விந்தன் கதைகள் 2/ஊமைப் பட்டாசு

ஊமைப் பட்டாசு

தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே 'கங்கா ஸ்நான'த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெரு முழுவதும் விரவிக் கிடந்தன. யாரோஒரு சிறுவன்-வயது பத்துப் பன்னிரண்டுக்கு மேல் ஆகியுங்கூட அறையில் கோவணத்தைத் தவிர வேறொன்றும் அணியாத, அணிய முடியாத சிறுவன் கோழி குப்பையைக் கிளறுவதுபோல அந்தக் குப்பைகளைக் காலால் கிளறுவதும், வெடிக்காத பட்டாசு ஏதாவது கிடைத்தால் அதைக் குதூகலத்துடன் கையில் வைத்துக் கொள்வதுமாக அந்தத் தெரு வழியே வந்துகொண்டிருந்தான். ஆண்டவனைப் போல அவனும் ஒருவேளை அனாதையாயிருக்கலாம். அதற்காகத் தீபாவளியை முன்னிட்டு ஆண்டவனுக்கு என்னவெல்லாமோ செய்து வைத்துப் படைக்கிறார்களே, அதே மாதிரி அவனுக்கும் யாராவது ஏதாவது செய்து வைத்துப் படைக்கப் போகிறார்களா, என்ன? அப்படியே படைத்தாலும் இந்தச் 'சாப்பிடும் சாமி', 'அந்தச் சாப்பிடாத சாமி'யைப்போலப் படைத்ததையெல்லாம் படைத்தவர்களுக்காகவே விட்டு வைக்கப் போகிறதா, என்ன?

சரி, படைக்காவிட்டால் போகட்டும்; வீதியில் வீசி எறியும் எச்சில் இலைகளிலாவது ஏதாவது மிச்சம் மீதி-ஊஹாம், சுதந்திரம் வந்தாலும் வந்தது; அந்தப் பேச்சே கிடையாது!-எல்லாம் தான் தாறுமாறாக விலை ஏறிவிட்டதே, யார் மிச்சம் மீதி வைக்கிறார்கள்? ஏதோ ஞாபகமாக எச்சில் இலைகளையாவது வெளியே கொண்டு வந்து போடுகிறார்களே, அது போதாதா?

போதும்; 'மேல் தீனி' வேண்டித் திரியும் மாட்டுக்கு வேண்டுமானால் அது போதும். ஆனால் மனிதனுக்கு?-காசில்லாமல் இவ்வளவு பெரிய உலகத்தில் கிடைக்கக் கூடியவை இரண்டு. ஒன்று தண்ணிர்; இன்னொன்று காற்று-இவற்றை மட்டுமே கொண்டு மனிதன் உயிர் வாழ முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

ஆரம்பப்பள்ளி ஆசிரியன் என்ற முறையில் மற்றவர்களுக்குக் கிட்டாத ஒர் அனுபவம் அடியேனுக்குக் கிட்டிற்று. அதாவது, இந்த 'மதிய உணவுத் திட்டம்' என்று ஒரு திட்டம் வந்திருக்கிறதே, அந்தத் திட்டத்துக்குப் பிறகு முன்னைக் காட்டிலும் அதிகமாகப் பிள்ளைகள் பள்ளிக்கு வருவது என்னமோ உண்மைதான்.ஆனால் படிப்பதற்கு அல்ல; சாப்பிடுவதற்கு!-ஆம், சாப்பிட்டு முடிந்ததும், அவர்களில் பலர் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். 'ஏண்டா?' என்று கேட்டால், ‘எங்கம்மாவரச் சொன்னாங்க ஸார், எலும்பு பொறுக்க!' என்பார்கள்; 'எலும்பா, அதை எதற்குப் பொறுக்குகிறீர்கள்?' என்று கேட்டால், அதை எதற்கோ விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள், ஸார்! இரவுச் சாப்பாட்டுக்கு அதுதான் எங்களுக்கெல்லாம் வழிகாட்டுகிறது, ஸார்!’ என்பார்கள். அதற்கு மேல் நான் என்னத்தைச் சொல்ல, 'மங்களம் உண்டாகட்டும்!’ என்று அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதைத் தவிர?

அவர்களைப் போலவே இவனும் ஒரு வேளை பகல் உணவுக்காகப் பள்ளிக்குச் சென்று, இரவு உணவுக்காக எதையாவது பொறுக்கி விற்பவனாயிருப்பானோ?-இருக்கலாம், யார் கண்டது?

தீபாவளியை முன்னிட்டு இன்று அந்தத் தொழிலை இவன் மேற்கொள்ளவில்லை போலும்!

என்ன சொன்னேன், 'தொழில்' என்றா சொன்னேன்?-'ஆம், அதுவும் ஒரு கலை!' என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்குத்தான் அவன் இன்னும் வளர வில்லையே?

ப்படி ஒரு 'பாரத புஷ்பம்' இந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்க, அப்படி ஒரு பாரத புஷ்பம் அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்தது. அதற்கும் வயது பதினைந்துக்குக் கிட்டத்தட்ட இருக்கும். ஆனால் அது கோவணம் மட்டும் கட்டிக்கொண்டிருக்கவில்லை; அதற்கும் மேலே நாலு முழத்துக்குக் குறையாத சல்லாத் துணி வேறு கட்டிக்கொண்டிருந்தது-சமர்த்துப் பயல், சிதையில் வைத்த பிணம் எரிவதற்கு முன்னாலேயே அதன் இடையில் சுற்றியிருந்த சல்லாத் துணியை எப்படியோ இழுத்துக்கொண்டு வந்துவிட்டான் போலிருக்கிறது!- இல்லாவிட்டால் அந்தப் புத்தம் புதிய சல்லாத்துணி அவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கப் போகிறது?

சபாஷ்! அவனுடைய திறமைக்கு ஒரு சபாஷ் என்றால், தீபாவளியை முன்னிட்டு அவன் அணிந்து கொண்டிருக்கும் புத்தாடைக்கு இரண்டு சபாஷ்களல்லவா போடவேண்டும் போலிருக்கிறது?-சபாஷ், சபாஷ்!

என்ன, சபாஷ் போட முடியவில்லையா உங்களால்?-எப்படி முடியும், அவனைப் போன்ற எத்தனையோ நடமாடும் பிணங்களை மறந்து, நீங்கள் மட்டும் அண்டர்வேர், அதற்குமேல் வேட்டி அல்லது பேண்ட், அதற்கும் மேலே பனியன், சட்டை, கோட்டு அல்லது அங்கவஸ்திரம் எல்லாம் அணிந்து, 'நடமாடும் ஜவுளிக்கடை' களாகவே காட்சியளிக்கும் போது?

ஆனால் ஒன்று-மனிதனை மனிதன் சுலபமாக ஏமாற்றி விடலாம்; மனத்தை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடிகிறதா?

கிடக்கிறது, விடுங்கள்!-அப்படியொன்று இருப்பதையே அதுதானே இப்பொழுதெல்லாம் நமக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டி யிருக்கிறது?-இல்லாவிட்டால் 'நாட்டுப் பிரஜை'களாகவா இருப்போம் நாம் ? என்றோ 'காட்டுப் பிரஜை’களாகி விட்டிருப்போமே?

"ம், அவரவர்கள் செய்த புண்ணியம் அது!" என்று ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறீர்களா?-விடுங்கள்!-அதுதான் வழி; மனத்தை ஏமாற்ற அதுதான் வழி!

அந்த வழியையே அடியேனும் பின்பற்றி மனத்தை ஏமாற்றிவிட்டு, அவனைக் கவனித்தேன்; அவனுக்கு வேண்டியதும் அப்போது பட்டாசாய்த் தான் இருந்தது. எனவே, குப்பைக்குக் குப்பை நின்று அதைத் தேடிக்கொண்டே வந்த அவன் இவனைக் கண்டதும், “ஏண்டா, பொறுக்கி இந்தத் தெருவுக்குள்ளே நீ யாரைக் கேட்டு நொழைஞ்சே? யாரைக் கேட்டு நொழைஞ்சேடா?" என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக அதட்டிக் கேட்டான், தனக்கு ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில்-தானும் ஒரு 'பொறுக்கி’ என்பதை அடியோடு மறந்து!

பதில் இல்லை.

"சொல்லுடர், சோமாறி,"

அதற்கும் பதில் இல்லை.

"ஒரு வருசம், ரெண்டு வருசம் இல்லேடா, ஏழு வருசமா 'இந்தத் தெருவேதான், தானே இந்தத் தெரு'ன்னு இருந்துகிட்டு இருக்கிறவரு இவரு! இவரைக் கேட்காம நீ எப்படிடா இங்கே வரலாம்? போ, மரியாதையா திரும்பிப் போ!" என்றான் அவன்.

இவன் திரும்பினான்.

"என்னாம்மா, நைஸா நழுவுறே? கையிலே இருக்கிற பட்டாசையெல்லாம் கீழே போட்டுட்டுப் போம்மா! இல்லேன்னா, மூக்கு வெத்திலைப் பாக்கு போட்டுக்கும்!” என்று தன் மூஷ்டியை மூக்குக்கு நேராக உயர்த்திக் காட்டினான் அவன்.

இவன் மூக்கு வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொள்வதை விரும்பாமலோ என்னவோ, கையிலிருந்த பட்டாசுகளையெல்லாம் அவனுக்கு முன்னால் போட்டுவிட்டு அப்படியே நின்றான்.

வெற்றிப் புன்னகை முகத்தில் அரும்பச் சுற்று முற்றும் பார்த்தான் அவன், தீக்கு ஏதாவது வழி பிறக்குமா என்று. அப்போது அந்த வழியாக வந்த மைனர் ஒருவர் தன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கடைசியாக ஒர் இழுப்பு இழுத்து விட்டுத் தெருவோரமாக விட்டெறிந்துவிட்டுப் போனார். ஆவலுடன் ஒடிச் சென்று அதை எடுத்துக்கொண்டு வந்து பட்டாசின் திரியிலே வைத்துவிட்டுக் காதைப் பொத்திக் கொண்டான் அவன்-'டமார்!’ என்று அது வெடிக்கப் போகும் சத்தத்தை எதிர்பார்த்து.

ஆனால் என்ன ஏமாற்றம்!-ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி வைத்ததுதான் மிச்சம்; ஒன்று கூட வெடிக்கவில்லை!

"அடகடவுளே, எல்லாமே ஊமைப் பட்டாசாயில்லே போச்சு!" என்று சொல்லிக்கொண்டே ஏமாற்றத்துடன் திரும்பினான் அவன்.

அவனுடைய ஏமாற்றம் அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது இவனுக்கு: கைகொட்டிச் சிரித்தான்.

என்ன அவமானம், என்ன அவமானம்! ஆத்திரம் தாங்கவில்லை சமர்த்துக்கு அடித்து நொறுக்கி விட்டது சப்பாணியை!

அவ்வளவுதான்; "பேபேபே, பேபேபே" என்று அலற ஆரம்பித்து விட்டது சப்பாணி.

அப்போதுதான் எனக்கும் தெரிந்தது, இது ஊமையென்று!

"அட பாவி, நீயும் ஊமையா?" என்று கேட்டான் அவன்.

அதற்கும் பதில் இல்லை இவனிடமிருந்து, "பேபேபே, பேபேபே" என்று அழுவதைத் தவிர! "அட பாவமே, உன்னையா நான் அடிச்சுட்டேன்?"

இதைச் சொல்லி வாய்கூட மூடவில்லை; அதற்குள் கண்களிலே நீர்முட்டிக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு-அப்படியே இவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவனும் அழ ஆரம்பித்துவிட்டான்!

நான் அழவில்லை-எனக்குத்தான் தெரியுமே, என் மனத்தை ஏமாற்ற!-'அது அவர்கள் வந்த வழி!' என்று ஒரே போடாகப் போட்டு அதை அடக்கிவிட்டு உள்ளே சென்றேன், அந்த வருடத்துத் தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட!