வெற்றி முழக்கம்/59. கோடபதி கிடைத்தது
‘இன்பமும், துன்பமும் தனித்து வருவதில்லை என்ற முதுமொழி மெய்யாகவே வாழ்வின் அனுபவத்திலிருந்து கனிந்ததாக இருக்க வேண்டும் கோசாம்பி நகரத்து அரசாட்சி மீண்டதிலிருந்து உதயணனது வாழ்வில் இன்பப்படுவதற்குரிய நிகழ்ச்சிகளாகவே தொடர்ந்து நிகழலாயின. இழந்த பொருள்கள் ஒவ்வொன்றாக மீண்டும் மீண்டும் அவனை வந்தடையும் நிகழ்ச்சிகள் தொடங்கின. இன்ப துன்பங்களின் போக்குவரவு என்பது, மனித வாழ்க்கையில் கோடை மழையைப் போன்றது அல்ல. அது கார்காலத்து மழையைப் போன்றதே என்ற சித்தாந்தம் மெய்ப்பிக்கப்படுவது போலச்சென்றது. மேல்வரும் உதயணனின் வாழ்க்கை. பத்திரா பதிக்கும் கோவில் கட்டி முடித்த சில நாள்களில், உஞ்சை நகரத்திலிருந்து வரும்போது, முன்பு உதயணன் இழந்துவிட்ட கோடபதி என்னும் தெய்வீக யாழ் மீண்டும் நல்வினை வசத்தால் அவன் கைக்கே வந்து சேர்ந்தது. அதை உதயணன் திரும்ப அடைந்த வரலாறு ஒரு விந்தையான கதையைப் போன்றது.
அப்போது உதயணன் கோசாம்பி நகரை ஆள்வதற்குத் தொடங்கிச் சில நாட்கள் கழிந்திருக்கும். உஞ்சை நகரத்தில் வசித்து வந்த அருஞ்சுகன்’ என்னும் அந்தண இளைஞன் ஒருவன் கோசாம்பி நகரத்தில் இருக்கும் தன் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்துவிட்டு வருதல் வேண்டும் என்ற மிகுந்த அவாவினால், வழிநடையாகவே உஞ்சை நகரத்தில் இருந்து கோசாம்பி நகரத்துக்குப் பயணம் புறப்பட்டு விட்டான். அருஞ்சுகன் இளைஞனாயினும் கல்வி கேள்விகளிலும் இசை முதலிய கலைகளுள்ளும் முதிர்ந்த அறிவும் பயிற்சியும் உடையவன். பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் முதலிய எல்லா யாழ்களிலும் இசைக்கும் முறை அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு எல்லா நூல்களிலும் எல்லாக் கலைகளிலுமே பயிற்சியுடைய அவன் ஆருணியின் ஆட்சிக் காலத்தில் கோசாம்பி நகருக்கு வரமுடியாதவனாக இருந்துவிட்டதனால், பலநாள் வாராதிருந்த வருத்தம் தீர மகிழ்ச்சியோடு புறப்பட்டிருந்தான் இந்தச் சமயத்தில்.
உஞ்சை நகரத்திலிருந்து கோசாம்பி நகருக்கு வருகின்ற வழி பல காவத தூரம், மலை காடுகளைக் கடந்து வரவேண்டிய அரிய வழியாகும். இடையிலுள்ள மலையடிவாரத்துக் காடுகளில் யானை முதலிய விலக்குகளின் போக்கு வரவும் உண்டு. இதே வழியாகத்தான் ஏற்கெனவே உதயணனும் வந்திருந்தான். இப்போது அருஞ்சுகனும் வழிநடையாகக் கோசாம்பி நகருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். பயணத்தின்போது அருஞ்சுகன் ஒருநாள் மாலை நேரத்தில், ஓர் அடர்ந்த காட்டுப் பகுதியின் இடையே வந்து கொண்டிருந்தபோது, வளைந்து வளைந்து சென்ற காட்டின் முடுக்கு வழிகளிலே திரும்பித் திரும்பி மேலே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு வழியின் திருப்பத்தில் திரும்பியதும் திடுக்கிட்டுப் போனான்.
அவனுக்கு மிக அருகில் ஒரு பெரிய நீர்நிலையில் பல காட்டு யானைகள் கூட்டமாக நீர் பருகிக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டொன்று அவன் வருவதைப் பார்த்தும்விட்டன. அருஞ்சுகன் பதைபதைத்து நடுக்கங் கொண்டான். பயம் அவனைத் திக்பிரமை அடையும்படி செய்துவிட்டது. அந்த யானைகளிடமிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை. அந்த அபாயகரமான நிலையில் அவனுக்குச் சமீபத்தில் ஒங்கி வளர்ந்திருந்த வேங்கை மரம் ஒன்றை அவன் கண்டான். மேலே தாவி ஏறிக்கொள்வதற்கு வசதியாக இருந்த அந்த வேங்கை மரம் அவனுக்கு அப்போது அடைக்கலம் அளித்தது. நீர்நிலையிலிருந்து தன்னை நோக்கித் தாவி வரும் யானைகளிடமிருந்து அந்த மரத்தினால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். இந்த நிலையிலே அவன் சற்றும் எதிர்பாராத விந்தை ஒன்று நிகழ்ந்து, அவனை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியது. மரத்தில் இருந்தவாறே அந்த வியப்புக்குரிய அற்புதத்தைக் கண்டு பிரமித்தான் அருஞ்சுகன். அந்த அற்புத நிகழ்ச்சி இதுதான்.
அவன் வேங்கை மரத்தில் வேகமாகத் தாவி ஏறியவுடன் தற்செயலாகக் காற்று சற்றே வலுவாக வீசியது. காற்றின் வேகத்தையும் தான் ஏறும் மரத்தை நோக்கிப் பாய்ந்தோடிவரும் யானைகளையும் கண்டு நெஞ்சு குலைந்து பதைபதைப்பு அடைந்தான் அவன். அதே நேரத்தில் எதிரே வழிமேல் ஓரமாக அடர்ந்து வளர்ந்திருந்த மூங்கிற் புதரினுள்ளே இருந்து, ஒரு நல்ல யாழின் இன்னிசை ஒலி காற்றிலே கலந்து வந்தது. ‘அந்த யாழ் ஒலி எப்படி உண்டாயிற்று? யார் அதனை வாசிக்கின்றார்கள்?’ என்று ஐயமும் வியப்பும் கொண்டு திரும்பி நோக்கிய அருஞ்சுகன் இன்னொரு பேரதிசத்தையும் எதிரே கண்டான்.
மதம் பிடித்து வெறிகொண்டவைபோல் அவன் இருந்த வேங்கை மரத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்த காட்டு யானைகள், புதிதாகக் காற்றில் கலந்து வந்த இந்த யாழ் ஒலியைக் கேட்டு மந்திரத்திற்குக் கட்டுண்டவைகளைப் போல அப்படி அப்படியே நின்றுவிட்டன. அவை அந்த யாழொலியிலே ஆழ்ந்து ஈடுபட்டுவிட்டனவாகக் காணப்பட்டன. அருஞ்சுகன் மூங்கிற் புதரைப் பார்த்தான். காற்று வீசும்போது அங்கிருந்து யாழ் ஒலி உண்டாவதும், காற்று நின்றால் ஒலி நின்று விடுவதும் அவனுக்குப் புலப்பட்டனவே ஒழிய வேறொன்றும் அவனுக்கு அங்கே காணத் தெரியவில்லை. ஏதும் தெளிவாகப் புரிந்துகொள்ளவோ, அனுமானித்துக் கொள்ளவோ முடியாத வியப்புடன் அவன் மிகுந்த நேரம் யானைகளுக்கு அஞ்சி வேங்கை மரத்தின் அடர்ந்த கிளைகளுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தான். வெகு நேரங்கழித்து யானைகள் யாவும் அங்கிருந்து மலைப் பகுதிகளுக்கு சென்றுவிட்டன என்பதை நன்கு கண்டு தெளிவாக உறுதி செய்து கொண்டபின்பே, அவன் கீழே இறங்கி ஆவலோடு மூங்கிற் புதரை நெருங்கினான். அருகே சென்று பார்த்ததில் இரண்டு மூங்கில்களுக்கு நடுவே அழகிய சிறிய யாழ் ஒன்று அகப்பட்டுச் சிக்கிக்கிடப்பது தெரிந்தது. காற்றால் ஆடும் மூங்கில் கழிகள், யாழின் நரம்புகளில் உராய்கின்றபோது, அதிலிருந்து அரிய இன்னிசை எழுவதையும் அருஞ்சுகனே அப்போது நேரிற் கண்டான். அவன் வியப்பு வளர்ந்தது. அந்த யாழின் ஒலியைக் கேட்டு யானைகள் எல்லாம் மயங்கி நின்றதனால், அதன் சிறப்பியல்பையும் அவன் தானாகவே அனுமானித்துக் கொண்டான். அதை எப்படியும் தான் கைப்பற்றிக் கோசாம்பி நகருக்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை அவனுக்கு உண்டாயிற்று.
‘இந்த யாழ் கின்னரர்களோ, இயக்கர்களோ மறந்து இங்கே தவறவிட்டுச் சென்றதாக இருப்பினும் சரி, தேவருலகத்திலிருந்து நழுவி விழுந்ததாக இருந்தாலும் சரி, இதை எப்படியும் நான் எடுத்துக் கொண்டுதான் போகப்போகிறேன்’ என்று அவன் தன் மனத்திற்குள் ஒரு உறுதி செய்து கொண்டான். மூங்கிற் புதரில் புகுந்து யாழ் கெடுதியுறாதபடி மெல்ல அதை விடுவித்து எடுத்துக்கொண்டு, பின் தனக்கு அதைக் கிடைக்கும்படி செய்த நல்வினையை வாழ்த்தி வணங்கிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இரண்டொரு நாள்களில் தன் பயணத்தை முடித்தவனாக அவன் கோசாம்பி நகரடைந்து, அங்குள்ள தன் நண்பர்கள் வீட்டில் தங்கினான். காட்டில் கிடைத்த யாழும் அவனிடமே பத்திரமாக இருந்தது. இறுதியாக அருஞ்சுகன் தங்கியிருந்த ஒரு நண்பனின் வீடு கோசாம்பி நகரத்து அரண்மனைக்கு மிகவும் அருகில் இருந்தது. நண்பன் வீட்டில் அனைவருமே அவனுக்கு நல்ல பழக்கமுடையவர்கள். யாவரும் அவனுடைய சுற்றத்தினர்களைப் போன்றவர்கள் என்றே துணிந்து கூறலாம். அவன் அங்கு வந்து தங்கி இரண்டொரு நாள்கள் கழிந்தபின், ஒருநாள் மாலை எல்லோருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவதற்காக அவனே யாழ் வாசிக்கும்படி நேர்ந்தது. நண்பர் வீட்டில் யாவரும் ஏற்கெனவே அவனுக்கு யாழ் வாசித்தலில் நல்ல திறமை உண்டு என்பதை அறிவார்கள். ஆகையால் அன்று மாலை எப்படியும் அவன் தங்களுக்கு யாழிசை விருந்து அளித்துத்தான் ஆகவேண்டும் என்று அவனை வற்புறுத்தினார். அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க இயலாமல், அன்று மாலை அந்த வீட்டின் மேல்மாடத்தில் எல்லோரும் கேட்கும்படியாகக் காட்டிலே தனக்குக் கிடைத்த யாழை எடுத்து வாசித்தான் அருஞ்சுகன். அற்புதமான இயல்பு வாய்ந்த அந்தத் தெய்வீக யாழில் அவனுடைய கைவண்ணம் கேட்போரைக் கவர்ந்து மயங்கியது.
செவ்வழிப் பண்ணைப் பாடினான் அவன். அதே நேரத்தில் அரண்மனை மேல்மாடத்தில் பதுமையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருந்த உதயணனின் செவிகளில் காற்றினிலே கலந்துவந்து ஒலித்தது இந்த யாழிசை. அவன் திகைத்தான்.