விந்தன் கதைகள் 2/அன்பும் அருளும்

அன்பும் அருளும்

ங்கள் கடைவாயிலில் தினசரி 'மல்லு'க்காக வந்து மல்லுக்கு நிற்பவர்களில் அந்த ஏழை சிறுமியும் ஒருத்தி, வயது ஏழெட்டுத்தான் இருக்கும். பெயர் என்னவோ, தெரியவில்லை.

நானும் அவளை நாலைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன்; ஒரு நாளாவது அவளால் எங்கள் கடையிலிருந்து மல் வாங்கமுடிவதில்லை. காரணம்'க்யூ' வரிசையில் அவள் கடைசியில் நிற்க நேர்ந்து விடுவதுதான்!

அவள் என்னமோ ஒவ்வொரு நாளும் முன்னால் நிற்கப் பிரயத்தனம் செய்துதான் வந்தாள்; முடிந்தால்தானே? - ஆடை அலங்காரங்களில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாயிருக்கும் அச்சிறுமியை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளி விடுவது வழக்கம். அவளும் அவர்களுடைய ஏச்சுப் பேச்சுக்களுக்குப் பயந்து ஒதுங்கிவிடுவது வழக்கம்.

ஒரு கஜம் மல்லின் விலை ஒன்பதணா நாலுபை. தினசரி இத்தனை 'பீஸ்'கள்தான் விற்கலாம். ஆள் ஒன்றுக்கு இத்தனை கெஜந்தான் கொடுக்கலாம் என்று சர்க்கார் திட்டம் செய்திருந்தார்கள். அவர்களுடைய திட்டப்படி எங்கள் கடைக்கு வந்து தினசரி மல் வாங்கும் ஒவ்வொரு வரின் விலாசத்தையும் நாங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பரிசோதனை அதிகாரிகள் வந்து பார்வையிடும் போது அவர்களுக்குக் காட்ட வேண்டும். இதனால் என் அப்பாவின் உத்தரவுப்படி எத்தனையோ பொய் விலாசங்களை நான் எழுத வேண்டியிருந்தது. ஏன் தெரியுமா? அவ்வாறு எழுதும் விலாசதாரர்களுக்கெல்லாம் மல்விற்றது போல் நாங்கள் அதிகாரிகளிடம் காட்டிக் கொள்வோம். அவர்களுக்கு விற்காத மல்லை அமித லாபத்துக்கு விற்போம் - எப்படியாவது மல் கிடைத்தால் சரி என்று நினைக்கும் வசதியுள்ள சிலர், கெஜம் ரூபாய் ஒன்று, ஒன்றரை என்றாலும் வாங்கிக் கொள்வார்கள்.

எனினும் எல்லாவற்றையுமே கறுப்பு மார்க்கெட்டில் விற்று, சர்க்கார் அதிகாரிகளின் கண்ணில் ஒரேடியாக மண்ணைவாரிப் போட எங்களுக்குக் கொஞ்சம் பயம். அதனால் தினசரி கட்டுப்பாட்டின் விலைப்படி ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லி விடுவோம். அந்த 'இல்லை'என்ற பதிலைக் கேட்டுத் தினசரி ஏமாந்து சென்றவர்களில் மேற்படி ஏழைச் சிறுமியும் ஒருத்தி.

ஒரு நாள் என்னையுமறியாமல் அந்தச் சிறுமியிடம் எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. வழக்கம்போல் அன்றும் 'இல்லை' என்று சொல்லும் கட்டம் வந்தபோது, அவளை மட்டும் நான் இருக்கும்படி சமிக்ஞை செய்தேன். குறிப்பறிந்து அவளும் என்னுடைய அழைப்பை எதிர்பார்த்து நின்றாள்.

மல் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் எல்லாரும் கடையை விட்டுச் சென்ற பிறகு அந்தச் சிறுமியை அழைத்து, "உன் பெயர் என்ன, அம்மா?"என்று விசாரித்தேன்.

"நீலி!” என்றாள் அவள்.

"எடுத்ததற்கெல்லாம் அழுவாயோ?”

"இல்லை; என் பெயர் நீலா. அம்மா 'நீலி, நீலி'என்று தான் என்னைக் கூப்பிடுவாள்!"

"எங்கே இருக்கிறாய்?"

"ஓடைத் தெரு, ஒன்பதாம் நெம்பர் வீட்டில்!”

"உனக்கு எத்தனை கெஜம் மல் வேண்டும்?"

"ஆறு கெஜம்."

"ஐயோ, அத்தனை கெஜமா!"

"ஆமாம்; அக்காவுக்குப் புடவைக்காக!"

"ஏன், வேறு ஏதாவது புடவையாகவே வாங்கிக் கொள்ளக் கூடாதா?"

"எப்படி வாங்க முடியும்? ஆறு கெஜம் மல்லுக்காக அக்கா மூன்றரை ரூபாய்தான் கொடுத்தனுப்பியிருக்கா. அவள் அப்பம் பண்ணிவிற்றுச் சொந்தமாகச் சேர்த்த ரூபாய்; இனி அதற்கு 'டை' அடிக்க வேறு அவள் பணம் சேர்க்கவேண்டும். இந்த லட்சணத்தில் வேறே புடவை வாங்குவதாயிருந்தால் குறைந்த பட்சம் பத்து ரூபாய்களாவது வேண்டாம்?"

அதற்குப் பிறகு நான் அவளை ஒன்றும் கேட்கவில்லை. எங்கள் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனைக் கூப்பிட்டு, ஆறு கெஜம் மல் கொடுக்கும்படி சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு அவள் போய்விட்டாள்.

"வியாபாரத்தில் சபலச் சித்தம் கூடாது; திடச் சித்தம் வேண்டும்” என்பது என் அப்பாவின் சித்தாந்தம்.

இப்போது நான் அதை மீறியல்லவாகாரியம் செய்துவிட்டேன்?

இப்படி எண்ணிய வண்ணம் உட்கார்ந்திருந்தபோது கடை வாயிலில் வந்து நின்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

ஐயோ, அப்பா வந்துவிட்டாரா? -இல்லை, ராணிதான் காரிலிருந்து இறங்கி, 'அன்ன நடை'க்குப் பதிலாக 'யானை நடை' போட்டுக் கொண்டு வந்தாள்.

அவள் என் அத்தையின் ஏக புத்திரி; கலாசாலையில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய அம்மாவுக்கு என்மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாளது வரை ராணியை என் தலையில்தான் எப்படியாவது கட்டிவைக்க வேண்டும் என்று ஒரே பிடிவாதமாயிருந்து வருகிறாள். எனக்கோ அவளைப் பார்க்கும் போதெல்லாம் அச்சம் ஏன் தெரியுமா? - அக்கம் பக்கத்தில் யார் இருந்தாலும் சரி, அவள் முதலில் என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுத்தான் அப்புறம் ஏதாவது பேச ஆரம்பிப்பாள். இதில் ஒன்றும் குற்றம் இல்லைதான். ஆயினும் உண்மையான அன்புக்கு உள்ளேதான் இடமிருக்குமே தவிர, வெளியே இடமிராதல்லவா?

இந்த நிலையில் இருந்த என்னை இன்று அவள் நெருங்கியதும், நான் சுற்றுமுற்றும் பார்த்துத் திருடனைப்போல் விழித்தேன். அதிலும் மற்ற நேரங்களில் கடையின் குமாஸ்தாக்கள், பையன்கள் ஆகியவர்களில் பாதிப்பேர் ஏதேதோ காரியமாக வெளியே போய்விட்டிருப்பார்கள்; கடையிலும் அவ்வளவு வியாபாரம் நடந்து கொண்டிருக்காது. இப்போது என்னடாவென்றால் அத்தனை பேரும் கடைக்குள் அடைந்து கிடந்தார்கள்!அவர்களெல்லாம் போதாதென்று கடையில் வியாபாரம் வேறு பிரமாதமாக நடந்துகொண்டிருந்தது!

என்ன செய்வேன்?- என் உடம்போ சில்லிட்டுவிட்டது; உணர்ச்சியோகுன்றிவிட்டது. வலுவில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, "வாராணி, வா!" என்றேன்.

அதைப் பொருட்படுத்தாமல், "ஹெல்லோ, ஹெள ஆர் யூ?" என்று எதிர்த்தாற்போல் இருக்கும் என்னைப் பார்த்த பிறகும், என்னைப்பற்றி அவசியமில்லாமல் கேட்டுக்கொண்டே, உணர்ச்சியற்ற என் கையைப் பிடித்து அவள் உணர்ச்சியுடன் குலுக்கினாள்.

"அபாயம் நீங்கியது!"

அடுத்தாற்போல் எனக்கு எதிரே போட்டிருந்த மேஜையின் மேல் அவள் வானரம் போல் தாவி உட்கார்ந்தாள்.

அவ்வளவுதான்; கடைக்குள் அடைந்து கிடந்தவர்களெல்லாம் அவளை ஏதோ ஓர் அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினார்கள்-அவளும் அவ்வாறு பார்க்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்; பார்த்துச் சிரிக்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்!

அவர்களுடைய சிரிப்புக்கிடையே என்னை நோக்கி, "என்ன உங்கள் உடம்புக்கு?"என்று கேட்டாள் அவள்.

"ஒன்றுமில்லை" என்றேன்.

"பின் ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்?"

"சும்மாத்தான்!”

"பொய்! உங்களுக்குத் தலையைக் கிலையை வலிக்கிறதா, என்ன?”

"ஆமாம்; கொஞ்ச நேரமாகத் தலையை வலிக்கத்தான் செய்கிறது!"

"அதாவது, நான் வந்ததிலிருந்து என்று சொல்லுங்கள்!"

"சே, சே! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கே இப்படி.....?"

"சரிதான்; என்னை இங்கிருந்து சீக்கிரமாக வெளியேற்றச் சதியோ?"

"சரியாய்ப் போச்சு; வந்தவர்களை 'ஏன், என்ன?’ என்று விசாரிக்க வேண்டாமா?"

"ஆமாம், ஆமாம்-அது கிடக்கட்டும், எனக்குக் கொஞ்சம் மல் வேண்டியிருக்கிறது-நானும் 'க்யூ' வரிசையில்தான் நிற்க வேண்டுமா?"

"காலையில் வந்திருந்தால் நின்றிருக்கலாம்; இப்போது தான் கூட்டமில்லையே!-சரி, எத்தனை கெஜம் வேண்டும்?"

"கெஜமாவது! நாலு பீஸ் வேண்டும் ஸார், நாலு பீஸ்!"

"ஹா!" "என்ன! அவ்வளவு மல் கிடைக்காதோ?”

"உனக்குக் கிடைக்காமலென்ன?-ஆனால் தற்சமயம் இங்கே அவ்வளவு மல் இல்லை; இரவு வேண்டுமானால் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!”

'சரி' என்று அவள் போய் விட்டாள்; நானும் "பிழைத்தேன்!"என்று பெருமூச்சு விட்டேன்.

அன்றிரவு நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக என் அறையை நோக்கித் திடுதிடுவென்று நடந்து வந்தார் அப்பா; திடுக்கிட நான் எழுந்து நின்றேன்.

"அடேய்! அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டாயா, நீ?"

"......"

"உன்னை யாரடா நான் சொன்னதற்கு மேல் விற்கச் சொன்னார்கள்?"

"......"

"இளம் பெண்ணைக் கண்டதும் இரக்கம் வந்து விட்டதோ?”

"ஐயோ! அவள் குழந்தை, அப்பா!"

"அவள் குந்தைதான்; அவளுடைய அக்கா?"

"இதென்ன வீண் பழி! யாரோ சொன்னதைக் கேட்டு....."

"சொன்னதைக் கேட்டு என்னடா? இப்படி என் தலையை மொட்டையடிக்க எத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தாய்?"

"அப்படி என்ன அப்பா, பிரமாதமாக மொட்டையடித்துவிட்டேன்? ஆறு கெஜம் மல்தானே?"

அவ்வளவுதான்; "ஓஹோ! எதிர்த்துப் பேசக் கூடத் தைரியம் வந்துவிட்டதா?-ம், நடடா வெளியே!" என்று என்னை ஓங்கி அறைந்தார் அவர். அதற்குள் அம்மா அலறிக் கொண்டே, ஓடிவந்து, "நன்றாயிருக்கிறது. ஏன் இப்படி அமர்க்களம் பண்ணுகிறீர்கள்? நீங்கள் சொன்னதற்குமேல் ஆறு கெஜம் மல்லை விற்றுவிட்டால் குடியா முழுகிப் போய்விடும்!" என்றாள்.

"மூடு, வாயை! இப்போது 'பீஸ்' ஒன்றுக்கு இருபது ரூபாய் விலை பேசி, இன்றிரவு இருபது 'பீஸ்' கொடுப்பதாக ராம்ஜியிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு வந்து விட்டேனே, அதற்கு நான் என்ன செய்வது?" "நாளைக்கு கொடுக்கிறேன் என்று சொல்வது! அதற்காக குழந்தையை அடித்தால் வந்துவிடுமா?"

"நீயும் உன் குழந்தையும் நாசமாய்ப் போங்கள்; சொற்படி நடக்காத பிள்ளை எனக்கு வேண்டாம்!"

கதைகளில் நிகழும் சில சம்பவங்களை நம்மால் நம்ப முடிவதேயில்லை. ஆனால் அதே மாதிரி சம்பவங்கள் சில நமது வாழ்க்கையில் நிகழும்போது, அவற்றை நம்மால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

அன்றோ நல்ல வெண்ணிலவு; கலங்கிய, மனத்துடன் நான் கால்கள் போன வழி நடந்துகொண்டிருந்தேன்.

அப்படியென்ன, நாம் செய்யத் தகாத காரியம் செய்து விட்டோம்? ஓர் ஏழைச் சிறுமியிடம் இரக்கம் காட்டியதா குற்றம்? அதுவும் காசை வாங்கிக் கொண்டுதானே இரக்கம் காட்டினோம். இதற்கா இத்தனை அமர்க்களம்?-இந்தக் கோடை விடுமுறை என்று ஒன்று ஏன்தான் வந்து தொலைந்ததோ? அது வந்திராவிட்டால் நாம் ஏன் அந்த நாசமாய்ப் போன கடையில் உட்கார்ந்திருக்கப் போகிறோம்? அந்தச் சிறுமியிடந்தான் ஏன் இரக்கம் காட்டியிருக்கப் போகிறோம்? அப்பாதான் இப்படி ஏன் கோபித்துக் கொண்டிருக்கப் போகிறார்?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சென்ற என் கண்களுக்கு 'ஓடைத் தெரு’ என்று பொறிக்கப் பட்டிருந்த தெருப் பலகை ஒன்று காட்சியளித்தது. பேதலித்ததிலிருந்து நான் ஒரு காரணமும் இல்லாமல் அந்தத் தெரு வழியே சென்றேன். மனச்சோர்வினால் அங்கே பூட்டிக்கிடந்த ஒரு வீட்டுத் திண்ணையை என் கால்கள் தஞ்சமடைகின்றன. 'யோக்கிய தாம்ச'த்தைக் கூடப் பொருட்படுத்தாமல் அந்தத் திண்ணையின்மேல் உட்கார்ந்தேன். கதவில் எழுதப்பட்டிருந்த '9' என்ற இலக்கம் என்னைக் கவர்ந்தது. அதைக் கண்டதும், "இந்த வீட்டுச் சிறுமியால்தானே நமக்கு இந்தக் கஷ்டம்?"என்று எண்ணி என்மனம் இடிந்தது.

"என்னடா, பூட்டை உடைப்பதற்கு யோசனையோ?" திடுக்கிட்டு நான் திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவர் வந்து எனக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார். தலைவிரி கோலமாயிருந்த என்னை அவர் திருடனென்றும் தீர்மானித்து விட்டார் போலும்! அந்த முதியவருக்குப் பின்னால் ஒரு முதியவள், அவளுக்குப் பின்னால் ஒரு யுவதி, கடைசியில் அந்த நீலி அவள் என்னைப் பார்த்துவிட்டாள்.

அவ்வளவுதான்; "அப்பா, அப்பா! அவர் என்னை தனியே அழைத்து ஆறு கெஜம் மல் கொடுத்தனுப்பிய ஜவுளிக் கடைக்காரராச்சே, அப்பா! அவரைப் போய் 'பூட்டை உடைக்க யோசனையோ!' என்று கேட்கிறீர்களே?"என்று அங்கலாய்த்தாள் அவள்.

முதியவர் அசடு வழிய, "மன்னிக்கவேணும்; கோபித்துக் கொள்ளக்கூடாது!" என்று கெஞ்சிக் கொண்டே என்னை நெருங்கினார்.

"அதற்கென்ன, இந்நேரத்தில் இப்படி வந்து உட்கார்ந்திருந்தால் அப்படித்தான் தோன்றும்!" என்று நான் அவருடைய மனச் சாந்திக்காகச் சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தேன்.

"என்ன ரத்னா, இன்னும் ஏன் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?-உள்ளே வந்து விளக்கை ஏற்று!" என்றார் முதியவர், இரண்டடிகள் எடுத்து வைத்த நான் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தேன்; ரத்னா முகம் சிவக்கத் தன் அப்பாவுடன் திறந்த வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்!

அதே சமயத்தில் என் உள்ளத்திலும் அவள் நுழைந்து விட்டாள் என்பதை அப்போது நான் ஏனோ உணரவில்லை.

இரவு மணி பத்துக்கு மேலே இருக்கும். வீட்டை அடைந்தேன். எனக்காகக் காத்துக் கொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும், "வாடா அப்பா!வந்துவிட்டாயா? அந்த மட்டும் என் வயிற்றில் பாலை வார்த்தாயே!” என்று கனிவு ததும்ப வரவேற்றாள்.

எடுத்தததற்கெல்லாம் நான் தற்கொலை செய்து கொள்வேனோ என்று அவளுக்குப் பயம்.

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்பா எங்கேயாவது கையைத் தீட்டிக்கொண்டு என் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்றுதான்!-அவருக்குப் பதில் அவருடைய சயன அறையிலிருந்து அவர் குறட்டை விடும் சத்தந்தான் வந்துகொண்டிருந்தது. அதற்குள் அம்மா எனக்குச் சாதம் பரிமாறினாள். சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போனேன். அதே சமயத்தில் யாரோகதவைத் தடதட வென்று தட்டும் சத்தம் கேட்டது. விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன்.

என்ன பயங்கரமான சேதி!

எங்கள் கடையில் தீப்பிடித்துக்கொண்டு விட்டதாம்! அவ்வளவுதான்; அடுத்த கணம் நானும் அக்கினி பகவானால் ஆட்கொள்ளப்பட்டுத் 'திருதிரு'வென்று எரிவதுபோல், எனக்குத் தோன்றியது.

அப்பாவிடம் சேதி சொல்வதற்காக விரைந்தேன். கண்ணில் பட்ட ஒவ்வொரு பொருளும் தீப்பற்றி எரிவது போல எனக்குத் தோன்றின!

பரபரப்புடன் அவருடைய அறைக்குள் நுழைந்தேன். அவரும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார்!

"அப்பா! அப்பா!! அப்பா!!!"

“என்னடா அது?"

"கடையில் தீப்பிடித்துக்கொண்டு விட்டதாம்!”

"ஐயோ, கையிருப்பு ரொக்கம் கூடக் கடையில்தானே வைத்திருந்தேன்!” என்று சொல்லிக்கொண்டே, அவர் எழுந்து வெளியே ஓடினார்.

வாயிற்படியில் பாவி எமன் காத்துக் கொண்டிருந்தான் போலும்-தடுக்கி விழுந்த அப்பாதடுக்கி விழுந்தவர்தான்; மறுபடியும் எழுந்திருக்கவேயில்லை!

அடுத்தாற்போல் அவரைத் தொடர்ந்து சென்று நானும் உணர்விழந்து கீழே விழுந்தேன். அந்த நிலையில் எவ்வளவு நேரம் இருந்தேனோ. தெரியாது. மீண்டும் உணர்வு பெற்றபோது என் அன்னை, அழுது, அழுது ஓயும் தருவாயில் இருந்தாள்.

அவளுடைய வெளுத்த முகத்தையும், கண்ணிர் பெருகிய கண்களையும், என்னால் சகிக்க முடியவில்லை. மெல்ல எழுந்து கடையின் பக்கம் சென்றேன்.

கருத்த சாம்பல் என் கண்களுக்குக் காட்சியளித்தது. யாரோ கொடுத்த தகவலின்பேரில் தீயணைக்கும் படையினர் வழக்கம்போல் தீயணைந்த பிறகு வந்து திரும்பிச் சென்றனராம்!

எந்த விஷயத்திலும் பிறரை நம்பாத என் அப்பா எங்கள் கடையை ஒரு காலணாவுக்குக் கூட 'இன்ஷ்யூர்'செய்து வைக்கவில்லை. அவருக்குப் பிறகு எனக்கும் என் அன்னைக்கும் ஜீவாதாரமாக இருந்தது நாங்கள் குடியிருந்த வீடும், அந்த வீட்டின் பெறுமானமுள்ள கடனுந்தான்!

ஒரு பக்கம் கவலையே உருவான தாய்; இன்னொரு பக்கம் கரைகாணாத சம்சார சாகரம்; மற்றொரு பக்கம் கடன்காரர்கள்-இவற்றுக்கு முன்னால் என் கலாசாலை வாழ்க்கையின் கதி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவா வேண்டும்?

கதை கவிதையிலும், நடனம் நாடகத்திலும், சினிமா சங்கீதத்திலும் சென்றுகொண்டிருந்த என் மனம், அரிசி பருப்பிலும், உப்பு புளியிலும், காய் கறியிலும் செல்ல ஆரம்பித்தது.

பணக் கவலை என்னைப் படுத்திய பாடோ கொஞ்சநஞ்சமல்ல. நான் பார்த்து வந்த வேலைக்காகப் பாங்கிக்காரர்கள் கொடுத்த மாதச் சம்பளம் அறுபது ரூபாய் போதவில்லை. வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதென்று தீர்மானித்தேன். அன்றே 'வீடு வாடகைக்கு விடப்படும்' என்று ஒர் அட்டையில் எழுதி வாயிற்படியில் தொங்கவிட்டேன்.

காலை எழுந்தவுடன் வேலை; மாலை முடிந்தவுடன் தூக்கம்; மற்ற நேரங்களில் அன்னவிசாரம்; நடுநடுவே என் மனோவானத்தில் ரத்னாவின் வதன மின்னல்-ஆம், ராணி மின்னாத அந்த வானத்திலே ரத்னா அடிக்கடி மின்னிக் கொண்டிருந்தாள்!

இந்த நிலையிலே சதிசெய்யும் விதிக்கு என்மேல் என்ன கருணையோ தெரியவில்லை. எங்கேயோ இருந்த ரத்னாவை அது எங்கள் வீட்டில் கொண்டுவந்து சேர்த்தது-ஆம், எங்கள் வீட்டில் ஒரு பகுதியை அவர்கள்தான் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள்.

இடையே கழிந்த ஒரிரு வருடங்களில் எங்களுக்குள் ஏற்பட்டிருந்த மாறுதல் ஒன்றே ஒன்றுதான்-அதாவது அவளைச் சந்தித்த பிறகு, நான் தந்தையை இழந்துவிட்டிருந்தேன். அவள்தாயை இழந்து விட்டிருந்தாள்.

ஒரு நாள் ஏதோ பேச்சுவாக்கில் ரத்னாவின் தகப்பனாரை நோக்கி, "நீங்கள் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொள்ள வில்லையா?"என்று கேட்டாள் என் தாயார்.

அவர் சிரித்துக்கொண்டே "இப்போது ரத்னாவுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்!" என்றார். அவளுக்குக் கல்யாணமான பிறகு, நீலிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்துக் கல்யாணம் செய்துவிட்டு, "நான் கடைசி கல்யாணத்திற்குத் தயாராகிவிடலாம் என்று இருக்கிறேன்!” என்றார்.

"என்னமோ போங்கள், எவன் யாருக்கு எங்கே பிறந்திருக்கிறானோ!" என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே வந்தாள். அதுதான் சமயமென்று, "இதோ, ரத்னாவுக்காக நான் பிறந்திருக்கிறேனே!"என்றேன்.

"அப்படியா சமாச்சாரம்? - கொஞ்சம் பொறு, நாளைக்கே அவர்களை வேறு வீடு பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன்"என்று உறுமினாள் அம்மா.

அவ்வளவுதான்; "அம்மா அந்தப் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அத்துடன் அதை விட்டுவிடுங்கள்; நானும் விட்டு விடுகிறேன். அதற்காக இந்த வீட்டைவிட்டு அவர்களைக் காலி செய்யவோ, அவர்களிடம் கடுமையாகவோ நடந்து கொள்ள வேண்டாம்!" என்று நான் கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சினேன்.

அதற்குப் பிறகு அம்மா ஒருவாறு சமாதான மடைந்து, "ஏற்கெனவே கெட்டது போதாதென்று மேலும் கெட்டுப் போகப் பார்க்கிறாய்? நம்மை விட மேலான இடம் நமக்காக எத்தனையோ நாட்கள் காத்துக் கொண்டிருக்கும்போது ஏன் இப்படியெல்லாம் உளறுகிறாய்?" என்றாள்.

அத்துடன் அவள் நின்றுவிடவில்லை. மறுநாளே அந்த மேலான இடத்துக்குக் கிளம்பி விட்டாள்!

அன்று மாலை நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய போது அம்மா ஏனோ அசோகவனத்துச் சீதைபோல் காட்சி அளித்தாள். “என்ன, அம்மா! என்ன நடந்தது?"என்று பரபரப்புடன் கேட்டேன்.

விக்கலுக்கும், விம்மலுக்கும் இடையே, "ஆயிரம் தடவை நம் வீடு தேடி வந்து, “எங்கள் ராணி உங்கள் பிள்ளைக்குத்தான், எங்கள் ராணி உங்கள் பிள்ளைக்குத்தான் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்களே, இப்போது என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 'உன்னுடைய கல்யாணப் பேச்சை எடுத்ததும், 'உன் பிள்ளைக்கா எங்கள் ராணி வேண்டும்?' என்று எகத்தாளமாகச் சொல்லி, எல்லோருமாகச் சேர்ந்து குலுங்கச்சிரிக்கிறார்கள்? உனக்குச்சம்பளம் அறுபது ரூபாயாம். அவர்கள் மோட்டார் டிரைவருக்கே மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்களாம். அதை நினைக்க நினைக்க என் வயிறு பற்றி எரிகிறது! என்னகாலம் இது? நமக்கு வந்த கதி அவர்களுக்கும் வராதா?" என்றெல்லாம் அவள் கலங்க ஆரம்பித்துவிட்டாள்.

"வேண்டாம் அம்மா! அவர்களுக்கும் அந்தக் கதி வரவேண்டாம். நல்லதைத்தான் சொல்கிறார்கள்; நன்றாயிருக்கட்டும்" என்றேன் நான்.

அவள் சமாதானம் அடையவில்லை. அந்த வியாகூலத்தால் இரண்டு நாட்களுக்கெல்லாம் படுக்கையாய்ப் படுத்து விட்டாள். வாழ்க்கையில் அவள் வைத்திருந்த கடைசி நம்பிக்கை எப்படியாவது ராணியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதுதான். அது முறிந்து விடவே, அவள் இதயம் தாங்க முடியாத அதிர்ச்சியை அடைந்துவிட்டது.

இத்தனைக்கும் 'ஏழை' என்ற ஒரே ஒரு குறையைத் தவிர ரத்னா வேறொரு குறையும் இல்லாதவள். அந்தக் குறைக்குக் கூடக் காரணம் அவள் அல்ல; எல்லாம்வல்ல இறைவன், ஏழை பங்காளன்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டுதானே நேற்று அம்மா அவளைத் தட்டிக் கழித்தாள்? அதேபோல்தான் என்னையும் 'ஏழை' என்பதற்காக அவர்கள் தட்டிக் கழிக்கிறார்கள்!

இது தெரியாமல் அனாவசியமாக அதிர்ச்சியடைந்து அம்மா இப்போது உடம்பைக் கெடுத்துக் கொண்டாளே, அதற்காக அவதிப்படுவது யார்? அம்மாவின் அருகில் இருந்து நாம் சிருஷ்ஷை செய்து கொண்டிருந்தால் சம்பளம் கொடுப்பவன் சும்மா இருப்பானா?

எனக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இதற்கிடையில் அம்மாவோ நாளுக்கு நாள் அப்படியிப்படி நகரக்கூட முடியாதவளாகி விட்டாள். அவளை விட்டுவிட்டு நான் எப்படி வேலைக்குச் செல்வது? ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

உள்ளே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது-என்ன! அதற்குள் அம்மா எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டாளா? இல்லை; என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டதும் ரத்னாதான் வால் நட்சத்திரத்தைப் போல் விரைந்து சென்று மறைந்தாள்-ஆம், நீண்ட ஜாடையாக அவள் ஆடி அசைந்து ஓடியது எனக்கு அப்படித்தான் தோன்றியது!

அதனால் ஏற்பட்ட உள்ளக் கிளுகிளுப்பைப் பெரு மூச்சின் வாயிலாக மெள்ள வெளியேற்றி விட்டு நான் அம்மாவின் அருகில் உட்கார்ந்தேன். நீலி சுடச்சுடக் காப்பியைக் கொண்டுவந்து எனக்கு எதிரே வைத்தாள். சந்தேகக் கண்களுடன் நான் அதை வெறித்துப் பார்த்தேன்; "சாயங்காலம் வந்ததும் காப்பி சாப்பிடுவது வழக்கமாச்சே என்று நான்தான் ரத்னாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் காப்பி போடச்சொன்னேன்!” என்று அம்மா என் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்.

"சரி, உடம்பு எப்படியிருக்கிறது?" என்றேன் நான், என்னை நானே ஏமாற்றிக் கொள்வதற்காக!

"உடம்புக்கு ஒன்றுமில்லை; நீ சாப்பிடு!" என்றாள்.அவள்.

அத்தனை நாளும் இல்லாத உவகையுடன் அந்தக் காபியை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, "நாளையிலிருந்து ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு விட்டேன், அம்மா!" என்றேன் நான்.

"என்னத்துக்காக?”

"எத்தனை நாளைக்குத்தான் பேசாமலிருப்பது? உன்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு டோக வேண்டாமா?”

"அதற்கா ஒரு வாரம்?"

"நாளுக்கு நாள் உடம்பு எப்படி எப்படியிருக்குமோ? உன்னைக் கவனித்துக் கொள்ள என்னைவிட்டால் வேறு யார் அம்மா இருக்கிறார்கள்?"

"ஏன் இல்லை? பகவான் என்னை அப்படியொன்றும் அனாதையாகவிட்டு விடவில்லை; அவர்தான் ரத்னாவை நமக்குத் துணையாக அனுப்பியிருக்காரே?-இன்றைக்கெல்லாம் வெந்நீருக்கும், வேறு காரியங்களுக்குமாக ஆயிரந்தடவை அவளைக் கூப்பிட்டிருப்பேன். கொஞ்சமாவது அலுத்துக் கொண்டாள் என்கிறாய்?-ஊஹும்! என்ன அடக்கம், என்ன ஒடுக்கம்! சொந்த நாட்டுப் பெண் கூடக் கெட்டாள், போடா?”

இதைக் கேட்டதும் எனக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அவளைப் பற்றியே அம்மா இன்னும் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க மாட்டாளா? என்று நான் இருந்த இடத்தை விட்டு நகராமல் உட்கார்ந்திருந்தேன்.

“என்னமோ, அவளுக்கு எல்லா பாக்கியமும் கொடுத்த கடவுள் ஐசுவரிய பாக்கியத்தைத்தான் கொடுக்கவில்லை. ஏதாவது நல்ல இடமாகக கிடைக்க வேண்டுமே; போகிற இடத்திலாவது அவள் நன்றாயிருக்க வேண்டும்!"

எப்படியிருக்கிறது, கதை?-எதற்காக அம்மா என்னை இப்படியெல்லாம் சோதிக்கிறாய்? - உடனே அந்த இடத்தைவிட்டு அப்பால் சென்றுவிட வேண்டும் என்று தோன்றிற்று எனக்கு. "உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்; நான் போய் ராத்திரி சாப்பாட்டுக்கு ஏதாவது தயார் செய்கிறேன்!" என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு எழுந்தேன்.

"உனக்கு என்ன தெரியும்? நீ பேசாமல் இரு; ரத்னாவையே கொஞ்சம் சமைத்துக் கொடுக்கச் சொல்கிறேன்!” என்றாள் அம்மா.

அதை நான் பொருட்படுத்தவில்லை; ரத்னா வேண்டாம்; அவள் சமையல் மட்டும் வேண்டுமாக்கும்! என்று கறுவிக் கொண்டே சமையலறைக்குள் சென்று அடுப்பை மூட்டயத்தனித்தேன். அந்த வாரம் வாங்கிய ஒரு புட்டி மண்ணென்னை வீணானதுதான் மிச்சம்; அடுப்பு எரிந்த பாடாகக் காணோம்!

எரிச்சல் தாங்கவில்லை எனக்கு. கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து வெளியே வந்தேன்; யாரோ'களுக்'கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். சிரித்தவள் அவள்தான்!

அதற்கு மேல் அவள் அங்கு நிற்கவில்லை. சட்டென்று சமையலறைக்குள் நுழைந்தாள்-அடுத்த நிமிஷம் அந்தப் பாழாய்ப் போன அடுப்பு கொழுந்து விட்டெரிந்தது!

அதனாலென்ன, அடுப்பு எரிந்துவிட்டால் மட்டும் போதுமா? முன்பின் எங்கள் வீட்டுக்கு வந்து பழக்கமில்லாத அவள், அரிசி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டாமா? அதற்காவது அவள் என்னுடன் பேசித்தானே தீரவேண்டும்? அந்த சந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் வெளியே நின்று கொண்டிருந்த என்னை அவள் அப்போதும் ஏறெடுத்துப் பார்க்காமல், "இங்கே அரிசி எங்கே இருக்கும்?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்!

நான் மட்டும் அவளுக்கு இளைத்தவனா, என்ன? "இங்கேதான் இருக்கும்!" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்!

அடுத்தாற் போல், “இங்கே கரண்டியைப் பார்த்தாயா, நீலி?" என்றாள் அவள், அங்கே இல்லாத நீலியை நோக்கி!

"இதோ, இங்கேதான் இருக்கிறது நீலி!" என்றேன் நானும், அங்கே இல்லாத நீலியை நோக்கி! பாவம்! அவள் என்ன படித்த பெண்ணா, பணக்காரர் வீட்டுப் பொண்ணா?-நேருக்கு நேராக, 'ஹல்லோ, ஹெள ஆர்யூ?'என்று என்னைக் கேட்க?

மறுநாள் காலை அம்மாவை டாக்டர் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்று சொல்லி அவர் ஆறு வேளை மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்தோம். அங்கே நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத அதிசயம் ஒன்று எங்களுக்காகவே காத்துக் கொண்டிருந்தது. யாரோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லக் கேட்டு அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக அத்தையும் ராணியும் வந்தார்கள். பீரோக்களில் வருடக்கணக்காக உறங்கும் பட்டும் ஜரிகையும் மின்ன, பொன்னும் மணியும் குலுங்க நாலு பேருக்கு முன்னால் 'க்ரீச்'சென்று காரில் வந்து இறங்க வேண்டுமென்றால் சந்தர்ப்பம் எதுவாயிருந்தாலும் சரி-அதைப் பணக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டித்தானே இருக்கிறது?

ஆனால் ஒரு வித்தியாசம்-ராணி என்னைக் கண்டதும் அன்று போல் இன்று கைகுலுக்கவில்லை. அதற்குப் பதிலாக ஓர் அலட்சியப் புன்னகை புரிந்து விட்டு "ஆகாரம் என்ன, க்ளுக்கோஸ்?" என்று கேட்டாள்.

"அப்படியென்றால் என்ன?"என்று அம்மா திரும்பிக் கேட்டாள். அவ்வளவுதான் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது அவளுக்கு. "இப்படியும் ஒரு கர்நாடகம் இருக்குமா?"என்று எண்ணியோ என்னமோ, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்!

"பேசாமல் இருடி!" என்று அத்தை பெருமையுடன் மகளை அடக்கி விட்டு, "உடம்புக்கு இப்போது எப்படியிருக்கிறது? என்று கேட்டாள்.

"நீங்கள் வந்த பிறகு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது!" என்று வெறுப்புடன் சொல்லி விட்டு "ரத்னா கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாம்மா"என்றாள் அவள், படுக்கையில் குப்புறப்படுத்துக் கொண்டே.

அதற்குள் "படுக்கவே படுக்கிறாய்! இன்னும் ஒரு வேளை மருந்து சாப்பிட்டுப் படுத்துக்கோ அம்மா!"என்றேன் நான்.

வண்டியில் சென்று வந்த அலுப்பிலே அவள் கொஞ்சம் சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தாள்; நான் மருந்தை எடுத்து வாயில் ஊற்றினேன். குமட்டிக் கொண்டு வந்து விட்டது; வாயிலெடுத்து விட்டாள்;

உடனே ராணி முகத்தைச் சுளித்துக் கொண்டு, "சீச்சீ, இதென்ன நியூசென்ஸ்!" என்று எரிந்து விழுந்தாள். அதற்குள் வெந்நீர் கொண்டு வந்த ரத்னா கருணையின் வடிவாய் அம்மாவின் வாயைத் துடைத்துவிட்டு, அவளை மெல்லக்கீழே இறக்கி விட்டு, படுக்கையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்!

அப்போதுதான் அம்மாவின் வறண்ட வதனத்தில் என்றுமில்லாத ஜீவகளை தோன்றிற்று; அளவற்ற வாஞ்சையுடன் தட்டுத் தடுமாறி எழுந்து ரத்னாவை தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணிர் வடித்தாள்.

வெட்கத்தைத் தவிர வேறொரு ஆபரணமும் இல்லாத அவள் அதையே பெருமையுடன் பூண்டு, "வேண்டாம் மாமி, வேண்டாம். உடம்பை வீணாக அலட்டிக்கொள்ளாதீர்கள்"என்று எச்சரித்தபடி படுக்கையை சுருட்டி எடுத்துக் கொண்டு குழாயடிக்கு சென்றாள். அவள் தலை மறைந்ததும் "இவள் யார் என்று தெரியவில்லையே" என்றாள் அத்தை.

"இவளா! - இவள்தான் இந்த 'நியூசென்ஸ்'காரிக்கு மருமகளாக வரப் போகிறவள்!" என்றாள் அம்மா ஆத்திரத்துடன். இதைக் கேட்டதும் ராணி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வெளியே சென்றாள். அவளைப் பின் பற்றி "மன்னிக்கு உடம்பும் சரியில்லை; மனமும் சரியில்லை", என்று மழுப்பிக் கொண்டே நாலுபேருக்கு முன்னால் போட்ட வெளிச்சமெல்லாம் போதும் என்று எண்ணியோ என்னமோ, அத்தையும் நழுவினாள்!

அதே சமயத்தில் ஏதோ காரியமாக ரத்னாவைக் கூப்பிட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்த அவளுடைய தகப்பனாரிடம், “இங்கே பாருங்கள்- இனிமேல் நீங்களும் நாங்களும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்களல்ல; எல்லோரும் ஒரே குடும்பந்தான்! இதோ நிற்கிறானே என் பிள்ளை, இவன் தான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை; ரத்னாதான் எங்கள் வீட்டு மருமகள்!"என்றாள் அம்மா.

"எல்லாம் அவன் செயல்!"என்றார் அவர்.