விந்தன் கதைகள் 2/சண்டையும் சமாதானமும்


சண்டையும் சமாதானமும்

ஆம், அந்த 'முடிவில்லாத சண்டை' நடந்து கொண்டே தான் இருந்தது!

அவை இரண்டில் ஒன்று அழியும்வரை அந்தச் சண்டை தொடர்ந்து நடந்தாலும் - நடக்கட்டும்; நடக்கட்டும்; அவற்றின் அழிவைப் பார்த்தபிறகாவது மற்ற ஜீவராசிகளுக்குப் பலாத்காரத்தில் உள்ள நம்பிக்கை தொலையட்டும்!

நல்ல வேளை! நானும் ரங்கனைப் பின்பற்றியிருந்தால்?

சரி, கதையை முழுவதும்தான் கேளுங்களேன்!

நாங்கள் வசித்து வந்த மாந்தோப்பில் எங்களைப் போல் எத்தனையோ கிளிகள் வசித்து வந்தன. நானும் ரங்காவும் அடுத்தடுத்து இருந்த மரப் பொந்துகளில் வசித்து வந்தோம். எங்கள் தோப்புக்கு இரண்டு மூன்று மைல்களுக்கு அப்பால் ஒரு வெற்றிலைத் தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலிக்காக அகத்திச் செடிகள் வைக்கப்பட்டிருக்கும். பொழுது விடிந்ததும் எங்களையெல்லாம் அங்கு தான் பார்க்கலாம்; ஆடலும் பாடலுமாக ஒரே ஆனந்தத்தில் மூழ்கியிருப்போம்.

அந்தத் தோட்டத்தின் பக்கமாக எத்தனையோபேர்போவார்கள், வருவார்கள், அவர்களில் எத்தனை பேர் எங்கள் ஆடலிலும் பாடலிலும் தங்கள் மனதைப் பறிகொடுத்து நிற்பார்கள் என்கிறீர்கள்? - ஒரிருவர்தான்!

அந்த ஒரிருவரைப் போல் எல்லோருமே அழகை அனுபவிப்பவர்களாயிருந்தால் இந்த உலகம் இப்படியா இருக்கும்? நன்றாய்ச் சொன்னேன்! - அழகை அனுபவிக்காமலிருக் கிறார்களே, அவர்களால் மட்டுமா இந்த உலகத்தில் அமைதிக்குப் பங்கம் விளைகிறது? அழகை அனுபவிக்கிறார்களே, அவர்கள் கூடத்தான் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறார்கள்!

அது கிடக்கட்டும்; ஒரு நாள் வழக்கம் போல் வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்ற நாங்கள் இருவரும் உடனே வீடு திரும்பவில்லை. அதற்குக் காரணம் ரங்கா தான். அன்று என்னமோ அது இருந்தாற் போலிருந்து, "என்ன, சுகப்பிரம்மரே! இந்த வெற்றிலைத் தோட்டமும் அந்த மாந்தோப்பும் சேர்ந்ததுதானா உலகம்?' என்று கேலியாகக் கேட்டுவிட்டுச் சிரித்தது.

"ஏன், வேறு எங்கே போகவேண்டுமென்கிறாய்? உண்பது இங்கே, உறங்குவது அங்கே! - இவை போதாதா நமக்கு?" என்றேன்.

"ஏது, வரவர நீயும் மனிதர்களைப் போலாகி விட்டாயே!”

"உனக்கு என்ன தெரியும்? அவர்களில் எத்தனையோ பேருக்கு உண்பதற்கு உணவில்லை; உறங்குவதற்கு இடமில்லை, அப்படிப்பட்டவர்களை வேறு என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாய்?"

"சரிசரி, அதெல்லாம் நாகரிக உலகத்துச் சமாசாரம் - நமக்கு வேண்டாம், நீ வா இப்படி எங்கேயாவது போய்ச் சுற்றிவிட்டு வரலாம்" என்று சொல்லிச் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு ரங்கா தன் குஷியை வெளியிட்டது.

அதன் குஷியைப் பார்த்ததும் எனக்கும் என்னையறியாமல் குஷி பிறந்து விட்டது. அவ்வளவுதான்; இருவரும் ஸ்டேஷனுக்குச் செல்லவில்லை; 'க்யூ'வில் நிற்கவில்லை; டிக்கெட் வாங்கவில்லை; ரயிலிலோ விமானத்திலோ சவாரி செய்யவில்லை; சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு வான வீதியை நோக்கி 'ஜம்'மென்று கிளம்பினோம். பறந்தோம், பறந்தோம், பறந்தோம், அப்படிப் பறந்தோம், போனோம், போனோம், போனோம், அப்படிப் போனோம் - நாட்டையும் நகரத்தையும் கடந்து, காட்டையும் கடலையும் கடந்து, மலையையும் மடுவையும் கடந்து, நதியையும் புனலையும் கடந்து போய்க்கொண்டே இருந்தோம் ஆமாம், நிற்கவே யில்லை!

கடைசியில் எங்கோ எங்களுக்கு அலுத்துப் போயிற்றோ? அங்கே உட்கார்ந்தோம். எங்களைத் தொடர்ந்து வர முடியாமல் சூரியன் வெட்கிப் போய் மலைத் தொடரில் ஒளிந்து கொள்ள ஓட்டமாய் ஓடினான். அவனைப் பார்த்துச்சிரித்து வாய் மூடவில்லை; ஆனானப்பட்ட சூரியனையே வெற்றி கொண்ட எங்களை மிரட்டுவதற்காகப் பேதை இருள் கவ்வி வந்தது. அதன் மூஞ்சையும் முகரக் கட்டையையும் பார்த்துக் கொண்டிருக்க இங்கே யாருக்குப் பிடிக்கிறது? - "என்ன வீட்டுக்குத் திரும்பி விடுவோமா?" என்றேன், ரங்காவை நோக்கி.

"இனிமேல் எப்படித் திரும்புவது?" - என்று கேட்டது ரங்கா,

"திரும்பாமல் என்ன செய்வதாம்?" "இங்கேயே எங்கேயாவது தங்கி இரவைக் கழித்து விட்டுப் பொழுது விடிந்ததும் தான் போக வேண்டும்"

"ரொம்ப அழகுதான்!" - இப்படிச் சொன்னேனோ இல்லையோ, பாழும் மழை 'சடசட'வென்று கொட்ட ஆரம்பித்து விட்டது, அதைப் பார்த்த இருளோ 'பளிச் பளிச்' என்று மின்னி எங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது.

எப்படி இருக்கும் எங்களுக்கு? - இருந்த குஷியெல்லாம் மறைந்து இருவரும் செய்வது இன்னதென்றறியாமல் விழித்தோம்.

"இப்படியே விழித்துக் கொண்டிருந்தால் மழையில் நனைந்து சாக வேண்டியது தான் - வா, போவோம்!" என்று சொல்லி, ரங்கா அருகிலிருந்த ஒரு சோலையை நோக்கிப் பறந்தது. நானும் அதைப் பின்தொடர்ந்து சென்றேன்.

அந்தச் சோலையிலிருந்த மரங்கள் ஒவ்வொன்றையும் அணுகி, ஏதாவது பொந்து இருக்கிறதா என்று கூர்ந்து பார்த்துக் கொண்டே போனோம். அப்பாடா! எத்தனையோ மரங்களைப் பார்த்த பிறகு அடுத்தடுத்து இருந்த இரு பொந்துகள் இருந்தன. எங்களுடைய சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்?" உடனே ஆளுக்கொரு பொந்தில் புகுந்து கொண்டோம்.

"இனி மழையும் இருளும் நம்மை என்ன செய்யும்?" என்று நாங்கள் கவலை யற்றிருந்தபோது, எங்கிருந்தோ இரண்டு கிளிகள் நாங்கள் இருந்த பொந்துகளைத் தேடி வந்து சேர்ந்தன. விசாரித்துப் பார்த்ததில், பொந்துகள் இரண்டும் அந்தக் கிளிகளினுடையவை என்று தெரிந்தது!

அப்புறம் பேச்சுக்கு என்ன இருக்கிறது? நான் பேசாமல் வெளியே வந்து அந்தப் பொந்துக்கு எதிர்த்தாற் போலிருந்த ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நிமிஷம் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே நான் இருந்த பொந்துக்குள் ஒரு கிளி சென்று விட்டது.

இன்னொரு கிளிக்குத்தான் ரங்கா இடம் கொடுக்கவில்லை. அப்படிக் கொடுப்பது 'பயங்கொள்ளித்தனம்' என்று நினைத்து, அது 'பலப் பரீட்சை' செய்ய ஆரம்பித்தது.

“மரியாதையாக வெளியே வந்து விடுகிறாயா, இல்லையா?” என்று கேட்டது வெளியே இருந்த கிளி.

"முடியாது, உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன்!” என்றது ரங்கா.

அவ்வளவுதான்; வெளியே யிருந்த கிளி பொறுமை இழந்து உள்ளே நுழைந்தது. அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? இரண்டும் ஒன்றை யொன்று அலகால் குத்திக் கொள்வதும் சிறகால் அடித்துக் கொள்வதுமாக இருந்தன. பலவந்தமாக வெளியே தள்ளப்பட்ட ரங்கா, அந்தக் கிளியின் எதிர்ப்பை மீறி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தது. எனக்கோ அதனுடைய அதர்மக் காட்சியில் சேர மனமில்லை, ஆகவே, துணைக்கு வரவில்லை என்பதற்காக அது என்னைத் திட்டியதையும் நான் பொருட்படுத்தாமல் நான் இருந்த இடத்திலேயே இருந்தேன்!

போராட்டம் நீடித்தது!

அந்த நீடித்த போராட்டத்தை நானும் நீடித்த மழையில் நனைந்த வண்ணம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் சிறகுகளெல்லாம் நனைந்து உடம்பு 'வெடவெட' வென்று நடுங்க ஆரம்பித்து விட்டது. அந்த நடுக்கத்தில் கிளையை விட்டுத் தவறிக் கீழே விழுந்து விடுவோமோ என்று கூட நான் பயந்து போனேன். ஆயினும் என்ன செய்வது? - ரங்காவைப் போல் நானும் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதா?

"வேண்டாம்; நடப்பது நடக்கட்டும்" என்று நான் பேசாமலிருந்தேன். எனக்கு எதிர்த்தாற் போல் பொந்துக்குள் இருந்த கிளியோ, அடிக்கடி வெளியே தலையை நீட்டி என்னை பரிதாபத்துடன் பார்ப்பதும், பதவிசு போல் உள்ளே சென்று விடுவதுமாக இருந்தது.

இப்படியே இருப்பதற்கு அதனுடைய அந்தராத்மா இடம் கொடுக்கவில்லையோ என்னமோ, சிறிது நேரத்திற்கெல்லாம் அது தலையை பலமாக ஆட்டி என்னை 'வா, வா!" என்று அழைத்தது. நான் அதன் அருகே சென்றேன். "இப்படி மழையில் நனைந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? உள்ளே வந்துவிடு!" என்று அது கரிசனத்துடன் சொல்லிற்று.

என்னால் நம்ப முடியவில்லை. "நிஜமாகவா சொல்கிறாய்?" என்று கேட்டேன்.

"ஆமாம், நிஜமாகத்தான்" என்றது அது அன்புடன்.

"வந்தனம்" என்று சொல்லிவிட்டு, அந்தப் பொந்துக்குள் நுழைந்தேன். பிறகு உள்ளே யிருந்தபடி நனைந்த சிறகுகளையெல்லாம் அலகால் கோதிவிட ஆரம்பித்தேன்.

இந்தச் 'சகிக்க முடியாத காட்சி'யைக் கண்ட ரங்கா, ஆத்திரத்துடன் ஓடோடியும் வந்து என்னையும் ஒரு கைபார்த்துவிட்டுச் சென்றது. "எங்கே சென்றதோ?" என்று எட்டிப் பார்த்தேன். சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது!

சிறிது நேரத்துக்கெல்லாம் மழை நின்றது; ஆனால் சண்டை நிற்கவில்லை!

பொழுது விடிந்ததும் இரவு தங்குவதற்கு இடம் கொடுத்த கிளியிடம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

என்ன விந்தை இது! - அப்போதும் சண்டை ஓயவில்லை.

"விட்டேனா, பார்!" "விட்டேனா, பார்!" என்று இரண்டும் விடாமல் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன.

"ரங்கா போதும், சண்டையை நிறுத்து! பகையைப் பகையால் வெல்வது முடியாத காரியம்; அப்படியே வென்றாலும் அந்த வெற்றி நீடித்திருக்காது. இந்த வீணான முயற்சியில் ஏன் உன்னுடைய அருமையான காலத்தைக் கழிக்கிறாய்?" வீட்டுக்குப் போவோம், வா!" என்றேன்.

"போடா, உன்னைப்போல் என்னையும் கோழை என்று நினைத்துக் கொண்டாயா?" என்று ரங்கா சீறி விழுந்தது.

"சரி, நீ வீரனாகவே இரு, அப்பா!" என்று சொல்லிவிட்டு நான் வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.

அந்த 'முடிவில்லாத சண்டை' தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது.

ஆனால் அந்த 'வீர'னின் வாழ்க்கையிலோ இன்று வரை அமைதி நிலவவில்லை; 'கோழை'யின் வாழ்க்கையிலோ பரிபூரண அமைதி நிலவியது.