வேங்கடம் முதல் குமரி வரை 3/010-033

10. திருவாரூர் தியாகேசர்

கிரேக்க இலக்கியத்திலே ஒரு கதை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு நாள் டயோஜனீஸ் என்ற ஒரு பெரியவர், ஆதென்ஸ் நகரத்தில் நாலு வீதிகள் சேரும் ஒரு சந்தியிலே பட்டப்பகல் பன்னிரண்டு மணிக்குக் கையில் ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு எதையோ தேடுகிறார். அங்கு போவோர் வருவோருக்கெல்லாம் இவர் எதைத் தேடுகிறார் என்று விளங்கவில்லை. அவர் ஒருவேளை தன்னைப் படைத்த கடவுளையே தேடுகிறாரோ என்பது ஒருவரது ஏகத்தாள வாதம். ஆனால் டயோஜனீஸோ,

பன்னும் நூல்கள் விவரிக்கும்
பரனைக்காண ஆசையிலை
மன்னுத மாக்கள் உலகினிலே
மனிதன் தன்னைத் தேடுகின்றேன்

என்றல்லவா கூறுகிறார். ஏதோ உருவில் பலர் மனிதர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தால் அவர்கள் மனிதர்களாக இல்லையே. மருந்துக்குக்கூட. ஒரு மனிதன் அகப்படமாட்டேன் என்கிறானே இந்த உலகில், என்பது தான் டயோஜனீஸின் அங்கலாய்ப்பு.

நம் நாட்டு வள்ளுவர் இவ்வளவு மோசமில்லை. வையத்தில் வாழ்வாங்கு வாழும் வகைகளை எல்லாம் வகுத்துக் கூறுகிறார். அதன்பின் அவர் தேடுகிறார் ஒரு சான்றோனை. சான்றோனைத் தேடும் முயற்சியில் அவர் சொல்கிறார் :

சமன் செய்து சீர் தூக்கும்
கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

என்று. சரிபார்த்து, நிறுத்தி, அளக்கின்ற துலாக்கோலைப் போல் இருந்து, தம்மிடம் தீர்ப்புக்கு வந்திருக்கும் வழக்கில் ஒரு பக்கமாகச் சாய்ந்து விடாமல் நடுநிலைமை வகிப்பவர்களே சான்றோர் என்று கூறுகிறார். இப்படி வழக்கைச் சீர்தூக்கி நேர்மையான தீர்ப்புச் சொல்ல உள்ளம் எவ்வளவு நேராக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களை இவ்வுலகில் விரல்விட்டு எண்ணி விடலாம்தானே.

அத்தகைய சான்றோர் வரிசையிலே முதலிடம் பெறுபவனே மனுநீதிச் சோழன், அவன் வரலாறு சரித்திரத்தில் மாத்திரம் அல்ல; திருத்தொண்டர் பெரிய புராணத்திலேயே இடம் பெற்று விடுகிறது. அவன் சரித்திரம் இது தான். சரித்திர காலத்துக்கும் முந்திய சோழ பரம்பரையிலே ஒரு சோழ மன்னன் மனுநீதிச் சோழன் என்ற பெயரோடு திருவாரூரிலே இருந்து அரசு செய்கிறான், அவனுக்கு அருமையாக ஒரே மகன்; அந்த அரசிளங்குமரனுக்கு என்று தனித் தேர்; அந்தத் தேரில் ஏறிக்கொண்டே அந்த நகரின் மணிமாட வீதிகளிலே அவன் வலம் வருவான்.

ஒருநாள் அவன் தேர் ஊர்ந்து வரும்போது ஓர் இளங்கன்று துள்ளி வந்தது; தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு நசுங்கி உயிர் இழக்கிறது. மன்னன் மகன் இதற்காக வருந்துகிறான். செய்வது இன்னதென்று அறியாது மயங்குகிறான். இதற்குள் கன்றை இழந்த தாய்ப் பசு அரண்மனை சென்று அங்கு கட்டியிருந்த ஆராய்ச்சி மணியையே அடிக்கிறது. அதற்கு ஒரு நம்பிக்கை, நீதி தவறாத மனுச்சோழன் தனக்கும் நீதி வழங்குவான் என்று. சோழ மன்னன் விவரம் அறிகிறான். மந்திரி பிரதானிகளைக் கேட்கிறான். அவர்களோ கன்றை இழந்த பசுவின் துயரத்துக்கு மாற்றுச் சொல்பவர்களாக இல்லை. கன்றைக் கொன்ற பாவம் தீரப் பிராயச்சித்தங்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசனோ இதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. பசு படுகின்ற துயரத்தைத் தானும் பட்டால்தான் . சரியான நீதி வழங்கியதாகும் என நினைக்கிறான். அதற்காகத் தன் தேரைக் கொண்டு வரச் சொல்கிறான். அந்தத் தேர்க்காலில் தன் மகனைக் கிடத்தி, தன்தேரை அவன்மீது ஏற்றுகிறான். எவ்வளவு மனோதிடம் வேண்டும் இப்படிச் செய்ய? நீதி வழங்கும் ஆர்வம் எவ்வளவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும்?

திருவாரூர் உறையும் வன்மீகநாதன் இதனையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பானா? உயிர்பிரிந்த ஆன்கன்று, அரசிளங்குமரன் எல்லோரையுமே உயிருடன் எழுப்பியிருக்கிறான். மனு நீதிச் சோழன் புகழ் நிலைக்கிறது திருவாரூராம் தெய்வத் திருநகரிலே. அந்தத் திருவாரூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவாரூர் செல்வது சிரமமே இல்லை. திருவாரூர் ஜங்ஷனுக்கு ஒரு டிக்கட் வாங்கவேணும். ரயிலில் சென்று இறங்கவேணும். வண்டியோ காரோ அமர்த்திக்கொண்டு ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கோயிலுக்குச் செல்ல வேணும். அவ்வளவுதான். சாதாரணமாகத் தெற்கு வாயிலிலேயே கொண்டுதான் வண்டிக்காரன் வண்டியை அவிழ்ப்பான். எல்லோரும் வழக்கமாகப் போகும் அந்தத் தெற்கு வாயிலின் வழியாகவே நாமும் நுழையலாம் கோயிலுள். கோவில்கள் நிறைந்திருக்கும் தஞ்சை ஜில்லாவிலே மிகப் பெரிய கோவில்கள் இரண்டு தான். ஒன்று தஞ்சைப் பெரிய கோயில்; மற்றொன்று திருவாரூர்க் கோயில், இந்தக் கோயிலைப் பூங்கோயில் என்று அழைக்கிறார்கள். கோயில் வாயிலிலே அர்ச்சகர்கள் நம்மிடம் சொல்லுவார்கள் : முத்தி தரும் தலங்கள் மூன்று, அவை சிதம்பரம், காசி, ஆரூர் என்பன. அவற்றுள் காண முத்தி தருவது சிதம்பரம், இறக்க முத்தி தருவது காசி, பிறக்க முத்தி தருவது ஆரூர் (நாமோ இந்தப் பிறவியில் திருவாரூரில் பிறக்கவில்லை காசி சென்று இறக்கவோ நம்மில் எல்லோருக்கும் வசதி இருப்பதில்லை. ஆனால் நமக்கு முத்தி நிச்சயம். நாம் தாம் இதற்கு முன்னமேயே சிதம்பரம் சென்று தில்லைச் சிற்றம் பலவனைக்கண்டு தொழுதிருக்கிறோமே.)

ஆரூரில் பிறக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்களை நினைத்துப் பொறாமைப் பட்டுக் கொண்டே கோயிலுள் செல்லலாம். கோயில், கோயில் பிரகாரங்கள் அங்குள்ள மண்டபங்களையெல்லாம் பார்த்தால் அது மிகப் பழைய கோயிலாகத் தெரியும். எவ்வளவு காலத்துக்கு முந்திய கோயில் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. என்னால் மாத்திரந்தானா முடியவில்லை. ஆயிரத்து இரு நூறு வருஷங்களுக்கு முன் இருந்த அப்பராலேயே சொல்ல முடியவில்லையே. அவர் கூட!

மாடமொடு மாளிகைகள் மல்கு
தில்லை மணிதிகழும் அம்பலத்தே
பன்னிக் கூத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ ?
பின்னோ ? அணியாரூர்
கோயிலாய்க் கொண்ட நாளே?

என்று அந்த இறைவனிடமே கேட்டிருக்கிறார்; விடை. கிடைத்ததோ என்னவோ? கோயிலை நான்கு பக்கத்தும் நான்கு கோபுரங்கள் அணி செய்கின்றன. கீழைக்கோபுரம் 118 அடி உயரம். காம்பீரியம் இருக்காது. சட்டிபோல் அகன்று பரந்திருக்கும். மற்றையக் கோபுரங்கள் எல்லாம் அளவில் சிறியவை. வடக்குக்கோபுரம், அந்தக் குலோத்துங்கன் படைத் தலைவராம் கருணாகரத் தொண்டைமான் திருப்பணி, அவருடைய சிலையிருக்கிறது கோபுரத்துச் சுவரிலே. கோயிலுக்குள் நுழைந்ததும் உயர்ந்த நீண்ட கம்பங்கள் மொட்டை மொட்டையாக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதுவே ஆயிரங்கால் மண்டபம் என்னும் தேவாசிரிய மண்டபம் என்பர்.

விழாக் காலங்களில் மட்டுமே அந்தக் கம்பங்களின் பேரில் ஓலை வேய்ந்து மண்டபம் அமைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு மூன்று பிரகாரங்கள். ஒவ்வொன்றுமே பெரிய பிரகாரங்கள்தான். மூன்றாம் பிரகாரம் ஆகிய வெளிப்பிரகாரத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றன. ஒன்றின் பெயர் மூக்குத்திக் கிணறு, முத்தி தீர்த்தம் என்ற பெயர் மூக்குத்தி தீர்த்தம் என்று சிறப்படைந்திருக்கிறது போலும்! இப்பிரகாரத்தில் தான் பக்த காட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் எல்லாம் இருக்கின்றன. இனி இந்தப் பிரகாரத்திலுள்ள ஆரியன் கோபுர வாயில் வழியாகத்தான் இரண்டாம் பிரகாரத்துக்குச் செல்ல வேண்டும். அரி அயன் கோபுரம் என்பதே ஆரியன் கோபுரம் என்று மாறி இருக்கிறது (இதை வைத்துக்கொண்டு ஆரியர் திராவிடர் சண்டைகளுக்கு ஆதாரங்கள் தேட வேண்டாம்)

இந்த இரண்டாம் பிரகாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறு சிறுகோயில்கள். திருவாரூர் அறநெறி, அசலேசம், ஆனந்தேசம், விசுவகர்மேசம், சித்தீசம் முதலிய கோயில்கள் இருப்பது இங்கே தான் - ஒரு கோயிலைக் கண்டு கும்பிட முனைந்தால், கும்பிடும் கையைக் கீழே போட வேண்டியதில்லை பிரகாரம் சுற்றி முடியும்வரை.. இதைத் தெரிந்திருக்கிறார் மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, *குவித்தகரம், விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்' என்று கூறுகிறார். இந்தப் பிரகாரத்தில் உள்ள அழகியான் கோபுர வாயிலைக் கடந்துதான் வன்மீகநாதர் சந்நிதிக்கு வந்து சேரவேணும். மூலவர் அவர்தானே. அவர் எழுந்தருளியிருக்கிற கருவறையைத் திருமூலட்டானம் என்றே வழங்குகின்றனர்; கோயில் என்றால் சிதம்பரம் என்பது போல, திருமூலட்டானம் என்றால் இந்தத் திருவாரூருக்கே உரியது. இங்குள்ளவர் புற்றிடங் கொண்டவர். பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிருதிவித் தலம் ஆயிற்றே. இக்கருவறையை அடுத்தே சோம குலாம்பிகை என்னும் பிரியா விடையம்மை இருக்கிறார்.

இந்த வன்மீகநாதரை விடப் புகழ் பெற்றவர் இங்குள்ள தியாகேசர். வன்மீகநாதர் கோயிலுக்கு வலப்புறம் உள்ள தனிச் சந்நிதியில் இருக்கிறார் இவர். இவர் இங்கு எழுந்தருளியதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. சிவபெருமானையும் உமா தேவியையும் குமரக் கடவுளையும் ஒரே ஆசனத்திலிருத்தி இறைவனை சோமாஸ்கந்த மூர்த்தமாக வழிபடுகிறார் திருமால். இந்த சோமாஸ்கந்தத்தைத் தேவேந்திரன் திருமாலிடம் பெற்று, அதற்குத் தியாகப் பெருமான் என்று பெயரிட்டுச் சிறப்பாகப் பூசனை செய்து வருகிறான். இந்தத் தேவேந்திரனுக்குத்தான் அடிக்கடி அசுரர்களது உபத்திரவம் உண்டே வலன் என்ற அசுரனுடன் போர் செய்தபோது சோழமன்னன் முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்குத் துணை நின்று வெற்றியைத் தந்திருக்கிறான்.

இதற்குப் பரிசாக இந்திரனிடம் தியாகப் பெருமானையே கேட்டிருக்கிறான். கொடுக்க மனம் இல்லாத இந்திரன், தியாகப் பெருமானைப் போலவே ஆறு உருவங்களைச் செய்து அதில் எதையாவது எடுத்துப் போகச் சொல்லியிருக்கிறான். இறைவன் அருளால் முசுகுந்தன் தேவேந்திரன் பூசித்த தியாகரையே இனம் காட்டியிருக்கிறான். அதன் பின்னும் இல்லையென்று சொல்ல இயலுமா? தியாகர் வந்திருக்கிறார் தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து திருவாரூரில் கோயில் கொண்டிருக்கிறார். மற்றைய ஆறு பேரும் நள்ளாறு, நாகைக்காரோணம், தாறாயில், கோளிலி, வாய்மூர், மறைக்காடு என்னும் தலங்கள் சென்று தங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் இந்தத் தியாகேசர், 'நிறை செல்வத் திருவாரூருக்கு' வந்து செலவத் தியாகேசர் என்ற பெயரிலேயே நிலைத்திருக்கிறார். இந்தத் தலத்திலேயே சிறந்த சந்நிதி இதுவே. இரத்தின சிம்மாசனத்திலே முன்னே இரண்டு வாள் படையும், நடுவில் ஒரு பூச்செண்டும் பொருந்த எழுந்தருளியிருக்கிறார். பெருமான் பக்கத்திலே அம்மை. இருவருக்கும் இடையில் உள்ள கந்தர் மலர்மாலைகளுக்குள்ளும், ஆடை அணிகளுக்குள்ளும் புதைந்து வெளியில் தெரியாமலேயே நிற்கிறார்.

'வெள்ளிலை வேல் நம்பியொடும் ஆடரவர் கிண்கிணிக் கால் ஐயன் இருந்து அரசு செய்கிறான்' என்று தியாகராஜ லீலை கூறும். இந்தத் தியாகராஜர் அணியும்பணிகளுக்கு எல்லாம் தனித் தனிப் பெயர். தியாகர் அணியும் பரிவட்டம் தியாக விநோதன், அணியும் கிண்கிணி ஆடரவக் கிண்கிணி, வாள் வீர கண்டயம், தேர் ஆழித் தேர், மாலை பணி, மத்தளம் சுத்த மத்தளம், நாதசுரம் பாரி, வாத்தியம், பஞ்சமுக வாத்தியம், பிள்ளைத் தண்டு, மாணிக்கத் தண்டு, நடனம் அசபை, கொடி தியாகசபை. இவரது தேவ சபையில் நடக்கும் திருவந்திக் காப்பு சிறப்பானது.

அர்ச்சகர் நீண்ட அங்கி தலைப் பாகை எல்லாம் தரித்து எதிரே நின்று தான பூசனை புரிவார். தேவேந்திரனே வந்து பூஜை செய்வதாக ஐதீகம். இவ்வளவு பெருமையோடு விளங்கும் தியாகருக்கு, வீதிவிடங்கன், தியாக விநோதர், செவ்வந்தித் தோட்டழகர், செங்கழுநீர்த் தாமர், அஜபா நடேசர் என்றெல்லாம் நூற்றெட்டுத் திருநாமங்கள். இவரைத் தரிசிக்க வேண்டுமானால் மாலை ஆறு, ஆறரை மணிக்கே செல்ல வேண்டும். நீண்ட நேரம் இருந்தே பூசனையில் கலந்து கொள்ளவும் வேண்டும்.

இந்தத் தியாகருக்கும், அந்த வன்மீகநாதருக்கும் இடையே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் ஐங்கலக் காசு விநாயகர். அழகிய சோழன் ஒருவன் ஐந்து கலம் பொற்காக கொண்டு வடித்தான் என்பது வரலாறு. இவரையும் தரிசித்தபின் இரண்டாம் பிரகாரம் வந்து அங்குள்ள அம்மன் கோயிலில் தெற்கு முகமாக இருக்கும் நீலோத்பலாம்பிகையையும் தரிசிக்கலாம். கையில் செண்டு ஒன்று ஏந்தி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அல்லியங் கோதையின் பக்கத்திலே, தோழி ஒருத்தி தோள்மீது முருகனைச் சுமந்து நிற்பதையும் அம்மை தனது இடது கரத்தால் முருகனது சுட்டு விரலைப் பிடித்திருப்பதையும் காணத் தவறி விடாதீர்கள். மற்றக் கோயில்களில் எல்லாம் இல்லாத தனிச்சிறப்பு. இது நீலோத்பலாம்பிகை தவிர, தனிக்கோயிலில் கமலாம்பிகை தவக்கோலத்தில் இருக்கிறாள். இரண்டு திருக்கரங்களுடன் கால்மேல் கால் போட்டு யோகாசனத்தில் அமைந்த இந்த அம்பிகை அழகானவர். பராசக்தி பீடங்களில் இதுவும் ஒன்று

கமலாலயம் - கோயில் கோயில்

'திருவாரூர்த் தேர் அழகு' என்பது பழமொழி. தமிழ் நாட்டில் உள்ள தேர்களில் எல்லாம் பெரியது. இந்தத் தேரைப்போல் 'மாடல்' ஒன்று செய்து அதைச் சென்னை மியூசியத்தில் வைத்திருக்கலாம். அத்தனை அழகு அந்தத் தேர். இந்தத் தேரையும் மிஞ்சிய புகழுடையது, இக்கோயிலுக்கு மேல் பக்கத்திலுள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று கணக்கு. வேலி 6.66 ஏக்கர் என்றால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்களேன் குளத்தின் பரப்பை, இந்தக் குளக்கரையிலே ஒரு பிள்ளையார் மாற்றுரைத்த பிள்ளையார் என்ற பெயரோடு. அன்று சுந்தரர் விருத்தாசலம் மணி முத்தாற்றில் இட்ட பொன்னைக் கமலாலயத்தில் இறைவன் எடுத்துக் கொடுத்த போது அந்தப் பொன்னின் மாற்றை உறைத்துச் சரி பார்த்தவர் இவர். இன்னும் இந்தக் கோயிலைச் சுற்றி எத்தனையோ கோயில்கள், கோயிலுக்குக் கீழ்ப்பக்கத்திலே மனுநீதிச் சோழன் வரலாற்றை விளக்கும் கல்தேர், கல் பசு, கன்று எல்லாம் இருக்கின்றன.

இத்தலத்துக்குப் பலவகையாலும் வரலாற்றுத் தொடர்பு உடையவர்கள் சுந்தரர், சேரமான் பெருமாள். இவர்கள் இருவரும், தியாகேசரது திருமுன்பு எதிர்முக மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர் இருவரில் சுந்தரரோடு தொடர்பு கொண்ட ஏயர்கோன் கலிக்காமர் விறன்மிண்டர், சோமாசி மாறர், இன்னும் இங்கிருந்து முத்திபெற்றவர் நமிநந்தி, செருத்துணை, தண்டியடிகள், கழற் சிங்கர் முதலியோர். இவர்கள் சரித்திரம் விரிக்கில் பெருகும் என்றாலும் சுந்தரர் பரவையாரோடு இங்கு நடத்திய இல்லறத்தைப் பற்றிச் சொல்லாது போனால் திருவாரூர்ச் சிறப்பை முழுவதும் சொல்லியதாகவும் ஆகாதே. ஆதலால் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

நாவலூரிலே பிறந்து வெண்ணெய் நல்லூரிலே இறைவனுக்கு ஆட்பட்டு அவனோடு தோழமை பூண்டு, தம்பிரான் தோழராக வாழ்ந்தவர் கந்தரர். அவர் இந்தத் திருவாரூருக்கு வந்து, இங்கு அவதரித்திருந்த பரவையாரை மண்ந்து குடியும் குடித்தனமுமாக இருந்தவர். அந்த 'வாளான கண் மடவாள் வாடி வருந்தாமல் குண்டையூரிலே நெல் பெற்று' அதைக் கூட. அள்ளிக் கொண்டு வந்து திருவாரூரில் போட இறைவனையே ஏவியிருக்கிறார். இதையெல்லாம் விட, பின்னர் ஒற்றியூரிலே சங்கிலியாரை மணந்த தன் காரணமாகப் பரவை ஊட, அந்த ஊடல் தீர்க்க இறைவனையே தூதாக அனுப்புகிறார். இந்தக் கதையை எல்லாம் அறிந்த ஒரு புலவர், 'ஐயோ! ஐயனின் அடியும் முடியும் காண இந்த அரியும் அயனும் அன்று அண்ணாமலையில் திணறி இருக்கிறார்களே. இவர்கள் இருவரும் இந்தப் 'பரவையார் வீட்டு வாயில் படியில் வந்து இருந்து கொண்டால்,” ஐயனின் அடியையும் முடியையும் அவன் தூது வரும்போது எவ்வளவு எளிதாகக் கண்டு விடலாம்' என்கிறார்.

ஆனார் இலையே அயனும் திருமாலும்?
காணா அடிமுடிமுன் காண்பதற்கு - மேனாள்
இரவு திருவாரூரில் எந்தைபிரான் சென்ற
பரவை திருவாயில் படி

என்பது பாட்டு. சுவையான அனுபவம்தான். இந்தப் பரவைக்கும் சுந்தரருக்கும் தெற்குக் கோபுர வாயில் பக்கம் ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இந்தத் தலத்தில் சுந்தரர் நிரந்தரமாக இருந்திருக்கிறார் என்றால் சம்பந்தர், அப்பர், மணிவாசகர் எல்லாம் வந்து வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார்கள். எல்லோரும் நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

பொன்னும் மெய்ப்பொருளும்
தருவானை, போகமும் திருவும்
புணர்ப்பானைப்

பின்னை என்பிழையைப்
பொறுப்பானை, பிழை எலாம்
தவிரப் பணிப்பானை,

இன்ன தன்மையன் என்று
அறி ஒண்ணா எம்மானை
எளிவந்த பிரானை,

அன்னம் வைகும்
வயல் பழனத்தளி ஆரூரானை
மறக்கலும் ஆமோ?

என்பது சுந்தரர் பாடல். மற்றவர்கள் பாடிய பாடல்களெல்லாம் படித்து இன்புற வேண்டியவை. பிற்காலத்தில்லே கமலை ஞானப் பிரகாசர், திருஞான சம்பந்தர் எல்லாம் இப்பகுதியில் தங்கயிருந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். இங்குள்ள கல்வெட்டுகள் அனந்தம். சோழ மன்னர்களது திருப்பணி விவரம் எல்லாம் அவை சொல்லும். பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த முதல் பராந்தகன் முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்த மன்னர்கள் அளித்த நிபந்தங்கள் அனந்தம். அவை விரிக்கில் பெருகும் - இலக்கியப் பிரசித்தி பெற்ற அபயகுலசேகரன் அநபாயன் எல்லாம் இருந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். அதிகம் சொல்வானேன்? திருவாரூர் என்றால் கலை அழகு நிரம்பிய கோயில் நிறை செல்வத்திருவாரூர் என்ற பெருமையோடு விளங்கிய கோயில்.

ஆரூரன் சந்நிதி போல்
ஆரூரன் ஆலயம் போல்
ஆரூரன் பாதத்து
அழகு போல் - ஆரூர்
மருவெடுத்த கஞ்ச மலர்
வாவிபோல், நெஞ்சே
ஒரு இடத்தில் உண்டோ உரை?

என்று ஒருவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறார். அதேகேள்வியையே நானும் கேட்கிறேன் உங்களிடம். சங்கீத மும்மணிகளாம் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி திக்ஷிதர் எல்லாம் பிறந்து வளர்ந்ததும் இந்தத் திருவாரூரே என்றால் இங்கே இசை வளர்வதற்குக் கேட்பானேன்? கலை வளர்வதற்குக் கேட்பானேன்?