விந்தன் கதைகள் 1/செந்தமிழ் நாட்டிலே
“எழுத்தாளன் பிழைக்க வேண்டுமானால் அவன் எண்ணமும் எழுத்தும் ஒன்றாயிருக்கக் கூடாது; எண்ணம் வேறு, எழுத்து வேறாய்த்தானிருக்க வேண்டும். இல்லையானால் அவன் வாழப் பிறந்தவனல்ல; சாகப் பிறந்தவன்!”
இந்த அபிப்ராயத்தைத் திருவாளர் சதானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. “கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக எண்ணத்தையும் எழுத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டேன். தம்பி! இது செத்தவர் வாழும் தமிழ்நாடு; நானும் செத்தபின் வாழ்வேன்” என்பார் அவர்.
“வயிற்றுப் பிழைப்பைக் கேவலமாக நினைக்கும் இவர் வாழ்ந்த மாதிரிதான்” என்று நான் எண்ணிக் கொள்வேன்.
ஏனெனினல் “உலகத்திலேயே வயிற்றுப் பிழைப்பைப் போன்ற ஒர் உயர்ந்த லட்சியம் வேறொன்றும் கிடையாது!” என்பதுதான் என் திடமான அபிப்பிராயம்.
உண்மையில், இன்று எத்தனையோ எழுத்தாளர்களுடைய அபிப்ராயமும் அது தான். ஆனால், அதைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்வதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள் - அவ்வளவுதான் விஷயம்
முதலில் அந்த லட்சியம் நிறைவேறினால் தானே, அப்புறம் மற்ற லட்சியங்களைப் பற்றிச் சிந்திக்கவாவது முடியும்?
வாழ்க்கையில் சதா துக்கமாக இருந்த திரு. சதானந்தம் அவர்களை, அவருடைய வாழ்நாளில் யாருமே கவனிக்கவில்லை.
“அஸ்வினி, பரணி, கார்த்திகை என்று இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயர்களையும் நான் ஒருவனே புனைப் பெயர்களாக வைத்துக் கொண்டு, என் பத்திரிக்கை பூராவும் நானே கதை, கட்டுரை எழுதிக்கொண்டாலும் எழுதிக் கொள்வேனே தவிர, உம்முடைய கதை, கட்டுரையை மட்டும் ஒரு பக்கம் கூட பார்க்க மாட்டேன்; அப்படியே பார்த்தாலும் பிரசுரித்தாலும் ஒரு பைசாக் கூடக் கொடுக்கமாட்டேன்” என்று எத்தனையோ பத்திரிகாசிரியர்கள் அவருடைய கதை, கட்டுரைகளை நிராகரித்துவிட்டார்கள்.
‘ஒரே புத்தகத்தை ஒன்பது பதிப்புகள் போட்டு லாபம் சம்பாதித்தாலும், அந்தப் புத்தகத்தை எழுதியவருக்கு ஒரே ஒரு தடவைதான் சன்மானம் கொடுப்போம்!” என்னும் சட்டத்தைத் தங்கள் பிறப்புரிமையாகக் கருதும் பிரசுரகர்த்தர்கள் கூட, திரு. சதானந்தத்தை அவருடைய வாழ்நாளில் ஆதரிக்கவில்லை.
பாமர மக்கள் அவருடைய எழுத்தைப் பாராட்டுவதோடு நின்றுவிட்டனர். பணக்காரர்கள் அதுகூடச் செய்யவில்லை; பட்டம் பதவிக்காகவும், பெருமை, புகழுக்காகவும் அவர்கள் பணத்தை வாரியிரைத்தனர். படித்தவர்கள் அவருடைய எழுத்தைப் பார்ப்பதுகூட இல்லை. அவர்களுடைய பார்வையெல்லாம் மேல் நாட்டு இலக்கியகர்த்தாக்களின் மேல் இருந்தது.
பொறாமையே உருவான எழுத்தாளர் உலகமோ அவர் தொண்டுக்கு மாசு கற்பிப்பதையே தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தது.
இதனாலெல்லாம் திரு. சதானந்தம் தம்முடைய வாழ்நாளில் பட்ட துன்பமும் துயரமும் கொஞ்சமன்று. எழுத்தையே மூலதனமாகக் கொண்ட அவர், வேறு தொழில் ஏதாவது செய்து வாழ்வதற்கும் தகுதியற்றவராயிருந்தார்.
வருடத்தில் ஒரு மாதமாவது திரு. சதானந்தம் தம் மனைவியுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தியதில்லை. “அவள் நம்மை விட்டுப் பிறந்தகம் போனால் போதும்!” என்று அவர் இருப்பார். “அவர் நம்மைப் பிறந்தகம் போகச் சொன்னால் போதும்” என்று அவள் இருப்பாள்.
இந்த லட்சணத்தில் அவருக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்.
இத்தனைக்கும் சதானந்தத்தின் மனைவி, சந்திரமதியின் கதையைப் படித்துத்தான் இருந்தாள். ஆனாலும் அவளால் எப்பொழுதும் அந்தக் கதையின் கருத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. சில சமயம் அவளுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் வந்துவிடும். தன் கணவனைக் கோபித்துக் கொள்வாள். இம்மாதிரி சமயங்களில் “காதல் கீதல் எல்லாம் வெறும் கதைகளில் மட்டும் இருக்கட்டும்” என்று எண்ணியவராய், திரு. சதானந்தம் தம் நெற்றிக்கண்ணைக் காட்டுவதன் மூலம் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார்.
அதற்கேற்றாற்போல் வறுமைப் பேய் அவரை வதைத்தது. குழி விழுந்த கண்களையும் கூன் வளைந்த முதுகையும் பார்த்துக் கூட அந்தப் பாழும் பேய்க்கு மனம் இரங்கவில்லை.
சந்திரசூரியனும் வாயு வருணனும் மட்டும் வழக்கம் போல் திரு. சதானந்தத்தை வஞ்சிக்கவில்லை; ஆனால் மனித வர்க்கம் அவரை வஞ்சித்தது; வதைத்தது.
தூக்கி விடுவாரின்றித் துன்பக்கேணியில் நெடுநாட்கள் நீந்திக் கொண்டிருந்த அவருடைய மனைவிக் கடைசியில் ஒரு நாள் களைத்துப் போனாள். முடிவு என்ன? முழுகிப்போனாள்!
அவள் தன் ஞாபகார்த்தமாக விட்டுச் சென்ற இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சதானந்தம் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
அப்பொழுதுதெல்லாம் அவரைக் கவனிக்காத தமிழுலகம், இப்பொழுதோ?
ஏன், இப்படி மாரடிக்கிறது?
{{larger|அந்த அதிசயத்தைக் கேளுங்கள்:
“நேற்று சூரிய கிரகணத்தின் போது நீராடச் சென்ற திரு. சதானந்தம் கடலில் மூழ்கிவிட்டார்” என்ற செய்தியைக் கேட்டதும், தமிழ் நாட்டில் அவருக்காகக் கண்ணீர் வடிக்காதவர்களே கிடையாது. அந்தக் கண்ணீரைக் கண்டு கடலே வெட்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
நாடெங்குமிருந்து அநுதாபச் செய்திகளும், தந்திகளும் அவர் வீட்டுக்கு வந்து குவிந்தன.
அன்று அவரைப் பற்றி எழுதிய பத்திரிகாசிரியர்களெல்லாம் தங்கள் பேனாவை மசியில் தோய்த்து எழுதவில்லை; கண்ணீரில் தோய்த்து எழுதினார்கள்.
ரஸிகர்கள், கூட்டம் கூட்டமாய்க் கூட்டினார்கள்; பேச்சுப் பேச்சென்று பேசினார்கள்; தீர்மானம் தீர்மானமென்று நிறைவேற்றினார்கள்.
“சதானந்தம் சகாய நிதி” என்று நிதி திரட்டி அதை நல்ல வேளையாகச் செத்துப்போன அவருக்கும் அவர் மனைவிக்கும் அனுப்பி வைக்காமல், அவருடைய மக்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இன்னும் அவரைப் பார்க்காதவர்களெல்லாம் பார்த்ததாகச் சொல்லிக் கொண்டனர். பழகாதவர்களெல்லாம் பழகியதாகச் சொல்லிக் கொண்டனர்; அவர் வீட்டில் தங்காதவர்களெல்லாம் தங்கியதாகச் சொல்லிக் கொண்டனர்.
அவர் ‘களுக்’கென்று சிரித்ததும், ‘கணீ’ரென்று இருமியதுங் கூடக் கட்டுரைகளாயின!
மனம் நொந்து அவர் தம் மனைவிக்கும், மற்றவர்களுக்கும் எழுதிய கடிதங்களெல்லாம், மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கக் கூடிய மாபெரும் வேத வசனங்களாகப் போற்றப்பட்டன!
எப்பொழுதோ ஒரு சமயம் நாயைத் தட்டிக் கொடுத்ததற்காக அவரை ‘நான்முகன்’ என்று புகழ்ந்தனர்; பூனையைத் தடவிக் கொடுத்ததற்காகப் ‘புத்தர்’ என்று போற்றினர்.
பத்திரிகாசிரியர்களும், பிரசுரகர்த்தர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கட்டுரைகளையும், கதைகளையும் ஆயிரம் ஆயிரமாகக் கொடுத்து வாங்கினர்.
நவயுக எழுத்தாளர்கள் தம்முடைய கதை, கட்டுரைகளில் அவரைப் பிதற்றி வைத்திருந்த தனித் தமிழ்ச் சொற்களையெல்லாம் பொறுக்கியெடுத்து, அவற்றுக்கெல்லாம் தனித்தமிழ் அர்த்தம் கண்டு பிடித்துத் தனித் தமிழ் அகராதி ஒன்று வெளியிட்டனர்.
“உங்கள் அப்பாவைப் பற்றி தெரிந்ததை எழுதிக் கொடுங்கள்” என்று எத்தனையோ பிரசுரகர்த்தர்கள் அவருடைய பிள்ளையின் மென்னியைப் பிடித்தனர். அவனும் அதற்குப் பின் வாங்காமல் “என் தந்தையின் ஞாபகங்கள்” என்று தலைப்புப் போட்டுக் கொண்டு தன் ஞாபகத்தில் இல்லாதவற்றையெல்லாம் எழுதித் தள்ளினான்
என்னையும் ஒரு பத்திரிகாசிரியர், அவரைப் பற்றி ஏதாவது எழுதும்படி ரொம்பவும் கேட்டுக் கொண்டார். நானும் சளைக்கவில்லை. “சதானந்தத்தின் சாபம்” - “அவரும் நானும்” என்றெல்லாம் தலைப்புப் போட்டுக் கொண்டு நடந்தது நடக்காதது எல்லாவற்றையும் சாங்கோபாங்கமாக எழுதி வெளுத்துக் கட்டினேன்.
அன்று அவர் பெயரைச் சொல்லி அவரே பிழைக்க முடியவில்லை; இன்றோ அந்த மனிதனின் பெயரைச் சொல்லி எத்தனை பேர் பிழைக்கின்றனர்!
அங்கே கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. ஏனெனில் சாட்சாத் திரு. சதானந்தமே அங்கே வீற்றிருந்தார் என்னைக் கண்டதும் அவர் சாவதானமாக, “இத்தனை நாளும் வடக்கே யாத்திரை போயிருந்தேன். இன்னும் இரண்டு நாளைக்கெல்லாம் இலங்கை செல்வதென்று தீர்மானித்திருக்கிறேன். அதற்குள் உன்னை ஒருமுறை பார்த்து விட வேண்டுமென்று ஆசை. அதனால் தந்தி கொடுக்கச் சொன்னேன்” என்று தம் நீண்ட தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்.
“என்ன! உம்மைச் சூரிய கிரகணத்தன்று கடல் கொண்டு போகவில்லையா?”
“இல்லை; வடநாடு தான் கொண்டு போயிருந்தது!”
“இத்தனை நாளும் அங்கே என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
“உனக்குத்தான் தெரியுமே. தமிழ் நாட்டில் என்னுடைய எழுத்துக்கு மதிப்பில்லையென்று. ஆகவே வடநாட்டுக்குச் சென்று ‘வக்ரநாத்ஜி’ என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டேன். ஹிந்தியிலே பல நவீனங்களை எழுதித் தள்ளினேன். அவையெல்லாம் இப்பொழுது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரமாதமான ஜோடனைகளுடன் வெளி வந்திருப்பதை நீ பார்த்திருக்கலாமே?”
“ஆமாம், ஆமாம், பார்த்தேன். அந்த வக்ரநாத்ஜி நீங்கள் தானா?”
“ஆமாம் தம்பி, ஆமாம்!”
“இது என்ன வேடிக்கை! அப்படியானால் அமரகவி பாரதியார் கூட ஒருவேளை உங்களைப் போல் தான் எங்கேயாவது இன்னும் யாத்திரை செய்து கொண்டிருப்பாரோ?”
“அவர் அப்படிச் செய்திருந்தால் தான் இன்னும் ஜீவிய வந்தராயிருக்கலாமே!” என்றார் அவர்.
அதைக் கேட்ட எனக்கு, “நாமும் கடலில் மூழ்கிவிட்டால் என்ன?” என்று தோன்றிற்று.