விந்தன் கதைகள் 1/கடவுள் என் எதிரி

கடவுள் என் எதிரி

ன்றொரு நாள் மாடி அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்து, நான் மெளனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள்.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.

அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, "சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?" என்று கேட்டாள்.

“ஆமாம்."

"உங்கள் பெயர்?”

"சஞ்சீவி."

"தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்..."

“என்ன உதவி?”

"என் அண்ணாவை உங்களுக்குத் தெரியுமோ?”

"தெரியாதே"

“சமீபத்தில் வங்காளப் பஞ்ச நிவாரணத்துக்காக இந்தப் பக்கம் நிதி திரட்டிக் கொண்டிருந்தாரே, அவரை உங்களுக்குத் தெரியாதா?”

"யார் அது கிருபாநிதியா?”

“ஆமாம், அவர்தான் என் அண்ணா!"

“ஓஹோ அவரைப் பற்றி இப்பொழுது என்ன?”

“அவர் ஒரு தவறான காரியம் செய்துவிட்டார்....”

“என்ன காரியம்"

"ஒரு நாள் உங்கள் அப்பாவிடம் வந்து அவர் வங்கநிதிக்காக உதவி கோரினார்..."

“ஆமாம் அதில் என்ன தவறு?”

"அதில் ஒன்றும் தவறில்லை. அதற்குப் பிறகுதான் என் அண்ணா தவறு பண்ணிவிட்டார்"

"என்ன தவறு?’’ "உதவி கோரியதற்கு உங்கள் அப்பா ஒரே வாத்தையில் ‘இல்லை' என்று சொல்லியிருக்கலாம். ஆனால் என் அண்ணாவின் கஷ்ட காலம் அவர் அப்படிச் சொல்லவில்லை. முதலில் உமது பஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும்; அப்புறம் வங்கப் பஞ்சத்தைத் தீர்க்கப் பாரும்!" என்று என் அண்ணாவின் ஏழ்மை நிலையைப் பற்றி என்னவெல்லாமோ குறை கூறினாராம். அந்த ஆத்திரத்தில் அதி தீவிரவாதியான என் அண்ணா, தன் சகாக்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்றிரவே உங்கள் வீட்டுக் கஜானாவில் கையை வைத்துவிட்டார். களவாடிய பணத்தை மேற்படி நிதிக்கும் அனுப்பி வைத்துவிட்டார். இப்பொழுது உங்கள் அப்பா கொடுத்த தகவலின் பேரில் போலீசார் என் அண்ணாவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிமிஷத்திலும் அவர்கள் அண்ணாவைக் கைது செய்யலாம். எனக்கோ அவரைப் பிரிந்தால் வேறு நாதி கிடையாது. இதற்கு நீங்கள் நான் ஏதாவது உதவி செய்ய வேணும்.”

ஒரு நிமிஷம் நான் யோசித்துப் பார்த்தேன். அவளுடைய அண்ணா வங்க நிதிக்கு உதவி கோரிய அன்று நானும் அதற்காக என் அப்பாவிடம் உதவி கோரி, வேண்டிய வசவு வாங்கியிருந்தேன். இந்தச் சம்பவம் என் கவனத்துக்கு வந்ததும், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு நான் அவளுக்கு உதவி செய்வதென்று தீர்மானித்தேன். ஆகவே நான் அவளைப் பார்த்து, “இப்படியே உன் அண்ணாவைத் தலைமறைவாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கச் சொல்லு; நான் எப்படியாவது அவரை அந்த ஆபத்திலிருந்து தப்புவிக்கிறேன்" என்றேன்.

"உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு" என்று அவள் எனக்குத் தலை வணங்கிவிட்டுத் திரும்பினாள்.

"உன் பெயர்?" என்றேன்.

"கோதை" என்றாள்.

கோதை.....கண்டதும் என் உள்ளத்தில் கோயில் கொண்டு விட்டாள். நானும் அந்த நிமிஷமே கற்பனை உலகில் அவளுடன் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டேன்.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே 'ஓடு ஒடு' என்று ஒடுகிறாள். "கோதை, கோதை" என்று கூவிக்கொண்டே நானும் அவளுக்குப் பின்னால் ஒடுகிறேன்.

கடைசியில் அவள் கரமும் என் கரமும் இணைகின்றன.

அங்கே ஒரு பூந்தோட்டம், எத்தனை விதமான கொடிகள்; எத்தனை விதமான செடிகள்! - மலர்களுக்கு மட்டுமா இயற்கை அழகை அளித்திருக்கிறது? இலைகளுக்குக்கூட அல்லவா அழகை அளித்திருக்கிறது!

ஆஹா அழகைக் கண்டு மயங்காத உயிர் எது? அதிலும் காதலுக்கே புருஷன் செளந்தரிய தேவன் தானே? எனவே அழகுத் தெய்வத்தின் ஆலயம் போல் விளங்கும் அந்தத் தோட்டத்திற்குள் நாங்கள் நுழைகிறோம். பச்சைப் பசேரென்று இருக்கும் புற்றரை எங்களை ‘வா வா’ என்று வருந்தி அழைக்கிறது. நாங்கள் 'கலகல' வென்று சிரித்துக் கொண்டே அதில் உட்காருகிறோம்.

உடனே - கொஞ்சல் - குலாவல் - பிணக்கு எல்லாம்!

"இந்த உலகிலேயே நீதான் அழகி" என்று நான் அவளைப் பார்த்துச் சொல்கிறேன். "இந்த உலகிலேயே நீதான் அழகன்" என்று அவள் என்னைப் பார்த்துச் சொல்கிறாள்.

மறுநாள் நினைத்துப் பார்த்தால் சிரிப்புச் சிரிப்பாய் வருமே என்று கூட எண்ணாமல் நாங்கள் அப்பொழுது என்னவெல்லாமோ பிதற்றிக் கொள்கிறோம்.

அதற்குள் பொழுது சாய்ந்துவிடுகிறது. அத்தனை அவசரமாக மேற்குத் திசையில் மறைந்துவிட்ட ஆதவனைச் சபித்துக் கொண்டே நாங்கள் வீடு திரும்புகிறோம். திரும்பும் போது இன்னதென்று சொல்ல முடியாத ஓர் இன்பம்; எதெற்கென்று தெரியாத ஒரு சிரிப்பு. மனதில் தன்னை மறந்த ஒரு மகிழ்ச்சி, அச்சத்திலும் ஒர் ஆனந்தம் - "மது மறைந்துண்டவன் மகிழ்ச்சிபோல்" என்று உவமை சொல்லிய கவி, கள்ளக் காதலை எவ்வளவு தூரம் அனுபவித்திருக்க வேண்டும்?

அப்புறம் கல்யாணப் பேச்சு ஆரம்பமாகிறது; ஜாதகம் பார்க்கிறார்கள்; முகூர்த்தம் குறிக்கிறார்கள்; பத்திரிக்கை போடுகிறார்கள்; பந்து மித்திரர்களுக்கு அனுப்புகிறார்கள்; பந்தலும் போடுகிறார்கள்.

மேளக்காரன் வெளுத்து வாங்குகிறான்; நாதஸ்வரக்காரன் ஜமாய்க்கிறான்; சாப்பாட்டுச் சண்டைக்கு முன்னால் நடக்கும் சம்பந்திச்சண்டைக்கு இடையே நான் அவளுக்கு மாலையிடுகிறேன். “இனிமேல் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போகும் அதிகாரம் - நமக்குக் கிடையாது. அந்த அதிகாரம் எமனுக்குத்தான்" என்று சட்டத்தை நாங்களே சிருஷ்டித்துக் கொண்டு அதை வாழ்க்கையில் பின்பற்றுவது என்றும் தீர்மானித்து விடுகிறோம்.

இத்தனையும் இரண்டே நிமிஷங்களில் என் கற்பனை உலகில் நடந்தேறி விடுகின்றன! அப்புறம் நான் அவளை எப்படி மறப்பது? - அவளுக்காக எதையும் செய்யத் தயாராகி விடுகிறேன்.

அவளுக்காக அவள் அண்ணா செய்த குற்றத்தை நாமே செய்ததாக ஒப்புக் கொள்ள வேண்டும். அப்பாகண்டிப்புக்காரர்தான் என்றாலும் போலீஸ் லாக்-அப்பில் நம்மைப் பார்த்ததும் அவர் மனம் இரங்கி விடும். மன்னித்து விடுவார். அப்புறம் கோதையைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டியது. அவளை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு ஜம்மென்று வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது.

சரி, தீர்மானித்தாகிவிட்டது. இன்றே செய்துவிட வேண்டியது தான்!

அன்றே செய்தும் விட்டேன். ஆனால் என்ன ஏமாற்றம்?

என் அப்பாவைப் பற்றி நான் என்ன நினைத்தேன்? கடைசியில் நீதிமன்றத்தில் நான் நிறுத்தி வைக்கப்பட்ட போது அவர் என்ன சொன்னார்?

"என் பிள்ளையாயிருந்தால் மட்டும் என்ன? அயோக்கியனுக்கு நான் ஒரு போதும் அநுதாபம் காட்டமாட்டேன்"

என்ன ஈரமில்லாத நெஞ்சம்?

முடிவு என்ன? சிறைவாசம் ஏற்றுக்கொண்டேன்; அநுபவித்தேன்.

ஆனால், அப்படி அநுபவித்ததிலும் நான் துன்பத்தைக் காணவில்லை; இன்பத்தைத் தான் கண்டேன்.

அதற்குக் காரணம் கோதை தான் என்று சொல்லவும் வேண்டுமா?

* * *

வள் அண்ணா கிருபாநிதி எனக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அவை யெல்லாம் வெறும் கடிதங்கள் தானா? கிடையவே கிடையாது. அவனுடைய உணர்ச்சி மிகுந்த உள்ளத்தின் படங்கள்!

அவன் எழுதிய கடிதங்களில் ஒரே ஒரு கடிதத்தை மட்டுந்தான் நான் படித்தேன். பாக்கியைப் படிக்கவில்லை.... ஏன் தெரியுமா?

அவற்றைப் படித்தால் என் ஆசைத் தீ அளவில்லாமல் மூண்டுவிடும்; அதை அடக்கச்சக்தியற்று நான் சிறையிலிருந்து தப்பி ஓ ட முயல்வேன்; அதிகாரிகள் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்; அப்புறம் நான் இந்த ஜன்மத்தில் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?

அப்பாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்; ஆனால்... அவரைப் பற்றி எனக்கென்னமோ ஒன்றும் சொல்ல மனமில்லாமலிருக்கிறது.

கடைசியில் விடுதலை; விழுந்தடித்துக் கொண்டு என் உயிர் இருக்கும் இடத்தைத் தேடி ஓடி வந்தேன்.

கோதை இன்னதென்று தெரியாத ஒதோ ஒரு வியாதியால் இறந்து விட்டாள் என்று சேதி:

“இதைப்பற்றி எனக்கு ஏன் முன்னமேயே தெரிவிக்கவில்லை?” என்று நான் கிருபாநிதியைக் கேட்டேன்.

"அதனால் உமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தேன்" என்றான் அவன்.

அட, பாவி!

* * *

தென்ன வியாதி அன்பே அவளைக் கொன்று விட்டதா?

அப்படியானால் ஆண்டவன் என்ன செய்வான்?

ஆமாம், எனக்காக அவளைக் காப்பாற்றி வைக்காத அவன் என் எதிரிதான்!

அன்று மட்டும் அல்ல; இன்றும்; என்றும்! 

ஏழையின் குற்றம்

சித்திரம் சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளைச் சிலர் தங்கள் குல வித்தையாகக் கொண்டிருக்கிறார்களல்லவா? அதுபோலக் கூலிப் பிழைப்பைத் தன் குல வித்தையாகக் கொண்டிருந்தான் சின்னசாமி. அவன் அப்பன், பாட்டன், அந்தப் பாட்டனுக்குப் பாட்டன் எல்லாம் சீதாராமச் செட்டியாரின் முன்னோர்களிடம் பரம்பரை பரம்பரையாகவே கூலி வேலை பார்த்தவர்கள்.

செட்டியார் கடைக்கு வந்து இறங்கியதும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை யெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடை உள்ளில் அடுக்குவான். மூட்டைக்குக் காலனா வீதம், எந்தக் காலமா யிருந்தாலும் சரி - அதாவது, யுத்தக் காலமா இருந்தாலும் சரிதான்; சமாதானகாலமாயிருந்தாலும் சரிதான் எண்ணிக் கொடுத்து விடுவார் செட்டியார். ஆனால், என்றைக்காவது ஒரு நாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்குமேல் தூக்கி அடுக்கிவிட்டு, ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணிர் கீழே விழும்.

இந்தத் துக்க நிவர்த்திக்காக, அந்தக் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டனாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். “இகலோகத்திலுள்ள தன்னுடன் சமத்துவமாக வாழாவிட்டாலும் பரலோகத்திலாவது வாழட்டுமே!" என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்.

வழக்கம் போல் அன்றும் இரவு பத்து மணிக்குப் பிறகு, “நான் போயிட்டு வரேனுங்க" என்றான் சின்னசாமி.

“என்னடா, இத்தனை சீக்கிரம்?" என்று கேட்டார் செட்டியார்.

"இனிமேத்தான் என் கூலியை எடுத்துக்கிட்டு போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவவேறே காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைங்க வேறெ அழுதுக்கிட்டு இருக்கும்!" "அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது; வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்"

"கோவிச்சுக்காதீங்க, சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தாச் சொல்லுங்க; செஞ்சிட்டுப் போறேன்!”

"சரிதான்; இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப் போய் நம்ம வீட்டிலே போட்டுவிட்டுப் போடா!" என்று சொல்லி, அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவதொன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது; கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் ‘கொசுறு' வேலைகள்.

* * *

செட்டியார் ஜன்மம் எடுத்துத் தாம் விரும்பிய எத்தனையோ காரியங்களை இதுவரை சாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒரே ஒரு காரியம் மட்டும் இன்னும் கைகூடவில்லை. அதாவது, தம்முடைய பெயர் வெறும் 'சீதாராமச் செட்டியார்’ என்றிருப்பதைவிட, ‘ராவ்பகதூர் சீதாராமச் செட்டியார்’ என்று இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவர் அல்லும் பகலும் அனவரதமும் கனவு கண்டுகொண்டு வந்தார். ஆனால், அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வதற்குக் கையில் போதிய பணம் இல்லாமலிருந்தது.

இந்தக் குறையையும் நிவர்த்தி செய்து கொள்வதற்கு யுத்தம் என்று ஒன்று வந்து சேர்ந்தது. தான் மட்டும் வந்தால் போதாதென்று அது கட்டுப்பாடு’ என்றொரு தோழனையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்தது. அதைக் காரணமாக வைத்துக்கொண்டு செட்டியார், தம்முடைய கடையை ‘கறுப்பு கடை'யாக மாற்றி விட்டார்.

அவ்வளவுதான்; அவருடைய பணப் பஞ்சம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது. முகத்திலும் அலாதிக்களை வீசிற்று. தன்னைப் போன்ற பெரிய மனிதர்களின் சிநேகத்தால் சுண்டெலியாயிருந்த அவர் பெருச்சாளியானார். அப்புறம் சந்தர்ப்பத்தைத் தானே சிருஷ்டித்துக் கொண்டு கண்ட இடங்களிலெல்லாம் கூட்டத்தைக் கூட்டி, “ஐயோ, ஏழைகள் ஐயோ, ஏழைகள்!" என்று அலற ஆரம்பித்தார். அவருடைய கூச்சலைக் கேட்டுக் கோஷம் செய்ய ஒரு சிறு கும்பலும் சேர்ந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? தாலுகா போர்டு மெம்பரானார்; பாங்கின் டைரக்டரானார்; பல கம்பெனிகளின் கூட்டு முதலாளியானார்; யுத்தக் கமிட்டியின் தலைவரானார்; கவர்னர் துரையை அடிக்கடி நெருங்கினார். இதனாலெல்லாம் அவருடைய ‘கறுப்பு மார்க்கெட்' விஷயம் அதிகாரிகளின் காதில் விழாமல் போயிற்று. தப்பித் தவறி விழுந்தாலும் அந்த விஷயம் அவர்கள் காதுக்கு எட்டாமல் போயிற்று.

* * *

செட்டியாரின் நிலை இப்படியென்றால் சின்னசாமியின் நிலை வேறாயிருந்தது. அவனுக்கு அஞ்சலை என்றொரு தங்கை. பிரசவத்துக்காக அவள் தன்னுடைய அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாள். குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகி விட்டது. அவள் கணவன் தன் மனைவியை அனுப்பி வைக்கும்படி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். தாயும் பிள்ளையுமாக வெறுமனே எப்படி அனுப்பி வைப்பது? அந்தக் குழந்தையின் கால்களுக்கு ஒரு ஜதை வெள்ளிக்காப்புக்களாவது வாங்கிப் போட வேண்டும்; அஞ்சலைக்கு ஐந்து ரூபாயிலாவது ஒரு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும்; இவை கூட இல்லாமல் சென்றால் அஞ்சலையின் மாமியார் சும்மா இருப்பாளா?

ஆனால், அவற்றிற்கெல்லாம் குறைந்தது பத்து ரூபாயாவது வேண்டுமே - இதுதான் சின்னசாமியின் தற்சமயக் கவலை, லட்சியம், மனோரதம், எண்ணம், ஆசை எல்லாம்!

இந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவன் என்னவெல்லாமோ யோசனை செய்து, கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டான். அந்தத் தீர்மானத்தின்படி, தான் மாலை வேளையில் வழக்கமாகத் தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று, ‘'என்ன, நாயர் சர்க்கரை ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்டான்.

"இருந்தா இப்பவே கொடு, அப்பேன் வீசை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கிறேன்!” என்றான் நாயர்.

"தினசரி ஒரு வீசை சர்க்கரை, விலை ஒரு ரூபாய். பத்து நாட்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தால் பத்து ரூபாய். அடே, அப்பா போதுமே நமக்கு

* * *
சின்னசாமி, தன்தங்கை அஞ்சலையின் வாழ்க்கை நலனுக்காகத் திருட்டுத் தொழிலில் பிரவேசித்து அன்று பத்தாவது நாள். பொழுது விடிந்ததும் பல்லைதுலக்கிக் கொண்டு நெற்றியில் ‘சிவனே!’ என்று உச்சரித்தவண்ணம் விபூதி அணிந்து கொண்டான். கிழக்குத் திக்கை நோக்கி ஒரு முறை கைகூப்பிவிட்டு, அடுப்பங்கரைக்குச் சென்று உட்கார்ந்தான். பழைய சாதம் இருந்த பானையை எடுத்துக் கொண்டு, அவனுக்கு எதிரே வந்து உட்கார்ந்தாள் அவன் மனைவி. அவள் கையிலிருந்த இரண்டு பச்சை மிளகாய்களைத் தன் இடது கையில் பெற்றுக் கொண்டான் சின்னசாமி. அந்த மிளகாய் தான் ஏழைச் சின்னசாமிக்குப்பருப்பு, நெய், பொறியல், அவியல், கூட்டு எல்லாம். கையில் பழைய சாதத்தைப் பிழிந்து வைத்துக் கொண்டே, “மறந்துட்டேன், நேத்து ஒரு கடிதாசு வந்திச்சு, அதிலே பொங்கலுக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்குது; அனுப்பினா அதுக்குள்ளே அஞ்சலையை அனுப்புங்க, இல்லாட்டி அந்தப் பெண்ணே எனக்கு வேணாம்னு எழுதியிருக்காங்களாம்!” என்றாள் அவன் மனைவி.

அதற்காக ஏற்கனவே தான் திருட்டுச் சர்க்கரை வியாபாரத்தில் இறங்கியிருப்பதைப் பற்றி அவன் தன் மனைவியிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அவளிடம் அதைச் சொல்ல அவனுக்கே வெட்கமாயிருந்தது. இப்பொழுதும் அதை மனதில் வைத்துக் கொண்டே, "அதற்கென்ன, நாளைக்கே எப்படியாச்சும் அனுப்பி வச்சுடலாம்" என்றான்.

அவன் நினைத்தது இப்படி; ஆனால் தெய்வம் நினைத்ததோ? - அதற்குத்தான் நாம் நினைப்பது போல் நடக்கத் தெரியாதே!

* * *

செட்டியாரின் திருட்டு வியாபாரத்தை எத்தனையோ நாட்களாகக் காத்து வந்தவரும், சின்னசாமியின் திருட்டுத் தொழிலுக்கு ஒன்பது நாட்கள் துணையாயிருந்தவருமான கடவுள் பத்தாவது நாள் மட்டும் கறுப்பு மார்க்கெட்டின் மூலம் பணக்காரரான செட்டியாரை விட்டு விட்டு, ஏழைச் சின்னசாமியை மட்டும் ஏனோ காட்டிக் கொடுத்து விட்டது.

கடைசியில் என்ன? மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் நீதிநெறியைக் கஞ்சிக்கில்லாத நிலையிலும் காப்பாற்றி வரும் போலீசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். அவன் மனைவி மக்களும், தங்கையும் இந்தச் செய்தியை முதலில் நம்பவே இல்லை. என்றைக்கும் திருடாதவன், இன்று திருடினான் என்றால் அவர்கள் நம்பினாலென்ன, நம்பாவிட்டாலென்ன? சின்னசாமியை நம்பியிருந்த அவர்கள் நடுத்தெருவில் நிற்க நேர்ந்து விட்டது.

* * *

இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள், செட்டியார் தினசரியைப் பிரித்து, அதில் வெளியாகியிருந்த புது வருஷப் பட்டங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆசை நிராசையாய்ப் போய்விடவில்லை. அவருக்கும் ‘ராவ்பகதூர்' பட்டம் கிடைத்திருந்தது.

அந்தச் செய்திக்குப் பின்னாலிருந்த இன்னொரு செய்தியும் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அது சின்னசாமிக்கு ஆறு மாதம் சிறைவாசம் கிடைத்த செய்தி தான்!

பணம் படைத்த செட்டியார் செய்ததும் குற்றந்தான்; ஏழை சின்னசாமி செய்ததும் குற்றந்தான்! ஆனால் பலன்?