விந்தன் கதைகள் 2/வேதாந்தம்

வேதாந்தம்

....கறார் கருப்பையா அன்றும் வழக்கம் போல் சர்க்காரைத் திட்டிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தார். "என்ன சர்க்கார் வேண்டிக் கிடக்கிறது? சுதந்திர சர்க்காராம், சுதந்திர சர்க்கார்; தேசம் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதுமா? தூங்குவதற்குச் சுதந்திரம் வேண்டாமா? இத்தனை மணிக்குத்தான் கடையைத் திறக்க வேண்டும், இத்தனை மணிக்குத்தான் கடையை மூட வேண்டும், இன்ன கிழமைதான் கடைக்கு வார விடுமுறை விடவேண்டும்-இதெல்லாம் என்ன திட்டம், என்ன சட்டம்? இதுவா வியாபாரத்திற்கு அழகு? இதுதான் போகட்டும் என்றால் மனிதனை மனிதன் நம்ப வேண்டாமா? எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டுமாம், கணக்கு!"சரி;அப்படியே வைத்துக் கொள்கிறோம் என்றால், அத்துடன் விடுகிறார்களா? தங்களுடைய சிப்பந்திகளை அனுப்பி பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள்! அந்தப் பயல்களை சரிப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது!" என்று தமக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவர்தம் மீது கிடந்த போர்வையை எடுத்து வீசி எறிந்தார்.

அந்தச் சமயத்தில், "உன்னிடம் குற்றம் இல்லாதவரை நீ யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை" என்று அவருடைய பத்து வயதுப் பையன் ஏதோ ஒரு பாடத்தை அழுத்தந்திருத்தமாகப் படித்து உருப்போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கருப்பையாவுக்கு ஏனோ ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "படித்துக் கிழித்தது போதும், எழுந்து போய் வேலையைப் பாருடா!"என்று அவனை அதட்டி விட்டுக் குளிக்கும் அறையை நோக்கி நடந்தார்.

வாசலில் நின்றபடி, "ஸார், ஸார்!" என்று அவரை யாரோ கூப்பிட்டார்கள்.

கருப்பையா விரைந்து சென்று, கதவைச் சற்றே திறந்து மெல்ல எட்டிப்பார்த்தார்.

'குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எந்த வேலைக்கும் லாயக்கில்லை' என்று தம்பட்டம் அடிக்கும் தோற்றத்துடன் கோபாலசாமி அங்கே நின்று கொண்டிருந்தான்.

"ஏன் ஐயா, இப்படிக் கூனிக் குறுகி நிற்கிறீர்? என்னிடம் நீர் பிச்சை கேட்கவா வந்திருக்கிறீர்? வேலை செய்து பிழைக்கத்தானே வந்திருக்கிறீர்? நீர் உம்ம வீட்டு வேலையைச் செய்தால், நான் எங்க வீட்டுக் காசை கொடுக்கப் போகிறேன்; இவ்வளவுதானே விஷயம்?" என்று கருப்பையா அவன் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஒரு வெத்து வெடியைத்துக்கி எறிந்து அவனைத் திணற அடித்தார்.

கோபாலசாமி அசந்து போனான்.

கறார் கருப்பையா வெற்றியுடன் பின்வாங்கி வீட்டுக்குள் வந்தார். குமாஸ்தா என்றால் முதலாளியிடம் அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டியதுதான்; அதற்குப் பார்த்தால் நாம் இல்லாத வேளையில் அந்தச் சர்க்கார் ஆட்கள் வந்தால் இவன் கொஞ்சம் நிற்க வேண்டாமோ?"என்று தமக்குள் சொல்லிக்கொண்டே பீரோவைத் திறந்தார். சாவிக் கொத்தையும் ஒரு நூறு ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

"இந்தாரும் சாவி, இதோ நூறு ரூபாய் பணம்......." என்று ஆரம்பித்தார் கருப்பையா.

அசட்டுக் கோபாலசாமி குறுக்கிட்டு பணம் என்னத்துக்கு சார்?" என்று அசடு வழியக் கேட்டான்.

"நாசமாப் போச்சு! நாலு நாட்களாக அந்தச் சத்திய கீர்த்தி 'சாமிக்கண்ணு' உமக்கு என்னதான் சொல்லிக் கொடுத்தான்?" என்று எரிந்து விழுந்தார் கருப்பையா.

கறார்கருப்பையாவின் அரிசிரேஷன்கடையில் குமாஸ்தாவாக இருந்தவன் சாமிக்கண்ணு. ஆரம்பத்தில் அவன் வெறும் சாமிக்கண்ணாகத்தான் அவருடைய கடைக்கு வேலை பார்க்க வந்தான். வேலையிலிருந்து விலகும் போது 'சத்திய கீர்த்தி' என்னும் பட்டத்தோடு விலகினான். அந்தப் பட்டத்தை அவனுக்கு மனமுவந்து அளித்தவர் கறார் கருப்பையாதான்.

காரணம், 'புத்தக ஞானத்தைக் கொண்டு 'சத்திய கீர்த்தியாக வாழ விரும்பியவன் சாமிக்கண்ணு. 'அனுபவ ஞானம்' அதற்கு நேர் விரோதமாக யிருந்ததைக் கண்டதும் அவனுடைய மூளை குழம்பிற்று. அந்த மட்டும் தனக்குப் பைத்தியம் பிடிப்பதற்குள் அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். அதற்குத் துணையாயிருந்தது அவனுடைய பசி;பசியென்றால் பெண்ணைப் பற்றிய பசி அல்ல; சோற்றைப் பற்றிய பசி!

இந்தப் பசியின்காரணமாக அவன்கருப்பையாவின்காரியங்கள் தனக்குப்பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி-அவருடன் ஓரளவு ஒத்துழைத்து வந்தான். இருந்தாலும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதே அது அடிக்கடி அவனை உறுத்தி வந்தது. தக்க சந்தர்ப்பம் வாய்த்ததும், அதாவது வயிற்றுக் கவலையைத் தீர்த்துக் கொள்ள வேறுவழி பிறந்ததும்-அவன் கருப்பையாவின் கடையிலிருந்து விலகிக் கொண்டு விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தான்.

தன்னுடைய முடிவை அவன் கருப்பையாவிடம் தெரிவித்தபோது, அவர் காரணம் என்னவென்று கேட்டார். அப்போதும் அவன் உண்மையை மறைக்க விரும்பவில்லை! தங்களுடைய காரியங்களில் ஒத்துழைக்க என் மனசாட்சி இடம் தரவில்லை!" என்றே சொல்லி விட்டான்.

இதைக் கேட்டதும் கருப்பையாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. "அடடே, உமக்கு மனசாட்சி வேறே இருக்கிறதா? இந்த விஷயம் முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தால், உம்மை வேலையிலேயே வைத்துக் கொண்டிருக்க மாட்டேன்!” என்றார்.

"எனக்கும் தங்களுக்கு மனசாட்சி இல்லை என்ற விஷயம் முதலிலேயே தெரிந்திருந்தால் உம்ம வேலையிலேயே சேர்ந்து கொண்டிருக்க மாட்டேன்! என்றான் சாமிக்கண்ணு.

அன்றைய தினத்திலிருந்து சாமிக்கண்ணுவைக் குறிப்பிட நேரும் போதெல்லாம் 'சத்தியகீர்த்தி சாமிக்கண்ணு' என்றே கருப்பையா குறிப்பிடுவது வழக்கம். அவன் விலகுவதற்கு நாலு நாட்கள் இருக்கும்போதுதான் கோபால சாமி அவனுக்குப் பதிலாக வந்து சேர்ந்தான். அந்த நாலு நாட்களில் அவன் எவ்வளவோ விஷயங்களை தெரிந்து வைத்திருந்தான், எனினும் கடையை திறக்கச் செல்லும் போது நூறு ரூபாய்ப் பணத்தை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விஷயம் மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே விழித்தது விழித்தபடி நின்றான்; நின்றது நின்றபடி யோசித்தான்.

"கருப்பையா பொறுமையிழந்து, கடிகாரம் உமக்காக ஓடாமல் இருக்குமா என்ன?" என்றார்.

கோபாலசாமிக்கு அப்போதுதான் கொஞ்சம் விஷயம் புரிந்தது. "யாராவது இந்த உபரிதானியங்களை வாங்காமல் விட்டுவிட்டால்....." என்று ஆரம்பித்தான்.

"யாராவது என்ன? நூற்றுக்கு எழுபத்தைந்துபேர் 'வேண்டாம்' என்றுதான் சொல்வார்கள். தண்ணீரில் வேகும் சோற்றுக்கே அவர்கள் தவியாய்த் தவிக்கும் போது. எண்ணெயில் வேகும் பூரிக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கெல்லாம் நீர் உபரிதானியம் கொடுத்தது போல் கணக்கு எழுதவேண்டும்; அவ்வாறு எழுதும்போது அந்தத் தானியத்துக்குரிய காசைக் கல்லாவில் போடவேண்டாமா?-அதற்காகத்தான் அந்த நூறு ரூபாய்க் காசு!"

"இப்போது தெரிகிறது......"

“என்னத்தைத் தெரிகிறது?-சரியாகத் தெரிந்து கொள்ளும், ஐயா! சிலர் ஞாயிற்றுக்கிழமை வாங்க வேண்டிய அரிசியை அடுத்த சனிக்கிழமை வரை வாங்காமல் இருந்து விடுவார்கள். அந்தக் 'கூப்பன்'களுக்குரியவர்களெல்லாம் அரிசி வாங்கிக்கொண்டு விட்டதுபோல், நீர் சனிக்கிழமையன்றே 'பில்' எழுதிக் கிழிந்து எறிந்துவிடவேண்டும். மறுநாள்.அவர்கள் வந்து என்னதான் பல்லைக் காட்டினாலும்.'நேற்றோடு காலாவதியாகிவிட்டது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவேண்டும்.'

"தெரிகிறது; ஆனால் ஒரு சந்தேகம்......

"என்ன சந்தேகம்?"

"உபரிதானியத்துக்கும் சேர்த்து 'பில்' போட்டு விட்டு அரிசிக்கு மட்டும் காசுவாங்கினால் சந்தேகப்பட மாட்டார்களா?”

"ஆளைப்பார்த்து பில் போடுமே, ஐயா! பார்க்கும் போதே இது படிக்கத் தெரிந்த மூஞ்சி, இது படிக்கத் தெரியாத மூஞ்சி என்று தெரியாதா?”

"சரி!"

"சரி என்று சொல்லிவிட்டுப் போய் மக்காச்சோளம். புழுத்துப் போனரவை, இவற்றையெல்லாம் சேமித்து வைக்காதீர்; நம்முடைய ஹோட்டல்காரர்களுக்கு உதவாதவற்றையெல்லாம் கூப்பன்' காரருடைய தலையிலே கட்டப்பாரும்; அவற்றை வாங்கினால் தான் அரிசி போடுவேன் என்று கண்டிப்பாகச் சொல்லும்!"

"அவசியம் சொல்கிறேன்....."

“என்னிடம் சொல்வது போல் இழுத்துப் பறித்துக் கொண்டு சொல்லாதீர்; நன்றாய் அடித்துச்சொல்லும். 'நம்முடைய முறைப்படி’ சேகரிக்கும் அரிசி, கோதுமை ஆகியவற்றை நம்முடைய விலைப்படி நம் வாடிக்கைக் காரர்களுக்கு அவ்வப்போது தள்ளிவிடும். அவர்கள் கொடுக்கும் காசை கல்லாவில் போட்டுவிடாதீர்; அடுத்தாற்போல் இருக்கும் நம் மளிகைக் கடை குமாஸ்தாவிடம் கொடுத்துவையும்-என்ன, தெரிகிறதா?”

"தெரிகிறது, தெரிகிறது!"

"திடீர் திடீரென்று சர்க்கார்பயல்கள் வந்து, 'தாம்'. 'தும்’ என்பான்கள்; கணக்குப் புத்தகத்தை எடு; கல்லாவை விட்டு எழுந்திரு. அரிசியை அளந்து காட்டு, என்றெல்லாம் குதிப்பான்கள்-நீர் மிரண்டுவிடாதீர்! ஒரு புன் சிரிப்பை அலட்சியமாக வீசி அவர்களை உட்காரவையும்; உடனே பையனை ஹோட்டலுக்கு அனுப்பும். அந்தப் பயல்கள் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான்கள். நீர் பாட்டுக்கு உம் வேலையை தொடர்ந்து பாரும்!"

இந்தச் சமயத்தில் கோபாலசாமியின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. அந்தப் புன்னகையைக் கண்ட கருப்பையா, "ஹா இப்போது சிரித்தீரே-இந்தச் சிரிப்பே போதும், அந்தப் பயல்களை உட்கார வைக்க" என்று துள்ளிக் குதித்துக் கொண்டே சொன்னார்.

கோபாலசாமி நூறுரூபாய் பணத்தை எடுத்துச்சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். 'பத்திரம், பத்திரம்' என்று சொல்லிக்கொண்டே கருப்பையா சாவிக் கொத்தை அவனிடம் கொடுத்தார்.

கோபாலசாமி புறப்பட்டான்.

கறார் கருப்பையா தம்முடைய காலைக்கடன்களை யெல்லாம் முடித்துக் கொண்டு கடைக்குப் புறப்பட்ட போது யாரோ ஒரு ஆள் ஓடோடியும் வந்து, "நல்லமுத்து போயிட்டாருங்க!" என்றான்.

இந்த துக்கச் செய்தி கருப்பையாவை தூக்கிவாரிப் போட்டது. நல்லமுத்து அவரது அத்தியந்த நண்பர்களில் ஒருவர்; பக்கத்துக் கடைக்காரர்; அத்துடன் எதிர் வீட்டுக்காரர்; அவரும் அரிசி ரேஷன் கடைதான் வைத்திருந்தார்; சர்க்காரைத் திட்டும் விஷயத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவரும் கருப்பையாவுடன் ஒத்துழைத்து வந்தார். அத்தகையவருடைய பிரிவை கருப்பையாவால் எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?- அனுதாபம் ஒரு புறம்: ஆத்திரம் ஒரு புறம்-ஆத்திரம் நல்லமுத்துவின் மீது அல்ல, சர்க்காரின் மீதுதான்! "இதோ முதலாளியே போய்விட்டான்; 'மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன' என்று கடையை மூட முடிகிறதா?- எங்கே மூடமுடிகிறது? மூடினால் சட்ட விரோதம் என்பார்கள்!" என்று இரைந்து கொண்டே திண்ணையின் மேல் உட்கார்ந்தார்.

அதற்குள் நல்லமுத்துவின் குமாரர்கள் வந்து, "எங்களுக்கு ஒன்றும் தெரியாது; நீங்கள்தான் கிட்ட இருந்து அப்பாவை அடக்கம் செய்யவேணும்" என்று கருப்பையாவை வேண்டிக் கொண்டனர்.

"ஆகட்டும் என்று சொல்லிவிட்டு கருப்பையா அவர்களுக்காக மேல்துண்டை எடுத்து தம் கண்களைதுடைத்து விட்டுக் கொண்டார்.

மாலை மணி ஐந்து அல்லது ஐந்தரை இருக்கும். நல்ல முத்துவுக்கு தங்களுடைய 'கடைசி மரியாதை'யைச் செலுத்திவிட்டுப் போக வந்தவர்கள் கருப்பையாவின் வீட்டுத் திண்ணையில் கூடினார்கள். அவர்களில் தமக்குத் தெரிந்த ஒருவரை நோக்கி, "பார்த்தீர்களா, நம்ம செவிட்டுப் பிள்ளையாருக்கு வாரம் நூற்றெட்டுத் தேங்காய் சூறை விடுவாரே, அந்த நல்ல முத்துவின் கதியை' என்றார் கருப்பையா.

"ஆமாம் ஆமாம், அக்கிரமமா நடப்பவனுக்குத்தானே இது காலம்!" என்றார் அவர்.

"அது சரி. சர்க்கார் சிப்பந்தியை லஞ்சம் கொடுத்து, ஏமாற்றுவதைப் போலக் கடவுளையும் ஏமாற்ற முடியுமா?" என்றார் அவருக்கு அருகிலிருந்த ஒரு பகுத்தறிவுவாதி.

“நல்லமுத்துவைப் பற்றி உமக்கு ஏதாவது தெரிந்தால் பேசும்; தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரும்!” என்று அந்த மனிதரை நோக்கி சீறினார் ஆஸ்தீக சிகாமணி ஒருவர்.

"கடவுளை வழிபடுவதெல்லாம் மோட்சத்துக்குத் தானே? அந்த மோட்சத்தை அவர் அடைந்துவிட்டார்- அவ்வளவுதான் விஷயம்; அதற்காக நீங்கள் ஏன் இப்படி ஒருவர் மீது ஒருவர் எரிந்து விழுகிறீர்கள்" என்றார் சுத்த சமரச சன்மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட ஒரு சைவர்.

"வியாபார தந்திரத்தைப் பார்க்கவேண்டுமானால் நல்லமுத்துவிடம் தான் பார்க்கவேண்டும். சிரிக்க வேண்டியவர்களிடம் சிரித்து, அழ வேண்டியவர்களிடம் அழுது காரியத்தை சாதித்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான்!” என்று அவருடைய பெருமையைப் பற்றி கொஞ்சம் இடையிலே எடுத்துவிட்டார் கருப்பையா.

"ஆனால் கோபம் வந்தாலோ அவரை யாரும் கட்டுப் படுத்த முடியாது!" என்று நல்லமுத்துவுக்கு கொஞ்சம் கூடத் தெரியாதவர் ஒருவர் சந்தர்ப்பத்தை உத்தேசித்து சொல்லி வைத்தார்.

"நல்லவர்களுக்கே எப்போதும் கோபம் கொஞ்சம் அதிகமாகத்தான் வரும்" என்று கருப்பையா தம்முடைய ஞானத்தை அந்த இடத்தில் சற்று காட்டிக் கொண்டார்.

"ஆமாம், ஆமாம்” என்று அவர் சொன்னதை சில காரியவாதிகள் ஆமோதித்தனர்.

"ஒரு நாள் பாருங்கள், அவருடைய கடைக்கு ரேஷன் அரிசி வாங்க ஒருத்தி வந்தாள். அவள் மிகவும் ஏழை, அரிசிக்கு வேண்டிய காசுக்கே அவளுக்குப் பஞ்சம். அப்படியிருக்கும் போது அவள் கோதுமைக்கு எங்கே போவாள்? வேண்டாம் என்று சொன்னாள்.

"அப்படி யார் சொல்வார்கள்?" என்றுதானே ரேஷன் கடைக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்த விஷயம் தெரியாமல் ஒருவன், 'நீ வேண்டாம் என்று சொல்லும் கோதுமையை எனக்கு வாங்கிக் கொடுத்து விடேன்' என்றான். அவ்வளவுதான்; நல்லமுத்துவுக்கு வந்து விட்டது கோபம்; அவனைப் பிய்த்துப் பிரிகட்டி விட்டார்-பாவம். அவன் அசடுவழிய அரிசியை வாங்கிக் கொண்டு போனான்-இப்படியெல்லாம் ஏழை எளியவர்களை மிரட்டி. அவர்களுடைய வாயில் வயிற்றில் அடித்து, பாழும் பணத்தை சேர்த்தாரே என்னத்தை வாரிக்கட்டிக் கொண்டு போனார்?" என்று கடைசியாகக் கருப்பையா வேதாந்தத்தில் இறங்கினார்.

"என்னத்தைக் கட்டிக்கொண்டு போவது? கொளுத்தும்போது அண்ணாக்கயிறக்கூட அறுத்துக் கொண்டல்லவா கொளுத்து கிறார்கள்!" என்றார் ஒரு பெரியவர். இதைக் கேட்டுக் கொண்டே அப்போது கோபாலசாமி கையில் கொத்துச்சாவியுடன் அங்கே வந்து சேர்ந்தான். நேரமாகி விட்டதால் கடையைப் பூட்டிக்கொண்டு சாவியை முதலாளியிடம் கொடுத்துவிட்டுப் போவதற்காக அவன் வந்தான்.

கருப்பையா அவனைக் கவனியாதவர்போல், "இன்னொரு வேடிக்கை உங்களுக்குத் தெரியுமோ? வியாபாரத்தில் இந்த மாதிரி 'பேத்து மாத்து' செய்வதை அவர் 'திறமை' என்று சாதிப்பார். இந்த ஒரு விஷயத்தில்தான் அவருக்கும் எனக்கும் கொஞ்சம் அபிப்பிராய பேதம், என்ன இருந்தாலும் மனிதன் தனக்காக மட்டும் வாழக் கூடாது, பாருங்கள்!" என்று தம் பேச்சை மேலும் தொடர்ந்தார்.

"ஆமாம், ஆமாம்; பிறருக்காக வாழ்வதில் உள்ள பெருமை வேறு எதிலுமே கிடையாதே!" என்றார் தனக்கென்று வாழாத ஒரு தகைமையாளர்.

“சர்க்கார் என்னதான் சட்டதிட்டங்கள் செய்தாலும் அவற்றில் கொஞ்சநஞ்சம் ஓட்டையும் இருக்கத்தானே செய்யும்? அந்த ஓட்டை உடைசல்களை நம்முடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா!" என்றார் கருப்பையா.

"சீசீ, அது என்ன வாழ்வு" என்று முகத்தை சுளித்தார் இன்ஸால்வென்ஸி பேர்வழி ஒருவர்.

"பாரதக் கதையில் யக்ஷன் தரும புத்திரனைப் பார்த்து. 'உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?' என்று கேட்கிறான். 'நாள்தோறும் பலர் மடிந்து கொண்டிருப்பதை பார்த்தும் எஞ்சியுள்ள மனிதர்கள் தாங்கள் நிலை பெற்று இருப்போம் என்று நம்புகிறார்களே, அதுதான் பெரிய ஆச்சரியம்!" என்று தரும புத்திரர் சொல்கிறார்.இதில் எவ்வளவு பெரிய உண்மை அடங்கியிருக்கிறது பார்த்தீங்களா?" என்று சொல்லிக் கருப்பையா நெருப்பிலிட்ட நெய்யாய் உருகினார்.

இதைக்கேட்ட கோபாலசாமியோ ஒன்றும் புரியாமல் தேம்பினான். காலையில் அவர் சொல்லியனுப்பியவற்றை யெல்லாம் ஒரு முறைக்கு இருமுறையாக நினைவுகூர்ந்து பார்த்தான்- 'அவ்வளவும் அவர் சொன்னவையா அல்லது நம் கற்பனையா?" என்ற சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு. 'எது எப்படியிருந்தாலும் உபரி தானியத்துக்காக நூறு ரூபாய் கொடுத்தது உண்மைதானே?' என்று எண்ணி அவன் ஒரு கணம் ஆறுதல் அடைந்தான். மறுகணம், "ஒருவேளை அதுவும் பொய்யோ! நம்மிடம் நூறு ரூபாய் கொடுத்ததாக நாம்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ!" என்று எண்ணி அவன் குழம்பினான். கறார் கருப்பையாவோ தமக்குத் தெரிந்த வேதாந்த உண்மைகளையெல்லாம் அள்ளி அள்ளி விட்டுக் கொண்டே இருந்தார். அவற்றைக்கேட்க கேட்க கோபாலசாமியின் சந்தேகம் வலுத்தது. தலை கனத்தது. அத்துடன் 'விண், விண்' என்ற வலி வேறு தோன்றி அவனை வதைத்தது-தாங்க முடியவில்லை, அவனால்; துணிந்து நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு "கொஞ்சம்...... இப்படி...... வருகிறீர்களா?" என்று அவன் அழாக்குறையாக அழைத்தான்.

அப்பொழுதுதான் அவனைப் பார்த்ததுபோல் 'சட்'டென எழுந்து, "ஒரு நிமிஷம் இதோ வந்து விட்டேன்!” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே சென்றார்.

"காலையில்.....உபரி தானியத்துக்காக..... காலையில்..... உபரிதானியத்துக்காக....." என்று மேலே சொல்ல முடியாமல் திணறினான் கோபாலசாமி.

"ஆமாம்; என்ன உபரிதானியத்துக்கு? சொல்லித் தொலையுமே!"

"ஒரு சந்தேகம்.... இன்று காலை...... நீங்கள்..... நீங்கள் என்னிடம் நூறு ரூபாய் கொடுத்தீர்களல்லவா?”

"ஆமாம்; அதை எங்கேயாவது தொலைத்து, விட்டீரா என்ன?"

அவ்வளவுதான்; "அப்பாடா!" என்று கோபால் சாமி பெருமூச்சுவிட்டான்; அவனுடைய சந்தேகம் தீர்ந்தது. முகமும் மலர்ந்தது.

"இல்லை; இவர்களுடன் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும்....."

"உமக்குச் சந்தேகம் வந்துவிட்டதாக்கும்? நல்ல ஆள் ஐயா, நீர்? அந்த வேதாந்தம் வாய் வேதாந்தம்; இந்த வேதாந்தம் வயிற்று வேதாந்தம்!" என்றார் கருப்பையா.

கோபாலசாமிக்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.