வேங்கடம் முதல் குமரி வரை 3/002-033

2. குடந்தைகிடந்த ஆரா அமுதன்

தில்லைச் சிற்றம்பலவன் கோயில் கொண்டிருக்கும் சிதம்பரத்துக்குப் பக்கத்திலே வீரநாராயணபுரம் என்று ஒரு வைஷ்ணவ க்ஷேத்திரம். அங்கு நாதமுனிகள் என்று ஒரு பெரிய யோகி. ஆழ்வார்களுக்குப் பின் தோன்றிய வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையிலே முதல் ஸ்தானம் வகிப்பவர் இவரே, இவர் சங்கீதத்தில் நல்ல நிபுணர். இந்த நாதமுனிகள் குடும்ப சகிதம் யாத்திரை செய்கிறார். வடமதுரை, பிருந்தாவனம், துவாரகை, கோவர்த்தனம், அயோத்தி,பத்ரிகாச்சிரமம் முதலிய வடநாட்டுத் தலங்களைத் தரிசித்த பின், தென்னாட்டில் அகோபிலம், திருப்பதி, காஞ்சி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களையும் தரிசித்து விட்டுக் கும்பகோணத்தில் சாரங்க பாணியைத் தரிசிக்க வந்து நிற்கிறார். அப்போது அங்கு வந்திருந்த வைஷ்ணவ யாத்திரிகர்களில் ஒருவர்.

ஆரா அமுதே அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே
திராய் அலைந்து கரைய
உருக்கு கின்ற நெடுமாலே!

சீரார் செந்நெல் கவரிவிசும்
செழுநீர்த் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
கண்டேன் அம்மானே,

என்று துவங்கும் நம்மாழ்வார் பாசுரங்களைப் பாடுகிறார். பாட்டிலும், பாட்டின் பொருளிலும் உள்ளம் பரவசமாகி மெய்மறந்து நிற்கிறார். நாத முனிகள். யாத்ரிகர் பாடிக் கொண்டேயிருக்கிறார். கடைசியில் ‘குருகூர்ச் சடகோபன் குழல் மலியச் சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் மழலைதீர்வல்லார் காமர் மானேய நோக்கியர்க்கே' என்று முடித்ததும் யாத்திரிகரை நோக்கி, இப்பிரபந்தம் முழுதும் தங்களுக்கு வருமோ என்று கேட்கிறார் நாதமுனிகள். யாத்ரிகரோ அந்தப் பத்துப் பாடல்களுக்கு மேல் தெரியாது என்கிறார்.

அன்றே நம்மாழ்வார் பாடல்களையெல்லாம் தேடிப் பிடிக்க முனைகிறார் நாதமுனிகள். நம்மாழ்வார் அவதரித்த குருகூருக்கு வருகிறார். நம்மாழ்வாரின் சிஷ்யராக இருந்த மதுர கவியாழ்வாருடைய பரம்பரையிலே வந்த ஒருவரைக் கண்டுபிடித்து நம்மாழ்வார் பாடல்களையெல்லாம் திரட்டுகிறார். அதன் மூலமாகவே மற்ற ஆழ்வார்களது பாசுரங்களையும் தேடிச் சேகரித்து நாலாயிரப் பிரபந்தமாகத் தொடுக்கிறார். அந்த நாலாயிரம் பாடல்களே இன்று திவ்யப் பிரபந்தம் என்று வழங்குகிறது நம்மிடையே. இப்படித்தான் நமக்குத் திவ்யப் பிரபந்தம் கிடைத்திருக்கிறது.

இந்தத் திவ்ய பிரபந்தத்தைத் திரட்டித் தந்தவர் நாதமுனிகள். அந்த நாதமுனிகளை இப்பணியில் ஈடுபடுத்தியவன் ஆரா அமுதன். அந்த ஆரா அமுதன் கோயில் கொண்டிருப்பது கும்பகோணத்திலே. அவனது கோயில்தான் பிரசித்தி பெற்ற சாரங்க பாணி கோயில், அக்கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று. நாம்தான் கும்பகோணத்தில் உள்ள முக்கியமான சிவன் கோயில்களையெல்லாம் பார்த்துவிட்டோமே, இன்று சாரங்கபாணியைக் கண்டு தரிசிப்பதோடு அவன் சகாக்களான - சக்கரபாணி, கோதண்டபாணியையும் தரிசித்து விடலாம்.

கும்பகோணத்தின் பழம் பெயர் குடமூக்கு என்பதை முன்னரே தெரிந்து கொண்டோம். பிரம்மாவின் அமுதம் வந்து தங்கிய தலம் அல்லவா?, மேலும் இத்தலமே சூடடத்தின் மூக்கைப்போல் அமைந்திருக்கிறதாம். . அத்துடன் ஆயிரம் வாய்ப் பாம்பணையில் படுத்துக்கிடந்தவன் அல்லவா பரந்தாமன், அந்தப் பரந்தாமன் இந்தக் குடமூக்கைத் தேடி வந்திருக்கிறான் என்பார், முதல் ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார்.

படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாய்க் கொண்டு

என்று பாடுகிறார் அவர். இவரோ கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருந்தவர் - மற்றைய ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்துக்கெல்லாம் முந்தியவர். அவர் இந்தப் பாம்பணையானைப் பாடியிருக்கிறார் என்றால் இவனும் பழம்பெருமை வாய்ந்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ ஊருக்கு மத்தியில் நட்ட நடுவில் இவன் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறான், அமுதக் குடத்தால் அமைந்த கும்பேசுரர் கூட ஊருக்கு மேல் பக்கமாக ஒதுங்கி விடுகிறார், குடந்தைக் கீழ்க் கோட்டத்துக் கூத்தனும் காரோணத்தானும் கீழ்ப்பக்கமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சாரங்கபாணி எல்லோருக்கும் நடுநாயகமாக இருந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமா? இவரது கோயிலே மற்ற எல்லோருடைய கோயிலையும் விடப் பெரியது. கோபுரமும் அப்படியே, பதினோரு மாடத்தோடு கூடிய அந்தக் கோயிலின் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தாலே நம் கழுத்து வலிக்கும். பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ரதம்போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள். அவைகளை இழுத்துச் செல்லும் குதிரைகள். இதனால்தானோ என்னவோ திருமங்கைமன்னன் திருஎழுக்கூற்றிருக்கை என்று ஒரு ரதபந்தமே தனியாகப் பாடியிருக்கிறார்.

ஹேம ரிஷியின் தவத்தை மெச்சித் திருமால் கையில் சாரங்கம் ஏந்தி எழுந்தருளினார் என்றும் கோமளவல்லித் தாயாரை மணந்து கொண்டார் என்றும் தலவரலாறு. கோயிலின் பின்புறமுள்ள ஹேம் புஷ்கரணிக் கரையில் ஹேம முனிவருக்கு ஒரு சிறிய சந்திதி இருக்கிறது. இந்தச் சாரங்கபாணியை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆரா அமுதனை வணங்கியிருக்கிறார். ஆரா அமுதன் அயர்ந்த நித்திரையில் இருந்திருக்கிறான். தான் வந்து நிற்பதை அவன் அறிந்து கொண்டதற்கு யாதொரு. குறிப்பும் இவருக்குத் தெரியவில்லை. 'ஐயோ! அவனுக்கு என்ன அலுப்போ ?' என்று அவர் எண்ணியிருக்கிறார். பாடியிருக்கிறார்.

நடந்த கால்கள் நொந்தவோ?
நடுங்கும் ஞாலம் ஏனமாய்
இடந்தமெய் குலுங்கவோ?
விலங்குமால் விடைச்சுரம்
கடந்தகால பரந்த காவிரிக்
கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து
பேசு ஆழிகேசனே.

படுக்கையினின்றும் எழுந்திருக்கும் கோலத்திலேயே காட்சி கொடுக்கிறான். இதனையே உத்தான சயனம் என்கிறார்கள். ஆழ்வார் சொல்லிய வண்ணம் செய்ததால் பெருமாளுக்கு ஆரா அமுதாழ்வார் என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார், பிறந்து வளர்ந்ததுதான் திருமழிசையே தவிர அவர் தங்கியிருந்து தவம் இயற்றிப் பெருமாளின் திருவடி சேர்ந்தது. இந்தக் குடந்தை நகரிலேதான். அதனாலேதான் இந் நகரைத் திருமழிசைப், பிரான் உகந்த இடம் என்று வைணவர்கள் போற்றுகிறார்கள், அவரைக் குடமூக்கின் பகவர் என்றும் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன.

ஆரா அமுதனை நம்மாழ்வார் எப்படிப் பாடிப் பரவினார் என்பதை முன்னரே பார்த்தோம். ஆண்டாளுக்கும் ஆரா அமுதனிடத்து அளவு கடந்த ஈடுபாடு என்று அறிகிறோம், கண்ணன் என்னும் கருந்தெய்வக் காட்சியில் தன் வயம் இழந்து கிடந்த அந்த ஆண்டாள்,

ஆரே உலகத்து ஆற்றுவார்?
ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
தளர்ந்து முறிந்தும் கிடப்பேனை,
ஆரா அமுதம் அனையான்தன் -
அமுதவாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பை நீக்கீரே.

என்றல்லவா பாடுகிறார். இப்படித்தான் குடந்தை கிடந்த குடமாடியிடம் நீலார் தண்ணத் துளாய்க்கு ஏங்கிக் கிடக்கிறாள் ஆண்டாள். இப்படியெல்லாம் நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஆண்டாள் எல்லாரும் பாட, திருமங்கைமன்னன் கம்மா இருப்பாரா? திரு அழுந்தூர் - சென்று அங்குள்ள திருவுக்கும் திருவாகிய செல்வனைக் - கண்டபோது,

பேரானைக் குடந்தைப்
பெருமானை, இலங்குஒளி
வாரார் வனமுலையாள்
மலர் மங்கை நாயகனை,
ஆரா இன்னமுதை,
தென் அழுந்தையில் மன்ளிநின்ற
காரார் கருமுகிலைக்
கண்டு களித்தேனே.

என்று எக்களிப்போடு பாடுகிறார். இந்த ஆரா அமுதனையும் அவனது துணைவியாம் கோமளவல்லியையும் தொழுதபின்பு அங்குள்ள மற்ற சந்திதிகளிலும் வணங்கி எழலாம். பெரிய கோயில்தான் என்றாலும் குறிப்பிடத்தக்க சிற்பச் செல்வங்கள் ஒன்றுமே இங்கு இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

சாரங்கபாணியைப் பார்த்த விறுவிறுப்பிலே கொஞ்சம் வடக்கு நோக்கி நடந்து சக்கரபாணியையும் வணங்கி விடலாம். சக்கரபாணி கோயில் காவிரியின் தென்கரையில் இருக்கிறது. மாடக் கோயில் அமைப்பு. ஒரு சிறிய கட்டுமலை மேல்தான் சந்நிதி இருக்கிறது. சுதர்சன சக்கரம் என்று பெருமாள் ஏந்தியிருக்கும் சக்கரத்துக்குள்ளேயே எழுந்தருளி யிருக்கிறார். உற்சவ விக்கிரகம் உக்கிரமானதாகவே இருக்கும். இச் சக்கர பாணியைப் பற்றி வேறு விரிவாகச் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் சிவனுக்கு நாகேசுரர் கோயில் என்று ஒரு கலைக்கோயில் அமைந்ததுபோல் பெருமாளுக் கும் ஒரு கலைக்கோயில் தான் ராமசாமி கோயில். கும்பேசுரர் கோயிலுக்கும் சாரங்கபாணி கோயிலுக்கும் இடையே உள்ள வீதி வழியாய்க் கண்ணை மூடிக்கொண்டு தெற்கு நோக்கி நடந்தால் ராமசாமி கோயில் வந்து சேருவோம்.

கோயில் பழைய கோயில் அல்ல. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் எழுந்திருக்க வேண்டும். ராமன், சீதா லக்ஷ்மண பரத சத்துருக்கன ஆஞ்சநேய சமேதனாகப் பட்டாபிஷேகக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். எல்லாம் நல்ல கம்பீரமான செப்பு வடிவங்கள், இவைகள் எல்லாம் பக்கத்தில் உள்ள தாராசுரப் பகுதியில் புதைந்து கிடந்தன என்றும், ராமனே தஞ்சை மன்னர் அச்சுத நாயக்கன் கனவில் தோன்றித் தான் இருக்கும் இடத்தை அறிவித்தான் என்றும் அதன் பின்னரே அச்சுத நாயக்கன் அந்த விக்கிரகங்களை எடுத்துக் கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்தான் என்றும் அறிகிறோம்.

இக்கோயிலில் நுழைந்ததுமே, அங்குள்ள மகாமண்டபம் ஒரு பெரிய கலைக்கூடம் என்பதைக் காண்போம். மண்டபம் முழுவதும் பிரும்மாண்டமான தூண்கள். எல்லாம் நுணுக்க வேலைப்பாடு அமைந்தவை. ஒரு தூணின் நான்கு பக்கத்திலும், பக்கத்துக்கு ஒருவராக ராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன் காட்சி கொடுக்கிறார்கள். நல்ல கருங்கல் உருவிலே கம்பீரமான திருஉருவங்கள் அவை. இவை தவிர ராம பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகக் காட்சிகள் வேறே அடுக்கடுக்காய் இருக்கின்றன; விஷ்ணுவின் பல அவதாரக் கோலங்கள், திரிவிக்கிரமன் தோற்றம் எல்லாம். இன்னும் மன்மதன், ரதி, எண்ணற்ற பெண்ணுருவங்கள் எல்லாம் கல்லில் வடிக்கும் கட்டழகு எப்படி இருக்கும் என்பதைக் காட்டும். இந்தக் கலைக்கூடத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் பலமணி நேரம். மகா மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் ராமாயணக் கதை முழுவதையும் 200 சித்திரங்களில் தீட்டி வைத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் சமீபகாலத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இங்குள்ள சித்திரங்களெல்லாம் அஜந்தா, சித்தன்ன வாசல் சித்திரங்களோடு வைத்து எண்ணப்படத் தக்கவை - அல்லதான் என்றாலும் ராமசாமி கோயில் என்பதற்கேற்ப, ராமாயணச் சிற்பங்கள் இருப்பது பொருத்தமானதே. இன்னும் கடந்து கருவறை சென்றால் ராமனைப் பட்டாபிஷேகக் கோலத்தில் பார்க்கலாம்.

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரிவீச
விரிகடல் உலகம் ஏத்தும்
வெண்ணெய் மன் சடையன்வன்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி

என்பது கம்பன் காட்டும் பட்டாபிஷேகக் கோலம்-இந்தக் கோலத்தில் இல்லை இந்தப் பட்டாபிராமன். அஞ்சலி ஹஸ்தனாக 'ஏவல் கூவப் பணிசெய்யும்' பான்மையில் இருக்கிறான் அனுமன், பரதன், சத்துருக்கனன், லக்ஷ்மணன் எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களுடன் கோலாகலமாக நிற்கிறான் ராமன். நிறையப் பட்டும் பட்டாடையுமாக, அணிபல அணிந்து நிற்பார்கள் இவர்கள், அணிகளையும் ஆடைகளையும்களைந்து பார்த்தால் செப்புச் சிலை வடிவின் அழகெல்லாம் தெரியும் அதற்குக் காலமும் நேரமும் இடந்தராதே. ஏதோ சாரங்கபாணியாம் ஆரா அமுதனைக் காணும் விருப்பத்தோடு வந்த நமக்குச் சக்கரபாணியையும், கோதண்டபாணியையும் கண்டு தரிசிக்கக் கொடுத்து வைத்திருந்ததே, அந்தப் பாக்கியத்தைத் எண்ணிக் கொண்டே குடந்தையை விட்டுக் கிளம்பலாம் வீடு நோக்கி.