வெற்றி முழக்கம்/57. மீண்ட அரசாட்சி
உதயணன் கோசாம்பி நகரத்து அரசாட்சியை மீண்டும் பெற்று ஆளத் தொடங்கியது, நாட்டுக் குடி மக்களுக்கும், பிறர்க்கும் அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது. மக்களுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியைப் போலவே பழம்பெரும் உரிமையாகிய அரசாட்சியை மீண்டும் அடைந்துவிட்டோம் என்ற உவகையும் பெருமிதமும் கொண்டிருந்தான் உதயணன். அவனுடைய அந்த உவகைக்கும் பெருமிதத்துக்குமிடையே நன்றியும் ஒருபுறம் சுரந்து கொண்டிருந்தது. தருசக மன்னனால் தனக்குத் துணை செய்வதற்காகத் தன்னோடு அனுப்பப் பெற்ற வருடகாரன் முதலிய பெரு வீரர்களின் உதவிதான் தனக்கு வெற்றியளித்தது என்பதை அவன் உறுதியாக நம்பினான். தன் படை பலம் குறைந்திருந்தும், படை பலத்தாலும் வசதிகளாலும் நிறைந்த நிலையிலிருந்த ஆருணியைத் தன்னால் வெல்ல முடிந்தது என்றால் வருடகாரன் கூறிய அரிய சூழ்ச்சிகளாலும், செய்த தந்திரச் செயல்களாலுமே அது சாத்திய மாயிற்று என்பதை நன்கு உணர்ந்தான் உதயணன். எனவே, தனக்கு உதவிய அவர்களுக்கு உள்ளன்போடு நன்றி செலுத்தி அனுப்புவதை அவன் மறந்துவிடவில்லை.
வருடகாரன், தருமதத்தன் முதலிய தருசகனின் படைத் தலைவர்கள், இராசகிரிய நகரத்திற்குத் திரும்பிப் புறப்படுவதற்கு முன்னால் உதயணனிடம் விடை பெற்றுச் செல்வதற்கு வந்தபோது, தன் உள்ளம் நிறைந்த நன்றிக் கடனைத் தந்து நிறைவேற்றினான் உதயணன். வருடகாரனை மார்புறத் தழுவி நன்றி செலுத்தியபின் அவனுக்கு, தான் ஏறிக் கொண்டிருந்த பட்டத்து யானையையும் தன் மார்பை அலங்கரித்துக் கொண்டிருந்த விலையுயர்ந்த ஆபரணங்களிற் சிலவற்றையும் உதயணன் அன்பளிப்பாக நல்கினான். தருமதத்தனை அன்போடு அவன் தோள்மேல் கைதழுவியவாறு பாராட்டிக் குருதிநிற எழுத்துக்களாலான ஒரு பாராட்டு இதழையும், ஒரு யானையையும், பத்துச் சிற்றுர்களையும் அவனுக்குப் பரிசுகளாக அளித்தான். இவ்வாறே மகத நாட்டிலிருந்து தனக்குத் துணையாக வந்திருந்த படைத் தலைவர்கள் யாவருக்கும் அவன் தன் நன்றியையும் அன்பளிப்பையும் மனப்பூர்வமாகக் கொடுத்தனுப்பினான். இதைச் செய்து முடித்த பின்புதான் அவன் மனத்தில் பூரண அமைதியும் திருப்தியும் நிறைந்து நிலவின.
ஆருணியை வேருடன் அழித்துக் கோசாம்பி நகரத்துக் கோட்டைக்குள் நுழைந்த உடனேயே உதயணன் அந்த நகரத்து அரசனாகவும், ஆட்சிப் பொறுப்பு அவனுடையதாகவும் ஆகிவிட்டது. என்றாலும், பல நாள்களுக்கு அப்பால் அவன் மீண்டும் அரியணையில் ஏறும் அந்த நன்னாளை ஒரு பெரும் திருவிழாவாகக் கொண்டாட விரும்பினர் கோசாம்பி நகரத்துப் பெரியோர். உதயணன் அரியணை ஏறும் அந்த விழா நாளை, ஒரு புதிய முடிசூட்டு விழா நாளைப் போலவே கொண்டாட வேண்டுமென்பது அவர்கள் கருத்து. எனவே, ஒரு நல்ல நாளில், நகரை வலம் வந்து மக்களுக்குக் காட்சி கொடுத்தபின் அரியணை ஏறச் செய்யலாம் என்று அவர்கள் ஏற்பாடு செய்தனர். குறித்த நாளில் எல்லா வகை அலங்காரங்களும் சிறப்புக்களும் தோன்ற, உதயணன் கோசாம்பி நகரின் அழகிய பெரு வீதிகளில் பரிவாரமும் மக்களும், பெரியோர்களும் புடை சூழ, வீதியுலா வந்தான்.
கருமேகத்திற்கு மேலே வெண்மதிபோலப் பெரியதொரு யானையின்மேலே வெண் கொற்றக்குடை நிழல் செய்ய உதயணன் உலாவந்த காட்சி, காணப் பேரின்பம் பயப்பதாக இருந்தது. மதியின் நிலவுக் கதிர்கள்போல அவனுக்கு இருபுறமும் வெண் சாமரைகள் வீசப்பெற்றன. கங்கையாறு கடலோடு கலப்பதுபோல மக்களின் ஆரவார ஒலியோடு சங்கு, முரசு முதலிய வாத்தியங்களின் ஒலியும் கலந்து ஒலித்தன. ‘உதயணன் வாழ்க!’ என்ற வாழ்த்தொலி வீதிகளிலிருந்து தோன்றி, நாற்றிசைகளையும் எட்டி அளந்தது. வீடுகளின் மாடங்களிலிருந்தும் கோட்டங்களின் கோபுரங்களிலிருந்தும், பெண்களும் முதியோர்களும் மலர்களை மழைபோலப் பொழிந்தனர். இவ்வாறே எல்லா வீதிகளையுங் கடந்து உதயணன் தன் அரண்மனையின் தலைவாயிலாகிய தோரண வாயிலையடைந்தான். இறந்து போன ஆருணியின் மனைவி மக்களிற் சிலர் ‘இனி ஏது செய்வது?’ என்று மயங்கி ஒன்றும் செய்யத் தோன்றாத துயரக் குழப்பத்தோடு அங்கேயே அரண்மனையினுள் இருந்து வருகிறார்கள் என்ற செய்தி அப்போது உதயணனுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர்கள் நிலை அவனுக்கு மன நெகிழ்ச்சியையும் இரக்கத்தையுமே அளித்தது. ஆகையால் அவர்களுக்கு வேண்டிய பொருளை அளித்துவிட்டு அவர்கள் வசிப்பதற்கும் வேறு இடங்கள் அமைத்துத் தரச் செய்தான் அவன். ஆருணி தனக்குப் பகைவனாக இருந்த குற்றத்திற்காக, அவன் மனைவி மக்களையும் நொந்து போயிருக்கும் இந்த நிலையில் துன்புறுத்துவது முறையல்ல என்று எண்ணியே உதயணன் அவர்களுக்கு இவ்வாறு உதவி செய்து அனுப்பினான். பகைவனுடைய உற்றார் மேலும் இரக்கம் பாராட்டும் அவனது இந்த இயல்பைக் கண்டோர் வியந்து போற்றினர். பின்பு உலாவந்த பெரியோர்களுடனும் அமைச்சர், சுற்றத்தினர், நண்பர் முதலியோர்களுடனும் அரண்மனையினுள்ளே உதயணன் நுழைந்தான்.
உதயணன் ஆட்சிக்கு உட்பட்ட பழைய சிற்றரசர்கள் எல்லாரும், மீண்டும் அவன் நாட்டை ஆளத் தொடங்குவதை அறிந்து மனமகிழ்ச்சியோடு வந்திருந்தனர். நல்ல மங்கல நேரத்தில் அவன் அமைச்சர், நண்பர், பிற அரசியலாளர்கள் சூழ அரியணையில் ஏறி அமர்ந்தான். பருவத்தாலும் அறிவாலும் மூத்த பெரியோர்களும் அறிஞர்களும் அவனைப் பற்பல ஊழிகள் வாழுமாறு வாழ்த்தினர். சிற்றரசர்கள் திறைப் பொருள்களையும் அன்பளிப்புக்களையும் அவனுக்கு அடியுறையாக வழங்கினர். பழைய குடிமக்களில் உதயணனோடு நெருங்கிய தொடர்புடையவர் அவனை வந்து கண்டு வணக்கத்துடனே தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். முன்பு ஆருணியால் பல வகையிலும் துன்பமுற்றிருந்தவர்கள், உதயணனை நேரிற் கண்டு இனிமேல் தங்களுக்கு எந்நாளும் துன்பமில்லை என்று தெரிவித்து விட்டுச் சென்றனர். சிறையில் ஆருணியால் கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலை அடைந்தனர். எங்கும் மகிழ்வும் திருப்தியும் களிப்புடனே கலந்து தென்படலாயின. முன்பு ஆருணியின் ஆட்சிக் காலத்தில் கோசாம்பி நகரத்து மக்கள் அடைந்திருந்த பலவகைத் துன்பங்களைப் படிப்படியாக நீக்கி அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதைத் தனது முதற் கடமையாகக் கொண்டான் உதயணன். ‘இது மற்றோர் அரசனுக்குரிய நாடு தானே! நான் ஆளக் கொடுத்து வைத்தது எவ்வளவு நாளோ? அதுவரை நமக்குத்தோன்றியவாறு எல்லாம் இதை ஆளுவோம்’ என்று எண்ணித் தன் மனம்போன போக்கில் கொடுங்கோல் ஆட்சி நடத்தியிருந்தான் ஆருணி, புதிதாக மக்கள் பல வரிகளைச் செலுத்தவேண்டும் என்று அவன் இட்டுவிட்டுச் சென்றிருந்த கட்டளைகள் உடனே உதயணனால் நீக்கப்பெற்றன. ஆருணியின் வன்முறை ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் ஆள்கின்ற காலத்திலேயே கோசாம்பி நகரத்து மக்கட்கு இருந்தபோதிலும், அது பெற்றோர்களிடம் காவலிலுள்ள கன்னிப் பெண்கண்ட காதல் கனவுபோல வெளியிட முடியாததாகவே கழிந்து போய்விட்டது. எனவே ஆருணியின் காலத்தில் கொடுங்கோலாட்சியால் மக்களடைந்த துன்பத்திற்கு ஆறுதல்போல அமைந்தது, உதயணன் இப்போது ஆளத் தொடங்கிய விதம்.
கவனிப்பார் இன்மையாலும் ஆட்சியினால் புறக்கணிக்கப்பட்டதனாலும், ஆருணியின் காலத்தில் நகரில் இருந்த சில அறக்கோட்டங்களும், அழகிய பழமையான கோயில்களும், மலர்ப் பொய்கைகளும், பூஞ்சோலைகளும், குடியிருப்பு வீதிகளும் பாழடைந்து போயிருந்தன. உதயணன் முதல் வேலையாக உடனே அவைகளைப் புதுப்பிக்கும்படி ஆணையிட்டான். இன்னும் ஆட்சிமுறை சீர்குலைந்திருந்ததனால், மக்களிற் பலர் தங்கள் உடமைகைளைப் பறி கொடுத்திருந்தார்கள். அத்தகையவர்கள் மீண்டும் தத்தம் உடைமைகளை அடைவதற்கு வழி செய்யப்பட்டது. சால்பும் மானமும் தன்னடக்கமும் உள்ள சில சான்றோர்கள் தாங்களுற்றிருந்த துன்பங்களைக் கூறுவதற்கு நாணினர். ஆனால் குறிப்பாக அவர்கள் துன்பத்தையும் அறிந்து போக்கினான் உதயணன். போரில் தத்தம் கணவன் மாரை இழந்து கைம்மைக் கோலமுற்ற இளமகளிர்க்கு வாழ்க்கை துன்பமின்றிக் கழிவதற்குப் போதுமான வசதிகள் செய்து தரப் பெற்றன. கைகால் முதலியன இழந்து உறுப்புக்குறை பட்டோர்க்கும், கண் இழந்தோர்க்கும்கூட இவ் வசதிகள் கிடைத்தன. கலைஞர்கள், கவிஞர்கள் அறிஞர்கள் முதலியோருக்கு அரச போகத்தின் ஆதரவுகளும் சிறப்புகளும் போதும் போதும் என்று மறுக்கும்படி விருப்பத்தோடு மிகுதியாகக் கொடுக்கச் செய்தான் உதயணன். அவனுடைய இத்தகைய அன்பும் ஆதரவும் மிகுந்த செங்கோலாட்சியில் மக்கள் புதியதோர் இன்ப வாழ்வைப் பெற்று அனுபவிக்கத் தொடங்கினார்கள். கூற்றுவனும், நோய் நொடிகளும் ஆகிய இவைகளும்கூடக் கோசாம்பி நகரில் நுழைவதற்கு அஞ்சும்படியானதுபோல அமைந்திருந்தது இந்தப் புதிய நல்லாட்சி. நிலவளமும் நீர்வளமும் சிறக்க, மழை காலந்தவறாமற் பெய்தது. காடும் மலைகளும் பசுமைக் கவினும் வளப் பெருக்கமும் கொண்டு சிறந்து விளங்கின. அரசாட்சி, தாயால் அரவணைக்கப்படும் மக்களின் நிலையினதுபோல் இருந்ததை யாவரும் உணர்ந்தனர்.