வேங்கடம் முதல் குமரி வரை 3/012-033

12. சிக்கல் சிங்கார வேலவர்

பால்நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப் பரிந்து, நீ
பாவியேன் உடைய

ஊனினை உருக்கி, உள்ஒளி
பெருக்கி, உலப்பு இலா
ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம்புறம்
திரிந்த செல்வமே!
சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்
பிடித்தேன்; எங்கு எழுந்து
அருளுவது இனியே?

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் அவரது திருவாசகத்தில். இந்தப் பிடித்த பத்து என்னும் பத்துப் பாட்டிலும் நான் உன்னை 'சிக்' எனப் பிடித்தேன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். இந்தப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஓர் ஐயம். “திருப் பெருந்துறைக்கு மன்னனுக்காகக் குதிரை வாங்கப்போன இடத்தில் இவரை வந்து இறைவன் அல்லவா சிக்கெனப் பிடித்திருக்கிறான்; இவர் போய் அவனைப் பிடித்ததாக இல்லையே' என்று நினைப்பேன். இந்த இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளில்தான் எத்தனை எத்தனைவகை. இதில் குரங்குப் பிடியும் பூனைப்பிடியும் அல்லவா இருக்கின்றன. நமக்குத் தெரியுமே குரங்கு தன் குட்டியைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாது. குட்டிதான் தாயை விடாப் பிடியாகக் கட்டிப் பிடித்திருக்கும் போது தாய்க் குரங்கு மரத்துக்கு மரம் தாவும். மதில் சுவரில் ஏறும். அத்தனை நேரமும் விடாது பற்றிக் கொள்ளும் குட்டி.

பூனை இருக்கிறதே, தன் குட்டிகளிடம் மிகுந்த பாசம் உடையது. எங்கு சென்றாலும் தன் குட்டியைத்தானே தூக்கிச் செல்லும். அதிலும் குட்டியின் முதுகில் வாயை வைத்துக் கொஞ்சமும் நோவாமல் கடித்து எடுத்துச் செல்லும். எத்தனை குட்டிகள் இருந்தாலும் அத்தனை குட்டிகளையும் அப்படி ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றே காப்பாற்றும்.

இப்படித்தான் இறைவன் நம்மிடம் நடந்து கொள்கிறான். குரங்குக் குட்டியைப் போல் நாம் அவனை விடாது பற்றிக் கொண்டிருக்க வேணும். அப்போதுதான் சிலருக்கு அவன் அருள் பாலிப்பான். இன்னும் சிலருக்கோ அவன் பூனையைப் போல் பரிவுகாட்டி. அவனே வந்து அணைத்து எடுத்துத் தன்னுடன் சேர்த்து அருள்பாலிப்பான். இந்த உறவு முறையையே மார்க்கட. நியாயம், மார்ஜால நியாயம் எனச் சொல்லுவர் சமயவாதிகள். இரண்டு முறைகளிலும் பிடிப்பு உண்டு, ஒன்று அவனை நாம் பிடிக்க வேண்டும். இல்லை. அவன் நம்மைப்பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிடியும் ஏதோ 'ஏனோ தானோ' என்று இராமல் சிக்கெனப் பிடித்த பிடியாய் இருத்தல் வேண்டும்.

மாணிக்கவாசகரை அப்படிப் பிடித்தவன் இறைவன். இவருமே அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார், அந்தப் பிடியின் வலியை உணர்ந்தே, 'நான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே?' என்று இறைவனிடமே கேட்கிறார். அவன் என்ன சொல்லக் கூடும்? ‘ஆம். நானுந்தான் வந்து பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன். இனி, உனக்காக நரியைப் பரியாக்க வேண்டியதுதான். பரியை நரியாக்க வேண்டியதுதான் இன்னும் என்ன என்ன செய்து எவனிடம் எல்லாம் பிரம்படிபடவேண்டியிருக்கிறதோ? யார் கண்டார்கள்?' என்றுதானே சொல்லியிருப்பான். இத்தனை எண்ணமும் என் உள்ளத்தில் ஓடுகிறபோது, எனக்குச் சிக்கல்' ஞாபகம் வரும். சிக்கல் சிங்கார வேலவர் ஞாபகம் வருவார்.

இந்த வேலவர் மிகவும் நல்லவர் ஆயிற்றே. இவர் ஏன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழும். விசாரித்தால் இங்கே சிக்கிக் கொண்டிருப்பவர் சிங்கார வேலவர் அல்ல. அவருடைய தந்தையாரான வெண்ணெய் லிங்கேசுரரே என்று அறிவோம். அவர் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளகூடியவர்தான். ஏன் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டார் என்று தெரிய வேண்டாமா? அதற்குச் சிக்கல் தலவரலாற்றைப் பார்க்க வேண்டும்.

இந்தத் தலத்திலே ஒரு குளம். பால் குளம் என்று பெயர் (இன்றும் இருக்கிறது, அதே பெயரில், ஆனால் அங்கிருப்பது தண்ணீர்தானே ஒழியப் பால் இல்லை.) அதில் அன்று பால் நிறைந்திருக்கிறது. வசிஷ்டர் இந்தக் குளக்கரைக்கு வந்திருக்கிறார். பால் குளத்திலுள்ள பாலை எடுத்துக் காய்ச்சி நிறைய வெண்ணெய் எடுத்திருக்கிறார். அந்த வெண்ணெயாலேயே லிங்க உரு அமைத்துப் பூசித்திருக்கிறார். வெண்ணெய் லிங்கரை அப்படியே விட்டு விட்டுப்போக மனம் வருமா? அவரைத் தம்முடன் எடுத்துச் செல்ல விரும்பிப் பெயர்க்க முனைந்திருக்கிறார். ஆனால் அவரோ பிரதிஷ்டை பண்ணிய இடத்திலேயே சிக்கிக் கொள்கிறார். இடத்தை அவர் 'சிக்' எனப் பிடித்துக்கொள்கிறார். பாவம்! வசிஷ்டர் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்.

இப்படி இந்த வெண்ணெய்ப்பிரான், நவநீத ஈசுவரர் சிக்கிக்கொண்ட இடம்தான் சிக்கல். இவர் இப்படி இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டால், இவரது குமாரனாம் சிங்காரவேலவனும் எத்தனையோ பக்தர்கள் உள்ளத்திலே சிக்கிக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரே சிக்கல் மயம்தான் அங்கு, அந்தச் சிக்கலுக்கே செல்லுகிறோம் நாம் இன்று.

சிக்கல் தஞ்சை நாகூர் ரயில்லைனில் திருவாரூருக்குக் கிழக்கே பன்னிரெண்டு மைல் துரத்தில் இருக்கிறது. வசதியாக ரயிலிலே செல்லலாம். 'சிக்கல்' என்ற பெயரோடு விளங்கும் ரயில்வே ஸ்டேஷனில் இயங்கி இரண்டு மூன்று பர்லாங்கு நடந்தால் போதும். கோயில் வாசலில் வந்து சேரலாம். இல்லை, 'எங்களுக்குக் கார் வசதி எல்லாம் உண்டு' என்று சொல்கிறவர்கள் திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தா வழியாகவும் வரலாம். ரோடும் ரயிலும் அடுத்தடுத்து ஒரே கதியில்தான் செல்கின்றன. கோயில் வாயிலை எண்பது

அடி உயரமுள்ள ஏழு நிலைக் கோபுரம் அழகு செய்கிறது. ஆனால் இந்தக் கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு கல்யாண மண்டபம் இருக்கிறது. இதனைக்கல்யாண மண்டபம் என்று கூறுவது சரியல்ல. கல்யாணக் கொட்டகை என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு பெரிய தகரக் கொட்டகை. இரு பக்கமும்பெரிய இரும்புத் தூண்கள் நிறுத்திப் பிரும்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள், 1932-ம் வருஷம்தான் கட்டி முடித்திருக்கிறார்கள். அப்போது அதனை 'காரனேஷன்ஹால்' என்று அழைத்திருக்கிறார்கள், உற்சவ காலங்களில் கலை அரங்காக உபயோகிக்கிறார்கள். தகரக் கொட்டகை ஆனதால் இன்னிசை எல்லாம் கேட்க இயலாது. எல்லாம் தகர ஓசையாகவே இருக்கும். என்னைக் கேட்டால் இந்த இடத்தில் இந்தத் தகரக் கொட்டகையைக் கட்டியிருக்கக்கூடாது, இனி என்ன செய்ய? இருந்து விட்டுப் போகட்டும். அதனைச் சிரமப்பட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உண்மையில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லைதான்.

இனிக் கோயிலுள் நுழையலாம்; நுழைந்ததும் கிருத்திகை மண்டபம்வந்து சேருவோம். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று சிங்கார வேலவர் தமது மனைவிமார் இருவருடன் எழுந்தருளி இங்கு நீராட்டப் பெறுவார். அப்போது கூட்டம் 'ஜாம் ஜாம்' என்று இருக்கும். மற்ற வேளையெல்லாம் காலியாகவே கிடக்கும். இந்த மண்டபத்தையும் கோயிலையும் பார்த்தால் திருப்பணி சமீபகாலத்தில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றும். விசாரித்தால் அன்று சோழன் செங்கணான் கட்டிய இம்மாடக் கோயிலை முப்பத்தைந்து வருஷ காலம் இந்தக் கோயில் தருமகர்த்தராக இருந்த தெக்கூர் திரு. கருமுத்து அழகப்பச் செட்டியார் எட்டு லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்திருக்கிறார் என்பார்கள். புதுப்பிப்பது என்ன, புதிதாகவே கட்டியிருக்கிறார்.

சமீபத்தில்தான் சிறப்பாகக் கும்பாபிஷேகம் இங்கு நடந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே செல்லலாம். எல்லா மாடக் கோயில்களிலும் உள்ளது போல் கட்டு மலை மேலே நவநீதேசுவரர் இருக்கிறார். இவர் இருக்கும் இடத்தைத் தேவகோட்டம் என்கிறார்கள். படிக்கட்டின் பக்கத்தில் சுந்தர கணபதி இருக்கிறார். அவரை வணங்கிப் பன்னிரண்டு படி ஏற வேணும். ஏறினால் சோமாஸ்கந்தர் நம்முன் நிற்பார்; இல்லை, உட்கார்ந்திருப்பார். அந்த மண்டபத்துக்குச் சென்று அங்கிருந்து வெண்ணெய்ப் பிரானைத் தரிசிக்கலாம். அவரே சிக்கலில் சிக்கிக் கொண்டவர். நம்மையும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி விடுவதற்கு முன்பே வெளிவந்து விட வேணும்.

வெளி வரும்போது நடராஜருக்கும் ஒரு வணக்கம் செலுத்தலாம். அதன் பின்னும் நடந்தால் சிங்கார வேலவர் காட்சி கொடுப்பார். அவர் செப்புச் சிலை வடிவில் வெள்ளை மஞ்சத்தில் நின்று கொண்டிருப்பார். இரு புறமும்வள்ளியும் தெய்வயானையும் நிற்பார்கள். எல்லோரும் தங்கக் கவசமும் வைர நகைகளும் அணிந்து கொண்டிருப்பார்கள். இத்தனை அழகுடன் இருக்கும் இவர்கள் இருக்கும் இடம்தான் என்னவோ போல் இருக்கும். இத்தாலியப் பளிங்குக் கற்களை வாங்கித் தரையில் சுவரில் எல்லாம் பதித்து அழகு செய்திருப்பார்கள்.

இந்தச் சிங்காரவேலர் அழகான திரு உரு மூன்றடி உயரமே உடையவர் என்றாலும் நல்ல கம்பீரக் கோலத்துடன் நிற்கிறார். இவர் முழு அழகையும் காண, கார்த்திகை தினம்தான் செல்ல வேண்டும். அபிஷேக காலத்தில் தான் காண வேண்டும். அப்போதும் ஓர் எமாற்றம் இருக்கும் நமக்கு. சிங்கார வேலவரை வடித்த சிற்பியா இந்த வள்ளி தேவயானையையும் வடித்தான் என்று எண்ணத் தோன்றும். அந்த உருவங்களில் அத்தனை வடிவ அழகு இராது. வினாவினால் ‘ஒரிஜினல்' வள்ளி தேவயானையர் களவு போய் 'டூப்ளிகேட்' வள்ளி தேவயானையரையே பின்னர் செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். ஐயோ! அழகனான சிங்காரவேலவனுக்கு அழகு மனைவியர் இல்லையே! அது அவன் ஜாதக விசேஷம். நாம் என்ன செய்ய?

இந்தச் சிங்காரவேலவனைத் தரிசித்துவிட்டுக்கட்டு மலையைவிட்டு இறங்கிக் கீழ்தளத்தில் கோயில் கொண்டிருக்கும் வேல் நெடுங்கண்ணி அம்மையைத் தரிசிக்கலாம். அம்மையின் திருஉரு அழகான ஒன்றுதான். அவளது அழகைவிட அவளது கருணையே சிறப்பானது. அன்று சூரபதுமனை முடிக்கக் கார்த்திகேயன் கிளம்பியிருக்கிறான். அவனிடம் அப்போது பல படைகள் இருந்தாலும், முக்கியமான வேல் இருக்கவில்லை. இதை உணர்ந்திருக்கிறாள் அன்னை வேல் நெடுங்கண்ணி. அதனால் ஓடோடி வந்து தன் மகனாம் முருகனக்கு வேல் ஒன்றைக் கொடுத்திருக்கிறாள். அந்த வேல்தானே சூரனைச் சம்ஹரித்திருக்கிறது. இப்படி முருகன் வேல் வாங்கி வேலனாக நின்ற இடம்தான் சிக்கல் என்று கூறும் தல புராணம். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது பழமொழியாச்சே. இந்த வேல் வாங்கும் விழா கந்த சஷ்டிக்கு முந்திய நாள் நடைபெறும், கந்தன் விரைவாக வருவதும் அம்மாவிடம் வேல் வாங்குவதும் அழகான காட்சி. ஆனால் அதை விடச் சிறப்பானது, அந்த நேரத்தில் சிங்கார வேலவர் முகத்தில் வியர்வை அரும்புவது. இது இன்றும் நடக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படிக் குமரனுக்கு வேல் கொடுத்த வேல் நெடுங்கண்ணியையும் தரிசித்து விட்டு, கோயில் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். தென்பக்கத்தில் இரும்புக் கதவுகள் போட்டுப் பதனப்படுத்தி வைத்திருக்கும் அறைகளில் தங்க மயில், தங்க ஆட்டுக்கடா, தங்கக் குதிரை வாகனங்கள் எல்லாம் இருக்கும். இவற்றையெல்லாம் பார்க்க அதிகாரியின் அனுமதி வேண்டும். ஆதலால் விரைவாகவே பிரகாரத்தைச் சுற்றிக் காசி விசுவநாதர், கார்த்திகை விநாயகர், ஆறுமுகன் முலியோரைத் தரிசித்து விடலாம்.

இத்தனையும் பார்த்து விட்டாலும் வெளியே வர முடியாது. இந்தக் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் இருந்த சிங்கார வேலவர் தம் அம்மானுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே, அவரைப் பார்க்க வேண்டாமா? அங்கு தனிக் கோயிலில் இருப்பவர் கோல வாமனப் பெருமாள். பெயர் தான் வாமனரே ஒழிய நல்ல நீண்டு வளர்ந்த ஆஜானுபாகு; அவரையும் அவருடைய துணைவி கோமளவல்லித் தாயாரையும் வணங்கலாம். வெளியே மண்டபத்தில் நல்ல சிமெண்டில் ஆதிசேஷனை ஆசனமாகவும் ஸ்ரீதேவி பூ தேவியரைத் துணைவிகளாகவும் கொண்டிருக்கும் வைகுண்ட நாதன் வேறே உருவாகியிருக்கிறான். இவரையுமே கண்டு தரிசித்து விட்டு வெளியே வரலாம். இதன் பின்னும் அவகாசம் இருந்தால் கோவிலுக்கு மேல் புறம் உள்ள பால்குளம், மற்றைய இலக்குமி தீர்த்தம், கயா தீர்த்தம், அம்மா குளம் முதலியவற்றைக் காணலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். வெண்ணெய்ப் பிரானைப் பாடிப் பாடிப் பரவி இருக்கிறார்.

நீலம் நெய்தல் நிலவி
மலரும் சுனை நீடிய

சேலும் ஆலும் கழனி
வளம் மல்கிய சிக்கலுள்,
வேல் ஒண் கண்ணியினாளை
ஓர் பாகன் வெண்ணெய்ப்பிரான்
பால்வண்ணன் கழல் ஏத்த
நம் பாவம் மறையுமே.

என்பது தேவாரம். சம்பந்தர் சிங்கார வேலவரைப் பாடவில்லை . அருணகிரியார் அவரைப் பாடமறக்கவில்லை

அழகிய சிக்கல்
சிங்கார வேலவா!
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அகரரை வெட்டிச்
சங்காரம் ஆடிய
பெருமானே!

என்பது அவர் பாடும் திருப்புகழ். இன்னும் இந்தச் சிங்காரவேலவன், அவன்றன் தந்தை வெண்ணெய்ப் பிரான், அவன்றன் துணைவி வேல்நெடுங்கண்ணி எல்லோரையும் சேர்த்தே காஞ்சி சிதம்பர முனிவர் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழில் பாடி மகிழ்விக்கிறார்.

சிக்கல் அம்பதிமேவும் சிங்கார வேலனாம்
தேவர் நாயகன் வருகவே!
திகழும் வெண்ணெய்ப் பிரான்
ஒருபால் உறைந்த மெய்ச்செல்வி
பாலகன் வருகவே!

என்பது பாட்டு. இப்படியெல்லாம் பல்லோரும் பாடிப் பரவும் பெருமை வாய்ந்தவன் சிங்காரவேலவனும் அவன் பெற்றோரும்.

இக்கோயிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளில் இரண்டு கோல வாமனப் பெருமாளைப் பற்றியும், ஒன்று சிங்கார வேலவனைப் பற்றியும், மற்றவை நவநீதப் பெருமாளைப் பற்றியும் உள்ளவை. ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீர பாண்டியன் கல்வெட்டு பால்வெண்ணெய் நாயனாருக்கு வழிபாட்டுக்குப் பணம் கொடுத்ததைக் கூறுகிறது. பாண்டிய மன்னர் தவிர விஜயநகர நாயக்க மன்னர்களும் நிபந்தங்கள் பல ஏற்படுத்தியிருக் கிறார்கள். மகாராயர், வீரபூபதி அச்சுததேவ மகாராயர் ஏற்படுத்திய நிபந்தங்கள் பல. இவற்றை யெல்லாம் விரிவாய் ஆராய்வதற்கு நேரம் ஏது, நாம் செல்லும் க்ஷேத்திராடன வேகத்தில்?