விந்தன் கதைகள் 1/புரியாத புதிர்

புரியாத புதிர்

நினைத்துப் பார்த்தால் எனக்கே வேடிக்கையாய்த் தான் இருக்கிறது - எத்தனையோ பேரைப் பற்றி நான் தெரிந்தவன் போல் எழுதுகிறேன், பேசுகிறேன் - ஆனால் என்னைப் பற்றியே எனக்கு இன்னும் தெரிந்ததாகத் தெரியவில்லை!

இது கதையல்ல; கற்பனை யல்ல; உண்மை; உண்மையிலும் உண்மை.

என்னைப் பற்றியே நான் இன்னும் தெரிந்து கொள்ளாமலிருக்கும்போது, என் மனைவியைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? - ஒன்றுமே தெரியாது தான்!

ஆனால், இந்த அதிசயமான உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேனா என்றால், அதுதான் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருஷமும் நான் அவளைப் பற்றி ரொம்ப ரொம்பத் தெரிந்து கொண்டிருப்பவன் போலவே பாவனை செய்து வருகிறேன்!

நான்தான் இப்படி யென்றால் அவளாவது எனக்கு மாறுபட்டிருக்கிறாளா? அதுவும் இல்லை; அவளும் என்னைப் பற்றி ரொம்ப ரொம்பத் தெரிந்து கொண்டிருப்பவள் போலவே நாளதுவரை பாவனை செய்து வருகிறாள்!

இந்த லட்சணத்தில் எங்களுடைய வாழ்நாட்கள் ஒவ்வொன்றாக எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த நாட்களைப் பற்றி நாங்களும் கவலைப்படுவதில்லை.

அப்படி ஏதாவது ஒரு நாளைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம், அந்த நாளும் எங்களைப் பற்றிக் கொஞ்சம் கவலைப்பட்டது என்றால் அது ஒரே ஒரு நாளாய்த்தான் இருக்க முடியும். அந்த நாள் எங்கள் வாழ்வில் ஒரு திருநாள்!

அந்தத் திருநாளைப் பற்றிச்சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு வெறும் நாளைப் பற்றிச் சொல்ல வேண்டும்; ஆமாம்; சொல்லிவிடத்தான் வேண்டும்.

* * *

அன்றிரவு நான் சாப்பிட்டு முடித்ததும், படுக்கையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டு மாடிப்படிகளில் காலை எடுத்து வைத்தேன். அவள் என்னைத் தடுத்து நிறுத்தி எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

நான் திரும்பி, "ஏன், தெரியவில்லையா? எலெக்ட்ரிக் லைட்டின் வெளிச்சம்தான் பட்டப் பகலைப்போலக் கண்ணைப் பறிக்கிறதே!" என்றேன்.

"தெரியாமல் என்ன படுக்கவா போகிறீர்கள்!" என்று கேட்டாள்..."

“ஆமாம்!"

"திறந்த வெளியிலா...?"

“ஆமாம்!”

"கொட்டும் பனியிலா?”

“ஆமாம்!”

"ஏன், உள்ளே படுப்பதற்கு என்ன குறைச்சலாம்?”

"நீ இருக்கிறாய்; உன்னுடைய அருமையான குழந்தைகள் இருக்கின்றன; இன்னும் வேறு என்ன வேண்டும்?”

“ஒரு சாண் கயிறுதான் வேண்டும்!”

"ஒரு சாண் என்ன, ஒரு முழம் வேண்டுமானாலும் தருகிறேன்!”

"என்னை ஏன் இப்படி எடுத்ததற்கெல்லாம் கரிக்கிறீர்கள்? உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்களேன்!”

"பிடிக்கவில்லை என்றால் உடனே பிறந்தகத்துக்குப் போய்விடுவாய்; அவ்வளவுதானே? - பேஷாய்ப்போ இப்பொழுதே வேண்டுமானாலும் போ!" என்று சொல்லி விட்டு நான் மாடிக்குச் சென்றேன்.

கீழேயிருந்து விம்மல் சத்தம் வந்தது! அதைப் பொருட்படுத்தாமல் நான் படுக்கையை விரித்துப் படுத்தேன்.

விம்மல் சத்தம் தொடர்ந்தது!

சிறிது நேரமாவது நிம்மதியாக இருந்துவிட்டு வரலாம் என்று எண்ணி மாடிக்கு வந்த எனக்கு இது என்ன சோதனை? இந்த சோதனைக்கு யார் காரணம்?

நான்தான் காரணம் என்றால், அந்தக் காரணத்துக்கு நான் ஏன் ஆளானேன்?

இல்லை, அவள்தான் காரணம் என்றால், அந்தக் காரணத்துக்கு அவள் ஏன் ஆளானாள்?

ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளாததால் வந்த வம்பு மட்டும் அல்ல அது; என்னைப் பற்றி நானும் அவளைப்பற்றி அவனும் தெரிந்து கொள்ளாததால் வந்த வம்புதான் இது

அப்படித் தெரிந்து கொள்ளாத குற்றம் யாருடையது? எங்களுடையதா? - இல்லை, இல்லவே இல்லை!

ஏனெனில், விரிந்து பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நாங்கள் மட்டும் ஏன் எங்களைப்பற்றி எங்களுக்கே தெரியாமலும், ஒருவரைப்பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளாமலும், வாழ்க்கை நடத்தவில்லை. வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் எங்களைப் போல் விசித்திர வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

இன்று தெரியும் இந்த உண்மைக்கும் அன்று தெரிந்த அந்த உண்மைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்!

* * *

காதலினால் வாழ்க்கையில் சாதிக்க முடியாத காரியம் ஒன்றுமே இல்லை!" என்று கவிஞர்கள் கதைக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் நாங்கள் "பெரியோர்கள் நிச்சயித்தபடி" கல்யாணம் செய்துகொண்டவர்களல்ல; “நாங்கள் நிச்சயித்தபடி" கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான்.

அதாவது, எங்கள் கல்யாணம் காதல் கல்யாணம்!

குடும்ப நண்பர்கள் என்ற முறையில் கல்யாணத்துக்கு முன்னால் நான் அடிக்கடி அவளுடைய வீட்டுக்குப் போய் வருவதுண்டு. அவளும் என்னுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதுண்டு.

கல்யாணமான பிறகு அன்றுதான் இருவரும் முதன்முதலாகச் சந்திப்பதென்று முடிவாயிற்று.

அந்த நாள் நெருங்க நெருங்க, அந்த நேரமும் நெருங்க நெருங்க, எனக்கு உண்டான கிளர்ச்சியைத்தான் என்னவென்பேன்! உயிரும் உடலும் ஒன்றி உண்டான உணர்ச்சியைத்தான் என்னவென்பேன்!

கடைசி கடைசியாக அந்த நாளும் வந்தது; அந்த நேரமும் வந்தது. இருவரும் பெரியோருக்குத் தெரிந்து, பெற்றோருக்குத் தெரிந்து, உற்றாருக்குத் தெரிந்து, ஊராருக்குத் தெரிந்து, எங்களுக்கென்று அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தனி அறைக்குள் பிரவேசித்தோம்.

மலர் மணம் எங்களை மனமுவந்து வரவேற்றது!

பன்னிரும் சந்தனமும் பல்வேறு பழவகைகளும் எதிர்த்தாற்போலிருந்த கண்ணாடியில் தெரிந்த காட்சிகண் கொள்ளாக் காட்சியாயிருந்தது!

ஆதுரத்துடன் உள்ளே நுழைந்த எங்கள் இருவருடைய கண்களிலும் ஆசைக் கனல் பறந்தது

ஆனால்....

பெருகிவந்த உணர்ச்சிக்கு எங்கள் இருவருக்கும் இடையேயிருந்த நாணம் தடை விதித்தது. அந்தத் தடையை மீறுவதற்கு - அப்பப்பா நாங்கள் செய்த பிரயத்தனங்கள் எத்தனை எத்தனையோ!

நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்தாள்; அவள் என்னைப் பார்க்காத போது நான் அவளைப் பார்த்தேன்.

அவளுக்குத் தெரியாமல் என் இதழ்கள் சற்றே விரிந்தன; எனக்குத் தெரியாமல் அவள் இதழ்கள் சற்றே மலர்ந்தன.

ஆனால் இருவருக்கும் வாய்தான் அடைத்துப் போயிருந்தது!

இந்த நிலைமை வெகுநேரம் நீடிக்கவில்லை. நான் துணிந்து அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன்; அவளும் துணிந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தாள். அவள் சட்டென்று தலை குனிந்தாள்; “நானும் சட்டென்று தலை குனிந்தேன். அவள் முகம் சிவந்தது; என் முகமும் சிவந்தது. என்னுடைய கண்கள் படபடவென்று அடித்துக் கொண்டன; அவளுடைய கண்களும் படபடவென்று அடித்துக் கொண்டன.

ஆம், அவை பேசின; பேசத்தான் செய்தன! எல்லோருக்கும் தெரிந்த பாஷையிலா? இல்லை; எவருக்கும் தெரியாத பாஷையில்! - இரைந்தா? இல்லை; இரகசியமாக:

இந்தக் கோலத்துக்கு மத்தியில் எங்களுக்கிடையேயிருந்த நாணம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ ஆரம்பித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நான் ஏன் அவளை இப்போது விழுங்கிவிடுபவன் போல் பார்க்கிறேன்? அவள் ஏன் என்னை இப்போது விழுங்கிவிடுபவள் போல் பார்க்கிறாள்?

இருவரும் ஒருவர்மீது ஒருவர் வைத்த விழிகளை வாங்கவேயில்லை; பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது - ஆம், நேரம் போய்க்கொண்டேதான் இருந்தது!

இத்தனைக்கும் அவள் ஏற்கனவே எனக்குத் தெரிந்தவள்; நானும் அவளுக்கு தெரிந்தவன்.

ஆனால், பேசத்தான் நா எழவில்லை!

"இருவருக்கும் இடையே ஏதாவது ஒன்று தூதாக வந்து சேர்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்று நினைத்தேன்.

நினைத்ததுதான் தாமதம், சாளரத்தின் வழியாக எங்கிருந்தோ ஒரு பூனை வந்து எட்டிப் பார்த்தது; உடனே அந்தப் பூனையை நான் துணைக்கு அழைத்தேன்.

"மியாவ், மியாவ்..."

அவள் ‘களுக்'கென்று சிரித்தாள்; நானும் ‘களுக்'கென்று சிரித்தேன்.

பூனை இறங்கி வந்தது!

நான் மேஜை மீதிருந்த பாலை எடுத்துத் தரையில் கொஞ்சம் கொட்டி நிறுத்தினேன்.

பூனை சுவாரஸ்யமாக அந்தப் பாலை நக்கிக் குடித்தது.

"தனியாக வந்திருக்கிறீரே, தம்பதி சமேதராக வந்திருக்கக் கூடாதோ!" என்றேன் நான், பூனையைப் பார்த்து. பதிலுக்கு அது "மியாவ், மியாவ்" என்றது.

நான் அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இன்னும் கொஞ்சம் பாலைக் கீழே கொட்டினேன்.

அவ்வளவுதான்; அந்த மெல்லியலாள் பொறுமையிழந்தாள். ஓடோடியும் வந்து என்கையிலிருந்த பால் செம்பை வெடுக்கென்று பிடுங்கி, மேஜைமீது தக்கென்றுவைத்தாள்.

பூனை எடுத்தது ஓட்டம்!

நான் அவளுடைய மலர்க்கரத்தைப் பற்றி மதி முகத்தை நோக்கினேன்.

எங்களுடைய கரங்கள் இணைந்தன!

இணைந்தவை இணைந்தவைதான்; வெகுநேரம்வரை அவை பிரியவேயில்லை.

பிரியாமலே பேச்சு ஆரம்பமாயிற்று!

மணி பத்து, பதினொன்று, பன்னிரண்டு - ஊஹூம்; பேச்சு ஓயவே இல்லை . பேசினோம், பேசினோம், பேசினோம், பேசிக் கொண்டே இருந்தோம்.

"இனி நாம் இருவரும் உடலும் உயிரும்போல!" என்றேன் நான்.

"இனி நாம் இருவரும் மலரும் மணமும் போல" என்றாள் அவள்.

"இனி நாம் இருவரும் நகமும் சதையும் போல" என்றேன் நான்.

"இனி நாம் இருவரும் நிலவும் ஒளியும்போல" என்றாள் அவள்.

இதை உணர்ந்தோ என்னமோ, அவள் எழுந்து சென்று, தன் தளிர்க்கரங்களில் பால் செம்பை ஏந்திக் கொண்டு வந்து எனக்கு எதிரே நின்றாள்.

நான் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "அமிர்தகலசம் ஏந்தி நிற்கும் அப்ஸர ஸ்திரீ போலவே இருக்கிறாயே!” என்றேன்.

அவள் தலையைக் கீழே கவிழ்த்திக் கொண்டு, "அந்த அமிர்தத்தைப் பருகப் போகும் அசல் தேவ புருஷனைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள்" என்றாள் அவள்.

நான் அவளுடைய தலையை நிமிர்த்திவிட்டுச் சிரித்தேன்- ஆம், அப்பொழுதுதான் நாங்கள் இருவரும் முதன் முறையாக மனம் விட்டுச் சிரித்தோம்.

அவள் மெள்ள நடந்து சென்று, விளக்கின் திரியை மெள்ள இறக்கிவிட்டு வந்தாள்.

வெளிச்சம் சற்றே குறைந்தது; எங்களைப் பிடித்திருந்த வெட்கமும் சற்றே மறைந்தது. இருவரும் ஒருவரையொருவர் நெருங்கினோம்...

"மற்றவர்களைப் போல் நாம் ஒருவரை ஒருவர் முன்பின் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே" என்றாள் அவள் பெருமிதத்துடன்.

“ஆம், நாம் ஒருவரை ஒருவர் முன்பின் தெரிந்தே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம்" என்றேன் நானும் பெருமிதத்துடன்.

அன்று இருந்த அந்த ஒற்றுமை இன்று....?

பொழுது விடிந்ததும் படுக்கையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு மாடியை விட்டு கீழே வந்தேன். அவள் பெட்டி, படுக்கையுடன் வந்து எனக்கு எதிரே நின்றாள்.

“என்ன, எங்கே பிரயாணம்? "என்று கேட்டேன்.

"ஊருக்கு!"என்றாள் அவள்.

“எப்பொழுது....?”

"இப்பொழுதுதான்...?”

"பின்னே ஏன் நிற்கிறாய்? - போகிறதுதானே?”

"உங்கள் உத்தரவை எதிர் பார்த்துத்தான்நிற்கிறேன்...."

“என்னுடைய உத்தரவு என்ன தெரியுமா? - நீ ஊருக்குப் போகக்கூடாது"

“என்னுடைய இஷ்டம் என்ன தெரியுமா? - நான் ஊருக்குப் போக வேண்டும்!”

"உன்னுடைய இஷ்டப்படி நடப்பதற்கு இது இடமில்லை"

"அதற்குத்தான் என் பிறந்தகத்துக்குப் போகிறேன்"

"போகக்கூடாது!”

“என்னை ஏன் வீணாகத் தடுக்கிறீர்கள்?”

"நீ மட்டும் நேற்றிரவு மாடிக்குப் போன என்னை ஏன் வீணாகத் தடுத்தாய்!”

"பனியில் நனைந்தால் உடம்புக்கு ஆகாதே என்று தடுத்தேன்!”

"நானும் நீ ஊருக்குப் போனால் எனக்குப் பொழுது போகாதே என்று தடுக்கிறேன்!”

அவள் சிரித்தாள்; நானும் சிரித்தேன். "இது ஏன் உங்களுக்கு முன்னமே தெரியவில்லை?” என்றாள் அவள்.

"நல்ல வேடிக்கை!" என்று சொல்லிவிட்டு, அவள் பெட்டியையும் படுக்கையும் தூக்கிக் கொண்டு போய் பழையபடி உள்ளே வைத்தாள்.

நான் அவளுக்குப் பின்னால் சென்று, “வாழ்க்கை வேடிக்கையல்ல! அது ஒரு புதிர்!” என்றேன்.

“வாழ்க்கை மட்டும் என்ன, மனிதவர்க்கத்தின் குணாதிசயமே ஒரு புரியாத புதிராய்த்தான் இருக்கிறது!” என்றாள்.அவள்.