வெற்றி முழக்கம்/51. தம்பியர் வரவு
அநுபவமும் பயிற்சியும் மிக்க தருசக ராசனின் அந்த நான்கு அமைச்சர்களும், தாம் மேற்கொள்ளும் செயல்களில் பிறருடைய உதவியின்றியே வெற்றி பெறும் ஆற்றலும் வன்மையும் உடையவர்கள். நால்வகைப் படைகளோடு அறுபதினாயிரம் வீரர்களையும் அழைத்துச் சென்று தாங்களே ஆருணியரசனிடம் இருந்து உதயணன் நாட்டை மீட்டுத் தருவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். முதலில் அமைச்சர்களையும் படையையும் அனுப்பிவிட்டு, பின்பு உதயணனைப் பதுமாபதியுடன் அனுப்புவது நலம் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான் தருசகன். தன் அமைச்சர்களுள் வருடகாரனைத் தனியே அழைத்து. “வருடகார அறிவும் அநுபவ முதிர்ச்சியும் மிகுந்த உன்னிடம் சில செய்திகளை நான் தனியாகக் கூறவேண்டும். இந்தப் படையெடுப்பின் வெற்றிக்கு உன்னையே நம்பி அனுப்புவது போல, வேறு ஒரு செயலுக்கும் நான் உன்னையே முழு மனத்தோடு நம்பியிருக்கிறேன். அதுதான், உதயணனுக்கு ஒரு சிறு துன்பமும் நேர்ந்துவிடாதபடி காக்கவேண்டிய செயல். இன்னும் வெளிப்படையாகக் கூறவேண்டுமானால், உதயணன் உன் அடைக்கலம் என்று வைத்துக்கொள். பிறரிடம் அடைக்கலம் புகுகின்ற அளவிற்கு உதயணன் சாதாரணமானவன் அல்லன். ஆனால், எனக்காகவும், என் தங்கை பதுமைக்காகவும் என் பொருட்டு நான் அவனை உன்னிடம் உரிய அடைக்கலப் பொருளாக ஒப்படைக்கிறேன். எந்த வகையிலாவது முயன்று ஆருணியரசனை வென்று நாட்டை உதயணனிடம் ஒப்பித்துவிட்டு வரவேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. சூழ்ச்சிகளினாலோ, வெளிப்படையான முயற்சிகளினாலோ இதை நீ நிறைவேற்றியாக வேண்டும்” என்று தருசகன் வருடகாரனிடம் மிக அந்தரங்கமாக வேண்டிக் கொண்டான்.
அன்றிரவே கோசாம்பி நகரத்தை நோக்கி அமைச்சர்கள் நால்வரையும் முதன்மையாகக் கொண்டு மகத நாட்டுப் படைகள் புறப்பட்டன. உதயணன், பதுமை ஆகிய இருவருக்கும் வேண்டிய எல்லாப் பொருள்களும் படைக்குப் பின்பு சென்றன. புதுமணக் காதலர்களாகச் செல்கின்றவர்கள் ஆகையால், அவர்களுக்கென்று சிறப்புமிக்க பரிசிற் பொருள்கள் பலவற்றை அனுப்பி வைத்திருந்தான் தருசக மன்னன். படை புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உதயணன் தருசகனிடம் விடை பெற்றுக்கொள்ள வந்தான். அப்போது தருசகன் அவனிடம் சில செய்திகளை மனம் விட்டுப் பேசினான். உதயணனைப் பிரியப் போகின்றோமே என்ற கலக்கமும் அந்தப் பேச்சிலே தொனித்தது. “உதயணன், உதயணன் என்று அதைப் புகழுக்குரிய பேரரசன் ஒருவனின் பெயராகக் கேள்விப்பட்டு அவ்வளவிலேயே மகிழ்ந்திருந்தவன் நான்! ஆனால் இன்றோ, நீ எனக்கு நல்ல சமயத்தில் செய்வதற்கு அரிய உதவி ஒன்றைச் செய்ததுடன் எனக்கு நெருங்கிய உறவினனாகவும் ஆகிவிட்டாய். பேரரசர்கள் யாவருக்கும் நீ நண்பனாகவும் உறவினனாகவும் இருக்கிறாய். உஞ்சை நாட்டு வேந்தன் பிரச்சோதனனும் என் போலவே மகட் கொடை முறையில் உனக்கு உறவினனே. இப்போது ஆருணியோடு, நீயும் என் படைகளும் நிகழ்த்த இருக்கும் போரில் உனக்கு ஏதாவது தளர்ந்த நிலை ஏற்படுமானால், பிரச்சோதன மன்னனுடைய உதவியைக்கூட நீ கோரலாம். அவனும் உன் வேண்டுதலை மறுக்கமாட்டான். மலைச் சிகரத்திலே பெய்த மழை நீர்போல, ஆருணியும் அவனைச் சேர்ந்தவர்களும் சிதறியோடித் தோற்றுப்போக வில்லையானால் நானே நேரில் அந்தப் போர்க்களத்திற்கு வருவேன். அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து ஆட்சியை, உனக்கு வாங்கி அளிப்பேன். அதுவே இயலாமற் போயினும் எனக்கோ, பிரச்சோதனனுக்கோ நண்பர்களாகிய எந்த ஓர் அரசனை நீ அழைத்தாலும், அவன் மறுக்காமல் முன் வந்து, உனக்கு உதவி செய்வான். நீயும் என் அமைச்சர்களும் தவிரப் பிறருடைய தொடர்பை இதில் ஏற்படுத்திக் கொள்வதனால் பல துன்பங்கள் விளையலாம். எனவே போர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஆலோசிக்கும் போதோ, திட்டம் இடும் போதோ நீயும் அமைச்சர்களும் மட்டுமே தனிமையில் கலந்து பேச வேண்டும். உனக்கு வெற்றி எய்துவது உறுதி! எல்லாம் நலமாக முடியவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்” என்று உதயணனுக்கு வாழ்த்துக் கூறினான் தருசகன். “தாங்கள் கூறிய வாழ்த்துக்கும் யோசனைகளுக்கும் என் நன்றி! எல்லாம் தாங்கள் கூறியவாறே இனிது நிகழும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. அவசியமானால் தங்களையோ பிரச்சோதன மன்னரையோ நேரில் உதவிக்கு அழைப்பேன். நிற்க இது வேறோர் செய்தி! அதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டித் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நான் இங்கு வந்தது, அரிய சந்தர்ப்பத்தில் தங்களுக்கு உதவ நேர்ந்தது, தங்கள் தங்கையை மணம் புரிந்துகொண்டது ஆகிய இவை யாவற்றிற்கும் மூல காரணமாக இருந்தவன் என் அருமை நண்பன் உருமண்ணுவாவே! நான் பதுமையை மணஞ் செய்துகொண்ட மகிழ்ச்சியை உணரவே முடியாமல், என் மனத்தில் உருமண்ணுவாவைப் பற்றிய துன்பநினைவுகள் தடை செய்கின்றன. உருமண்ணுவாவை எப்படியும் இன்னும் பத்துப் பதினைந்து நாள்களுக்குள் எலிச்செவி அரசனிடமிருந்து விடுதலை செய்து அனுப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. உருமண்ணுவா விடுதலையானால் ஒழிய, நான் என்னுடைய திருமண இன்பத்தை நினைக்கவும் வழியில்லை. இதை நீங்கள் எனக்காக விரைவில் செய்தாக வேண்டும்” என்று கூறித் தருசக வேந்தனிடம் தனக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொண்டான் உதயணன். தருசகனும் அவ்வாறே செய்து உருமண்ணுவாவை விடுவிப்பதாக வாக்களித்து உதயணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். தனக்கென்று இருந்த உரிமைப் படைவீரர்களும் வேறோர் சிறு படையும் பின்பற்றிவர, உதயணன் கோசாம்பி நகரத்தை நோக்கிச் சென்றான். ‘உதயணன் படைகளோடு புறப்பட்டு விட்டானே! இனி எந்த அரசனின் முடிவுக்கு ஆபத்தோ?’ என்று எண்ணிப் பிறவேந்தர் பேதுற்றனர்.
தருசகன் அனுப்பிய மகத நாட்டுப் படைவீரர்களோடு அமைச்சர்கள் நால்வரும் முதன்மை வைத்து முன்செல்ல, உதயணனும் அவனுடன் சென்ற சிறு படையும் பின்பற்றித் தொடர்ந்து செல்லலாயினர். இராசகிரிய நகரத்தில் நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்கும் நிலையில், அங்கிருந்து சில நாளைக்கு முன்பே வேறு ஒரு முக்கியமான செயல் நிமித்தம் வெளியேறிச் சென்றிருந்தான் வயந்தகன். மறைவாக இருக்கும் யூகியிடமிருந்து செய்தி பெற்று வரவே அவன் வெளியேறினான். யாப்பியாயினியின் திருமணம் முடிந்த பின் இரண்டோர் நாட்களில் வெளியேறிய அவனுக்கு, யூகியை அடைவதற்கு முன்பாகவே அவன் அனுப்பிய ஓலை நடுவழியிலேயே கிடைத்துவிட்டது. .
உருமண்ணுவா போரிற் சிறைப்பட்ட பின் வயந்தகனுடைய பொறுப்பு அதிகமாகி இருந்தது. அவ்வப்போது யூகி கூறியனுப்பும் திட்டங்களை அறிந்தும், இங்கே உதயணனைக் கவனித்துக் கொண்டு இருபுறமும் செயலாற்றி வந்தான் அவன். யூகி அந்தத் தடவை அவனுக்கு அனுப்பி யிருந்த ஓலையில், பாஞ்சால வேந்தன் ஆருணிமீது படை யெடுப்பதற்கு அதுவே ஏற்ற சமயம் என்றும், உதயணனுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களும் இதே நோக்கத்தோடு தாமாகத் திரட்டிய ஒரு படையுடன் இன்ன இடத்தில் இருக்கிறார்கள் என்றும், இந்தப் படையெடுப்பை ஆதரித்து அவர்களும் உதயணனோடு வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருந்தான். இந்த ஓலையைப் படித்தவுடன்தான் உதயணனைச் சந்திக்கக் கிளம்பினான் வயந்தகன். உதயணனோடு அவன் தம்பியரையும் ஒன்று சேர்த்து வைக்கும் வேலையைத் தன் ஓலைமூலம் வயந்தகனுக்கு யூகி கொடுத்திருந்தான். உதயணனைத் தேடி இராசகிரிய நகரத்திற்கு வந்த வயந்தகன், அவன் அங்கிருந்து படைகளோடு கோசாம்பிக்குப் புறப்பட்டுவிட்ட செய்தியறிந்து விரைவாக அவனைப் பின்தொடர்ந்தான். உதயணன் கோசாம்பி நகரத்தை அடைவதற்குள் அவனைச் சந்தித்துப் பிங்கல கடகர்களைப் பற்றி அவனுக்கு நினைவு படுத்தி, அவர்களை ஒன்று சேர்த்து வைப்பது வயந்தகனுக்கு அப்போது கடமையாக இருந்தது. கோசாம்பி நாடு செல்லும் நடு வழியிலேயே வயந்தகன், உதயணனைச் சந்திக்க முடிந்தது.
உதயணனைச் சந்தித்தவுடனே அவன் பிங்கல கடகர்களைப் பற்றிய செய்தியைக் கூறத் தொடங்கினான். “நீ உஞ்சை நகரில் பிரச்சோதனனால் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது, உன் ஆட்சியுரிமைக்கு உட்பட்ட கோசாம்பி நாடு, உன்னுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களால் ஆண்டு வரப்பெற்று அமைதியாக இருந்தது. அந்நிலையில்தான் பாஞ்சால வேந்தன் ஆருணி இளைஞர்களாகிய உன் தம்பியரோடு போரிட்டு, அவர்களை நாட்டிலிருந்து துரத்தி விட்டுத் தானே கோசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். ஆருணியால் துரத்தப் பெற்ற நின் தம்பியர், குதிரைகளில் ஏறிக் காட்டுப் பகுதியில் மறைவாகத் திரிந்து, சில நாள்களைக் கழித்தனர். பின் மன வெறுப்புற்று யமுனை நதியில் வீழ்ந்து உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் சென்றபோது, பெண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தீவு எதிர்ப்பட்டது. அத்தீவில் பன்னிரண்டு மாதங்கள் வசித்த பின்னர் மீண்டும் ஆருணியோடு, போரிட்டு அவனை வெற்றிக் கொள்ள முயலலாம் என்று எண்ணி இப்போது உன்னைப்போலவே வேறோர் இடத்தில் அவர்களும் போருக்கு ஆயத்தமாக இருக்கின்றனர். அவர்களிடம் ஆருணியை வெல்வதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த படை ஒன்று இருக்கிறது. நீ விரும்பிச் சம்மதித்தால் அவர்கள் இப்போதே இங்கு வந்து உன்னோடு கலந்து கொள்வார்கள். நீங்கள் யாவரும் ஒன்று கூடிப் போர் புரிந்தால், ஆருணி தோல்வியுற்று ஓடுவது உறுதி. பின்பு வத்தவ குலம் உயர்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை” என்று விளக்கமாக உதயணனிடம் வயந்தகன் கூறியதும், உதயணன் தன் தம்பியராகிய பிங்கல கடகர்களை உடனே சந்திக்க விரும்பினான்.
அவர்கள் தன்னோடு ஒன்று சேருவது அந்த நிலையில் அவசியம் என்று உதயணனால் உணர முடிந்தது. உதயணன் வயந்தகனை நெருங்கினான். வயந்தகன் ஒரு வீரனை அழைத்து ஏதோ கூறி அனுப்பினான். வயந்தகன் அவ்வாறு கூறியனுப்பிய சிறிது நேரத்திற்குள்ளேயே பிங்கல கடகர்கள் தம் படையுடன் தமையன் உதயணனைச் சந்திக்க அங்கே வந்து சேர்ந்தனர். உதயணனைக் கண்டதும் அவனை அடிபணிந்து வணங்கிக் கண்ணிர் சிந்தினர் பிங்கல கடகர். “பெற்ற தாய்க்குப் பணிவிடை செய்வதற்கும் எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இராமனுடை தம்பி இலக்குவணனைப் போலத் தமையனாகிய உன்கீழ் வழிபட்டு உன் சொற்படி நடக்கும் பாக்கியம்கூட இன்றுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் முன்னைப் பிறவியிற் செய்த தீவினையின் மிகுதியோ என்னவோ? எங்களுக்கு நல்லவை எவையுமே நிலைப்பதில்லை” என்று கண்ணிர் சிந்திக் கொண்டே உருக்கமான குரலில் அவர்கள் கூறியபோது, உதயணன் மனம் இளகிவிட்டது. அவன் தம்பியர்களைத் தன் காலடியிலிருந்து தூக்கி நிறுத்தித் தழுவிக் கொண்டான்.
உதயணனுக்கும் விழிக் கடையில் நீர்த்துளிகள் திரண்டு கண்கள் கலங்கிவிட்டன. “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்! எல்லாத் துன்பங்களும் விளைவதற்குக் காரணமாக இருந்தவன் நான் ஒருவனே. நான் மட்டும் அன்றிலிருந்து என் மனம் போன போக்கிலே இருக்காமல், அமைச்சர்கள் சொற்படி நடந்திருந்தேனானால் இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லை! என்னாலேயே இத் துன்பங்கள் நிகழ்ந்தன. அவற்றை எல்லாம் எண்ணி இனிக் கவலையுற்று என்ன பயன்? இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தது ஒரு வகைக்கு நல்லதாகப் போயிற்று. இனி ஆருணியின் கதி, நெருப்பிடையே அகப்பட்டுக்கொண்ட பஞ்சுப்பொதியைப் போல அழிந்து போவது ஒன்றுதான். நம்முடைய போர்த் திறமைக்கோ, வெற்றிக்கோ இனி எந்தவிதமான குறைவோ, தயக்கமோ இல்லை. இன்று உங்களைச் சந்தித்ததில் இருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கோ ஓடி அழிந்து போனதாக எண்ணி நான் மறந்துவிட்ட நீங்களே, எல்லா நலங்களோடும் திரும்பி விட்டீர்கள். இதேபோல என் அன்பிற்குரிய வாசவதத்தையும் யூகியும்கூட உயிரோடு திரும்பி மிக விரைவிலேயே என் முன் தோன்றுவார்கள் என்று எனக்குள் ஒரு விதமான நம்பிக்கை எழத் தொடங்குகிறது. எனது முன்னைத் தவப்பயன் இப்போதுதான் விளைந்து பயனளிக்கத் தொடங்கியிருக்கிறது போலும்! உங்களை இன்று நான் அடைந்ததுபோலவே பாஞ்சாலனை வென்று, நமது அரசாட்சியையும் நாம் உறுதியாக அடைந்துவிடுவோம்” என்று கலங்கி நிற்கும் தன் தம்பியர்களுக்கு ஆறுதல் கூறினான் உதயணன். இறுதியில் தன் தாயைப் பற்றித் தம்பியர்கள் கூறிய செய்தி நினைவிற்கு வந்தபோது உதயணன் உள்ளம் ஒரு கணம் உருகித் தாழ்ந்தது. தம்பியர்களைப் போலவே தானும் தன் தாய்க்குத் தொண்டு செய்யும் வாய்ப்பை இதுவரை பெற இயலாமற் கழித்தவன் என்ற ஏக்கம், அவன் மனத்தில் அப்போது தோன்றி நிலவி மறைந்தது.