வெற்றி முழக்கம்/15. பகை நடுவே பயணம்
யூகியிடம் விடை பெற்றுக்கொண்டு, பின் தொடருகின்ற வராகன் முதலியோர் அடங்கிய படைக்குத் தப்பிச் சென்ற உதயணன் வேகமாக மேலே போக முடிந்தாலும் அந்நிலை நீடிக்கவில்லை. விரைவில் வேறோர் பெரும்படை தன்னைத் துரத்திப் பின்பற்றுவதை அவன் கண்டான். உதயணனிடமிருந்து செய்தி பெற்றுச் சென்ற வராகன் அதை அரசனிடம் கூறினான் என்பது மேலே விவரிக்கப் பெற்றது. அவன் கூறியது கேட்ட பிரச்சோதனன், சினங்கொண்டதும் சாலங்காயணன் அவனை அடக்கியதும் கண்டோம். பிரச்சோதனன், சாலங்காயனன் உரையில் ஆறுதல் பெறுவதற்கும் முன்பு செய்த சினக் கலவரத்தைக் கண்ட வராகன், பலர் குழுமிய ஒரு பெரும் படையுடன் மீண்டும் உதயணனைத் துரத்தினான். அதுதான் உதயணன் இப்போது கண்டபடை. இவ்வாறு தத்தையுடனே ஒருங்கமர்ந்து செல்லும் அந்த இன்பப் பயணமும் பகை சூழ்ந்த பயணமாகியது. நொடிக்கு நொடி அவன் சென்ற பிடியின் வேகம் அதிகமாகியது. அதை எவ்வளவு துரிதமாகச் செலுத்த முடியுமோ அவ்வளவு துரிதமாகச் செலுத்தினான் உதயணன். தேரும் யானையுமாகத் திரண்ட வெம்படை தன்னை மிகமிக நெருங்கி வருவதை உதயணன் உணர்ந்தான். அந்த நேரத்தில் சமயத்திற்கிடைத்த சஞ்சீவிபோல அங்கே தனித்தனியே மறைந்திருந்த யூகியின் படைவீரர் வெளிப்பட்டு உதயணனைத் துரத்தி வரும் படையை எதிர்த்தனர். உதயணன் இதற்காக யூகியை மனமாற வாழ்த்தினான். யூகியின் ஆட்களுக்கு வருகிற படைவீரர் களைப்பதற்குள் தான் முன்னேறிப் போய்விட வேண்டும் என்பது உதயணன் கருத்தாயிருந்தது. அதனால்தான் அவன் யானையை வேகமாக நடத்தினான். வந்தபடை யூகியின் வீரரால் எதிர்க்கப்பட்டுப் புறங்காட்டி ஓடியது. உதயணன் பிடி உஞ்சேனை நகருக்கு அப்பால் இரண்டு காததுரம் கடந்து விட்டது. அந்த நேரத்தில் கதிரவன் மெல்ல மலை முகட்டில் மேற்கே மறைந்து கொண்டிருந்தான். இருள் தொடங்கியது. பகை நடுவே பயணம் நடத்துகின்ற உதயணனை மற்றவர்கள் காணின் துன்பம் நேரும் என்று கருதியவன்போல விரைவில் இருள் வருவதற்காகக் குடகடல் குளித்துக் குடமலை மறைந்தான் கதிரவன்.
சுற்றிப் பகைவர் இருப்பரோ என்ற ஐயம் இருப்பினும் இருளும் ஒளியும் கலந்து மயங்கும் அந்த மாலை நேரம் மிகவும் இரம்மியமாக இருந்தது. மருத நிலங்கள் சூழ்ந்த வழியின் அழகில் தங்களையே மறந்து இன்பவெள்ளத்தில் மிதப்பது போன்ற களிப்புணர்ச்சியோடு சென்றனர் அவர்கள். பொய்கைகள் தோறும் நீலம், கழுநீர், நெய்தல் முதலிய பூக்கள் மலர்ந்த நிலைமாறி, ‘உதயணன் இன்பமாக நகர் சென்றடைக’ என்று கைகூப்பி வேண்டிக் கொள்ளுவதுபோலக் குறுந்தொடி மகளிர் கூப்பிய கரமெனக் குவிந்தன. வான வெளி எங்கும் பறந்து திரிந்த பறவைக் கூட்டங்கள் பலவகை ஒலிகளுடன் தத்தம் கூடுகளை அடைந்தன. பகலின் வெம்மை தணிந்து இரவின் மென்குளிர் எங்கும் பரவியது. மாலைப் பொழுது, உலகை இன்பமயக்கம் செய்துவிட்டு விடை பெறத் தொடங்கியது. இரவுக் கன்னி நீலக் கரும்பட்டாடை போர்த்து வந்தாள். அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. பகைவர்களைப் பற்றிய கவலையும் மெல்ல மெல்ல மறைந்தது. சூழ்நிலையும் நேரமும் ஒன்று கூடும் போது பற்றி நிற்கும் தொல்லைகளை மறந்து சுற்றியுள்ள அழகை இரசிக்க ஆரம்பித்தல் மனித இயல்பு. உதயணனும் வாசவதத்தையும் காஞ்சனையும் வயந்தகனும் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன? பகை பின்பற்றித் துரத்தியது உதயணனை. அவனோ தன் பயணத்தைச் சூழ்நிலை அழகில் முழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொண்டே நடத்துகிறான்.
“நாளை எப்படியும் தத்தையைக் கோசாம்பி நகரில் உதயணனுடைய அரண்மனை ஆயமகளிர் எதிர்கொண்டழைக்குபடிக் கோசம்பி சென்றடைவேன்” என்ற உறுதியை மேற்கொண்டதுபோல விரைந்து சென்றது. பத்திராபதி என்னும் அந்த யானை. இவ்வாறு விரைந்து ஓடிய பிடியின் ஒட்டம், மென்மையை அன்றி வேறு உணர்வுகளைப் பயின்று அறியாத தத்தைக்குத் துன்பம் கொடுத்தது. பிடி ஒவ்வோர் அடிவைக்கும் போதும் பூவினும் மெல்லிய அவள் உடல் குலுங்கி ஆடியது. அந்த ஆட்டம் உடல்வலியை உண்டாக்கிற்று. அது பொறாமல் நெட்டுயிர்ந்து அடிக்கடி விம்மினாள் வாசவதத்தை. பிடியின் புயல்வேகம் மெல்லியல் மகளாகிய தத்தைக்குச் சோகம் விளைத்தது. அடிக்கடி நெட்டுயிர்த்த தத்தையைக் காஞ்சனமாலை தழுவிக் கொண்டாள். அடிக்கடி பிடி குலுங்கிய வேகத்தில் தத்தை, உதயணனைத் தீண்ட நேர்ந்தது. ஆடவர் உடலைத் தீண்டி யறியாத கன்னி பயிர்ப்பு எய்தினாள். உடல் வலியில் விளைந்த சோகம் ஒரு புறம். உதயணனைத் தீண்டும் இன்பங் கலந்த சோகம் ஒரு புறம்.
தத்தையின் சினக்குறிப்பை, அவள் கூறாமலே தெரிந்து கொண்ட காஞ்சனமாலை, அவளைத் தாங்கிய வண்ணமே சில செய்திகளை மெல்ல அவளுக்குக் கூறினாள்: “உதயணன் உன்னை இன்னும் முறைப்படி நாடறிய நன்மணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவன் உனக்கு யாழ் கற்பித்த ஆசிரியன். ஆசிரியனாக இருந்ததுடன் உன் மனத்தைக் கவர்ந்த காதற் கள்வனுங்கூட. உனக்குப் பயிர்ப்பு ஏற்பட வேண்டியது அவசியமில்லை. உன் தந்தை தன் கைப்பட நின்னை உதயணனுக்கு மணம் செய்து கொடுக்கவில்லையே என்பது தான் குறை. ஆயினும் உன்னை அவன் தானாகவே அடைந்து விட்டான், ஒத்த தகுதியுள்ள இருவர் ஆசிரியனும் மாணாக்கியுமாக இருப்பின் மணத்திலேயே அந்தக் கலை நிறைவுறும் என்ற பெரியோர் வாக்கு, உங்கள் வரையில் மாற்றற்ற உண்மையாக மிளிர்கிறது. உனக்கு மயக்கத்தை உண்டு பண்ணும் பிடியின் வேகத்தில் சோகப்படாமல் தப்ப ஒரு வழி கூறுவேன்” என்றிவ்வாறு காஞ்சனை தத்தைக்கு உரைத்துப் பிடிசெல்லும் வேகத்தில் மேலும் கீழும் முன்னும் பின்னுமாகச் சுற்றியுள்ள பொருள்கள் சுழலுவதைக் காணாமல் கண்ணை மூடிக் கொள்ளுமாறு வேண்டினாள். அப்படிக் கண்களை மூடிக் கொண்டால் மயக்கம் ஏற்படாது என்றும் கூறினாள். பத்திராபதி ஓடிய வேகத்தில் சுற்றியிருந்த மரங்கள் பின்னோக்கிச் செல்வன போலவும் எதிரே எழுந்து வருவன போலவும் திசைகள் சுழற்சி எய்தின. அவற்றைக் கண்டால் தலைசுற்றி மயக்கம் கொள்ள நேருமாகையால் கண்களை மூடிக் கொண்டால் மயக்கம் தெரியாதென்று அவள் தோழி கூறியிருந்தாள். பத்திராபதியின் வேகத்தில் உடலாட்டங் கண்ட தத்தைக்கு நெற்றியில் முத்து முத்தாக அரும்பியிருந்த வேர்வைத் துளிகளைத் துடைத்தாள் காஞ்சனை. உடல் சோர்ந்து காணப்பட்ட தத்தையை மெல்ல உதயணனின் பரந்த மார்பிற் சார்த்தினாள் காஞ்சனை. கருடப் பறவையின் சிறகுகள் ஒலிப்பதைப்போலப் பிடி ஒவ்வொரு அடியைத் தரையில் வைக்கும்போதும் மேலே உட்கார்ந்திருந்தவர்களுக்குத் திடும் திடும் என்ற ஒலி கேட்டு அதிர்ச்சி செய்தது. அந்த ஒலி வாசவதத்தையின் காதுகளில் விழாதபடி அவள் காதுகளில் பஞ்சு அடைத்துக் காவல் கொண்டாள் காஞ்சன மாலை. எவ்வளவு பேணியும் தத்தைக்கு அந்த வேகம் சோகத்தையே மேன்மேலும் கொடுத்துக் கொண்டிருந்தது. அது கண்ட காஞ்சனை தத்தையிடம் உதயணனைப் பற்றிக் கொண்டிருக்குமாறு கூறிவிட்டுத் திரும்பி உதயணனைப் பார்த்து, வேகத்தைச் சிறிது தணிக்குமாறு வேண்டினாள். அவனும் அது கேட்டு வேகத்தைச் சற்றுக்குறைத்தான். வாசவதத்தையின் துவண்ட பூவுடல் பரந்த மார்புக்கு இட்டமாலை போல் அவன்மேல் மெல்ல சாய்ந்தது.