வெற்றி முழக்கம்/49. இசைச்சன் திருமணம்
பதுமையை மணந்துகொள்ள, உதயணன் இணங்கினான் என்பதை அறிந்தபின்பு தருசகனின் அமைச்சன் மேலும் பலவாறு அவனிடம் தொடர்ந்து கூறி, அவன் இசைவை ஒருவாறு உறுதியாய்ப் பெற்றுக்கொண்டு சென்றான். தருசகனை நோக்கிப் புறப்பட்ட அவன், ‘முடிப்பதற்கு அருமையான செயலை இன்று நம்மால் நிறைவேற்ற முடிந்ததே என்ற மனநிறைவோடு சென்றான். அமைச்சன் வெளியேறியதும் உதயணன், தன் நடிப்பை எண்ணிக் கொண்டு நண்பர்களை நோக்கித் தானாகவே சிரித்தான். நண்பர்களும் அதுவரை அடக்கிக் கொண்டிருந்த சிரிப்பை வெளிப்படுத்தினர். மகத மன்னனோடு உதயணனுக்கு நெருங்கிய உறவை ஏற்படுத்தி, அவனது அரசியல் வன்மையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தானே அவர்கள் இராசகிரிய நகரத்திற்கே வந்திருந்தார்கள்! அந்த நோக்கம் இவ்வளவு சுலபமாக நிறைவேறினால் அவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படாதா என்ன? உதயணன் மகிழ்ச்சியாவது ‘பதுமை உலகறியத் தன்னுடைய காதற்கிழத்தி ஆகிறாள்’ என்ற காரணத்தால் ஏற்பட்ட காதல் மகிழ்ச்சி. நண்பர்களின் மகிழ்ச்சியோ ‘நமது கடமையையும் இதனால் நிறைவேற்றிவிட்டோம்’ என்ற பூரணமான மகிழ்ச்சியாக இருந்தது.
உதயணன் இசைவைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பிச் சென்ற அமைச்சன், மகதவேந்தன் தருசகனிடம் நிகழ்ந்தவற்றை விரிவாகக் கூறினான். முதலில் பதுமையை உதயணன் மணக்க மறுத்ததையும் பின்பு சம்மதித்ததையும் தருசகன் அறிந்தான். ‘உதயணன் பதுமாபதியைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துவிட்டான்’ என்று எண்ணும் போதே அவனுள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது! உதயணன் சற்றும் எதிர்பாராத நிலையில் மகதநாட்டிற்கு வந்தது, தனக்கு உதவி செய்தது, பதுமையை மணந்து கொள்வதற்கு இசைந்தது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளுமே விதி தனக்கென்று செய்யும் சாதகங்களாக அவனுக்குத் தோன்றின. அமைச்சன் மூலமாக உதயணனின் சம்மதம் தெரிந்து, தருசகன் இவ்வாறு மகிழ்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கே உதயணன் புதிய கவலை ஒன்றினாற் சூழப்பட்டிருந்தான். மறுப்பதைப்போல நடித்து இறுதியில் அமைச்சனிடம் இசைவு தெரிவித்து அனுப்பியபின் சிறிது நேரங்கழித்து இந்தப் புதிய கவலை அவனைப் பற்றியது. என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் உதயணன் மூழ்கினான்.
‘காமன் கோட்டத்தில் நாம் பதுமையைச் சந்தித்ததும், பழகியதும், காதல் கொண்டதும் மாணகன் என்ற அந்தண இளைஞனின் தோற்றத்துடனே ஆகும்! இப்போது திடு மென்று ‘நீ உதயணனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று அவள் தன் தமையனிடமிருந்து கேள்விப் பட்டால், என்னை மாணகன் வடிவத்தில் பார்த்துப் பழகி மனம் பறிகொடுத்திருக்கும் பதுமையின் நெஞ்சம் என்ன பாடுபடும்? மாணகனும், உதயணனும் ஒருவரே என்பது பதுமைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நம் நண்பர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாத உண்மை ஆயிற்றே அது? அப்படி இருக்கும்போது பதுமை அதை எவ்வாறு அறிந்திருக்க இயலும்? உதயணனிடம் பதுமைக்கு மதிப்பு இருக்கலாம். ஆனால், அவள் உள்ளம் மாணகன் ஒருவனுக்கு மட்டும் தானே உரிமை உடையது? நானே மாணகனாக அவளிடம் நடித்தேன் என்ற உண்மையை அவள் தெரிந்து கொள்ளுமாறு செய்வது எப்படி? இந்த மறைவான உண்மையைப் பதுமை அறிந்து கொள்ளவில்லையானால் அவளுக்கும் காதலில் வெற்றியில்லை; எனக்கும் தோல்விதான்! இதை அவளுக்கு அறிவிப்பதற்கு வேறு வழியும் இருப்பதாகத் தெரியவில்லையே? என்ன செய்யலாம்?” என்று இவ்வாறு நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயணன்.
‘தானே மாணகனாக இருந்தவன் என்பதைப் பதுமைக்கு யாரால் எப்படி அறிவித்து அவளுடைய மனக் கலக்கத்தைப் போக்குவது?’ என்று மிகுந்த நேரம் இதே சிந்தனையில் ஆழ்ந்து கிடந்ததன் பயனாக இறுதியில் உதயணனுக்கு ஒரு வழி புலப்பட்டது. அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவனாக, வயந்தகனை அழைத்துவரச் செய்தான். சிறிது நேரத்தில் வயந்தகன் உதயணனிடம் வந்தான். வயந்தகனைத் தனக்கு மிக அருகில் வருமாறு உதயணன் குறிப்புச் செய்து விட்டு, அவனிடம் கூறத் தொடங்கினான். “வயந்தகா! இப்போது முக்கியமான ஒரு காரிய நிமித்தம் உன்னை அழைத்திருக்கிறேன். எனக்காக நீ தருசகராசனிடம் சென்று இப்போது நான் கூறியனுப்புவதைச் சொல்லிவிட்டு வர வேண்டும்! இப்போது நான் அகப்பட்டுக் கொண்டிருக்கும் விநோதமான இன்னல் ஒன்றிலிருந்து தப்ப வேண்டுமானால், தருசகனிடம் உன்னை நான் எதற்காக அனுப்புகின்றேனோ அந்தக் காரியம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி உன் கையில்தான் இருக்கிறது. காரியம் ஒன்றும் அவ்வளவு கடினமானது அன்று மிகச் சாதாரணமான ஒன்றுதான். அதில் வெற்றி பெறுவதும் எளிதே ஆனால், இப்போது நான் எண்ணிக் கூறுவது போலத் தருசகனும் இதைச் சாதாரணமாகவே நிளைக்கும்படி செய்ய வேண்டும். இதில் அவன் சிறிதும் சந்தேகம் கொள்ளுவதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது. நம் வெற்றிக்கு வேண்டிய திறமை இதில்தான் இருக்கிறது. நான் இப்போது கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொள்!
‘எங்கள் அரசர் உதயணனுக்கு இசைச்சன் என்னும் பெயரையுடைய அந்தணத் தோழன் ஒருவன் இருக்கிறான். அவன் இளமையிலேயே தன் தாய் தந்தையரை இழந்தவன். எங்கள் அரசரை வந்தடைந்தபின் அவர்தான் இசைச்சனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து போற்றிப் பாதுகாத்து வருகிறான். இப்போது அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பும் எங்கள் வேந்தருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே தனக்கும் பதுமைக்கும், திருமணம் நடப்பதற்கு முன்பே இசைச்சனுக்கு ஏற்ற அந்தணர் குலக் கன்னிப் பெண் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து அவனுடைய திருமணத்தை முடித்துவிடக் கருதுகிறார் எம் மன்னர். இதைத் தங்களிடம் கூறி இசைச்சனுக்கு ஏற்ற மணமகளைத் தேர்ந்தெடுத்து, அந்தத் திருமணத்தை நடத்திக் கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு முதலில் உங்களை வேண்டுகிறார்’ என்று நீ சென்று தருசக மன்னனிடம் சொல்ல வேண்டும். இதுதான் எனக்காக நீ செய்ய வேண்டிய காரியம்” என்று உதயணன், வயந்தகனை நோக்கிக் கூறினான். உதயணன் கூறியபடியே செய்வதாக ஒப்புக்கொண்டு வயந்தகன், தருசக மன்னனைக் காண்பதற்குப் புறப்பட்டான்.
தருசகனைச் சந்தித்து, அவன் சிறிதளவும் சந்தேகங் கொள்ளாதபடி உதயணன் கூறியவற்றை அவனுக்கு ஆதியோடந்தமாக எடுத்துச் சொன்னான் வயந்தகன். இசைச்சனின் திருமணத்தைத் தானே முன்நின்று நடத்தி வைப்பதாக மனக் களிப்போடு ஒப்புக் கொண்டான் தருசகன். “பதுமையின் ஆருயிர்த் தோழியர்களுள் யாப்பியாயினி என்று ஒர் அந்தணக் கன்னி இருக்கிறாள். அவள் ஒழுக்கத்திலும் அழகிலும், குலத்திலும் நீங்கள் கூறம் இசைச்சனுக்கு மிகவும் ஏற்றவளாக இருப்பாள் என்று நான் எண்ணுகிறேன். விரைவில் ஒரு மங்கல நாள் பார்த்து அவளுக்கும் இசைச்சனுக்கும் திருமணத்தை நடத்தியபின் பதுமையின் திருமணத்தைப் பற்றிச் சிந்திப்போம்! இதை நீ சென்று உதயணனிடம் கூறுக” என்று வயந்தகனுக்கு மறுமொழி கூறி அனுப்பினான் தருசக வேந்தன். வயந்தகன் விடை பெற்றுக்கொண்டு சென்றான். அங்கே இருந்து வெளியேறியதும் வயந்தகன் நேரே உதயணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, யாவற்றையும் அவனிடம் விவரமாகக் கூறினான்.
வயந்தகன் வந்து கூறும்போது மற்ற நண்பர்களும் உதயணனோடு இருந்தனர். உதயணனது இந்த ஏற்பாட்டையும் இதற்குத் தருசகன் சம்மதித்ததையும் அவர்கள் முழு மனத்தோடு வரவேற்றார்கள். அதனோடு அமையாமல் நண்பர்களே ஒன்றுகூடி இசைச்சனுடைய திருமணத்திற்கு ஒரு நல்ல மங்கல நாளையும் குறிப்பிட்டு வைத்துக் கொண்டனர். வயந்தகனுக்கு விடை கொடுத்து அனுப்பியதும் தருசக மன்னன், தன் தாய் சிவமதியைச் சந்திக்க அவள் மாளிகைக்குச் சென்றான். பதுமைக்கும் அவனுக்கும் தாயாகிய அம் மூதாட்டி முதிர்ந்த தளர்ந்த நிலையில் இருந்து வந்தாள். அந்த மாளிகையிலிருந்து வெளியேறவோ, நடமாடவோ முடியாத அவ்வளவு வயது அவளுக்கு. பதுமைக்கும் உதயணனுக்கும் திருமண ஏற்பாடு செய்திருப்பதையும் மற்ற செய்திகளையும் கூறிப் பெற்றவளின் ஆசியை எதிர்பார்த்து அங்கே சென்றான் தருசகன். யாப்பியாயினி, இசைச்சன் திருமணத்தை முதலில் நடத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும், அதற்குப்பின் உதயணன், பதுமை திருமணம் நடக்கும் என்பதையும் தாயிடம் தருசகன் எடுத்துக் கூறினான். இரண்டு திருமணச் செய்திகளையும் கேட்டு அளப்பரிய உவகை கொண்டாள் பெற்றவள். “பதுமைக்கு உதயணன் முற்றிலும் தகுதி வாய்ந்தவன்தான். அது அவளுக்கு ஒரு நல்ல பாக்கியம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றாள் தாய். தருசகனும் தாயாரும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கும் போது தற்செயலாகப் பதுமாபதியும் அங்கே வந்து சேர்ந்தாள். பதுமையின் தாய், யாப்பியாயினியின் திருமணத்திற்காக என்று தன்னிடமிருந்து சில அணிகலன்களை எடுத்துக் கொடுத்தாள். தருசகன் அவற்றைப் பெற்றுக் கொண்டான். அப்போதும் அதன் பின்பும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட பேச்சிலிருந்து அருகில் அமர்ந்திருந்த பதுமைக்கு, இசைச்சனுக்கும் யாப்பியாயினிக்கும் திருமணம் நிகழப் போகிறது என்ற செய்தி தெரிந்தது.
பதுமைக்குத் துயரம் தாங்க முடியவில்லை. ‘காதலித்த மாணகனைக் காணாமல் தான் தவிக்கும்போது, உதயணனை மணப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மாணகனும் நானும் உள்ளம் ஒத்த காதலர்கள் என்ற உண்மை என் தோழியருள் யாப்பியாயினி ஒருத்திக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அவளைக் கொண்ட மாணகனைத் தேடிக் காணலாம் என்ற நினைவினால் இதுவரை ஆறுதல் பெற்று வந்தேன். இனிமேல் அதுவும் முடியாதுபோல் இருக்கிறதே? யாப்பியாயினியைத் திருமணம் செய்து கொடுத்து என்னிடத்திலிருந்து பிரிப்பதற்கு அல்லவா இவர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இனி நான் சிறகு ஒடிந்த பறவைபோல் அன்றோ ஆகிவிடுவேன்?’ என்ற எண்ண அலைகளிலிருந்து மீள இயலாத சஞ்சலத்தோடு, தமையனிடமும் தாயிடமும் விடைபெற்றுக்கொண்டு யாப்பியாயினியைச் சந்திக்கச் சென்றாள் பதுமை. தனக்குத் திருமணம் என்ற பேச்சு இதற்குள் எவ்வாறோ அவளுக்கும் தெரிந்திருந்தது. பதுமை யாப்பியாயினியைக் கண்டு முதலில் களிப்புக்குரிய பேச்சுக்களைப் பேசி விட்டுத் தன் அன்பளிப்பாக அவளுக்குச் சில பரிசில்களைக் கொடுத்தாள். பின் “திருமணமானால் என்னைப்பற்றி உனக்கு எங்கே நினைவு இருக்கப்போகிறது? மறந்தே போய் விடுவாய் இல்லையா?” என்று நகைத்துக் கொண்டே அவளோடு பேசினாள் பதுமை. அவள் தலை குனிந்தபடி இதழ்களில் புன்னகை நிலவிட நின்றாள்.
இருவரும் விளையாட்டும் சிரிப்புமாக வெகுநேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். கடைசியில் பதுமை தன் துயரத்தை மனம் திறந்து யாப்பியாயினியிடம் விளக்கிக் கூறித் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டினாள். தன்னால் இயன்றதை எப்போதும் எந்த நிலையிலும் செய்வதாக அவள் பதுமைக்கு உறுதிமொழி கொடுத்தாள். இந்நிலையில் ஓரிரு நாட்கள் கழிந்தன. இசைச்சன், யாப்பியாயினி திருமணத்திற்கு உரிய ஏற்பாடுகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன. அவர்கள் திருமணச் செய்தியை நகரறிய முரசறைந்து எங்கும் பரவச் செய்திருந்தான் தருசகன். திருமணத்திற்குக் குறித்த நாளும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. உதயணன்தான் மாணகன், மாணகன்தான் உதயணன் என்ற இரகசிய உண்மையைப் பதுமைக்கு மட்டுமாவது அறிவித்து விடுவதற்கு இந்தத் திருமணத்தை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதி ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் உதயணன். ‘இசைச்சனுக்கு முதலில் திருமணம் செய்யவேண்டும்’ என்று அவன் கூறியனுப்பிய போதே அந்தத் திருமணத்தையே வாய்ப்பாகக் கொண்டு இந்த உண்மையைப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதுதான் அவனது முக்கிய நோக்கமாக இருந்தது.
திருமண நாள் வந்ததும் உதயணன், மணமேடையில் மணமகனாகிய இசைச்சனுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டிருந்தான். இசைச்சனும் யாப்பியாயினியும் பந்தலின் கீழே திருமணக்கோலத்தோடு விளங்கினர். திருமணச் சடங்குகள் முறைப்படி நிகழ்ந்து கொண்டிருந்தன. மாணகனாக மாறுவேடங் கொண்டிருந்தவன்தான் உதயணன் என்று யாப்பியாயினி மட்டுமே அறிந்து கொண்டாலும் போதும். பின்பு அவள் மூலமாக எப்படியும் பதுமைக்கும் அந்த உண்மை தெரிந்துவிடும். யாப்பியாயினி நுண்ணறிவு உடையவள். உதயணனுடைய குரலைக் கேட்கும் சந்தர்ப்பம் நேர்ந்தாலும் போதும். ‘இது மாணகனுடைய குரலைப் போல் இருக்கின்றதே’ என்று அவள் சிந்திக்கும்படி நேரிடும்! அவளுடைய அந்தச் சிந்தனையின் பயனாக மெய் வெளிப் பட்டுப் பதுமையளவிற்காவது பரவித் தெரியலாம். தெரிவதற்கு ஏது இருக்கிறது என்று நீண்டநேரம் சிந்தித்த பின்னர், ‘எவ்வாறேனும் தன்னுடைய குரலை யாப்பியாயினி கேட்குமாறு செய்தாக வேண்டும்’ என்ற முடிவிற்கு வந்தான் உதயணன்.
தன் முடிவைச் செயலாக்குவதற்கு ஏற்றவாறு மணமக்களுக்குச் சமீபத்தில் அவன் இருந்தான். மண நிகழ்ச்சிகளுக்கு இடையே இசைச்சனை அழைத்து, “எழில் மிகுந்த கோசாம்பி நகரத்தையும், அந் நகரத்திற்கு அழகு செய்யும் யமுனை நதியையும் அதன் இரு கரையிலும் வளமிகுந்து விளங்கும் பசுஞ் சோலைகளையுங் உனக்கு மனைவியாகும் பெரும்பேற்றினால் யாப்பியாயினி காணப் போகிறாள். அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இல்லை என்றால் நாம்தான் மகதத்திற்கு வருவானேன்? இப்படி இவை எல்லாம் நிகழவேண்டும் என்று விதியே வகுத்துக் கொண்டு நம்மை இங்கே வரவழைத்துக் கொண்டதோ என்னவோ?” என்று தன் குரல் யாப்பியாயினிக்குக் கேட்கும் படி இரைந்து கூறினான் உதயணன்.