வேங்கடம் முதல் குமரி வரை 3/028-033
28. நாமக்கல் நரசிம்மர்
கோவையில் ஒரு பரம பக்தர், புகழ்மிக்க பி. எஸ். ஜி. குடும்பத்தினரில் ஒருவர். கிட்டத்தட்ட எண்பது வயது நிரம்பியவர். வேங்கடசாமி நாயுடு என்ற பெயர் உடையவர். அவர் தம் நெற்றி முழுவதிலும் நாமம் போட்டுக் கொள்பவர். நெற்றி நிறைய நீறு பூசுவது அல்லது நாமம் போட்டுக் கொள்வது எல்லாம் நாகரிகம் அல்ல என்று கருதும் இந்த நாளிலும் இப்படி நாமம் போட்டுக் கொண்டு வெளி வருவது என்றால் அதற்கு எவ்வளவோ துணிவு வேண்டும். துணிவைவிட அழுத்தமான பக்தி வேண்டும். இவரை ஓர் இளைஞன் அணுகிக் கொஞ்சம் ஏகத்தாளமாக, 'தாத்தா, இதைவிடக் கொஞ்சம் பெரிய நாமமாகப் போட்டுக் கொள்ளக் கூடாதா?' என்று கேட்டபோது, அவர் 'அப்பனே! இதைவிட அகலமாகப் பெரிதாக நாமம் இட்டுக்கொள்ள என் நெற்றியில் இடம் இல்லையே?' என்றாராம். அந்தப் பெரியவர் போன்றவர்கள், பெருமாளின் திருவடிகளைத் தங்கள் தலையிலே நாம வடிவிலே தாங்குவதில் எல்லையற்ற இன்பம் பெறுகின்றவர்கள்.
சேலம் நகரத்துக்குக் கிழக்கே உள்ள மலைமேலே ஒரு நாமம் பளிச்சென்று தெரியும்படி போட்டிருக்கும். ஒருவரிடம் ஒரு காரியத்தை எதிர்பார்த்து அந்தக் காரியம் நடவாமல், எதிர்பார்த்ததிற்கு நேர்மாறாக நடந்துவிட்டால், ஏமாந்தவரிடம் மக்கள் காட்டுவது இந்த மலைமேல் இடப்பட்டிருக்கும் நாமத்தையே என்கிறார்கள் சேலத்து மக்கள், நாமம் போடுவது என்றால் ஏமாற்றுவது என்று பொருள் எப்படியோ ஏற்பட்டு விட்டது. அப்படி ஏமாற்றுச் கச்சவடம் ஒன்றும் செய்யாமலேயே ஒரு தலம் நாமக்கல் என்ற பெயர் பெற்றிருக்கிறது. அங்குள்ள மலைமீதும் பெரிய நாமம் ஒன்றையும் காணோம். நா என்றால் நாம் செய்யும் பாபங்களை யெல்லாம் நாசம் செய்யக் கூடியது. ம என்றால் மங்களத்தைக் கொடுக்கக் கூடியது என்று பொருள். இப்படிப் பாபத்தைப் போக்கி, மங்களத்தைத் தரும் பகவானின் நாமம் விளங்கும்படி உயர்ந்திருக்கும் மலையே நாமக்கல் ஆகும். இந்த நாமக்கல் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
நாமக்கல் சேலம் ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய ஊர். சேலம் நகரத்துக்கு நேர் தெற்கே இருபத்தொரு மைல் தொலைவில் இருக்கிறது. இந்தத் தலத்துக்குச் செல்ல ரயில் வசதி கிடையாது. சேலம் ஜங்ஷனில் இறங்கி பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். போகிற வழியில் பொய்மான் கரடையுமே பார்க்கலாம். ஊரையடுக்கும்போது நாமக்கல் மலையும் அதன் மீது ஒரு கோட்டை கட்டியிருப்பதும் தெரியும். இத்தலத்தை மகா விஷ்ணு முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இடங்களில் கோட்டைவிட்ட இவர் இங்கு மலைக் கோட்டையையே கைப்பற்றி மூன்று திருக்கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மலையின் மேல்புறம் நரசிம்மராகவும், மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும், மலைமேல் கோட்டை உள் வரதராகவும் இடம் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். இப்படி மூன்று மூர்த்தங்களில் இவர் இருந்தாலும் பிராதான்யம் எல்லாம் நரசிம்மருக்குத்தான். நரசிம்மர் இங்கு கோயில் கொள்ள எழுந்தருளிய வரலாற்றைத் தெரிந்துகொண்டே மேல் நடக்கலாம்.
மகாவிஷ்ணு நரசிம்மாவதாரம் எதற்காக எடுத்தார் என்பது தெரியும். இரணியனைச் சம்ஹரித்த நரசிம்மரது வடிவம்பார்க்கப் பயங்கரமானதாக இருந் திருக்கிறது. திருமகளாம் லட்சுமிகூடஅவர் பக்கலில் செல்ல அஞ்சுகிறாள். தேவர்களும் கண்டு நடுங்குகின்றனர். எல்லோரும் அந்தப் பரம பாகவதனாகிய பிரகலாதனையே வேண்டிக் கொள்கின்றனர், உக்கிர நரசிம்மரது உக்கிரத்தைத் தணிக்க. பிரகலாதன் வேண்டிக் கொண்டபடியே சாந்த மூர்த்தி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர்கிறார். இதற் கிடையில் பரந்தாமனைப் பிரிந்த திருமகள் கமல வனத்திடையே ஒரு கமலாலயத்தை அமைத்துக் கொண்டு கடுந்தவம் புரிகிறாள். இப்படிக் கண்டகி நதிக்கரையில் பரந்தாமனும் கமலாலயக் கரையில் திருமகளும் இருக்கும்போது அனுமன் ராம லக்குமணர்க்காகச் சஞ்சீவி பர்வத்தை எடுத்து வரச் செல்கிறான், சென்று திரும்பும் போது கண்டகி நதிக் கரையில் உள்ள சாளக்கிராம நரசிம்மரைக் காணுகிறான். அவரையும் எடுத்துக் கொண்டே வருகிறான். வருகிற வழியில் சுமலாலயத்தைக் கண்டதும் அங்கு நீர் அருந்த இறங்குகின்றான். நரசிம்மரைக் குளக்கரையில் வைத்துவிட்டு நீர் அருந்துகிறான். திரும்பி வந்து நரசிம்மரை எடுத்தால் அவர் கிளம்பவே மறுத்து விடுகிறார். அவர் திருமகளைப் பிரிந்துதான் எவ்வளவு காலம் ஆகிவிட்டது. அவளோ இக்கமலாலயக் கரையில் தவக்கோலத்தில் இருக்கிறாள். அவளுக்கு அருள்புரிய வேண்டாமா? ஆதலால் அங்கேயே தங்கி விடுகிறார். லட்சுமியையும் சேர்த்துக் கொண்டு லட்சுமி நரசிம்மனாகவே சேவை சாதிக்கிறார். லட்சுமிக்கும் தனியாக ஒரு கோயில், நாமகிரித் தாயார் சந்நிதி என்று இருவரையும் இணைத்து வைத்த அனுமாருக்கும் இங்கே ஒரு விசேஷ சந்நிதி.
வண்டிக்காரர்களுக்கு நாம் கோயில் பார்க்க வந்திருக்கிறோம் என்று தெரிந்தாலே அவர்கள் நம்மை நேரே அனுமனது சந்நிதியில் கொண்டுதான் நிறுத்துவார்கள். அவர் கிழக்கு நோக்கியவராய்ச் சுமார் 15 அடி உயரத்தில் அஞ்சலி ஹஸ்தராய் நிற்கிறார். நல்ல கம்பீரமான திருஉரு. இவரைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கம்பிக் கதவெல்லாம் போட்டிருக்கிறார்கள். அதனால் அர்ச்சகர் இல்லாவிட்டாலும் கண்டு வணங்க வாய்ப்பு உண்டு. இந்தக் கட்டிடத்துக்கு விமானம் அமைக்கவில்லை. இவர் கைகூப்பி நிற்கும் திசை நோக்கி நடந்தால் நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் கோயில் கொண்டிருக்கும் சந்நிதி வாசலுக்கு வந்து சேருவோம். நரசிம்மரைத் தரிசிக்கக் கொஞ்சம் படி ஏறலாம், ஏறவேணும். அக்கோயில் குடைவரைக் கோயில். மகேந்திர வர்ம பல்லவன் காலத்தியது. அனுமார் கொண்டு வந்தது சாளக்கிராம வடிவம் என்பது புராணக் கதை. இன்று நம் கண்முன் காண்பது நல்ல சிலை வடிவம். உப்புச உருவில், பெரியதொரு சிம்மாதனத்தில் நரசிம்மர் வீற்றிருப்பார். 'அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு, வாள் உகிர்ச் சிங்கமாய் உளந்தொட்டு, இரணியன் ஒண் மார்பு அகலம் பிளந்திட்ட பெருமான்' அல்லவா? ஆதலால் அந்த மூர்த்தியின் திருக்கரங்களில் இன்னும் செந்நிற வண்ணம் இருக்கிறது.
திருமாலின் திரு அவதாரங்கள் அத்தனையிலும் ஈடுபட்டு நின்ற அந்த மங்கை மன்னன், நரசிம்ம மூர்த்தியை.. நினைத்து ஒரு நல்ல பாட்டுப் பாடியிருக்கிறார்.
தளை அவிழ் கோதை மாலை
இருபால் தயங்க. எரிகான்று
இரண்டு தறுதாள்
அளவு எழ, வெம்மை மிக்க
அரி ஆகி, அன்று பரியோன்
சினங்கள் அவிழ
வளைஉகிர் ஆளி மொய்ம்பின்
மறவோனது ஆகம் மதியாது
சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம்,
அது வையம் மூடு பெருநீரில்
மும்மை பெரிதே.
என்பதுதான் அவரது பாட்டு. ரத்தக் கறையைக் காண்கிறோமே ஒழிய ரத்தக் கடலைக் காணவில்லை. அதையெல்லாம் இவ்வளவு காலம் கழுவித் துடைக்காமலா வைத்திருப்பார்கள்? நரசிம்மரது கண்களில் அருள் பொழியும் கருணையே நிறைந்திருக்கும். கல் வடிவில் இதனைக் காண இயலாதவர்கள், முன்னால் எழுந்தருளப் பண்ணியிருக்கும் உற்சவ மூர்த்தத்தில் கண்டு மகிழலாம். நரசிம்மன் வெறும் லக்ஷ்மி நரசிம்மனாக மட்டும் இல்லை , சீதேவி பூதேவி சகிதமே எழுந்தருளியிருக்கிறார்.
இந்தக் குடைவரையில் காண வேண்டியவர் இந்த நரசிம்மர் மாத்திரம் அல்ல. இன்னும் திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்த நாரணர் எல்லாம் மூலமூர்த்தியின் இருமருங்கும் பெரிய பெரிய வடிவங்களில் இருக்கின்றனர். எல்லாம் கல்லைக் குடைந்து கனிவித்த வடிவங்கள் என்றால் நம்பவே முடியாது; அத்தனை அழகு ஒவ்வொரு வடிவிலும். 'ஊன் கொண்டவன் உகிரால் இரணியன் தன் உடல் கிழிக்கும்' கோலம் கொஞ்சம் அச்சம் எழுப்புவதாகவே இருக்கும். இங்குள்ள சித்திர வடிவங்களில் சிறப்பானவை அனந்த நாராயணனது வடிவந்தான். பன்னக சயனனாக இருந்தவர் எழுந்து கம்பீரமாக அனந்தனையே ஆசனமாகக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். தேவர்களெல்லாம் தொழுத கையினராக இருந்தும், நின்றும் ஏவல் கேட்கிறார்கள், திரிவிக்கிரம சரிதம் முழுவதுமே கல்லில் வடித்திருக்கிறான் சிற்பி, வாமனனாக வந்து மாபலியிடம் தானம் பெறுவதும், பின்னர் வாமனன் வளர்ந்து திரி விக்கிரமனாக உயர்வதும் கண்கொள்ளாக் காட்சி.
இவர்களைப் போலவே பூமிதேவியைத் தாங்கிவரும் வராகரும். இவர்களை எல்லாம் காண்பதன் மூலம் தமிழ் நாட்டின் சிற்பக் கலைவளம், கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் எவ்வளவு சிறந்திருந்தது என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? நரசிம்மரைத் தொழுதபின் நாமகிரித் தாயார் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். நரசிம்மர் மேற்கு நோக்கியிருந்தால் நாம கிரித் தாயார் கிழக்கு நோக்கியிருக்கிறாள். நிறைய அணிகள் பூண்டு, பட்டாடை உடுத்தி, ஊரின் பெயருக்கு ஏற்ப நல்ல நாமமும் தரித்துக் கம்பீரமாகவே கொலு இருக்கிறாள். இவள் சந்நிதியில் வந்து பிரார்த்தனை செய்து கொள்பவர் பில்லி சூனியம் முதலியவைகளினின்றும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.
நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு துவாரம். அதன் வழியே அனுமாரைப் பார்க்கலாம். இந்தத் துவாரம், நரசிம்மரது கால் அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பர். அனுமனது கண்கள் நரசிம்மரது திருவடிகளில் பதிந்திருக்கிறது என்று இதனைக் காட்டவே இதனைச் செய்து வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூறுவர். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டே வெளியே வந்து வடக்கு நோக்கி மலையைச் சுற்றலாம். மலையை அரை வட்டம் சுற்றினால் ரங்கநாதர் சந்நிதி செல்லும் படிக்கட்டுகள் வந்து சேரலாம். படிகள் அதிகம் இல்லை . ஆதலால் ஏறுவது சிரமமாக இராது. இவற்றை ஏறிக் கடந்தால் முன் மண்டபத்தோடு கூடிய ஒரு குடைவரைக் கோயிலுக்கு வந்து சேருவோம். இக்கோயிலுள் ரங்கநாதர் கார்க்கோடகன் பேரில் தெற்கே தலையும் வடக்கே காலுமாக நீட்டிப் படுத்துக் கொண்டிருப்பார்.
ரங்கநாதர் கார்க்கோடகன் இருவரையும் உள்ளடக்கிய மண்டபம் எல்லாம் கல்லைக் குடைந்து செய்தவை. அரங்க நாதர் காலடியில் கற்சுவரில் சங்கர நாராயணன் வேறே காட்சி கொடுப்பார், இன்னும் தேவர்கள் முனிவர்கள் எல்லாம் இக் குடைவரையில். இம்மலையைக் குடைந்து குடைவரை கட்டியவனும் மகேந்திர வர்ம பல்லவனே. நல்ல மலையைக் கண்ட இடங்களில் எல்லாம் குடைவரை அமைக்கத் தோன்றியிருக்கிறது அவனுக்கு. இனி இதற்குப் பக்கத்தில், வெகு காலத்துக்குப் பின்னால் கட்டப்பட்டுள்ள கோயிலில் இருக்கும் ரங்கநாயகித் தாயாரையும் வணங்கலாம். கார்க்கோடகன் எப்படி மலைவழி ஏறி வந்து அரங்க நாதனுக்குப்பாயலாய் அமைந்தான் என்பதையுமே காணலாம். அவன் மலைமீது ஏறிவந்த தடம் இன்னும் கரிய நிறத்திலேயே இருக்கிறது.
ரங்கநாதரைத் தரிசித்த பின் படிக்கட்டுகளில் இறங்கித் தளத்துக்கு வந்து திரும்பவும் கிரிப்பிரதக்ஷிணத்தைத் தொடர்ந்தால் நாம் காண்பது கமலாலயம். இதுதான் அன்று அனுமனது தாகவிடாய் தீர்த்திருக்கிறது. இன்று நாமக்கல் மக்களுக்குப் பிரதான குடி தண்ணீர்க் குளமாக விளங்குவதும் இதுதான். இனித்தான் மலை ஏறி வரதராஜரைக் காணவேண்டும். மலை ஏறுவது சிரமம்தான். வசதியாக ஏறப் பட்டிக்கட்டுகள் இல்லை. அங்கு ஒரு கோட்டை இருக்கிறது. கோட்டைக்குள்ளே கோயில் இருக்கிறது. கோயில் உள்ளே இருக்கிறார் வரதராஜர். இவர் இவ்வளவு உயரத்தில் வந்து ஏறியிருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. பக்கத்திலுள்ள காஞ்சி சென்று கர்சிவரதரைக் கண்டு சேவிக்கும் பழக்கம் உடைய அந்தணர் ஒருவர், வயது முதிர்ந்த போது தளர்ச்சி அடைகிறார். கச்சிக்கு முன்போல் செல்ல முடியவில்லை, அது காரணமாக ஏங்குகிறார். வரதன் அருளாளன் அல்லவா? ‘நீர் நம்மைத் தேடிவர இயலாவிட்டால் நாம் உம்மைத் தேடி வருகிறோம்' என்று சொல்லி இங்கு வந்து மலைமீது ஏறி நின்றிருக்கிறான். வரதன் செய்தது ஒரே ஒரு தப்புத்தான். காஞ்சிக்கு வர இயலாத அந்தணருக்காக இந்த நாமகிரிக்கு வந்த வரதர் மலை அடிவாரத்தில் அல்லவா இருந்திருக்க வேணும்? மலை மேல் ஏறி நின்று கொண்டால்? நமக்குக் கூட எவ்வளவு தூரம் ஆனாலும் கச்சிக்குப் போய் வருவது எளிதாகப்படுகிறது, இந்த நாமக்கல் மலைமேல் ஏறுவதை விட.
மகேந்திரவர்மன் குடைந்த குடைவரைகளே இங்குள்ளவை என்று கண்டோம். இங்குள்ள கோயில்களைப் பின் வந்த மன்னர்களே கட்டியிருக்க வேண்டும். இக்கோயில் கல்வெட்டுக்களில் இந்தத் தலத்தை அதியேந்திர விஷ்ணு கிருஹம் என்று அழைத்திருக்கின்றனர். இந்த விஷ்ணு கிருஹமே பின்னர் விண்ணகரமாக ஆகியிருக்கிறது. சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தகடூர் (இன்றைய தர்மபுரி) அதிகமான் நெடுமான் அஞ்சி நன்கு அறிமும் ஆகியிருக்க வேண்டும். அவன்தானே ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன். அவன் வழித் தோன்றல்களே அதிகர் என்று வழங்கப்பட்டிருக்கின்றனர். அந்த அதிகர் குலத்து மன்னன் ஒருவனே கோயிலைக் கட்டியிருக்கலாம். அதனால் அதியேந்திர விஷ்ணுகிரகம் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.
நாமக்கல் வந்த நரசிம்மர், ரங்கநாதர், வரதர் இவர்களைப் பார்த்ததோடு திரும்பிவிட முடியாது. பக்கத்திலே இருப்பது கொல்லிமலை. அங்கு அன்று
கொல்லியம் பாவை இருந்தாள் என்பர் சங்க காலச் சான்றோர். அவள் இருந்தாளோ இல்லையோ? இன்று நாமக்கல்லிலிருந்து 15 மைல் தூரத்தில் உள்ள பேலுக்குரிச்சியை (வேலுக்குரிச்சிதான் இப்படி மாறி இருக் கிறது.) அடுத்துள்ள கொல்லிமலைச்சாரலிலே ஒரு சிறிய குன்றின் பேரிலே முருகன் நிற்கிறான், வேட்டுவக் கோலத்தில். தலையிலே வேட்டுவனது கொண்டை, வலக்கையிலே தண்டு, இடக்கையிலே ஒரு கோழி. இந்தக் கோலத்தில்தான் அவன் வள்ளியை மணம்புணர வந்திருக்கிறான். கொல்லி மலைச் சாரலைக் கண்டதும் அங்கேயே தங்கியிருக்கிறான். அவன் பேரில் குருக்கள் ஒருவர் பாட்டு ஒன்று பாடியிருக்கிறார்.
வள்ளிக்கு இசைந்த மணவாளன் வேடுவனாய் அள்ளிக் கொளும்பேர் அழகுடனே - துள்ளுகின்ற கோழியினைக் கையிடுக்கி கொல்லிமலைச் சாரலிலே
வாழுகின்றான் சென்றே வணங்கு
என்று எனவே, அந்த வேட்டுவ முருகனையும் கண்டு தொழுதுவிட்டே திரும்பலாம்.