வெற்றி முழக்கம்/38. பதுமையின் சினம்
பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் பதுமையின் கன்னி மாடத்திற்குள் நுழைந்து பள்ளியறை வாயிலில் அதை இறக்கியபோது தோழி அயிராபதி விசிறியோடு பணிவாகக் காத்துக் கொண்டிருந்தாள். மயிற் பீலியினால் இயற்றப்பட்ட பெரிய ஆலவட்டம் அவள் கையிலிருந்தது. அவள் ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றபின் பதுமை உதயணனைப் பல்லக்கில் இருந்து வெளிப்படுத்தித் தன் பள்ளியறைக்குள்ளே அழைத்துச் சென்றாள். கன்னிமாடத்திலும் அதனுள் இருக்கும் பிற பகுதிகளிலும் அயலார் யாரும் இல்லை என்பதைப் பதுமை அப்போதே சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொண்டாள். இனி அயலவர்களை மிகுதியாக நடமாட விடக்கூடாது என்றும் தனக்கு மிகவும் வேண்டிய தோழிகள் சிலரிடம் கூறியிருந்தாள். அன்றிலிருந்து யாழ், இசை முதலிய கலைகளைத் தான் மீண்டும் தெளிவாகக் கற்கப் போவதால் தனக்குக் கன்னிமாடத்திற்கே உணவைக் கொண்டுவந்து விடுமாறு கூறிவிட்டாள் பதுமை. யாப்பியாயினி என்ற தோழி பதுமைக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் விருப்பத்தோடு அந்தரங்கமாகச் செய்து வந்தாள். கன்னிமாடத்தின் ஏழாவது மாடத்தில் இருந்தது பதுமையின் பள்ளியறை. பதுமையின் கன்னிமாடத்திற்கு உதயணன் வந்த பின்னர் நாட்கள் வரிசையாகக் கழிந்து கொண்டிருந்தன. தோழி யாப்பியாயினி, பதுமை இவ்விருவர் தவிர வேறு எவரும் உதயணன் அங்கிருப்பதை அறியார்.
வேறு ஓர் இடமாக இருந்தால் உதயணனுக்கு இந்த மறைவு வாழ்க்கை அலுத்துப் போயிருக்கும். பதுமையின் காதலிலும், அவள் தனியாகத் தன்னை மறைத்து வைத்துப் பேணுவதிலும் அவன் அடைந்த இன்பம் நிகரற்றது. அந்த இன்பம்தான் அவனை அத்தகைய மறைவு வாழ்க்கைக்கு ஒப்புக் கொள்ளச் செய்தது. முழுமதியும் உரோகிணியும் ஒன்றுபட்டதுபோல அவனும் பதுமையும் அங்கே ஒன்று பட்டிருந்தனர். ‘உதயணன் எங்கே எவ்வாறு இருக்கிறான்?’ என்ற விவரம் முற்றிலும் தெரியவில்லை. எனினும், ‘அவன் எப்படியும் பதுமையோடு அரண்மனைக்குள்ளேதான் இருக்க வேண்டும்’ என்று உருமண்ணுவா முதலியோர் நுட்பமாக அனுமானித்து அறிந்துகொண்டனர். அவர்கள் அரண்மனையின் பிற பகுதிகளாகிய இடங்களில் வழக்கம்போல் மாறு வேடத்தோடு தங்கள் வேலையைக் கவனித்து வந்தனர். உதயணனோ ஆடவர்கள் என்றுமே புகமுடியாத அரண்மனையின் உட்பகுதியில், கன்னிமாடத்தின் ஏழாவது மாடத்திலே, அவர்கள் அறியாதபடி பதுமையோடு வசித்து வந்தான். இங்ஙனம் பதுமையோடு வசித்து வரும்பொழுது, அவள் தன்மேல் காட்டும் அளவு கடந்த காதலால், ‘பதுமை நம்மை ஏதேனும் சூழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு எண்ணி இப்படிக் கன்னிமாடத்தில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறாளோ?’ என்று சில சமயங்களில் விளையாட்டும் வினையும் கலந்த சந்தேக எண்ணங்கள்கூட உதயணனுக்குத் தோன்றும்.
‘ஏதோ? எப்படியோ? எந்தச் சமயத்தில் நமக்கு என்ன நேருமோ? எதற்கும் நாம்தான் முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும்’ என்று எண்ணிய உதயணன், பதுமையினுடைய தோழியாகிய யாப்பியாயினியைக் கொண்டு இராசகிரிய நகரத்தையும் அதில் அரண்மனையின் அமைப்பையும் விளக்கத்தக்க சித்திரம் ஒன்றை எழுதி வாங்கி வருமாறு செய்தான்.
அவன் விருப்பப்படி அவள் எழுதுவித்துக் கொணர்ந்த அந்தச் சித்திரத்தால், அரண்மனையின் ஒவ்வோரிடமும் எங்கெங்கே எப்படி அமைந்திருக்கிறது என்பதையும், தான் இருக்கும் கன்னிமாடத்திலிருந்து தப்பிச்செல்ல வேண்டுமானால் எப்படித் தப்பிச் செல்லலாம் என்பதையும், உதயணன் நன்கு அறிந்து வைத்துக் கொண்டான். தருசக வேந்தனுடைய நாட்டின் பரப்பு, படைவன்மை முதலிய யாவற்றையும் அறிந்துகொண்டபின், அவசியமானால் அவனை வெல்லும் திறமைகூடத் தனக்கு உண்டு என்று துணிந்தான் உதயணன். சூழ்ச்சிகள் எவையேனும் நேருமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் அவன் அந்த ஒவியத்தை முன்னேற்பாடாக வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். மேலும் தான் அங்கே கன்னிமாடத்தில் அதிகநாள் தங்குவதனால் தனக்கு எந்த வகையிலும் கேடில்லை என்று உறுதி செய்துகொள்ளவும் இது உதவியது. பதுமை தான் யாழ் முதலியன கற்கப்போவதால் கன்னி மாடத்திற்கே உணவைக் கொண்டு வந்துவிடும்படி முன்பே ஏற்பாடு செய்திருப்பினும், அதனால்கூட உதயணனுக்கும் அவளுக்கும் சிற்சில துன்பங்கள் நேரலாயின. உணவு கொண்டு வரும்போது பதுமையின் நற்றாய், செவிலித்தாய், மிக நெருங்கி உடன் பிறந்தோர் போலப் பழகிவிட்ட சில தோழிப்பெண்கள் ஆகியவர்களும் சில சமயங்களில் கன்னி மாடத்திற்குள் வந்துபோகத் தலைப்பட்டனர். இதனால் மேலே எழுநிலை மாடத்தில் சரியான நேரத்தில் உதயணன் உணவுகொள்ள முடியாமல் போயிற்று. பதுமை ஒருத்திக்கு வரும் உணவுதான் உதயணன் வயிற்றையும் நிரப்பி வந்தது. மேற்கூறியவர்கள் அடிக்கடி வந்து பேசியும் பொழுது போக்கியும் பதுமையின் நேரத்தைக் கவர்ந்து கொண்டதனால் அவளுக்கு உதயணனோடு செலவழிக்க மிகக்குறைந்த நேரமே எஞ்சியது.
உதயணன் நிலையும் இதனால் கூட்டில் தனியே அடைக்கப்பட்ட கிளியினது நிலையைப் போலாகிவிட்டது. உரிய காலத்தில் தனது உணவில் அவனுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முடியாமல், பதுமை உண்ணும்போது அங்கு வந்தவர்கள் பக்கத்தில் அமர்ந்து விடுவார்கள். அது ஒன்று தான், இவை யாவினும் பதுமையின் மனத்தை அதிகமாகத் துன்புறுத்தியது. இந்தத் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு வழிதேடிய அவள், யாப்பியாயினியின் துணையாலேயே அதையும் அடைந்தாள். மறுநாளிலிருந்து பதுமை எழுநிலை மாடத்தில் உதயணனுடனேயே இருந்தாள். அவள் கன்னி மாடத்தின் கீழ்ப்பகுதிக்கு வரவேண்டிய அவசியமில்லாத படி, யாப்பியாயினி தானே உணவு முதலியவற்றை மேலே கொண்டுபோய்க் கொடுக்கத் தொடங்கினாள். பதுமை கலைகளை நுணுக்கமாக மனஞ்செலுத்திக் கற்பதாகக் கூறி, அவளுடைய தாயார், தோழி முதலியவர்களின் போக்கு வரவையும் கொஞ்சம் கொஞ்சமாக யாப்பியாயினி குறைத்து விட்டாள். இந்தப் பெரிய உதவியைச் செய்ததற்காகப் பதுமை யாப்பியாயினிக்கு மிகுந்த நன்றி செலுத்தினாள்.
இதன் பிறகு கன்னிமாடத்தின் மேற்பகுதிலேயே இன்பமாகக் கழிந்து வந்தன அவர்களுடைய நாள்கள். அவ்வாறு இருக்கையில் ஒருநாள் உதயணனுக்கு அங்குள்ள மாடங்களின் சித்திரம், சிற்பம் ஆகிய வேலைப்பாடுகளில் கவனம் சென்றது. அவைகள் அமைக்கப்பட்டிருந்த முறை அவனைக் கவர்ந்தது. மாடப் பேரறையில் அமைந்திருந்த கட்டிற் கால்கள் தந்தத்தினால் செய்யப்பட்டிருந்தன. பட்டு விரிப்புப் பொருந்திய கட்டிலின் மேற்கட்டியில் முத்து, பவழம் முதலியவற்றினால் கோத்த அழகிய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சுற்றுப்புறத்தில் பதிந்திருந்த கண்ணாடிகளில் அவற்றின் ஒளிக்கதிர்கள் மின்னின. கட்டி லின் விளிம்புகளில் யானை, வீணை, சிங்கம், பலவகைக் கொடிகள் முதலியவை வனப்புறச் செதுக்கப் பெற்றிருந்தன. பக்கத்தில் வட்ட வடிவமான பல தட்டுக்களில் அருமையான பாக்கு வகைகளும் வேறு சில வாசனைப் பொருள்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இப்படி அவன் அவைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது, அறையின் மற்றொரு கட்டிலில் பதுமை அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.
உதயணன் அவள் வரவைக் கவனிக்கவில்லை. அப்போது இரவு நேரம். முழுமதி தன் அமுதக் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. உதயணன் பதுமை வெகு நேரம் தனக்காக மிக அருகிலேயே அமர்ந்துகொண்டு காத்திருப்பதை அறியாமல் மாடத்தில் வரைந்திருந்த சித்திரங்களின் நயங்களையே பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தான். உதயணன் அப்படித் தன்னை வேண்டுமென்றே பாராமுகமாக இருக்கிறான் என்றெண்ணிய பதுமை மிக்க சினமும் ஊடலும் கொண்டாள். அவன் அவ்வாறிருப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க எண்ணினாள் அவள். இதையெல்லாம் ஒன்றும் அறியாமல், உதயணன் தற்செயலாக அவள் இருந்த பக்கம் திரும்பினவன், அவளை அதுவரை கவனியாமல் இருந்துவிட்டதற்காக வருந்தியவாறே அருகில் நெருங்கினான். நெருங்கிய அவன்மேல் சீறி விழுந்தாள் பதுமை. உதயணன் திடுக்கிட்டான். தான் செய்துவிட்ட பெருந்தவறு என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. தழுவச் சென்ற அவனுடைய கைகளை அவள் ஒதுக்கித் தள்ளினாள். அவளுடைய அப்போதைய தோற்றத்தைக் கண்ட உதயணன் முதலில் ‘என்னவோ? ஏதோ?’ என்று பயந்துவிட்டான். அப்போது அதே தோற்றமுடன், சினம் பொங்கும் குரலில் பதுமை அவனை நோக்கிப் படபடப்போடு பேசத் தொடங்கினாள்.
“உச்சிக் கொண்டையையும் சிறகையும் அழகாக வாரித் திருத்தமுற நறுமணத் தைலம் பூசிச் சோறும் பாலும் தூய்மையாக ஊட்டினாலும், குப்பை கிளைக்கும் கோழி மீண்டும் குப்பை மேட்டைத்தானே தேடிக்கொண்டு ஓடும். ஆடவர்களும் அத்தகைய குப்பைக் கோழி போன்றவர்கள்தாம் போலும்! அதை இன்று கண் கூடாகவே இங்கே நான் கண்டு விட்டேன்” என்று கைகளை அழுத்தி நெரித்துக் கொண்டே சினத் துடிப்புடனே நிறுத்தி நிறுத்திக் கூறினாள் பதுமை. அவள் தன்னிடம் சினமும் ஊடலும் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று இப்போது உதயணனுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ஊடலோடு கூடிய அந்தச் சினத்தால், அணிகலன்களைக் கழற்றித் தரையிலே சிதறியும் கூந்தலை அவிழ்த்துக் கொண்டும் அவள் தோன்றிய அந்தச் சினத் தோற்றத்திலும் உதயணன் தனிபட்டதோர் அழகைக் கண்டான்.
அவளது சினத்தை எப்படியாவது தீர்க்கக் கருதிய அவன் அருகில் நெருங்கித் தான் வேண்டுமென்றே இப்படி இருக்கவில்லை என்றும் கவனக் குறைவாக இருந்துவிட்டதாகவும் இனிய மொழிகளில் இரங்கிக் கூறினான். அவளது அவிழ்ந்த தலையைக் கோதியும், சிதறிக் கிடந்த அணிகலன்களை எடுத்துக் கொடுத்தும், பல இங்கிதமான சொற்களைப் பேசியும் ஊடலைத் தணிக்க உதயணன் செய்த முயற்சிகள் யாவும் வீணாயின. அவனை அருகில் நெருங்கவிடாமல் தள்ளினாள் சினந்தணியாத பதுமை. அப்போது எதிர்பாராத துணை ஒன்று இயற்கையாகவே உதயணனுக்குக் கிடைத்தது. மாடத்தின் கீழிருந்த சோலை மரங்களில் இருந்து கூகை யொன்று திடீரென்று பறந்து வந்து மாடத்தில் அவர்கள் கட்டிலருகில் உள்ள திரிசூலத்தின்மேல் உட்கார்ந்துகொண்டு பலமான குரலில் பயங்கரமாக ஒருமுறை கத்தியது. அந்தக் குரலைச் செவியுற்ற பதுமை திடுக்கிட்டு நடுக்கத்தோடு திரும்பியபோது கோட்டானின் நெருப்புக் கண்கள் பயங்கரமாக இருளில் மின்னின. பதுமை பயந்துபோய் உடனே உதயணனைத் தழுவிக் கொண்டாள். இதனால் அவள் சினமும் ஊடலும் தீர்ந்து போயின. சமயத்தில் வந்து தனக்கு உதவி செய்த கூகையை வாழ்த்திக்கொண்டே பதுமையை ஊடல் தணியச் செய்தான் உதயணன்.