வேங்கடம் முதல் குமரி வரை 3/023-033

23. ஆனைக்கா அகிலாண்டேசுவரி

ராமனுக்கும் சீதைக்கும் மிதிலையில் திருமணம் நடக்கிறது. அவர்களது மணக்கோலத்தைப் பாடுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

மன்றலின் வந்து மணித் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தே

என்பது பாட்டு. இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் ஒரு சந்தேகம் எழுவது உண்டு. எப்படி ராமன் சீதை இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள்? எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் எண்ணுவேன் நான். இந்தச் சந்தேகம் என் உள்ளத்தில் மட்டுமே எழவில்லை. அன்னை பார்வதிக்குமே எழுந்திருக்கிறது. ஆகவே யோகம் போகம் அவற்றின் உண்மைகளைப்பற்றி ஒரு சந்தேகத்தையே கிளப்பி, அதற்கு விடையை இறைவனிடமே கேட்டிருக்கிறாள். அவரும் உடனே அதற்கு விடை சொல்லவில்லை. 'நீ பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தை அடைந்து தவஞ்செய். அங்கு நான் வந்து உனக்கு உபதேசம் செய்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைக்கிறேன்' என்று உத்தரவு போட்டிருக்கிறார். இறைவன் கட்டளைப்படியே ஞானபூமியை நாடிவருகிறாள் அன்னை. காவிரிக்கரையிலே முனிவர்களெல்லாம் இருந்து தவம் செய்யும் ஒரு சோலையைக் கண்டு அங்கு தவம் செய்ய முனைகிறாள். இன்பத்தைத் தருகின்ற முத்தியின் தன்மையைத் தெரிந்து கொள்ள வந்தவள் ஆதலின் இனிய சுவை உடைய நீரையே திரட்டி லிங்கத் திருவுரு அமைத்துக் கொள்கிறாள்.

அந்த அப்புலிங்கத்துக்கே அபிஷேகம் முதலியன செய்து ஆராதனை பண்ணுகிறாள். இவள் தன் தவத்துக்கு இரங்கி அண்ணல் இந்தக் காவிற்கு வந்து சந்தேகத்துக்கு விளக்கம் கூறுகிறார். அவர் கூறும் விளக்கம் இதுதான். 'உலகங்கள் எல்லாம் என் அருள் வழியே நடப்பன. நடனத்தைப் பிறருக்குக் கற்பிக்க விரும்பும் நடன ஆசிரியன் முதலில் தானே நடனம் ஆடிக்காட்டுதல் போல, உலக மக்களுக்கு யோக நிலையையும் போக நிலையையும் பயிற்றுவிக்க நானே நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. உலகில் உள்ள ஆன்மாக்களெல்லாம் போகத்தை நுகர உன்னை மணந்து தழுவிப் போசியாகவும், அதே சமயத்தில்யோகசித்தி பெற்றுயோகியாகவும் மாறுகிறேன்' என்கிறார். ஆம்! யோக நிலையில் இருக்கும் இறைவன் போகியாகவும் காட்சி தரும் ரகசியம் இதுதான் என்று அன்னை அறிகிறாள். இந்த விளக்கத்தை அன்னை அகிலாண்டேசுவரி பெற்ற இடம் தான் திரு ஆனைக்கா. அந்த ஆனைக்காவுக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஆனைக்கா காவேரிக்கரையில், காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் உள்ள தலம். திருச்சி ஜங்ஷனிலிருந்து வடக்கே நாலுமைல் தொலைவில் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி, கிழக்கே நாலு பர்லாங்கு நடந்தால் கோயிலுக்கு வந்துசேரலாம். ஆனைக்காவை, திருவானைக்காவல் என்றும் திருவானைக் கோயில் என்றும் மக்களும் நெடுஞ்சாலைப் பொறியாளர்களும் அழைப்பார்கள், ஆனைக்கா என்றால் யானை வதிந்த காடு என்றுதான் பொருள். அதனாலேயே அத்தலத்தை கஜாரண்யம் என்றும் புராணங்கள் கூறும். இத்தலத்துக்கு ஏன் ஆனைக்கா என்று பெயர் வந்தது என்று தெரியத் தலவரலாற்றைக் கொஞ்சம் படிக்கவேணும்.

கைலையிலுள்ள இரண்டு கணநாதர்கள் ஏதோ சாபம் பெற்ற காரணத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் வந்து பிறக்கிறார்கள் இந்த ஞானபூமியிலே. இருவரும் அன்னை அகிலாண்டேசுவரி ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கமோ ஒரு நல்ல நாவல் மரத்தடியில் காவிரிக்கரையில் இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரைத் தன் துதிக்கையாலே மொண்டு கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறது யானை. மரத்தின் தழைகள் இறைவன் மேல் விழாதவாறு நூல் பந்தல் இடுகிறது சிலந்தி. சிலந்திக்கு யானைமீது கோபம். ஆதலால் சிலந்தி யானையின் துதிக்கையுள் நுழைந்து கபாலம் வரை ஏறி யானையைக் கடிக்கிறது. யானை வேதனை தாங்கமாட்டாமல் தன் துதிக்கையை ஓங்கி அடிக்கிறது. அதனால் சிலந்தியும் மடிகிறது. யானையும் துடிதுடித்து விழுந்து இறக்கிறது.

ஆனால் இவர்கள் இருவரது பக்தியையும் மெச்சி, இவர்களுக்கு முத்தி அளிக்கிறான் இறைவன். முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்தமாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டிருந்த பகையை மறக்காமல், யானை ஏற இயலாத மாடக் கோயில்களாகவே எழுபது கட்டுகிறான் சோழமன்னன், எழுபது கோயில்களில் படி ஏற இயலாத யானையும் ஒரு கோயிலைத் தன்னுடையதாக -ஆனைக்காவாகவே - ஆக்கிக் கொள்கிறது. இத்தனையும் கூறுகிறார் நாவுக்கரர்.

சிலந்தியும் ஆனைக்காவில்
திருநிழல் பந்தல் செய்து
உலந்து அவண் இறந்தபோதே
கோச் செங்கணானுமாக
கலந்தநீர் காவிரிசூழ்
சோணாட்டு சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார்
குறுக்கை வீரட்டனாரே

என்று திருக்குறுக்கை என்னும் தலத்தில் பாடுகிறார்.

இனி, கோயிலுள் செல்ல முனையலாம். நல்ல தென்னஞ்சோலைக்கு நடுவே கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குக் கீழ்ப்புறத்திலே உள்ள ஊர்களின் பெயரே, திரு வளர்ச்சோலை, உத்தமர்சேரி என்று. இந்தப் பெயர்களைச் சொல்லும்போதே நா இனிக்கும். இந்தக் கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி வரும்போது முதல் இரண்டு பிராகாரங்களிலும் உள்ள கோபுர வாயிலைக் கடந்துதான் வரவேண்டும். அந்தப் பிரகாரங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் நிறைந்திருக்கும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து தான் கோயில் மண்டபங்கள் ஆரம்பமாகின்றன, என்றாலும், நான்காம் பிரகாரத்து மதில்தான் பெரிய மதில். இந்த மதிலையே திருநீற்று மதில் என்று கூறுகிறார்கள்.

விசாரித்தால் இம்மதில் கட்ட மன்னன் முனைந்த போது, சித்தர் ஒருவர் தோன்றி வேலை செய்தவர்களுக்கெல்லாம் திருநீற்றையே கூலியாகக் கொடுத்திருக்கிறார். அத்திரு நீறே பின்னர் ஒவ்வொருவர் கையிலும் பொன்னாக மாறியிருக்கிறது. இப்போதும் கோயிலில் நமக்குக் கொடுக்கும் திருநீறெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று மட்டும் ஆகிவிட்டால் கோயிலுக்கு வருவார் தொகையே பெருகிவிடாதா?).

ஏகபாத திரிமூர்த்தி

இந்த மதிலை எல்லாம் கடந்து வந்தால் வட பக்கம் ஆயிரக்கால் மண்டபத்தைக் காண்போம். அதற்கு எதிரே ஒரு பெரிய மண்டபத்தை அடுத்துத் திரி மூர்த்திகள் கோயில். அங்கு சென்று படி ஏறினால் ஓர் அதிசயம் காத்து நிற்கும், ஆம்! பிரும்மா, விஷ்ணு, சிவன் எல்லோருமே லிங்கத் திருவுருவிலே தனித் தனி கோயிலில் இருப்பார்கள். இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும். அதனையே ஏகபாத திரிமூர்த்தி என்று கூறுவார்கள். இத்திரிமூர்த்திகளையும் வணங்கியபின் துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வருவோம். அந்த மண்டபம் பிரும் மாண்டமான மண்டபம். அம்மண்டபத்தை நான்கு பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் மண்டபத்தையே தாங்கி நிற்கும். மேலும் இத்தூண்களில் எல்லாம் தலவரலாறுகளைத் தெரிவிக்கிற சிற்ப வடிவங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கண்டு அதிசயித்த பின்னரே அடுத்த சோமாஸ்கந்த மண்டபத்துக்குச் சென்று அந்தப் பிரகாரத்தைச் சுற்ற வேணும். அப்படிச் சுற்றி வரும்போது கீழ்ப்புறம் கருவறை மேல் கட்டப்பட்ட விமானத்தை ஒட்டி வெண்நாவல் மரம் ஒன்று விரிந்து பரந்திருக்கும். இதனை இரும்பு அழி போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இங்கு சம்பு முனிவர் இருந்து தவம் செய்திருக்கிறார். இந்த மரத்தின் அடியிலேயே இறைவன் வதிவது காரணமாக இத்தலத்துக்கே சம்புகேசுவரம் என்ற பெயரும் நிலைத்திருக்கிறது. இதனையும் கடந்து மேற்கு நோக்கி வந்தே கருவறை வாயில் செல்லவேணும். இறைவன் மேற்கே பார்க்க லிங்க வடிவில் மிகத் தாழ்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் சந்நிதிக்குமுன் ஒன்பது துவாரங்கள் கொண்ட ஒரு கல் பலகணி உண்டு. அதன் வழியாகத் தரிசித்த பின்னரே தென்பக்கம் உள்ள வாயில் வழியாக அந்தராளம் செல்லவேணும். அங்குநான்கைந்து பேர்கள் நிற்பதே மிக்க சிரமம். ஆதலால் முன் சென்றவர் எல்லாம் வெளிவரும் வரையில் காந்திருந்தே பின் சென்று வணங்குதல் கூடும். இங்கோ எப்போதும் நீர் பொங்கிக் கொண்டேயிருக்கும். அர்ச்சகரும் தண்ணீரை எடுத்து வெளியே கொட்டிக் கொண்டே யிருப்பார். அன்னை பிடித்தமைத்த அப்புலிங்கம் அல்லவா, அங்கு நீர் பொங்கி வழிவதில் வியப்பு என்ன? இப்படி அப்பு வடிவிலும், லிங்க வடிவிலும் உள்ள இறைவனை வணங்கி வெளியே வரும் போது,

தென்னானைக் காவானை தேனைப்
பாலை, செழுநீர்த்திரளைச்
சென்று ஆடினேனே

என்று நாவுக்கரசரோடு சேர்ந்து நாம் பாடிக்கொண்டே வரலாம்.

இனி நாம் கிழக்கு நோக்கி நிற்கும் அகிலாண்டேசுவரி சந்நிதியை நோக்கி விரையலாம். இத்தலத்திலேயே இறைவனாம் அப்பு லிங்கத்தைவிட அருள் பாலிக்கும் பெருமை உடையவள் அகிலாண்டநாயகிதான். அவள் 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும் பின்னரும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயில்.' ஆதலால் மற்றப் பிரகாரங்களை எல்லாம் கடந்து அவள் சந்நிதிக்கே வந்து சேரலாம். அவளை எதிர்நோக்கி இருப்பவர் சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்தாபித்த விநாயகர். அன்னையின் வடிவம் நல்ல கம்பீரமான வடிவம், கருணை பொழிகின்ற திருமுகம். வணங்கும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருளுகின்றவள். இவ்வன்னையைத் தாயுமானவர் வணங்கியிருக்கிறார், பாடியிருக்கிறார்.

அட்டசித்தி நல் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே!
அண்டகோடி புகழ்காவை வாழும்
அகிலாண்டநாயகி என் அம்மையே

என்பது அவரது பாட்டு. இந்த அம்மையே இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக வரலாறு. அதனால் இன்றும் உச்சிக்காலப் பூஜையின்போது இந்த அம்மன் கோயில் அர்ச்சகர் பெண் வேடந்தரித்து இறைவனைப் பூஜிக்கிறாராம்! ஆம், திருவாரூரில் அர்ச்சகர் தேவேந்திரனைப்போல ராஜகம்பீர உடை அணிந்து தியாகராஜரைப் பூஜிப்பது போல. இந்த அப்புலிங்கம் என்னும் அமுதலிங்கரும், அன்னை அகிலாண்டநாயகியும் தங்கள் சொத்தைப் பராமரித்துக் கொள்வதிலே மிக்க அக்கறை உடையவர்கள் என்றும் தெரிகிறது. அதற்கு ஒரு சிறு கதையும் இருக்கிறது. அக்காலத்தே உறையூரிலிருந்து அரசாண்ட சோழ மன்னன் ஒருவன், இந்த அன்னையையும் அத்தனையும் வழிபட வந்திருக்கிறான் தன் மனைவியுடன். மனைவியின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை இறைவனுக்கு அணிந்தால் அழகாயிருக்குமே என்று எண்ணியிருக்கிறான்.

இந்த எண்ணத்தோடேயே வருகிற வழியில் காவிரியில் நீராடி இருக்கிறார்கள் அரசனும் அரசியும், குளித்து எழுந்தால் அரசி கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணோம். கழுத்திலிருந்து நழுவி ஆற்றில் விழுந்திருக்கிறது. தேடிப்பார்க்கிறான் அரசன்; கிடைக்கவில்லை. பின்னர் சோர்வுடனேயே கோயிலுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது. காவிரியிலிருந்து குடத்தில் நீர் கொண்டுவந்து திருமுழுக்கு நடக்கிறது. என்ன அதிசயம்! அந்தக் குடத்துக்குள்ளிருந்து முத்தாரம் இறைவன் முடிமேவேயே விழுகிறது. மன்னனும் அரசியும் இறைவனது அளப்பரிய கருணையை வியக்கிறார்கள்.

வழக்கமாக எல்லாச் சிவன் கோயில்களிலும் நடக்கும் திருவிழாக்கள் இக்கோயிலில் உண்டு. இத்துடன் பங்குனி மாதம் சித்திரை நாளில் பஞ்சப்பிரகார உற்சவம் என்று ஒன்று சிறப்பாக நடைபெறும். அன்று ஒரு வேடிக்கை; இறைவன் பெண் வேடத்தோடும் இறைவி ஆண் வேடத்தோடும் திருவீதி உலா வருவர். ஏன் இந்த வேடம் இவர்கள் அணிகிறார்கள் என்பதற்கு ஒரு புராண வரலாறு உண்டு, பிரமன் தான் படைத்த பெண்ணொருத்தியின் அழகிலே மயங்கி நிறை அழிகின்றான். அதனால் படைத்தல் தொழிலே செய்ய முடியாமல் திணறுகிறான். தன் தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்புப் பெறத் தவம் செய்கிறான். தவத்துக்கு இரங்கிய இறைவன் இறைவியோடு பிரமன் முன்பு எழுந்தருள்கிற போதுதான் இப்படி வேடம் தரித்து வந்திருக்கிறார்கள். ஆம். இறைவனுக்கு ஒரு சந்தேகம், இந்தப் பிரமன் இறைவியின் அழகைக் கண்டு மோகித்தால் என்ன செய்வது என்று. இந்த வேடத்தில் இவர்களைக் கண்ட பிரமன் வெட்கித் தலைகுனிகிறான். பின்னர் அவன் விரும்பிய வண்ணமே அருள் பெறுகிறான். இந்தச் சம்பவத்தை நினைவூட்டவே இந்தப் பஞ்சப் பிரகார உற்சவம், அதில் இந்த வேடம்!

இத்தலத்துக்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள். சம்பந்தர் இத்தலத்தில் இருந்து கொண்டே கயிலாயம், மயேந்திரம், ஆரூர் முதலிய தலங்களையும் நினைத்திருக்கிறார்; பாடியிருக்கிறார்.

மண்ணது உண்ட அரிமலரோன் காணா வெண்ணாவல் விரும்பு மயேந்திராரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூரர் ஆதி ஆனைக்காவே

என்பது அவரது தேவாரம். செழு நீர்த்திரளாம் அப்பு லிங்கரை அப்பர் பாடியதைத்தான் முன்பே கேட்டிருக்கிறோமே. சுந்தரரும்,

அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை, நாளும்
இறைவன் என்று அடி சேர்வார்
எம்மை ஆளுடையாரே.

என்று பாடிப் பரவியிருக்கிறார். இப்பாடல்களை யெல்லாம் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம்; வெளியேறியும் வரலாம்.

இக்கோயிலில் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளை ஆராய்ந்து இந்தக் கோயிலைக் கட்டியவர்கள், நித்திய நைமித்தியங்களுக்கும், நந்தா விளக்குகளுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தியவர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பிற்காலத்து சோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜயநகர மதுரை நாயக்க மன்னர்களைப் பற்றி எல்லாம் பலப்பல கல்வெட்டுக்கள், ஹொய்சல மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகள் அதிகம். கடந்த 1960-ம் வருஷம் சிறப்பாகக் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்ய சுவாமிகளே இருந்து நடத்தி வைத்திருக்கிறார்கள்.