விந்தன் கதைகள் 2/பதவி

பதவி

ண்டண், டண் டண், டண் டண், டாண் டாண்!

"வயிறு பன்னிரண்டு மணிக்கே சாப்பாட்டு மணி அடித்து விட்டது; இவன் என்னடா வென்றால் ஒரு மணிக்கு அடிக்கிறான்!" என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த 'ஸ்டிக்'கைக் 'கே'ஸின் மேல் வைத்து விட்டுக் கையைக் கழுவுவதற்காகக் குழாயடியை நோக்கிச் சென்றான் கதிர்வேலு.

"எத்தனை மணிக்கு அடித்தால் என்ன, நம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதானே?- செய்தால் கூலி; செய்யாவிட்டால் வயிறு காலி!" என்று சொல்லிக்கொண்டே அவனைத் தொடர்ந்தான் கோவிந்தசாமி.

"ஆமாமாம், நாமெல்லாம் 'எக்ஸ்ட்ரா கம்போஸிட்டர்'கள் தானே? அதைக்கூட மறந்துவிட்டேன், பசியில்!" என்று கதிர்வேலு தனக்குத் தானே அசடு வழியச் சிரித்துக் கொண்டான்.

அப்போது, "பசி ஒரு வரப்பிரசாதம்!" என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் ஆரோக்கியசாமி.

"யாருக்கு?" என்று அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அருணாசலம் கேட்டான்.

"போயும் போயும் அதை உன்னிடம்தானா சொல்ல வேண்டும்?" என்றான் ஆரோக்கியசாமி, அப்போது தான் காரை விட்டுக் கீழே இறங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்த முதலாளியைக் கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டே.

அதற்குள், "ஏண்டா மெஷின்களெல்லாம் நின்றுவிட்டன?" என்று யாரையும் குறிப்பிட்டுக் கேட்காமல், எல்லோருக்கும் பொதுவாக நின்று இரைந்தார் அவர்.

"ஆபீஸ் கடிகாரம் அரை மணி நேரம் 'ஸ்லோ ' என்பதற்காக அவர்களெல்லாம் பன்னிரண்டரை மணிக்கே சாப்பாட்டுக்குப் போய்விட்டார்கள், ஸார்!" என்றான் அருணாசலம், வழக்கம்போல் எல்லோரையம் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று.

பீதாம்பரத்துக்கு இது பிடிக்கவில்லை; "இதோ வந்து விட்டாரேடா ‘போர்மேன் பொன்னையா' புனர்ஜன்மம் எடுத்து!" என்று ஏகாம்பரத்தின் காதோடு காதாகக் கிசுகிசுத்தான்.

அருணாசலத்தின் 'எலிக்கா'தில் அது விழுந்து விட்டது. அவன் விடுவானா, அந்தச் சந்தர்ப்பத்தை? "தட்டிக் கேட்க ஆளில்லாமற் போனதால்தான் எல்லோரும் சண்டப்பிரசண்டர்களாகிவிட்டீர்கள்!" என்று 'போர்மேன்' இல்லாத குறையை நாசூக்காகத் தெரிவித்துக்கொண்டான், முதலாளியிடம்.

அவரோ அதைக்கூடப் பொருட்படுத்தாமல், "சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு! எப்போது பார்த்தாலும், சாப்பாட்டு நினைவுதான் இந்தப் பயல்களுக்கு!" என்று தம்மைப் பொறுத்தவரை அந்த நினைவே இல்லாதவர்போலச் சாப்பிடப் போய் விட்டார்!

எப்படியிருக்கும், அருணாசலத்துக்கு? அவருக்காகத் தான் எடுத்துக் கொண்ட சிரமத்துக்கு, அவரிடமிருந்து கேவலம் ஒரு 'சபாஷ்' கூடவா கிடைக்கக்கூடாது தனக்கு?- இதை நினைத்ததும், அழுகையே பொத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது அவனுக்கு; முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு திரும்பினான்.

"கவலைப்படாதே! போர்மேன் பொன்னையா செத்ததே உனக்காகத் தானே? அவருடைய பதவிக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள், இங்கே? கவலைப்படாதே தம்பி, கவலைப்படாதே!" என்று அவனுடைய தோள்களில் ஒன்றைப் பற்றி அவனைத் தேற்றினான் கோவிந்தசாமி.

"அவன் என்ன செய்வான், பாவம்!" என்று சொல்லிக்கொண்டே அருணாசலத்தின் இன்னொரு தோளைப் பற்றி, "பதவி, மோகம் ஒருவனைப் பிடித்து விட்டால் அது அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது!" என்று கதிர்வேலும் கோவிந்தசாமியுடன் சேர்ந்து கொண்டு அவனைத் தேற்றாமல் தேற்றினான்!

"என்னை யாரும் தேற்ற வேண்டாம்; எட்டிப் போங்கள்!" என்று அவர்களுடைய கையைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு; 'விடுவிடு' வென்று வெளியே போய்விட்டான் அருணாசலம்.

அவன் தலை மறைந்ததும், 'நரிப் பயல்!' என்று கருவிக்கொண்டே கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றை எடுத்துத் தன் கேஸுக்கு அடியிலேயே உட்கார்ந்து அவிழ்த்தான் கோவிந்தசாமி.

அப்போதுதான் வழக்கமாத் தனக்குப் பக்கத்தில் உட்காரும் கதிர்வேலு அங்கே உட்காரவில்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.

தனக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்தவன் என்ன ஆனான்? "கதிர்வேல், கதிர்வேல்!" என்று குரல் கொடுத்துப் பார்த்தான் கோவிந்தசாமி, பதில் இல்லை.

எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு மூலையில் ஓர் ஆள் உயரத்துக்குமேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 'ரீம்'களின்மேல் அவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

"அட பாவி இன்று நீ சோறு கொண்டு வரவில்லையா, என்ன?-ம், கொண்டு வந்திருந்தால் படுப்பதற்கு அந்த மூலையை ஏன் தேடியிருக்கப் போகிறாய்?"-அவிழ்த்த கட்டுச் சோற்றை அப்படியே கட்டி வைத்துவிட்டுச்சென்று அவனை எழுப்பினான் கோவிந்தசாமி.

"ஏண்டா, இன்னுமா நீ சாப்பிடவில்லை?" என்று தான் ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதுபோல் அவனைக் கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான் கதிர்வேலு.

"உன்னை விட்டுவிட்டுச் சாப்பிடும் அளவுக்கு நான் இன்னும் 'பெரிய மனிதனாகி விடவில்லையே? இறங்கி வா, இருப்பதை இருவரும் பகிர்ந்து கொள்வோம்."

"வேண்டாம், அது உனக்கும் போதாது; எனக்கும் போதாது!"

"மனம் 'போதும்' என்று சொல்லும்போது வயிறு 'போதாது' என்று சொல்லாது; நீ வாடா!" என்று அவனை இழுத்துக்கொண்டு வந்தான் கோவிந்தசாமி.

இருவரும் உட்கார்ந்தனர்; "இருப்பதைப் பகிர்ந்து கொள்வதற்குக்கூட இன்னோர் இலை வேண்டுமே?" என்றான் கதிர்வேலு.

"ஏன், இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டால் என்னவாம்?"

"அது அவ்வளவு நன்றாயிருக்குமா?" என்றான் அவன், கொஞ்சம் அருவருப்புடன்.

"ஓட்டலில் எத்தனையோ பேர் சாப்பிட்ட எச்சில் தட்டில் நாமும் சாப்பிடுகிறோமே, இங்கே ஒருவருடைய எச்சில் இலையில் இன்னொருவர் சாப்பிடக் கூடாதா?" என்றான் இவன், கொஞ்சம் விறுவிறுப்புடன்.

"அது நாகரிகம்; இது அநாகரிகமில்லையா?" என்றான் கதிர்வேலு சிரித்துக்கொண்டே.

"அந்த நாகரிகத்திற்கு இந்த அநாகரிகம் ஒன்றும் கெட்டுப் போய்விடாது; நீ சாப்பிடு!" என்றான் கோவிந்தசாமி.

இருவரும் இடம் மாறி எதிரும் புதிருமாக உட்கார்ந்தார்கள்; ஆளுக்கு நாலு கவளம் எடுத்து விழுங்கிவிட்டு வெளியே வந்தார்கள்.

"உனக்குத் தெரியுமா? அடுத்த முதல் தேதியிலிருந்து நம் அனைவரையும் மாதச் சம்பளத்துக்கு அமர்த்திக்கொண்டு விடப் போகிறார்களாம்" என்றான் கோவிந்தசாமி.

"ஏனாம்?" என்று கதிர்வேலு கேட்டான்.

"மெஷின் ஸெக்ஷனுக்கு வேலை குறைவாகவும், கம்போஸிங் ஸெக்ஷனுக்கு வேலை அதிகமாகவும் இருப்பதால்!"

"அதனால் என்ன?"

"இத்தனை வாரங்களாகப் பத்துப் பன்னிரண்டு என்று கூலி வாங்கிக்கொண்டிருந்த நாம், இந்த வாரம் இருபது ரூபாய் வாங்கிவிடவில்லையா, அது முதலாளிக்குப் பிடிக்கவில்லை"

"அப்படியானால் கம்போஸிட்டர்கள் 'பெர்மெனெண்ட்' ஆகும்போது, 'மெஷின் மென்'களெல்லாம் 'டெம்பரரி' யாகிவிடுவார்களா, என்ன?"

"ஆனாலும் ஆவார்கள், யார் கண்டது?"

"அநேகமாக அருணாசலம்தான் நமக்கெல்லாம் போர்மேனாக நியமிக்கப்படுவான், இல்லையா?" என்று கதிர்வேலு கேட்டான்.

"அவன் என்னமோ அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்; முதலாளி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ?" என்றான் கோவிந்தசாமி.

"நினைப்பதென்ன?-அவரும் அநேகமாக யாராவது ஓர் ‘ஆமாம் சாமி'யைத்தான் தேடிப் பிடிப்பார்; அதற்கு நம் அருணாசலம்தான் லாயக்கு!"

"அவருக்குத் தெரியாது, வேறு எவனைப் பிடித்துப் போட்டாலும் அவனும் உடனே 'ஆமாம் சாமி' யாகிவிடுவான் என்று!"

"இதனால் என்ன ஆகிறது, தெரியுமா?- திறமைக்கு இடம் இல்லாமற் போய்விடுகிறது!" "திறமைக்கு இடம் கொடுத்தால் 'ஆமாம் சாமி'க்கு இடம் இல்லாமற் போய்விடுகிறதே? இவ்வளவு பெரிய உலகத்தில் தன்னைப் புத்திசாலி' என்று ஒப்புக்கொள்ள 'ஒரே ஒருவ'னாவது வேண்டாமா, முதலாளிக்கு?"

"ம், எவன் வந்தாலும் அவன் தலை கனக்கப் போவது மட்டும் நிச்சயம்!"

"தலை கனத்தால் கனத்துவிட்டுப் போகட்டும்; தன்னுடைய பதவியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களுடைய வாயில் அவன் மண்ணைப் போடாமலிருந்தால் சரி!"

"அப்படித்தான் நினைத்தான் போர்மேன் பொன்னையா-ஆனால் என்ன ஆயிற்று? ஒரே நாள் காய்ச்சலில் ஆளே அவுட்"

"அவன் மட்டுமா?-பொழுது விடிந்தால் அவனைப்போல் எத்தனையோ பேர் போய்க் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் புத்தி வருகிறதா, எவனுக்காவது? 'ஊஹும்!"

"தான் வாழ்ந்தால் போதும் என்று எவன் நினைக்கிறானோ, அவன் தலையில் இடியாவது விழுகிறதா?-அதுவும் இல்லை!"

"எங்கே விழுகிறது? - அதுவும் நல்லவர்களைத்தான் விரும்புகிறது; கெட்டவர்களை விரும்பமாட்டேன் என்கிறது!"

"அதைச் சொல்லு, முதலில்!" என்று சொல்லிக்கொண்டே கதிர்வேலு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான்.

"ம், எல்லாம் முதல் தேதி பிறந்தால் தெரிந்து விடாதா? - நீ எனக்கும் ஒரு பீடி இருந்தால் கொடு!" என்றான் கோவிந்தசாமி.

"இதிலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான், இருவரும்!" என்று தான் பிடித்துக்கொண்டிருந்த பீடியில் பாதியைப் பிட்டு அவனிடம் கொடுத்தான் கதிர்வேலு.

இன்றைய நேற்றைய நட்பா, அவர்களுடையது? கடந்த இருபது வருட காலத்திய நட்பாயிற்றே?- எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயிருந்தார்கள் அவர்கள், மனைவிமார்களைத் தவிர!

முதல் தேதி பிறந்தது. ஆனால் கதிர்வேலு எதிர்பார்த்தபடி, அருணாசலம் 'போர்மே'னாக நியமிக்கப்படவில்லை; கதிர்வேலே போர்மேனாக நியமிக்கப்பட்டான்.

காரணம், மற்றவர்களுக்குப் பிடிக்காத அருணாசலத்தைவிடப் பிடிக்கும் கதிர்வேலே மேல் என்று முதலாளி நினைத்ததுதான்!

புறாவைப் பிடிக்க வேண்டுமென்றால் புறாவைக்காட்டித்தானே பிடிக்க வேண்டும்? காக்கையைக் காட்டிப் புறாவைப் பிடிக்க முடியுமா?

இது தெரியாத அருணாசலம் முதலில் கொஞ்சம் புழுங்கினான். பிறகு, 'பகையாளியின் குடியை உறவாடிக் கெடு!' என்று எண்ணித் துணிந்தவனாய் வழக்கம்போல் எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று, "என்ன இருந்தாலும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்; உங்களுக்கு என் இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்!" என்றான் வாயெல்லாம் பல்லாக.

"அப்படி என்று ஒன்று இருக்கிறதா என்ன, உனக்கு" என்று வியப்புடன் கேட்டான் ஆரோக்கியசாமி.

"எப்படியென்று?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் அருணாசலம்.

"ஒன்றுமில்லை!" என்று சொல்லிக்கொண்டே அவனை விட்டு அப்பால் சென்ற ஆரோக்கியசாமி "இவனுக்காவது, இதயம் என்று ஒன்று இருப்பதாவது!" என்று தனக்குத்தானே முனகிக் கொண்டான்.

எதிர்பாராத விதமாகக் கதிர்வேலுக்குக் கிடைத்த பதவி கோவிந்தசாமியை ஒரே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது. ஒரு கணம் ஒன்றும் பேச முடியாமல் தழுதழுத்து நின்ற அவன், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக்கொண்டு, "வாழ்த்தாதே, முதலில் உன் வாயால் அவனை வாழ்த்தாதே!" என்று கத்தினான்.

"ஏன், அவரை நான் வாழ்த்துவது உனக்குப் பிடிக்கவில்லையா?" என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதினான் அருணாசலம்.

அதைப் புரிந்து கொள்ளாத அப்பாவி கோவிந்த சாமியோ, "ஆம், அவனை நீ வாழ்த்துவது எனக்குப் பிடிக்கத்தான் இல்லை. அதிலும், அவனுக்குக் கிடைத்த பதவி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று நீ சொல்வது அவனுடைய திறமையைக் குறைத்துப் பேசுவது போலிருக்கிறது. போ, எட்டிப் போ!" என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டுத் தன் நண்பனை அப்படியே அணைத்துக்கொண்டு விட்டான்!

இந்தச் சமயத்தில், "முதலாளி உங்களைக் கூப்பிடுகிறார்!" என்று ஏவலாள் வந்து சொல்லவே, "விடு, என்னை!" என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக்கொண்டே அவனுடைய பிடியிலிருந்து அவசர அவசரமாக விலகி, அவருடைய அறையை நோக்கி நடந்தான் கதிர்வேலு.

அவனுடைய 'அவசரம்' கோவிந்தசாமியை என்னவோ செய்வது போலிருந்தது. இதற்குள் இவனிடம் ஏன் இந்த மாறுதல்? ஒருவேளை இவனையும் அந்தப் பாழும் பதவி 'ஆமாம் சாமி'யாக்கி விடுமோ? தான் வாழப் பிறர் வாயில் மண்ணைப் போட வைத்து விடுமோ?' என்று தனக்குத்தானே கேள்விமேல் கேள்வியாக எழுப்பிக்கொண்டு நின்றான்.

அவனுடைய நிலையை ஒருவாறு புரிந்து கொண்டவன்போல், "பதவி வேலை செய்ய ஆரம்பித்து விட்டதப்பா, பதவி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது!" என்றான் ஆரோக்கியசாமி பெருமூச்சுடன்.

றக்குறைய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முதலாளியின் அறையை விட்டுக் கதிர்வேலு வெளியே வந்தபோது, "விழுந்தது; முதலாளி சொன்னதெல்லாம் என் காதிலும் விழத்தான் விழுந்தது. அதிலே ஒரு 'பியூட்டி' என்னவென்றால் எல்லாவற்றுக்கும் என்னைப்போல் நீங்களும் 'ஆமாம்' போட்டுக்கொண்டிருந்தீர்கள் பாருங்கள், அதுதான் அங்கே பாயிண்ட் " என்று அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான்; கையோடு கையைச் சேர்த்துப் பிசைந்தபடி அருணாசலம் அவனுக்குப் பின்னால் கூனிக் குறுகி வந்து கொண்டிருந்தான்.

"நீதானா!" என்றான் கதிர்வேலு - அவன் குரலில் இப்போது அவனையும் அறியாமல் ஓர் 'அலட்சிய பாவம்' இடம் பெற்றிருந்தது.

"ஆமாம் ஸார், நானேதான் ஸார்!" என்றான் அருணாசலம், அத்தனை நாட்களும் இல்லாத 'ஸா'ரைப் போட்டு!

அந்த 'ஸார்' தன் தலையைச் சற்றே கனக்க வைப்பதைக் கதிர்வேலு உணர்ந்தான்; ஆனால் தன் மார்பு அதனால் விம்மிப் புடைத்ததை அவன் அறியவில்லை.

"அவர் சொன்னவையெல்லாம் உங்களுக்குப் பிடித்தது போல் எனக்கும் பிடிக்கத்தான் பிடித்தன; ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் பிடிக்கவில்லை!" என்று மேலும் கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதினான் அருணாசலம்.

அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; "என்ன அது?" என்று உடனே கேட்டுவிட்டான் கதிர்வேலு.

அது போதாதா, அவனுக்கு? "ஆளுக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் என்று பேசி, ஆறு பேரை வைத்துக்கொண்டு இப்போதுள்ள வேலையைச் செய்து முடித்தால் உங்களுக்கு மாதம் ரூபாய் இரு நூறு சம்பளம் கொடுக்கிறேன் என்று சொன்னாரே, அதைத்தான் சொல்கிறேன்!" என்று தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டான்!

"ஏன், எனக்கு மாதம் இருநூறு ரூபாய் சம்பளம் தருகிறேன் என்று அவர் சொன்னது உனக்கும் பிடிக்கவில்லையா?" என்று கேட்டான் கதிர்வேலு பகவான் பக்தனைச் சோதிப்பது போல.

அந்தப் பக்தனா அதற்கெல்லாம் அயர்ந்து விடுபவன்? "நன்றாய்ச் சொன்னீர்கள்! உங்களுடைய அந்தஸ்துக்கு மாதம் ரூபாய் முந்நூறாவது சம்பளம் தருகிறேன் என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும்? தவறிவிட்டார்; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தவறித்தான் விட்டார்!" என்று சொல்லி, பகவானின் அருளுக்கு உடனே தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்டு விட்டான்!

உச்சி குளிர்ந்த பகவான், "ஓ, அதற்குச் சொன்னாயா?" என்று தன் தலையைச் சற்றே ஆட்டினார்.

"ஆமாம், அதற்குத்தான் சொன்னேன்! இப்போதுகூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை; ஆறு பேரை வைத்துக்கொண்டு அவர் முடிக்கச் சொன்ன வேலையை ஐந்தே பேரை வைத்துக் கொண்டு முடித்து விடுகிறேன் என்று சொல்லிப் பாருங்கள் - இன்னும் ஓர் ஐம்பது ரூபாயாவது உங்களுக்குக் கூடக் கிடைக்கும்"

இதைக் கேட்டதும், 'சொல்லிப் பார்க்கலாம் போலிருக்கிறதே?' என்று உள்ளுற நினைத்தான் கதிர்வேலு; ஆனால் அதை அவன் வெளியே சொல்லவில்லை.

"அப்புறம் போக்குவரவு சௌகரியத்துக்காக உங்களுக்கு ஒரு 'ஸைக்கிள்' வாங்கித் தருகிறேன் என்று சொன்னார் பாருங்கள், அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. உங்களுடைய அந்தஸ்துக்குக் கேவலம் ஒரு 'ஸ்கூட்டர்' கூடவா வாங்கிக் கொடுக்கக் கூடாது?"

'கொடுக்கலாம் போலிருக்கிறதே?' என்று நினைத்தான் கதிர்வேலு; ஆனால் அதையும் அவன் வெளியே சொல்லவில்லை.

"சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - இனி உங்களுடைய அந்தஸ்தை நீங்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நேற்று வரை நீங்கள் எந்தச் சக்தியும் இல்லாத எக்ஸ்ட்ரா கம்போஸிட்டராக இருந்திருக்கலாம்-இன்றோ நீங்கள் போர்மேன்; எல்லாச்சக்தியும் வாய்ந்த போர்மேன். அவர்தான் சொல்லிவிட்டாரே, நீங்கள் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம்; விரும்பாவிட்டால் யாரை வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று!- அப்புறம் என்ன, முதலில் உங்களைவிடத் திறமைசாலிகள் வேறு யாராவது இங்கே இருந்தால் அவர்களை ஈவிரக்கமின்றி வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பதவி நிலைக்கும். அடுத்தாற்போல் உங்களை இனி யாராவது, 'வாடா, போடா' என்று மரியாதைக் குறைவாகப் பேசினால் அவர்களையும் தயவு தாட்சண்யமின்றி வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்; அப்போதுதான் உங்களுடைய அந்தஸ்து பரிமளிக்கும்"

'அனுப்பவேண்டியதுதான்; தன்னுடைய பதவிக்கு யார் பங்கம் விளைவித்தாலும் சரி, அவர்களை உடனே வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்!' என்று சொல்ல நினைத்தான் அவன்; ஆனால் சொல்லவில்லை.

இத்தனைக்கும் மௌனம் சாதித்த பிறகு இனி பொறுப்பானேன் என்று, "ஆமாம், அவர் சொன்ன அந்த ஆறு பேர்-அந்த ஆறில் 'நமக்'காக ஒன்றைத் தள்ளிவிட்டால் ஐந்து பேர், 'யார், யார்' என்று தீர்மானித்து விட்டீர்களா, நீங்கள்?" என்று மெல்ல விஷயத்துக்கு வந்தான் அருணாசலம், அந்த 'நமக்'கில் தன்னையும் அவனையும் மட்டுமே சேர்த்துக் கொண்டு!

"அதெல்லாம் தீர்மானித்தாகி விட்டது; என்னுடைய மேஜைக்குச் சென்றதும் எழுதி அனுப்ப வேண்டியதுதான் பாக்கி"' என்றான் கதிர்வேலு.

சிறிது நேரத்துக்குப் பிறகு 'கம்போஸிங் செக்ஷ'னுக்குள் நுழைந்த கதிர்வேலுவை, 'வாடா, வா!' என்று வழக்கம்போல் 'டா' போட்டு வர வேற்று, "இவ்வளவு நேரமாகவா முதலாளியும் நீயும் பேசிக்கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான் கோவிந்தசாமி.

அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, காதோரத்தில் செருகி வைத்திருந்த பென்சிலை எடுத்தான் கதிர்வேலு.

அதற்குள் ஒரு காகிதத்தை எடுத்துப் படு பவ்வியமாக அவனிடம் நீட்டினான் அருணாசலம். அதை வாங்கி, '1, அருணசலம்' என்று எழுதினான் அவன்!

"பிள்ளையார் சுழிக்குப் பதிலாக அவனுடைய பெயரை எழுதவே எழுதினாய்; குறைந்த பட்சம் மூன்று குட்டும், மூன்று தட்டும், மூன்று தோப்புக் கரணமுமாவது போட்டுவிட்டு எழுதக் கூடாதா?" என்றான் ஆரோக்கியசாமி.

"மறந்து விட்டிருப்பான்!" என்றான் பீதாம்பரம்.

"அப்பொழுதே ஞாபகப்படுத்தி யிருக்க வேண்டும்" என்றான் ஏகாம்பரம்.

அவர்கள் அனைவரையும் சேர்ந்தாற்போல் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, '2. குமாரசாமி, 3. முத்தையா, 4. நாராயணன், 5. பஞ்சாட்சரம்' என்று எழுதி, "இந்தாப்பா அருணாசலம், இதை எடுத்துக்கொண்டு போய் முதலாளியிடம் கொடுத்துவிடு; ‘ஆறாவது பெயரைக்காணோமே?' என்று கேட்டால், 'ஐந்து பேரே போதுமாம்!' என்று சொல்லிவிடு!" என்றான் கதிர்வேலு.

"சரி, ஸார்!" என்று அதை வாங்கிக்கொண்டு சிட்டாய்ப் பறந்த அருணாசலம், 'தொலைந்தான்; இனி கதிர்வேலு தொலைந்தான்! ‘எல்லோருக்கும் வேண்டியவர்' என்பதற்காகத்தானே அவருக்குப் போர்மேன் பதவி? இப்போதோ, அவர் யாருக்கும் வேண்டாதவராகி விட்டார். இனி, நான் 'எல்லோருக்கும் வேண்டியவனாவதற்கு வழி வகைகளைத் தேட வேண்டும் வெற்றி, எனக்கே வெற்றி!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அதற்குள் விஷயத்தை ஒருவாறு புரிந்து கொண்ட ஆரோக்கிய சாமி, "நாங்கள்?" என்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டு, கதிர்வேலுவின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்.

"நீங்கள் வீட்டுக்குப் போகலாம்!" என்றான் அவன் துணிந்து.

"நான் கூடவா?" என்றான் கோவிந்தசாமி. 'கூடவா' என்பதற்கு மட்டும் கொஞ்சம் கூடுதலான அழுத்தம் கொடுத்து!

"ஆம், முதலாளியின் உத்தரவு அது!" என்றான் கதிர்வேலு, தன்னை அவனிடம் காட்டிக் கொடுத்துக் கொள்ள விரும்பாமல்,

"இருக்கும், இருக்கும்!" என்றான் ஏகாம்பரம்.

"இல்லாமலா சொல்வார், போர்மேன்?" என்றான் பீதாம்பரம்.

"போர்மேன் இல்லை அப்பா, 'பொய்மேன்' என்று சொல்லு!" என்று அவன் சொன்னதைத் திருத்தினான் ஆரோக்கியசாமி.

"வருந்துகிறேன் நண்பா, உன்னைப் பொய் சொல்ல வைத்ததற்காக நான் வருந்துகிறேன்!" என்றான் கோவிந்தசாமி.

"எனக்காக நீ ஒன்றும் வருந்த வேண்டாம்!" என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சொன்னான் கதிர்வேலு.

கோவிந்தசாமிசிரித்தான்; சிரித்துவிட்டு, "ஆஹா! பதவி மோகம் ஒருவனைப் பிடித்துவிட்டால், அது அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிடுகிறது!" என்று அன்றொரு நாள் அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிச் சொல்லிவிட்டு நடந்தான்.

அதற்குள் முதலாளியைப் பார்த்துவிட்டு வந்த அருணாசலம், "பார்த்தாயா, அவன் உன்னையே வீட்டுக்கு அனுப்பிவிட்டான்!" என்று தன் அடுத்த முயற்சியை அன்றே ஆரம்பித்து வைத்தான்.

அதற்கும் சிரித்தான் கோவிந்தசாமி; சிரித்து விட்டு, "அவன் என்னை வீட்டுக்கு அனுப்பவில்லை; தன்னைத் தானே அனுப்பிக் கொண்டிருக்கிறான்!" என்றான், தீர்க்கதரிசனத்துடன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=விந்தன்_கதைகள்_2/பதவி&oldid=1238321" இலிருந்து மீள்விக்கப்பட்டது