வெற்றி முழக்கம்/10. கலை அரங்கேற்றம்
அரங்கேற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் விரைவாக நடந்தன. தத்தையின் யாழரங்கேற்றம் மட்டுமல்ல; மன்ன குமரர் உதயணனிடம் கற்ற கலையரங்கேற்றமும் உடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் அரசிளங்குமரர் போர்த்துறைக் கலைகள், பின்னர் யாழிசை வித்தகி தத்தையின் தேனிசை விருந்து இவ்வாறு அரங்கேற்றம் முறை செய்யப்பட்டிருந்தது. அரசகுமரர் மேடைக்கு வந்தனர். பிரச்சோதனன் அரியணைமேல் அமர்ந்திருந்தான். அருகே உதயணன் ஆசிரியன் என்ற முறையில் வீற்றிருந்தான். அவைக் களம் அறிஞர்களால் நிறைந்திருந்தது. தாம் கற்ற பலவகை நுண்கலைகளையும் யானையேற்றம், குதிரையேற்றம், வாட்போர், விற்போர் முதலிய போர்களையும் அவையினர் மகிழ வெளிக்காட்டினர் அரசிளங்குமரர். அறிஞர் புகழ்ந்தனர். அவையோர் பாராட்டினர். உதயணன் தானே அவற்றுக்கு ஆசிரியனென்ற எண்ணத்தால் இறும்பூது அடைந்தான். பிரச்சோதனன் மனைவி தன் குமாரரை ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்தாள். அந்த உவகையில் வேறோர் வியப்பும் கலந்திருந்தது. ‘பகைவனாக இருந்து வந்த உதயனனல்லவா நம் புதல்வர்களைக் குலவிளக்காக்கி இருக்கிறான். என்னே அவன் பண்பு!’ என்பதுதான் அவளுடைய வியப்பு. அவையோர் அறியும்படி உதயணனை வாயாரப் புகழத் தொடங்கினான் பிரச்சோதன மன்னன். பாராட்டியும் பரிசு நல்கியும் நன்றி சொல்லிய பின்னர், மனம் விரும்பி உதயணனை விடுதலை செய்து அவன் நாட்டிற்கு அனுப்பி விடுவதாகத் தான் கருதியிருப்பதையும் தன் அவைக்குக் கூறினான் பிரச்சோதனன். உதயணனுக்கு அளவிடற்கரிய பல சிறப்புகள் செய்யப் பெற்றன. பிரச்சோதனன் அவை முடிந்ததும் அந்தப்புரத்திற்குச் சென்றான். அப்போது தத்தையின் கலையையும் இப்போதே அரங்கேற்றச் செய்யலாம் என்று உதயணன் ஒரு தூதுவன் மூலம் பிரச்சோதன மன்னனுக்குக் கூறியனுப்பி யிருந்தான். அந்தத் தூதுவன் கூறிய செய்தியைக் கேட்டு, மன்னன் முன்னினும் மும் மடங்கு மகிழ்ச்சியுற்றான். அதோடு தத்தை யாழரங்கேற்றத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்யும்படி வினைவலார்க்கு ஆணையிட்டான். ஏற்பாடுகள் நடந்தன. வயிரியர், கூத்தர் முதலிய இசையோடு பட்ட பல் துறைக் கலைஞர்களும் பார்வையாளராக அழைக்கப் பெற்றனர். அரங்கில் எங்கும் அகிற்புகை மணம் எழும்பியது. அரங்கு எழில் நிலையமாக அலங்கரிக்கப் பெற்று விளங்கியது. மேடையை மறைத்து ஒரு மெல்லிய திரைச்சீலை தொங்கியது. அரங்கேற்றற்குரிய நாளில் அதற்கெனக் குறித்த போது கொண்டாட்டத்துடன் வந்து சேர்ந்தது. தத்தை ஆயமகளிர் புடைசூழ அழகுப் பாவையாக அரங்கினுட் புகுந்தாள். மன்னர் அவையின் நடு நாயகமாக விளங்கினார். அது மட்டுமல்ல. தத்தையின் தந்தை என்ற பாசமும் ஆவலுருவாக அவரிடம் விளங்கியது. அவைக்களம் கலைக் களமாகப் பொலிந்தது. அரசன் பக்கலில் அமைதியே வடிவாக அமர்ந்து கொண்டிருந்தான் வத்தவர் கோனாகிய உதயணன். திரை விலக்கப் பெற்றது. தெய்வமொன்று கையில் யாழேந்தினாற் போலக் கலைமகளோவெனக் கண்டார் ஐயுறும் வண்ணம் காட்சியளித்தாள் வாசவதத்தை, சாங்கியத் தாய், “தந்தையாகிய பிரச்சோதனனை வணங்கி விட்டு யாழ்கற்ற திறனைப் பின்னர் வெளிக் காட்டுமாறு” தத்தையிடம் கூறினாள். அவ்வாறே தத்தை தந்தையை வணங்கி யாழ் நரம்புகளை மீட்ட ஆரம்பித்தாள். நால்வகைப் பண்ணும் எழுவகைப் பாலையும் நன்கறிந்த கலைநலங் கண்டு கலைத்துறை வாணரெல்லாரும் வியந்தனர். மூவேழ் திறமும் முற்ற விளங்கியது அவள் நல்லிசை. அவை முழுவதும், அந்த இசை நலத்தில் மயங்கியது. ‘தத்தை தெய்வகன்னி’ என்றார் சிலர். ‘இன்னிசைச் செல்வியாகிய மாதங்கி இவளே’ என்றார் பலர் பாராட்டுபவர் பலரானால், பாராட்டுகின்ற முறையும் பலவாகத்தானே இருக்கும்? வேறு சிலர், இதற்கு முழுமுதற் காரணனான உதயணனை வாயாறப் புகழ்ந்து வாழ்த்தினர். அரங்கேற்றம் வெற்றிகரமாக முடிந்தது. தான் வாசித்த யாழைத் தோழி காஞ்சனமாலையின் கையில் அளித்துவிட்டு மீண்டும் தந்தையை வணங்கி எழுந்தாள் தத்தை. வணங்கிய மகளை எழுப்பித் தழுவிக் கொண்டு பலபடப் பாராட்டி அவள் தாயினிடம் அனுப்பினான் மன்னன். வாசவதத்தையின் நற்றாய் மட்டுமல்ல மகளிர் எல்லோருமே அவளைத் தழுவிப் பாராட்டினர்.
முன்னர், மன்ன குமரர் கலை நலங்கண்டே உதயணனைப் பேரளவாகப் புகழ்ந்திருந்தான் பிரச்சோதனன். தத்தை யாழரங்கேற்றம் முடிந்ததும் உதயணனுடைய தனிமையின் முழு உருவமும் அவனுக்குத் தெரிந்தது. அதைக் கண்டுணர்ந்த மனோபாவம் வெளியாகும்படியாக அமைகிறது பிரச்சோதனன் பாராட்டு. “மருந்துக்குப் பயன்படும் மரமொன்றை அது சாயும் வண்ணம் வெட்டியும் செதுக்கியும் உலகினர் பயன் கொள்ளுதல்போல, என்குடி பயனுறல் வேண்டி உதயணன் குடிக்கு யான் ஊறு செய்து விட்டேன். பகைவன் மக்களென மாறாது, உண்மையோடும் நம்பிக்கையோடும் என் மக்களுக்குப் பல்கலையும் புகட்டினான். அவந்தி நாடும் செளசாம்பி நாடும் இனி ஒரு நாளும் பகை நினைவுகொள்ளக் கூடாது. ஒன்றுக்கொன்று உதவி வாழ வேண்டும். உதயணன் என்னால் சிறை செய்யப்பட்ட சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவன் நாட்டை வென்று கைக்கொண்ட ஆருணி அரசன், அதை உதயனனுக்கே அளித்து விட்டுத் தன் நாடு செல்வதுதான் தக்கது. ஆருணி மறுத்தால், உதயணன் தலைமையில் என்குமரன் பாலகன் நடத்தும் பெரும்படை இன்றே புறப்படும்” என்று மாற்றவனாகிய ஆருணிக்கு ஒலை போக்கும்படி உத்தரவிட்டான். அரசனுடைய கட்டளைப்படி ஓலை எழுதுபவன் ஓலையை எழுதி அதற்கு அரக்குப் பொறியிட்டு அனுப்பினான். அரசன் பிரச்சோதனன், உதயணனுக்கு அரச மரியாதைகள் பலவற்றைச் செய்தான். நாடக மகளிரும் நுண்கலைப் பொருள்களும் நூலாக் கலிங்கமும் தந்தப் பேழையும் யந்திரப் பொறிகளும் வேண்டிய மட்டும் அளித்தான். ‘கைது செய்த உதயணனுக்கு இந்நிலையா என அவை வியந்து விடுமோ?’ என்று பிரச்சோதனனுக்கு ஐயம். அதை வெளிப்படையாகப் போக்க நினைத்து, “அவையோர்களே! முன்பு யான் இதே உதயணனைப் பல வகையிலும் துன்புறுத்த நினைத்தேன். இன்றோ பலவகையிலும் இவனுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். ஒருவருடைய நலன்களைப் புரிந்துகொண்டபின் மனம்மாறி நன்மை செய்வது முரண்பாடு அன்று” என்று தன் செயல்களுக்கு விளக்கம் கூறினான். உதயணனை விடுதலை செய்து தக்க சிறப்புக்களுடன் வத்தவ நாட்டிற்கு அரசனாக அனுப்பிவிடக் கருதினான் மன்னன். அதற்கு ஆவனவற்றை விரைவில் செய்யவும் தொடங்கினான். உதயணன் விடுதலை பெற்று ஊர் திரும்ப வேண்டிய நல்ல நாள் நெருங்கி வந்தது. அரசன் இவ்வாறு உதயணனை நகரனுப்ப ஏற்பாடு செய்துவந்ததைத் தன்னுடைய ஒற்றர் மூலம் யூகி அறிந்துகொண்டான். பிரச்சோதனன் ஏற்பாட்டின் படி உதயணன் கௌசாம்பி திரும்பி விடுவானாயின் யூகியின் சபதம் பொய்யாகிப் போகும். தன் சபதத்தை மெய்யாக்க வேண்டிய தருணத்தில் இத்தகைய இடையூறு வந்து சேர்ந்ததை யூகியாற் பொறுக்க முடியவில்லை. எப்படியும் சபதம் நிறைவேறியாக வேண்டும். யூகியின் மூளை வேகமாக் வேலை செய்தது. முடிவில் ஒரு சூழ்ச்சித் திட்டம் தோன்றி விட்டது. யூகி தனக்கு வேண்டியவளான பாகீரதி என்னும் பெண்ணைத் தெய்வாவேசம் கொண்டவள்போல் வேடமுறச் செய்து, நீர்விழாக் கொண்டாடும் படியாக நகர மக்களைத் தூண்டும்படி அனுப்பினான். கரிய உடையணிந்து பிளந்த வாயுடன் பைத்தியம் கொண்டவள்போல் சிரித்தும் பேசியும் ஆடியும் பாடியும் நகர வீதிகளில் திரிந்துகொண்டே நீர்விழாக் கொண்டாடும்படி மக்களை வற்புறுத்திப் பயமுறுத்தினாள் பாகீரதி. “யான் முன்னர் நளகிரியை மதங்கொள்ளச் செய்த தெய்வம். சென்ற ஆண்டும் நீராட்டு விழா நிகழவில்லை. இந்த ஆண்டும் நீராட்டுவிழா நிகழாதாயின் யான் மீண்டும் நளகிரி மதங்கொள்ளச் செய்வேன். அதனால் நகரினையும் பல மக்களையும் அழியச் செய்வேன். நினைவிருக்கட்டும். நீராட்டு விழாவை மறந்து விடாதீர்கள்” என்று கூறிக் கொண்டே பாகீரதி உஞ்சை நகரத்துத் தெருக்களில் சென்றாள். தோள்வரை தொங்கும் அவள் காதணிகளையும் விரித்த கருங்குழலையும் வீசி நடக்கும் கரங்களையும் இடி போன்ற பேச்சுக் குரலையும் கண்டு நகர மக்கள் அவளைத் தெய்மென்றே நம்பினர். அந்த நம்பிக்கையால் ‘மீண்டும் நளகிரியின் அழிப்பு வேலை ஆரம்பமாகி விடுமோ?’ என்ற அச்சமும் எழுந்தது. நளகிரியை நினைக்கும்போதே நடுங்கினர் மக்கள். கரிய நிறமுள்ள கொழுத்த பன்றியால் முன்பு எப்போதோ துரத்தப் பெற்ற நாய், பின்பு கரியேறிய சோற்றுப்பானையைக் கண்டதும், ‘இது அந்தப் பன்றி தானோ!’ என்று எண்ணி ஒடுவதுபோல ஏற்கெனவே நளகிரியால் துன்பமுற்றிருந்த மக்களுக்குப் பாகீரதி கூற்று முழுதும் அதே அச்சத்தை உண்டாக்கியது. நகரின் பெரிய மனிதர்கள் நாடு காவலனைத் தேடி ஓடினர். தெய்வ ஆவேசத்தில் கேட்ட செய்தியைப் பரபரப்புடன் கூறினர். அரசன் சிந்தித்துப் பார்த்தான். நீர்விழாவிற்கு உடன்பாடு தந்தான்.