விஜயலஷ்மி பண்டிட்/அத்தியாயம் 7

அத்தியாயம் 7

1928-ம் ஆண்டில் மோதிலால் நேரு ஐரோப்பாவில் ஒய்வு பெற்றுக்கொண்டிருந்தார். கமலாவின் சிகிச்சைக்காக அங்கு சென்றிருந்த ஜவாஹரும், கிருஷ்ணாவும் 1927 டிசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பி விட்டதால் தந்தை நேரு தனியாகத்தான் இருந்தார், அச் சந்தர்ப்பத்தின் விஜயலக்‌ஷ்மியும் ரஞ்சித் பண்டிட்டும் இரண்டாவது தடவையாக ஐரோப்பிய யாத்திரையை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவர்களுக்கு சந்திரலேகா, நயன்தாரா எனும் இரண்டு பேர் இருந்தனர். அச்சிறு பெண்களை ராணி நேருவின் பாதுகாப்பில் விட்டு விட்டு விஜயலக்‌ஷ்மி கணவருடன் ஐரோப்பா சென்றாள். குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டது. குழந்தைகளிடம் அவளுக்குப் பிரியம் அதிகம்தான் ஆயினும் அவர்களைக் கண்காணித்து. அவர்களது தேவைகளைக் கவனித்து வளர்ப்பது என்பது சிரமம் மிகுந்த தொல்லையாகத்தான் தோன்றியது கிருஷ்ணாவுக்கு.


அந்த வருஷம் இந்தியாவில் நெடுகிலும் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றன. மக்களிடையே புதிய விழிப்பும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டிருந்தன. அவர்கள் செயலிலே புதுச்சக்தியும் நெஞ்சுறுதியும் பிரதிபலித்தன. சத்தியாக்கிரக இயக்கம் வெற்றிகரமாக வளர்ந்து வந்தது. வேகமான அபிவிருத்தி காணப்பட்டதில்லை; ஆயினும் ஏதோ மகத்தான நிகழ்ச்சி ஒன்று திடீரென வெடிக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்து வாழ்ந்ததாகக் தோன்றியது. எந்த எதேச்சாதிகார சக்தியாலும் அணைபோட்டுத் தடுத்துவிட இயலாத தன்மையில் மக்களின் சக்தி உருவாகிக் கொண்டிருந்தது. அது ஆங்காங்கே மலர்ச்சியுற்ற குடியானவர்களின் கிளர்ச்சிகள், இளைஞரின் இயக்கங்கள், சட்ட மறுப்பு வேலைகளில் எல்லாம் உயிர்மூச்சு காட்டியது. காங்கிரசின் பலம் பன்மடங்கு பெருகி ஓங்கியது.

எங்கும் மகாநாடுகள்ː உறுதிப் பிரதிக்ஞைகள் பொதுநலப் பணிகள், எல்லோரும் தொண்டர்கள் இந்த நிலை இந்திய நாட்டின் பரப்பு முழுவதிலும் வியா்பித்திருந்தது. தொழில்களைத் துறந்தார்கள் பலர். பட்டங்களைத் துறந்தார்கள் பலர். பள்ளிப் படிப்பைத் துறந்தார்கள் மாணவ மாணவிகளில் எண்ணற்றோர். கிராமம் கிராமமாகச் சென்று தேசிய உணர்வை வளர்த்தார்கள். சுதந்திரம் நமது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவோம்' என்ற உறுதி எல்லோரது இதய ஒலியாகவும் மாறும்படி பணியாற்றினர் தொண்டர்கள். நம் நேருவும், அவர் தங்கை கிருஷ்ணாவும் இத்தகைய நாட்டுப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

மேல்நாடு சென்று திரும்பிய விஜயலக்‌ஷ்மியும் ரஞ்சித் பண்டிட்டும் நாட்டு நலனையே தங்கள் வாழ்க்கை லட்சியமாக ஏற்று, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதில் உற்சாகம் காட்டினார்கள்.

காங்கிரஸ்காரர்கள் மறியல், ஊர்வலம் முதலியவைகளை வெற்றிகரமாக நடத்தி வந்தார்கள். அரசாங்கத்தினர் தடியடி தர்பாரை வெறித்தனமாக நிலைநாட்ட முயன்றார்கள். -

காங்கிரஸ் தலைவர்களிடையே மிதவாதமும் தீவிர வாதமும் முறைத்து நின்று பின் மோதத் தொடங்கி விட்டது. பரிபூரண சுதந்திரமே நமது லட்சியம் என்பது தீவிரவாதிகளின் விடாப்பிடியான சுலோகமாக அமைந்தது. சர்வகட்சி மகாநாடு கூட்டவேண்டும்; பிரிட்டிஷார் மனமுவந்து அளிக்கத் தயாராக இருக்கும் புதிய அரசியல் திட்டத்தைக் கைநீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மிதவாதிகளின் கருத்து.

ஜவாஹர்லால் தந்தையின் மிதவாதத்தை எதிர்த்தார்.தந்தைக்கும் மகனுக்குமிடையே முன்பு எப்போதும் ஏற்பட்டிராத வகையில் பலத்த அபிப்பிராய பேதம் தடித்து நின்றது. அதனால் ’ஆனந்த பவன’த்தில் சோகம் மனத்துத்தொங்கியது.ஜவாஹரின் தாயும் விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் வாய்விட்டுச் சொல்ல முடியாத அளவு வேதனயைச் சுமந்து வருந்தினர். அவர்கள் யாருக்காகப் பரிந்து பேசமுடியும்? தங்கள் பக்திக்கும் பாசத்துக்குமுரிய இருவரில் யாரிடம் அறிவுரை கூறிப்புயலைத் தவிர்க்க முடியும்?

அத்தகைய ருக்கடியான கட்டத்தில் கல்கத்தா காங்கிரஸ் கூடியது. அதற்குத் தலைவர் மோதிலால் நேரு, அலகாபாத்திலிருந்து பெரிய கோஷ்டி கிளம்பிச் சென்றது தலைவருடன். ராணி நேரு, விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா முதலியவர்கள் ரயில்வண்டித் தொடரில் விசேஷமாக இணைக்கப்பட்ட ஸ்பெஷல் போகிகளில் பிரயாணம் செய்து, கல்கத்தா நகரைச் சேர்ந்தார்கள். அந்தக் காங்கிரஸ் பிரமாத தடபுடல்களோடு நடைபெற்றது. தலைவருக்கு ராஜமரியாதைகள் காட்டினார்கள். சுபாஷ் போஸின் தலைமையில் இளைஞர் குதிரைப்படை ஒன்று அணிவகுத்து நின்றது ; தலைவர் போகு மிடங்களுக்  போகுமிடங்களுக்கெல்லாம் முன்னும் பின்னும் பாரா கொடுத்து நகர்ந்தது.

அவ்வளவு ஆர்ப்பாட்டமாக கடந்த மகாசபையின் மேடையிலே மகன் தந்தையை எதிர்த்து நின்றார். 'குடியேற்ற நாட்டு அந்தஸ்து' எனும் கொள்கையை வற்புறுத்துவதற்காக சர்வகட்சி மகாநாடு கூட்டவேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஜவஹர்லால் எதிர்த்தார். என்றாலும் தீர்மானம் நிறைவேறியது. அதுமட்டுமல்ல, ஜவஹர்லால் நேருவையே காங்கிரசின் பொதுக் காரியதரிசியாகத் தேர்ந்தெடுத்தார்க்ள்.

1929-ம் வருஷம் நேரு குடும்பத்தினருக்கு அதிக உற்சாகமும் பெருமையும் அளித்தது. அவ்வருஷத்திய காங்கிரஸ் லாகூரில் கூடியது. அதற்கு ஜவஹர்லால் நேரு தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இது அரியதொரு நிகழ்ச்சி. காங்கிரஸின் சரித்திரத்திலேயே இதுவரை இத்தகைய நிகழ்ச்சி ஏற்பட்டதில்லை. காங்கிரஸ் போன்ற தேசீய ஸ்தாபனத்தில் தந்தைக்குப் பிறகு மகன் என்ற முறையில் தலைமைப்பொறுப்பை ஏற்பது, உலகத்தில் எங்குமே எப்பொழுதுதாவது ஏற்படக் கூடிய அரிய வாய்ப்பாகத்தான் இருக்க முடியும். அடிக்கடி சகஜமாக நடைபெறக் கூடிய சம்பவம் அல்ல இது' என்று நேரு குடும்பத்தினர் அகமகிழ்ந்தார்கள். நாட்டு மக்கள் இந்த அரிய வாய்ப்பை எண்ணி எண்ணி, எடுத்துப் பேசி, உளம் களித்தார்கள்.

அக் காங்கிரஸ், மிகச் சிறப்பான முறையில் நடந்தது தனது சொத்துக்குத் தனி வாரிசான ஜவஹர் அரசியல் பொறுப்புகளிலும் தனக்குச் சரியான வாரிசு தான் என்ற பெருமையோடு, ஆனந்தப் பெருக்குடன், தந்தை மகனிடம் தலைமைப் பதவியை அளித்தார். நாட்டு நல்ம் கருதும் மன்னன் இளவரசுக்குப் பட்டம் சூட்டியது போலிருந்தது அந்தக் காட்சி.

இச் சம்பவத்தினால் மாத்திரமே தனித்துவம் பெற்றுவிடவில்லை லாகூர் காங்கிரஸ். பஞ்சாப்பில் ரவி நதிக் கரையிலே கூடியிருந்தது மகாசபை. எலும்புக் குருத்தையும் தொட்டுத் தடவிக் கிசுகிசு மூட்டும் கடுங்குளிர் எங்கும் நிலவியது, பனி மலிந்த டிசம்பர் மாதத்தின் அதிகாலை நேரத்தில் ஆயிரமாயிரம் பேர்கள் ஒருங்கு கூடி,ஒரு மனமாய்-ஒரே குரலாய் சுதந்திரப் பிரதிக்ஞை'யை மேற்கொண்டார்கள்.

வாலிப சமுதாயத்தின் லட்சியத் தலைவரான் ஜவஹர்லால் நேரு பதவி ஏற்ற காங்கிரஸில், சுதந்திரப் பிரதிக்ஞை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் மூலம் இந்திய சரித்திரத்த்தில் புதுயுகம் பிறந்தது என்றே மக்கள் நம்பினார்கள். கீழ்வானிலே உதயத்தின் பொன் ரேகைகள் தொட்டுத் தடவி ஒளிபூசி முன்னேறும் புனித வேளையில் தலைவர் ஜவஹர் சுதந்திரப் பிரதிக்ஞையை உரத்த குரலில் படித்தார். ஆண், பெண், சிறுவுர் என்ற பேதமற்று எல்லோரும் உள்ளத்தின் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து அதை உச்சரித்தார்கள். அதை நிறைவேற்றியே தீருவோம், என்ற உறுதியோடு கலைந்தார்கள். அதற்காக எவ்விதக் கொடுமைகளையும் துயரங்களையும் சகித்துத் தலை நிமிர்ந்து சமரிடுவோம் என்று துணிந்தார்கள். விஜயலக்ஷ்மியும், கிருஷ்ணாவும் அண்ணா நேரு காட்டும் வழியில் வீரமுடன் முன் செல்வது என்ற விரதம் கொண்டனர். எதிர்காலம் மனோகரமாக இராது. காரிருளும் கொடுமை பலவும் நிறைந்து அச்சமெழுப்பும் சூழ்நிலையே காணப்படுகிறது என அவர்கள் உணர்ந்தார்கள். ஆயினும், மனம் தளர்ச்சியுற வில்லை. உண்மையில், விவரிக்க இயலாத ஓர் வகைத் துணிச்சல் தான் அவர்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது.

பலவகைகளிலும், அவர்கள் வாழ்க்கையில் புது அத்தியாயந்தான் ஆரம்பமாகியிருந்தது.

லாகூர் காங்கிரஸ் கூடுவதற்குச் சில மாதங்கள் இருந்த போதே, மோதிலால் நேரு தமது பெரிய மாளிகையை நாட்டின் பொதுச் சொத்தாக மாற்றி, காங்கிரஸிடம் ஒப்படைத்தார். நேரு குடும்பத்தின் 'ஆனந்த பவனம்' இந்தியாவின் 'சுயராஜ்ய பவனம்' ஆகிவிட்டது.

மோதிலால் நேரு ஜவஹர் குடும்பத்துக்காகப் புதிதாக ஓர் வீடு கட்டியிருந்தார். அருமையான இல்லம் அது. தங்தைக்கு மகிழ்வும் பெருமையும் தரும் வகையில் அமைந்த கட்டிடம் அதில் நேரு குடும்பத்தினர் குடி புகுந்தனர். அந்தப் புது வீடு 'ஆனந்த பவனம்' என்ற பெயரையே ஏற்றது. தாம் எந்த வீட்டில் வசித்தாலும், அது 'ஆனந்த பவன'மாகத் தான் விளங்க வேண்டும் என்பது மோதிலாலின் ஆசையாம்.