விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/திருச்சியில் மீண்டும் சிறை


9
திருச்சியில் மீண்டும் சிறை

திருச்சிராப்பள்ளிக் கோட்டை, மேற்கு வாசல், அன்று மாலையில் விறுவிறுப்பான நிலையில் காணப்பட்டது. கோட்டை அரங்கத்தின் மேலே அமர்ந்திருந்த போர் வீரர்கள் ஏனைய வீரர்களை உஷார்ப் படுத்தும் வகையில் குழல்களை ஊதினர். தெற்கே விராலிமலை திசையிலிருந்து குதிரைப்படை அணி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. நொடி நேரத்தில் ஆங்காங்கு இருந்த வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களுடன் கோட்டை வாயிலில் அணிவகுத்து நின்றனர்.

மீண்டும் குழல் ஒலித்தது. அதன் ஒலியிலிருந்து அச்சப்படத் தக்கது ஒன்றும் இல்லையென்றும், மரியாதை செலுத்தும் வகையில், வீரர்களது அணிவகுப்பு இருக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டது. மேலுார் கோட்டைக்குச் சென்றிருந்த திருச்சி தளபதி பிலாயிட்டின் குதிரை அணிதான் வந்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் நீலத் துணியில் வெள்ளை சிவப்பு வண்ண குறுக்குக் கோடுகள் இட்டு இங்கிலாந்து நாட்டு அரசு சின்னமான சிங்கமும் குதிரையும் வரையப் பெற்ற பெரிய கொடி ஒன்றினை தாங்கிப்பிடித்த வீரனது குதிரையைத் தொடர்ந்து பல குதிரை வீரர்கள் மெயின் கார்டு வாயில் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர். அவர்களை அடுத்து, பரங்கித் தளபதி பிலாய்ட்டும் அவரை தொடர்ந்து, இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் அவரது பணியாட்களும் இருபது குதிரைகளிலும் ஒரு ஒட்டகத்திலும் கோட்டைக்குள் நுழைந்தனர்.[1]

அதே அகழி, உச்சிப் பிள்ளையார் கோவில், ஆற்காட்டு நவாப் அரண்மனை, கவனத்து மைதானம் அவைகளை அடுத்து வரிசை வரிசையாக பழைய கட்டிடங்கள். பதினான்கு ஆண்டு களுக்கு முன்னர் அதே கட்டடங்களின் ஒன்றில் தான் அரசியல் கைதியாக தமது தாயாருடனும் தமக்கைகளுடனும் பத்து ஆண்டுகளை அங்கு கழித்த சிறை வாழ்க்கை அவரது சிந்தனையில் நிழலாடியது. அந்த இல்லத்திலேயே தனது அருமைத் தாயார் நாட்டை இழந்த கவலையினால் நோயுற்று இறந்ததும் அவரது எண்ணத்திரையில் எழுந்து மறைந்தது. அந்தக் கசப்பான நினைவுகள்-இனந்தெரியாத கிளர்ச்சிகளை அவரது இதயத்தில் உருவாக்கின. சற்று உறுதியான குரலில் அவரையும் அறியாது சில வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளிப்பட்டன. அவரது குதிரையை ஒட்டி வந்து கொண்டிருந்த இன்னொரு குதிரையிலுள்ள அவரது அந்தரங்கப் பணியாளர் இராமசாமி சேர்வைக்காரர் 'மகாராஜா' என்று பணிந்த குரலில் கேட்ட பொழுதுதான். அவருக்கு சுய நினைவு வந்தது. அப்பொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடத்தின் அருகில் தமது குதிரையை நிறுத்தி தளபதி பிலாய்டு கீழே இறங்கியதுடன் மன்னரையும் இறங்கி வருமாறு அழைத்தார். அவர்கள் அந்த கட்டிடத்திற்குள் சென்றனர். அன்று முதல் அந்த இடம் மன்னரது தனிமை வாழ்க்கைக்கு உரிய வீடாக அமைந்தது.

O O O

நாட்கள் பலவாகி விட்டன. இராமநாதபுரம் அரண்மனை வாழ்க்கை ஒரு பிரமை போல மன்னருக்குத் தோன்றியது. காலையில் இராஜ ராஜேசுவரி அம்மன் கோவில், திருப்புல்லாணி பெருமாள் கோவில், முத்துராமலிங்கசுவாமி கோவில் ஆகிய ஆலயங்களின் பிரசாதங்களுடன் ஆஜராகி ஆசீர்வதிக்கும் அத்தியானப் பட்டர்கள், மங்களகரமான காலைப் பொழுதை நினைவூட்ட கருங்குரங்கு, கண்ணாடி, யானை, ஒட்டகை ஆகியவைகளை கொண்டு வந்து நிறுத்தி, வணங்கி, அன்பளிப்புப் பெற்றுச் செல்லும் பணியாளர்கள், பண்டைய மன்னர்களது வாழ்க்கை நியதிகளை விளக்கும் புலவர்கள், விருந்தாளிகளின் வருகையைத் தெரிவிக்கும் கட்டியக்காரர்கள், துபாஷ், வக்கீல், பிரதானி, அரண்மனைக் கணக்கு உரையாடும் பொழுது காளாஞ்சி ஏந்தி நிற்கும் அடைப்பக்காரர்கள், கவரி வீசுபவர்கள், பணிக்கம் தாங்கும் பணியாளர்கள், எடுபிடி வேலைக்காரர். நேரத்தை நினைவூட்டும் நகரா அடிப்பவர்கள், சொல்லுகின்ற கட்டளைகளை பதிவு செய்யும் பாரசீக, ஆங்கில, தமிழ் எழுத்தர்கள், அஞ்சல்காரர்கள், பட்டோலை எழுதுபவர்கள், ஃபிடில் வாசிப் பவர்கள், சிற்றுண்டி பரிமாறும் வெயிட்டர்கள், சோக்தார்கள், கித்வால், தானாபதி, பூந்தோட்டத்தைப் பராமரிக்கும் தோட்டக்காரர்கள், தங்கள் உடல் வலிமையைக் காட்டி மகிழ்விக்கும் மொலகு செட்டி என்ற மல்லர்கள், சிந்திகள், சிலம்பக்காரர்கள், பாடகர்கள், நட்டுவர்கள், இன்னும் கூடார லஸ்கர், சேரியட், பீட்டன், தட்டுவண்டி சாரதிகள், பல்லக்குத் துக்கிகள் பெண் பணியாளர்கள், அலிகள், சமையல்காரர், மசால்ஜிகள் தையல்காரர், மருத்துவர், குயவர், தச்சர், பாராக்காரர்கள், இரவு பாரி வலம் வருபவர்கள், ஒப்பனைக்காரர்கள், குதிரை, யானை, ஒட்டகை பாகர்கள், காவல்காரர்கள் என பல வகையான பணியாளர்கள் அரசரது வாய் அசைவிற்கும், கண் இமைப்பிற்கும் காத்து நிற்கும் காட்சி. ஆனால் இங்கே தம்மைத் துாரத்திலிருந்து வெறித்துப் பார்க்கும் பரங்கி சிப்பாய்களை மட்டும் பகல் முழுவதும் சேதுபதி மன்னர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது. உறவையும், உரிமைச் சுற்றத்தையும் நீங்கி தமது இலட்சியம் எட்டப்படாத நிலையில், வாழ்நாளெல்லாம், சிறைக் கைதியாக வாழ வேண்டிய சிறுமையை எண்ணி அவரது இதயம் ஏங்கியது. இந்த வாழ்க்கை இன்னும் எவ்வளவு காலத்திற்கு?

O O O O O

இராமநாதபுரம் அரண்மனையில், அரச குடும்பத்தினரும், பெண்டுகளும் வசிக்கும் தனிமைப் பகுதிக்கு (அந்தப்புரம்) தளபதி மார்ட்டின்சும், கலெக்டர் பவுனியும் சென்றது. அவர்களின் அணிகலன்களையும், பணத்தையும் பறித்துச் சென்றிருப்பது,[2] தம்முடைய சகோதரி மங்களேஸ்வரி நாச்சியார் இராமனாதபுரம் பட்டத்திற்கு வர தீவிரமாக முயற்சி செய்து வருவது,[3] தமது முந்தையப் பிரதானி முத்து இருளப்ப பிள்ளையை இராமனாதபுரம் சீமையின் பேஷ்காரராக கும்பெனியார் நியமனம் செய்திருப்பது,Revenue consultations, Vol. 62, 25-3-1795, pp. 1060-61 ஆகிய செய்திகள் அடுத்து அடுத்து அவரது காதுகளில் நாராசம் போல் துளைத் தன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இவ்வளவு கொடுமைகளையும் அவருக்கு இழைத்த கும்பெனியார் அவரது சிறை வாழ்க்கைச் செலவிற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மிக தாராளமான மனதுடன் முன்வந்திருப்பது.

கலெக்டர் பவுனியிடமிருந்து கிடைத்துள்ள இந்தச் செய்தியை நேரில் தெரிவிக்க தளபதி பிலாய்டு அரசரது அறைக்கு வந்தார். யாருக்கு யார் பிச்சை அளிப்பது? வந்தவர்களுக்கெல்லாம் வாழ்த்தி, மகிழ்ந்தவர்களுக்கெல்லாம், பொன்னையும், மணியையும், பிடிபிடியாக அள்ளி வழங்கிய கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்-பரம்பரை பரம்பரையாக, சூரிய சந்திரர்கள் நிலைத்திருக்கும் வரை சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அந்தணர்களுக்கு அகரங்களை சதுர்வேதி மங்கலங்களை, காணிகளை, ஊர்களை தானம் வழங்கிய கைகளுக்கு ஆயிரம் ரூபாய். மண்ணை ஆண்ட மன்னருக்கு நேற்று வந்தவர்கள் தானம் வழங்குவது! நவாப்பின் அனுமதியுடன் வியாபாரம் செய்து பொருள் சம்பாதிக்க வந்தவர்கள், அளவு கோலைப் பிடிப்பதற்குப் பதில் ஆட்சிக்கோலைப் பிடித்துள்ள அவலம். மன்னர் தனது மனக்குமுறல்களை மறைத்துக் கொண்டு கும்பெனியாரிடமிருந்து பிச்சை பெறுவதற்கு தமக்கு விருப்பம் இல்லை என்பதை தளபதியிடம் தெரிவித்தார்.[4] அத்துடன் சென்னைக் கோட்டையிலுள்ள கும்பெனியாரது கவர்னருக்கு தனது உள்ளக் கிளார்ச்சிகளை கட்டுப்படுத்தியவராக தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை வெளியிடுமாறும், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இராமநாதபுரத்தில் கும்பெனியார் நடத்தும் கொடுமைகளை தடுத்து நிறுத்தி ஆணையிடுமாறும் அவர் பல மடல்களில் கோரினார்.[5] அந்த மடல்களின் சில பகுதிகள்.

15.3-1795-ம் தேதியிட்டு அனுப்பிய மடலில்'[6]... அவமானம் விளைவிக்கும் வகையில் எனது ஊரில் எனது அரண் மனையில் கும்பெனியாரது படைகள் சூழ்ந்து என்னைக் கைதியாக இங்கு கொண்டு வந்துள்ளனர். ஆட்சியாளர்களாக இருந்த எனது மூதாதையரைப் போன்று என்னையும், எனக்குள்ள உரிமைகளுடன், எனது நாட்டில் நிலை பெறச் செய்தல் வேண்டும் என்ற கருத்தில் இங்கு, சிலவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். எனது எதிரிகள் என்மீது வெறுப்பு ஏற்படும் வகையில் குறிப்பாக தளபதி மார்ட்டின், பேஷ்குவி-கலெக்டர் பவுனி, எனது மைத்துனர் சாமித் தேவன், இன்னும் எனது ஊழியர் முத்து இருளப்பபிள்ளை ஆகியோர் தங்களது உள்ளத்தில் தவறான புகார்களை நிறைத்துள்ளனர்.

'நான் பிறந்த எழுபத்து இரண்டாவது நாள், எனது மூதாதையரின் பாரம்பரிய அரச பதவிக்கு நியமனம் செய்யப் பட்டேன். எனது தாயாரும் பிரதானியும், நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் பொழுது, நவாப்பினது அதிருப்தியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது நான் இளம் பிள்ளையாக இருந்ததால் அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியாத நிலை. நவாப்பினுடைய படைகளது ஒத்துழைப்புடன் கும்பெனியார் இராமநாதபுரம் கோட்டையை வளைத்துப் பிடித்து, செல்வமனைத்தையும் கைப்பற்றி என்னையும், எனது தாயார், சகோதரிகள் இன்னும் சிலரையும் இந்த திருச்சிக் கோட்டையில் பத்து ஆண்டுகள் காவலில் வைத்தி ருந்தனர்.

1780-ம் வருடம் மன்னர் ஹைதர் அலிகான் கர்நாடக சீமைக்குள் புகுந்து தனது குதிரைப்படையைக் கொண்டு எல்லாப் பகுதிகளிலும் கொள்ளையும் அழிமானமும் ஏற்படுத்திய பொழுது, மாப்பிள்ளைத் தேவரும் எனது தமக்கையின் கணவனான சாமித் தேவனும், எதிரிகளிடம் சேர்ந்து இராமநாதபுரம் சிமைக்கு கள்ளர்களை திரட்டி வந்து இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்தனர். அவர்கள் சீமையைக் கொள்ளையிட்டது அல்லாமல், அமில்தார்களை துரத்திவிட்டு கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தினர். அப்பொழுது பல அணிகளது தலைவர்களாக இருந்த அலுவலர்களுக்கு இந்தப் படையெடுப்புப் பற்றிய முழு விபரமும் தெரியும். இந்தப் போரில் சின்ன மருது சேர்வைக்காரனும், அவனது தமையன் வெள்ளை மருது சேர்வைக்காரனும், எதிரிகளது படைகளை அழைத்து வந்து, எனது சீமையைக் கொள்ளையிட்டனர். நவாப்பினது சோழவந்தான் கோட்டை அதிகாரி முல்லாராவை சின்ன மருது கொன்றுவிட்டு மதுரை, சிவகங்கை, காளையார் கோவில், திருப்பத்துார் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்தையும் துண்டித்து விட்டான். மேலும், எனது முந்தைய பிரதானி பிச்சைப்பிள்ளையையும், நவாப்பின் சில வீரர்களையும், மதுரைக்கு அண்மையில் கொன்றுபோட்டதுடன் ஏராளமானவர்களையும் காயப்படுத்தி அவர்களது தளவாடங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.

இந்த விபரங்களை அறிந்த மக்கார்த்தி பிரபுவும், ஆற்காட்டு நவாப்பும் என்னைக் காவலில் இருந்து விடுவித்து எனது பரம்பரை ஆட்சி உரிமையை எனக்கு வழங்கி என்னை மன்னராக ஆக்கினர். அத்துடன், இராமநாதபுரம் சீமையிலிருந்தும், சின்ன மறவன் சீமையிலிருந்தும், எதிரிகளை அடித்து விரட்டுமாறு கேட்டுக் கொண்டனர். மே 1781-ல் எனக்கு கும்பெனி வீரர்களது பாதுகாப்பு அளித்து திருச்சியிலிருந்து இராமநாதபுரம் திரும்புவதற்கு ஏற்பாடும் செய்தனர். வழியில் எதிரிகள் மிகுந்த பலத்துடன் என்னைத் தாக்கினர். நானும் அவர்களுடன் போராடி அவர்களைத் தோற்கடித்துவிட்டு இராமநாதபுரம் திரும்பினேன். தளபதி மார்ட்டின்ஸினுடைய நட்பைப் பெற்று மாப்பிள்ளைத் தேவனையும் சின்னமருது சேர்வைக்காரனையும் பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன். மாப்பிள்ளை தேவன் பின்வாங்கி ஓடிவிட்டான். சின்னமருது சேர்வைக்காரன் சுல்லிவன் மூலமாக கும்பெனியாரின் நண்பனாகி விட்டான். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து துவங்கப்பட்டது. இப்பொழுது சென்னையிலுள்ள சாமித் தேவனுக்கு எனது சகோதரியை திருமணம் செய்து கொடுத்து சில கிராமங்களையும் ஜாகீர்களாக வழங்கினேன். சிலரது துாண்டுதலினால் என்மீது குற்றம் சுமத்துவதற்கு அவன் காத்திருக்கிறான்.

நான் இராமநாதபுரம் திரும்பிய சிறிது காலத்தில் முத்திருளப்பபிள்ளையை பிரதானியாக ஏற்றுக் கொள்ளுமாறு மார்ட்டின்ஸ் சிபாரிசு செய்தார். அவரது நட்பை மதித்து சீமையின் நிர்வாகப் பணிக்கு அவரை பிரதானியாக நியமித்தேன். எட்டு, ஒன்பது ஆண்டு காலப் பணியில் முத்திருளப்பபிள்ளை மார்ட்டின்சுடன் சேர்ந்து கொண்டு அரசியலுக்கு புதியவனான எனக்கு எவ்வித விபரமும் தெரியாத வகையில் அவரே நிர்வாகத்தை நடத்தி வந்தார். குறிப்பாகச் சொல்லப்போனால் நான் அவர்களது கைதிபோல் இருந்தேன். கி.பி. 1790-ல் முத்திருளப்ப பிள்ளை எனது அனுமதியை எதிர்பார்க்காமல், மேக்லாய்டு துரையிடமிருந்து மதுரைச் சீமையை குத்தகைக்குப் பெற்று மதுரைக்குச் சென்றுவிட்டார். வெறுப்படைந்த குடிமக்கள், அவர் சென்ற பல்லக்கை நொறுக்கி அவரது பணியாட்கள் இருவரைக் கொன்று அவரையும் மிக மோசமாக அவமானப்படுத்தினர். இந்த விபரம் தளபதிக்கும் மற்றவர்களுக்கும் பிறகு தான் தெரியவந்தது. எனது பணியாளர்களை அனுப்பி அவரிடத்திலிருந்த முத்திரை மோதிரத்தைப் பெற்றுவரச் செய்தேன். மதுரையிலிருந்த அவரை மார்ட்டின்ஸ் வரவழைத்து தமது சொந்தப் பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். சாமித்தேவனை சென்னைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி சர்க்காரிடம் எனக்கு எதிராக புகார் மனுக் கொடுக்கச் செய்தார். எனக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல் இருக்குமாறு குடிமக்கள் சிலரையும் தூண்டி விட்டார்...

நான் இப்பொழுது அனுபவிக்கும் சிறை வாழ்க்கைக்கான காரணங்கள் தங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. எனது குடும்பத்திலிருந்து என்னைப் பிரித்து, இங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது அறையின் முகப்பில் பரங்கி வீரர்களும் சுதேசிச் சிப்பாய்களும் காவலுக்குப் போடப்பட்டுள்ளனர். இறைவழிபாடு செய்ய இயலாதவாறு அந்த வீரர்கள் பூஜை நேரத்தில் கூட, என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த நாட்டு சமயத்தையும் சம்பிரதாயங்களையும் பற்றி ஒழுகும் எனக்கு, வழிபாட்டின் பொழுதும், உணவு நேரத்தின் பொழுதும் பணியாளர் பலரது பணி தேவைப்படுகிறது. ஆனால் என்னைக் கவனிப்பதற்கு இப்பொழுது ஒரே ஒரு பணியாள் மட்டும் உள்ளான். இது எனக்கு மிகுந்த இடர்ப்பாட்டினை தருவதாக உள்ளது. நான் இருக்கும் வீடு இரவு நேரத்தில் பூட்டப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வழக்கமாக இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு நான் உணவு உட்கொள்ள முடியாமல் தடுக்கப் பட்டு விட்டேன்.

எவ்வித-விசாரணையுமில்லாமல், எந்தக் குற்றச்சாட்டுமில்லாமல், இவ்விதம் கொடுரமாக நடத்தப்படுவதைத் தங்க ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவைகளுக்கான காரணங்களை தங்களிடமிருந்து நான் வலிந்து பெற முடியாது. என்றாலும், நீதி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆதலால் எனது சிறைத் தண்டனைக்கான குற்றச்சாட்டுப் பிரதி ஒன்றை எனக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அல்லது என்னையோ, அல்லது எனது பிரதிநிதியையோ வைத்து நேர்முக விசாரணை ஒன்றை நடத்தினால் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக தங்களுக்கு எழுதிய ஆங்கிலக் கடிதத்திற்குப் பிறகு, இராமநாதபுரத்தில் நடந்துள்ளவைகளையும் இங்கு விவரித்துச் சொல்ல விரும்புகிறேன். மாசி மாதம் இருபது அல்லது இருபத்து ஒன்றாம் தேதி பவுனியும், மார்ட்டின்சும், இன்னும் இருவரும் ஒரு துபாஷாடன் எனது அரண்மனை முகப்புக்குச் சென்று, அங்கிருந்த எனது பிரதானியின் மகனை எனது மேல் விட்டிற்கு அழைத்துச் சென்று. அரண்மனையின் உள்ளே ஏராளமான பொன்னும் பொருளும் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவைகளைக் கொண்டுவந்து ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டனர். அவை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்ற அவனது பதிலைக் கேட்டவுடன், அங்கிருந்து அவனை ஏசி துரத்தி அனுப்பினர். பின்னர், அவர்கள் பெண்டுகள் இருக்கும் தனிமைப் பகுதியின் வாசலுக்குச் சென்று, அங்கிருந்த பணியாளர்களிடம் தாங்கள் அந்தக் கட்டிடத்துக்குள் நுழையப் போவதாகத் தெரிவித்தனர். எனது அனுமதியில்லாமல், யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது அவர்களுக்குரிய எனது உத்தரவாகும். இது எனது நாட்டிலுள்ள நடைமுறை மட்டுமல்லாது பொதுவாக கர்நாடகம் முழுவதற்குமேயுள்ள பழக்கமாகும். பெரிய இடத்துப் பெண்கள் உள்ள பகுதிக்குள் புகுவது பற்றிய தகாத தன்மையை தெரிவித்த காவலாளிகளை மார்ட்டின்சும், பவுனியும் பயமுறுத்தி, அவர்களை உதைத்தனர். அதனால் பயந்துபோன அவர்கள் உள்ளிருந்து வந்த பெண் பணியாட்களை அழைக்க, அவர்களும் உள்ளே போய் அங்கிருந்தவரை அழைத்து வருமாறு பயமுறுத்தினர். அவர்களிடம் அரண்மனையின் உட்பகுதியில் ஏராளமான பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும், அதனை ஒப்படைத்து விடுவது அரசரது மனைவிக்கு நல்லது என்றும், இல்லையென்றால் சிப்பாய்களை அனுப்பி அவைகளைக் கைப்பற்ற வேண்டியது ஏற்படும் என்றும் மிரட்டினர். இத்தகைய நடவடிக்கையினால், அரசரது பெண்டுகள் உயிரை விட்டுவிடுவர் என பணியாளர்கள் பதிலளித்தனர். பணத்தை ஒப்படைக்காவிட்டால் உள்ளே சிப்பாய்களை அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதை மீண்டும் பவுனி தெரிவித்தார்.

அந்தப் பணிப்பெண்கள் மிகவும் பீதி அடைந்தவர்களாக எனது மனைவியிடம் சென்று விபரத்தைத் தெரிவித்தவுடன், தங்களது மானத்தையும், உயிரையும் காத்துக் கொள்ள தங்களிடம் உள்ள பொன்பொருள் அத்தனையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வருத்தப்பட்டனர். அப்பொழுதும் திருப்தி அடையாத பவுனியும், மார்ட்டின்சும், இன்னும் கூடுதலான பொருள்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அவைகளையும் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும், தவறினால் அடுத்தநாள் காலை அங்கு சிப்பாய்கள் அனுப்பப்படுவர் என்றும் பயமுறுத்திவிட்டுத் திரும்பினர். இத்தகைய வார்த்தைகளை அதுவரை கேட்டிராத அந்தப் பெண்மக்களின் உள்ளப்பாங்கு எவ்விதம் இருந்திருக்கும் என்பதைத் தாங்களே உணர்ந்து கொள்ளுமாறு தங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

கும்பெனியாரால் சிறைப்படுத்தப்பட்டுள்ள நான் என்னிடம் கோரப்படுகிற எல்லாவற்றிற்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் பெண்களை இவ்விதம் நடத்துவது கர்நாடகத்தில் அரசர்களது குடும்ப கவுரவத்தின் உயர்வை எவ்விதம் குறைவுபடச் செய்யும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது மச்சு வீட்டை, பவுனி ஆக்கிரமித்து வசித்து வருகிறார். இராமலிங்க விலாசம் என அழைக்கப்படும் கொலுமண்டபத்தில் அவரது கச்சேரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில்தான் எனது முடிசூட்டுவிழா சடங்குகள் நடைபெற்றன. இந்தப் புனித இடத்திற்கு வியாபாரிகளையும் மற்றவர்களையும் வரவழைத்து இந்தச் சீமையின் உரிமை யாருக்கு உரியது என்பதை தெரிவிக்குமாறு பவுனி கேட்டு வருகிறார். தனக்குச் சாதகமான பதிலைச் சொல்லாதவர்களைத் தமது எதிரியாக நடத்துவதுடன், அவர்களிடமிருந்து அவருக்குச் சாதகமான விபரங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு வருகிறார். ஆதலால் என்னையும் எனது எதிரிகளையும் நேரில் அழைத்து விசாரித்து தகுதியானது தகுதியற்றது எவை என்பதைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"நான் துரைத்தனத்தாருடன் பொதுவாக பாரசீக மொழியில் தான் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளுவது வழக்கம். ஆனால் எனது முன்ஷி லாலா சாகிபுவை கைது செய்து கொண்டு சென்றுவிட்டதால், எனது கடிதங்களை எழுதுவதற்கு வேறு யாரும் இல்லை. எனது எண்ணங்களின் பிரதிபலிப்பில் ஏதும் குறைகள் இருந்தால் அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல், எனக்கு விரைவான பதிலை அனுப்பி வைப்பீர்கள் என எண்ணு கிறேன்....' இவ்வாறு அந்தக் கடிதத்தில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் குறிப்பிட்டிருந்தார்.

12-4-1795-ல் எழுதிய இன்னொரு மடலில்,[7] ...இங்கிலாந்து நாட்டில், நீதி வழங்குதலையும் நன்கு அறிந்திருக்கிறேன். அந்த நாட்டில் யாராவது ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவர் அந்தக் குற்றச்சாட்டினின்றும் காத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பிறகு தான் அவர் சிறையில் அடைக்கப்படுவார். நானும் நன்கு ஆட்சி செய்து அனுபவம் பெற்றிருக்கிறேன். விசாரணையின் பொழுது குற்றவாளியென உறுதிப்படுத்தப்பட்டாலொழிய ஒருவரை முடிவான குற்றாளியாகக் கருதுவது இல்லை. எனக்குத் தெரிந்தவரை யில் பவுனி, மார்ட்டின்ஸ் ஆகியோரது நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள அவமானம், துயரம் ஆகியவைகளைத் தங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன். இதற்கிடையில் இராமநாதபுரம் பகுதிகளில் பறையறைந்து அறிவிப்பு ஒன்று கொடுத்துள்ளனர். இனிமேல் என்னை இராமநாதபுரம் சீமையின் மன்னராகக் கருதப்படக்கூடாது என்றும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு சீமையின் நிர்வாகம் கும்பெனியாரின் நிர்வாகத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகாத வழியிலும், நேர்மையற்ற முறையிலும் மக்களை நான் கொடுமைப்படுத்தியதாக சான்று வழங்குமாறும் அதற்கு மறுப்புத் தெரிவிப்பவர்களை கண்டனம் செய்தும் வருகின்றனர். தன்னிச்சையாக யாரும் என்மீது புகார் கொடுக்காத நிலையில் அவர்களிடம் புகார் கொடுக்கத் துாண்டுவது எங்குமே இல்லாத புதுமையாக உள்ளது!

'கோட்டைக்குள் சின்ன மருது சேர்வை வரவழைக்கப்பட்டு அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. எனது பிரதானி நீக்கப்பட்டு முத்திருளப்ப பிள்ளைக்கு நிர்வாகம் அளிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலுள்ள பெண்டுகள் தொடர்ந்து பயமுறுத்தப்படுகின்றனர். எனது முந்தைய கடிதத்திற்குப் பிறகும் கூட, பெண்டுகளிடமிருந்து ஒன்பதினாயிரம் பக்கோடா பணம் பறித்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கலெக்டர் பவுனி ஒரு பெண் பணியாளரை அனுப்பி எனது பெண்டுகள் உடையதும் என்னுடையதுமான அணி மணிகளை அளித்து விடுமாறு நிர்ப்பந்தித்து வருகிறார். கும்பெனியாரது இத்தகைய கொடுஞ்செயலை நான் எப்பொழுதும் கேட்டதும் இல்லை, கண்டதும் இல்லை.

'தங்களது ஆணை என்று கூறி தளபதி பிலாய்டு எனது சமையல்காரரையும், இன்னும் மூன்று சேர்வைக்காரர்களையும் இராமநாதபுரத்திற்கு கைதிகளாக அனுப்பி வைத்துள்ளார். இதனால் இங்குள்ள எஞ்சிய பணியாளர்களும் என்னை விட்டு அகலுவதற்கு ஏற்ற நடவடிக்கையாக உள்ளது. ஏற்கெனவே உள்ள சிப்பாய்களுக்கும் கூடுதலாக, நவாப்பினது வீரர்களும், என்னைக் கண்காணிப்பதற்கு இங்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறு அறை பகல் நேரத்தில் திறக்கப்பட்டு, இரவு நேரத்தில் பூட்டி வைக்கப்படுகிறது. மன்னர்களை நடத்தும் முறை இது அல்ல. என்னையும் எனது பெண்டுகளையும் இத்தகைய கொடுமைகளுக்கு உட்படுத்துவது முறையற்றதாகும்.

'இத்தகைய இழிவான நடவடிக்கைகளுக்குக் காரணம் கோரிய எனது முந்தைய இரண்டு கடிதங்களுக்கும், இதுவரை பதில் அளிக்காமல் இருப்பது எனக்கு வேதனையையும் வியப்பையும் அளிக்கிறது. நான் இழைத்த குற்றம் என்ன என்பதை தெரிவிக்க முன் வந்தால், அதனைப் புரிந்து கொண்டு அதற்குரிய பதிலையும் அளிக்க இயலும், தாங்கள் எனது கோரிக்கையை நேர்மையுடன் ஆராய்ந்து சரியான தீர்வுக்கு வருவதற்கும் அது உதவும். இறைவன் பொருட்டாவது எனது கோரிக் கையை மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து நான் அனுபவித்து வருகின்ற இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து இராமநாதபுரம் மன்னர் அனுப்பிய இன்னொரு கடிதத்திலிருந்து சில பகுதிகள்.[8] "...பெறுபவர் இராமநாதபுரம் பாளையக்காரர், இராமலிங்கம்' என தவறுதலாக கடிதத்தின் துவக்கத்தில் குறிப்பிட்டிருப்பது போல, எனது மூதாதையர்களை பாண்டிய மன்னர்களோ வேறு வேந்தர்களோ, நாயக்க அரசர்களோ, அல்லது வாலாஜா நவாபோ ஏன்? தங்களது கும்பெனி கவர்னர்களோ இவ்விதம் நாகரீகமற்ற முறையில் குறிப்பிட்டது கிடையாது. தாங்கள் கும்பெனி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூட இவ்விதம் தவறாகவோ அல்லது அநாகரீகமாகவோ குறிப்பிட்டது கிடையாது. தங்களது ரெவின்யூ துறையைச் சேர்ந்த வெப் என்பவர், ஒரு பணியாளுக்கு எழுதும் பாணியில் அந்தக் கடிதத்தை எனக்கு வரைந்துள்ளார். இவ்விதம் எழுதுவதற்கு நீங்களும் அனுமதி வழங்கியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதனால்தான் இதனைத் தங்களுடைய கவனத் திற்குக் கொண்டு வந்துள்ளேன். ஏற்கனவே எனக்கு எழுதப் பட்டுள்ள கடிதங்களையும் இப்பொழுது எழுதப்பட்டிருப்பதையும், தங்களது மொழி பெயர்ப்பாளர் அலுவலகத்திலிருந்து வரவழைத்து பரீசீலித்தால், இந்த விபரம் புலப்படும்.

என்மீதான சில புகார்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தன. அவைகளுக்கான மறுப்பையும் கீழ்க்கண்டவாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலாவது : எனது குடிகளிடம் கடுமையாகவும் கொடுரமாகவும் நடந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.

பதில் : எனது நாட்டின் நேரடியான நிர்வாகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்து வந்துள்ளேன். எப்பொழுதும் யாரிடத்தும் நான் கடுமையாக நடந்துகொண்டது கிடையாது. முத்திருளப்பபிள்ளை எனது பிரதானியாக எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் வருவாய்த்துறையை நிர்வகித்து வந்தார். என்னை ஒரு கைதிபோல் நடத்தி, எனது குடிகளையும் கொடுமைக்கு உட்படுத்தி நடத்தி வந்துள்ளார். குயிட்ரென்ட்டைக் கூடுதலாக விதித்தும், புஞ்சை நிலங்களுக்கான வரியை உயர்வு செய்தும் உத்தரவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்தவர்கள், இந்தக் கொடுமைப்பற்றி நவாப்பிற்கும் கும்பெனியாருக்கும் புகார் செய்தனர்.

இரண்டாவது : சிவகங்கைச் சீமையின் மீது நான் படையெடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

பதில் : திரு லாண்டன் கலெக்டராக இருக்கும் பொழுது சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த சின்ன மருது சேர்வைக்காரன் எனது நாட்டைக் கொள்ளையிட்டான். இராமநாதபுரம் சீமையிலுள்ள அபிராமம், பரமக்குடி சாலைக்கிராமம், இராஜசிங்க மங்கலம் ஆகிய ஊர்களைத் தீயிட்டு முக்கியமான குடிகளில் இருவரைக் கொன்றும், அவர்களது நெல் பொதிகளைக் கடத்தியும் சென்றான். மேலும் 500 ஆட்களுடன் ஒரு நாள் இரவு 12 மணிக்கு அமில்தாரரைப் பிடித்துக் கட்டிப்போட்டு அவரது மனைவியின் காதை அறுத்து பணியாள் ஒருவரைக் கொன்று, அமில்தாரரைச் சிறைப்பிடித்துச் சென்றான். எனது வக்கீல் பாலாஜி ராவ் மூலமாக திரு லாண்டனுக்கு இந்த விபரங்களைத் தெரியப்படுத்தினேன். இத்தகைய அத்துமீறலை விசாரணை செய்யுமாறு கோரி ஐந்தாறு கடிதங்கள் அவருக்கு எழுதினேன். எனது சீமையிலுள்ள ஏரிகளுக்கு ஆற்றுநீர் போய்ச் சேராமல் வரத்துக்கால்களை அடைத்தும், அவைகளில் தடுப்பு ஏற்படுத்தியும் சிவகங்கைச் சேர்வைக்காரர் இடைஞ்சலை ஏற்படுத்தினனார்கள். இந்த விபரங்களை திரு லாண்டனுக்குத் தெரியப்படுத்தினதனால் அவர், ஒரு ஹரிக்காராவையும், ஒரு வில்லை சேவகரையும் அனுப்பி, ஆற்றுவெள்ளத்தைத் தடை செய்யாமலிருக்கு மாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவிற்கு மாறாக தண்ணிரைத் திறந்து விடுவதற்கு சின்ன மருது மறுத்துவிட்டான். இது சம்பந்தமாக திரு லாண்டன் அரசாங்கத்தாருக்கும் வருவாய் வாரியத்திற்கும் அறிக்கைகள் அனுப்பியிருப்பார். அவைகளைப் பரிசீலித்தால் இத்தகைய அக்கிரமங்களில் சின்ன மருது ஈடுபட்டு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி, கலெக்டரது உத்தரவைப் புறக் கணித்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இவைகளைப் பார்க்துக் கொண்டு சும்மா இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்த நான், சில ஆட்களை அனுப்பி வரத்துக்கால்களின் தடுப்புகளை அகற்றுமாறு அனுப்பினேன். அப்பொழுது, சின்ன மருதுவும், வெள்ளை மருதுவும், ஒரு படையுடன் வந்ததால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை நிறுத்துமாறு கவர்னர் எனக்கும், எதிரிக்கும் உத்தரவுகள் அனுப்பினார். ஆனால் வரத்துக்கால்கள் பல இன்று வரை மூடப்பட்டுத்தான் உள்ளன.

மூன்றாவது : கவர்னர் ஜெனரலது உத்தரவைப் பெற்றுக் கொண்ட பிறகும் ஒரு எதிரியைப் போல நடந்து கொண்டது.

பதில் : எந்த சந்தர்ப்பத்தில் அவ்விதம் நடந்து கொண்டேன் என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான்காவது : கலெக்டர் உத்தரவுப்படி நடக்க மறுத்தது.

பதில் : கலெக்டர்களாக முன்னர் பணியாற்றிய, சுள்ளிவன், இர்வின், மக்லாய்டு, லாண்டன் ஆகியோர்களைப் புறக்கணித்ததாக புகார்கள் இல்லை. தொண்டியிலுள்ள தற்பொழுதைய கலெக்டரான பவுனி, அங்கு வந்து தன்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். நடைமுறைப் பழக்கங்களுக்கு புறம்பாக நான் நடந்து கொள்ளமுடியாது என்பதை அவருக்குத் தெரிவித்தேன். முந்தைய கலெக்டர்கள் எனது சீமையின் எல்லைக்கு வரும்பொழுது, அவரை அழைத்து வருவதற்கு எனது பிரதானியை அங்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவர்கள் இராமநாதபுரம் கோட்டைக்கு வரும்பொழுது நான் கோட்டைக்கு வெளியே சென்று அவர்களை வரவேற்பதுதான் எங்களது சம்பிரதாயம். பவுனி எனது கோட்டைக்கு வருவதாக இருந்தால் அவரை அவ்விதம் சந்திப்பதற்கு சித்தமாக இருப்பதைத் தெரிவித்தேன். தனது சீமையில் உள்ள தொண்டியில், கலெக்டருக்காக சிவகங்கைப் பாளையக்காரர்கள் காத்திராத பொழுது, நான் அவருக்காக எவ்விதம் தொண்டிக்குச் செல்ல இயலும் என்று முடித்திருந்தார்.[9]

25-5-1795 அன்று இன்னொரு கடிதத்தையும்.[10] இராமநாதபுரம் மன்னர் கவர்னருக்கு அனுப்பி வைத்து, தமது பதவி நீக்கம், சிறை வாசம் ஆகியவைகளுக்கான காரணங்களைத் தெரிவிக்குமாறும், இயலுமானால் நான்கு ஐரோப்பியர்களை திருச்சிக்கு அனுப்பி வைத்து தன் முன்னால் விசாரணை நடத்துமாறும் கோரியிருந்தார். அதற்கும் பதில் இல்லை. அதிகாரச் செருக்கும் ஆணவப்போக்கும் மிகுந்த ஆங்கிலேயரிடம், இந்த நாட்டின் மண்ணிற்கு உரிய நியாயத்தையும், நேர்மையையும் எதிர்பார்ப்பதில் பலனில்லைதான். அத்துடன் ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர் அல்லவே. கீழை நாடுகளின் கலைப் பொருட்களையும், மிளகு, பாக்கு, சந்தனம் போன்ற இயற்கை வளங்களையும் அள்ளிச் சென்று, வணிகம் நடத்த வந்தவர்கள் தானே? தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் காரணமாக ஒற்றுமை இழந்த மன்னர்களை ஒடுக்குவதற்கு ஊழல் நிறைந்த முகம்மதலி நவாப்பிற்கு உறுதுணையாக வந்தவர்கள்தானே இந்தப் பரங்கிகள்!

வாய்ப்புகள் ஏற்படும் பொழுதெல்லாம், தங்களது படையின் வெடிமருந்துத் திறனைக் காண்பித்து, தமிழகத்தில் வீர மறவர்களின் தன்னாசுகளை அவர்கள் தமது உடமையாக்கிக் கொண்டார்கள். தங்களது இந்தக் குறிக்கோளுக்காக எல்லா விதமான தந்திர மந்திரங்களையும். உபாயங்களையும் உத்திகளையும், பழிக்கு எதிரான பண்புகளாகக் கையாண்டார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், பழி, பாவம், இழிவு எல்லாம் எண்ணிச் செயல்பட வேண்டிய பண்பாடுகள் அல்ல. ஆனால் இவர்களுக்கெல்லாம், மூல குருவாக கும்பெனியாரின் மிகச் சிறந்த பிரதிநிதியாக விளங்கிய வாரன்ஹேஸ்டிங்ஸ் வங்காளத்திலும், அயோத்தியிலும் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. லஞ்சம், ஊழல், சூழ்ச்சி, கொலை, கொள்ளை, கிழக்கிந்தியக் கும்பெனியின் பெயரால் நேர்மையுள்ளங் கொண்ட எட்மண்டு பர்க் பிரபு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாரன்ஹேஸ்டிங்ஸ் மீது ஊழல் குற்றம் சாட்டினார். தமது குற்றச் சாட்டுக்களுக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்டி எட்டு ஆண்டுகள் திறமையான முறையில் மக்களுக்கு புரியும்படி புள்ளி விவரங்களுடன் நிருபித்தார். முடிவு ஹேஸ்டிங்ஸ் குற்றவாளியல்ல என்பது ஆகும். அந்தக் காலத்தில் ஜனநாயகத்தின் பெட்டகமென வர்ணிக்கப்பட்ட அந்தப் பாராளுமன்றத்தின் ஆதரவும் பாதுகாப்பும் இருக்கும் வரை அதற்குக் கட்டுப்பட்ட பணியாளர்கள் இந்திய நாட்டில் எதையும் சாதிக்கலாம் அல்லவா? மனிதாபிமானத்துக்கு அந்த நாட்டு சட்டங்களில் இடம் இல்லை போலும்!!

இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து, சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் சிறையில் அடைத்ததுடன், கும்பெனியார் நிம்மதி கொள்ளவில்லை. மன்னருக்கு ஆதரவாக எங்காவது மக்கள் கிளர்ந்து எழுந்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு கோட்டையையும் கோட்டைக்கு வெளியே அமைந்துள்ள மறவர்களது நாடுகளையும், மிகவும் கவனமாகக் கண்காணித்து வந்தனர். காரணம், முதுகுளத்துார் வட்டத்திலுள்ள ஆப்பனுார், சித்திரங்குடி, பேரையூர் நாடுகளைச் சேர்ந்த மறவர்கள், மிகவும் கொடுரமானவர்கள். மேல் மலைநாட்டுக் கள்ளர்களை விட அவர்கள் பழி பாவத்திற்குப் பயப்படாத பழங்குடியினர். கி.பி. 1772-ல் சேதுபதி மன்னரைத் திருச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது நவாப்பின் பணியாளர்களும், பரங்கியரும் அவர்களிடம் பட்டபாடு,[11] அவர்கள் நினைவில் நீங்காத பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

சேதுபதி அரசர் கொடுங்கோல் ஆட்சி புரிந்து மக்களைத் துன்புறுத்தி வந்ததாகவும், அன்றாடத் தேவைப் பொருள்களையும் வாணிபத்தில் ஏகபோக உரிமை கொண்டு, விலைவாசிகளை உயர்த்தி மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாலும், கலெக்டரது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததாலும், அரச பதவியிலிருந்து அவரை அகற்றி இருப்பதாக சென்னை கவர்னரது விளம்பரம் ஒன்று பொது மக்களுக்குத் தெரிவித்தது.[12] அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முழு நிர்வாகத்தையும், நவாப்பிடமிருந்து கும்பெனியாரே பெற்றிருப்பதாகவும், இராம நாதபுரம் பொது மக்களும், அலுவலர்களும், கும்பெனியாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென, நவாப்பின் தாக்கீது ஒன்று தெரிவித்தது.[13] தொடர்ந்து, கும்பெனியாருக்கு ஆதரவான ஒருவரை. இராமநாதபுரம் அரசு கட்டிலில் அமர்த்துவதற்கான முயற்சியும் நடைபெற்று வந்தது. சேதுபதி மன்னரது ஒரே வாரிசான, எட்டு வயது பெண்ணுக்கு அந்த உரிமையை வழங்குவதா? அல்லது பல மனுக்கள் மூலம் தன்னை இராமநாதபுரம் அரசியாக அங்கீகரிக்கும்படி வற்புறுத்தி வந்த மங்களேஸ்வரி நாச்சியாரை ஏற்றுக் கொள்ளுவதா? என்பதைப் பரிசீலித்து வந்தனர். இது சம்பந்தப்பட்ட நடைமுறைகள் என்ன என்பதையும், உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்த சில முக்கியமான குடிகளிடமும், இராமேஸ்வரம் பண்டாரம், உத்திரகோசமங்கை கோவில் குருக்கள், நயினார் கோயில் பட்டர் ஆகியோரது கருத்துக்களையும், தெரிந்து கவர்னருக்கு கலெக்டர் அறிக்கை செய்தார்.[14]

இந்தக் குழப்பத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, முத்துராமலிங்க சேதுபதி மன்னரது மைனர் பெண்தாம் பொருத்தமான வாரிசு என்பதை முத்திருளப்பபிள்ளை வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை தளபதி மார்ட்டின்சும், மேலிடத்திற்குப் பரிந்துரைத்தார். அந்தப் பெண் தகுந்த வயது வரும் வரை சீமை நிர்வாகத்தை ரீஜெண்டாக இருந்து கவனித்து வரலாம் என்பது முத்து இருளப்பபிள்ளையின் திட்டம். அதனைப் புரிந்து கொண்ட மங்களேஸ்வரி நாச்சியார், இராமநாதபுரம் பட்டத்திற்கு தனக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்றும், தமது கோரிக்கையின் நியாயத்தைப் பற்றி அண்டை நாடுகளான, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாங்கூர் மன்னர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுமாறும் கும்பெனியாரை அவர் வற்புறுத்தி வந்தார். அத்துடன் முத்திருளப்ப பிள்ளையின் சூழ்ச்சிக்கு இணங்கிவிடக் கூடாது எனவும் கவர் னரை வலியுறுத்தி வந்தார்.[15]

இதற்கிடையில், முத்துராமலிங்க சேதுபதி மன்னர், பரங்கியரையும் நவாப்பையும் எதிர்த்து இறுதிப் போர் நடத்துவதற்காக தீட்டியிருந்த ரகசியத் திட்டத்தின் தடயங்களை கலெக்டரும் மார்ட்டின்ஸ்-ம் கண்டுபிடித்தனர். தமது ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில், சேதுபதி மன்னர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். தமக்கும், சிவகங்கை அரசுக்கும், எதிரிகளாக இருந்த மருது சகோதரர்களை அழித்து, சிவகங்கையில் மறவரது பாரம்பரிய ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். குறிப்பாக சிவகங்கை மன்னர் வழியினரான படைமாத்துர் கவுரி வல்லபத் தேவரை அங்கு அரசராக நியமிப்பது என்பதாகும். இந்த முயற்சியில் தனக்கு எதிராகவும், மருது சகோதரர்களுக்கு ஆதரவாகவும், செயல்பட்ட கும்பெனியாரையும் நவாப்பையும் ஒழித்துக் கட்டுவது. இராமநாதபுரம் சீமையையும், சிவகங்கைச் சீமையையும், முந்தைய மகோன்னத தன்னரசு நிலைக்கு கொண்டுவருதல் என்பது அவரது திட்டம்.

திட்டம் தெளிவானது தான். ஆனால் அதனை நிறைவேற்றத் தொடுக்கும் மாபாரத போருக்கு பெருந்தொகை தேவைப்பட்டது. வெடிமருந்துச் சாதனங்களை, வெளி நாட்டாரிடமிருந்து பெற வேண்டியதாக இருந்தது. அப்பொழுது தென்னிந்திய அரசியலில், டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களின் செல்வாக்கு பெரும்பாலும் ஒடுங்கிய நிலையில் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயருக்கு எதிரான சக்திகளையும், தேசாபிமான உணர்வுகளையும் ஊக்கி வந்தனர். என்றாலும் ஆங்கிலேயருக்கு எதிராக வியாபாரத்திலும், வேறு துறைகளிலும் விறுவிறுப்பாக பங்கு கொள்ளும் நிலையில் இல்லை. ஐரோப்பாவில் நடந்த எட்டு, ஆண்டுப் போரில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. கி. பி. 1790ல்-பிரெஞ்சுப் புரட்சி துவங்கி, முடியாட்சி ஒழிந்து மக்கள் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. இந்தியா போன்ற கடல்கடந்த நாடுகளில் அவர்களது நிலையைப் பலவீனப்படுத்தியிருந்தது. ஏற்கனவே சேதுபதி மன்னர் கி.பி. 1787-ல் பிரெஞ்ச் நாட்டை அரசியல் ரீதியாக அணுகியிருந்தும். எவ்விதப் பலனும் கிட்டவில்லை.[16] என்றாலும், இத்தகைய இடர்ப்பாடுகளினால், மனம் தளராமல், தமது இலட்சியத்தை நிறைவேற்றியே தீருவது என்ற திட்டத்துடன் அவர் செயல்பட்டு வந்தார்.

அவருக்கு ஆதரவாக, திருவாங்கூர் மன்னரும், எட்டையாபுரம், சிவகிரி ஆகிய திருநெல்வேலிப் பாளையக்காரர்களும் இருந்துவந்தனர். அந்த நாட்டுப் போர்வீரர்கள் இராமநாதபுரம் பேட்டையில் நிலைகொண்டிருந்ததை ஏற்கெனவே கலெக்டர், மெக்லாய்டு, சென்னை கவர்னருக்குத் தெரிவித்திருந்தார்.[17] அதே போன்று, இராமநாதபுரத்திற்கு அண்மையிலிருந்த திருப்புல்லாணி, பரமக்குடி, பள்ளிமடம் கோட்டைகளில் மறவர் அணிகள் பலப்படுத்தப்பட்டு வந்ததை, தளபதி மார்ட்டின்சின் அறிக்கையும் தெரிவித்தது.[18] மேலும் இராமநாதபுரத்தில் புதிதாக குதிரைப்படை அணி ஒன்றும் துவக்கப்பட்டு இருந்தன.[19]

சேதுபதி மன்னர் திடீரென கும்பெனிப் படையினால் குழப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டதால், அவரது இராணுவத் திட்டத்தை எளிதில் தகர்த்து விட முடிந்தது. மேலும். தங்களுக்கு மரண பூமியாக விளங்க வேண்டிய மறவர் பூமியை தான பூமியாக நவாப்பிடமிருந்து பெற்றனர். இராணுவ நடவடிக்கைகளுக்கென தனியாக அரண்மனையில் சேதுபதி அரசர் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையை புதையல் எனக்கூறி கைப்பற்றி விட்டனர். அத்துடன் வங்காளத்துடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பினால், மன்னருக்கு அங்குள்ள சொத்துக்களையும் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். மறவர் சீமைக்கு தென்மேற்கே உள்ள கயத்தாரில் இருந்து பரங்கியரது அணி வடகிழக்காக முன்னேறி இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றியதால், தெற்கே திருப்புல்லாணியிலும், மேற்கே பரமக் குடியிலும், நிலைகொண்டிருந்த படை அணிகளுடன் தொடர்பு இல்லாது செயல் இழந்து விட்டன.

இதற்கெல்லாம் மேலாக சேதுபதி மன்னர் தமது ரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாக கீழைக்காட்டில் நிறுவியிருந்த பீரங்கி உற்பத்தி சாலையையும் கண்டுபிடித்து அதனைக் கும்பெனியார் கைப்பற்றி விட்டனர்.[20] இந்த உற்பத்திசாலை இராமநாதபுரம் கோட்டைக்கு பத்துக்கல் தொலைவில் நெருக்கமான காட்டுப் பகுதிக்குள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உற்பத்தி சாலைக்கு எந்த நாடு உதவியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெரும்பாலும், டச்சுக்காரர்கள்தான் இந்தத் திட்டத்திற்கு உதவியிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக கி.பி. 1722-ல் இராமநாதபுரத்தில் பீரங்கிப் படை அமைப்பதற்கு அவர்கள்தான் உதவியிருந்தார்கள்.[21] அடுத்து கி.பி. 1757-லும் கி.பி. 1767-லும் வணிக ஒப்பந்தங்கள் மூலம் டச்சுக்காரர்கள் தான் மறவர் சீமையுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தனர். மன்னரது இராணுவத் திட்டம் முழுவதும் காகிதத் திட்டமாக்கப்பட்டு விட்டது! அவரது சுதந்திர எண்ணங்கள் இழைந்த சிந்தனைகள், முனைந்து துவக்கிய முயற்சிகள், முழுமை பெறாத கனவாகி விட்டன!

எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை எதுவும் இல்லாத நிலையில், அவரது திருச்சி சிறைவாழ்க்கை சிறிது சிறிதாக மாமூல் வாழ்க்கையாகிக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் கோட்டையிலிருந்து வந்து செல்லும் இவரது பணியாட்கள் அவரது சீமை பற்றிய செயல்களை அப்பொழுதைக்கப்பொழுது தெரிவித்து வந்தனர். அவரது தனிமையையும் வருத்தத்தையும், ஒரளவு தணிக்கும் வாய்ப்பாக இந்தத் தொடர்புகள் இருந்து வந்தன. இவையும் சில சமயங்களில் அவருடைய ஆற்றொணாத தன்மையையும் அளவு கடந்த அவலத்தையும் மிகுதிப்படுத்தும் கருவியாகவும் மாறின. குறிப்பாக அவரது தமக்கை மங்களேஸ்வரி நாச்சியார், அவரது இக்கட்டான நிலைக்கு அணுவளவுகூட அனுதாபம் கொள்ளாமல் அவரது அரசுக்கட்டிலுக்கு முயற்சித்து வருவது, இராமநாதபுரம் அரசுக்குச் சொந்த மான பல்லாயிரக்கணக்கான பணத்தை விழுங்கிவிட்ட முன்னாள் பிரதானி முத்திருளப்பபிள்ளையை சீமைக்கனுப்பி, நேர் செய்து கொடுக்க வலியுறுத்துமாறு கும்பெனியாரை கேட்டு அலுத்துப்போன நிலையில், மீண்டும் அவரையே இராமநாதபுரம் பேஷக்காரராக நியமனம் செய்திருப்பது ஆகிய செய்திகள்[22] சேதுபதி மன்னருக்கு பலவிதத்திலும் அதிர்ச்சியை அளித்தன. மறவர் சீமையைச் சூழ்ந்துள்ள இந்தச் சோதனையை எவ்விதம் நீக்குவது? அவற்றிற்கான வழிவகைகள் எவை? என்ற வினாக்கள் சேதுபதி மன்னரது சிந்தனையில் அடிக்கடி சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.


  1. Revenue Consultations, 62 A, 24-3-1795, p. 1118
  2. Revenue consultations, Vol. 62, 15-3-1795. pp. 1275-76
  3. Revenue consultations, Vol. 61, 18-2–1795, pp. 452-59
  4. Revenue consultations, Vol. 64 A, 1795, p. 2278
  5. Revenue consultation, Vol. 62, 15-3-1795, p. 1277. Ibid., Vol. 63, 12-4-1795, pp. 1800-801
  6. Revenue consultations, Vol. 62, 15-3-1795, pp. 1260-79
  7. Revenue consultations, Vol. 63 B, 12-4-1795, pp. 1798 1802
  8. Revenue consultations, Vol. 63 B, 21-4-1795, pp. 1868-78
  9. Revenue consultations. vol. 62B。25–5-1795, pp. 2040-43
  10. Edmund Burke, Impeach ment on Warren Hastings (1908), pp. 14-15
  11. Madurai Collectorate Records, Vol. 1157, 6–5–1797, pp. 14-15
  12. Revenue consultation, Vol. 63 B, 12-5-1795
  13. Military Consultation, Vol. 193 A, 4–3-1795
  14. Military Consultations, Vol. 179, 25-2-1795
  15. Revenue Consultations, Vol. 61, 18-2-1795, pp. 452-59
  16. Kathirvel, S., Dr., History of Marawas (1972), p. 182
  17. Fort St. George Diary consultations, 21-6-1795, p.2757
  18. M. C. Vol. 188 A, 21-7-1794, pp. 3302–03
  19. Diary consultations of Fort St. George, Letter dated 22-6-1794 from collection Madras
  20. Military consultations, Vol. 190, 25–2—1795, pp. 512-19
  21. Letter dated 20–2–1722 of Dutch Governor in Ceylon quoted by her. S. Kadirvelu
  22. Revenue consultations, Vol. 62, 25-2-1795, pp. 1060-62