விந்தன் கதைகள் 2/பணமே அன்புக்கும் அதுவே ஆதாரம்

பணமே! அன்புக்கும் அதுவே ஆதாரம்


"அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே!"

என்று நம் அமரக வி பாரதியார் பாடியிருக்கிறார் அல்லவா? - அந்த அமர வாக்கை யார் காப்பாற்றினாலும் காப்பாற்றாவிட்டாலும், நாமாவது காப்பாற்றுவோமே என்ற திடசங்கல்பம் போலிருக்கிறது அவர்களுக்கு. இல்லாவிட்டால் ஆற்றங்கரை யோரத்தை ஒட்டினாற்போல் இருக்கும் அந்தப் பள்ளத்தாக்கில் - அடிக்கடி பெருகி வரும் வெள்ளம், நகரத்தை அழகுபடுத்த வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் அவர்களுடைய குடிசைகளைப் பிய்த்து எறிந்து, அவர்களைப் பாடாய்ப் படுத்த வரும் நகராண்மைக் கழகத்தார், அடுத்தாற்போல் இருக்கும் சுடுகாட்டில் எரியும் பிணங்களிலிருந்து வரும் துர்நாற்றம், அந்தச் சுடுகாட்டுக்கு எதிர்த்தாற்போல் அமைந்திருக்கும் நாய்களின் கொலைக்களத்திலிருந்து கிளம்பும் அலறல், ஓலம்-இவை எதற்கும் அஞ்சாமல் தங்கள் அருமை மனைவிமார், ஆசைக் குழந்தைகள் ஆகியவர்களோடு அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வருவார்களா?

என்ன சொன்னேன், 'வாழ்ந்து வருகிறார்கள்' என்றா சொன்னேன்?-இல்லை, அவர்கள் வாழ்ந்து வரவில்லை - தினசரி இறப்பதும் பிறப்பதுமாயிருந்து வருகிறார்கள்- அதிர்ஷ்டசாலிகள் ஐயா, அதிர்ஷ்டசாலிகள்! நமக்கெல்லாம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை சாவு வந்தால், அவர்களுக்குத் தினம் தினமல்லவா வந்துகொண்டிருக்கிறது!

நகரத்தின் அழகையும், நாகரிகத்தையும் அந்த 'நித்திய கண்ட'ங்கள் காப்பாற்றாவிட்டால் என்ன, அவற்றைக் காப்பாற்றுவதற்கென்றே வழிவழியாக வந்து கொண்டிருக்கும் சிலருடைய பங்களாக்கள் ஆற்றங்கரையின்மேல் அழகான பூங்காக்களுக்கு நடுவே இருந்தன. அந்தப் பங்களாக்களிலுள்ள குழந்தைகள் தங்களுடைய விளையாட்டுச் சாமான்களுடன் ஆற்றங்கரைக்கு விளையாட வரும்போதெல்லாம் பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளை அதிசயத்துடன் பார்க்கும்; அதே மாதிரி பள்ளத்தாக்கிலுள்ள குழந்தைகளும் பங்களாக்களிலுள்ள குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் வியப்பே உருவாய்த் தங்களை மறந்து நிற்கும்.

இரண்டும் இரு வேறு உலகங்கள், இரு வேறு துருவங்கள் அல்லவா?-ஒன்றை யொன்று சந்திப்பதே அபூர்வ நிகழ்ச்சிதானே?

ரு நாள் மாலை ஆயா ஒருத்தி ஓர் ஆண் குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்தாள். அதைப் பார்த்ததும் பள்ளத்தாக்கில் பிறந்த மேனியாய் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தைக்கு-ஆம், தன் மானத்தைத் தானே காத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றும் வயதை அடையும் வரை அதன் பெற்றோர் அதனுடைய வயிற்றைத் தவிர வேறொன்றையும் கவனிப்பதில்லை; கவனிக்க முடிவதும் இல்லை - என்ன தோன்றிற்றோ என்னமோ, "ச்சு, ஐயோ பாவம்" என்றது அனுதாபத்துடன்.

இதைக் கேட்டதும் வண்டியில் அமர்ந்திருந்த குழந்தை மட்டுமல்ல; அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த ஆயாவும் அதை அதிசயத்துடன் பார்த்தாள்.

"ஏன், பாட்டி! இவன் நொண்டியா, இவனால் நடக்க முடியாதா?"

பள்ளத்தாக்குக் குழந்தையின் அசட்டுத்தனமான கேள்வியைக் கேட்டுப் பங்களாக் குழந்தை சிரித்தது.

"ஏன் சிரிக்கிறாய்?"

"நானா நொண்டி இதோ பார்!" என்று வண்டியை விட்டுக் கீழே குதித்து டக், டக் என்று நடந்து காட்டியது அது.

"உன்னால் நடக்க முடியும்போது உனக்கு ஏன் வண்டி?" என்று கேட்டது இது.

"நடந்தால் கால் வலிக்கும் என்று என் அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்தார்!" என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டே, வண்டியிலிருந்த ஒரு சிறு சிதார் வாத்தியத்தை எடுத்து 'டொய்ங், டொய்ங்' என்று வாசித்துக் காட்டியது அது.

"இது?" என்று கேட்டது இது.

"இதுவும் என் அப்பா வாங்கிக் கொடுத்ததுதான்!"

"அதுவும் அப்பா வாங்கிக் கொடுத்தார்; இதுவும் அப்பா வாங்கிக் கொடுத்தார்-ஆச்சரியம் தாங்கவில்லை, வெந்த சோற்றைத் தவிர வேறொன்றையும் காணாத குச்சு வீட்டுக் குழந்தைக்கு; அவன் அணிந்திருந்த 'சூட், பூட்' ஆகியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டி, 'இது, இது?' என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த மச்சு வீட்டுக் குழந்தையோ எல்லாவற்றுக்கும் 'என் அப்பா வாங்கிக் கொடுத்தார், என் அப்பா வாங்கிக் கொடுத்தார்' என்ற பதிலையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தது.

கடைசியில், "உன்னுடைய அப்பா உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்?" என்று கேட்டது அது.

"எனக்கா வந்து ....... வந்து ........"

மேலே ஒன்றும் சொல்ல முடியவில்லை இதால்; விழித்தது.

அவன் மறுபடியும் சிரித்தான்.

வெட்கமாகப் போய்விட்டது இவளுக்கு. ஓடினாள்- 'ஒரு சிட்டிகை ஓசிப் பொடி கொடுக்க எந்தப் புண்ணியவானாவது இந்தப் பக்கம் வர மாட்டானா?' என்று வழி மேல் விழி வைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம்.

"தாத்தா, தாத்தா! என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தாத்தா?"

தாத்தாவின் காதில் இது விழவில்லை, அவருடைய கவனமெல்லாம் ஓசிப் பொடியின்மேலேயே இருந்ததால்!

அவரைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, "தாத்தா, தாத்தா! என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தாத்தா?" என்று மறுபடியும் கேட்டாள் அவள்.

"உன் தலை!" என்றார் தாத்தா மிக்க வெறுப்புடன்.

குழந்தைக்கு ஆனந்தம் தாங்கவில்லை; 'குதி, குதி' என்று குதித்துக் கொண்டே ஓடியது அவனிடம்.

"என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தெரியுமா? என் தலை!"

அவன் மீண்டும் சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறாய்?"

"உன் தலையை உனக்கு யாராலும் வாங்கிக் கொடுக்க முடியாது!"

இப்படிச் சொல்லிவிட்டானே பாவி, என்ன செய்வாள் பாவம்! - மீண்டும் ஓடினாள். 'அரைப்படி அரிசி யாராவது முறைக்கடனாகக் கொடுக்க மாட்டார்களா, அன்றைய இரவைக் கழித்துவிட மாட்டோமா?' என்ற கவலையோடு கையில் முறத்துடன் வீடு வீடாக நுழைந்து வந்து கொண்டிருந்த அம்மாவிடம்.

"அம்மா, அம்மா! அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், அம்மா?"

"அது என்ன வாங்கிக் கொடுத்தாரோ, எனக்குத் தெரியாது!"

உண்மையிலேயே தெரியாதுதானே?- எனவே அவள் நிற்கவில்லை; போய்க்கொண்டே இருந்தாள்.

"சொல்லு, அம்மா?"-அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது குழந்தை.

"விளக்கு வைக்கிற நேரமாச்சு! அப்பா பசியோடு வருவார்; விடு சனியனே, விடு!"

"ஊஹும், விடமாட்டேன்; சொன்னால்தான் விடுவேன்!"

"விடப் போகிறாயா, இல்லையா?" - கோபா வேசத்துடன் இரைந்தாள் தாய்.

"போம்மா, சொல்லும்மான்னா!" கொஞ்சலுடன் கெஞ்சியது சேய்.

"சொன்னா கேட்கமாட்டே? போன்னா போ!" என்று குழந்தையைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி, அதன் முதுகில் 'பளார், பளார்' என்று அறைந்தாள் அவள்.

குச்சு வீட்டுக் குழந்தை ‘கோ' வென்று அழுதது.

"இது உன் அம்மா உனக்கு வாங்கிக் கொடுத்ததா, வாங்காமல் கொடுத்ததா?" என்று அதைக் குறும்புடன் கேட்டுவிட்டு, 'கலகல' வென்று நகைத்தது மச்சு வீட்டுக் குழந்தை.

இந்தச் சமயத்தில் கல் உடைத்த கையை ஆற்று நீரில் கழுவிக் கொண்டு, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து உதறித் தோளின் மேல் போட்டுக்கொண்டு அந்த வழியாக வந்த குச்சு வீட்டுக் குழந்தையின் அப்பன், "என்ன, அம்மா! ஏன் அழறே?" என்று கேட்டான். அழுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தும் ஒரு காரணமும் இல்லாதது போல!

"போப்பா! நீ எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தேன்னு கேட்டால், அம்மா சொல்லமாட்டேங்குதே!"

"நானா, உனக்கா ! வந்து .... வந்து ......."

அவனாலும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை; விழித்தான்!

"ஏம்ப்பா , அது உனக்கும் தெரியாதா?" என்றது குழந்தை, ஏமாற்றத்துடன்.

"ஏம்மா தெரியாது? இதோ, என் அன்பு முத்தம்!- இதுதான் உனக்கு நான் வாங்கிக் கொடுத்தது, கொடுப்பது, கொடுக்கப் போவது எல்லாம்!" என்று கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே குழந்தையை வாரி எடுத்து முத்தப் போனான் அவன்.

"போப்பா! முத்தமாம் முத்தம்; யாருக்கு வேணும், உன் முத்தம்!" என்று அவனுடைய கையை உதறித் தள்ளிவிட்டு, விரைத்துக்கொண்டு நின்றது குழந்தை.

"அட, கடவுளே! அன்புக்கும் ஆதாரம் அது தானா?" என்றான் அவன், வானத்தை நோக்கி.

"ஆம், ஆம்!" என்பதுபோல் தன் தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்தது மச்சு வீட்டுக் குழந்தை!