விடுதலைப்போர், இரண்டாம் பதிப்பு/படத்தின் விளக்கம்

படத்தின் விளக்கம்

"திராவிட நாடு" என்று நாம் குறிப்பிடுவது, இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறுநாடாக இருக்கும், இச்சிறுநாடு, எப்படித் தனிஆட்சி நடத்தமுடியும் என்று, பலர் கேட்கின்றனர். இவரில் சிலர் உண்மையாகவே சந்தேகங் கொண்டவர்கள்; மற்றவர் ஏதேனும் குறை கூறவேண்டுமென்பதற்காகவே இதுபோல் பேசுபவர்கள். "திராவிட நாடு" சிறுநாடுமல்ல, உண்மையிலேயே சிறு நாடுகளாக உள்ளவைகளும், தனிஆட்சி நடத்தாமலுமில்லை என்பதை விளக்குவது, அடுத்துள்ள படம். "திராவிட நாடு"ம், அதைச்சுற்றிலும் போலந்து, பின்லந்து, டென்மார்க், போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலந்து, பெல்ஜியம், ஜெர்மனி, கிரீஸ், நேபாளம், பல்கேரியா ஆகிய நாடுகளும் சித்திரத்தில் காட்டப்பட்டுள்ளன. "திராவிட நாடு" மற்ற நாடுகளைவிடப்பெரிதாக இருப்பதைக் காணலாம். எல்லா நாடுகளின் படமும், 300 மைலுக்கு ஒரு அங்குலம் என்ற அளவிலே வரையப்பட்டுள்ளன திராவிட நாடே, இத்தனை நாடுகளையும்விடப் பெரிது என்பது இதனால் விளங்கும் என்று கருதுகிறோம். திராவிட நாட்டைவிட, எவ்வளவோ சிறியதாக உள்ள நாடுகள் தனியாட்சி நடத்தும்போது, திராவிடநாடு தனியாட்சி நடத்தமுடியாதா என்று யோசிக்கும்படி, தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.