விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சிவகங்கையும் சேதுபதியும்


6
சிவகங்கையும் சேதுபதியும்

அன்றைய சிவகங்கை என்பது இராமனாதபுரம் மன்னர் விஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தொன்றாகும். நாலுகோட்டை உடையாத் தேவரை இராமனாதபுரம் சீமையில் பாளையக்காரர்களில் ஒருவராக மன்னர் கிழவன் சேதுபதி நியமனம் செய்தார். முன்னுாறு வீரர்களுக்கு தளபதியாக அவரை நியமனம் செய்து, அதற்குத் தக்க நில மான்யமும் வழங்கியிருந்தார். இராமனாதபுரம் சீமை ஆட்சி உரிமைக்குப் போட்டியிட்ட சிறுவல்லி பாளையக்காரரான திரையத் தேவரது பாளையத்தை ஒட்டி நாலுகோட்டை அமைந்திருந்ததால் அதற்கு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் இருந்துவந்தது. அவரை அடுத்து வந்த விஜய ரகுநாத சேதுபதி மன்னர் உடையாத் தேவரது மகன் சசிவர்ணத்தேவருக்குத் தமது மூன்றாவது மகளாகிய அகிலாண்டேசுவரி நாச்சியாரைத் திருமனம் செய்துவைத்தார்.[1] அதுவரை தமது பாளையக்காரராக இருந்து இந்த திருமணத்தின் மூலம் நெருங்கிய உறவினராகி விட்ட நாலுகோட்டைத் தேவரது அந்தஸ்தை உயர்த்துவதற்காக அவருக்கு மேலும் பல கிராமங்களை சீதனமாக வழங்கி 1,000 போர் வீரர்களுக்கு தளபதியாகப் பதவி உயர்வு அளித்தார்.[2] தளபதி என்பவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போர் வீரர்களை அவசர காலத்தில் மன்னருக்கு அளித்து உதவும் . கடபாடு உடையவர். ஆண்டுதோறும் அந்தப் போர் வீரர்ளைப் பராமரிப்பதற்கான அளவு வருவாய் உடைய காணி அல்லது ஊர்களை தளபதிக்கு மன்னர் கொடுத்தல் வழக்கமாக இருந்து வந்தது. அத்துடன் தமது மருமகனை இராமநாதபுரம் சீமையின் எட்டு மாகாணங்களில் ஒன்றான வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராகவும் நியமனம் செய்தார்.[3]

ஆனால், இந்த சேதுபதி மன்னரது இறப்பிற்குப் பிறகு இராமநரதபுரத்தில் அரியாசனம் ஏறிய தண்டத் தேவரது ஆட்சியை தஞ்சை மன்னரது படை உதவியுடன் பவானி சங்கரத் தேவர் கைப்பற்றினார். இவர் இரகுநாதக் கிழவன் சேதுபதியின் இளவல் ஆவார். கைதியாகப் பிடிக்கப்பட்ட தண்டத் தேவர் கொலை செய்யப்பட்டார். அத்துடன் வெள்ளிக் குறிச்சியின் ஆளுநர் சசிவர்ணத் தேவரும் பதவி நீக்கம் பெற்றார். அவர் பக்கத்து நாடான தஞ்சைக்குச் சென்று பவானி சங்கர தேவரது அநீதியை தஞ்சை மன்னருக்கு எடுத்து உணர்த்தி அங்கேயே தங்கி விட்டார். அப்பொழுது இராமநாதபுரத்தி லிருந்து தண்டத் தேவரது சகோதரர் கட்டையத் தேவரும், உயிருக்குத் தப்பி தஞ்சை மன்னரிடம் ஓடிவந்து சேர்ந்தார்.[4]

இந்த இரண்டு இளவல்களது அவல நிலையை அறிந்த தஞ்சை மன்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அரசியல் தஞ்சம் வழங்கினார். நாளடைவில் அவர்கள் மீது கொண்ட பரிவுணர்வு காரணமாகவும், இராமனாதபுரம் சீமையில், பாம்பாற்றுக்கு வடக்கே உள்ள பகுதியை மீண்டும் தமது அரசு எல்லைக்குள் சேர்த்து விட வேண்டும் என்ற பேராசையாலும், அந்த மறவர் தலைவர்களுக்கு படை உதவ முன்வந்தார். ஏற்கனவே பவானி சங்கரத் தேவரும், இத்தகைய உடன்பாட்டின் அடிப்படையில்தான் ஏற்கெனவே தஞ்சை அரசரது படை உதவி பெற்று இராமனாதபுரத்தைப் பிடித்தார். ஆனால், அவர் தஞ்சை அரசருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி செயல்பட வில்லை. அதனால், பவானி சங்கர சேதுபதியையும், தஞ்சை மன்னர் பழிவாங்க முடிவு செய்தார். விரைவில் தஞ்சைப் படைகள் கட்டையத் தேவர் தலைமையில் மறவர் சீமையை நோக்கிப் புறப்பட்டன.

பாம்பாற்றுக் கரையின் தெற்கே உள்ள ஓரியூர் கோட்டை அருகே மறவர் சீமைப் படையும், தஞ்சை மராத்தியப் படையும் மோதின. பவானி சங்கரத் தேவர் சிறைப் பிடிக்கப்பட்டு தஞ்சைக்கு போர்க் கைதியாக அனுப்பப்பட்டார்[5] வெற்றிப் படைகள் இராமநாதபுரத்தை மீட்டதுடன் அரசுக் கட்டிலில் கட்டையத் தேவரை அமர்த்தி, முத்து விஜயரகுநாத சேதுபதி என மறவர் சீமையின் மன்னராக அறிவித்தது. தமது இக்கட்டான நிலையில் தம்முடன் தோளோடு தோள் சேர்த்து தமது முயற்சிக்கு பெருந்துணையாக நின்று போரிட்ட சசிவர்ணத் தேவரை சேதுபதி மன்னர் மறந்துவிடவில்லை. இராமனாதபுரம் சீமையை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, அவைகளில் இரண்டு பகுதியை சசிவர்ணத் தேவருக்கு சேதுபதி வழங்கினார். அதுமுதல் (கி. பி. 1730) மறவர்சீமை, இராமனாதபுரம் சீமை என்றும், சிவகங்கைச் சீமையென்றும் பெயர் பெற்றன. இந்தப்பிரிவினையை அமுல் நடத்திய சம்பிரிதி சசிவர்ணத்தேவர் மீது கொண்ட அக்கறை காரணமாக வைகை ஆற்றின் வளமிக்க பெரும்பகுதி சிவகங்கைப் பகுதியில் அடங்குமாறு எல்லையை நிர்ணயித்து விட்டார். இந்தத் தவறுதல் இரண்டு பகுதி ஆட்சியாளருக்கும் இடையில் மனக்கசப்பையும், தொல்லைகளையும் தோற்றுவிப்பதற்கு காரணமாக இருந்ததை பிற்கால வரலாறு காட்டுகிறது.[6]

சசிவர்ணத் தேவருக்குப் பின்னர், சிவகங்கை மன்னரான அவரது மகன் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் காளையார் கோவில் போரில் கும்பெனியாரது குண்டினால் 25-6-1772-ல் வீர மரணம் அடைந்தார். அவருடன் இருந்த அரசி வேலு நாச்சியாரும், பிரதானி தாண்டவராயபிள்ளையும், ஆற்காட்டு நவாப்பிடம் சரணடைய விருப்பமில்லாமல் காளையார் கோவில் கோட்டையிலிருந்து தப்பித்து, மைசூர் அரசுப் பகுதியான விருபாட்சிக்கு விரைந்து சென்றனர். மைசூர் மன்னர் ஹைதாலி பகதூர் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கி ஆதரித்தார். அத்துடன் அவர்களுக்கு படை உதவி வழங்கு வதாகவும் வாக்களித்தார்.[7] ஆனால் பிரதானி தாண்டவராய பிள்ளை உடல் நலிவுற்று இறந்து விட்டதால், அரசியாரது அந்தரங்கப் பணியாளர்களான மருது சகோதரர்கள் ஹைதரலியின் படை உதவியுடன் கி. பி. 1780-ல் சிவகங்கைக் கோட்டையை ஆற்காட்டு நவாப்பின் கூலிப்படைகளிடமிருந்து மீட்டனர். அரசி வேலுநாச்சியாரை சிவகங்கைச்சீமையின் அரசியாக அறிவித்து அவரது பிரதானிகளாகப் பணியேற்றனர்.[8] நாளடைவில் விதவையான ராணி வேலுநாச்சியாருக்கும் வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கமான உறவு சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியார் பெண் என்ற பலவீனத் தைப்பயன்படுத்தி. தாங்களே சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளர்களாக மருது சகோதரர்கள் இயங்கி வந்தனர். அரண்மனையில் அடிமைப் பணிபுரியும் பெரிய மருது, அரசியாரை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்தது மறவர் இன மக்களிடம் மனக் கொதிப்பை ஏற்படுத்தியது, அண்டை நாடான பெரிய மறவர் சீமையின் சேதுபதி மன்னருக்கு மருது சகோரர்களது நடவடிக்கைகள் அதிர்ச்சியை அளித்தன.[9]

இவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு மிகுந்ததால், நாளடைவில் அரசியாரது தலைமையை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினர். இதனால் சிவகங்கைச்சிமை அரசியலில் அவநம்பிக்கையும் கருத்து வேறுபாடுகளும் வளர்ந்தன. மக்களிடையே அரசியை ஆதரிப்பவர்களும், பிரதானிகளை பின்பற்றுபவர்களுமாக இரு பிரிவுகள் ஏற்பட்டன, பிரதானி சின்ன மருதுவின் அடாவடியான நடவடிக்கைகளால் அரசியார் வெறுப்பும் வேதனையும் அடைந்தார். அதனால் தமது ஆட்சியையும் அதிகார வரம்பையும் உறுதிப்படுத்த முயன்றார்.[10] இதனைத் தொடர்ந்து அரசியாரது ஆதரவாளர்களுக் கும் பிரதானியைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அரசியாரது உதவிக்கு ஆற்காட்டு நவாப்பின் படைகள் ஓடிவந்தன.[11] சிவகங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட மருதுவின் ஆதரவாளர்கள் திருப்பத்துார் கோட்டைக்கும், காளையார்கோவில் கோட்டைக்குமாக சிதறி ஓடினர். ஆற்காட்டுப் படைகளும் கும்பெனியார் படைகளும் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களை மைசூர் அரசின் பகுதிக்குள் விரட்டினர். சிவகங்கையில் அரசியாருக்கு ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டு, நவாப்பின் படைகள் திருச்சிக்கும், மதுரைக்கும் புறப்பட்டுச் சென்ற பின்னர், மருதுவின் படைகள் மீண்டும் சிவகங்கையைக் கைப்பற்றின. இந்த இழுபறி தொடர்ந்து கொண்டே இருந்தது.[12]


இந்த நடவடிக்கைகளையெல்லாம் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மிகுந்த அக்கறையுடன் கவனித்துவந்தார் அவரது உள்ளத்தில் வேதனை நிறைந்தது. தமது பெரிய பாட்டனரான விஜய ரகுநாத சேதுபதி நாலுகோட்டைத் தேவருக்கு கொடுத்த சீதனச் சொத்து சிவகங்கை. அதன் அரசியல் சீரழிவை அவரால் எவ்விதம் சகித்துக் கொள்ளுவது? விர மறக்குடி வழியினரான தமது உறவினர் இராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேர்வைக்காரர்கள் ஆட்டிப் படைப்பதா? இத்தகைய இனவாத உணர்வுகள் அவரது இதயத்தில் மேலெழுந்து நின்றன. அத்துடன் அப்பொழுதைய ஆண்வாரிசு இல்லாத சிவகங்கைச் சொத்திற்கு தாமே சரியான வாரிசு என்ற பொய்மையான நியாயமும், அவரது சிந்தனையில் உருவாகி நின்றது. ஆதலால் மறவர் சீமையை மீண்டும் ஒன்றுபடுத்த வேண்டிய உயர்ந்த நோக்கத்தை ஆற்காட்டு நவாப்பிற்கு விளக்கமாக எழுதி சிவகங்கைச் சீமையையும், தமது ஆட்சி வரம்புக்குள் அமைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். அந்தப் பகுதிக்கான பேஷ் குஷ் தொகையையும் தாமே செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.[13]

இராமநாதபுரம் மன்னரது கோரிக்கை நவாப்பிற்கு நியாயமாகவே பட்டது. என்றாலும், நவாப்பின் இணக்கத்தை செயல்படுத்துவதற்கு கும்பெனியார் உடன்படவில்லை. மைசூர் மன்னர் ஆங்கிலேயருக்கு எதிராகவும், மருது சேர்வைக்காரர்களுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சிவகங்கை அரசியலில் தீவிரமான மாற்றம் எதனையும் புகுத்த விடாமல் கும்பெனியார் குறுக்கே நின்றனர். இருந்தாலும் தமது அடுத்த முயற்சியாக இராணி வேலு நாச்சியாரது மகள் வெள்ளச்சியை மணந்து கொள்ளுவதற்கு சேதுபதி மன்னர் முயற்சித்தார்.[14] ஏற்கெனவே திருமணமான அவர் இப்பொழுது ஏன் சிவகங்கை இளவரசியை மணந்துகொள்ள முன்வர வேண்டும் என்பதை மருது சேர்வைக்காரர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். இந்த முயற்சி மறவர் சீமையை ஒன்றுபடுத்தவும், தங்களுக்குள்ள செல்வாக்கை செல்லாத காசாக்கவும் செய்யும் மறைமுக சூழ்ச்சி என்பதை உணர்ந்தவர்களாக அந்த முயற்சியை அவர்கள் முறியடித்தனர். அத்துடன் அந்த இளவரசி, படமாத்துார் கெளரி வல்லபத் தேவர் என்ற அரச வழியினரை மணம் செய்ய விடாமலும் குழப்பம் செய்தனர். இதனை அறிந்த கும்பெனி யார், சிவகங்கைச் சேர்வைக்காரர்களை கடுமையாக எச்சரித்தனர்.[15]


சிவகங்கைப் பிரதானிகளது நடவடிக்கைகளால் சேதுபதி மன்னரது சினமும் சீற்றமும் பன்மடங்கு பெருகியது. சிவகங்கைப் பிரதானிகள் தமக்கு மட்டுமல்லாமல், தமது மறவர் சமூகத்திற்கே எதிரியாக வளர்ந்திருப்பது போன்ற பகை உணர்வு மன்னருக்கு. அவர்களை அழித்து தமது முன்னோருடைய சொத்தான சிவகங்கைச் சீமையை மீட்பதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இடைவிடாது மூழ்கியிருந்தார் அவர். இந்த நிலையில்

(கி. பி. 1792) ஆற்காட்டு நவாப் கும்பெனியாரிடம் மறவர் சீமை நிர்வாகத்தை மூன்று வருடகாலத்திற்கு மாற்றிக்கொடுத்தது பல வழிகளிலும் இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கின. என்றாலும், இராமனாதபுரம் சேதுபதி மன்னரது இலட்சியம்-மறவர் சீமையை ஒன்றுபடுத்துவது. அந்நிய ஆதிக்கத்தை தமது மண்ணிலிருந்து அடியோடு அகற்றுவது-அந்த இலட்சியப் பாதை அவரது பார்வையில் தெளிவாகத் தோற்றமளித்தது! எத்தகைய எதிர்ப்புகள் இடைப்பட்டால் என்ன? அவைகளை எதிர்த்து தூசாகத் துாற்றிவிடக் கூடிய துணிவு இருக்கும் பொழுது!

நீண்ட நெடுங்காலமாக திருநெல்வேலிக்கும், சோழ வள நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதை மறவர் சீமை வழியாகச் சென்றது. இராமனாதபுரம் சீமையின் எல்லையிலுள்ள திருச்சுழியலில் தொடங்கி பட்ட நல்லூர் வழியாக சிவகங்கைச் சீமைக்குள் சென்று, தொண்டித் துறையைத் தொட்டு, தஞ்சை சேருவது இப்பாதை. ஏற்கெனவே சிவகங்கைச் சிமையிலிருந்து இராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான திருவாடானை வழியாக தொண்டித் துறைமுகத்துக்குச் சென்ற சாயர் (அவுரி) பொதிகள் மீது விதிக்கப்பட்ட சுங்கம் ரூபாய் பதினாராயிரத்தை இராமநாதபுரம் அரசுக்கு சிவகங்கைச் சேர்வைக்காரர் செலுத்த மறுத்த[16] சிவகங்கை ஆட்சியாளர்மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, இந்தப் போக்குவரத்துப் பாதையில், சேதுபதி மன்னர் மாற்றங்களை ஏற்படுத்தினார். இந்த மாற்று வழியினால், பட்டநல்லூர் சுங்கச்சாவடி மூலம் கிடைத்த வருமானம் சிவகங்கை அரசுக்கு கிடைக்காது போயிற்று. மன்னரது இந்த எதிர்ப்பு நடவடிக்கையை சிவகங்கைப் பிரதானிகள் கிழக்கிந்தியக் கும்பெனியாரிடம் புகார் செய்தனர். மேலும் ஆற்காட்டு நவாப்பின் கவனத்திற்கும் இந்த நடவடிக்கை பற்றி அறிக்கை அனுப்பினர். ஆனால் எத்தகைய பலனும் இல்லாத தாஸ், பொறுமையிழந்த சிவகங்கைப் பிரதானிகள் பலர் எதிர் நடவடிக்கையில் இறங்கினர்.[17]

மறவர் சீமையின் மலர்ச்சிக்கு காரணமாக உள்ள வையை கிருதுமால் ஆறுகள், மேற்கிலிருந்து கிழக்காக சிவகங்கைச் சீமையில் நுழைந்து இராமனாதபுரம் சீமையைக் கடந்து கிழக்குக் கடற்கரையில் சங்கமம் பெறுகின்றன. வழியிலுள்ள நூற்றுக் கணக்கான கண்மாய்கள், அதே ஆற்று நீரினால் நிறைக்கப்பட்டு, விவசாயத்திற்குப் பயன்படுத்தப் பட்டன. இதனைத் தடுத்து இராமநாதபுரம் சீமையில், வறட்சியைத் தோற்றுவிக்கும் முயற்சியாக, அந்த ஆற்றுக் கால்களின் போக்கை அடைத்து வெள்ளத்தை, வேறு திக்குகளில் திருப்பிவிடும் முயற்சியில் சிவகங்கைப் பிரதானிகள் முனைந்தனர். மறவர் சீமையின் மன்னர் மீதுள்ள கோபம் காரணமாக, அந்தச் சீமையின் மக்களைப்பற்றி குறிப்பாக மன்னரது ஊழியத்திலுள்ள, ஆயிரக் கணக்கான தமது அகம்படியர் குலத்தவரது நல்வாழ்வு பற்றிய சிந்தனைகூட அவர்களுக்கு இல்லாது போயிற்று. இத்தகைய நடவடிக்கை பற்றிய முதல் செய்தி மன்னருக்கு பள்ளிமடத்திலிருந்து 14-4-1793-ல் கிடைத்தது. சித்திரைப் புத்தாண்டு நாளின் புனித காரியங்களில் ஈடுபட்டிருந்த சேதுபதி மன்னர், செய்தி அறிந்ததும், கிளர்ந்து எழுந்தார்.

அடுத்தநாள் காலையில், இராமநாதபுரம் கோட்டை கொடி மேடையிலிருந்த முரசம் முழங்கியது. கோட்டைக்கு உள்ளும் புறமும் இருந்த நூற்றுக் கணக்கான மறவர்கள் வளரித் தண்டு, வாள், கேடயம், ஈட்டி, துப்பாக்கி, தாங்கியவர்களாக கோட்டை முகப்பில் அணிவகுத்து நின்றனர். காவிக் கொடி தாங்கிய குதிரை வீரர்கள் முன் செல்ல பணியாட்கள் பின் தொடர, மன்னர் முத்துராமலிங்கம் பள்ளிமடத்துக்குப் புறப்பட்டார்.[18] அங்கே குண்டாற்றின் குறுக்கே சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த தடைகளை நீக்கி வெள்ளப்போக்கிற்கு வசதி செய்துவிட்டு கோட்டைக்குத் திரும்பினார். அடுத்து, அபிராமம் கண்மாய்க்கு வருகின்ற வாத்துக்காலும், சிவகங்கையாரால் மூடப்பட்டது. அதனையும் மன்னர் செம்மைபெறும்படிச் செய்தார். தொடர்ந்து பல கண்மாய்களும் இத்தகைய அழிவு முயற்சியால் பாதிக்கப்பட்டன. இவை அனைத் தையும் உடனுக்குடன் மன்னர் கவனித்ததுடன், சிவகங்கையாரின் சிறுமைச் செயல்பற்றி கும்பெனியாரின் பிரதிநிதியான கலெக்டர் லாண்டனின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.[19]


இவை போன்று அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் உணர்ச்சி வசப்பட்ட இரு தரப்பினரின் நிலைகளில் பல மோதல்கள் உருவெடுத்தன. எல்லைப்பகுதி ஒன்றிலே உள்ள புஞ்சைக் காட்டின் விளைச்சலை அறுவடை செய்து எடுத்துவரும் பொழுது சிவகங்கையார் அந்த நிலம் தங்களது சீமையைச் சேர்ந்தது என உரிமை கொண்டாடி அறுவடை மகசூலை பறித்துச் சென்றனர். துணிகரமான முறையில் நடந்து கொண்ட இந்த தீய நடவடிக்கைக்கு மாற்று நடவடிக்கையாக இராமனாதபுரம் ஆட்கள் அன்று இரவே அந்தக் கிராமத்தைச் சூறையாடினர். அங்கு வந்த மருது சகோதரர்களின் மக்கள் இராமனாதபுரம் மறவர்களில் சிலரைக் கொன்று எஞ்சியவர்களை தங்களது எல்லையினின்றும் துரத்தி அடித்தனர்.[20] இதே போன்று இன்னொரு நிகழ்ச்சி. தொண்டியை அடுத்த சோழியக்குடி கிராமத்திலும் நடைபெற்றது. இராமநாதபுரம் வீரர்கள் ஐம்பது கிராமங்களை சூறையாடி குடிகளைக் கொன்று 20,000 கலம் நெல்லையும் கால்நடைகளையும் கடத்திச் சென்றதாக சிவகங்கையாரின் வக்கீல் சங்கரலிங்கம்பிள்ளை கும்பெனி துரைத்தனத்தாரிடம் புகார் செய்தார்.[21]

மற்றுமொரு அவமானமானச் செயல் பற்றி சின்ன மருது சேர்வைக்காரரே, கும்பெனி கலெக்டருக்கு புகார் ஒன்று அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் சுருக்கமாவது.[22] சிவகங்கையைச் சேர்ந்த பாண்டுகுடி கிராமத்தில் சிவகங்கைச் சேர்வைக்காரரது பணியில் இருந்த குப்பமுத்து என்பவர், மருது சேர்வைக்காரர்களுக்கு பயந்து பக்கத்தில் உள்ள இராமநாதபுரம் சீமையில் தஞ்சமடைந்தார். அவருடைய இரண்டு மாடுகள் பாண்டுகுடி யில் தங்கி விட்டதை ஒட்டிச் செல்வதற்காக, இராமநாதபுரம் சீமைச் சேவகர்கள் இருபதுக்கும் அதிகமானவர்களை அழைத்துவந்து, தம்முடைய மாடுகளுடன் எனைய குடிகளது மாடுகளையும் ஒட்டிக்கொண்டு போய்விட்டனர். இந்த விவரத்தை சீமை, சீமையில் உள்ள திருவாடனை அமில்தாருக்கு தெரிவித்து இந்த நிகழ்ச்சிக்கான முகாந்திரத்தைத் தெரிவிக்குமாறு சிவகங்கைப் பிரதானி ஒரு சேவகர் மூலம் கடிதம் அனுப்பினார். இது சம்பந்தமாக இராமநாதபுரம் அரசைக் கேட்டு பதில் கொடுப்பதாகவும் அதுவரை அவரை திருவாடனையில் தாமதிக்குமாறும் சொல்லப்பட்டது. அவ்விதமே மூன்றாவது நாள் இராமநாதபுரத்தில் இருந்து வந்த சேவகர், சிவகங்கை சேவகரைப் பிடித்து இருத்தி அவரது தலையில் ஒரு பகுதியை சிரைத்து, அவரை ஒரு கழுதை மேல் அமர்த்தி, பிணைத்து சிவகங்கை சேர்வைக்காரரது கடிதத்தையும் கழுதையின் கழுத்தில் தொங்கவிட்டு, கழுதைக்கும் சேவகருக்கும் உதை கொடுத்து சிவகங்கை சீமைப் பகுதிக்குள் துரத்தி விட்டனர்.


எல்லையிலே நிகழ்ந்த இத்தகைய தொல்லைகளினால், பகைமை மிஞ்சிய பழி உணர்வுடன், தமது போர் வீரர்களை சிவகங்கைச் சீமைப் பகுதிக்குள் புகுந்து, கொள்ளையும், கொலையும் மேற்கொள்ளுமாறு மன்னர் உத்தரவிட்டார். அவரது அணியொன்று எல்லையிலுள்ள விசுவனுர் சென்று அடைந்த பொழுது சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் தமது போர்வீரர்களை ஆனந்துருக்கு அனுப்பி இராமனாதபுரம் அணியை தடுத்து நிறுத்த ஆணையிட்டனர். இரண்டு கல் தொலைவு இடைவெளியில், இரு தரப்பினரும் எதிர் எதிராக இருந்து ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடினர். பல நாட்கள் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.[23] வேறு சில பகுதிகளிலும் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டன. இராமநாதபுரம் மன்னருக்கு ஆதரவாக இருந்த மேலூர் கள்ளர்களும், சிவகங்கைச் சீமையின் மேற்குப் பகுதியில் புகுந்து தங்கள் கைவரிசைகளைக் காண்பித்தனர். திருப்புவனம் சீமையைக் கொள்ளையிட்டு 258 பேர்களைக் கொன்றனர். 2, 000 கலம் நெல்லையும், 17,000 மாடுகளையும், 10,000 ஆடுகளையும் கொள்ளைப் பொருளாக எடுத்துச் சென்றனர். பட மாத்துார் அய்யாத்தேவர் மகன் கவண்டத் தேவர் தலைமையில் இந்தக் கொள்ளை நீடித்தது.[24] தெற்கிலும் மேற்கிலும் தாக்கப்பட்ட சிவகங்கைப் படைகள் வீரத்துடன் போரிட்டு நிலையையை சமாளித்தனர்.

அடுத்து, இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த சம்பிரிதி ஒருவர். அரசரது கடுமையான நடவடிக்கைக்குப் பயந்து சிவகங்கைச் சீமை கிராமம் ஒன்றில் தஞ்சம் புகுந்தார். மன்னரது வீரர்கள் அந்தக் கிராமத்துக்குள் புகுந்த அந்த அலுவலரை பிடித்து பிணைத்து அரசரிடம் அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக கும்பெனியாரது தலையீட்டையும் புறக்கணித்து மன்னர் அந்த அலுவலரை பொது இடம் ஒன்றில் நிறுத்தி கசை அடி தண்டனை வழங்கினார்.[25] இன்னொரு நிகழ்ச்சியில் பாமக்குடியிலிருந்த அரசருடைய போர் வீரர்கள் பக்கத்துாரான நெட்டுரில் புகுந்து, சிலரைக் கொன்றதுடன், குடிசைகளையும் கொளுத்தினர். அந்த ஊர் நாட்டாண்மையின் தலையைத் துண்டித்து இராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். தங்களுடைய சீமையில் துணிகரமாகப் புகுந்த இந்த மறவர்களை பழிவாங்க முனைந்த பெரிய மருதுவின் மக்கள் மூவரில் ஒருவர் இராமநாதபுரம் வீரர்களால் களபலி ஆக்கப்பட்டார். எஞ்சிய இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. செய்தியை அறிந்து, ஆத்திரம் அடைந்த பெரிய மருது சேர்வைக்காரர், இராமநாதபுரம் வீரர்களைத் தொடர்ந்து வந்து, பரமக்குடியில் புகுந்து 700 பேரைக் கொன்று குவித்துவிட்டு சிவகங்கை திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ணுற்ற கலெக்டர் மக்லாயிடு சென்னைக்கு அனுப்பி வைத்த அறிக்கையில்.[26]

'......கடந்த 26-ம் தேதி காலையில் நெட்டுரிலிருந்து பரமக்குடி சென்று கொண்டிருந்தேன், சுற்றுப்புறத்தில் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. நான் பரமக்குடி வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எனது பணியாளர்கள் வந்து அந்த நிகழ்ச்சிப் பற்றிய விவரங்களை என்னிடம் சொன்னார்கள். ஆயுதம் தாங்கிய இராமநாதபுரம் வீரர் பலர் நெட்டுரையும், அங்கிருந்த சின்ன மருதுவின் ஆட்களையும் தாக்கினர். அவர்களும் திருப்பிச் சுட்டார்கள். தாக்குதல் பலத்ததால், சமாளிக்க முடியாமல் சிதறி ஓடினர். இராமநாதபுரம் ஆட்கள் ஊருக்குள் நுழைந்து, குடிசைகளைக் கொளுத்தினர். உச்சிப் பொழுதில் பெருங்கூக்குரலும் கள்ளர்களின் குழல் ஒலியும் கேட்டன. நான் பார்க்கும் பொழுது ஒருருாறு பேருக்கு குறையாத ஆட்களும், குதிரைகளில் அமர்ந்த ஐந்து தளபதிகளும், பரமக்குடி ஆற்றைக் கடந்து ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நான் வினவியபொழுது தாங்கள் சின்ன மருதுவின் நெட்டுர் கிராமத்தை தாக்கிவிட்டு வருவதாகப் பதில் அளித்தனர். அவர்களில் காயமடைந்த மூன்று வீரர்களும் இருந்தனர். அப்பொழுது பரமக்குடியில் நிலைகொண்டிருந்த ஆயிரத்து ஐநூறு வீரர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் அவர்கள்......'

அவரே மீண்டும் 22-6-1794 தேதியிட்ட கடிதத்தில் பரமக்குடியில் நடைபெற்ற பயங்கரமான படுகொலை பற்றிய விபரங்கள் இன்று காலையில் எனக்குக் கிடைத்தன. நேற்று அந்த வழியாக வந்த எனது வில்லைச் சேவகர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி கொடுத்துள்ள சத்திய பிரமான வாக்குமூலத்தில் தலையில்லாது கிடந்த 400 முண்டங்களை அவர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். நெட்டுர் நிகழ்ச்கியின் தொடர்பாக வெள்ளை மருது நடத்திய தாக்குதலின் விளைவு இது. தனது இரண்டாவது மகன் கொல்லப்பட்டு மற்ற இரு மக்களும் படு காயம் உற்றதினால் சீற்றம் கொண்ட வெள்ளை மருதுவினுடைய செயல் என்பதைப் பலரும் சொல்லுகின்றனர். இது சம்பந்தமாக எனக்குத் தெரிந்த வேறு ஒன்றிரண்டு விபரங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


'கடந்த 12ம் தேதிக் காலையில் இராமநாதபுரம் பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது சத்திரத்தில் எண்பதுக்கும் அதிகமான போர் வீரர்கள் இருந்தனர். அவர்களை விசாரித்த பொழுது திருவாங்கூர் மன்னரது பணியில் உள்ள அவர்கள், இராமநாதபுரம் மன்னரின் உதவிக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் இருநூறு பேர் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

'நெல்லைச் சீமைப் பாளையக்காரர்கள் அடிக்கடி ஏராளமான வீரர்களை இங்கு அனுப்பி ஒத்துழைப்புக் கொடுப்பது தெரிய வருகிறது. சிவகிரி பாளையக்காரரின் மைத்துனரை இங்கு சந்தித்தேன். என்னைக் கடந்து அவர் குதிரையில் செல்லும் பொழுது வணக்கம் கூறிச் சென்றார். அப்பொழுது அங்கு இன்னும் சில போர் வீரர்களும் இருந்தனர். அவர்கள் தங்களை எட்டையபுரத்து பாளையக்காரர்களது ஆட்கள் என்று தெரிவித்தனர். இவைகளிலிருந்து இங்கு நிலவும் பகைமைச் சூழ்நிலை பற்றிய நிலைமை புரிகிறது. அதனை உடனடியாக அழித்தொழிக்காவிட்டால், மீண்டும் எதிர்காலத்தில் அவைகள் பல வழிகளில் வளர்ச்சி பெறும் சூழ்நிலை ஏற்படும்....'

இதே கருத்தினையே அடுத்து கலெக்டராக வந்த பவுனியும் தமது மேலிடத்திற்குத் தெரிவித்தார்.[27] அவரது கருத்துப்படி இராமநாதபுரம் அரசரினால் எந்தச் சூழ்நிலையிலும் பன்னிரண்டாயிரம் வீரர்களை களத்திற்குக் கொண்டு வரும் தகுதி உள்ளது என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த மோதல்களைத் தொடர்ந்து ஆற்காட்டு நவாப்பும், கும்பெனியாரும் இரண்டு தரப்பினரையும் வன்முறையைத் தவிர்த்து அமைதி காத்துக்கொள்ளும்படியாக பல வேண்டுகோள்களை விடுத்தனர். சிவகங்கைச் சேர்வைக்காரர் மட்டும் தங்களது வீரர்களை சிவகங்கை எல்லைப்பகுதிக்குள் திருப்பி அழைத்துக் கொள்வதாக கும்பெனியாருக்கு உறுதி அளித்தனர். ஆனால், சேதுபதி மன்னரோ ஆற்காட்டு நவாப்பினது அறிவுரையையோ அல்லது கும்பெனியாரது ஆணையையோ ஒரு சிறிதும் மதித்துச் செயல்படவில்லை.[28] அந்த அளவிற்கு அவரது வெஞ்சினமும் வெறுப்பும், சிவகங்கைச் சேர்வைக்காரர் மீது நிலைத்திருந்தது. அத்துடன் நவாப்பையும் வெள்ளையரையும் மறவர் மண்ணிலிருந்து அகற்றுவதற்கான பிரதான இலட்சியத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு, அப்பொழுது சிவகங்கைப் பிரதானிகள் அவரது பிரதான எதிரிகளாகத் தோன்றினர். அவர்களை அழித்து ஒழிக்கும் முயற்சியில் தமக்கு உதவுமாறு புதுக்கோட்டைத் தொண்டமானையும் கேட்டுக் கொண்டார். ஆனால் தொண்டமான் சேதுபதி அரசருக்கு உதவும் மனம் இல்லாமல் வாளாக இருந்து விட்டார்[29].

இந்தவிதமான முயற்சியில் தீவிரமாக இராமநாதபுரம் மன்னர் ஈடுபட்டிருந்தார் என்றும் திருவாங்கூர் அரசரும் திருநெல்வேலி பாளையக்காரர்களும், மேல்நாட்டு கள்ளர்களும் சேதுபதி மன்னருக்கு பக்கபலமாக இருந்து உதவினர் என்பதையும் கும்பெனியாரது ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதிவசதி, பெரும் அளவில் சேதுபதி மன்னரிடம் இருந்தது. அத்துடன் இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் சேது அணையின் காவலர் என்ற முறையிலும், இந்த மன்னர்கள் இடத்தில் சேதுபதி மன்னருக்கு தார்மீகரீதியான மதிப்பும் செல்வாக்கும் இருந்தன என்பதை அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிவகங்கைச் சேர்வைக்கார்ர்களின் சீற்றத்தை அடக்க மன்னர் மேற்கொண்ட இந்த ஆவேசமான அவசர நடவடிக்கைகள், ஆற்காட்டு நவாப்பிடமும் கும்பெனியாரிடமும் வெறுப்பை வளர்த்து, மோதலை ஏற்படுத்தி தமது இலட்சியப்பாதைக்கு இடைஞ்சலாக அமையும் என அவர் எண்ணவில்லை, எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்த அந்நிகழ்ச்சிகள் மறவர் சீமையின் அரசியல் களத்தில் இராஜ தந்திர சூன்யம் உருவானதை தெளிவாகச் சுட்டிக் காட்டின.


  1. Annasamy Iyer V., Sivaganga, its orgin and litigations ( I ho8). pp. 3-4
  2. hajaram Row, T., Ramnad Manual (1891), pp. 2:37-89
  3. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 239
  4. Ibid., p. 239
  5. Rajuram Row, T., Ramnad Manual (1891), p. 239
  6. Hovonuo Sundries, Vol. 26, 6-10-1801
  7. Military Country Correspondence, Vol. 21 (1772), р. 282
  8. Kathirvel. S. Dr. History of Marawa (1977), p. 166
  9. Dr. S. Kathirvel. History of Marawa (1972), p. 168
  10. Military Country Correspondence, Vol. 129. C, 9–5–1789 p. 1461
  11. Military Country Correspondence, Vol. 128, 17-3-1789, р , 28:), p, 1459
  12. MIlitury Country Correspondence. Vol. 155, 24-1-1702, p. 414
  13. Military Consultation, Vol. 158, 24-1-1792, p. 474
  14. Board of Revenue Proceedings, Vol. VIII 11.4-1785, p. 338
  15. Military Country Correspondence Vol. 45,28-5-1794, p. 153
  16. Military Country Correspondence, Vol. 45 (1794), pp. 10 1, 104
  17. political dospatches to England. Vol. III (1794) pp. 816-18
  18. Military Miscellaneous Book, Vol. 31, 20-4-1793, pp. 569-72
  19. Military Country Correspondence, Vol. 45, 30-6-1794, р. 230
  20. Military Consultations, Vol. 185-B, 29-8-1794, p. 4060
  21. Military Consultations, Vol. 185-B, 3-6-1794, p. 2157
  22. Military Consultations, Vol. 191, 7-12-1794. p. 5098-99
  23. Military Country Correspondence, Vol. 45, (1794AD) pp. 177-78
  24. Military Country Correspondence, Vol. 45, (1794), p. 153
  25. Military" Consulations, Vol. 185, B, 21-6-1794, pp. 2756
  26. Lottor from Collector Macleoid D., 21-6-1794, Fort St. Gnorgo Diary Consultations, p. 2757
  27. Military Consultations, Vol. 189 A, 29-8-1794, p. 4067
  28. Military Country, Correspondence. VoI. IV. (1794), p. 198
  29. Military Country Correspondence, Vol. 185-B (1794) р. 2157.