வேண்டும் விடுதலை/இந்தியாவின் ஒற்றுமை, தேசிய இனங்களின் உரிமையில்தான் ஏற்பட முடியும்

இந்தியாவின் ஒற்றுமை, தேசிய இனங்களின்
உரிமையில்தான் ஏற்படமுடியும்!


ந்திராகாந்தி எவருக்கும் கட்டுப்படாத ஒரு முழு வல்லாண்மை அதிகாரிபோல் செயல்பட்டு வருவது, இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் அவரின் நோக்கத்துக்கு நேர் மாறான விளைவை உண்டாக்கக் கூடியது. எதற்கெடுத்தாலும் அடக்குமுறைப் பாணியைக் கையாளும் அவரின் ஆட்சி உத்தி பாராட்டக் கூடியதன்று. குமுகாய அறிவியல் சிந்தனையற்ற அவரின் வெறி ஆளுமைப் பேர்க்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. படைத்துறையை அவர் மனவிருப்பதிற்குகந்தவாறு பயன்படுத்துவது, அவரின் அரசியல் முன்னறிவைக் காட்டாது. நாட்டில் பல்வேறு சீர்திருத்தம் மண்டிக்கிடக்கின்றபொழுது, அவரின் அரசியல் கையாளுமையால், மேலும் மேலும் வறுமையும், குமுகாயக் கொடுமைகளும் சட்டப் புறம்பான செயல்களுமே தீவிரமடைகின்றன.

தேசிய இனங்களின் எழுச்சியைக் குமுகாயக் குற்றமாக மதித்து அதை அழித்து ஒழித்துவிட நினைக்கும் அவரின் தன்னதிகார வெறிப் போக்கால் நாடே சிதைந்து சீர்குலையப்போகிறது. ஆட்சிப் பகிர்வால் ஏற்பட விருக்கும் ஆக்க நிலைகளை அவர் சிந்திக்க மறுக்கிறார். ஏறத்தாழ ஐம்பது கோடி ஏழை மக்களைத் தேசிய ஒருமைப்பாடு, என்னும் கற்பனைப் படுகுழியில் இறக்கிப் பட்டினி போட்டுக் கொல்லப் பார்க்கிறார். இந்திரா. இதற்கு, பஞ்சாப் சிக்கலைப் பகடைக்காயாகவும் துருப்புச் சீட்டாகவும் பயன்படுத்தப் பார்க்கிறார். இந்தியாவின் ஒற்றுமையே தேசிய இனங்களின் உரிமையின் அடிப்படையில்தான் ஏற்பட முடியும் என்பதை அவர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். அவரின் தனிப்பட்ட விருப்பத்தையே இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கையாக ஆக்கிவிடப் பார்க்கிறார்.

மக்களைச் சார்ந்துதான் ஓர் ஆட்சி இயங்க முடியுமே தவிர ஆட்சியைச் சார்ந்து மக்களை இயக்கிவிட முடியாது என்னும் அரசியல் அடிப்படைப் பாடத்தையே இந்திரா கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. புராண இதிகாச காலங்களைப் போல, அரசியல், அறிவியல், மக்கள் உரிமையியல் வளர்ச்சிபெற்ற இக் காலத்தையும் கருதிக்கொண்டு அரசின் அனைத்துக் கருவிகளையும் உறுப்புகளையும் தம் அரசியல் நிலைப்பாட்டுக்காகவும், கட்சி வலிவிற்காகவும், தன்னலத்துக்காகவுமே பயன்படுத்தி வருகிறார், இந்திரா.

வறுமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பொருளியல் சுரண்டல்கள் ஒழிப்பு முதலிய அனைத்துக் கோட்பாடுகளையும், முயற்சிகளையும், இந்திய தேசிய ஒருமைப்பாடு என்னும் எப்பொழுதுமே மெய்யாக முடியாத பொய் மாயைப் புனை சுருட்டுப் போலிக் கொள்கையுள் மூடி மறைத்துவிட அவர் முயற்சி செய்வது, விரிசல் விட்டு விழுந்து விடப்போகும் சுவருக்கு வெள்ளையடிக்க முற்படுவதைப் போன்றது. கொள்ளைக்காரர்கள் மக்களைச் சுரண்டி ஏப்பமிடத் துடிக்கும் அரசியல் ஊதியக்காரர்கள், முழுத் தந்நலக்காரர்கள், சில இந்தி வெறியர்கள் முதலியவர்களுக்காக, முழு இந்தியாவையும் சீர்குலைத்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர், நிலைமை இப்படியே போனால், இந்தியா சுக்கு நூறாகச் சிதைந்து போகும் என்பதை ஏனோ அவர் உணர்ந்துகொள்ள மறுப்பதாகத் தெரிகிறது.

இந்திரா இல்லை, வேறு எவர் முனைந்தாலும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட உணர்ச்சியை, மெய்ம்மத்தை ஒடுக்கிவிட முடியாது. அவை உரிமை பெறுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை இந்திராகாந்தியும். அவரைக் கண்கண்ட கடவுளாக மக்களுக்குக் காட்டிக் காசு பறிக்கும் அரசியல் கொள்ளைக்காரர்கள் சிலரும் கருத்து நொள்ளையர்கள் பலரும் உணர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.

பொய்யான, கருத்துப் பரப்புதல்களாலும், போலியான நடைமுறைகளாலும் மக்களை என்றுமே ஏமாற்றிவிட முடியும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் அரசியல் கயவர்களுக்கும், ஆட்சித் திருடர்களுக்கும் நாம் சொல்ல விரும்புவது இதுதான் படைத்துறையையும் பதினக் கருவிகளையும் வைத்துக் கொண்டு மக்களின் உள்ளுணர்வுகளை என்றுமே சிறைப்படுத்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். மக்கள் என்றுமே மெதுவாகச் சிந்திப்பவர்கள்; ஆனால் விரைவாகச் செயல்படுபவர்கள். அவர்கள் தூங்கலாம்; ஆனால் விழித்துக் கொள்ள நெடுநேரம் ஆகாது.

மக்கள் ஆற்றல் ஓர் எரிமலையைப் போன்றது. அ’து எப்பொழுது வெடிக்கும் என்று எவருமே கணித்துச் சொல்லிவிட முடியாது. இந்தியா முழுமையுமே பஞ்சாபாக மாறும் காலம் மிகத் தொலைவில் இல்லை! மாவீரன் பிந்தரன் வாலேயை வழிபடுகின்ற இளைஞர்கள் பஞ்சாபில் மட்டுமன்று வேறு மாநிலங்களிலும் இலக்கக் கணக்கில் உள்ளனர். அவர்கள் உங்களின் சொல் விளையாட்டு வேடிக்கைகளை உணர்ந்து வருகிறார்கள்! அவர்களின் செயல் விரைவில் எழுச்சி கொள்ளத்தான் போகிறது! எச்சரிக்கை!

- தமிழ்நிலம், இதழ் எண். 40, சூலை 1884