விந்தன் கதைகள் 2/தலையெழுத்து

தலையெழுத்து

யில் சிநேகிதன் பஸ் சிநேகிதன், நாடகமேடை சிநேகிதன், சினிமாக் கொட்டகை சிநேகிதன் இவ்வாறு நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திடீர் என்று எத்தனையோ சிநேகிதர்கள் தோன்றித் தோன்றி மறைகிறார்களல்லவா? அதேமாதிரிதான் செங்கண்ணனும், கருங்கண்ணனும் என்னுடைய கடற்கரைச் சிநேகிதர்களாகத் தோன்றினார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் அவர்கள் மறைந்து விடவில்லை; கடற்கரைக்குப் போகும் போதெல்லாம் என் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டே இருந்தார்கள்.

அதிலும் என்மேல் அளவில்லாத நம்பிக்கை அவர்களுக்கு, அதற்குக் காரணம் என்னவென்றே புரியவில்லை எனக்கு. ஒருவேளை நான் வழக்கமாக அணிந்து வரும் கதராடைதான் காரணமாயிருக்குமோ?

இருக்கலாம். அவர்களுக்குத்தான்கதர் அணிந்தவன்களெல்லாம் காந்தி மகான்களாச்சே! அன்று மாலை நான் வழக்கம்போல் கடற்கரைக்குப் போய் சேர்ந்தபோது, செங்கண்ணனும், கருங்கண்ணனும் கட்டுமரத்துடன் கரையேறிக் கொண்டிருந்தார்கள். "என்ன செங்கண்ணா, இன்று எப்படி வேட்டை?" என்றேன் நான்.

"ஒன்னும் சொகம் இல்லைங்க, பாழாப்போன காத்து தான் இப்படி அடிச்சுத் தொலைக்குதே! கொஞ்சம் ஏமாந்தா ஆளையே தூக்கிகிட்டு இல்லே போயிடும்போல இருக்குது!" என்றான் செங்கண்ணன்.

"அதாச்சும் நடக்குதா, ஒரு நாளைப்போலப் பொறந்து பொறந்து சாகாம, ஒரேடியா செத்தாச்சும் தொலையலாம்!" என்றான் கருங்கண்ணன்.

நான் சிரித்தேன்.

"என்னா சாமி, சிரிக்கிறீங்க?"

"இன்னும் பத்து வருஷம் வாழ்ந்தால் தேவலை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் இன்றே செத்தால் தேவலை என்று நினைக்கிறீர்கள்?"

"யார் யாருக்கு எதிலே சொகம் கெடைக்குமோ அதிலேதான் ஆசை இருக்கும் சாமி?"

"அப்படியானால் உங்களுக்கு வாழ்வதில் ஆசை இல்லையா?"

"ஏது சாமி, வாழ்ந்தாத்தானே எங்களுக்கு அதிலே ஆசை இருக்கப்போவுது?"

"உங்களை யார் வாழவேண்டாம் என்கிறார்கள்? உழைத்தால் நீங்களும் உயரலாமே!"

அவன் சிரித்தான். "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டேன் நான்.

"ஒழைச்சா ஒயராலாம்னு சொன்னீங்களே, அதுக்காகத் தான் சிரிச்சோம், சாமி!"

"ஏன், அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?"

"அது எப்படி இருக்கும் சாமி?சாமி, அவனவன் தலையெழுத்து எப்படியோ அப்படித்தானே எல்லாம் நடக்கும்?"

"சரி, உங்களுடைய தலையெழுத்து எப்படியிருக்கிறது?"

"நாங்க ஒழைச்சா நைனா முகம்மது ஒயரணும்னு இருக்குது சாமி!"

"அவன்யார், அவன்? இரண்டு வாரத்துக்கு முன்னால் இருளப்பன் தெருவிலே, ஏதோ ஒருவீட்டை எட்டாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தானே, அவனா?"

"ஆமாம் சாமி, நேத்துக்கூட இங்கே குதிரைவண்டியிலே வந்து இறங்கல, அவன்தான் சாமி!"

"அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"

"அதை ஏன் கேட்கறீங்க, சாமி! இப்போ விக்கிற விலைக்கு இந்தவலையிலே இருக்கிற மீன் அஞ்சுரூவாய்க்கு பஞ்சமில்லாம போவும். ஆனா என்ன பிரயோசனம்? மூணு ரூவாதானே கொடுக்கப் போறான் அந்தப் புண்ணியாத்மா"

"ஒரு கூடைமீன் ஐந்து ரூபாய்க்கு வாங்குபவனைவிட்டு விட்டு, நீங்கள் ஏன் மூன்று ரூபாய்க்கு வாங்கும் அவனுக்கு விற்கவேண்டும்? யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்கக் கூடாதா?"

"அது எப்படி முடியும், சாமி? போனமாசம் பொத்த லாப்போன குடிசையை பிரிச்சிக் கட்டிக்கிறதுக்காக ஆளுக்கு ஐம்பது ரூவா அவங்கிட்ட கடனா வாங்கிகிட்டோம். அதிலேயிருந்து நாங்க பிடிக்கிற மீனெல்லாம் கூடை மூணு ரூபா வீதம் அவனுக்கே கொடுக்கிறதுன்னும், கடனுக்காவத்தினம் ஒருரூவா கழிச்சிக்கிறதாப் பேச்சுங்க!"

"குடிசை போடும் போதே அதைப்பின்னால் பிரித்துக் கட்டவேண்டியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா? அதற்காக ஏன் முதலிலிருந்தே கொஞ்சங்கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது? அப்படிச் செய்திருந்தால் நைனா முகம்மதுவிடம் நூறு ரூபாய் கடனும் வாங்கியிருக்க வேண்டாம். தினசரி இரண்டு ரூபாய் நஷ்டத்துக்கு மீனையும் விற்றிருக்க வேண்டாமல்லவா?"

"நெசத்தான் சாமி, பொறக்காம இருந்தா சாகாம இருக்கலாம், சாமி!"

"அதைத்தான் நானும் சொல்கிறேன். கடன் வாங்காமல் இருந்தால் கொடுக்காமல் இருக்கலாமல்லவா?"

"முடிஞ்சாத்தானே, சாமி? இன்னிக்குத்தான் பாருங்களேன், அவன் வந்து இந்தமீனை எடுத்துகிட்டுக் கடனுக்கு ஒருரூவா போக, பாக்கி ரெண்டு ரூவா தரப்போறான். ஆளுக்கு ஒண்ணா அதைத்தான் வீட்டுக்குக் கொண்டு போவோம்னா முடியாதுங்களே? காலையிலேயிருந்து கஷ்டப் பட்ட ஒடம்புக்குள்ளே கள்ளுத்தண்ணி போனாத்தான் சரிப்பட்டு வரேங்குது!"

"கஷ்டப்பட்டால் கள் குடிக்க வேண்டுமா, என்ன? உங்களைப்போல் கஷ்டப்படும் குதிரையும், மாடும் கள் குடிக்காதபோது நீங்கள் மட்டும் ஏன் குடிக்க வேண்டும்?"

"அதுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அது தானே சாமி? அதைக் கூடவா, சாமி ஒழிச்சிப்பிடணும்?

"அப்போது தான் உங்கள் கஷ்டம் ஒழியும்"

"கள் ஒழிச்சா கஷ்டம் ஒழிஞ்சுடுமா, சாமி? கஷ்டம் ஒழிஞ்சாத்தான் கள் ஒழியும்!"

"அப்படியானால் உங்களுடைய பெண்டாட்டி பிள்ளைகளெல்லாம் ராத்திரிச் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்?"

"அதுங்களே எங்கேயாச்சும் கூலிவேலை கீலிவேலை செஞ்சி வயித்தைக் கழுவிக்கும், சாமி"

"சரிதான், வருஷத்துக்கு ஒருதடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒருதடவையோபிள்ளை பெற்று வைப்பதோடு உங்கள் குடும்ப சேவை தீர்ந்து விடுகிறதாக்கும்!"

"ம், அதை நெனைச்சிப்பார்த்தா எங்களுக்கே வெட்கமாகத்தான் இருக்குது. என்ன செய்யறது!, சாமி?"

"என்ன செய்யவாவது! முதலில் நீங்கள் இந்தச் 'சாமி சாமி,' என்கிறதை விட்டுத் தொலைக்கணும்; என்னைப் போல நீங்களும் 'சாமிகள்தான்' என்று நினைத்துக் கொள்ளணும்!"

"சரி, நெனைச்சுக்கிட்டோம்!"

"அப்புறம் அந்த நைனாமுகம்மதுவைப் பற்றியும் நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்கவேண்டும். உங்களைப் போன்றவர்களிடம் மூன்று ரூபாய்க்கு வாங்கிய மீனை ஒன்பது ரூபாய்க்கோ, பன்னிரண்டு ரூபாய்க்கோ விற்று அவன் ஆயிரமாயிரமாகப் பணம் சேர்த்து விட்டான். இருக்க வசதியானவீடு, வேளாவேளைக்குச் சுகமான சாப்பாடு, வெளியே போய் வருவதற்கு குதிரைவண்டி எல்லாம் அவனுக்குக் கிடைத்து விட்டன. இத்தனைக்கும் உங்களைப் போல் அவன் ஒருநாளாவது கஷ்டப்பட்டதுண்டா? கிடையாது; கிடையவே கிடையாது. உழைத்துக் கொடுத்தவர்கள் நீங்கள்; உண்டு கொழுத்தவன் அவன். முதலில் உங்கள் மீனை விலைக்கு வாங்கிய அவன் பின்னால் உங்களையே விலைக்கு வாங்கி விட்டான்! ஆரம்பத்திலேயே நீங்கள் அவனிடம் கடனும் வாங்காமல் அதற்காக மீனையும் விற்காமல் இருந்திருந்தால் இன்று அவனைப்போல் நீங்களும் சௌகரியமாக வாழ்ந்திருக்கலாமல்லவா?

"அதெல்லாம் நம்மாலே ஆகிற காரியமா, சாமி?"

"என் ஆகாது சாமி, எல்லாம் முயன்றால் ஆகும், சாமி!"

"ம், அன்னிக்கி எழுதினதை அவன் அழிச்சா எழுதப் போறான்? நாங்க கஷ்டப்படணுங்கறது எங்க தலையெழுத்து; நைனாமுகம்மது சொகப் படணுங்கிறது அவன் தலையெழுத்து!" என்றான் அவன்.

எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்து விட்டது. “கையெழுத்துக் கூடப் போடத் தெரியாத பயல்களெல்லாம் தலையெழுத்தைக் கட்டிக்கொண்டு அழும்வரை தமிழ் நாடாவது, உருப்படுவதாவது!” என்று கறுவிக் கொண்டே, எழுந்து அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நடையைக் கட்டினேன்.