விடுதலைப்போர், இரண்டாம் பதிப்பு/பூகோள போதனை

பூகோள போதனை !

பிரிட்டிஷ் பிரபுக்கள் இந்திய உப கண்டத்தில் ராஜப் பிரதிநிதிகளாக வராமலிருந்த காலம் ஒன்ற இருந்தது ! ஏன் ! பிரிட்டிஷ் பிரமுகர்கள் மொகல் தர்பாரிலே, அனுமதி பெற்று பேட்டி கண்டு, சலாமிட்டுக் குனிந்து நின்று, ஜாடை தெரிந்து சரக்கைக்காட்டி, வினயமாக வியாபாரம் செய்த காலம் ஒன்று இருந்தது. பொன்னும் மணியும் கொழித்த காலம்! வீரரும் தியாகியும் உலவிய நேரம்! வாழ்க்கை ஓர் விருந்தாக இருந்த வேளை. அந்தக் காலத்திலே திராவிடம் தனி! பாகிஸ்தான் தனி! இந்து மன்னர்கள் தனித்தனி! அந்தக் காலத்திலே கட்டப்பட்ட அழகிய தாஜ்மஹாலைத்தான், அகில உலகிலிருந்தும் வரும் யாத்ரீகர்கள் இன்றும் கண்டு, போற்றுகின்றனர்.

"அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
       அழகாய் முத்து குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
        முல்லைக்காடு மணக்கும் நாடு"

என்ற விதத்தில் இருந்தது திராவிடநாடு.

சரிதமும் பூகோளமும் சேர்த்துப் பார்ப்போமானால், இந்திய பூபாகத்தில் மூன்று தனி அரசுகள் அமைவதே முறை என்பதை யாரும் உணர்வர்.

பூகோளத்தையுங் கூட, போதனைக்காக மட்டுமன்றி, தெளிவுக்காகப் படிக்கும் யாவரும், இந்தஉபகண்டம், நிலப்பண்பு, சீதோஷ்ணப் பண்பு ஆகியவைகளிலே, மூன்று தனித்தனி இடமாக இருத்தலைக் காணலாம். மலையும் மணல் வெளியுங்கலந்த வடமேற்குப்பாகம், இமாலய அடிவட்டாரம் என்னலாம், வளமும் வற்றாநதிகள் பாய்வதுமான கங்கை நதி தீரம், தென்பீட பூமி, என்று மூவகை நாடுகள் உள்ளன. இவை, பிரிட்டானியர், டென், ரோமன், நார்மன் எனும் பல்வேறு இனத்தவருக்குத் தம்நாடு வேட்டைக் காடாவதைக் கண்டு கசிந்து கிடந்த காலத்திலே, தேன் கசியும் கவி இயற்றி, மணம் வீசும் வாழ்வுடன்,

"வானிடை மிதந்திடும் தென்றலிலே
         மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே
 தேனிடை யூறிய செம்பவள
          இதழ்சே யிழையாருடன் ஆடுவோமே"
 என்று பள்ளுப் பாடி வாழ்ந்த இடங்கள்!

பூகோள போதனை புரியும் "பூஜ்யர்கள்" ஸ்காண்டிநேவிய தீபகற்பமென்று இயற்கையால் ஒரே வட்டாரமாக்கப்பட்டுள்ள இடம், ஏன் ஸ்வீடன் என்றும், நார்வே என்றும் இரு அரசுகளாகப் பன்னெடுங்காலமாக உள்ளன என்பதையும், ஐபீரியன் தீபகற்பம், ஸ்பெயின் என்றும் போர்ச்சுகல் என்றும் இரு பிரிவாக, இரு அரசாக ஏன் உள்ளதென்பதையும், இங்குள்ள பெரிய பண்ணை அளவுள்ளதான ஒரு லக்சம்பர்க் ஏன் தனி அரசு, தனிவாழ்வு கோருகிறதென்பதையும், சிறுநாடுகளின் சுதந்திரங்களைக் காப்பாற்றவே, பிரிட்டன் சீறிப் போரிட்டது என்ற போர் நோக்க விளக்கத்தையும், மறந்துவிடத் துணிகிறார்களா என்று கேட்கிறோம். ஒருகோடி முஸ்லீம் ஒரே இடத்திலே வாழ்ந்து, வேற்றானிடம் அடிமைப்பட்டு இருக்கின்றனரா? இல்லை! எங்கும் தாருல் இஸ்லாம்! இங்கு மட்டுமே 10 கோடி முஸ்லீம்கள், அடிமை வாழ்வில் இருந்தனர். நாலு கோடி பேர், எங்காவது நயவஞ்சகரின் நாட்டியப் பொம்மைகளாகி உள்ளனரா? இல்லை ! திராவிடருக்கு மட்டுமே அக்கதி! இரு இனமும் இக்கதி பெற்றதன் காரணம், பூகோளப் பித்தலாட்டமன்றி வேறென்ன? பூகோளத்தை விஞ்ஞானமும், இன எழுச்சியும் மாற்றியிருப்பதை யார் மறுக்க முடியும்? பூகோளத்துடன் விஞ்ஞானம் சேரவில்லையானால், சூயஸ்கால்வாய் ஏது? சொகுசான வியாபார வாழ்வு மேனாட்டாருக்கு எங்ஙனம் கிடைத்திருக்க முடியும்?

அயர்லாந்திலே ஒரு அல்ஸ்டர் ஏற்படுவதற்குள்ள காரணங்களைவிட ஆயிரமடங்கு அரிய பெரிய, சரித ஆதாரமுள்ள காரணங்கள், பாகிஸ்தான், திராவிடநாடு பிரிவினைக்கு உண்டு. மே. த. வைசிராய் பூகோள போதனையை மறந்து சரிதத்தைச் சான்றுக்கழைக்க வேண்டும். நாலு கோடி "நாடாண்ட இனம்" தன்னரசுபெற உரிமை உண்டு. உரிமைப்போர், உபதேசத்தினால், மங்கிவிடாது.