வெங்கலச் சிலை

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


 
மன்றம் வெளியீடு-2

முதற் பதிப்பு: செப்டம்பர் 1951
இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1951
மூன்றாம் பதிப்பு : மார்ச்சு 1953



 
விலை அணா 8




 
உரிமையுடையது.

ரெயின்போ பிரிண்டர்ஸ், திருச்சிராப்பள்ளி.

பதிப்புரை

உதிரம் சிந்த உழைத்து நிற்கும் சமூகத்தின் உயர்வுக்காக உழைத்து, அவர்களை மனிதர்களாக்கி மாண்புறச் செய்து, உழைப்பவனின் உதிரத்தை உறிஞ்சி உப்பியிருக்கும் முதலாளித் தத்துவத்திற்குச் சாவு மணியடித்து சமதர்மக் கொள்கையை அகிலமெல்லாம் பரப்பப் பாடுபட்ட பாட்டாளிகளின் தந்தை லெனின் அவர்களின் வெங்கலச்சிலை.

சிந்திக்கும் சிந்தனையாளரின் சிந்தனைக்குச் சீரிய விருந்தாக எமது இரண்டாவது வெளியீடான 'வெங்கலச் சிலை' யைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழ் மன்றத்தார்

வெங்கலச்சிலை


விளாடிவாள்டாக் பொது உடைமைப் பொன் நாட்டின் புரட்சி வேந்தன் லெனின் ஐரோப்பாவின் முதலாளி நாடுகளை வெங்கலச் சிலையுருவில் பார்க்கின்றான். மக்களுடைய ரத்த நீர் வார்த்து வளர்த்த பூங்கா. பணப் பேழைகள் பருவம்போல் வளர, தீவிர சிந்தனையாளர்கள் தீட்டிய திட்டத்தால், எல்லாருக்கும் எல்லாம் எனுமளவுக்கு, பண உலகத்தைத் தொழில் திறமையால் சிங்காரித்து, அந்தக் களைப்பால் கைகால் சோர்ந்து விழுந்து கிடந்த தொழிலாளர்களைத் தட்டி எழுப்பிய மனிதகுல மாணிக்கத்தின் சிலை. மானிடவர்க்கம் மனதார தலை வணங்கிய மண் பொதுத்தந்தையின் சிலை. அதிகார மமதையை ஆட்டிக் குலிக்கிய அஞ்சா நெஞ்சன் சிலை. தனது புரட்சித் தமுக்கில் பயங்கர ஓசையை எழுப்பி அகிலத்தின் அண்ட முகடெல்லாம் அதிர்ச் செய்த மாவீரனின் சிலை.

மனிதாபிமானமற்ற மன்னர்களின் கிரீடத்தை மண்ணில் உருளச் செய்து, மனித சக்திக்குப் புதிய உணர்வளித்த உத்தமனின் சிலை.

சற்றேறக்குறைய முந்நூறு ஆண்டுகள் மங்கோலியாவுக்கு அடிமைப்பட்டுக் கிடந்து, பயங்கர ஈவான் என்ற வீரனால் மீட்கப்பட்டு, பீடர் பெரியாரால் செம்மைப் படுத்தப்பட்டு, பரம்பரை பரம்பரையாக, ராம் நோவ் குடும்பத்தார்கள் எனும் ஜார் குடும்பத்தாரால் ஆளப்பட்டு, கடைசி மன்னனான இரண்டாவது நிகோலாஸ் என்ற கொடுங்கோலனான ஜார் மன்னனை, வேட்டையாடி வெட்டி வீழ்த்தி மாபெரும் புரட்சியையுண்டாக்கி அவன் வாழ்ந்த மண்டலத்துக்கு வாழ்வளித்த மனித வர்க்கத்தின் சாட்சியான, வீரன் லெனின் வெங்கலச்சிலையையே இங்கு குறிப்பிடுகிறோம்.

மார்க்க போதகர்கள், மதவாதிகள், ஆண் மார்த்தீக வாதிகள், தங்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில், தங்கள் கற்பனா சக்தியால், பல மண்டலங்களையுண்டாக்கி, அதில் ஒன்றான பர மண்டலத்தின் வழி காட்ட, பாவங்களை மன்னிக்க, பாதத்தில் விழுந்து பாமர பக்தர்கள் கும்பிட, பாத காணிக்கை செலுத்த, பலமான கற்கோட்டைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் செம்புச் சிலையைப்பற்றியல்ல நாம் இங்கு குறிப்பிடுவது.

வாழ்விழந்த மனித சமுதாயம் வஞ்சனையால் வாட்டப்பட்டதை எண்ணி, மனம் குமுறி நெஞ்சையள்ளும் விதமாக, வெஞ்சமரில் போராடப் பஞ்சைகளை அஞ்சாத வீரர்களாக்கி மறுமலர்ச்சி கண்ட செஞ்சொல் வீரன், புது யுகங்கண்ட புனிதன், பழமையை வெட்டிச் சாய்த்த வீர வேங்கை, புரட்சியின் கர்த்தா, அசையாது மக மேருவைப் போன்றிருந்த அந்த உலக ஏற்பாட்டை சிறுகச் சிறுக, ஆனால் விறு விறுப்பாக வீழ்த்திய வீரத் தோன்றல் விளாடிவாஸ்டாக் நகரில் வெங்கல உருவில் பார்க்கின்றான்.

ருஷ்ய அரச பரம்பரையின் அகம்பாவக் கோட்டையை அசைத்துக் காட்டினான். அவர்கள் அன்று வரை மாசில்லாத அரசாங்கம் என எண்ணியிருந்த கௌரவக் கண்ணாடியில் புரட்சி என்ற ஓர் களங்கக் கோட்டை வரைந்து காட்டினான்.

ருஷ்ய ராணுவத்தமுக்கில் பேரோலி எழுப்பிப் பெரும்படை ஒன்று திரட்டினான். வீறுகொண்டெழுந்த மக்களின் விண்ணப்பங்களை வாங்க மறுத்த வேந்தனை வேரற்ற மரம்போல் சாய்த்தான். செயலற்றுக் கிடந்த மக்களைச் சிந்தனை யந்திரமாக்கினான். கருத்தென்ற எண்ணெய் யூற்றினான். புரட்சி என்ற புயல் வேக விசையளித்தான். வானம் மின்னி அதிர்வதுபோல் கர்ஜித்தான்.

வாழப்பிறந்த மக்களே! ஏன் செத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஏன் மாமிச மலை போல் அசையாதிருக்கின்றீர்கள். பகுத்தறிவில்லா மானிடரா நீர்! பதறவில்லையா உங்கள் நெஞ்சம். பார்த்திபன் கொடுங்கோல் உங்கள் உள்ளத்தில் சூடேற்ற வில்லையா? பாராள்வோன் பகைக்கஞ்சுகின்றீர்களா? அப்படியாயின் சதையைச் சுமந்து நிற்கும் சுமைதாங்கிகளா? உங்கள் உணர்ச்சி எங்கே! வீரக்குரல் எங்கே! சுதந்திர எண்ணமெங்கே! தேவை மலைபோல் இருக்கின்றது. ஆனால் நீங்கள் ஆமைபோல் இருக்கின்றீர்கள்.

இவ்வையகத்தை ஒருவன் கட்டியாள முடியுமானால், அவனுக்கு அந்த உரிமையை அளித்தவன் யார்? தேவ கட்டளையானால், தேவனால் கொடுக்கப்பட்ட பட்டயமெங்கே? என்றெல்லாம் கேட்டான்.

இது ஜார் அரசாங்கத்துக்குச் செய்யும் பகிரங்கச் சதி என்றனர். எங்கும் பரபரப்பு, எப்பக்கமும் ஒற்றர்கள். ஏவலாட்களும், எடுபிடியாட்களும் ஜாடையாகப் பேசாத நேரமில்லை. சீறி எழுந்தான் ஜார். சிங்காதனம் குலுங்கியது. "கயவனைக் கட்டிக்கொண்டு வரவேண்டும்," இது, காவலனின் கண்டிப்பான உத்திரவு காலாட்படைகளுக்கு. அரண்மனை, அந்தப்புரம், அவைக்களம், அலுவலகம், அங்காடி, அறமன்றம், ஆகிய எல்லா இடங்களிலும் இதே பேச்சு.

தலைமறைந்து திரிந்தான். தனக்காக அல்ல. தரையில் ஊர்ந்து செல்லும் புழுக்களைக் காட்டிலும் கேவலமாக வாழ்ந்து மக்களுக்காகப் பலமுறை நாடு கடத்தப்பட்டான். ஆனால் அந்தப் புரட்சி வேந்தனுக்கு உற்ற நண்பனாயிருந்தது சைபீரியப் பாலைவனமும், சிறைச்சாலையுந்தான். ஓடியொளிவதற்கு உறுதுணை செய்தது. தன்னைத் தேடிவந்த ஒற்றர்கள் ஆரோகணித்து வந்த குதிரைகளின் குளம்படிச் சத்தமும், அவைகள் காற்றோடு கலந்துவிட்ட கருந்தூளும் செந்தூளுந்தான், பலமுறை அவன் உருமாறித் திரிந்த போதெல்லாம் பதுங்க இடமாயமைந்தது ஒரு ஏழையின் இருட்டறை, அந்த மண்குடிசை வாழ் ஏழை இவனுக்களித்த உறுதியும் ஊக்கமும் சிலபல நேரங்களில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கேடயமாகவும் அமைந்தது.

பாராளும் மன்னர்க்குப் பணிந்து நடப்பதே, பரமன் இட்ட கட்டளை, என்று நம்பியிருந்த அன்றைய ருஷ்யக் குடியானவர்களுக்கு இந்த புரட்சி வீரனின் செய்கைகள் ஒரு புதிராகவே இருந்தது. சிறுகச்சிறுக ஏதோ ஒரு புதுமைக்குரல் நாட்டின் நாலா பக்கங்களிலும் கேட்க ஆரம்பித்தது. அதன் உண்மையைக் கண்டு கொள்ளவே மக்களுக்குப் பல நாட்கள் பிடித்தன.

கறப்பு நிலத்தை உழுது பயிர்செய்ய உழவன் படாதபாடு படுவதைப் போல, மண்வெட்டியம் கையுமாய்த் திரிந்த மானிட நிலத்தை உழுது பயிர் செய்தான். அது அப்போது அங்கு அவ்வளவு எளிதில் முடியும் காரியயல்ல. ஏனெனில், பரம்பரை பரம்பரையாக ஆண்ட ஜார். குடும்பத்தினர் ஆட்சியை ஆட்டிப் பார்ப்பதென்பது அவ்வளவு லேசான காரியமுமல்ல. நெருப்பில் நீந்துவதைப் போன்ற மரணப் பரீட்சையாகும். பாம்போடு விளையாடும் பயங்கரச் செய்கைக் கொப்பாகும். மலையை அசைப்பதும், மண்டலத்தைத் தாண்டுவதும், நட்சத்திரங்களை எண்ணுவதும், சந்திரனை நிலத்துக்கிழுப்பதும், பிறந்தது முதல் இறக்கும்வரை விட்ட மூச்சைக் கணக்கெடுப்பதும் எப்படி முடியாத காரியமோ, அதே போன்றது தான் ஜார் குடும்பத்தினரைப் போர்க்கழைப்பது என்றிருந்தனர் மக்கள். அது அன்றிருந்த மக்களின் குற்றமல்ல. 'சிந்திக்கும் சுதந்திரம் மனிதன் உயிரோடு பிணைக்கப்பட்டிருக்கின்றது.' என்றறியாத மக்கள் வேறு என்னதான் நினைக்க முடியும்.

மனக் கிளர்ச்சி இல்லாததால் குளிர்ச்சியடைந்திருந்த ரத்தத்தை சூடாக்கி தான் ஒரு ஜோதியானான். மக்கள் மன இருள் நீங்கியது. தான் ஓர் காந்தமானான், அதில் ஓடி ஒட்டிக்கொள்ளும் இரும்புத் துண்டுகளாயினர் மக்கள்.

"துன்பம். ஒன்று தான் ஆண்டவன் எமக்களிக்க மனமார ஒப்புக்கொண்ட பரிசு" என்று நம்பிய மக்களை, அரசன் ஆணையை மீறுவதென்பது அலைகடலை நீந்திக் கடப்பதைப் போலாகும், ஆகவே அந்த ஆபத்தான வேலையை செய்யக் கூடாது என்றிருந்த மக்களின் இருதயத்தை எஃகு ஆக்கினான். ஏன்? என்ற கேள்வியின் உலைக்கூடமாக்கினான். நானிலம் அதுவரை கண்டிராத நல்லதோர் திட்டத்தைத் தீட்டி மக்கள் மன்றத்தில் நீட்டினான். மறு பிறவியில் மாயா உலக மணி மண்டபத்தில் வீற்றிருக்கப் போவதாக நம்பிக் கைப் பொருளிழந்து கருத்தழிந்து வாழும் மக்களே! இப்பிறப்பில் எது காணப் பிறந்தீர்? எண்ணித் துணிக! என்ற வினா வெழுப்பினான். வைதீகத்தின் விலா நொருங்க வீராவேசத்தோடு தாக்கினான். மன்பதை வாழ வேண்டும், சுகமாக வாழ வேண்டும். கவலைக் குளத்தில் கண்ணீர்த் தேக்கத்தில் சிக்காமல் வாழ வேண்டும். சூது, பொய், பொறாமை, வாது, வஞ்சனை, களவு, கோள், கொடுமையில்லாமல் வாழ வேண்டும். காற்று, மழை, பனி, குளிர், கதிரவன் சுடர், நிலவொளி, நீலக்கடல், பசி, தாகம், தூக்கம், சுகம் ஆகியவைகள் பொதுவாயிருப்பதைப்போல், உழைப்பு, ஊதியம், வாழ்வு, வசதி, வளம் எல்லாம் எல்லார்க்கும் பொதுவாக வேண்டும். அதற்கோர் திட்டம் வகுத்துத் தந்தான் பொது உடமைத் தந்தை காரல் மார்க்சு என்ற பேரறிஞன். அவை இதோ, என சுயநலத்தால் சேமித்த செல்வப் பெருமைக்குச் சாவோலையை நீட்டிய புரட்சிப் புயல் லெனின் அவர்களின் வெங்கலச்சிலை.

எவ்வளவோ சிலையைச் செதுக்கி இருப்பார்கள் இன்பத் தொழிலாளிகள். ஆண்டவன் சிலையைச் செப்பனிட்ட தொழிலாளி என்ன நினைத்திருப்பான். ஏ! ஆண்டவா! எவ்வளவோ கஷ்டத்துக்கிடையே என் வியர்வையால், உன்னை அன்றாடம் அபிஷேகம் செய்கின்றேன். இப்போது, நான் உன்னை எது வேண்டுமானாலும் செய்யலாம். தொடலாம், மிதிக்கலாம், உளிகொண்டு தாக்கலாம். உதவாது என்று தூக்கித் தூர எறியலாம். ஆனால், உன்னை அர்ச்சகனிடம் ஒப்படைத்த பின், நான் அண்ட, ஆசையாகத் தொட, நாம் செய்த சிலையாயிற்றே என்று அன்பினால் அணைத்துப் பிடிக்க முடியாதே. மூடச் சமூகத்தின் திரையிடப்பட்டு விடுமே. மத ஓடத்தில் ஏறிய மாந்தரின் கண்கள் கனல் கக்குமே என்று எண்ணியவாறு செய்திருப்பான்.

ஆனால், லெனின் சிலையைச் செய்த தொழிலாளி, தான் இட்ட ஒவ்வோர் உளிச் செதுக்கலையும், தன் உள்ளத்திலே பாய்ந்த ஈட்டியைப் போலவே கருதியிருப்பான். வாய் விட்டு அலறியுமிருப்பான்.

"பொது உடமைத் தந்தையே! புதுயுகங் கண்ட புரட்சி சிங்கமே! பொய்க் கணக்கெழுதிய பொல்லாத முதலாளி வர்க்கத்திற்கு எங்கள் மெய்க்கணக்கைக் காட்டி வாழ்வை மங்காத வளமாக்கிய வள்ளலே! வான், கடல், நிலம், நிலவு, உடுக்கைகள் உள்ளளவும் நினது புகழ் நீடூழி வாழட்டும்” என்று தன் கைத்திறன் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிக் காட்டி, அந்த மேலோன் லெனின் சிலையை உருவகப்படுத்தி இருப்பான்.

அவன், அன்றிருந்த ஆணவக்காரர்களை சந்திக்கிழுக்க, அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்ட இராணுவத் தமுக்கில் கைவைத்து முழக்கஞ் செய்தான். அதன் எதிரொலிதான் கீழே தரப்பட்டிருக்கும் பாட்டாளிகளின் மே தின முழக்கமாகும்.

காலம்

இறந்த காலம் நிகழ்காலத்தின் தாய், எதிர் காலம் நிகழ் காலத்தின் சந்ததி, என்பதைப்போல் காலம் ஒன்றையொன்று மறந்துவிடா வண்ணம் பின்னிக்கொண்டிருக்கின்றது. தாயின் மக்கள், மக்களின் மக்கள் எப்படி மறந்துவிட முடியாதவர்களோ, அதேபோல் இறந்த கால எண்ணங்களைக் கொண்டு நிகழ்காலத்தை நடத்தவும், நிகழ்கால நிகழ்ச்சிகளைக் கொண்டு எதிர்காலத் திட்டங்களை வகுக்கவும் உறுதுணை புரிவது சரித்திர வரலாறுகள். ஆகவே 'நடந்ததை மறப்போம்' என்ற வேதாந்தம் வேண்டுமானால் கொஞ்சம் மன ஆறுதலைத் தருமேயன்றி அடியோடு மறக்கக்கூடியதல்ல. ஆனால் கால வேறுபாட்டால் மக்கள் பண்பாடு மாறுகின்றது. அது நாகரிகத்தின் சாயல்.

"என் தந்தையின் ஈமக் கடனுக்காகச் செய்த அப்பங்களே, என் தாயின் மறுமணத்திற்கு உதவியது, என் தந்தையின் மரணத்தால் என் தாயின் கண்களில் உதிர்ந்த கண்ணீரின் அடையாளமாகத் தேங்கிய உப்புக் கோடுகள் மறையாமுன், என் தாயின் மறுமணத்திற்காக வாத்திய கோஷங்கள் முழங்கின. என்னே உலகம், என்னே அன்பு, என்று அழியாப் புகழ் ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் சித்தரிப்பதைப் போல, கால வேகத்தால் அன்பு குறைந்தும், நிறைந்தும் நிற்கின்றன. சுயநலம் வளர வளர அன்பு தானாகக் குறையும். சிறுத்தொண்டன் தன்னலத்தால் மோட்சம் விரும்பினான். அதற்காகத் தன் பிள்ளையையே கொல்லத் துணிந்தான். இது ஒரு கதை என்றாலும் இதைக் காட்டியது எதனால்? தன்னலத்தாருக்கு அன்பில்லை என்பதொன்றே இந்நிகழ்ச்சி காட்டுகிறது. தலைவிதி என்ற நம்பிக்கை நடைமுறையில் தளர்ந்துவிட்டது. அது தளராதிருக்க ஆங்காங்கு மத ஓடங்கள் மடமைக் கடலில் மிதந்த வண்ணம் உள்ளன. ஆயினும் அதில் பிரயாணம் செய்வோர் வெகுவாக குறைந்துவிட்டனர்.

ஆள்வது யார் என்ற வினா வெழும்புகிறபோதே, யார் ஆண்டால் என்ன? என்ற நம்பிக்கையளித்த தலை விதி தரைமட்டமாகிறது. இவன் ஏன் உயர்ந்தவன் நாம் ஏன் தாழ்ந்தவர்கள்? என்ற கேள்வி எழும்பிய இடத்தில் தலைவிதியைக் காணோம். இவன் எப்படி முதலாளியானான், நாம் ஏன் தொழிலாளிகளானோம் என்ற சிந்தனை எழுந்த போதே தலைவிதி விடைபெற்றுக் கொண்டது. இது, மக்கள் தங்களை அறியாமலே செய்யும் விதிப்புரட்சி.

ஆனால் தன்னால் முயன்றதைப் பெற முடியாத போது, 'தலைவிதி' என்று ஆறுதலுக்காகச் சொல்லிக்கொள்கின்றனர். அந்த ஒரு நம்பிக்கை நிழலில் தான் மதப் பிண்டங்கள் வீற்றிருக்கின்றன. அவைகளின் காதுகள் செவிடுபட எழும்பிய கூக்குரல் அகில உலகினும் பரவா வண்ணம் தடைப்படுத்த பெரு முயற்சி சில நாட்கள் திரை மறைவாகவும், இப்போது பகிரங்கமாகவும் நடைபெறுகின்றன. அதைத் தடுக்க இதுவல்ல வழி, பசித்தால் உண்டு, வேர்த்தால் குளித்து, சலித்தால் உறங்கி, நினைத்தால் சொல்லி, உழைத்தால் வருவாய் ஆகியவைகள் அனைவர்க்கும் பொதுவாக்கப்பட்டால் யாரும் ஆத்திரங்கொள்ளக் காரணமிருக்காது. இந்த நிலை எப்போது தொடங்க வேண்டும்? தொடங்க வேண்டிய பருவமென்ன? இதோ:—

ஒரே தெருவில் இரண்டு எதிர் எதிர் வீடுகள், வீடுகள் மட்டும் எதிர்த்தே நிற்கவில்லை. ஒன்றன் அழகும் மற்றொன்றின் அழிவும் நேருக்கு நேர் சூறாவளிப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் ரேடியோ பாட்டும், மற்றொன்றில் பஞ்சப்பாட்டும், அழுதாலும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு வீட்டிலே பெருமை தரும் செல்வம், மற்றொரு வீட்டிலே வறுமையெனும், பயங்கரப் பள்ளம். ஒரு வீட்டின் செல்வக் குழந்தை நெய்யால் செய்த பாண்டங்களை வெள்ளிக் கோப்பையில் வைத்து ஒய்யாரமாக உண்கிறது. மற்றோர் வீட்டின் மண்மேனிக் குழந்தை மண்சட்டியில் நொய்க்கஞ்சி ஏந்தி வெளியே வருகின்றது. இருகுழந்தைகளும் தெருவில் உட்கார்ந்து உண்ண ஆரம்பிக்கின்றன. அந்த இருகுழந்தைகளின் பக்கத்திலும் இரு நாய்கள் நிற்கின்றன இருபெரும் குறிக்கோளோடு. குழந்தையை அணுகி அந்தத் தின் பண்டத்தோடு வெள்ளிப் கோப்பையும் யாராவது கொண்டு போகாமல் பாதுகாக்க அந்தப் பணக்காரன் வீட்டு நாய். இந்த ஏழைக் குழந்தை ஏமாறப் பார்த்துக் கஞ்சிக் கலையத்தை உருட்டிப் பசிதீர்த்துக் கொள்ளலாமா என்று சமயம் பார்த்துக்கொண்டு நிற்கிறது இந்தப் பராரி நாய்.

இரு குழந்தைகளும் வெள்ளையுள்ளம் படைத்தவர்கள். பொய், பொறாமை, கள்ளம், கபடம், வாது, வஞ்சனை அறியாதவைகள். தன் வருத்தத்தை கண்களில் கசியும் நீராலன்றி வாயால் சொல்ல வகையற்ற குழந்தைகள். பகைமை யறியாத பருவம். ஆட்டி வைக்கும் பொம்மைபோல் உடுத்தியதை அங்கீகரித்து, கொடுத்ததை யுண்டு, அபாயம் அறியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் சமத்துவச் சின்னங்கள்போல் விளங்கும் குழந்தைகள். ஆனால் ஒரு குழந்தையின் கையில் வெள்ளிக் கிண்ணமும், மற்றொன்றின் கையில் மட்கலையமும், ஒன்றன் உணவு நெய்ப் பண்டமும், மற்றொன்றின் உணவு நொய்க் கஞ்சியும், ஒன்றன் இருப்பிடம் செல்வ மாளிகையும், மற்றொன்றின் இருப்பிடம் மண் குடிசையும், ஒன்றுக்குப் பட்டாடையும், மற்றொன்றுக்குப் பஞ்சாடையே இல்லாமையும், ஒன்றைப் பாதுகாக்க வேட்டை நாய், மற்றொன்றின் உணவைப் பறிக்க வெறிநாய். இந்தக் கோலத்தோடு ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வாழும் குழந்தைகள் நிலை. ஆனால் அந்த அவல நிலையை அவைகள் எண்ணிப் பார்க்க முடியாத பருவம். ஆயினும் அவைகளுக்கு இயற்கையாக ஏற்படும் அன்பால் அவைகளின் ஆகாரத்தைப் பரிமாறிக்கொண்டால் இரண்டு குழந்தைகளுக்கும் வாந்தி, ஏன்? நெய்யறியாத குழந்தைக்கு வாய் கொமுட்டல், நொய்யுண்ணா குழந்தைக்கு வாந்தி, இந்தக் கோலத்தோடு இரு குழந்தைகளும் வளருகின்றன. குழந்தைகளின் நிலையறிந்த பெற்றோர்கள், அவைகள் நட்புக்கொள்வது தகாதெனக் கண்டிக்கின்றனர். ஆனால் வெளியே சொல்ல இருதரத்தாருக்கும் அச்சம். பணக்காரனுக்கு இந்த நிகழ்ச்சியை வெளியே சொல்ல வெட்கம், ஏழைக்கு வெளியே சொல்ல பயம். ஆக இரு குழந்தைகளின் பெற்றோர்களால் இச்செய்தி மறைக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை, அன்று முதல் அவைகள் உள்ளத்தில் ஏதோ ஒரு விதமான ஏற்றத் தாழ்வான எண்ணமும், பொறாமையும் குடி கொள்ளுகிறது. நாள் வளர வளர அப்பொறாமை செடியாய், மரமாய் பல கிளைகளைக் கொண்ட பெருமரமாய், பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கி அதன் விதைகள் மக்கள் சமுதாயம் பரவிய உலக மூலை முடுக்குகளிலெல்லாம் வித்தூன்றி விடுகிறது. இனி அதை அடியோடு ஒழிக்கும் வழி உண்டென்றால், பொறாமைக்கு வித்தூன்றும் பருவமாகிய குழந்தைப் பருவத்தைக் கண்காணிக்க அரசியலார் பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும். தாய் தந்தையர்களிடையே குழந்தைகள் வளருவதால் மற்றோர் கேடும் சூழ்கிறது. குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டுமே என்பதற்காகப் பெற்றோர்கள் தங்கள் நியாயமான வசதியைக் குறைத்துக் கொள்ளுகின்றனர். அதன் மூலம் அவர்கள் ஆயுளும் குறைகிறது. அதனாற்றான் அறிஞர் பிளாட்டோ அவர்கள், குழந்தைகளை வளர்ப்பதில் அரசாங்கம் கவலை யெடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

மரணம் ஒன்று நிச்சயம் உண்டென்ற நிலையை எல்லாரும் எப்போதும் நினைவில் வைத்திருந்தால் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் காரணமில்லை. மரணப் படுக்கையில் மக்களில் வித்தியாசமில்லை. இதை அறிந்தும் அறியாத மக்கள் சமுதாய வாழ்வில் விழுந்த பெரும் பள்ளத்தைத் தூர்க்க, எவ்வளவோ பெரிய பெரிய அதிமேதைகளான, தத்துவ, அரசியல் சீர்திருத்தச் சிந்தனை வெட்டியான்கள் முயன்றும் முடியவில்லை.

ஏதோ ஒரு இயற்கை நியதி, உலகச் சுழலின் சட்டத்தை எழுதியவண்ணமிருக்கின்றது. வறண்ட வாழ்வினர் நெஞ்சம் குமுறிக் கிளம்பிய நெருப்பு. விம்மிய பொருமலால் சிந்திய கடல் போன்ற கண்ணீர் அதை மாற்ற முடியவில்லை. இந்த நிலைமையைப் போக்க ஆங்காங்கு அறிஞர்கள் கூட்டங்களும், அவர்கள் மேற்கொண்ட வேலைகளுக்கு ஏற்றவாறு பட்டங்களும், அந்த அமைப்பே பிறகு ஒரு அரசாங்கமாக அமைந்து, அன்று முதல் மக்களுடைய காதுகளில், அடிமை, சுதந்திரம், விடுதலை, மூலதனம், கொள்ளை லாபம், புரட்சி, சிறைச்சாலை, தண்டனை, தூக்கு, தேர்தல், சர்வாதிகாரம், ஜனநாயகம், ஆகிய வார்த்தைகள் அடிபடவாரம்பித்தன. இவைகள் ஏன் ஏற்பட்டன என்று ஆராய்வதற்குப் பதில், அதிலிருந்து தப்புவதெப்படி என்ற வழியைத் தேடித்திரிய ஆரம்பித்தனர். அன்று தொடங்கி வேலியாக அமைக்கப்பட்ட சட்டங்கள், மக்கள் விலாவைக் குத்தும் வேலாக அமைந்தது. மக்கள் நல் வாழ்வுக்காக அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த ஏற்பாட்டின் சிலவினங்களை அரசாங்கமே தேடிக்கொள்ள வகையற்றுத் தனி மனிதன் தன் வாழ்க்கைக்காகத் தேடிய பொருளில் சிறிதளவு பங்கு கேட்க ஆரம்பித்தது. அந்த ஏற்பாட்டில் நல்லவைகளுக்குப் போக, தனக்குச் சம்பந்த மில்லாதவைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்பட்டான். அதில், குற்றஞ் செய்து தண்டனையடைந்த ஒரு சிறைக் கைதிக்கு உணவும், உடையும், குற்றஞ செய்யாத ஒருவன் கொடுக்க நேர்ந்தது. அரசாங்கத்தின் அதட்டலுக்குப் பணம் கொடுத்துத் தீரவேண்டிய நிலையில் நின்ற ஒருவன் தன் வருவாயைப் பெருக்க எண்ணினான். மேலும் மேலும் பெருக்கினான். மேலும் மேலும் அரசாங்கம் கேட்டது. சோர்வில்லாமல் கொடுத்தான், சொக்கியது அரசாங்கம் அப்பணக்காரன் இரும்புப் பெட்டியைப் பார்த்து கேட்டபோதெல்லாம் பணங் கொடுத்ததால் பணக்காரனைக் கண்டிக்க அரசாங்கம் பயந்தது. அரசாங்கம் நமது அடிமை என்ற நம்பிக்கையால், மனித எலும்பால் மைக்கூடு செய்து விற்றாலும் குற்றமாகாது என மனித வேட்டையாட முதலாளி வர்க்கம் தயங்கவில்லை. ஆனால் இருவரும் ஒன்றை மறந்து விட்டனர். பணக்காரனுக்கு இவ்வளவு பணமேது, தொழிலாளிகள் சிந்திய ரத்த வியர்வையல்லவா? என்று அரசாங்கமும் எண்ணவில்லை. அரசாங்கம் நம்மைக் கண்டிக்கா விட்டாலும் தொழிலாளிகள் கண்டித்தால் நம் நிலை என்ன? என்பதை பணக்காரர்களும், எண்ண மறந்து விட்டனர்.

இந்த, மறதியின் நடுவே எழுந்தது 'தேவை' என்ற வார்த்தை. “எல்லார்க்கும் எல்லாம் தேவை," என்ற கோஷமெழுந்தது. இது முற்றி, 'புரட்சி' என்ற முடிவில் சற்றொப்ப 300 ஆண்டுகளாக இந்த வார்த்தை ஆங்காங்கு செயல் முறையில் தலை தூக்கியது. ஐரோப்பா கண்டத்தில் ஒருவாறு முடிவுகண்டு வெற்றி கொண்டாடிய கீதத்தின் ஒலிதான் கீழே தரப்பட்டிருக்கிறது.

“கீழே விழும் கல் சிந்திக்க முடியுமானால் அதற்குக் காரணம் தன் விருப்பந்தான் என்று கருதும், என்கிறார் ஸ்பினோசா. ஏனெனில் அது ஏன் கீழே விழுகிறது என்பது கல்லுக்குத் தெரியாது. நிலத்திற்கும் இழுக்கும் சக்தியிருக்கிறது. ஆகையால் நம்மை இழுத்து விடுகிறது என்று தெரிந்துகொள்ள முடியாத கல் வேறு என்ன தான் நினைக்கமுடியும். அதேபோன்று, மனிதன் கல் நினைப்பதைப் போல நினைக்கின்றான். அறிவு இந்த பிரமையை நீக்கும். எனவே, லோகாயுதவாதிகள், நாத்திகர்கள், சபஸயவாதிகள் முதலியோர் புதுமையைப் புகுத்தவும், வேதாந்திகள், மானசீகவாதிகள், ஆத்தீகர்கள் முதலியோர் பழமையை நிலைநாட்டவும் உக்ரகமாகப் போரிட்டு முன்னவர் கண்ட வெற்றியே மேதினமாகும்.

தொழிலாளி வர்க்கம் தனக்களிக்கப்பட்ட சோதனைச் சின்னங்களான, சிறைவாசம், சிந்திய ரத்தம், வழிந்தோடிய கண்ணீர், வாரால் அடிக்க எழும்பிய ரத்தவடுக்கள், தூக்குத்தண்டனை, நாடு கடத்தல் ஆகிய சோதனைத் தீயில் தனது உள்ளத்தைப் புடம்போட்டு எடுத்த வெற்றியின் அறிகுறியே மேதின விழா.

"இயற்கையில் மனிதன் நல்லவன் என்று முடிவுகட்டிய தீவிர சிந்தனையாளர்கள் முடிவை அறிவுப்பூர்வமான கல்வியின் மூலம் மனிதனைக் கஷ்டங்களிலிருந்து விடுவித்துவிடமுடியும் என்று கருதிய கருத்தை கெப்ளர், கலிலியோ, நியூடன், டெக்கார்ட்டே போன்ற அறிஞர்கள் விஞ்ஞான ரீதியில் அடைந்த வெற்றியை ஆதாரமாகக்கொண்டு, அந்த ஆதாரங்களையே அடிப்படையாக வைத்து சமூக ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்ட ஜகம் வியக்கும் சிந்தனையாளர்கள் முகத்தில் ஓர்களை தோன்றிய நன்னாள் மேதினமாகும்.

"மன்னன் மதியற்ற ஆட்சியையும், கத்தோலிக்க குருமார்களின் கருணையற்ற செயலையும் சந்திக்கிழுத்து, சிந்திக்கும் சுதந்திரம் தங்கள் உணர்வோடு பிணைக்கப்பட்டிருந்த, வால்டேர், ரூசோ போன்றார் அரும்பாடுபட, அதே நேரத்தில் அறிவு வளர்ச்சிப் புரட்சியை யுண்டுபண்ணாது என ஏமாந்த எண்ணத்தை இறுகப் பிடித்துக்கொண்டு, ஆத்மீகத் துறையிலே தெய்வீகத் தத்துவத்தைப் புகுத்தும் படி. கூலிப் பண்டிதர்களை ஏவி, நம்பிக்கையை நங்கூரமாக அமைக்கும்படித் தூண்டி மக்கள் எண்ணத்தில் நச்சுகொள்கையை நாட்டத் தீட்டிய திட்டமும் ஒன்றுக்கொன்று ஈவிரக்கமில்லாமல் தாக்கித் தனி சொத்துரிமையை அழித்துப், பொது உடமையைப் பூக்கச் செய்து அறிவியல் சகாப்தத்தை அகிலத்திற்கெடுத்தோதிய நாள் மேதினமாகும்.

"பாட்டாளிகளின் படை திரண்டுவர, மேட்டுக் குடிகளும், மேனா மினுக்கிகளும், நாட்டாண்மைக்காரரும், பாட்டாளிகளின் பகைவர்களும், ஓடியொளிந்தாலன்றி உயிர் வாழ முடியாது, என்று அலறிக் கண்டபக்கமெல்லாம் ஓடி, காலால் உதைபட்டு, கைகளால் அறை வாங்கி எப்பக்கமும் ஓடினும் காப்பாற்றுவாரற்று, கவலையோடு சாயும் தலைக்குத் தன் கைகளை முட்டுக் கொடுத்து மூலையில் உட்கார வைத்த நாள் மே தினமாகும்.

மனிதன் மானசீகத்தின் அடிமையல்ல, அவன் இயற்கையின் ஒரு பகுதி என்ற வாதத்தை மேற்கொண்டு உடல் தான் முந்தியது என்ற உலகாயுதவாதிகளுக்கும், மனிதன் மனத்தால் நடத்தப்படுகின்றான், அதற்கு எவனும் அடிமைப்பட்டே தீர வேண்டும் என்றும், ஆகவே மனந்தான் முந்தியது என்ற மானசீகவாதிகளுக்கும் இடையே நடந்த போராட்டத்திற்கோர் நல்ல முடிவைக் காட்டிய நாள் மேதினமாகும்.

புரட்சியை யுண்டுபண்ணும் சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட நினைத்த தத்துவ ஞானிகளின் உன்னத நோக்கத்தால், எந்த பிரஞ்சு தேசபக்தர்களை ஏவிப் பழய ஆட்சி முறையை அழித்தார்களோ, அதே தத்துவ ஞானிகள் வெறும் தத்துவம் என்ற சங்க நாதம் ஒன்றினாலேயே எல்லாக் காலங்களிலும் புரட்சியை யுண்டுபண்ண முடியும் என்றும், அதற்காக அடிமைத் தளையை அறுத்தெரியப் பலாத்காரத்தை உபயோகிக்கக்கூடாதென்றும், போரில் ஈடுபட்ட அவர்கள் எண்ணத்திற்கெதிராக ஆயுதந்தாங்கிப் புரட்சிக்கொடியை யுயர்த்திப் பல்லாயிரம் பசித்த வாய்களை மூடிய பகுத்தறிவுள்ளோருக்குத் தொழில் உலகம் தலைவணங்கி நன்றியை செலுத்தும் நாள் மேதினமாகும்.

ஒரு சில முதலாளிகள் சுரண்டல் கொள்கைக்கு இரையாகி ஒடுக்கப்பட்டுப், பசி, பிணி, பஞ்சம், நோய், கவலை வறுமை சிறுமை, வேலையில்லா திண்டாட்டம் இன்னோரன்ன கொடிய பீரங்கிகளின் எறிவாயிலிருந்து துன்புறும் பாட்டாளி பட்டாளம், தனது அகில உலக ஐக்கியத்தின் ஏகக் குரலை எழுப்புவதற்கும், பொன்னான உழைப்பிலிருந்து பொன் திரட்டும் பொல்லாத முதலாளிகளை முறியடிக்கவும், இன்றைய ஒழுங்கீனமான சமூக கோபுரத்தைத் தகர்த்தெறிந்து புதிய, அசைக்க முடியாத கோட்டையை எழுப்ப ஒரு சண்டமாருத, சமூகப் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்குவதற்கும் கோடானு கோடி பாட்டாளிகள் கைகோத்து நிற்கும் நாள் மேதினமாகும்.

அகில உலகத் தொழிலாளர் தலைவரும் பொது உடமைத் தந்தையும் மானிட வர்க்கத்தின் மன சாட்சியுமான காரல் மார்க்ஸ், என்ஜில்ஸ் வழிவந்த சோவியத் நவயுக சிற்பிகளான லெனின், ஸ்டாலின் ஆகிய மனிதகுல மாணிக்கங்களை வாழ்த்த உலகெங்கும் வாழ்கின்ற உழைப்பாளித் தோழர்கள் ஒன்றுபடும் நாள் இந்த மேத் திருநாள்.

உழைப்பாளிகளின் உரிமைக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்த அறவோர்கள், பாட்டாளிகளின் விமோசனப் பீடமாகிய தூக்கு மேடையில் துஞ்சிய தூய நெஞ்சினர், வெஞ்சிறையைத் தம் வீட்டாக மதித்து வாடிவதங்கிய பாட்டாளிகளின் தலைவர்கள், அந்தமானில் அஞ்ஞாத வாசம், சைபீரியாவில் வனவாசம், பெர்லினில் பாதாளச் சிறை, ரோமில் நரகவாசம், சீனாவில் சிரச்சேதம். சிகாகோவில் சித்ரவதை போன்ற எழுதவும் எண்ணவும் நடுங்கும் வண்ணம் இம்சிக்கப்பட்ட தலைவர்களுடைய எண்ணற்கரிய தியாகத்திற்குத் தலைவணங்கும் நாள் இந்த மேதினம்.

பாட்டாளித் தலைவர்களின் தியாகம் தீரம் வீரம் உழைப்பாளிகளின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து உறுதியையூட்டும். உதிரத்தில் உணர்ச்சியையூக்கும். நரம்பிற்கு இரும்பினையொத்த வலிமையை நல்கும். மே தின எழுச்சியால் அவர்கள் அசைக்க முடியாத ஒற்றுமையும், சிதைக்க முடியாத பலமும் எதிர்காலக் கண்ணாடியில் நிலை பெற்ற நம்பிக்கையை யூட்டியது.

முதலாவது உலகப்போர் என்னும் பயங்கரமான இடியினால் பெரும் பெரும் ஏகாதிபத்தியங்கள் சரிந்து விழுந்தபோது ரஷ்யாவில் உழைப்பாளி கள் தங்கள் ஒப்பற்ற ஆட்சியை நிலை நாட்டினார்கன் உறுதியான பாறையின் மீது இரண்டாவது உலகப்போர் எனும் மாபெரும் மனித பூகம்பம் எழுந்தது. பிரெஞ்சு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களும், இதாலி ஜேர்மனி போன்ற பாசிஸ்ட் நாடுகளும் உலுக்கப்பட்டு, அவற்றின் அடிப்படைகள் நிலைகுலைந்து மேற்கோப்புகள் அனைத்தும் முறிந்து சரிந்த வண்ணம் உள்ளன. உலகம் என்றும் கண்டிராத கொடிய ஆயுதங்களையும், கோடானு கோடி படைகளையும் கொண்ட மனித சமூகத்தின் சத்துருக்களான பாசிஸ்டு வெரியர்களின் எண்ணத்தில் மண்ணடித்துப் பாசிஸ்டு பாதகர்களைப் சுட்டுப் பொசுக்கி தூவென்று தூவி சோவியத் சிங்காதன மேறியது. அப்பால் யுகோவிலும் ஜெகோவிலும் சோவியத் மலர ஆரம்பித்தது. விரைவில் ருமேனியா, பல்கேரியா, போலண்டு, ஹங்கேரி, அபிசீனியா, ஜர்மன், இதாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் சோவியத் ஆட்சி மலரும் என்பதற்கான அறிகுறிகள் மலிந்து வரகின்றன. சீனாவில் முழுதும் செங்கோடிடப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு முதலாளித்வக் கடைசி கோட்டையான அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய தலைவன் எந்த நேரத்திலும் யுத்தப் பிரகடனத்தில் கையெழுத்திடலாம் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. மரணப் படுக்கையில் வலிவற்று வீழ்ந்து கிடக்கும் பிரிட்டீஷ் பிரென்சு ஏகாதிபத்தியங்கள் தங்கள் தலையை ஆட்டுகின்றன.

வறுமையையே பெருமையாக நினைத்து, வடி கட்டிய ஹெகலின் மானசீகவாதத்திற் கடிமைப்பட்டு செயலற்றுக் கிடந்த கோடிக் கணக்கான பாட்டாளிகளைத் தனது உலகாயுத வாதத்தால் விலைமதிக்க முடியாத வர்க்கமாக்கி, முடியாட்சியைத் தள்ளி, குடியாட்சியை ஓங்க வைக்கவும், 8 மணி நேர வேலை, 8 மணி நேரக் களியாட்டம், 8 மணி நேர ஓய்வு என ஒரு நாளை மூன்று கூறாக்கி மக்கள் மனதைக் களிக்கச் செய்த மாபெருந் தலைவர்களின் சிந்தனைக்கும் சேவைக்கும் தலை வணங்க உலக பாட்டாளிகள் ஒன்று படும் நாள் மேதினமாகும்.

தனி உடமை மாறினால். மதம், கலை, ஒழுக்கம் முதலியன அழிந்துவரும் என்று ஓலமிட்ட முதலாளிகளை அதட்டி நிறுத்தி, எந்த மதத்தை? எந்தக் கலையை? எந்த ஒழுக்கத்தைப் புதிய சமூகம் அழிக்கும். மனிதனுக்கு அபினியாக விளங்கும் மதத்தையா உழைக்காமல் ஓய்வு பெறும் இனத்தின் கலையையா, கலையின் பெயரால் இழைக்கப்படும் அநீதியையா? ஆம், என்றால் "ஒழியட்டும் அவ்வளவும்" என்று ஓங்காரமிட்டத் தொழில் உலகம் தோள் தட்டி நின்ற நாள் இந்த மேதினமாகும்.

ஆயுத பலத்துடன் குடியரசைப் பிரகடனப்படுத்த முடிவு செய்த ராஸ்பெல் இரண்டு மணி நேரத்தில் ஜனங்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாவிடில் இரண்டு லட்சம் பேர்களுடன் தான் திரும்பி வர நேருமென்ற எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுத்தவுடன், அந்தக்கால வரையறைக்குச் சற்று முந்தியே, அதாவது: புரட்சியில் உயிர் நீத்தவர்களின் உடலங்கள் விறைத்துப் போகா முன்னம், தொழிலாளிகள் நிராயுத பாணிகளாகா முன்னம் குடி, அரசு வாழ்க! சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் வாழ்க! என்ற பேரொலி பாரிஸ் முழுதும் முழக்கின நாள் மேதினமாகும்.

"சட்ட ரீதியான முடியாட்சி தான் சர்க்காரின் பரிபூரண வடிவம்," என்ற சுலோகத்தை 1840-ம் ஆண்டு ஜர்மன் முதலாளிகளின் அரசியல் இயக்கத்துக்கு முதுகெலும்பு போல் இருக்கச் செய்த ஹெகலின் இந்த இற்றுப்போன வாதத்தையும், அதற்கு அருந்துணை புரிந்த நான்காவது பிரடிரிக் வில்லியம் செய்த விவேகமற்ற செய்கையையும் வீணாக்கிய உழைப்பாளிகள், "உழைப்பவனுக்கே உலகம்", என்ற உறுதியை ஊர் அறியச் செய்த நாள் மேதினமாகும்.

பசிக்காவிட்டாலும் புசிக்கின்றான் முதலாளி, கிடைத்தால் தான் புசிக்கின்றான் தொழிலாளி, என்ற உதவாக்கரை நியதியை மாற்றித் தேவைக்காகப் பல தேச மக்கள் செய்த புரட்சியின் கல்நாட்டு விழா இந்த மேதினமாகும்.

வேலை நேரத்திற்கும் ஓய்வு நேரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உழைத்த பாட்டாளிகளும், வேலையே இன்னதென்று தெரியாமல் அல்லும் பகலும் ஓய்வாக மஞ்சத்தில் சாய்ந்து கொண்டு, கூலி உயர்வுக்காக வெளியே கூடியிருந்த மக்களை விரட்டத் தன் வேட்டை நாய்களை ஏவிய முதலாளியும் கடும் போரிட்டுக் கண்ட வெற்றியால் தொழிலாளர்கள் களிப்புக் கடலில் மகிழ்ந்த நாள் மேதினமாகும்.

ஐரோப்பா வெங்கும் ஏற்பட்ட யந்திரப் புரட்சிக்குப் பின், ஓய்வெடுக்கும் யந்திரத்தைக் கண்டு, ஓய்வுபெற முடியாமல் சட்டத்தால் தடுக்கப்பட்ட தொழிலாளிகள், அந்தச் சண்டாளத்தனத்தைப் போக்க மனிதப் புரட்சி நடத்தி, சரிநிகர் சமானம் என்ற பீடத்தின் மேல் சமுதாய உரிமைப்போர் சாசனத்தில் கையொப்பமிட அனைவரும் கூடிய அகிலம் வியக்கும் நாள் மேதினமாகும்.

பாரீஸ் நகரை ஜெர்மனிக்கு விற்று, தொழிலாளர்களை நசுக்கி பிஸ்மாா்க்கிடம் சரணாகதியடைந்த முதலாளிகளுக்கு, அபயம் அளிப்பதாக ஆயுதம் ஏந்தி வந்த பிஸ்மார்க், பாரீஸ் மக்களின் மன உறுதியையும் தளராத ஊக்கத்தையும் கண்டு குலைநடுங்கி, அந்தத் திசை நோக்கித் தண்டனிடச் செய்த நன்னாள் மேதினமாகும்.

வலிவுடையோர் பலமற்றுவிழ பல வன்னெஞ்சர்கள் செய்த சூழ்ச்சியால் ஆங்காங்கு வெட்டப்பட்டிருந்த மரணப் படுகுழியைத் தாண்டி, உயிரைத் திரணமாக மதித்து இரும்பையும் கல்லையும் தன் நரம்பின் வன்மையால் நசிக்கிய மக்கள் நல்ல நாளெனக் கொண்டாடிய நாள் இந்த மேதினமாகும்.

உடலுக்கும் உயிருக்கும் உணவுக்கும் ஊதியத்திற்கும் சரியான தத்துவம் தெரிந்து கொள்ள முடியாமல் திரைபோட்டு மறைத்து அவர்கள் உடலில் பிழிந்தெடுத்த ரத்த வண்ணத்தால் மாளிகையை அழகுபடுத்தி உல்லாசபுரியில் வாழ்ந்த உலுத்தர்கள் ஊர்ப்பயணம் சொல்லிக் கொள்ளும் நாள் மேதினமாகும்.

ஏகாதிபத்தியங்கள் இடிந்துவிழ, சாமராச்சியங்கள் சரிய, சர்வாதிகாரங்கள் சாக, எதேச்சாதிகாரங்கள் எப்பக்கமும் தலைகாட்டாதொழிய, மூர்க்கத்தனம் முறிந்துவிழ, அடக்குமுறை தர்பார் அஸ்தமிக்க, தடியடித் தாண்டவத்தைக் குழிதோண்டிப் புதைக்க, ராணுவ தர்பார் அந்திப் பொழுதாக, அனைத்துலக தொழில் வளம் செழிக்க, தொழிலாளர்கள் மகிழ்ச்சியால் கொப்பளித்த சிந்தனைப் பொறிகள் கனல் கக்க, கந்தையுடுத்தியவனைக் கர்மவீரனாக்கிய நாள் மேதினமாகும்.

தொழிலாளிகள், தங்கள் மேல் எழுதப்பட்ட பொய்க் கணக்கை பொய்யாக்க, ஓடும் ரயிலையும், பறக்கும் விமானத்தையும். மிதக்கும் கப்பலையும், வானமளாவிய மாளிகைகளையும், கதிர் குலுங்கும் நஞ்சை நிலத்தையும், பழங்குலுங்கும் சோலையையும், ஆழமிதக்கும் எண்ணெயையும், அந்த நிலையிலேயே இருக்கும் பொன்னையும், ஆழ் கடலில் ஒளிந்திருக்கும் முத்தையும் காட்டி, இவைகள் எங்கள் மெய்க் கணக்கைக் காட்டுமே எனக் கடைசி கணக்கை சரிபார்த்த நாள் இந்த மேதினமாகும்.

கோலோன் மக்கள் அடைந்த கொடிய தண்டனை, உடைத்தெறியப்பட்ட பாஸ்டில் சிறை, முற்றுகையிடப்பட்ட பாரீஸ் கோட்டை, சிரச்சேதம் செய்யப்பட்ட சேர்லெஸ், முறியடிக்கப்பட்ட பிரடரிக்வில்லியம், கிழித்தெறியப்பட்ட ஹெகலிசம், புகை கிளம்பாத தொழிற்சாலைகளின் புகை போக்கிகள், துள்ளி விழுந்த தொழிலாளர்களின் உடலங்கள், கசையால் அடித்த கல் நெஞ்சர்கள் சரணாகதி, மன்னர்கள் மாளிகை முன் ஒட்டிய சுவரொட்டிகள், கையிலேந்திய கருப்புக்கொடி, சண்டமாருத மேடைப் பேச்சு, அதைக் கலைக்க அரசர்கள் ஆணையைப் பெற்று அடக்கு முறை சாசனத்தைக் கையிலேந்தி அணி வகுத்து வந்த ராணுவப்படை, தடையுத்தரவு, தடியடி ஆகிய அவ்வளவையும் நினைவுக்குக் கொண்டுவரும் நாள் மே தினமாகும்.

நீராவி புரட்சியை ஒப்புக்கொண்டு, அதன் துணையால் ஏற்பட்ட யந்திரப் புரட்சியை வரவேற்று, அந்த யந்திர இயக்கத்தைத் துரிதப்படுத்திய மின்சாரப் புரட்சியைக் கைலாகு கொடுத்து வரவேற்று, அதனால் உங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, கொள்ளை லாபம், அடிக்கும் நீங்கள், உற்பத்தி பெருக்கம், யந்திர துரிதம், கொள்ளை லாபம், ஆகவே எங்கள் கூலிப் புரட்சியை ஒப்புக்கொண்டு ஏன் கூலியை உயர்த்தக்கூடாது? என ஏகமனதாக முதலாளிகளைத் தட்டிக் கேட்கும் நாள் இந்த மேதினமாகும்.

அடிமை சகாப்தத்திலிருந்து அறிவியக்க சகாப்தத்துக்கிழுத்துச் சென்ற அறிவியக்கக் கர்த்தாக்களின் பெயர்களை அகிலத்திற்கு நினைவுப்படுத்தக் கூடிய பல்லாயிர மக்களை, அதே தொழிலாளிகள் செய்த ஆயுதங்களை உபயோகித்த கொடுமைக்கு விடை கொடுத்த நாள் இந்த மேதினமாகும்.

இந்த மே தின முழக்கத்தை ஐரோப்பாவில் தொழில் உலகம் செய்த வெற்றி விழாவெனக் கொண்டாடுகிறோம். ஆண்டின் ஐந்தாவது திங்கள் அங்கு பஞ்சத்தைப் போக்கி ஓரளவுக்குத் தொழிலாளிகள் தங்கள் உரிமையைப் பெற்று உன்னத நிலையடைந்திருக்கின்றார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு இங்கும் புரட்சியை அதே வடிவில் செய்யலாம் என்று தொழிலாளர்கள் நினைக்கும் போது தான் அவர்கள் புரட்சி வெற்றிபெறாமல எதிர்ப்புரட்சி நடக்க ஆரம்பிக்கிறது.

புரட்சி, (Revolution) எதிர்ப்புரட்சி, (Counter Revolution) என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம்.

1. நல்ல ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறான்.
(முதலாளி)
2. கிழிந்த ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறான்.
(தொழிலாளி)
3. ஆடையே இல்லாமல் நிற்கிறான்.
(படித்துவிட்டு வேலையில்லாதவன்)

நல்ல ஆடை அணிந்திருக்கும் முதலாளியைப் பார்த்து எனக்கு மாத்திரம் ஏன் கிழிந்த ஆடை எனக் கேட்கிறான் தொழிலாளி.

எனக்கு அந்த கிழிந்த ஆடையே இல்லையே நீ கந்தல் ஆடையாகிலும் அணிந்து கொண்டிருக்கின்றாயே, நீ அந்த கந்தலைக் களைந்தெறிகிறபோது நான் அதை எடுத்து உடுத்திக் கொள்வேன் என்கிறான் படித்துவிட்டு வேலையில்லாதவன். அதேபோல் ஆத்திரத்தால், தொழிலாளி தன் கிழிந்த ஆடையைக் களைந்துவிட்டு, முதலாளியின் நல்லாடையைப் பறிக்கத் தாவும்போது, பக்கத்தில் நிற்கும் வேலையற்றவன், அந்தத் தொழிலாளி களைந்தெறிந்த கந்தல் ஆடையை எடுத்துங்கொள்கிறான். அதே நேரத்தில் முதலாளியின் நல்லாடையைக் தாவிப்பிடிக்க முடியாமல், சட்டத்தால் தடுக்கப்படுகிறான். இந்த நிலையில் இருந்த கந்தல் ஆடையையும் பறிகொடுத்து விட்டு, நல்லாடையையும் அடைய முடியாமல் இடையில் நிர்வானமாய் நின்று விடுகிறான் தொழிலாளி. இது இன்றைய நமது நாட்டின் நிலை.

படித்துப் பட்டம் பெற்றோர் ஏராளம். தொழில் வளம் மிகமிகச் சொற்பம். உற்பத்திப் பெருக்கம் உற்பத்திப் பெருக்கம் என்று ஓயாமல் கத்துகிறது சர்க்கார். எங்கே போய், யாருடைய நிலத்தில் எதை, எந்த உரிமையின்பேரால் உற்பத்தி செய்வதோ தெரியவில்லை.

படித்தவன் ஏன் பட்டிக்காட்டுக்குப் போய் பயிர் செய்யக்கூடாது, என்று பல இடங்களிலே பல படங்களிலே பேசப்படுகிறது. இது எவ்வளவு முட்டாள்தனமான வாதம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். அதனால் பட்டிக்காட்டுக்குப் போவதோ, பயிர் செய்வதோ நாம் கேவலமென்று கருதவில்லை. ஆனால் பயிர் செய்வதற்காக, B. A., M A., பட்டம் பெற பணத்தைப் பாழாக்கிப் படித்தது அதற்குத்தானா என்பதுதான் நமது கேள்வி.

ஏன் படித்தவன் பயிர் செய்யக்கூடாதென்ற வாதமும், ஏன் யானையை வண்டியில் கட்டி இழுக்கச் செய்யக்கூடாதென்ற வாதமும் முட்டாள் தனத்திற்கு முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

சமூக அமைப்பின் பேரால் தொழில்களைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கும் இந்த நாட்டில், தண்ணீரில் தர்ப்பணம் விடவேண்டிய வகுப்பில் பிறந்தவர்களெல்லாம், தண்டவாளத்தில் ரயிலை விட வேண்டிய பொறுப்பில் அமர்ந்திருக்கின்றார்கள். இது எப்படி மாறியதோ நமக்குத் தெரியாது. ஆனால் நாடு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இல்லை. என்றாவது ஓர் நாள் எரிமலை வெடிக்க வேண்டிய நிலை போன்ற நிகழ்ச்சி நடந்தாலும் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

இன்றைய நிலையில் மக்கள் அன்றாட நிகழ்ச்சிகளையும் அரசியலையும் அணுவணுவாகத் துருவிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர் ஆகவே பொது மக்கள் எதிலேயும் ஆவேச உணர்ச்சி கொண்டு குதிக்கும் நிலையிலில்லை. திடீரென இந்த நிலை ஏற்பட்டதற்குக் காரணமென்ன? போருக்குமுன் மக்களின் சராசரிப் பொருளாதாரத் துறையிலும் வாழ்க்கைத் துறையிலும் அவ்வளவாக கேடு சூழாமலிருந்ததால், யாராண்டால் என்ன? என்ற நிலையில் மக்கள் ஆட்சியைப் பொறுத்தவரையிலும் அதிகமாகக் கவனிக்காமல் வந்தார்கள். இருக்கும் வசதியைவிட இன்னும் சற்று அதிகமாகப் பெற்று வாழலாம் என்ற குறிக்கோளோடுதான் அன்னியனை விரட்டி நாமே ஆளலாம் என்ற சுதந்திர பேரிகை கொட்ட ஆரம்பித்தது. ஆனால் போருக்குப் பின்னால் இருந்ததும் போய், எதிர்பார்த்ததும் வராமல் ஏழ்மை நெருப்பில் விழுந்து புழுவாய்த் துடிக்கவேண்டிய நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. போருக்குப் பின் ஏற்பட்ட சமூக வாழ்வின் அதிர்ச்சி அவர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின் பெறவேண்டிய அரசியல் அனுபவத்தைக் கால வேகம் அவர்களை முன்னுக்குத் தள்ளியிருக்கிறது. இது யாராலும் செய்யப்பட்டதல்ல. பல வல்லரசுகளின் பேராசைச் சுரண்டலும், இயற்கையுமே இதை மாற்றியிருக்கிறது. சட்டமே விரும்பியிருந்தாலும் இதை இவ்வளவு விரைவில் செய்திருக்க முடியாது. சட்டத்திற்குத் தனியாக ஒரு வல்லமையும் இல்லை. அதற்கு மக்கள் கொடுக்கும் மதிப்பு தான் சட்டம் ஒரு நாட்டில் ஊன்றி நிற்க நங்கூரமாகின்றது.

அந்தச் சட்டங்கள் மக்களுக்குப் பயன்படாதொழிந்தால், அல்லது என்றோ எழுதிய சட்டங்களுக்கு இன்றைய சமூகம் அடிமைப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அல்லது சட்டங்கள் மக்கள் நலனைக் கவனியாது, தன் கண்ணியம், கௌரவம், அதிகாரம் ஆகியவைகளையே காப்பாற்றிக் கொள்ள எண்ணினால், அல்லது மக்களுக்காகச் சட்டம் என்றெண்ணாமல், சட்டத்திற்காக மக்கள் என்ற நிலையை நிலைநாட்ட எண்ணினால், ஒரு சில அறிஞர்கள் அவைகளை மாற்றியமைக்க எண்ணுகிறார்கள். அவர்கள் அரசியல் முத்திரை பெற்றவர்களாயிருந்தால் சட்ட நிபுணர்கள் என்கிறோம். இல்லாமல் வெளியே இருந்து சொல்லுபவர்களைப் புரட்சிக்காரர்கள் என்கிறோம். ஆனால், அது, பாராளுமன்றத்தின் உள்ளே செய்யப்பட்டாலும், வெளியே செய்யப்பட்டாலும் புரட்சியின் வாடை, புதுயுகத்தின் ஏற்பாடுதான். ஆனால் அதன் கொடுங்கோன்மைக்குப் பலியானவர்கள் எண்ணற்றோர் புரட்சிக்காரர்கள் என்ற குற்றத்தின் தாக்குதலால்.

புரட்சி என்பது எல்லா நாடுகளிலும் ஒரே குறிக்கோளோடு நடப்பதில்லை. அந்தந்த நாட்டுக்குத் தேவையான முறையில் புரட்சி நடந்தவண்ணமிருக்கும். ருஷ்யாவில் தொழில் புரட்சி, ஜப்பானில் கைத்தொழில் புரட்சி, பிரான்சில் விடுதலைப் புரட்சி, சீனாவில் கட்சிப் புரட்சி, இங்கிலாந்தில் அரசியல் புரட்சி, அமெரிக்காவில் அடிமைப் புரட்சி, கிரேக்கத்தில் அறிவுப் புரட்சி, இந்தியாவில் சமூகப் புரட்சி, இதாலி ஜெர்மனியில் மதப் புரட்சி, யுகோவிலும் ஜெகோவிலும் யந்திரப் புரட்சி.

வேறு நாட்டில் சமூகப்புரட்சி இல்லை என்பதற்காக நம் நாட்டில் அதைப்பற்றிப் பேசக் கூடாது என்பது அறிவுடைமையல்ல. எந்தெந்த நாட்டில் எவை எவை தேவையோ, அவைகளுக்காகப் போராடுவதுதான் அந்தந்த நாட்டு மக்களுடைய இயற்கைக் குணம். அதை விட்டு விட்டு, இந்த நாட்டில் அதுவுண்டா, அந்த நாட்டில் இது உண்டா என்பது நல்லதல்ல.

இந்த நாட்டைப் பொறுத்தவரை படித்தவன், வேலையில்லாத் திண்டாட்டத்தினால், தன் படிப்புக்குக் கீழான வேலையையும், தொழிலாளர்களுக்கு விரோதமாய், முதலாளிகளுக்கு நல்லவனாய் நடந்து தன் வாழ்க்கையை நடத்தவேண்டிய சூழ்நிலை என்ற சூறாவளியில் அகப்பட்டுக் கொள்ளுகின்றான். இந்த நிலையில் நமது நாட்டில் புரட்சி ஓங்குவதெங்கே? தொழிலாளிகள் வெற்றிபெறுவதெங்கே?

படித்தவர்களுக்கு வேலை தேடிக்கொடுக்காமலும், தொழிலாளர்களுக்குப் போதிய ஊதியம் தராமலும், படிக்க வசதியற்றவர்களுக்குக் கல்வி வசதியளிக்காமலும், அறிவுத் துறையில் மக்களை அழைத்துச் செல்லாமலும், இனத்தின் பேரால் மக்கள் அடைந்திருக்கும் இழிவைப் போக்காமலும், ஏழை பணக்காரனுக்கிடையில் வீழ்ந்திருக்கும் பிளவை ஒன்று சேர்த்து இணைக்காமலும், லஞ்சம் பதவி வேட்டை, சுயநலம், ஆகியவைகளையே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்தினிடம் மக்கள் உள்ளன்போடு நடந்து கொள்ளமாட்டார்கள். அது இயற்கையுமல்ல, எந்த வசதியும் செய்துதராமலே மக்களைத் தன் சொல் வழி நடந்தே தீரவேண்டுமென்று வற்புறுத்துவது மருந்துண்ணாமல் நோய் நீங்கவேண்டுமென்று விரும்புவதற்கொப்பாகும்.

"அரசாங்க உரிமைகளைவிட மக்கள் உரிமைகள் மேலானவை அரசாங்கம் தனக்கிருக்கும் சட்ட உரிமையை ஒரு குற்றவாளியின் மேல் சுமத்தப் பார்க்கின்றதே தவிர, அந்த மனிதன் ஏன் குற்றம் செய்தான் என்ற அடிப்படையை எண்ணிப்பார்ப்பதில்லை. அவன் குற்றம் செய்வதற்குள்ள காரணங்களைச் சமூகப் பொருளாதார வாழ்விலிருந்து அடியோடு களைந்தெறிந்தால் பிறகு யார் குற்றவாளிகள்?

"இயற்கையில் மனிதன் நல்லவன்" என்ற அறிஞர்களின் வாய்மைக்கு எல்லா மக்களும் இலக்கானால், நீதி மன்றம், சிறை, அதிகாரிகள் காவல் ஆகிய அவ்வளவுக்கும் தேவையிருக்காது. அந்த நாளின் தோற்றம் அண்மையிலோ, சேய்மையிலோ அல்லது இல்லவே இல்லையோ, யார் கண்டார்கள். ஒருவனுடைய மன பேதத்தோடு மன்பதை எவ்வளவோ துன்பப்பட்டிருக்கிறது நினைக்கவே நெஞ்சம் கொதிக்கிறது.

ராஜகிரிக்கும் ராஜகோட்டைக்கும் தலைநகரை மாற்றவேண்டுமென்று நினைத்த மகம்மத் இபின் துக்ளக் என்ற அரசனின் விவேகமற்றச் செயலால் பல்லாயிர மக்கள் வழியிலேயே இறந்தனர்.

ஒரே ஒரு நாஜி இயக்கத்தின் நாசவேலையால் நானிலம் இன்றும் கண்ணீர் வடிக்கின்றது. இதர லியின் பாசிச வெறியாட்டம் எவ்வளவு கொடுமைகள் செய்யத் துணிந்தது என்பதை இதற்குள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அமெரிக்க அணுகுண்டின் அதிர்ச்சி ஹிரோஷிமா மக்களுக்கே தெரியும், இப்படியே உலகம் நெடுநாட்களாக நடந்து கொண்டிருக்கின்றது.

வெளிநாட்டுத் தொல்லைகள். அடிக்கடி வந்தாலும், உள்நாட்டை நன்றாகச் செப்பனிட்ட, பசித்த எண்ணற்றவர்களின் வாயை மூடிய, அவர்கள் இருண்ட வாழ்வை மலரச்செய்த, எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடமாக்கிய வீரன் லெனின் வெங்கலச் சிலையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

சேயின் நோய் நீங்கத் தாய் மருந்துண்பதைப் போல், தனயன் அறிவாளியாகத் தந்தை கல் சுமப்பதைப்போல், மக்களின் வறுமை நீங்க மாபெரிய வீரர்கள் சிறையில் மடிந்ததைப் போல், மாஸ்கோவின் மணம் மண்டலமெல்லாம் வீச மார்பில் குண்டேந்திப் பல நாட்கள் படுக்கையில் கிடந்து தனது கடைசி வணக்கத்தைச் செய்து மீளாத் தூக்கத்திலாழ்ந்த மாவீரன் லெனின் வெங்கலச் சிலையை வையகத்தார் கண்ணீரால் கழுவுகின்றனர்.

ஜெகமஞ்சப் போரிட்ட ஜூலியஸ் சீசர் ஆண்ட ரோம் ஏகாதிபத்தியம், அகிலத்தைத் தன் இரும்புக் காலால் மிதித்த ஹிட்லரின் சர்வாதிகாரம், உலகின் இரண்டு பாகத்தை ஆண்ட பெர்ஷிய சாம்ராஜ்யம், நானிலம் என்றும் கண்டிராத தன் வாள் வீச்சால் கதிரவன் ஒளியையும் மங்கவைத்த வீர நெப்போலியனின் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அரசியல் வானில் மங்காத புகழோடு வாழ்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், செங்கோடிட்ட சீனக் குடியரசு, எரிமலையின் வாயிலே விளையாடும் ஜப்பான் ஆகிய அவ்வளவு நாடுகளும் தலைவணங்கும் ஒப்பற்ற மனிதாபிமானியை ஒவ்வொருவருடைய உள்ளத்திலே மாத்திரமின்றி, வெங்கலச் சிலையுருவில் விளாடிவாஸ்டாக் நகரமும், உண்மையான உருவத்தை மாஸ்கோவும் காப்பாற்றி வருகின்றது.

மாஸ்கோ மக்களின் உணர்ச்சி குன்றி ஊக்கம் தளருகிறபோது, ஏழைக்கு வாழ்வளித்த இந்த இதயப் பெருஞ்சுடரைக் கண்டு கண்ணீர் சிந்தாதார் இல்லை.

ஆவேச உணர்ச்சிகொண்டு அலைகடலே எழும் பினும், அதை அடக்கியாளும் ஆற்றல் மாஸ்கோ மக்களுக்கு உண்டு என்பதை அகில ஐரோப்பாவுக்கு அறிவுறுத்துவதைப் போலத் தன் இடக்கரத்தால் எச்சரிக்கை செய்கின்றான் அப்பெருந்தகை. வாழ்க அவன் நாமம்! வற்றாத ஜீவநதி போல் வளர்க அவன் கொள்கை! விடிந்துவரும் கதிரவன் கைகளால் தெளிவுபெறட்டும் அந்த வெங்கலச்சிலை.


"https://ta.wikisource.org/w/index.php?title=வெங்கலச்_சிலை&oldid=1548017" இலிருந்து மீள்விக்கப்பட்டது