விடுதலை வீரர்கள் ஐவர்/வ.வே.சு. ஐயர்
௪. வ. வே. சு. ஐயர்
[அப்துர் ரகுமான்]
நாடும்பேர் உந்துதலால் அந்நாள் வீரர்
நாடுவிடு தலை செய்தார் ; நீயோ இந்நாள்
ஓடும் “போர் உந்து”விடு தலைச்செய் கின்ற
உரிமை பெற்றாய் ; ஆங்கிலரின் ஆட்சி தன்னைக்
கேடென்றே அகற்ற நின்றார் அவர்கள் ; நீயும்
கிள்ளியெறிந்தாய் அவர்தம் எழுத்தை; நம்மை
மூடிநின்ற ஆங்கிலத்தைப் போக்கடித்து
முத்தமிழ்க்கு வரவுரைத்த அமைச்சர் ஏறே;
***
கல் நினைவுக் கட்டிடங்கள் காலத்தால் சாயுமெனச்
சொல் நினைவுக் கட்டிடங்கள், சுடர்மிகுந்த வீரர்க்குக்
கட்டி வருக வெனக் கட்டளைகள் உரிமையுடன்
இட்டழைத்துப் பணிசெய்ய எமையழைத்த வானொலியே!
நாட்டுத் தளைகளைய் நாட்டமுற்ற தலைவர்களைப்
பாட்டுத் தளைகளுக்குள் பற்றிவந்த பாவலரே!
வீடுகளில் இருந்தபடி விடுதலைப்போர்க் காவியத்தின்
ஏடுகளைச் சுவைக்கின்ற இனியவரே! என் வணக்கம்
***
படுக்கவைக்கப் பட்டிருந்த நாடு - பகையின்
படைவுடைத்துக் கொண்டிருந்த காலம்
மடக்கி வைக்கப் பட்டிருந்த வீரம் - பொங்கி
அடக்கி வைக்கப்பட்டிருந்த தேசம் - அடைத்த
கடைவுடைத்துக் கொண்டிருந்த வேளை
தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் - அடிமைத்
தடைவுடைத்துக் கொண்டிருந்த நாட்கள்
உடலெல்லாம் துடிக்கின்றபோது- அதிலே
ஓரங்கம் தூங்குவது முண்டோ ?
தடைவிலங்கு பாரதத்துக் கென்றால் - அதனைத்
தமிழகந்தான் தாங்குவது முண்டோ ?
விடுதலைப் போர்ப் படைதிரட்டி முன்னால் - நின்று
வீரவுரை தந்ததலை வர்க்குள்
சுடுநெருப்பாய் மூண்டெழுந்த ஐயர் - அந்தச்
சுடர் விளக்கின் புகழ்பாட வந்தேன்!
வெள்ளையரைக் கொள்ளையரைத் தமது சொந்த
வேட்டாலும். ஏட்டாலும் அதிரவைத்த
வெள்ளையரே’ வ, வே. சு ஐயர்; நாட்டு
வீரப்போர்க் காவியத்தின் நெருப்பெ ழுத்து
வெள்ளிநரை சாமிநாதையர், ஏட்டு
விடுதலைக்குப் பாடுபட்ட ஐயர் ; பொங்கும்
விடுதலைக்குப் பாடுபட்ட வீர ஐயர்
திருவரக ‘னேரி’யிலே பிறந்து, வீரச்
செந்நெருப்புக் ‘கட்’லாக வாழ்ந்து பின்னர்
‘அருவி’யிலே ஆயுளினை முடித்துக் கொண்ட
ஆச்சரிய வர‘லாறு’ கண்ட வீரர்
குருவிகளும் காக்கைக்ளும் தமது சொந்தக்
கூடுகளில் விடுதலையாய் வாழும் போது
துருப்பிடித்த வாளாகி எனது நாடு
கடல்கடந்தார் வழக்குரைக்கும் கலைகடந்தார்
கவிக் கம்பன் காவி யத்துக்
கடல்கடைந்தார் அமுதெடுத்தார் ஆங்கிலராம்
அரக்கர்க்கும் கையில் தந்தார்
கடல்கடந்து வந்திங்கே கடை விரித்தோர்
கலைச்சரக்கில் கருத்தைத் தந்தார்
உடல்கடந்தார் எனினும் நம் உள்ளத்தைக்
கடக்கவில்லை உறைய லுற்றார்!
அக்கரையில் இருந்தாலும் அயல்நாட்டில்
வாழ்ந்தாலும் அன்னை மீதில்
அக்கறையாய் இருந்து வந்த ‘இந்தியா
விடுதி’யிலே அங்க மானார்
சர்க்கரையா உயிரெமக்கு ; சமர்க்களமா
புதிதெமக்கென் றாங்கி லேய
சர்க்காரை எதிர்த்து வந்த சாவர்க்கார்
பாசறைக்கோர் தலைவர் ஆனார்
***
பட்டம் பதவிக்கும் கிட்டும் உதவிக்கும்
பண்பை மறந்தவரை - நாட்டின்
அன்பைத் துறந்தவரைப் - பெரும்
பட்டியல் போட்டுப் பதைத்திடும் காலத்தில்
பட்டம் பெற மறுத்தார் - அந்தக்
கட்டத்தில் ஒன்றுரைத்தார்
ஆட்டுக்குப் புல்லைப்போல் பட்டம் எனும் பேரில்
அடிமைச் சாசனமா? - நாட்டில்
அந்நியர்க் காசனமா? - தாய்
நாட்டுக்கு வாதாட நாடி நின்றேன் பிறர்
கேட்டுக்கு வாதாடவோ - வயிற்றுப்
பாட்டுக்கு வாதாடவோ?
சட்டப் படிப்பட்ட பட்டப் பிடிப்புக்குள்
கட்டுப் படக்குனியேன் - மானம்
வெட்டுப் படத் துணியேன் - பிறர்
துட்டப் பிடிப்பினில் கட்டப் படுந் தாயின்
துயரை ஒழிப்பேன் என்றார் - தமது.
உயிரை அளிப்பேன் என்றார்
உரையே மாற்றியும் பேரையே மாற்றியும்
ஊரைஏ மாற்றியவர் - பல
பேரைஏ மாற்றியவர் - இந்தப்
பாரினில் உண்டு ; தன் நாட்டினைக் காத்திட
பற்பல வேடமிட்டார் - இவர் போல்
விற்பனர் வேறிங்குயார்?
பெண்டாற்றும் பொன்பற்றும் என்பற்ற
இல்லையெனப் பிரிந்த போதும்
மண்பற்றைத் துறக்காத துறவியிவர் ;
பிறவியிலே மறைய வர்தாம் ;
பின்பற்றும் ஒற்றர்க்கும் பிடிக்க வொண்ணா
மறையவர்தாம் ; பிடித்த தொண்டில்
என்பற்றுப் போனாலும் என் - பற்றுப்
போய் விடுமோ? என்ற அண்ணால்
***
பாரசீகர் கோலத்தில் ஐயர் ஓர் நாள்
பாரீசு புறப்பட்டார் கலத்தில் அந்த
வீரசிங்கம் வைத்திருந்த பெட்டிமீது
“வீ.வீ.எஸ்” எனும் பெயரைக் கண்டோர் ஒற்றன
“ஆரையா நீ”ரென்று தூண்டில் போட்டான்
அதற்கந்த திமிங்கலமா சிக்கும் ? “நான் தான்
வீரவிக்ரம் சிங்’கென்றார் ஐயர் ; ஒற்றன்
வீரசிங்கக் குரல் கேட்ட நரியாய் ஆனான்.
***
காயிதத்துப் புரட்சி செய்த பாரதியும்
அரவிந்தக் கலைஞர் தாமும்
ஆயுதத்துப் புரட்சி செய்த ஐயருடன்
அணி வகுத்தார் ; அலையின் ஈர
வாயுதத்தும் புதுச்சேரி தனைப் புரட்சிச்
சேரியென மாற்றி வைத்தார்
ஓயாத எரிமலையாய் உடையாத
கடலலையாய் உழைக்க லானார்.
***
பண்டுசெய்த பாரதப்போரார் அணிவகுப்பும்
நெப்போலியன் படைய மைப்பும்
கொண்டு செய்த புதுமுறையில் புரட்சிக்கோர்
நூல் தந்தார் ; குலையா நெஞ்சால்
தொண்டு செய்தார் ; நம் நலத்தைத் துண்டுசெய்த
அந்நியரைத் துளைப்ப தற்குக்
குண்டு செய்தார் ; ஆதிக்க ஆட்சியினை
வீரத்தால் குலையச் செய்தார்.
***
ரத்தம் பன்னீர். நமக்கு - பெறும்
ரணம்தானே ஆபரணம் - நாம்
உத்தம விடுதலைக்கே - எங்கள்
உயிரும் விலை தருவோம் - என
ரத்தத்தில் கையெழுத்தை - இட்ட
ராணுவ இளைஞருக்கு - ஐயர்
யுத்தத் தளபதியாய் - வீர
ஆணைகளை இட்டு வந்தார்
ஆயுத ஆர்ப்பாட்டங்கள் - நமை
அடக்கிடும் ஆற்றல்களோ?
காயித மூடிகளோ - பெரும்
கனலை மறைத்து விடும்?
பாயும் பெரும்புனலை - உப்புப்
பாறையா தடுத்து விடும்?
ஆயிரம் படைவரினும் - தூள்
ஆக்குவோம் என்றுரைத்தார்
வீட்டின் உயிர்மூச்சு - குலம்
விளக்கும் மங்கையர்கள் - நல்ல
பாட்டின் உயிர்மூச்சு - தக்க
பண்ணின் அமைப்பாகும் - ஒரு
நாட்டின் உயிர்மூச்சு - மக்கள்
நாடும் விடுதலையாம் - அது
கேட்டுப் பெறும் பிச்சையோ? - எனக்
கிளர்ச்சிக் குரல் கொடுத்தார்
சீக்கியர் போல் தமிழர் - மீண்டும்
சிங்கங்க ளாகவேண்டும் - நமைத்
தாக்கிய அந்நியரை - நாம்
தாக்கியே நீக்க வேண்டும் - தன்
நாக்கினால் பேசலன்றிப் - பிறர்
நாக்கினால் பேசலுண்டோ ? - சொந்த
வாக்கு மொழிகளிலே - கலை
வளர்த்திட வேண்டுமென்றார்
காஞ்சிரங்காய் ஆட்சிக்குக் கல்லறையைக்
கட்டிவந்த வீரர் தம்மைப்
பூஞ்சைகளாய் மதித்துவந்த ‘ஆஷ் துரையைப்
பொசுக்கிநின்ற வீரன், நாட்டு
வாஞ்சையுள்ள வாஞ்சி ஐயன் ஐயரது
பாசறையில் வளர்ந்த சிங்கம்!
நாஞ்சிலுக்கு முனைபோல் காட்டிளைஞர்
தமைஐயர் நடத்தி வந்தார்
உற்றாரோ டொருவீட்டில் உரையாடிக்
கொண்டிருந்தார் ஓர் நாள் ஐயர்;
பற்றுகின்ற நினைப்போடு பதுங்கி யிருந்
தார் ஒற்றர் வெளியே! அத்த
முற்றுகையின் நேரத்தில் மூண்டதொரு
அழுமோசை வீட்டுக் குள்ளே
ஒற்றர்கள் ஒதுங்கி நிற்க ஒருபாடை
நகர்ந்த தங்கே ஊருக் குள்ளே!
வீடுவிட்டுப் புறப்பட்டோர் காடுவரை
செல்லவில்லை; வெறுமை யாகக்
கூடுவிட்டுப் போனவுயிர் வந்தது போல்
பிணமெழுந்து குதித்த(து) ஆமாம்
நாடு விட்டுக் கொடுக்காத நம்நாட்டு
வீரர்தம் சரித்தி ரத்தின்
ஏடுவிட்டுப் போகாத ஐயர் தம் சாகசத்தில்
இதுவும் ஒன்று!
பிணியாக இந்நாட்டைப் பிடித்த
அந்நியரின் பிடியை நீக்கத்
துணியாத செயலில்லை; துரத்தி வந்தோர்
கண்களிலே துணியைக் கட்ட
அணியாத கோலமில்லை; ஆற்றாத
தொண்டில்லை; அதிகாரத்தால்
தணியாத நெருப்பாம் அத் தணல் மனிதர்
தண்ணீரில் சமாதி கண்டார்!
“நீர்வீழ்ச்சி தனிலன்று நீர்வீழ்ச்சி
உற்றாலும் நின்ற கீர்த்தி
சீர்வீழ்ச்சி உற்றதில்லை பேர்வீழ்ச்சி
உற்றதில்லை சிதைந்தே இந்தப்
பார் வீழ்ச்சி உற்றாலும் பாரதத்து
மக்கள் தம் மனத்தி ருந்து
நீர்வீழ்ச்சி உறுவதில்லை” எனப்புகழ்
வரலாற்றில் நிலைத்து நின்றார்.