வெற்றி முழக்கம்/81. புண்ணிய விளைவுகள்

81. புண்ணிய விளைவுகள்

தான் வானிலிருந்து கீழே இறங்கிய ஆற்றங்கரை யிலிருந்த ஆசிரமத்திலே அந்த முனிவரைச் சென்று வணங்கியபோது, அவரே தம்முடைய அறிவு வலிமையால் அவனை இன்னான் என்று இனந் தெரிந்துகொண்டு அவனுக்கு வாழ்த்தும் உறவும் கூறி விளக்கினார். தான் அந்த முனிவருக்குப் பேரன் முறையாக வேண்டும் என்பதை அறிந்து கொண்டபோது, நரவாணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது. தான் எவ்வாறு விஞ்சையர் உலகு சென்று அவர்களை வெல்வது என்றும், மதனமஞ்சிகையை மீட்பது எங்ஙனம் என்றும் தனக்குப் பாட்டனார் முறையினரான அந்த முனிவரிடம் பயபக்தியோடு விசாரித்தான் நரவாணன். “பறவைகள் வான் மார்க்கமாகப் பறந்து செல்வதற்குரியதுபோல மாந்தரும் பறந்து செல்வதற்குப் பயன்படக் கூடியதான ஓர் அரிய மந்திரம் உன் தந்தையாகிய உதயணனுக்குத் தெரியும். நீ கோசாம்பி நகரத்துக்குத் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை உன் தந்தையிடமிருந்து அறிந்துகொண்டால் திறமையைப் பயன்படுத்தி விஞ்சைய ருலகத்தையே வென்று வாழலாம்! இது உன் முற்பிறவிப் புண்ணியங்கள் உனக்கு விளைந்து கொண்டிருக்கின்ற காலம். உனக்கு எல்லாம் நலமாக முடியும்” என்று விளக்கி அவனுக்கு ஆசி கூறினார் அந்த முனிவர்.

முனிவர் சொற்படியே கோசாம்பிக்கு வந்து தந்தையிடம் அந்த மந்திரத்தை அறிந்து, சில நாள் தன் பெற்றோர்களோடு தங்கியிருந்தபின் விடைபெற்றுக் கொண்டு விஞ்சையருலகிற்குக் கிளம்பினான் நரவாணன். விசயார்த்தம் என்ற மலைத்தொடரின் தென்புறத்திலுள்ள ஸ்ரீதரம் என்ற நகரம் முதலில் குறுக்கிட்டது. அந்த நகரின் கோட்டை வாயிலில் சில நாழிகைகள் தங்கினான் அவன். சதானிக முனிவர் சொல்லியனுப்பியது போல நரவாணனுக்கு அது புண்ணியம் விளைகின்ற காலமாகையினால், கந்தருவபுரத்து மன்னானகிய நீலவேகன் என்பவனின் தூதுவன் தானாகவே வலுவில் வந்து “தங்களை எங்கள் மன்னன் அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்” என்று நரவாணனை உடனழைத்துப் போனான். நரவாணன், கந்தருவபுரத்து மன்னனாகிய நீலவேகனைச் சென்று சந்தித்தான். “என் புதல்வியாகிய அநங்க விலாசினி ஒருநாள் துயிலும்போது மண்ணுலகிலிருந்து சிங்கக் குருளை போன்ற ஆடவன் ஒருவன் வந்து தனக்கு மாலை சூட்டுவதாகக் கனவு கண்டாள். அவனை யான் ஒரு முனிவரிடம் சென்று கூறி அக் கனவின் உட்பொருளை விளக்குமாறு வேண்டிக்கொண்டேன். அவர், ‘மண்ணுலகத்தில் உதயணனுக்கு மகனாகப் பிறந்த அரசகுமாரன் வந்து உன் புதல்வியை மணந்து கொள்வான்’ என்று அந்தக் கனவின் பயனை விவரித்தார். அன்புடனே என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, என் மகள் அநங்க விலாசினியை மணந்துகொள்ள வேண்டும்” என்று பிரார்த்தித்தான் நீலவேகன்.

நரவாணனும் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி அநங்க விலாசினியை மணந்து கொண்டு அவளோடு அங்கே சில நாள்கள் தங்கினான். அவ்வாறு அவன் கந்தருவபுரத்தில் தங்கியிருந்தபோது அவனுடைய புண்ணியப் பெரும்பலன்கள் ஒன்று ஒன்றாக விளையத் தொடங்கின. இந்திரனுடைய ஏவலினால் தேவர்களும் தேவருலகத்தைச் சேர்ந்த அரசர்களும் நரவாணனைக் கண்டு வணங்கி அவனுக்கு மிகுந்த பரிசில்களையும் நவநிதிகளையும் திறைகளையும் மன முவந்து கொடுத்து விட்டுச் சென்றனர். இதையெல்லாம் கண்ட மானசவேகனும் மிகவும் அச்சங்கொண்டு கந்தருவபுரத்துக்கு ஓடோடியும் வந்தான்.

நரவாணனிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மதனமஞ்சிகையை அவனிடம் ஒப்படைத்தான். தன் தங்கை வேகவதியையும் நரவாணனுக்கே மணம் முடித்துக் கொடுத்தான். தன்னைப் பிரிந்து வாட்டமுற்றிருந்த மதனமஞ்சிகை, வேகவதி இருவருக்கும் ஆறுதல் கூறி ஏற்றுக் கொண்டான் நரவாணன். இவ்வாறிருக்கும்போது அவனுடைய புண்ணிய பலத்தினால் வித்தியாதரர் உலகத்தின் ஆட்சிப் பொறுப்பு நரவாணனிடம் வந்து சேர்ந்தது. நரவாணன் மணி முடி சூடிப் பேரரசனானான். தேவியர் மூவருடனும் தேவருலகை ஆண்டு வந்த அவன், இடையே பெற்றோரைக் காண வேண்டுமென்ற ஆசை உந்தியதனால் கோசம்பி சென்று சில நாள் தன் மனைவியருடனும் பிற பரிவாரத்தினருடனும் தங்கி வந்தான். அவன் கோசாம்பியிலிருந்து திரும்புகிறபோது தனக்குப் பதிலாகத் தன் தம்பியும் தன் தந்தையின் மற்றொரு மனைவியான பதுமையின் புதல்வனுமாகிய கோமுகனைக் கோசாம்பியின் இளவரசனாக நியமித்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொண்டான், தன் தந்தையாகிய உதயணனிடம்.

உதயணனும் தன் புதல்வனின் அந்த வேண்டுகோளுக்கு இணங்கி விடை கொடுத்தான். பின்பு நரவாண தத்தன் மீண்டும் வித்தியாதரருலகத்தை அடைந்து மனைவிமார்களுடனே அங்கேயே தங்கிச் சிறப்பாக அதனை ஆண்டு வந்தான். தேவருலகையும் ஆளச் செய்த புண்ணிய பலனைக் கண்டு அவனை மற்றவர்கள் வாழ்த்தினர். முதுமையடைந்து விட்ட பின்பும், தன் மகன் செய்த வெற்றி முழக்கத்தால் உதயணன் இப்போதுகூடப் பெருமிதமடைய முடிந்தது. தான் ஆருணியை வென்று வெற்றி முழக்கமிட்ட பழைய நிகழ்ச்சியைவிட, தன் மகன் இப்போது தேவருலகையே வென்ற வெற்றியில் பெரிதும் மகிழ்ந்தான் அவன். உதயணன் தனக்கு ஒப்பற்ற நண்பனான யூகி மந்திரியாக வாய்த்ததும், வாசவதத்தை மனைவியானதும், வித்தியாதர சக்கரவர்த்தியாக விளங்கும் நரவாண தத்தன் புதல்வனானதும், பிற நலங்களும் தவத்தின் பயனே! ஆதலால், ‘இனிமேல் தான் மேற்கொள்ளத் தக்க செயல் தவமே’ என்று துணிந்து அரச போகங்களாகிய செல்வத்தையும் பதவியையும் வெறுத்தான். அதனை அறிந்த அவன் தேவிமார், நீர் விளையாட்டு முதலியவற்றால் அவன் மனத்தை வேறுபடுத்தித் தம்மையே கருதித் தம் வயத்தினனாக அவன் மனத்தை ஒழுகச் செய்ய முயன்றனர்.

அவன் மனம் அந்த வழியிற் சில நாள்கள் சென்றது. பின்பு ஒரு நாள் உதயணனுடைய பட்டத்து யானை மதங்கொண்டு புறப்பட்டு நகரை அழிக்கத் தொடங்கி, யாருக்கும் அடங்காமற் பாகர்களையும் குத்துக்கோற்காரையும் பிளந்தெறிந்தது. அந்த யானையினால் நகரமே நடுங்கியது. அக்காலத்தில் அந்நகரை அடுத்த சோலை ஒன்றில் தவத்தால் சித்திபெற்ற சாரணர் பலர் வந்து தங்கினார்கள். அவர்களுக்குத் தலைவரான தருமவீரர் என்பவர் தம்மை அடைந்தவர்களுக்கு வழக்கப்படி அங்கே தருமோபதேசம் செய்து வருவாராயினர். அவ்வுபதேச மொழிகளை விலங்குகளும் பறவைகளும் கேட்பனவாய்த் தத்தம் செயல்களை மறந்து உணவொழிந்து தாம் செய்த பாவங்களை நினைந்து துன்புற்றவண்ணமாய் அடங்கி நின்றன. மேற்கூறிய பட்டத்து யானையும் இயல்பாகவே அங்கே வந்து அந்த அறவுரையைக் கேட்டுக் கோபம் நீங்கித் தன் பாவச் செயல்களுக்கு அஞ்சிக் கண்ணிரை உகுத்துக்கொண்டு யாதொரு கொடுஞ்செயலும் இன்றித் திரும்பி அரண்மனை வாயிலில் வந்து நின்றது.

யானை வந்து அடங்கி நிற்பதை வாயிற் காவலர் அரசனுக்குத் தெரிவிக்க, அவன் வந்து பார்த்து வியப்புற்று நின்றனன். அப்போது யூகி, “ஏதோ அறவுரையைக் கேட்டு இது பக்குவமுற்று அடங்கி நிற்கிறது போலும்; இனி ஊர்ந்து செல்வதற்கு இது தகுதியுள்ளது” என்றனன். உதயணன் அதன் பிடரியில் ஏறியபொழுது யானை அவனை மிக்க விருப்பத்துடன் தாங்கிக்கொண்டு சென்று மேற்கூறிய வனத்தை அடைந்து நின்றது. அரசன் அவ் வனத்தில் பெரியோர் பலர் வந்திருத்தலை அறிந்து இறங்கி வழிபாட்டுடன் சென்று தருமவீர முனிவரை வணங்க, அவர் அவனுக்கு ஒர் இருக்கையை அளித்துத் தருமோபதேசம் செய்தார்.

அதனைக் கேட்ட உதயணன் இன்புற்று, “இந்த யானையின் பண்டை வரலாறு என்ன?” என்று அவரிடமே கேட்க, அவர், “சாலி என்பதொரு நாட்டில் கடகம் என்பதோர் ஊரிலுள்ள இடபகன் என்பவனும் அவன் மனைவி சாலி என்பவளும் இல்லறம் நடத்திக்கொண்டு வருகையில், அவன் பண்டைப் பாவ வசத்தால் அமரிகை என்னும் ஒரு கணிகை வயப்பட்டவனாய்க் குல ஒழுக்கத்தை விட்டுவிட்டு, மிக்க பாவத் தொழில்களைச் செய்வானாயினன். இறந்த பின்பு அவனே இந்த யானைப் பிறப்பை அடைந்தனன். அதனால்தான் இந்த யானை தருமங்களைக் கேட்டவுடன் தன் கொடுஞ் செயல்களைத் துறந்து அடங்கி நிற்கின்றது” என்றனர். இதைக் கேட்ட உதயணன் அதை நன்கு பாதுகாக்கும்படி பாகர்களுக்குக் கட்டளை இட்டு அதன் பக்கத்தை அடைந்து, “யானை அரசே! உனக்கு யான் செய்வித்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்” என்று சொல்லி அதனை அன்புடன் தன் கைகளால் தடவிக் கொடுத்துத் தன்னிடத்தை அடைந்தான். அதன் வரலாற்றைக் கேட்ட யாவரும் வியப்புற்றுத் தருமோபதேசத்தின் பெருமையைப் பாராட்டினர்.

அப்பால் அரசனுக்கு வைராக்கிய முண்டாக, அவன் நரவாண தத்தனை வருவித்து, “நீ இந்த அரசாட்சியை ஒப்புக் கொள்; ஆட்சியைத் துறந்து தவஞ்செய்வதற்கு என் மனம் விரைகின்றது” என்று சொல்ல, அவன் தன் தந்தையை வணங்கி, “அடியேனுக்கும் அரசாட்சியிற் சிறிதும் விருப்பமில்லை; துறத்தற்கே என் மனமும் விழைகின்றது” என்று தன்னுடைய கருத்தைத் தெரிவித்தான். பின்பு உதயணன் பதுமையின் புதல்வனாகிய கோமுகனை அழைத்து அவனுக்கு முடிசூட்டிவிட்டுச் சென்று தேவியருக்குத் தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்களும் அவனுடன் வந்து தவஞ் செய்வதாகக் கூறினர்.

யூகி முதலிய மந்திரிமார்கள் யாவரும் வாசவதத்தை முதலிய தேவிமாரும் பிறரும் புடை சூழ்ந்து தன்னுடன் வர, உதயணன் தவ வனம் சென்று அங்கே தவம் செய்து கொண்டிருந்த தருமச்சுருதி என்னும் முனிவரைச் சரணமடைந்து துதித்து, “அடிகேள்! தவவழிகளை உபதேசித்து அடியேங்களை உய்வித்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான். அவர் சில தருமங்களை அவனுக்கும் மற்றவர்களுக்கும் விரிவாக உபதேசித்தார். உபதேசித்த பின்பு அவன் அப்பொழுது செய்யவேண்டிய நியமங்களை முடித்துக்கொண்டு தியானாதிகளைச் செய்வானாயினன். பின்பு உதயண முனிவன், நீண்டகாலம் யோக சமாதியைச் செய்து முடித்துச் சித்தபதத்தை அடைந்தான். தேவியரும் மந்திரிகளும் தவம் செய்து கற்பலோகத்தை அடைந்து நெடுங்காலம் இன்புற்று வாழ்ந்தார்கள். உதயணன் ஒரு காலத்தில் அரசனாக இருந்து செய்த இணையற்ற வெற்றி முழக்கங்களை இப்போது அவனுடைய இளைய மகனாகிய கோமுகன் செய்து, தன் புகழ் திக்கெலாம் பரவும்படி பெருமைகளைப் பெற்றுக் கொண்டிருந்தான்.