விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/இராமநாதபுரம் கோட்டை


2
இராமநாதபுரம் கோட்டை

மறவர் சீமையின் மகுடம் இராமநாதபுரம் கோட்டை, இதனை அமைத்த மன்னர் யார் என்பது வரலாற்றில் இல்லை. ஆனால் இங்கு இருந்த மண்கோட்டையை கல்கோட்டையாக அமைத்து சேதுபதி மன்னர்களது தலைமையிடமாக மாற்றி அமைத்தவர் வரலாறு புகழும் கிழவன் சேதுபதி என்ற ரகுநாத சேதுபதி (1675-1710) ஆகும்.[1] ஏனெனில் அதுவரை சேது மன்னர்கள் குலோத்துங்க சோழ நல்லூர், விரையாதகண்டன் புகலூர், ஆகிய ஊர்களை தங்களது இருப்பிடங்களாகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தனர். கிழவன் சேதுபதி ஆட்சிக் காலத்தில் சேதுநாட்டின் எல்லைகள் பரந்து விரிந்த பரப்பினை கொண்டிருந்ததாலும் எல்லைகளில் இருந்த மதுரை நாயக்க அரசு, தஞ்சை மாரத்திய அரசு ஆகியோரின் கண்ணோட்டம் இந்த கடற்கரை நாட்டின் மீது நிலைத்து வந்ததாலும் இந்த நாட்டின் தலைமையிடமாக இராமநாதபுரத்தை தேர்வு செய்தார் கிழவன் சேதுபதி


இந்த கோட்டை இருபத்து ஏழு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்ட கல்கோட்டையாக போர்ப் பணிக்கு உதவும் நான்கு அலங்கங்களைக் கொண்டதாகவும் அவர் அமைத்தார். நீண்ட சதுரவடிவில் கிழக்குப் பக்கத்தில் மட்டும் ஒரே ஒரு தலைவாயிலைக் கொண்டதாகவும் நான்கு புறமும் ஆழமான அகழியை அங்கமாகவும் பெற்றிருந்தது இந்த அாண். இதனையும் இதனுள் அமைக்கப்பட்ட இராமலிங்க விலாசம் என வழங்கப்படும் அழகிய மாளிகையையும் அமைக்க சேதுபதி மன்னருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அமைச்சர் வள்ளல் சீதக்காதி ஆவார்.[2] கிழக்கரை நகரின் பெருவணிகரான அவரது இயற்பெயர் செய்கு அப்துல் காதிரு மரக்காயர் ஆகும். இந்தக் கோட்டை அருகே நடந்த பெரும் போர்களில் கிழவன் சேதுபதி மதுரையிலிருந்து வந்த திருமலை மன்னரது படையையும் பின்னர் இராணி மங்கம்மாளது படையையும் அழித்து ஒழித்து, மறவர் குடியினரது மங்காத புகழை வரலாற்றில் பதித்து வைத்துள்ளார்.[3]


இந்தக் கோட்டை பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்விதம் காட்சியளித்ததாக :

" ...இந்தக் கோட்டை அரணில் நாற்பத்து நான்கு அலங்கங்கள் இருக்கின்றன. அதனைச் சூழ்ந்து அகழியும் உள்ளது. ஆனால் தண்ணிர் இல்லை. மழைக்காலத்தில் தான் இங்கு நீர் நிறைந்து இருக்கும். கோட்டையின் நாலாபுறத்திலும் பரந்த மைதானம். கோட்டை மீது பெரிதும் சிறிதுமான பீரங்கிகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து நான்கு பெரிய பெங்காசிப் பீரங்கிகளும் உள்ளன. அவை வெடிக்கின்ற குண்டுகளை சுமார் இரண்டு மைல் தொலைவு வரையில் எறிய முடியும். மற்றும் இன்னும் ஐம்பது பீரங்கிகள், கோட்டைக்குள் உள்ளன இந்த கோட்டைக்கு கிழக்கே ஒரு பேட்டையும், அதனையடுத்து ஒரு கோவிலும்-குளமும் உள்ளன. வடக்கே ஏராளமான விளை நிலங்கள்... ஒரு ஆவணத்தில்[4] காணப்படுகிறது


ஆரவாரமில்லாது அமைதியாக இருந்த இந்த கோட்டையை கைப்பற்ற, கி.பி. 1771-ல் தஞ்சை மன்னன் துல்ஜாஜியினி தலைமையிலான பெரும் படை முயன்றது. இராமநாதபுரம் ஆட்சிக்கு உரிமை கொண்டாடிய மாப்பிள்ளைத் தேவனும் அவனது சகோதரனும் தஞ்சைப் படைகளை இராமநாதபுரச் சீமையின் வடகோடியில் உள்ள ஓருரில் இருந்து, இராமநாதபுரத்திற்கு வழி காண்பித்து அழைத்து வந்தனர். நவாப்பின் படைகளைப் போன்று மாறுடை தரித்த தஞ்சை மன்னரது மராத்தியப் படைகள் (4000 குதிரை வீரர்களும் 50,000 சிப்பாய்களும்) இராமநாதபுரம் சீமையின் வட எல்லையில் முதுவார் நத்தம் கிராமத்தை 3-2-1771-ல் எதிர்பாராத வண்ணம் தாக்கின. இந்த அத்துமீறலை எதிர்த்துப் போரிட்ட மறவர் அணி தொண்ணுாறு வீரமறவர்களை இழந்து ஆறுமுகம் கோட்டைக்குப் பின்வாங்கியது. இதனைத் தொடர்ந்து தஞ்சைப் படைகளை நடத்தி வந்த தளபதி மானோஜி, சுந்தரபாண்டியன் பட்டினம், வாரியூர், கண்ணன்குடி, மங்கலக்குடி, கொண்டவளந்தான், அமைந்தக்குடி ஆகிய மறவர் நிலைகளைக் கைப்பற்றி முன்னேறினார். அடுத்து, இராமநாதபுரம் கோட்டைக்கு நுழைவாயில் போல அமைந்து இருந்த ஆறுமுகம் கோட்டை, மராத்தியரது தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் 19-2-1771-ல் விழுந்தது. அடுத்த நாள் அங்கிருந்து இருபது கல் தொலைவில் உள்ள இராமநாதபுரம் கோட்டையை அந்தப் படைகள் நெருங்கின. துரோகிகளை காட்டி மக்கள் ஆதரவு பெற முயன்ற தஞ்சை மன்னனது எண்ணக் கோட்டைக்கு இடைஞ்சலாக இந்தக் கோட்டை, இரும்புக் கோட்டையாகத் தோன்றியது. பத்து வயது நிரம்பிய சேதுபதி இளவரசரது சார்பாக அரசியாரும், பிரதானி பிச்சைப்பிள்ளையும் மறவர்களின் மானத்தைக் காக்கும் இந்தப் போரில் எதிர்நடவடிக்கைக்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர். எத்தனையோ ஒலைகள் அனுப்பி உதவிகோரியும் ஆற்காட்டு நவாப்பு அசையவில்லை. ஆனால், எதிரியை தீவிரமாக எதிர்க்குமாறு ஆலோசனை வழங்கினார் அவர்.[5] மறவர் சீமையின் தன்மானத்தைக் காக்கும் இந்தப் போரில் தஞ்சைப் படையின் எதிர் அணியில் சேர்ந்து கொள்ள புதுக்கோட்டைத் தொண்டமான் ஆற்காட்டு நவாப்பின் அனுமதி கோரினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சும்மந்தான் கான் சாயபுவின் புரட்சியை அடக்க மறவர் உதவியைப் பெற்ற நவாப், இப்பொழுது அவர்களுக்கு உதவ முன்வராமல் மெளனம் சாதித் தார். என்றாலும் கீழ்க்கரையில் சேதுபதி மன்னரது அனுமதியுடன் பண்டகசாலை நடத்தி வந்த டச்சுக்காரர்களின் பரங்கி அணி ஒன்றும் பிரதானி பிச்சப்பிள்ளையின் ஆணையை எதிர்பார்த்து தயார் நிலையில் இருந்தன. இந்த இறுதி ஏற்பாடுகளையும் கடந்து இராமநாதபுரம் கோட்டை எதிரியிடம் சிக்கி விட்டால்...மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிது அல்லவா? அரசியாரும் கோட்டையில் உள்ள மகளிரும் அக்கினி புகுவதற்கு ஆயத்தமாக வெடிமருந்து பொதிகளை கொண்டு அமைத்த மேடை ஒன்றில் தயாராக இருந்தனர்.[6]

போர் துவங்கி பத்தொன்பது நாட்கள் முடிந்து விட்டன. தஞ்சை மன்னர் திருப்புல்லானி அரண்மையில் தங்கி இருந்து கொண்டு இராமநாதபுரம் முற்றுகைப் போரை கவனித்து வந்தார். அடிக்கடி பாசறைக்கு வந்து தமது படைகளுக்கு உற்சாகம் ஊட்டி வந்ததுடன், தங்க வெள்ளி நாணயங்களையும் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி ஆக்கம் தந்து வந்தார்.[7] எந்தவகையிலும் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்தே திருவேன் என துல்ஜாஜி மன்னர் இறுமாப்பாகப் பேசிவந்தார். இராமநாதபுரம் மறவர்கள் நாலைந்து நாட்களில் சரணடைந்து விடுவர் அல்லது தமது வாளுக்கு இரையாகி விடுவர் என காலக் கெடு நிர்ணயம் செய்து இருந்தார். அத்துடன், நாலு கோட்டைச் சீமையையும் (சிவகங்கைச் சீமை), தொண்டமான் சிமையையும், கைப்பற்றும் ஆசைக் கனவுகளில் அவர் ஆழ்ந்து இருந்தார்.[8] யாருக்கும் வெற்றி தோல்வி என்ற இறுதி நிலை ஏற்படாததால், அநேகமாக, இந்த 'ஊமைப்' போரினால் இருதரப்பினரும் இளைத்து களைத்துப் போன நிலைக்கு வந்துவிட்டனர்.


இருபதாவது நாள் பொழுது புலருவதற்கு இன்னும் சில நாழிகைகள் நேரம் இருந்தன. திடீர் என கடல் ஆர்ப்பரிப்பது போன்ற இரைச்சல். இராமநாதபுரம் கோட்டைக்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த் தேக்கத்தின் வெள்ளம் கரையை உடைத்து பிரவாகமாக வந்து கொண்டிருந்தது[9] கோட்டையின் மேற்கு, வடக்கு பகுதிகளைக் கடந்து கிழக்குப் பகுதியில் அமைந்து இருந்த தஞ்சைப் படைகளின் பாசறையை அந்த வெள்ளம் சில நிமிடங்களில் மூழ்கச் செய்தது. ஆயுதங்கள், வெடி மருந்து, அரிசி மூட்டைகள், சாராயப் பீப்பாய்கள். பொதி வண்டிகள், மாடுகள், குதிரைகள்-அனைத்தையும் வெள்ளம் வலிந்து இழுத்துச் சென்றது. எதிர்பாராத இந்த இடர்ப்பாட்டினால் வெள்ளத்தில் மூழ்கிய ஒரு சிலரைத் தவிர ஏனைய வீரர்கள் உயிர்தப்பி, இங்கும் அங்கும் சிதறி ஓடினர். எங்கும் அவலக்குரல் எதிரொலித்தது. அன்றைய காலைப் பொழுது அலங்கோலக் காட்சியாக காணப்பட்டது. இந்த நிலையில் போரைத் தொடர்ந்து நடத்துவது இயலாதது என்பதை உணர்ந்த தஞ்சை மன்னர், இராமநாதபுரம் அரசியிடம் சமரசம் பேசி உடன்பாடு கண்டார்.[10] போர் செலவுக்காக ஒரு லட்சம் வெள்ளி நாணயங்களுடன், சில சலுகைகளையும் பெற்று அவர் தஞ்சை திரும்பினார்.

1772-ல் மே மாதம், கடைசி வாரம், மீண்டும் ஒரு படை யெடுப்பு: இராமநாதபுரம் கோட்டை வெளியில் தஞ்சைப் படையைவிட அளவிலும், வலிமையிலும், மிஞ்சிய ஆற்காட்டு நவாப்பின் படையும், கும்பெனியாரின் பரங்கிப்படையும் இணைந்து நின்று போர்ப்பறை கொட்டின.[11] எதிர்பாராத போர். பதினைந்துமாத இடைவெளியில் இராமநாதபுரம் கண்ட இந்தப் படையெடுப்பிற்கு நவாப்பின் மகன் உம்தத்-உல்உம்ராவும், ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தும் இணைந்து தலைமை தாங்கினர். இந்தப் படை அணி திருச்சிராப்பள்ளியில் இருந்து விராலிமலை, நத்தம் வழியாக யாரும் எதிர்பாராத நிலையில் இராமநாதபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அதே சமயத்தில், கும்பெனியாரின் இன்னொரு அணி மதுரைக்கோட்டையில் இருந்து கிழக்கே திருப்பூவனம் நோக்கிப் புறப்பட்டது. சிவகங்கைச் சீமையில் இருந்து இராமநாதபுரத்திற்கு ராணுவ உதவி எதுவும் வராமல் தடை செய்வதற்காக[12] பாசறை அணி வகுப்பிற்குப் பிறகு இராமநாதபுரம் அரசியாருக்கு எச்சரிக்கை ஒலை அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களாக கோட்டைக்கு உள்ளும் புறமும் வெள்ளைக்கொடி தாங்கிய தூதுவர்கள் குதிரைகளில் வருவதும் போவதுமாக இருந்தனர். அரசியாருக்கு, நவாப் வழங்க வேண்டிய சமாதான உடன்பாட்டில் எத்தகைய வாசகம் அமைய வேண்டும் என்பதில் சர்ச்சைகள் தொடர்ந்தன.


ஆற்காட்டு நவாப்பின் ஆதிக்கத்தை வெளிப்படையாக சேதுபதி ஏற்றுக் கொள்ளவில்லை, என்பதை புரிந்து கொண்ட நவாப்பின் மகனுக்கு ஆத்திரம் வந்து விட்டது போலும். திடீரென கோட்டையைத் தாக்குமாறு உத்தரவிட்டார். பன்னிரண்டு பவுண்டு குண்டுகளை சொரியும் பேய்-வாய் பீரங்கி இரண்டு, தமது அழிவு வாயைத் திறந்து அக்கினி மழை பெய்தன. பலன் இல்லை. அடுத்த நாளும் (2.6, 1772) பீரங்கித் தாக்குதல் தொடர்ந்தது. பதினெட்டு பவுண்ட் பீரங்கிகள் நான்கு, கூடுதலாக அன்றைய தாக்குதல்களில் கும்பெனியரால் ஈடுபடுத்தப்பட்டன. நாள் முழுவதும் நீடித்த அந்த பலத்த தாக்குதலினால் கோட்டையின் கிழக்கு மதிலில் ஒரு இடத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு பிளவு தோன்றியது.[13] கிழவன் சேதுபதி மன்னரால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடுக்காய் சாற்றிலும், கருப்பட்டி நீரிலும், நனைத்த செங்கற்களை கொண்டு எழுப்பிய அந்த உறுதியான சுவர், இத்தனை ஆண்டுகளாக இயற்கையின் அழிமானத்திற்கு தப்பி நின்றதே பெரும் செயலாகும்.

கோட்டைக்குள் நுழைந்து முன்னேறுவதற்காக மூன்று நாட்களாக ஆயத்த நிலையில் காத்திருந்த நவாப்பின் படைகள் தளபதி பிரைட்வயிட் என்ற பரங்கியின் தலைமையில் வெடித்து பிளந்த மதில் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.[14] அந்நியர்களைக் கண்ட மறவர்கள், ஆர்ப்பரித்து ஆவேசத்துடன் அவர்களை மோதினர். கடும் போர். இரண்டாயிரத்துக்கும் அதிகமான மறவர் களத்தில் பலியாயினர். ஆக்கிர மிப்புப் படை கோட்டையில் உள்ள மக்களது உடைமைகளை கொள்ளை கொண்டது.[15] இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றி விவரத்தை தளபதி ஜோசப் ஸ்மித் விவரமான அறிக்கை மூலமாக சென்னை கோட்டைக்கு அனுப்பினார். 'இந்தக் கோட்டை பழமையானது. இங்குள்ள அரண்மனை இந்த நாட்டில் நான் கண்ட மிகச்சிறந்த கட்டுமானங்களில் ஒன்றாகும். அங்குள்ள அரச குடும்பத்தினர் கீழை நாடுகளுக்குரிய சிறந்த ஆடம்பரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வாழ்க்கை இனியும் எங்கே கிட்டப் போகிறது! அரசர் பன்னிரண்டு வயது பாலகன். அரசியார் எங்களுடைய பார்வையில் தட்டுப்படவில்லை. மணம் புரியத்தக்க இரண்டு பெண்மக்கள் அவருக்கு இருக்கின்றனர். இவர்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டான நிலைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இங்கு மூவாயிரம் வீரர்கள் இருந்தும் அவர்கள் மீது திடீரென தாக்குதல் தொடுக்கப்பட்டதால் அவர்களுக்கு என்ன செய்வது? நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது புரியவில்லை' எனக் குறிப்பிட்டு இருந்தார்.[16]


இன்னொரு அறிக்கையில் '...இந்த தாக்குதலில் இரண்டு பரங்கிகள் கொல்லப்பட்டனர். தளபதி பிரைட் மட்டும் ஈட்டித் தாக்குதலினால் படுகாயம் அடைந்தார். பீரங்கிப்படை அணி சிறப்பாகவும் அமைதியாகவும் செயல்பட்டது. எங்களை எதிர்த்த மறவர்களும் மிகுந்த வீரத்துடன் போரிட்டனர். குடிமக்களும் ஏதாவது ஒரு ஆயுதத்தை ஏந்தியவர்களாக வந்து போரிட்டனர். தாக்குதல் திடீரென தொடுக்கப்பட்டதால் அவர்கள் திகைத்து தவித்தனர். இந்த நிலையில் அவர்களை வெற்றி கொள்வது நமக்கு எளிதாக அமைந்து விட்டது. சிலர் அரண்மனைக்குள் ஓடினர். அரசியாருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக, இன்னும் சிலர் கோட்டை மதிலில் இருந்து விழுந்து இறந்தனர். நமது துருப்புகள் முன்னேறி வருவதற்குள் இந்தக் குழப்பம் முழுவதும் ஒருவகையாக ஓய்ந்து விட்டது. அரசியாரும், இளவரசரும், பிரதாவி பிச்சைப்பிள்ளையும் இப்பொழுது நமது கைதிகளாக உள்ளனர்' என்ற விவரம் தெரிவித்து[17] இருந்தார் தளபதி ஜோசப்.

கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, இளைஞரான நவாப்பும் அரண்மனையின் ஒரு பகுதியில் அரசு குடும்பத்தினருக்கு அண்மையில் தமது இருக்கையை ஏற்படுத்திக் கொண்டார். இதுபற்றி தளபதி ஜோசப் ஸ்மித் :...கவலையில் ஆழ்ந்துள்ள அரச குடும்பத்தினருக்காக நான் மிகவும் அனுதாபப்படுகிறேன். இது, அவர்களே தேடிக் கொண்ட நிலை. நானும் நவாப்பும் நீட்டிய வேண்டுகோளை புறக்கணித்து நமது பெரும்படைக்கு எதிராக தங்கள் கோட்டையைக் காத்துக்கொள்ள முயன்ற இவர் களது தவறினை எண்ணிப் பார்க்க இயலவில்லை. அங்குள்ள கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் அவைகளைக் கைப்பற்றிய வெற்றியாளருக்கு உரியது என்பதை நவாப்பிடம் தெரிவித்தேன். அது அவருக்குப் பொருத்தமாக தோன்றவில்லை. என்றாலும் கோரிக்கையில் அமைந்துள்ள நேர்மையைப் புரிந்து கொண்டு அரண்மனையில் என்ன இருக்கும்? எவை பாதுகாக்கப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்தவராக, அரசியாரின் இருப்பிடம் புனிதமாக மதிக்கப்பட்டு வந்ததையும் உணர்ந்து கொண்டு, படைத் தலைவர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆயிரம் பணமும், அவருக்கு அடுத்துள்ள துணைத்தளபதி போன்றோருக்கு தலைக்கு அறுநூறு பணமும் வழங்க முன்வந்தார். இது ஒன்றும் மோசமான பேரம் இல்லை. ஆதலால் இதனை தங்களது ஒப்புதலின் பேரில் ஏற்றுக்கொள்ள எண்ணியுள்ளேன்...' என்று இன்னொரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.[18]


அடுத்து, இராமநாதபுரம் அரசியாரையும், இளவரசரையும் அவரது இரு சகோதரிகளையும் பாதுகாப்புக் கைதிகளாக இராமநாதபுரத்திலிருந்து நூறு கல் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர்.[19] அப்பொழுது சென்னைக்கு அடுத்து, கிழக்கிந்திய கம்பெனியாரது பிரதான இராணுவ நிலையாக திருச்சிராப்பள்ளி கோட்டை விளங்கியது அத்துடன் இந்தக் கோட்டைக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கும் ஏற்கனவே ஒரு கசப்பான தொடர்பு இருந்தது இராமநாதபுரம் மன்னராக இருந்த ராஜ சூரிய சேதுபதி, கி.பி 1672-ல், தஞ்சைக்கும் மதுரைக்கும் நிகழ்ந்த போரில் தஞ்சை மன்னருக்கு உதவுவதற்காக திருச்சிப் பகுதிக்குச் சென்றார். மதுரை மன்னரது தளபதியான வேங்கட கிருஷ்ணப்பா, சேதுபதி மன்னரைச் சூழ்ச்சி செய்து திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்கு அழைத்துச் சென்று, நயவஞ்சகமாக அங்கு சிறையில் அடைத்ததுடன் அங்கேயே கொன்று போட்டார்.[20] அந்த நிகழ்ச்சிக்கு சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சேதுபதி மன்னர் மீண்டும் திருச்சிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.


ஆற்காட்டு நவாப் முகமது அலியின் ஆசைக்கனவு ஒரு வகையாக நிறைவேறியது. இராமனாதபுரம் கோட்டையைக் கைப்பற்றி மறவர் சீமையை தமது சர்க்கார் சீமையாக ஆக்க வேண்டும் என்பது அவரது கடந்த இருபது வருட கால உள்ளக் கிடைக்கையாக இருந்தது. என்றாலும் . நாட்டின் பல்வேறு சூழ்நிலைகள் அவரை இத்தகைய தீவிர நடவடிக்கையுடன் மறவர் சீமைக்குள் புகுவதைத் தடுத்து வந்தன. கி.பி. 1752-ல், தமது எதிரியான சந்தாசாகிபுவை தீர்த்துக்கட்டிய பிறகும் அடுத் தடுத்து பல தலைவலிகள் அவரைத் தழுவி நின்றன. மதுரை நாயக்கர்களுக்கு முன்னுறு ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு இருந்த நெல்லைச் சீமைப் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர். அவர்களை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட அவரது தமையனார், மாபூஸ்கான் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அவருக்கு உதவும் கம்பெனியாரையே எதிர்த்தார்.[21] இந்தக் கிளர்ச்சியினால் வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டதால், அவர்களை அடக்குவதற்காக கும்பெனியாரது போர்ச்செலவு பட்டியலில் லட்சக்கணக்கில் நவாப்பின் கடன் ஏறியது. பாளையக்காரர்களையும், மதுரைக் கள்ளர்களையும் அடக்கி, நவாப்பினது வருமானத்தை கம்மந்தான்-கான்சாகிபு வசூலித்து வந்த பொழுதிலும், அவருக்கும் நவாப்பிற்கும் இடையே எழுந்த பிணக்கு காரணமாக, கி.பி. 1763-ல் மதுரைப் போர் முடிவில் கான் சாகிபு துக்கிலே தொங் கிய பிறகும், பாளையக்காரர்கள் பலர் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக அரியலூர், உடையார் பாளையம், பாளையங்களின் கிளர்ச்சி, திருவாங்கூர் மன்னருடன் போர் (1765), மைசூர் மன்னர் ஹைதர் அலி கானுடன் முதல் மைசூர் போர் (1767-69), ஆற்காட்டுப் போர் (1780-82) இவை போன்ற பல இடர்ப்பாடுகள்-தொடர் நிகழ்ச்சிகள், இதற்கிடையில் மறவர் சீமையில் நுழைவதற்காக படை உதவி கோரி, கும்பெனியாருக்கு கடிதம் ஒன்று அனுப்பினார் நவாப். அதில் இவர் குறிப்பிட்டிருந்த காரணங்கள் வினோதமானவையாக இருந்தன.[22]

1. இராமநாதபுரம் மன்னர், நவாப்பின் அனுமதியில்லாமல் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டிக் கொண்டிருப்பது.
2. நவாப்பிற்குச் சொந்தமான பல ஊர்களை தமது சீமையில் சேர்த்து ஆக்கிரமித்து வந்திருப்பது.
3. அந்நியர்களான டச்சுக்காரர்களுக்கு மறவர் சீமையில் தொழில் மையம், பண்டகசாலை ஆகியவைகள் நிறுவ அனுமதி அளித்திருப்பது.
4. நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்று கப்பத்தொகையை இதுவரை செலுத்தாமல் இருந்து வருவது.[23]

இந்த காரணங்கள் அனைத்தும் பொருத்தமற்றவை என்று வரலாறு தெரிந்த யாரும் எளிதில் கூறிவிட முடியும். மறவர் சீமையின் அரசுக் கட்டிலில் அமருவதற்கு அந்த நாட்டு மக்களின் ஒப்புதலைத் தவிர வெளியார் யாரிடமும் சேதுபதி மன்னர் அனுமதி பெறத் தேவையில்லை. அதனைப் போன்றே அந்த நாட்டிற்குள் அந்நியர்கள் தொழில் நடத்த சேதுபதி மன்னர் தான் அனுமதி வழங்க வேண்டுமே தவிர, வெளியாரது அனுமதி எதுவும் தேவையில்லை. டச்சுக் கிழக்கு இந்தியக் கம்பெனியார், நவாப் முகமது அலி பிறப்பதற்கு முன்னரே கி.பி. 1638, 1659, 1698 ஆகிய வருடங்களில் கிழவன் சேதுபதியுடன் உடன்படிக் கைகளைச் செய்து கொண்டிருந்தனர். மன்னார் வளைகுடாவின், எதிர்க்கரையான (இலங்கை) கொண்டச்சியில் முத்துக் குளித்தும் வந்தனர். கி. பி. 1758-ல் கீழக்கரையில் தொழில் மையம் ஒன்றினை ஏற்படுத்தி கைத்தறித் துணிகளை தயாரித்து வந்ததுடன், அங்கிருந்து அவைகளை தங்களது நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து வந்தனர்.

மேலும், மறவர் சீமையின் கிழக்கே கடலும், வடக்கும் மேற்கும் சிவகங்கைச் சீமையும், தெற்கே நெல்லைச் சீமை பாளையக்காரர் பகுதிகளும் இருக்கின்றனவே தவிர நவாப்பின் ஊர் எதுவும் அங்கு இல்லை. கப்பத் தொகையைப் பொறுத்த வரையில் சேது மன்னர்கள் எந்த அரசிற்கும் கைகட்டி திறை செலுத்தியது கிடையாது என்பது வரலாறு. இராமநாதபுரம் மறவர்கள் மதுரை நாயக்கர்களது ஆதிக்கத்திற்குட்பட்ட குறுநில மன்னராக இருந்தாலும் கி. பி. 1638, 1659-ல் டச்சுக்காரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை காரணமாக அவர்களுக்கு எதிரானவர்களாகவே செயல்பட்டு வந்தனர்.[24] அவர்களை மதித்து நடப்பவர்களாக இல்லை.[25] பெயரளவில் தான் மறவர்கள் மதுரை மன்னர்களுக்குக் கட்டுப்பட்டிருந்ததை 8-11-1709 தேசிய மார்ட்டின் பாதிரியாரின் கடிதம் ஊர்ஜிதம் செய்கின்றது. திருமலை நாயக்கர் கூட சேதுபதிகளிடம் கப்பம் கேட்க தயங்கிவந்தார் என கும்பெனியாரது ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டமானைத் தோற்கடித்து மணிப்பள்ளம் காட்டிற்குள் துரத்திய சந்தாசாயபு கூட, மறவர் நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.[26] இதனைப் போன்றே மதுரையை ஆக்கிரமித்த மராட்டிய தளபதியான அப்பாஜிராவும், பின்னர் அவர்களைத் துரத்திவிட்டு கி.பி. 1743-ல் மதுரையை கைப்பற்றிய நிஜாம் ஆஸம்ஜாவும் மறவர்களை அடக்குவதற்கு எத்தனிக்கவில்லை.[27] ஆதலால் கும் பெனியாருக்கு நவாப்பினுடைய அந்தரங்கம் புரியாமலில்லை. எனினும் படையெடுப்பு மூலம் நவாப்பினால் தங்களுக்கு ஆதாயமும் சலுகைகளும் கிட்டுவதை பரங்கிகள் இழப்பதற்கு தயாராக இல்லை. உடனடியாக திருச்சிக்கு தகவல் அனுப்பி அங்குள்ள அவர்களது படை அணிகளைப் போருக்கு ஆயத்தப்படுத்தினர்.

அதனுடைய தொடர்ச்சி தான் நாம் மேலே கண்ட இராமநாதபுரம் கோட்டைப் போரும், இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் அவரது குடும்பத்தினரும் சிறைப்பிடிக்கப்பட்டதும் ஆகும். அன்று முதல் இராமநாதபுரம் கோட்டை ஆற்காட்டு நவாப்பினால் தளபதி மார்ட்டின்ஸ் என்னும் பரங்கியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

ஆற்காட்டின் இளைய நவாப் உம்தத்துல்-உம்ராவும் தளபதி ஜோசப் சுமித்தும் தங்களது படைகளை அடுத்த இலக்கான சிவகங்கை கோட்டையை நோக்கி வழி நடத்தினர்.[28]


  1. Rajaram Row. T., Ramnad Manual (1891,) p. 226.
  2. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 232
  3. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 232
  4. Military Country Correspondence Vol. 29(1772), p. 159.
  5. Military Country. Correspondence. Vol. IX. (1 0 2 I 771), pp. 36-38.
  6. м.С.С. Vol. 19, 28-2-1771, p. 82.
  7. M. C. C., Vol. 19-3–1771 pp. 114, 115.
  8. M. C. C., Vol. 19, 9-3-1771. pp. 114-115.
  9. M. C. C., Vol. 19, 4-3-1771. 6-3-1771, pp. 89-93,
  10. M. C. C., Vol. 19, 15-3-1771, p. 106.
  11. Vibart Maj. H. M., Military History of Madras Engineers & Pioneers (1881), Vol. I, pp. 120-121.
  12. Mily. Consultations. Vol. 42, 15-6-1771, p. 44
  13. Vibart Maj. H. M., Military History of Madras Engineers (1881), Vol. I, p. 120.
  14. Military Consultations Vol. 42, 8-6-1772, pp. 479. 86.
  15. Mlly, Conn., Vol. 42, 8-6-1772, p. 488.
  16. MIly, con, Vol 42. 8.6-1772, p. 488.
  17. Mily. Cons., Vol. 42-B, 8-6-1772, p. 410.
  18. Mily Cons., Vol. 42-B, 8-6-1772, p. 489
  19. Political Despatches to England, Vol. 7–9, pp. 80–81
  20. Rajaram Row. T. Ramnad Manual (1891), p. 226
  21. М. С. C., Vol. 5, (1757) p, 20, 50, 51.
  22. M. C. C., Vol. 19, 20-2-1771, p. 247 and M. C. C., Vol. 19. 24-3-1771, pp. 119-23.
  23. M. C. C., Vol. 21, 4–2–1772, p. 101-102.
  24. Resolution Passed at Dutch Council, Colombon 27-3-1766
  25. Valentina, History of East Indias, Vol. V, p. 164. М.
  26. M. С. С. Vol. V11, р. 343.
  27. Rajayyan, Dr. History of Madurai (1974), Cl. II.
  28. Mily, Cons. Vol. 42, 26-6-1772, p. 534.