விந்தன் கதைகள் 2/வணக்கத்துக்குரியவள்

வணக்கத்துக்குரியவள்


சொல்வதற்கு மட்டுமல்ல; நினைப்பதற்கே நெஞ்சம் ‘ரஸக் குறை'வாக இருந்தாலும், அந்தக் கடிதம் அவளை அன்று அப்படித்தான் நினைக்க வைத்தது.

'வாழ்க்கை, வாழ்க்கை' என்கிறார்களே, அந்த வாழ்க்கை என்பது தான் என்ன? அதில் உடலுறவைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாதா? அந்த உறவு இல்லாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமா? - வெட்கக் கேடு!

என்னதான் முற்போக்கு வாதியாக இருந்தாலும் அவர் இப்படியா எழுதுவார், தம் மனைவிக்கு?

மனைவிக்குத்தான் இப்படி எழுதினாரென்றால், மாற்றானுக்குமா அப்படி எழுத வேண்டும்? அவர் படித்த சில நாவல்கள், அவர் பார்த்த சில நாடகங்கள், சினிமாக்கள், அவர் கேட்ட சில பேச்சுக்கள் அவரை இவ்வாறு எழுதத் தூண்டியிருக்குமோ?

கடவுளே, அந்த அழகான கடிதத்தை எடுத்துக் கொண்டு அவன் இங்கே வந்து நின்றால், அவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

அவருக்கு அவன் எப்படியோ, என்னைப் பொறுத்தவரை அவன் ஏற்கனவே ஒருமாதிரி....

ஒருமுறை அவனை நான், "அண்ணா!" என்று அழைத்ததையே அவன் விரும்பவில்லை. "உன் கணவன் என் மனைவியை அண்ணி' என்று அழைக்கும்போது உனக்கு நான் எப்படி அண்ணாவாவேன்?" என்று கேட்டு 'இளி, இளி' என்று இளித்தான். அதற்கேற்றாற்போல் அவரும், "ஆமாம் அமுதா! அவர் எனக்கு அண்ணாவாயிருக்கும் போது உனக்கும் எப்படி அண்ணாவாக இருக்க முடியும்?" என்று அவனுக்கு எதிர்த்தாற் போலவே என்னைக் கேட்டு வைத்தார். அன்றிலிருந்து அவன் என்னிடம் 'மைத்துனி முறை' கொண்டாடுவது போதாதென்று, இவர் தாம் போகும்போது அவனையே எனக்குத் துணையாக வேறு வைத்துவிட்டுப் போய்விட்டார்! அவருடைய நம்பிக்கையைக் குலைக்கும் அளவுக்கு இன்றுவரை அவன் என்னிடம் அப்படியொன்றும் தவறாக நடந்துகொள்ளவில்லை யென்றாலும், அவனுடைய பார்வை - அவ்வளவு கூராகவா இருக்கும், அது?

அதைப்பற்றியும்தான் ஒரு நாள் அவரைக் கேட்டு வைத்தேன்! - அதற்கு அவர் "உனக்குத் தெரியாது அமுதா! அவர் ஒரு கவிஞர்; கவிஞர்கள் எதையும் எப்போதுமே அப்படித்தான் ஊருடுவிப் பார்ப்பார்கள்!" என்று சொல்லிவிடவில்லையா?

அது எப்படியாவது போகட்டும்; அவர் என்னை விட்டுப் பிரிந்த ஒரு வாரத்துக்கெல்லாம் அவன் ஒரு நாள் எனக்குப் பின்னால் வந்து என் தலையிலிருந்த ஒரு ஒற்றை ரோஜாவை எடுத்து முகர்ந்து பார்த்தானே, அதுவும் கவிஞர்களின் கைவரிசைகளில் ஒன்றாகத்தான் இருக்குமோ? - என்ன இழவோ, எனக்கு அப்படித் தோன்றவில்லை. வந்தது வரட்டுமென்று "என்ன இது?" என்று ஒரு சீறினேன்.

"ஒன்றுமில்லை; மலரைத்தான் தீண்டினேன்; உன்னைத் தீண்டவில்லையே!" என்றான் அவன் ஒரு விஷமச் சிரிப்புடன்.

"அதைச் செடியில் இருக்கும்போது தீண்டுங்கள்; என் தலையில் இருக்கும் போது தீண்ட வேண்டாம்" என்று நான் 'வெடுக்'கென்று சொன்னேனோ இல்லையோ, அன்றிலிருந்து அவன் இங்கே வருவதைக்கூட ஓரளவு குறைத்துக் கொண்டு விட்டான். அதற்கு முன்னால் “திறந்த வீட்டில் நாய் நுழைவது போல்' என்பார்களே, அந்த மாதிரியல்லவா அவன் இந்த வீட்டுக்குள் அடிக்கொருதரம் நுழைந்து கொண்டிருந்தான்!

என்னைக் கேட்டால் அவன் இங்கே வராமலேகூட இருந்து விடலாம் என்பேன்; அவருடைய அம்மா எனக்கு இங்கே துணையாயிருக்கும்போது அவன் வேறு எதற்காம்?

ஆனாலும் அந்த ‘மலர் பறி படல'த்தைப் பற்றி அவருக்கு நான் அப்போதே எழுதாமற் போய்விட்டது எவ்வளவு பெரிய தவறாகப் போய்விட்டது!

இப்போது அப்படியே நான் அந்த நிகழ்ச்சி பற்றி எழுதினால் என்ன? அதற்கும் அவர் 'உனக்குத் தெரியாது, அமுதா! அவர் ஒரு கவிஞர்; அப்படித்தான் செய்வார்!' என்று எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார்!

அது கிடக்கட்டும்; இன்று அவன் 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என்று நினைத்து, அந்தக் கடிதத்துடன் வந்து நின்றால், என்ன சொல்லி அவனை நான் இங்கிருந்து அனுப்பி வைப்பது?

சீசீ, மரணத்தறுவாயில் சிலர் வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவார்கள் என்கிறார்களே, அந்த உளறலில் ஒரு பகுதியாக இருக்குமோ , இது?....

இப்படி நினைத்ததும் அந்தக் கடிதத்தை எடுத்து மீண்டும் படித்துப் பார்த்தாள் இவள்.

தமக்குப் பிறகு தம்முடைய வீட்டையும் அந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருக்கும் வகையில் மாதந்தோறும் கிடைக்கும் ரூபாய் நூறையும் தம் மனைவி அனுபவிக்க வேண்டும்

ரொம்பச் சரி......

தமக்குக் குழந்தைகள் யாரும் இல்லாததால், தம் மனைவிக்குப் பிறகு தம்முடைய வீட்டை, இங்கே என்னைப் போன்றவர்களின் உயிரைக் காப்பதில் முனைந்திருக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தாருக்கு நன்கொடையாக வழங்கிவிட வேண்டும்.

ரொம்ப ரொம்பச்சரி...

ஊரிலிருக்கும் ரெண்டு ஏக்கர் நிலம் அம்மாவுக்கு, அதை வைத்துக் கொண்டு அவர்கள் தம் மருமகளிடமே இருந்தாலும் இருக்கலாம்; தம்பியின் வீட்டுக்குப் போனாலும் போகலாம்.

ரொம்ப ரொம்பச்சரி...

ஏறக்குறைய ஓர் உயிலைப் போல் இருக்கும் இந்தக் கடிதத்தை இத்துடன் முடித்திருக்கக் கூடாதோ, அவர்? இதற்குமேல்தான்......

கண்ணராவி, கண்ணராவி!

இதற்குத்தான் செய்து கொண்டிருந்த வேலையைக்கூட விட்டுவிட்டு, "சீனாக்காரனை விரட்டப் போகிறேன்!" என்று அவர் போனாரோ?

கடவுளே! அவருடைய நெற்றிப் பொட்டில் பாய்ந்த குண்டு என்னுடைய நெற்றிப் பொட்டிலும் பாய்ந்திருக்கக் கூடாதா? இப்படி எண்ணிக் கொண்டே அமுதா அடிமேல் அடி வைத்து சாளரத்தை நெருங்கியபோது "என்ன சேதி?" என்பதுபோல் நிலா அவளை எட்டிப் பார்த்தது.

முன்பொரு முறை இதே இடத்தில் இதே போன்றொரு நிலவு நாளில், "அமுதா! இந்த நிலவைப்போல் நானும் என்னுடைய வீரத்தால் உலகத்தில் என்றும் வாழ்வேன்!" என்று அவன் சூள் கொட்டிய விதம், நினைக்க நினைக்க அவள் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தது. "செத்த பிறகும் தாம் வாழவேண்டுமென்று அன்று நினைத்த புண்ணியாத்மாதான், உயிரோடிருக்கும்போதே இன்று நான் வாழக் கூடாது என்று நினைக்கிறார்! இல்லையென்றால் இந்தக் கடிதத்துக்கு வேறு என்ன அர்த்தமாம்? மோசம், ரொம்ப மோசம்! என்னைப்பற்றி இவ்வளவு இழிவான அபிப்பிராயமா கொண்டிருந்தார் அவர், இத்தனை நாளும்? வரட்டும்; கடவுள் அருளால் உடல் தேறி, உயிரும் தேறி அவர் இங்கே வரட்டும். அதுவரை இந்தக் கடிதம் என்னிடம் இருக்க வேண்டுமா, என்ன? வேண்டாம்; வேண்டவே வேண்டாம்!" என்று அவள் அதைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்து கொண்டிருந்தபோது "நல்ல காரியம் செய்தாய் அமுதா, நல்ல காரியம் செய்தாய்!" என்று தன்னை யாரோ பாராட்டுவதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். "என்னிடம் ஒன்று இருக்கும்போது, உன்னிடம் இன்னொன்று எதற்கு?" என்று சொல்லிக்கொண்டே கவிஞர் காஞ்சிவாணன் கடிதமும் கையுமாக அங்கே வந்து நின்றார்.

"நீங்களா!"

எதிர்பார்க்கப்பட்டவர்கள் என்றாலும் அந்த நேரத்தில் அவரை எதிர்பார்க்கவில்லையாதலால், இந்தக் கேள்வி வியப்பின் மிகுதியால் அவளுடைய இதய அந்தரங்கத்திலிருந்து எழுவது போல் மெல்ல எழுந்தது.

உண்மை இதுதான் என்றாலும், கவிஞர் அந்தக் கண் கொண்டு அதை நோக்கவில்லை; அதற்கு மாறாகத் தமக்கே உரித்தான கற்பனைக் கண் கொண்டு நோக்கினார். அந்த நோக்கில் அது அன்னாருக்கு வேறு விதமான பொருளைக் கொடுக்கவே, "ஆம் அமுதா, நானேதான்!" என்றார் அவரும் அதே தொனியில்.

ஆனால், அதில் வியப்புத் தொனிக்கவில்லை. அதற்குப் பதிலாக தம்மையும் அறியாமல் தன் நோய்க்குக் காரணமாகிவிட்ட அவள் - அன்றே, அந்தக் கணமே அதற்கு மருந்தாகவும் ஆகிவிடுவாள் என்ற அவசர உணர்வுதான் தொனித்தது.

அவர் கண்ட இந்த ‘வள்ளுவன் வழி'யை உணராத அவளோ, "இந்த நேரத்திலா?" என்றாள் மீண்டும்.

"ஆம்; அம்மாகூடத் தூங்கிவிட்டார்களே, பார்க்கவில்லையா நீ? வா, என் அருகில் வா! இத்தனை நாளும் அந்தப் பாழும் நிலவு உன்னைச் சுட்டதெல்லாம் போதும், வா, என் அருகே வா!"

அவருடைய வேகம் அவருக்கு; அந்த வேகத்தை உணராத அவளோ, "நிலவு என்னைச் சுடவில்லை; நீங்கள் தான் என்னைச் சுடுகிறீர்கள்!" என்றாள் நிதானமாக.

"நானா, உன்னை சுடுகிறேனா இருக்காதே? இந்த நேரத்தில் உனக்கு நான் இளைப்பாறும் ஓடையாக இனிய நிழல் தரும் தருவாகவல்லவா தோன்ற வேண்டும்?"

"தோன்றும் தோன்றும், அதெல்லாம் உங்கள் கவிதையில் தோன்றும்; வாழ்க்கையில் தோன்றாது!"

"வாழ்க்கை வேறு; கவிதை வேறா என்ன?"

"ஆம், உண்மை வேறு; கற்பனை வேறு என்று இருப்பது போல வாழ்க்கை வேறு, கவிதை வேறுதான்!"

"அதெல்லாம் இந்தக் கடிதத்துக்கு முன்னால் உண்மையா யிருக்கலாம். இப்போது கணவன் காட்டிய வழியில் நிற்கக்கடமைப்பட்டவள் நீ; நண்பன் காட்டிய வழியில் நிற்கக் கடமைப்பட்டவன் நான்!"

"இருக்கலாம்; ஆனால் தமக்குப் பிறகு அல்லவா தாம் காட்டிய வழியில் அவர் நம்மை நிற்கச் சொல்லியிருக்கிறார். அதற்குள் அவசரப்படுகிறீர்களே, நீங்கள்! கிணற்றுத் தண்ணியை வெள்ளமா கொண்டுபோய்விடப் போகிறது?"

"ஆஹா! இதைக் கொஞ்சம் இங்கிதமாக அப்போதே சொல்லியிருந்தால் எப்போதே நான் இந்த இடத்தை விட்டுப் போயிருப்பேனே?"

அவர் நழுவினார். அவளைக் கொஞ்சம் 'விட்டுப் பிடிக்கும்' நோக்கத்துடன். அவளோ, அவருடைய கையிலிலுள்ள கடிதத்தைத் தட்டிப் பறிக்கும் நோக்கத்துடன், "அந்தக் கடிதத்தை இப்படிக் கொடுங்கள்!" என்றாள். அதற்கென்றே தன் குரலை மீட்டிய வீணையாக்கி.

அவரா அதற்கெல்லாம் அசைந்து கொடுப்பார்? "இதில் மட்டும் அப்படி விசேஷமாக என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை; உனக்கு என்ன எழுதியிருக்கிறானோ, அதையேதான் இதிலும் எழுதியிருக்கிறானாம்" என்றார் அவர், தம் நடைக்குச் சற்றே வேகம் கொடுத்து.

ணவாழ்க்கையில் வெற்றி கண்டவர்களைவிட தோல்வி கண்டவர்கள் தான் உலகத்தில் அதிகமாக இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருவர் கவிஞர் காஞ்சிவாணன். 'முறைப் பெண்' என்பதற்காக அவர் பெற்றோர் 'காத்தாயி' என்னும் திருநாமம் பூண்ட. ஒரு கிராமத்துக் கட்டழகியை அவருடைய தலையிலே கட்டிவைக்க, அந்தக் கட்டழகி முதல் நாள் இரவு அவரைச்சந்தித்தபோது, "ஆமாம், நீங்கள் பாட்டு மட்டும்தான் பாடுவீர்களா? இல்லே, கூத்தும் ஆடுவீர்களா?" என்று 'பிரேக் மாஸ்டர்' போல் ஓர் உரசு உரசிக்கொண்டே நீட்டி முழக்கிக் கேட்க, "அட, கர்மமே! ஒரு கவிஞனுக்கா இப்படி ஓர் அழகி?" என்று அடுத்த நாளே, 'கூறாமல் சந்நியாசம் கொண்டு' அந்த கிராமத்தை விட்டே ஓடி வந்துவிட்டார் அவர்!

வந்த இடத்தில்தான் ஆனந்தனின் சிநேகம் மட்டுமல்ல; அவன் மனைவி அமுதாவின் சிநேகமும் அவருக்குக் கிடைத்தது. அவன் அதுவரை "அண்ணா, அண்ணா!" என்று வளைய வந்தாலும் அவள் மட்டும் "உங்களுடைய கவிதையைத்தான் என்னால் ரஸிக்கமுடிகிறது; உங்களை என்னால் ரஸிக்க முடியவில்லை!" என்று அவருக்கு நேராகவே சொல்லி விட்டாள். அதற்குக் காரணம், அந்த நாளிலேயே அவருக்குப் பிடிக்காமற்போன அந்தப் பார்வைதான்!

இந்த நிலையில்தான் கவிஞரின் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்டு விட்ட அவர் பெற்றோர், அவருடைய மனைவியை அழைத்துக் கொண்டு வந்து அவரிடம் விட, அவளைக் கண்டதும் ரவி வர்மா படத்தில் மேனகையுடன் காட்சியளிக்கும் விசுவாமித்திரரைப் போல் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்க, "இங்கே பாருங்கள், இனிமேல் நீங்கள் கூத்தாட வேண்டாம்; பாட்டு மட்டும் பாடுங்கள், போதும்!" என்று கவிஞரது இல்லத்தரசி அவரைப் பிடித்து இழுக்க, "ஐயோ அண்ணி அவர் கூத்தாடி இல்லை; கவிஞர் அண்ணி கவிஞர்!" என்று ஆனந்தன் சொல்ல, அந்த வீடே சிரிப்பால் கலகலத்தது.

ஒன்றும் புரியாத காத்தாயி, "கவிஞரா" என்று மேலும் ஒரு வினா எழுப்ப, "ஆமாம், அண்ணி! உங்களுடைய முகம் இருக்கிறதே, முகம் - அதைக் 'கவிஞர் பாஷை'யில் என்னவென்று சொல்வார்கள் தெரியுமா? பூரண சந்திரனைப்போல் இருக்கிறது என்று சொல்வார்கள்!" என்று ஆனந்தன் கவிஞருக்குரிய லட்சணத்தைச் சற்றே விளக்க முயல, "பூரண சந்திரன் என்றால் அது பாதி மாதம் தேயும், பாதி மாதம் வளருமே! அப்படியா என் முகம் தேய்வதும் வளருவதுமாயிருக்கிறது?" என்று அவள் தன் முகவாய்க் கட்டையில் கையை வைத்துக் கேட்க, "ஐயோ, பாவம்! கிராமத்தில் உண்மையையே அனுபவித்து அனுபவித்துப் பழகிப்போன அவர்களுக்குப் பொய்யை அனுபவிக்கத் தெரியவில்லை போலிருக்கிறதே!" என்று அமுதா அனுதாபத்துடன் சொல்ல, "போச்சு, போச்சு, என் மானமே போச்சு!" என்று கவிஞர் காஞ்சிவாணன் கதற, "உங்கள் கவிதையை உங்களுடைய மனைவி அனுபவிக்காவிட்டால் என்ன அண்ணா, ஆயிரமாயிரம் மச்கள் அனுபவிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஆனந்தன் அவரை ஒருவாறு சமாதானம் செய்து வைத்ததோடு, தான் இருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலேயே அவர்கள் குடியிருக்க அவர்களுக்கென்று ஒரு தனி வீடும் பார்த்து வைத்தான்.

என்ன பார்த்த வைத்து என்ன பிரயோசனம்? - தன் தோட்டத்து மல்லிகை மணக்கவில்லை அவருக்கு; மாற்றான் தோட்டத்து மல்லிகைதான் மணத்தது. இதை அமுதா தான் உணர்ந்திருந்தாளே தவிர, ஆனந்தன் உணரவில்லை , உணர்ந்திருந்தால் சீனனைவிரட்டுவதற்காக அவன் சீற: எழுந்து சென்ற போது தன் அம்மா மட்டும் தன்னுடைய மனைவிக்குத்துணையிருந்தால் போதாதென்று, கவிஞர் காஞ்சிவாணனையும் அவளுக்குத் துணையாக வைத்து விட்டுப் போவானா?

போனது தான் போனான்; வெற்றியுடன் திரும்பி வீடாவது வந்து சேர்ந்தானா? அதுவும் இல்லை; வீரமரணத்தை எதிர்பார்த்து ராணுவ மருத்துவ மனையில் தவம் கிடக்க ஆரம்பித்துவிட்டான்.

இந்தச் சமயத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன அதிசயம் என்றால், 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பார்களல்லவா? அதற்கு விரோதமாகக் கவிஞர் நடந்து கொண்டதால்தானோ என்னவோ, காத்தாயி கருவுற்றாள். மகப்பேறுக்காகப் பிறத்தகம் போன அவளோ, அந்தப் பேறை அடைவதற்கு முன்னாலேயே கண்ணை மூடிவிட்டாள். இந்தச் செய்தி ஆனந்தனின் காதுக்கு எட்டியதும், அவன் தன் ஆறாத் துயரை வெளியிட்டுக் கவிஞர் காஞ்சிவாணனுக்கு அங்கிருந்தபடியே ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தால் பெற்ற ஆறுதலைவிட, காத்தாயியின் மரணத்தால் பெற்ற ஆறுதல்தான் அவரைப் பொறுத்தவரை அதிகமாயிருந்தது என்றாலும், அந்த ஆறுதலைக் கொண்டு அமுதாவால் இழந்துவிட்ட அமைதியை அவரால் மீண்டும் பெற முடியவில்லை.

அதை எப்படிப் பெறுவது, எந்த வழியில் பெறுவது என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த அந்தக் கடிதம் ஆனந்தனிடமிருந்து அவருக்கு வந்தது.

அதில் அவன் தன் 'சொத்தின் பரிவர்த்தனை'யைப் பற்றி மட்டும் எழுதவில்லை . தன் 'மனைவியின் பரிவர்த்தனை'யைப் பற்றியும் எழுதியிருந்தான். அதாவது, தனக்குப் பிறகு அமுதாவின் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாதென்றும், அரைகுறையான அவளுடைய வாழ்க்கையைப் பரிபூரணமாக்குவதற்காகக் கவிஞர் காஞ்சிவாணன் அவளை மறுமணம் செய்து கொள்ளவேண்டு மென்றும் அதில் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

இதை அவன் அவருக்கு மட்டும் எழுதவில்லை; அவளுக்கும் எழுதியிருந்தான். அதாவது கடிதம் ஒன்று, நகல்கள் இரண்டு - ஒன்று அவருக்கு; இன்னொன்று அவளுக்கு!

ந்த நிலையில் ஒருநாள் இரண்டு நாட்களாயின; ஒரு வாரம் இரண்டு வாரங்களாயின; ஒரு மாதம் இரண்டு மாதங்களாயின.

ஆனந்தனிடமிருந்து அதற்குமேல் ஒரு கடிதமும் வரவில்லை, கவிஞருக்கு.

ஒருவேளை இறந்து போயிருப்பானோ? இறந்திருந்தால் தந்தி வந்திருக்குமே, வீட்டுக்கு? இருக்காது......

ஒருவேளை பிழைத்துக் கொண்டிருப்பானோ? பிழைத்துக் கொண்டிருந்தால் கடிதமாவது, வராமற் போவதாவது?.......

அதற்காக அவன் இறக்க வேண்டுமென்று தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் அதற்காக அவன் இறந்துவிடுவானா?

தான் இறந்தாலும் தன் மனைவி வாழ வேண்டும் என்று நினைக்கும் அவன் தான் எவ்வளவு பெரியவன்! அவள் மேல் அவன் கொண்டிருக்கும் காதல் தான் எவ்வளவு பெரிது!

அவன்மேல் அவள் கொண்டிருக்கும் காதல் மட்டும் என்ன, சிறிதளவா இருக்கிறது? நீராயிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு போனால் நெருப்பாக அல்லவா இருக்கிறாள், அவள்?

இதன் முடிவு? அவனது முடிவு தெரியும் வரை இதன் முடிவு எங்கே, எப்படித் தெரியப் போகிறது?

எதற்கும் அந்த வீட்டுப் பக்கம் போய்ப் பார்ப்போமா? போனால் அவள் எப்படி வரவேற்பாளோ?

இப்படியெல்லாம் எண்ணிச் சிறிது நேரம் குழம்பிக் கொண்டிருந்த கவிஞர் காஞ்சிவாணன் கொஞ்சம் துணிந்து அந்த வீட்டுப் பக்கமாக அடி எடுத்து வைத்தார் - ஆசை முன்னால் தள்ள, அச்சம் பின்னால் இழுக்க.

என்ன ஆச்சரியம்! - கேட்டது மட்டுமல்ல; அவரை வரவேற்றதும் அந்த வீட்டு மூதாட்டியின் அலறல்தான்!

"என்னம்மா, என்ன நடந்தது?"

கேட்டார் கவிஞர்; "அவன் போய் விட்டான் என்று தந்தி வந்தது; அதைப் பார்த்ததும் 'ஆ!' என்றாள் இவள். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு பேச்சுமில்லை, மூச்சுமில்லை!" என்றாள் ஆனந்தனின் தாயார், வாடிய மலர்ச்சரம்போல் தன் மடியில் விழுந்து கிடந்த அமுதாவை அவருக்குச் சுட்டிக் காட்டி.

கவிஞர் பார்த்தார்; "நீ என் வாழ்வுக்குரியவள் அல்ல; வணக்கத்துக்குரியவள்!" என்று தன் கண் கலங்க அவள் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வெளியே நடந்தார்.