விந்தன் கதைகள் 2/கூலி வேண்டுமா, கூலி?
"டாக்ஸி! ஏ, டாக்ஸி!"
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் நின்று, அங்கே 'விர், விர்'ரென்று வருவதும் போவதுமாயிருந்த டாக்ஸிக்காரர்களைக் கை தட்டி அழைத்து அழைத்து அலுத்துப் போய்விட்டது அரசுக்கு.
தப்பித் தவறி ஓரிருவர் நின்றாலும் சும்மாவா நிற்கிறார்கள்? - 'எங்கே போக வேண்டும்?' என்று கேட்கிறார்கள். அடுத்தாற் போலிருக்கும் ஏதாவது ஓர் ஓட்டலின் பெயரைச் சொன்னால் அந்தக் கிராக்கி 'சப்'பென்று போய்விடுகிறது. அவர்களுக்கு, மினிமம் சார்ஜ் எட்டணா என்று வைத்தாலும் வைத்தான், ரிக்ஷாக்காரனின் பிழைப்பைவிடக் கேவலமாகிவிட்டது, டாக்ஸிக்காரனின் பிழைப்பு! பெட்டி, படுக்கையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு நடையைக் கட்ட வேண்டிய பயல்களெல்லாம்கூட 'டாக்ஸி! ஏ, டாக்ஸி!' என்று கத்த ஆரம்பித்து விடுகிறார்கள்!' என்று முணுமுணுத்துக்கொண்டே போய்விடுகிறார்கள்.
என்ன செய்வான், அரசு? - இருபத்தோராவது தடவையாக எழும்பூர் ஸ்டேஷன் கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் - மணி ஒன்பது!
'இண்டர்வியூ'க்காகத் தன்னை அழைத்திருப்பவர்கள் காலை பதினோரு மணிக்கல்லவா, வந்து தங்களைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்? மணி இப்போதே ஒன்பது என்றால் எப்போது ஓட்டலுக்குப் போய்ச் சேருவது? எப்போது குளிப்பது? எப்போது சாப்பிடுவது? எப்போது போய் அவர்களைப் பார்ப்பது?
இந்தக் காலத்தில் வேலை கிடைப்பது 'குதிரைக் கொம்பா' யிருக்கிறதென்றால், அதற்கான பேட்டி கிடைப்பது முயற் கொம்பாகவல்லவா இருக்கிறது? அந்த முயற் கொம்புக்கே இந்தப் பாடு என்றால், குதிரைக் கொம்புக்கு இன்னும் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ?
டாக்ஸிக்காரர்கள் சொல்வதுபோல நடையைக் கட்டி விட்டால் என்ன? - கட்டிவிடலாம்தான்; ஆனால் ரிக்ஷாக்காரனுக்கும் டாக்ஸிக்காரனுக்கும் இடையே நின்று ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் அந்த எட்டணா அந்தஸ்து, தனக்கும் தன் சமூகத்திற்கும் இடையேயுமல்லவா நின்று தொலைக்கிறது?அதனாலென்ன, இது அயலூர்தானே? இங்கே யார் தன்னைக் கவனிக்கப் போகிறார்கள்? - படுக்கையைத் தூக்கித் தோளின்மேல் வைத்துக்கொண்டு, பெட்டியை எடுத்தான் நடக்க!
இரண்டடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம்-இந்தக் கால்கள் ஏன் இப்படிப் பின்னுகின்றன?- தோள்தான் கனக்கிறது, படுக்கையைச் சுமப்பதால்; கைதான் வலிக்கிறது, பெட்டி தன்னை இழுப்பதால் - இந்தக் கால்கள் எதைச் சுமக்கின்றன? ஏன் இப்படிப் பின்னுகின்றன?
அதைப் பற்றி யோசிக்கும் அளவுக்குக்கூட அவனை விடவில்லை, அவனுடைய கால்கள் - ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ‘நடந்தா போகப் போகிறாய், நடந்து!' என்று சொல்லாமல் சொல்லி அவனைக் கீழே தள்ளிவிட்டுச் சிரிக்காமல் சிரித்தன!
"நல்ல யோசனைதான், சாமி! பெட்டி, படுக்கையை மேலே போட்டுக்கொண்டு விழாமல், கீழே போட்டுவிட்டு விழுந்தீர்களே? நல்ல யோசனைதான், சாமி!" என்று அவனைப் பாராட்டினான் ஒரு ரிஷாவாலா.
"இல்லேன்னா, சாமியின் மூஞ்சி சைனாக்காரன் மூஞ்சியாப் போயிருக்காதா?" என்றான் இன்னொரு ரிஷாவாலா.
"விழவே விழுந்தாரு; அந்தப் பிள்ளையார் கோயில் பக்கமாப் பார்த்து விழுந்திருக்கக் கூடாதா? போற வழிக்காச்சும் புண்ணியம் கிட்டியிருக்கும்!" என்றான் அவன்.
"இப்போ மட்டும் என்னவாம்? எழுந்ததும் மூணு சுத்துச் சுத்தி, மூணு குட்டுக் குட்டிகிட்டாப் போச்சு!" என்றான் இவன்.
'பழி தீர்த்துக் கொள்கிறார்கள்; தங்களைக் கூப்பிட வில்லை என்பதற்காக இவர்கள் தன்னைக் கேலி செய்து பழி தீர்த்துக் கொள்கிறார்கள்!' என்று முனகிக் கொண்டே எழுந்தான் அரசு.
பேசாமல் இவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் என்ன? - அதற்கும் குறுக்கே நின்றது மனிதாபிமானம்
என்ன மனிதாபிமானம் வேண்டிக் கிடக்கிறது, இதற்கு மட்டும்? ஒருவேளை உணவுக்குக் கூட வழியின்றி எத்தனையோ பேர் பட்டினியாயிருக்க, தான் மட்டும் நாள் தவறாமல் நாலு வேளையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வில்லையா? அப்போது எங்கே போய் ஒளிந்து கொள்கிறது, இந்த மனிதாபிமானம்?பார்க்கப் போனால், அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இருப்பதுதானா மனிதாபிமானம்? வேலை கொடுப்பது மனிதாபிமானம் இல்லையா?
ஏன் இந்தக் குழப்பம்?-இவர்களில் ஒருவனைப் பிடிப்பதற்குப் பதிலாக யாராவது ஒரு ஸைக்கின் ரிக்ஷாக்காரனைப் பிடித்துக்கொண்டு விட்டால்?- தேவைக்குத் தேவையும் தீரும்; மனிதாபிமானத்துக்கு மனிதாபிமானமும் பிழைக்கும்!
சுற்று முற்றும் பார்த்தான் அரசு; குறிப்பறிந்து ஸைக்கிள் ரிக்ஷாக்காரன் ஒருவன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
"ஹால்ஸ் ரோடுக்கு வருகிறாயா?"
"இந்த மூலையிலா, அந்தக் கடைசியிலா?"
"இந்த மூலையிலேதான்!"
"ஒரு ரூவா கொடுப்பியா?"
"பக்கத்தில்தானே இருக்கிறது, அதற்குப் போய் ஒரு ரூபா கேட்கிறாயே?"
"பக்கத்தில் உன் பெண்டாட்டிதான் இருப்பா; ஹால்ஸ் ரோடு இருக்காது - போய்யா, போ!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.
மேலே என்ன. செய்வதென்று தோன்றவில்லை, அரசுக்கு-இருபத்திரண்டாவது தடவையாக எழும்பூர் ஸ்டேஷன் கடிகாரத்தை எட்டிப் பார்த்தான்; மணி ஒன்பதரை!
இந்தச் சமயத்தில், 'எங்கள் உதவி உங்களுக்குத் தேவையா?' என்று கேட்டுக் கொண்டே யாராவது ஒரு போலீஸ்காரன் தனக்கு உதவ முன்வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
இப்படி நினைத்தானோ இல்லையோ, அவனுக்கு எதிர்த்தாற் போல் ஒரு போலீஸ்காரர் வந்தேவிட்டார்!
ஆனால்........
"அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாதே!" என்று அவனுடைய 'அதிகப் பிரசங்கி'த்தனத்துக்கு அப்பொழுதே ஓர் அணையிட்டு வைத்தான் அரசு.
★★★
தான் தங்க விரும்பிய ஓட்டலை அடைந்ததும் அரசு நாலணாவை எடுத்து, "இந்தா, இதை வைத்துக்கொள்!" என்றான், பெருமாளிடம்.
அவ்வளவுதான்; "வெச்சிக்கோ , நீயே வெச்சிக்கோ!" என்று எடுக்கும்போதே ஏக வசனத்தில் ஆரம்பித்தான் பெருமாள்.
"ரொம்ப தாங்ஸ்!" என்று சொல்லிக்கொண்டே, எடுத்த நாலணாவை மறுபடியும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான் அரசு.
"இதுக்குத்தான் கோட்டு, கீட்டெல்லாம் போட்டு கிட்டு வந்தியா?" என்று பெருமாள் தன் 'விஸ்வரூபத்தை எடுத்தான்.
"எதற்கு?" என்று கேட்டான் அரசு.
"எதுக்கா, கூலிக்காரனை ஏமாத்தறதுக்கு!"
"நானா உன்னை ஏமாற்றப் பார்க்கிறேன்? நீதான் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்!"
"ஐயோ பாவம், பச்சைக் கொழந்தை இவரு! வாயிலே வெரலை வெச்சாக்கூடக் கடிக்கத் தெரியாது போல இருக்கு? வேணும்னா வெச்சிப் பார்க்கட்டுமா?" என்று பெருமாள் அவன் வாய்க்குள் விரலை வைக்கப் போனான்.
"ஏய், எட்டி நில்!" என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளினான் அரசு.
பெருமாள் தட்டுத் தடுமாறி நின்று, "வ!!, வஸ்தாத்! ஓட்டல்லே கூட்டம், பக்கத்திலே போனு எல்லாம் இரும் தன்னு பார்க்கிறியா? நம்மகிட்ட அதெல்லாம் ஒண்ணும் நடக்காது, நைனா வர்றியா, ஒண்டிக்கு ஒண்டி இடிச்சுக்கு வோம்?" என்று தன் தோள்களை மாறி மாறித் தட்டிக் காட்டினான்.
"போடா, பொறுக்கி! பட்டணத்துக்கு என்னைப் புதியவன் என்று நினைத்துக்கொண்டு விட்டாயா? இதற்கு முன்னாலேயே உன்னைப்போல் எத்தனையோ பொறுக்கிகளை நான் இங்கே பார்த்திருக்கிறேன்!"
"பார்த்திருப்பே, பார்த்திருப்பே! பார்க்காமலா நாலணா பிச்சைக் காசை எடுத்து எங்கிட்டே... குடுக்க வர்றே?"
கூலி போதாது என்றால் கேள்; கொடுக்கிறேன்; அதை விட்டு விட்டு ஏன் மரியாதையில்லாமல் பேசுகிறாய்?" என்று சொல்லிக் கொண்டே எட்டணாவை எடுத்து அவனுக்கு முன்னால் விட்டெறிந்தான் அரசு.
"யாருக்கு வேணும், இந்த எட்டணா? டேசன் படிக்கட்டு மேலே இருக்கிற பொட்டியைத் தூக்கி டாக்ஸியிலே வெச்சா, ஐயாவுக்குக் கூலி எட்டணான்னு தெரியுமா, உனக்கு? தெரிஞ்சா, இம்முட்டுத் தூரம் இஸ்துகிட்டு வந்து நீ ஏன் எட்டணாவை எடுத்துக் குடுக்கப் போறே? மரியாதையா ஒரு ரூபாயைக் கீழே வையா!"
"வைக்கவில்லை யென்றால்?"
"கக்க வெச்சி வாங்குவேன்!"
இந்தச் சமயத்தில், "அவனோடு என்ன ஸார் பேச்சு, பேசாமல் 'அண்ட்ர'டுக்குப் போன் பண்ணுவதை விட்டுட்டு?" என்று சொல்லிக் கொண்டே 'டெலிபோன் டய'லில் கையை வைத்தார் ஓட்டல் முதலாளி.
அவ்வளவுதான்; கீழே கிடந்த, எட்டணாவை எடுத்துக் காதில் செருகிக் கொண்டு, "போனா பண்ணப் போறீங்க, போன்? நான் உங்களைப் பார்த்துக்கிற இடத்திலே பார்த்துக்கிறேன்!" என்று கருவிக்கொண்டே. நகர்ந்தான் பெருமாள்.
★★★
அன்று மாலை; ‘சென்னைக்கு வரவே வந்தோம், ஏதாவது ஒரு சினிமாவுக்கும்தான் போய் விட்டுப் போவோமே?' என்று நினைத்து, ஒரு சினிமா தியேட்டரை முற்றுகையிட்டான் அரசு. அங்கே முதல் இரண்டு வகுப்புகளுக்குரிய டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டு விட்டு இருந்ததால், மூன்றாம் வகுப்புக்குரிய டிக்கெட்டுக்காக நின்று கொண்டிருந்த நீண்ட கியூ'வில் தானும் ஒருவனாக நின்றான் அரசு.
ஆயிற்று; தனக்கு முன்னால் இருப்பவர்கள் இன்னும் எட்டே பேர்தான். ஒன்பதாவதாகத் தான்தான் வாங்க வேண்டும்........
கடைசி நிமிஷத்தில், 'டிக்கெட் இல்லை' என்று கையை விரித்துவிடுவானோ? எதற்கும் காசை எடுத்துக் கையில் வைத்துக்கொள்வோம்.........
இப்படி நினைத்ததும் சட்டைப் பைக்குள் கையை விட்டான், பர்ஸை எடுக்க! ஆனால், என்ன ஏமாற்றம்? காணவில்லை ; பர்ஸைக் காணவேயில்லை!
அட, பாவிகளா! நல்ல சமயத்தில் கழுத்தை அறுத்து விட்டீர்களே? சினிமா பார்க்காவிட்டால் போகிறது; ஓட்டல் காரனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு ஊருக்காவது போய்ச் சேரவேண்டாமா, நான்?
'அந்தக் கவலை அவர்களுக்கு ஏன் இருக்கப் போகிறது?' என்று முணுமுணுத்துக் கொண்டே 'கியூ'வை விட்டு விலகி நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான் அரசு.
"அங்கே பார்க்காதே; இங்கே பார்!" என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அரசு திரும்பிப் பார்த்தான்; பெருமாள் மீசையை முறுக்கி விட்டபடி அவனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான்.
"அட, நீயுமா சினிமாவுக்கு வந்திருக்கிறாய்?" என்றான் அரசு, வியப்புடன்.
"ஏன், வரக்கூடாதோ?" என்றான் பெருமாள், இடுப்பின்மேல் கையை வைத்துக்கொண்டு.
"வரக்கூடாது என்று நான் சொல்லவில்லையே?"
"நல்ல ஆளய்யா, நீ! ஏமாந்து எண்பது ரூபா கோட்டை விட்டாலும் விடுவே; ஏமாறாம எட்டணாக்கூடக் குடுக்கமாட்டேன்னு சொல்லிட்டியே?"
"அதற்குள் எண்ணிக்கூடப் பார்த்துவிட்டாயா, என்ன?"
"ஆத்திலே போட்டாலும் அளந்து போடுன்னு பெரியவங்க சொல்லி யிருக்காங்களே ஐயா!"
"என்னமோ, அளந்து பார்த்ததோடு நின்றிருந்தால் சரி!"
"நிற்காம ஓடியா போயிட்டேன்? இந்தா, உன் பர்ஸ்! இனிமேலாவது கூலிக்காரர்கள் கேட்பதைக் கொடுத்து விடு; கொடுக்காமல் கோட்டை விடாதே!" என்று அவனை எச்சரித்து, அவனிடமிருந்து எடுத்த பர்ஸை அவனிடமே திருப்பிக் கொடுக்க வந்தான் பெருமாள்.
"தேவலையே, ரொம்ப நல்லவனா யிருக்கிறாயே?" என்று சொல்லிக்கொண்டே பர்ஸுடன் அவனுடைய கையைப் பற்றிப் பக்கத்திலிருந்த போலீஸ்காரரிடம் ஒப்படைத்து விட்டு, “இனிமேலாவது பிரயாணிகள் கொடுப்பதை வாங்கிக்கொள்; 'பிக் பாக்கெட்' அடிக்காதே!' என்று பரஸ்பரம் அவனை எச்சரித்து விட்டுச் சென்றான் அரசு.