விந்தன் கதைகள் 1/சுயநலம்
சுயநலம்
வேலப்பனின் வேலையே அலாதியானது. மனைவி, மக்களை மறந்து நாள்தோறும் உயிரற்ற இயந்திரங்களிடமோ, உணர்ச்சியற்ற அதிகாரிகளிடமோ உயிரை விட்டுக் கொண்டிருப்பது அவனுடைய வேலையல்ல; அவன் தொழிலுக்கு அவனே வேலைக்காரன்; அவனே சொந்தக்காரன்!
காலையில் எழுந்ததும் வேலப்பன் கடை வீதிக்குச் சென்று சில தேக்குமரத் துண்டுகளையும், பிரம்புக் கத்தைகளையும் வாங்கி வருவான். தேக்குமரத் துண்டுகளை அறுத்து, இழைத்து கூர் வாங்கி கட்டில்களாகச் செப்பனிடுவது வேலப்பனின் வேலை. பிரம்புகளை யெல்லாம் பிளந்து கட்டில்களுக்குப் படுக்கை பின்னி விடுவது வேலப்பனின் மனைவியான முருகாயியின் வேலை. நடுநடுவே ‘எடுபிடி வேலைகளுக்கெல்லாம் அவர்களுடைய குழந்தைகள்!
வேலை செய்யும் இடமோ அவர்கள் வீட்டை அடுத்த மாந்தோப்பு. 'குக்கூ' குயில்களும், 'கிக்கீ' கிளிகளும் கொஞ்சி விளையாடும் இடம். அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர், வேலப்பன் அங்கு வேலை செய்வதைப்பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. ஏனென்றால், சம்பளம் இல்லாமல் அவன் தன் வேலையுடன், நம் தோட்டத்தையும் காவல் காத்துக் கொண்டிருக்கட்டுமே என்று தான்!
வேலைக்கு நடுவே ஊர்ப் பேச்சு, உறவினர் பேச்சு, காதல் பேச்சு, ஊடல் பேச்சு எல்லாம் நடக்கும். ஆனால், கைகள் மட்டும் வேலையிலேயே முனைந்திருக்கும்.
“பிரம்பைப் பிளப்பாள் முருகாயி!
பின்னி விடுவாள் முருகாயி!
கன்னத்தைக் கிள்ளப் போனால்
கையைத் தள்ளுவாள் முருகாயி!”
என்று நடுவில் பாட்டு வேறு பாட ஆரம்பித்து விடுவான் வேலப்பன். "ஐயே! மூஞ்சைப் பாரு மூஞ்சை!" என்று உள்ளத்தில் விருப்புடனும் உதட்டில் வெறுப்புடனும் அவனைப் பழிப்பாள் முருகாயி.
இதைக் கேட்டு வேலப்பனுக்குக் கொஞ்சமாவது கோபம் வரவேண்டுமே ஊஹஅம்; சிரிப்புத்தான் வரும்: மாலை நேரத்துக்குள் அவர்கள் எப்படியாவது நான்கு கட்டில்கள் செய்து விடுவார்கள். வேலப்பன் இரண்டைத் தூக்கித் தன் தோள்களின் மேல் வைத்துக் கொள்வான்; முருகாயி இரண்டைத் தூக்கித் தன் தோள்களின் மேல் வைத்துக் கொள்வாள். வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி குழந்தைகளுக்கு உத்தரவிட்டுவிடுவார்கள். "கட்லு, கட்லு!" என்று கூவிக்கொண்டே தெருத் தெருவாய்ச் செல்வார்கள்.
இருட்டுவதற்குள் நான்கு கட்டில்களும் விற்றுவிடும். லாபத்தைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியாது; ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கிடைக்கும்; இன்னொரு நாளைக்கு நான்கு ஐந்துகூடக் கிடைக்கும்; இந்த லாபத்தைக் கொண்டு, பங்களா, கார், காவற்காரனோடு வாழாவிட்டாலும் அவர்கள் பசியாமல் வாழ்ந்தார்கள்.
மாந்தோப்புக்குச் சொந்தக்காரரான மாதவராயர் வெகு நாட்களாக வேலப்பனின் வேலையைக் கவனித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு யோசனை தோன்றிற்று அந்த யோசனையுடன் அவர் வேலப்பனை நெருங்கி, "என்ன வேலப்பா தினசரி வெய்யிலில் இப்படி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்கிறாயே, உனக்குச் சிரமமாயில்லையா?” என்று கேட்டார்.
"சிரமத்தைப் பார்த்தா ஆகுதுங்களா? வயிறுன்னு ஒண்ணு இருக்கே" என்றான் வேலப்பன்.
"மவராசாவின் மாந்தோப்பு இருக்கும்போது எங்களை வெய்யில் என்ன செய்யும்?" என்றாள் முருகாயி.
"என்ன இருந்தாலும் மாட்டை மேய்த்தோமா? கோலைப் போட்டோமா? என்று எங்கேயாவது வேலைக்குச் சென்று நாளைக் கழித்துவிட்டு, மாதம் பிறந்தால் ஐம்பது, அறுபது என்று சம்பளம் வாங்கிக்கொண்டு ‘ஹாய்"யாகக் குடித்தனம் பண்ணும் செளகரியம் வருமா? உன்னுடன் உன் மனைவியும் கஷ்டப்பட்டு, உங்களுடன் உங்கள் குழந்தைகளும் கஷ்டப்பட்டு, மாலை முழுவதும் தெருத் தெருவாய்ச்சுற்றி நீங்கள் அடையும் சுகந்தான் என்ன? வேனுமானால் முருகாயியை ஒரு மாதம் நிழலில் இருக்கச் சொல்லிப் பாரு; அப்புறம் நீ அவளை விட்டு அந்தண்டை இந்தண்டை போகவே முடியாது" என்று சொல்லி விஷமத்துடன் சிரித்தார் மாதவராயர்.
முருகாயியை வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள், "போங்க, சாமி!" என்று சொல்லிக் கொண்டே சிரிக்காமல் சிரித்தாள். "என்ன பண்றது, சாமி எனக்கு வேறே வேலை ஒண்ணுந் தெரியாது; இந்தக்கட்டிலைக் கட்டிக் கொண்டு அழத்தான் தெரியும்!” என்றான் வேலப்பன்.
இப்பொழுது தான் மாதவராயருக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. “அப்படியானால் நான் ஒன்று சொல்கிறேன்; கேட்கிறாயா?” என்று ஆரம்பித்தார்.
"உங்கள் சொல்லைக் கூட நான் தட்டுவேனுங்களா?”
"சரி, நீயும் கொஞ்சம் பணம் போடு; நானும் கொஞ்சம் பணம் போடுகிறேன். இரண்டு பேருமாகச் சேர்ந்து இதே இடத்தில் இந்த மாந்தோப்பை அழித்து விட்டு ஒர் அழகான கட்டிடம் கட்டலாம். சம்பளத்துக்கு வேண்டிய ஆட்களை வைத்துக் கொள்ளலாம். கட்டில்களை வேண்டிய அளவு உற்பத்தி செய்யலாம். அவைகளுக்கு அழகான வர்ணப் பூச்சு, கண்ணைக் கவரும் ‘வார்னிஷ்’ வேலையெல்லாம் செய்து, காட்சி அறையில் வரிசைக் கிரமமாக நிறுத்தி வைக்கலாம். விலையை எவ்வளவு கூட்ட முடியுமோ, அவ்வளவு கூட்டிக் கொள்ளலாம். போட்டிக்கு யாரும் வந்து விடாமல் ‘நம்மைப்போல் யாரும் கட்டில்கள் செய்யக்கூடாது’ என்று சர்க்கார் மூலம் உத்தரவாதம் பெற்றுக் கொள்ளலாம். பத்திரிக்கைகளிலும், ரயில் - டிராம்களிலும் விளம்பரம் செய்யலாம். இந்தியா முழுவதும் ஏஜண்டுகளை நியமித்துக் கட்டில்களை அனுப்பி வைக்கலாம். வேண்டியவர்கள் அங்கங்கே வந்து வாங்கிக் கொள்ளட்டும். கிடைக்கும் லாபத்தை இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது என்று நீ சொல்வதாயிருந்தால் இந்த மாந்தோப்பை நீயே வாங்கிக் கொள்; கம்பெனியையும் நீயே வைத்துக் கொள்; லாபத்தையும் நீயே அடைந்து கொள். எப்படியாவது நீ செளகரியமாயிருந்தால் அதுவே எனக்குப் போதும்’ என்று சொல்லி, மாதவராயர் தமக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். காரணம்: அவனா நம்முடன் பணம் போடப் போகிறான்" என்ற நினைப்புத் தான்.
வேலப்பனும் அவர் எதிர்பார்த்த பதிலையே சொன்னான். "என்ன சாமி, கேலி பண்றீங்க? எனக்கு ஏது சாமி அதுக்கெல்லாம் பணம்?" என்றான்.
"அப்படியானால் நானே பணம் போடுகிறேன். நானே கம்பெனி வைக்கிறேன். உனக்கு ஒரு தொல்லையும் வேண்டாம். பேசாமல் வேலை பார்த்துவிட்டு மாதம் பிறந்தால் முழுசா ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொள். ராஜா மாதிரி இருந்து கொண்டு முருகாயியையும் ராஜாத்தி மாதிரி வைத்துக் கொள். என்ன சொல்கிறாய்?" என்று தாம் வந்த காரியத்தை முடித்தார்.அவர்.
அவன் ஒன்றும் யோசனை செய்யவில்லை; யோசனை செய்வதற்கு வேண்டிய அறிவுதான் இந்த அரசாங்கத்தில் அவனைப் போன்ற ஏழைகளுக்கு ஏது?
"அப்படியே ஆகட்டும் சாமி" என்று ஆமாம் போட்டு விட்டான்.
தேவைக்கு அதிகமான பணத்தை வைத்துக் கொண்டு செய்வது இன்னதென்று தெரியாமல் திகைப்பவர்கள் ஒரு பக்கமும், கஞ்சிக்குக் காசில்லாமல் கண் கலங்குவோர் இன்னொரு பக்கமும் வாழும் இந்தப் படுமோசமான நாட்டிலே பணக்காரன் நினைத்தால் நடக்காதது எது?
மறுநாளே மாந்தோப்பு அழிக்கப்பட்டது; அதே இடத்தில் சில நாட்களுக்கெல்லாம் ஒர் அழகான கட்டிடம் எழுந்தது. வேலைக்கு ஆள் தேவை’ என்று சொன்னதுதான்தாமதம்; ஒருவேளை உணவுக்கு வழி கிடைத்தால் போதும் என்று எத்தனையோ நாட்களாக ஏங்கிக் கிடந்த ஏழைக் கூட்டம் - தனிப்பட்ட ஒரே ஒரு மனிதனின் ஏகபோக வாழ்விற்காகத் தங்கள் உடலையும் உயிரையும் தத்தம் செய்வதற்கென்றே அந்தக் கருணை மிகுந்த கடவுளால் கோடிக்கணக்கில் சிருஷ்டி செய்யப்பட்டிருக்கும் கூட்டம் - திமுதிமு: வென்று வந்து சேர்ந்தது.
வேண்டிய ஆட்களை எடுத்துக் கொண்டார்கள்; வேலையும் தொடங்கி விட்டார்கள்; கட்டில்கள் கட்டிவிட்டார்கள்; நாடெங்கும் அனுப்பிவிட்டார்கள். சர்க்கார் அதிகாரிகளும் மாதவராயரின் வேண்டுகோளுக்கிணங்கி, "இந்தியாவிலேயே நீங்கள் மட்டும் தான் இம்மாதிரிக் கட்டில்கள் செய்து ஊரைக் கொள்ளையடிக்கலாம்; அந்தக் கொள்ளையில் வரியின் மூலம் எங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுங்கள். போட்டிக்கு யாராவது வந்தால் எங்களிடம் சட்டம் இருக்கவே இருக்கிறது!” என்று உத்திரவாதம் அளிந்துவிட்டார்கள்.
ஆமாம்; அந்தக் கட்டில்களுக்கு ஆதி கர்த்தாவான வேலப்பன் கூட இனிமேல் மாதவராயரின் அனுமதியின்றி அம்மாதிரிக் கட்டில்கள் செய்ய முடியாது! அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? பலன் கிடைத்தது; பணம் குவிந்தது.
நாடெங்கும் கட்டில்களுக்கு ஏகக் கிராக்கி. யுத்த காலத்தில் துருப்புக்களுக்கு ஆயிரக்கணக்கில் கட்டில்கள் தேவையாயிருந்தன. ‘ஆர்டர்கள்' வந்து குவிந்தன.
"இனிமேல் வெறும் ஆட்களை வைத்துக் கொண்டு ‘ஆர்டர்'களைக் கவனிக்க முடியாது" என்று நினைத்த மாதவராயர். அமெரிக்காவிலிருந்து பல அதிசயமான யந்திரங்களைத் தருவித்தார். இருநூறு ஆட்கள் செய்யக் கூடிய வேலையை ஒரு யந்திரம் செய்தது. அது மரத்தை அறுத்தது; இழைத்தது; கூர் வாங்கியது. எல்லாம் செய்தது. பிரம்பைப் பிளப்பதற்கும், பின்னிவிடுவதற்கும்கூட யந்திரம் அவற்றை இயக்குவதற்குப் பழைய ஆட்கள் பிரயோஜனப்படவில்லை; புது ஆட்கள் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள். இதனாலெல்லாம் நாளடைவில் வேலப்பன் இருந்த இடமே தெரியவில்லை - எப்படித் தெரியும்?
ஒரு நாள் வேலப்பன் வேலைக்குக் கிளம்பியபோது விளையாடிக் கொண்டிருந்த அவன் குழந்தை திடீரென்று மயக்கம் வந்து மூர்ச்சையாகி விழுந்துவிட்டது. முருகாயி கோவென்று கதற ஆரம்பித்து விட்டாள். வேலப்பன் பதறிப்போய்க் குழந்தையைத் துர்க்கித் தோளின்மேல் போட்டுக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு ஓடினான். சிறிது நேரம் சிகிச்சை செய்த பிறகு குழந்தை மூர்ச்சை தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்து, அப்பொழுது தான் வேலப்பனுக்கும் முருகாயியிக்கும் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.
இந்தக் களேபரத்தினால் வேலப்பன் அன்று வேலைக்குச் செல்லவில்லை.
இதன் காரணமாக மறுநாள் வேலைக்குச் சென்ற வேலப்பன் முன்னறிவிப்பு இல்லாமல் முதல் நாள் வேலைக்கு வராமற் போனதற்காக மேலதிகாரியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.
ஆனால், தனிப்பட்ட முறையில் மேலதிகாரி அவனை வேலையிலிருந்து நீக்கவில்லை; முதலாளியின் உத்தரவின் பேரில் தான் நீக்கினார் . அப்படி நீக்கியதற்குக் காரணம் அன்று வேலப்பன் வேலைக்கு வராதது மட்டும் அல்ல; வேறொரு காரணமும் இருந்தது. அது இது தான்: பெருமைக்கு ஆசைப்படாத மனிதன் யார்? ஒருவனும் கிடையாது. அதற்கு வேலப்பன் மட்டும் விதி விலக்கா, என்ன? அவன், "முதலாளி, இவ்வளவு பெரிய மனிதரானதற்கு நான்தான் காரணம்" என்று தன்னுடன் வேலை செய்பவர்களிடம் அடிக்கடி சொல்லிக் கொள்வது வழக்கம். இது மாதவராயரின்காதுக்கு அடிக்கடி எட்டிக் கொண்டிருந்தது. அவன் அப்படிச் சொல்லிக் கொள்வது அவருடைய சுயமரியாதைக்குப் பங்கம் விளைப்பதாயிருந்தது. ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் தெரியாத அப்பாவி வேலப்பன் தன்னை மேலதிகாரி வேலையிலிருந்து நீக்கியதைப் பற்றிப் புகார் செய்ய முதலாளியை நெருங்கினான்.
"என்னடா?" என்றார் அவர் கம்பீரமாக. வேலப்பன் விஷயத்தைச் சொன்னான் தாழ்மையாக.
"மேலதிகாரி சொன்னால் சொன்னது தான்!" என்றார் மாதவராயன்.
வேலப்பன் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. "இதற்குத்தானா நான் செய்துகிட்டிருந்த வேலையைக் கூடக் கெடுத்தீங்க!" என்றான் மனம் நொந்து.
அவ்வளவுதான்; மேஜை மேலிருந்த மணி ‘டங்’ என்று ஒலித்தது.
வாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்த கூர்க்கா ஓடோடியும் வந்தான்.
அடுத்த நிமிஷத்தில் வேலப்பன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டான்!
அதே சமயத்தில் அருகிலிருந்த ஒடக் கரையிலிருந்து அமரகவி பாரதியாரின் அருட் கவிதை காற்றில் மிதந்து வந்து அவன் காதில் கணிரென்று ஒலித்தது.
“விழலுக்கு நீர் பாய்ச்சி
மாய மாட்டோம் - வெறும்
வீணருக் குழைத் துடலும்
ஒய மாட்டோம்!"