விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/பன்னிரு வருட ஆட்சியில்


4
பன்னிரு வருட ஆட்சியில்


வடக்கே கோட்டைப்பட்டினம் துவங்கி தெற்கே வேம்பாற்று எல்லையில் உள்ள கன்னிராஜபுரம் வரையிலான 120 கல் நீள கடற்கரையை கிழக்கு எல்லையாகக் கொண்ட சேது நாட்டின் ஆட்சியை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி சிறப்பாக நடத்தி வந்தார். அவரது ஆட்சியின் செம்மைக்கு சிறந்த பிரதானிகளான சங்கரலிங்கம்பிள்ளை, வேலுப்பிள்ளை, முத்திருளப்பபிள்ளை ஆகியோர் அடுத்தடுத்து பணியாற்றியது காரணமாக அமைந்தது. அவரது பன்னிரண்டு ஆண்டுகால ஆட்சியில் பல உன்னதமான பணிகள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக நிர்வாகத்திலும் குடிமக்களுக்கு உதவும் பல துறைகளிலும் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டன. சேதுநாடு இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்து மூன்று சதுரமைல் பரப்பினையுடைய இரண்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு ஊர்களைக் கொண்ட நிலப்பரப்பாக இருந்தபொழுதும்,[1] நீர்ப்பாசன ஆதாரங்கள் குறைவான நிலையில் மக்கள் கடுமையான உழைப்பின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான விளைச்சலைக் கண்டு வந்தனர். இதில் தீர்வை, உம்பலம், ஊழியம் கங்காணம், தர்மம் என்ற பெயர்களில் சரிபாதியான மகசூலை அரசுக்கு செலுத்தும் அவல நிலை இருந்துவந்தது. அப்பொழுது சேது நாடு பதினேழு நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது என்றாலும் அங்குள்ள நஞ்சை புஞ்சை நிலங்களின் வேறுபட்ட விளைச்சல் திறனுக்கு ஏற்றவாறு கைப்பற்றி நிலத்தை சரியா அளந்து தீர்வை விதிக்கும் அளவுமுறை கைக்கொள்ளப்படாத நிலை. இதை நன்கு உணர்ந்த பிரதானி முத்திருளப்பபிள்ளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளை நேரில் பார்வையிட்டு குடிமக்களது குறைகளை உணர்ந்து, வரிவிதிப்பு முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

முதன்முதலாக, தமது நாடு முழுவதிலும் உள்ள காணிகளை அளந்து கணக்கிடும் முறையை பிரதானி முத்திருளப்பபிள்ளை ஏற்படுத்தினார். நிலங்களை அளப்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமான முழக்கோல் பயன்படுத்தப்பட்டதால் அந்த முறையை நீக்கி நாடெங்கும் ஒரேவிதமான அளவினை ஏற்பாடு செய்தார். அதற்காக தனது நீண்ட காலடி நீளத்தின் அளவை ஆதாரமாகக் கொண்ட பிள்ளைக்குழி' அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கால்படி விதை தேவைப்படுகிற இருபத்திரண்டு அடிக்கு ஒரு அடி என்ற சதுரபரப்பு அளவுடையது அந்தக் குழி. இதன்படி ஒருகல விதையடி நிலம் 112 குழிகள் என கணக்கிடப்பட்டன.[2] இந்த நிலங்களுக்கு ஆதாரமாக இருந்த நூற்றுக்கணக்கான கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன. இராமநாதபுரம் பெரிய கண்மாய் சிறப்பாகப் பழுது பார்க்கப்பட்டது. இந்த கண்மாய்களின் ஆதாரமான வைகை ஆற்று நீர் ஆண்டு தவறாமல் ஒழுங்காக கிடைப்பதற்காக வைகை உற்பத்தியாகும் வர்ஷநாடு மலைப்பகுதியில் வைகையின் நீர்வளம் பற்றிய ஆய்வு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது செய்யப்பட்ட ஆய்வின்படி வைகைநதி வளத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் மறவர் சீமையின் தென்கிழக்குப் பகுதிக்குப் பருவகால மழை வெள்ளத்தினால் ஆண்டுமுழுவதும் தண்ணிர் வசதி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினால் இந்ததிட்டம் கி.பி. 1780-ல் கைவிடப்பட்டது.[3] நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த திட்டத்தை கும்பெனியார் நிறைவேற்றினர். அதற்குப் பெரியாறு திட்டம் என பெயரிடப்பட்டது. தற்பொழுதைய மதுரை மாவட்டம் மட்டும் அந்தத் திட்டத்தினால் பயனடைந்து வருகிறது.

இராமநாதபுரம் சீமை விளை நிலங்களும் நஞ்சை, புஞ்சை என்ற பிரிவுடன் நஞ்சை வான்பயிர், புஞ்சை வான்பயிர், நஞ்சைத்தரம் புஞ்சை, குளம்கோர்வை என அந்த மண்ணின் தரம், பாங்கு, விளைச்சல் ஆதாரம் ஆகியவைகளைக் கொண்டு பாகுபாடுகள் செய்யப்பட்டன. இவைகளில் இருந்து கிடைக்கும் விளைச்சல் தீர்வையை அந்த நிலத்தில் செய்யப்படும் வேளாண்மைச் செலவு, ஈடுபடுத்தப்படும் உழைப்பு, எதிர்பார்க்கப்படும் விளைச்சலின் மதிப்பு இவைகளை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த புதிய முறையினால் அரசுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் சரியான வழியில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டதுடன் குடிமக்களும் தங்களது உழைப்பிற்கும் விளைச்சலுக்கும் ஏற்ற தீர்வையை மட்டும் செலுத்த வேண்டியவர் ஆயினர். கிடைக்கும் மகசூல் எதுவோ அதன் பகுதியை அப்படியே தீர்வையாக செலுத்தும் பழக்கம் அதுவரை நடை முறையில் இருந்தது. அதனை மாற்றி தீர்வைக்கான மகசூலின் மதிப்பை ரொக்கமாக பணத்தில் செலுத்தும் முறையும் புகுத்தப்பட்டது.[4] இதனால் குடிகள் தாங்கள் விளைவு செய்த பொருளை அப்படியே அரசுக்கு கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

இத்தகைய பணியை அம்பலக்காரர்கள், அல்லது நாட்டாண்மை, கர்ணம், நோட்டக்காரர், தண்டல்காரர், காவல்காரர், அளவன், வரியன், பொலிதள்ளி என்ற பலவகையான அலுவலர்கள்[5] நாடு முழுவதும் மேற்கொண்டனர். இந்தப் பண மிராசி (பரம்பரை) என்றும் இந்தப் பணிக்கான ஊதியம் பெறுவதற்காக விளைநிலங்களும் மான்யமாக கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் வசூல் செய்யப்படும் தீர்வை தானியத்தின் ஒரு பகுதியாக அளந்து கொடுக்கப்பட்டது. அதற்கு 'சுவந்திரம்' என பெயர் பெறும். இன்னும் அன்றைய முகவை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைப்போல நாளைய சந்ததிகளின் அறிவு வளர்ச்சிக்குத் திண்ணைப் பள்ளிகள் மட்டும் ஆங்காங்கு தமிழ்புலவர்களால் நடத்தப்பட்டு வந்தன. அப்பொழுது தஞ்சையில் இருந்த சுவார்ட்ஸ் பாதிரியார், மறவர் சீமையில் மேல்நாட்டு முறையில் கல்வியை போதிக்கும் பள்ளிகளைத் துவக்க முன்வந்தார். தஞ்சாவூரில் கும்பெனியாரது பிரதிநிதியாக இருந்த சுல்லிவன், ஆங்காங்கு உள்ள அரசர்கள் பெரு நிலக்கிழார்களது ஆதரவைக் கொண்டு மேனாட்டு கல்வி முறையை தமிழகத்தில் தென்பகுதியில் பரப்புவதற்கான திட்டம் ஒன்றை சுவார்ட்ஸ் பாதிரியாரிடம் வரைந்து கொடுத்தார். இராமநாதபுரத்தில் அதற்கான பள்ளியொன்றை நிறுவுதல் சம்பந்தமாக பாதிரியார் இராமநாதபுரம் அரசரைச் சந்தித்து அந்தக் கல்வித் திட்டம் பற்றி விளக்கம் தந்த பொழுது, 'இது ஒரு சிறந்த திட்டம். இங்கு ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய பள்ளி நிறுவப்பட வேண்டும்' என்று தமது பேராவலை மன்னர் பாதிரியாரிடம் தெரிவித்ததுடன் அதற்கான ஆதரவு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்தார். இராமநாதபுரத்தில் நிறுவப்பட்ட இந்தப் பள்ளியைத் தொடர்ந்து சிவகங்கையிலும், பின்னர் தஞ்சாவூரிலும் நிறுவப்பட்டன. இந்த நல்ல முயற்சியை கவர்னரும், ஆற்காட்டு நவாப்பும் வெகுவாகப் புகழ்ந்தனர். இந்த புதுமையான முயற்சிக்கு சேதுபதி மன்னர் முழு ஆதரவு வழங்கியதுடன் இராமநாதபுரம் கோட்டையில் துவக்கப்பட்ட இத்தகைய பள்ளிக்கு மாதந்தோறும் முப்பது பக்கோடா பணம் மான்யம் வழங்கி வந்தார்.[6]


அடுத்தபடியாக அன்றைய சமுதாய மக்களது இறை உணர்வு காரணமாக ஆலயங்களும், அன்னசத்திரங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவைகளைப் பராமரிப்பதிலும் பழுதுபார்த்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் அன்றாட வழிபாடு, விழா, தர்மம் ஆகியவைகளை நடத்துவதிலும் சிறந்த கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இராமேஸ்வரம், திருப்புல்லணை, திருச்சுழியல், திருவாடானை, நயினார் கோவில், பெருவயல் போன்ற சேது நாட்டின் புனித தலங்களில் பெருங்கோவில்களை உருவாக்கி அவைகள் என்றென்றும் சிறந்த தலங்களாக விளங்குவதற்காக பல ஊர்களை அவை கருக்கு சர்வமான்யமாக வழங்கப்பட்டன.[7] அந்த கோவில் களில் பணி செய்பவர்களுக்கும் பலவகையான ஜீவித மான்யங்களை முந்தைய சேதுபதி மன்னர்கள் வழங்கி இருந்தனர். அதே மரபுகளைப் பின்பற்றி மன்னர் முத்துராமலிங்க சேதுபதியும் பல நிலக்கொடைகளை வழங்கி, கட்டளைகளையும் ஏற்படுத்தினார். ஆலயங்களின் பராமரிப்புக்கென வலுவான அமைப்பு ஒன்றை, நிரந்தரமாக செயல்பட அமைத்தார். கி.பி. 1788-ல் இதற்கென 'தரும மகமை' நிதியம் தோற்றுவிக்கப்பட்டது.[8] நஞ்சை நிலங்களின் மகசூலில் தீர்வையை கணக்கிடுவதற்கு முன்னர் கழிக்கப்படுகின்ற பொதுச்செலவுகளுடன் ஒரு சிறுபகுதி தானியம் இந்த மகமை நிதிக்கு ஒதுக்கப்பட்டது. இங்ஙனம் சேகரிக்கப்படும் தானிய தொகுப்பின் வருவாயைக் கொண்டு அரசு பொறுப்பில் உள்ள அனைத்து ஆலயங்களின் திருப்பணிகளை மேற்கொள்ளவும் ஆலயங்களில், வேத, புராண, நியாய, விளக்கங்கள் செய்யும் அந்தணர்களுக்கு ஆதரவு அளிக்கவும், ஏழை, எளியவர், ஊனமுற்றவர்கள் ஆகியோர்களைக் காத்து வரவும் இந்த நிதியம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் ஆலயங்கள் பராமரிப்புக்கென சேதுநாட்டு அரசியல் 'தேவஸ்தானம்' என்ற நிர்வாகப் பிரிவு செயல்படுவதற்கு முன்னோடியான திட்டம் இந்த மகமை நிதியம் எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.

தனியார்கள் பொறுப்பில் உள்ள சிறுகோவில்களின் தேவைகளுக்கும் உதவுவதற்கென்று இதனை ஒத்த இன்னும் ஒரு பொது நிதியமும் ஏற்படுத்தப்பட்டது. அது 'ஜாரி மகமை' என பெயர் பெறும்[9] மற்றும், சமூகத்தில் கல்வி, பண்பாடு ஆகியவைகளில் செம்மாந்து நின்ற தமிழ்ப் புலவர்களுக்கும், வடமொழி வித்தகர்களுக்கும், வாழ்க்கைச் சுமையினை சிரமமாகக் கருதாமல் தங்கள் பணியினைத் தொடர்வதற்கு ஆதாரமாக சருவமானிய நிலங்களையும் சுரோத்திரிய கிராமங்களையும் மன்னர் வழங்கி உதவினார்.[10]

ஆலயங்களுக்கு அடுத்தபடியாக, இந்த மன்னர் இராமேஸ்வரத்திற்கு ஆண்டு முழுவதும் யாத்திரையாக வந்து கொண்டிருந்த பக்தகோடிகளின் வசதிக்கென அன்ன சத்திரங்களை பராமரித்துவரும் பணியில் மிகுதியான பொருளையும் செலவு செய்தார். வடக்கே தஞ்சை அரசின் தெற்கு எல்லையில் துவங்கி கிழக்கு கடற்கரை வழியே தொடரும் சேதுபாதையில் பல இடங்களில் முந்தைய சேதுமன்னர் பல அன்ன சத்திரங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். போக்குவரத்து வசதிகளும், அடுத்து அடுத்து ஊர்களும், அமையப்பெறாத நிலை அந்தக் காலத்திலும் இருந்ததால், இராமேஸ்வரம் வந்து செல்லும் பயணிகளுக்கு இந்த அன்ன சத்திரங்களில் தங்கும் வசதியும், உணவு வசதியும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டன. பயணிகளின் விருப்பப்படி அந்த அன்ன சாலைகளில் அவர்களுக்கு சமைத்த உணவாகவும், அல்லது சமையலுக்கான அரிசி, பருப்பு, காய்கறிகளாகவும் வழங்கப்பட்டன. சேது மன்னரது இந்தத் தர்மம் பெரும்பாலும் மூன்றுநாட்கள் வரை ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்பட்டது. கோடைகாலத்தில் வெம்மையைத் தணிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்கு நீரும் மோரும் வழங்கப்பட்டன[11] மேலும் ஏழை எளியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரது உறுபசி நீக்கவும், இந்த அன்னச்சத்திரங்கள் புகலிடமாக விளங்கி வந்தன இந்த அறப்பணிகள் காலமெல்லாம் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற சேது மன்னர்கள் பல ஊர்களை இந்த அறப்பணிகளுக்கு ஆதாரமாக வழங்கியிருந்தனர். அந்த ஊர்களின் ஆண்டு வருவாய் முழுவதும் இத்தகைய தர்மங்களுக்கு செலவிடப்பட்டது. இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே தஞ்சைக்கும் தெற்கே கன்னியாகுமரிக்கும் செல்லும் கடற்கரைப் பகுதிகளிலும், மேற்கே மதுரைக்குமாகச் செல்லும் மூன்று வழிகளிலும் இத்தகைய சத்திரங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பாதைகளின் இடைவெளியை குறைத்து இன்னும் கூடுதலான அன்ன சத்திரங்களை மன்னர் முத்துராமலிங்கம் அமைத்தார். கோட்டைப்பட்டினம். முத்துராமலிங்கப் பட்டினம், தீர்த்தாண்டதானம், தேவிப்பட்டினம், ஆற்றங்கரை, தோணித்துறை, கடுகு சந்தை, நாகாச்சி, பால் குளம், முடுக்கங்குளம், வேலாயுதபுரம் ஆகிய ஊர்களில் புதிய சத்திரங்களை நிர்மாணித்து அவைகளில் அன்னதானம் நடைபெற தேவையான வருவாய் தருகின்ற ஊர்களை தானமாக வழங்கினார். மற்றும், ஏற்கெனவே தனவந்தர்களால் நிறுவப்பட்டு நொடித்த நிலையில் இருந்த தனுஷ்கோடி முகுந்தராயச் சத்திரம், இராமேஸ்வரம் முத்துக்குமாருபிள்ளைச் சத்திரம், திருப்புல்லாணி புருஷோத்தம பண்டித சத்திரம், வெள்ளையன் சேவைச் சத்திரம், அலங்கானுர், முடுக்கங்குளம் சத்திரம், பரமக்குடி, வேலாயுதபுரம் சத்திரம், நாகாச்சி மடம் சத்திரம் ஆகியவைகள், தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வண்ணம் அவைகளுக்கும் பல கிராமங்களை மான்யங்களாக வழங்கி உதவினார்.[12] இத்தகைய சத்திரங்களும், அவைகளுக்காக வழங்கப்பட்ட கிராமங்களின் விவரங்களும் இணைப்புப் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளது.


இவைகளுக்கெல்லாம் மேலாக, இந்த மன்னரது ஆட்சியில், பழம் பெரும் தலங்களான திரு உத்திர கோச மங்கை, திருச்சுழியல், இராமேஸ்வரம் ஆகிய ஆலயங்களின் திருப்பணிகளும், மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. உலக அற்புதங்களில் ஒன்றாக எண்ணத்தக்க இராமேஸ்வரம் கோவிலின் மூன்றாம் பிரகாரத் திருப்பணியும், இவரது ஆட்சியின் பொழுதுதான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.[13] அத்துடன் இராமநாதசுவாமி சன்னதியிலுள்ள சொக்கட்டான் மண்டபமும், இவரது திருப்பணிகளில் எழுந்த ஒன்றாகும்.[14]


இத்தகைய சிறந்த பணிகளை நிறைவேற்ற உயர்ந்த உள்ளம் மட்டும் அல்லாமல், உன்னத பொருள் வசதியும் வேண்டுமல்லவா? குடிகள் கொடுக்கும் வரிப்பணம் அனைத்தையும், திருப்பணிகளுக்கு செலவழித்துவிட்டால் நிர்வாகம், பாது காப்பு போன்ற துறைகளுக்கான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஆதலால், பொருள் வருவாய்களை பெருக்கும் பல துறைகளிலும், அவர் ஈடுபட்டிருந்ததை வரலாற்று ஆவணங் களில் காணமுடிகிறது. (இக்கால அரசுத்துறை, பொதுத்துறை ஆகியவைகளை ஒத்த நிறுவனங்கள், உற்பத்தியிலும், அரசு வணிகத்திலும் ஈடுபட்டிருப்பது போன்று. இருருாறு ஆண்டு களுக்கு முன்னரே, அவர், அரசுத்துறை வணிகத்தைத் துவக்கி வளர்த்து வந்தார்).


தமது செம்மையான ஆட்சியில், நெல் அரிசி, எண்ணெய், கருப்புக்கட்டி போன்ற அன்றாடத் தேவைகளின் மொத்த வியாபாரத்தை, தமது அரசுப் பணியாளர்களின் ஒரு பிரிவினரைக் கொண்டு நடத்தி வந்தார். இராமநாதபுரம் அரசுக்கு வரியாக ஆண்டுதோறும் அரசுக் களஞ்சியத்திற்கு வந்து சேரும் ஆயிரக் கணக்கான கலம் நெல்லை அப்பொழுதுக்கப்பொழுது, இராமனாதபுரம் கோட்டைக்கு எதிரே அமைந்திருந்த பேட்டையில் வியாபாரிகளுக்கு விற்று வந்தார்.


பொதுவாக மறவர் சீமையில் மழை அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டாலும், மழைவளம் பெற்று விளைச்சல் ஏற்படும் பொழுதும் மக்களது தேவைக்கு அதிகமான அளவு நெல் விளைச்சல் இருந்ததாகத் தெரிகிறது. குடிமக்கள் தங்களது தேவைக்கு மிகுதியாக உள்ள நெல்லையும் மன்னரது தீர்வையாகப் பெறுகின்ற நெல்லையும் மன்னரது அலுவலர்கள் விலைக்கு வாங்கி பல இடங்களில் சேகரம் பட்டறைகளில் சேமித்து வந்தனர். பொது வணிகத்தை அரசு மேற்கொண்டு இருந்ததால், இந்த நெல் உள்நாட்டு வெளிநாட்டு வணிகர்களுக்கு விற்கப்பட்டது. இவ்வித சேமிப்பிற்கும் வறட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் தானியங்களைப் பாதுகாத்து வருவதற்கும் இந்த மன்னார் கிழக்கு கடற்கரையில் உள்ள ஊர்களில் சில இடங்களில் தானியக் களஞ்சியங்கள் கட்டப்பட்டு இருந்தன. குறிப்பாக ஆங்கரையில் மூன்றும், பாம்பனில் ஒன்றும், இராமேசுவரத்தில் மூன்றும், தேவிபட்டினத்தில் இரண்டும், திருப்பாலைக்குடியில் ஒன்றும், நம்புதானையில் ஒன்றும் தீர்த்தவாடியில் ஒன்றும். கீழக்கரையில் ஒன்றுமாக மொத்தம் பதினோரு சிறு களஞ்சியங்கள் இருந்தன. இவைகளின் மொத்த கொள்ளளவு 41,580 கலம். (அதாவது 37,42,200 படி நெல்).[15] மக்களிடத்தில் பெறப்பட்ட தானியங்களைப் பதுக்கி வைத்து கிராக்கியான நேரத்தில் விற்பதற்காக தானியங்களை இந்தக் களஞ்சியங்களில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். பதுக்கி வைப்பதற்கு கடற்கரையில் மட்டும் தானிய களஞ்சியங்கள் கட்டப்பட வேண்டும்[16] இராமநாதபுரத்தில் உள்ள 'இறை ஆயிரம் கொண்டான்' என்ற அரண்மனைக் களஞ்சியம் ஒன்றே பல லட்சம் கலம் நெல்லை சேமித்து வைக்கப் போதுமானதாகும். இதைக் கவனித்து வந்த பணியாளர் குழு. மக்களுக்குத் தேவையான பொருட்களையும், கைத்தறித் துணிகளையும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களையும் விற்று வந்தனர்.[17] மேலும், மறவர் சீமை செலாவணியில், சுழிச்சக்கரம், ஸ்டார் பக்கோடா, போர்ட்டோ நோவா பக்கோடா என்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்துவந்தன. கைத்தறி ஏற்றுமதி மூலம், இராமநாதபுரம் அரசுக்கு கிடைத்த டச்சுக்காரர்களது போர்ட்டோ நோவா பக்கோடா மிகுதியான செலாவணியில் இருந்தது. வேறு நாணயங்கள் எதுவும் செலவாணியில் இல்லாத நிலையில் டச்சுக்காரரது நாணயங்களுடன், இதர நாணயங்களின் மதிப்பை நிர்ணயித்து, ஒருவகை நாணயத்திற்கு மாற்றாக பிறிதொருவகை நாணயம் வழங்கும் வசதியும், இராமநாதபுரம் அரண்மனையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாணய மாற்றுதல் மூலம் கழிவுத் தொகையாக அரசுக்கு நல்ல வருவாயும் கிடைத்து வந்தது.[18]


கைத்தறித் துணியைப் பொறுத்தவரையில், மறவர் சீமை முழுவதும் இருந்த தறிகளில், பரவலாக அவை தயாரிக்கப்பட்டன. பரமக்குடியில் மட்டும் மிகவும் அதிகமாக 670 தறிகள் இருந்தன. பட்டு நூல்காரர்களிடம் 600-ம் சோனகர்களிடம் 35-ம், கைக்கோளர்களிடம் 35-ம் இயங்கி வந்தன. இவைகளில் 150 தறிகள் மன்னரது ஒப்பந்தம் பெற்று உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன. இந்தத் தறிகளில் அப்பொழுது பெரும்பாலும், சலாம்பூர் என வழங்கப்பட்ட காலிக்கிளாத் துணி நெசவு செய்யப்பட்டது. அவை 6. 7, , 8, 9, , 10 காலிக்கிளாத் என்றும், 32 க்யூபிக் பீட் நீளத்திலும் 24 கியூபிக் பீட் அகலத் திலும் நெசவு செய்யப்பட்டன. அவைகளில் அரை லாங்கிளாத்' என்றும் முழு லாங்கிளாத் என்றும் இரு வகைகளிருந்தன. இவை தவிர வேட்டிகள், சேலைகள், மஸ்லின் துணிகள், கைக்குட்டைகள் என பிறவகை துணிகளும் நெசவு செய்யப்பட்டன. பட்டு நூல்க்காரர்களது நெசவுப் பட்டறையில் பெரும்பாலும், மஸ்லின் துணியும், ஆங்கில, பிரஞ்சு, டச்சு நாட்டவர்களுக்கு ஏற்ற வகைத் துணிகளும் நெய்யப்பட்டன.[19]

இந்தத் தறிகளுக்கு மூவேந்தர் காலத்தில் விதிக்கப்பட்டது போன்று தறி இறை ஒன்று வசூலிக்கப்பட்டது. தறி ஒன்றுக்கு 4 சுழிப்பணம் என்பது பொதுவான வரியாகும். இது தவிர்த்து அரண்மனையில் திருமணம், முடிசூட்டுவிழா போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளின் போது, நெசவாளர்களிடம் வேறு ஒருவகையான வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது.[20] மற்றும், தறியின் உற்பத்தி அளவுக்கு தக்கவாறு, கூடுதல் சுங்கம் ஒன்றையும், நெசவாளர்கள் செலுத்தி வந்தனர். மன்னரது ஒப்பந்தத் தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, சென்னை ஆகிய நகர்களுக்கு, மன்னர் அனுப்பி வந்தார். இவ்விதம் மன்னரது வியாபாரத் தொடர்புகளின் எல்லைகள் பரந்து விரிந்து கொண்டிருந்தன. வடகோடியிலுள்ள வங்காளத்துடன் சங்கு வியாபாரமும், தென்கோடியிலுள்ள திருவாங்கூருடன் தெங்கு வியாபாரமும் தொடர்ந்து நடைபெற்றன. பிரஞ்சு, டச்சுநாட்டவருடன் வணிகத் தொடர்புகளைக் கவனிக்க சென்னையில் தனியாக வக்கீல் ஒருவர் நியமனம் செய்யப் பெற்றிருந்தார்.[21] இதைப்போன்று, கல்கத்தாவிலும், மன்னரது பிரதிநிதி ஒருவர் இருந்து வந்தார்.[22] இலங்கையுடனான எற்றுமதி இறக்குமதிகளைக் கவனிக்க பாம்பன் துறைமுகத்தில் தனியான அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தர்.

மன்னரது ஏற்றுமதி இறக்குமதி வியாபாரப் பட்டியலில் கைத்தறித் துணிகள், அரிசி, இஞ்சி, மிளகு, தேக்கு, பாக்கு, புகையிலை, கருப்புக்கட்டி, புளி, தெங்குப் பொருட்கள் ஆகியன காணப்படுகின்றன. இந்தப் பொருட்களைக் கொண்டு செல்லும் தோணிகளையும், படகுகளையும், பாம்பன் கால்வாயில் கடத்தி விடுவதற்காக மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 15,000/சுலிப்பணங்கள் சுங்க வருவாயாகக் கிடைத்தது.[23] இத்தகைய வாணிபத்தில் கல்கத்தாவிலுள்ள பேரட் கம்பெனி என்ற நிறுவனமும் பாண்டிச்சேரி வரதப்பச்செட்டி, காயல்பட்டினம் சேகனா லெப்பை, கீழக்கரை அப்துல்காதர் மரைக்காயர், நாகூர்சாமி செட்டி, நாகப்பட்டினம், சுப்பராயபிள்ளை, திருவாங்கூர் சேக் குட்டி என்ற பெரும் வணிகர்கள் மன்னருடன் தொடர்பு கொண்டிருந்த விபரம் தெரிய வருகிறது.[24]

இவர்களில் கிழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதிர் என்ற பெருவணிகருக்கு சிறப்பான வியாபாரச் சலுகைகளை சேதுபதி மன்னர் வழங்கி இருந்தார். இந்த வணிகரது முந்தையோர்களும் இராமநாதபுரம் மன்னருக்கு உற்றுழி உதவும் சிறந்த நண்பர்களாக விளங்கியவர்கள். ஆதலால் அப்துல் காதிர் மரைக்காயரது வாணிப பொதிகளுக்கு மறவர் சீமையில் மிகக் குறைவான சுங்கவரி (முக்கால் சதவீதம் மட்டும்) வசூலிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. அவரது வணிகம் தங்குதடை இல்லாமல் தொடருவதற்கு இவ்விதம் ஊக்குவிக்கப்பட்டது.[25]


  1. Rajaram Row T. Ramnad Manual (1891), pp. 9-1
  2. Itnlnram Row, T., Ramnad Manual (1881) page
  3. Madura Dt. Records Vol. 1152. pp. 12, 16.
  4. Rajaram Row, T., Ramnad Manual (1891),
  5. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 310
  6. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 129.
  7. Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 252, p. 121.
  8. Census the Town of Madras (1871), pp. 49-50.
  9. Rajaram Row, T, , Ramnad Manual (1891), p. 12
  10. Boards Misc. Register. (1812), pp. 332, 351.
  11. Rajaram Row, T. Ramnad Manual (1891), pp. 98-94.
  12. Boardis Misc Register. (1812), Vol. No. 6, pp. 301-406.
  13. கமால் எஸ். எம்., இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984), பக். 17.
  14. Vanamamalai Pillai, N. The Setu and Rameswaram (1929), p. 121.
  15. Revenue Consultations, Vol. 91-B, pp. 4755 (1797)
  16. —do— Vol. 91-B, 14-12-1797, pp. 4749–51
  17. —do— Vol. 50-A. (1793). pp. 546-47
  18. —do— Vol. 50-A (1793), pp. 550–51
  19. Rov. cons. vol. 50-A. (1793), p. 542
  20. R. C. Vol. 50-A (1793), pp. 544-45
  21. M C Vol. 44-A (1793), P. 55.
  22. R. C. Vol. 62-A (1795), pp. 1796-97
  23. R. C. Vol. 105. (1800), pp. 2615-16
  24. Revenue Consultations. Vol. 62-A, pp. 1796–97
  25. Madura District Records, Vol. 1178, pp, 470-472