விந்தன் கதைகள் 1/காரியவாதி
விருத்தாசலம் பாயில் படுத்துப் பத்துப் பதினைந்து நாட்களாகிவிட்டன. இதன் காரணமாக அவனுடைய மனைவியான பொன்னி கண்ணயர்ந்து ஒரு வாரகாலமாகி விட்டது. இந்த நிலையில் எந்த நேரமும் "என்னுடைய வயிற்றுக்கு வழி என்ன?" என்று அவர்களைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை.
இவர்களுக்கெல்லாம் கார்டியனாக இருந்தது ஒரே ஒரு கறவை மாடு. எஜமானும் எஜமானியும் தன்னை எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்கச் செய்தாலும், அது இயற்கையாகக் கிடைக்கும் புல் பூண்டுகள் மேய்ந்து விட்டு வந்து, வேளைக்கு உழக்குப் பாலையாவது கறந்து விடும். அந்தப் பாலிலிருந்து ஒரு பாலாடைகூடத் தன்னுடைய குழந்தைக் கென்று எடுத்துக் கொள்ள மாட்டாள் பொன்னி. ‘அதற்கென்ன கேடு! கத்தும்போது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணிரை ஊற்றி வைத்தால் போச்சு’ என்பது அவளுடைய எண்ணம்.
ஏன் தெரியுமா? விருத்தாசலம் பாயில் படுத்து விட்ட பிறகு அவர்களுடைய பிழைப்பே அந்தப் பாலில்தான் இருந்தது. அந்த உழக்குப் பாலுடன் அவள்பாவ புண்ணியத்தைக் கூடக் கவனிக்காமல் கொஞ்சம் தண்ணிரைச் சேர்த்து வீடு வீடாகச் சென்று விற்றுவிட்டு வருவாள் அப்படிச் செய்தால்தான் அவர்கள் தங்களுடைய வயிற்றுக் கவலையை ஒருவாறாவது தீர்த்துக் கொள்ள முடிந்தது. நியாயந்தானே? வயிற்றுக் கவலை இன்னதென்று அறியாதவர்களே பாவ புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்படாமலிருக்கும் பொழுது, பொன்னியைப் போன்றவர்கள் கவலைப்பட முடியுமா?
நோயின் வேகம் எவ்வளவுதான் அதிகரித்த போதிலும் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்னும் பழமொழியில்தான்வைத்திருந்த நம்பிக்கையைக் கடைசி வரையில் இழக்காமலே இருந்தான் விருத்தாசலம். அவனுடைய நிலையில், அவற்றைத் தவிர வேறு எதில்தான் அவன் நம்பிக்கை வைக்க முடியும்? கடைசியில் சுக்கும் அவனைக் காப்பாற்றவில்லை; சுப்ரமணியக் கடவுளும் காப்பாற்றவில்லை. நினைத்த போது எதிரே வந்து நின்றதற்காக எத்தனையோ பெரியோர்கள், "அப்பா உனக்கு ஆயுசு நூறு" என்று விருத்தாசலத்தை வாழ்த்தியிருந்தார்களே, அவர்களுடைய வாக்கும் ஓரளவாவது பலிக்கவில்லை. முப்பதாவது வயதிலேயே அவனுடைய மூச்சு நின்றுவிட்டது.
பொன்னி புலம்பினாள்; ஒய்ந்தாள்.
பிறந்தகத்தில் பொன்னிக்கு அண்ணா ஒருவனும் அவனுடைய மனைவி மக்களும் இருந்தனர். சொத்து சுமாராக இருக்கத்தான் இருந்தது. பெற்றோர்கள் சம்பாதித்ததுதான். இருந்தும் என்னத்தைச் செய்ய - பொன்னிதான் பெண்ணாச்சே! அவள் ஆணாய்ப் பிறந்திருந்தாலும், "அடேய்! எனக்கும் பாகம் பிரித்துக் கொடு" என்று மல்லுக்கு நின்றிருக்கலாம். பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு அந்த உரிமை ஏது?
விருத்தாசலம் அவளுக்காக வைத்து விட்டுச் சென்ற சொத்துக்களோ மூன்று வகையானவை; ஒன்று, கூலி வேலை; இரண்டாவது, ஒரு கைக் குழந்தை; மூன்றாவது; ஒர் எருமை மாடு!
கூலி வேலை கிடைத்தால் உண்டு; குழந்தை குடிக்கப் பாலின்றி வளர்ந்தால் உண்டு; எருமை.....?
ஆமாம்; ஆண்டவனைவிட அந்த எருமைதான் இப்போது அவளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாயிருந்தது. அந்த ஆறுதலும் நெடுநாள் நீடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கெல்லாம் அந்த எருமை கருவுற்று விட்டது.
அப்புறம் என்ன? இருக்கும்போது பொன்னியின் வீட்டு அடுப்பு எரிந்தது; இல்லாதபோது அணைந்து கிடந்தது.
அருகில் இருந்தவர்களில் ஒருத்தி ஒரு நாள் பொன்னியை நோக்கி, "ஏன் பொன்னி இப்படியே இருந்தா எப்படி. அந்த எருமையை யாருக்காச்சும் வித்துப்பிட்டுப் பணத்தை எடுத்துக்கிட்டுப் பேசாம உங்க அண்ணாச்சி வீட்டுக்காச்சும் போய்ச் சேருவதுதானே?” என்று கேட்டாள்.
"நல்லாச் சொன்னே ‘உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா!'ன்னு ஆவதற்கா? அந்தப் பணம் இருக்கிறவரைக்கும் அவன், 'இங்கே வா, தங்கச்சி! அங்கே வா, தங்கச்சி'ன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அப்புறம் அவன் யாரோ, நான் யாரோ தானே?” “என்னடி, அப்படிச் சொல்றே? அந்த வீட்டிலே உனக்கில்லாத அதிகாரம் வேறே யாருக்கு இருக்குங்கிறேன்!"
"ஆமாம். கள்ளங்கபடு இல்லாத அந்தக் காலத்திலேயே அண்ணாச்சி வீட்டுக்குப் போன நல்லதங்காளின் கதி என்ன ஆச்சு?”
"அவள் வகை கெட்டவ, அதனாலே அவளுக்கு அந்த கதி நீ போய் அடிச்சுப் பிடிச்சு, அந்த வீட்டிலே அதிகாரம் பண்ணப் பார்க்கணும்...."
"அதுக்கென்ன, அடுத்த வீட்டுக்காரிக்குப் புத்தி சொல்றதுன்னா யாருக்கும் சுலபமாகத்தான் இருக்கும். நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன் - நீ கோவிச்சுக்குவியா?”
"என்ன, கேளேன். "
"உன் புருசனுடைய தங்கச்சி, அடிச்சுப் பிடிச்சு உன்னை அதிகாரம் பண்ண ஆரம்பிச்சா நீசும்மா இருப்பாயா?"
"நீ போடி, அம்மா நான் அவ்வளவு தூரத்துக்கு வரலே. என்னமோ நல்லதைச் சொல்ல வந்தா. அதுக்காக என்னை இப்படிக் குத்திக் கேட்கிறே?" என்று 'சட்'டென்று எழுந்து போய் விட்டாள் அவள்.
அதற்குமேல்தான் அவள் என்னத்தைச் சொல்வது? என்னமோ ‘ஊருக்கு உபதேசம்' செய்யும் சில சீர்திருத்த வாதிகளைப் போல அவளும் பேசிப் பார்த்தாள். கடைசியில், அவள் அப்படித் திருப்பிக் கேட்பாள் என்று எதிர் பார்த்தாளா?
எந்த விதத்திலும் தங்களுடைய சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் திருக்கூட்டத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று, பிறரைப் பகைத்துக் கொண்டு தன்னுடைய சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்; இன்னொன்று, பிறரைப் பகைத்துக் கொள்ளாமலேயே தன்னுடைய சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்.
இரண்டாவதாகக் குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்தவன் பொன்னியின் அண்ணன். விருத்தாசலத்தின் இறுதிச்சடங்கின்போது வந்திருந்த அவன் போகும்போது பொன்னியை நோக்கிச் சொன்னான்:
"அம்மா! உன்மனசு இப்போஎன்னவெல்லாமோ நெனைக்கும். ‘அண்ணன் இருக்கச்சே நமக்கு என்ன பயம்’ என்று கூடத்தோணும். நெசந்தான் அம்மா, நெசந்தான். ஆனா, உலகத்திலே அண்ணன்தான் நல்லவனாயிருக்க முடியுமே ஒழிய, அவனுக்கு வந்தவகூட நல்லவளாயிருக்க முடியுமா? நீயே யோசித்துப் பாரு!-அதுதான் நான் சொல்றேன்; என்னமோ கடவுள் கொடுத்த கையையும் காலையும் வச்சுக்கிட்டு நீபாட்டுக்கு இருக்கிறதுதான் நல்லது. உன்னுடைய அண்ணன் தொல்லை தொந்தரவு இல்லாமல் இன்னும் கொஞ்ச நாளைக்கு உலகத்திலே இருக்கணும்னா அப்படிச்செய்; இல்லேன்னா வேணாம்!"
இதற்குப் பொன்னி என்ன மறுமொழி சொல்வாள்? "அப்படியே ஆகட்டும், அண்ணாச்சி" என்றாள்.
அவன் போய்விட்டான். பேதை பொன்னி அந்தக் கறவை மாட்டையே கடைசி வரை நம்பினாள். அது கருவுற்றபோதும், "இன்னும் பத்து மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளி விடுவோம்" என்று ஆறுதல் அடைந்தாள்.
நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. பத்தாவது மாதமும் பிறந்தது, அந்த மாட்டுக்கு ‘அப்பாடி’ என்று பெரு மூச்சு விட்டாள் பொன்னி.
“அந்த நாள் என்று வரும், அந்த நாள் என்று வரும்?" என்று அவளுடைய உள்ளம் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது. கடைசியில் அந்த நாளும் ஒரு நாள் வரத்தான் வந்தது. ‘என்ன ஆகுமோ?’ என்று அவள் ஏங்கினாள். நல்ல வேளை அவளுடைய ஏக்கம் துக்கத்தில் முடியவில்லை; எருமைான்றது.
பொன்னிக்கு மட்டில்லாத மகிழ்ச்சி பொழுது புலர்ந்ததும் புல்லினங்கள் அடையும் ஆனந்தத்தை அவள் அடைந்தாள். அவளுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் ஒரு புது அத்தியாயம் ஆரம்பமாயிற்று.
"தினந்தோறும் "பாலோ, பாலு" - "தயிரோ, தயிரு!" - “மோரோ, மோரு" -" நெய் வாங்கலையா, நெய்!" என்று வேளைக்கு வேளை அந்தக் கிராமத்தின் எட்டுத் திக்கும் எதிரொலி செய்ய இரைந்து விற்றுவிட்டு வந்தாள்.
நாளடைவில் ஒரு எருமை இரண்டு எருமைகளாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகவே ஆகிவிட்டன. காதில் அணிந்திருந்த சிவப்பு ஓலைச் சுருள்கள் கெம்புக் கற்கள் பதித்த கம்மல்களாக மாறின. மூக்கில் செருகியிருந்த விளக்குமாற்றுக் குச்சி ஜொலிக்கும் ஒற்றைக் கல் பதித்த மூக்குத் திருகாணியாயிற்று. கைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த பித்தளைக் காப்புகள் தகதகவென்று மின்னும் தங்கக் காப்புகளாக ஜன்ம மெடுத்தன.
இப்பொழுதெல்லாம் அவள் தன்னுடைய குழந்தை கத்தும்போது, "அதற்கென்ன கேடு கொஞ்சம் சர்க்கரைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் போச்சு!" என்று எண்ணுவதில்லை; ‘அவனுக்கு இல்லாத பாலா அவன் குடித்து மீந்த பாலை விற்றால் போச்சு!’ என்று நினைத்தாள்.
இந்த இரண்டு வருட காலமும் ஒரு நாளாவது பொன்னியின் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்காத அவளுடைய அண்ணன், திடீரென்று ஒரு நாள் அவளைத் தேடி வந்தான். அப்படி வரும்போது அவன் சும்மா வரவில்லை; ஒரு அழகான காரணத்தையும் சொல்லிக் கொண்டு வந்தான்.
"பொன்னி இந்த மனசு இருக்குதே, இது ரொம்ப ரொம்பப் பொல்லாதது எத்தளை நாளாஉன்னைப் பார்க்கனும், பார்க்கணும்னு அது அடிச்சிக்கிட்டு இருந்தது, தெரியுமா? எங்கே, வேலை ஒஞ்சாத்தானே! அதில்லாம எத்தனையோ தொல்லை, தொந்தரவுங்க! வீட்டுக் கூரை பொத்தலாப் போச்சு வரப்போறது மழைக் காலம். அதைப் பிரிச்சுக் கட்டறதுண்ணா இப்போ ஐம்பது ரூபாயாச்சும் வேணும், உழவுமாடு ரெண்டும் திடீர்னு 'சீக்கு' வந்து செத்துப் போச்சு, திரும்ப வாங்கிறதுன்னாஇருநூறு ரூபாயாச்சும் ஆவும். ஆடித் தூறல் தூறுது, நாலு கலம் விதை நெல்லு வாங்கி விதைக்கலாம்னா கையிலே காசில்லே! -உம், அப்படியெல்லாம் இருக்குது, என் கஷ்டம் இங்கே வந்து உன்னுடைய கஷ்டத்தையும் பார்த்து ஏன் இன்னும் கஷ்டப்படணும்னுதான் நான் இத்தனை நாளா இங்கே வரலே, தங்கச்சி" என்று ஒரே ‘கஷ்ட'மாகச் சொல்லிக் கொண்டே போனான் அவன்.
"ஊம்" என்று விஷமத்தனத்துடன் புன்னகை புரிந்தாள் பொன்னி.
அடுத்தாற்போல் அந்த "நாலு பேர்" இருக்கிறார்களே, நன்மைக்கும் தீமைக்கும் - அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டுவிட்டான் அண்ணன்!
"அம்மா! எத்தனை கஷ்டங்கள் எனக்கு இருந்தாலும் இனிமே உன்னுடைய கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டு என்னாலே ஒரு நிமிசம்கூடச் சும்மா இருக்க முடியாது. ‘நாலு பேரு' சொல்றது என் காதிலே நாராசமா விழறது...!”
“ஐயோ! அப்படி என்ன அபாண்டம் சொன்னாங்க, அண்ணாச்சி "
“வேறே என்ன சொல்லுவாங்க, தங்கச்சி என்ன இருந்தாலும் ஒரு அறியாத பொண்ணு; சின்னஞ் சிறிசு; அறுத்துப் போட்டவ; ஊரிலே இருக்கிற தடியன்களுக்கு மத்தியிலே ஒண்டியாயிருக்கலாமா?"ன்னு அவங்க கேட்கிறாங்க. அதை என்னாலே காது கொடுத்துக் கேட்க முடியலே. 'அறுத்தவ ஆத்தா வீட்டிலே’ என்று பெரிய வங்க சொல்லுவாங்க; அதன்படி நீ என் வீட்டிலே வந்து இருக்கிறதுதான் நல்லது. என்ன, நான் சொல்றது?”
அன்று கடவுள் கொடுத்த கையையும் காலையும் நம்பி வாழச் சொன்ன அண்ணன், இன்று ஏன் இப்படிச் சொல்கிறான்? பொன்னிக்கு விஷயம் புரியாமல் போகவில்லை. அவள்'களுக்' கென்று சிரித்து விட்டாள்.
‘அண்ணாச்சி'யின் முகம் சுண்டி விட்டது. "ஏனம்மா, சிரிக்கிறே?” என்று கேட்டான், எதையோ பறிகொடுத்தவன் போல.
"ஒண்ணுமில்லை, அண்ணாச்சி என்ன இருந்தாலும் கடவுள் கொடுத்த கையையும் காலையும் வச்சிக்கிட்டு, நான் பாட்டுக்கு இருக்கிறதுதான் நல்லது. அண்ணாச்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ தொல்லை, தொந்தரவு இல்லாமல் இருக்க வேணாமா?" என்றாள் பொன்னி.
அவள் அவ்வாறு சொல்லி வாய்மூடியதுதான் தாமதம், அவன் தன்னுடைய 'வேஷத்தைக் கலைத்தான். "ஓஹோ அம்மட்டுத் தூரத்துக்கு வந்துட்டியா?-இனிமே உன் வீட்டு வாசல்லே காலை வச்சா ஜோட்டை எடுத்துக்கோ!" என்று வீராப்புடன் சொல்லிக் கொண்டே, துண்டை உதறித் தோளின் மேல் போட்டுக் கொண்டு எழுந்தான்.
அந்தக் காரியவாதி எதிர்பார்த்தபடி, பொன்னி அவனுடைய காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளவில்லை!