு உலக சமாதானத்துக்குப் பாடுபடும் வாய்ப்பு கிட்டியதே என்று எண்ணி மகிழ்ந்தாள் அவள். அவளுக்கு லட்சியத்தில் உறுதியான நம்பிக்கை உண்டு.
ஆயினும், உலகத்தின் ஏகாதிபத்திய நாடுகளின் ஆசைகளையும் செயல்களையும் கவனிக்கும் போது, சிந்தனையாளர்களின் உள்ளத்திலே இயல்பாக எழக் கூடிய சந்த்ந்ந்கம் அவளுக்கும் உண்டாகாமல் இல்லை.
ஐக்கிய நாடுகளின் சபை எந்த லட்சியத்தை அடையவேண்டும் என்று பாடுபடுகிறதோ, அத்தகைய சுதந்திரமும் பரஸ்பர நம்பிக்கையும் நீடிக்கும் உன்னத நிலைமை, ஏற்பட்டு விடும் என்று நம்புவது கூடச் சரியில்லையோ என்ற கவலை எனக்குச் சிலசமயம் எழத்தான் செய்கிறது. அந்த லட்சியம் எளிதில் சித்தியாகி விடக் கூடிய அற்புத ஜாலம் இல்லையே என்ற எண்ணமும் என் நினைவில் எழும். நாம் அந்த மகோன்னத நிலையை எட்டிப் பிடித்துவிடவில்லை என்பது உண்மைதான். எனினும், அதை நோக்கி நாம் மெதுமெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி நமக்கு உண்டு. இது விஜயலக்ஷ்மியின் கூற்று.
ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட் 1954-ம் வருஷம் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தாள். இப்பொழுதுதான் இலங்கைக்கு நான் முதல்முறையாகச் செல்கிறேன்’ என்று அவள் சொன்னாள். மேல்நாடுகளிலும், அமெரிக்காவிலும் சுற்றுப் பிரயாணம் செய்து ஜனங்களோடு தொடர்பு கொண்ட அளவுக்கு, தான் தென்னிந்தியாவில் யாத்திரை செய்யவில்லை என்பது அவளது அபிப்பிராயம். ஐக்கியநாடுகளின் சபைத் தலைமைப் பொறுப்பு தீர்ந்த பின்னர், இந்தியாவின் பல பகுதிகளிலும் சுற்றி மக்களின் நிலைமையை நன்கு உணரும் ஆசை தனக்கு இருக்கிறது என்று அவள் தெரிவித்தாள்.
தாய் நாட்டின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் அமைதிக்காகவும் தீவிரமாக உழைத்துப் புகழ்பெற்ற விஜயலக்ஷ்மிக்கு இப்போது 58 வயதாகிறது. எனினும் இளமைத் தோற்றமும், பெண்மைப் பொலிவும், இனிமைக் கவர்ச்சியும் அவளிடம் நிறைந்து காணப்படுகின்றன. மாறாத இளமை குடிகொண்டிருக்கிறது அவள் உள்ளத்திலே.
கவிக்குயில் சரோஜினி தேவியை உலகுக்கு அளித்த இந்தியா, கீர்த்திபெற்ற எத்தனையோ மாதர் திலகங்களை உலகத்திற்கு அறிமுகம் செய்த பாரதநாடு, அரசியல் மேதை அழகி விஜயலக்ஷ்மியையும் தந்துள்ளது. அதன் மூலம் அவளுக்குப் பெருமை அளித்துத் தானும் மாண்புற்றுத் திகழ்கிறது.
வாழ்க விஜயலக்ஷ்மி! உயர்க அவள் திறமை! அவள் லட்சியம் சிறப்புற்று வெற்றியுடன் விளங்கக் காலம் துணைபுரியும் என நம்புவோம்.