வேண்டும் விடுதலை/இந்தியாவில் தேசிய இனங்களின் எழுச்சிகள்


இந்தியாவில் தேசிய
இனங்களின் எழுச்சிகள்


லகெங்கிலும் உரிமைப் போராட்டங்கள் கிளர்ந்து வரும் காலம் இது. இவ்வகையில், ஆங்காங்கு ஒடுக்கப்படும் மக்கள், பல்வேறு வகையாகத் தங்களுக்கு மக்கள் குமுகாயத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நயமான உரிமைகளுக்காகப் போராடி வருவதை, உலக நோக்கில் கவனம் செலுத்துவார் அறிந்து கொள்ளலாம். அத்துடன் இப்போராட்டங்களை ஆளுமைக்காரர்கள், பல்வேறு கோணங்களில் ஒடுக்கி வருவதையும் கூடவே உணரலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரே இனமக்கள் வாழும் நாடு அன்று என்பதை அனைவருமே உணர்ந்திருக்கின்றோம். அவ்வவ் வினங்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவ்வச் சிக்கலுக்காக, அவ்வவ் வினமக்களும், தங்களைத் தேசிய இனமக்கள் என்று உரிமைப்படுத்திக் கொண்டு, ஆங்காங்கு சிற்சில எழுச்சிகளைக் காட்டி வருகின்றனர்.

ஆனாலும், அதிகார ஆளுமைக்காரர்கள், இவர்களுக்குரிய சிக்கல்களையெல்லாம் நன்கு எண்ணிப் பார்த்து அணுகித் தீர்வு செய்ய இயலாமல், அவற்றை வேறுவேறு பெயரால், மூடி மறைக்கவும், அடக்கி ஒடுக்கவும் முயன்று வருகிறார்கள்.

செய்தித்தாள் படிப்பவர்களுக்குப் பஞ்சாப், அசாம், மிசோரம், நாகாலாந்து, ஒரிசா, திரிபுரா, மணிப்பூர் முதலிய இடங்களில் கிளர்ச்சிகளும் எழுச்சிகளும் போராட்டங்களும் சிற்சில பொழுது அரசுத் தாக்கங்களும் நிகழ்ந்து வருவது தெரிந்திருக்கும். ஆனால் அரசு இயந்திரங்கள் இவற்றைப் பல்வேறு வகையாகச் சித்தரித்து அப் போராட்டங்களின் அடித்தளங்களையே மூடி மறைத்து, அவற்றின் முழு வடிவங்களையும் மக்கள் அறிந்து கொள்ளாமல் செய்து வருகின்றன.

ஆனாலும் அவ்வப்பொழுது, ஆங்காங்கு நடைபெறும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும், அங்குள்ள மக்கள் தங்களின் அரசியல், பொருளியல், வாழ்வியல், மொழி, கலை, பண்பாட்டு உரிமைகளுக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக் நமக்கு உணர்த்திக்கொண்டுதாம் இருக்கின்றன. எவ்வாறாயினும் இவ்வின வெழுச்சிகளும் போராட்டங்களும். இந்தியாவில் ஆங்காங்கே தேசிய இனங்கள் கிளர்ந்து வருகின்றன என்பதையே நமக்குக் காட்டுகின்றன.

இந்தியா உரிமைபெற்று முப்பத்தெட்டு ஆண்டுகளாகியும், இன்னும் அந்த உரிமைகள், இங்குள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும், பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். இங்கு வருகின்ற நலன்களையும் வளங்களையும் மேல் மட்டங்களில், சாதியாலும், மதத்தாலும், பொருளாலும், அரசியலாலும் மேலாண்மை பெற்ற மிகச் சிலரே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். நயமாகக் கிடைக்கப்பட வேண்டிய இவ்வுரிமை நலன்கள் தங்களுக்குக் காலத்தால் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்கள், அடிபட்டு எழுந்த புலிகளாக அரிமாக்களாகச் சீறியெழுந்து பாயத் தொடங்கியுள்ளனர்.

இவ்வெழுச்சிகளின் உண்மையான உணர்வுகளை முறையாக அணுகித் தீர்வு செய்ய இயலாத அரசு, தேசியம், ஒருமைப்பாடு, ஒற்றுமை என்னும் பெரிய கனத்த போர்வைகளால், மக்களின் வெப்பமூச்சுகளை, எங்கும் வெளியில் தெரியாதவாறு மூடி மறைக்கப்பார்க்கின்றது. இது ஆட்சிக்கும் நல்லதன்று; அது பேசும் தேசிய, ஒருமைப்பாட்டுக்கும் நல்லதன்று என்று மட்டும் இப்பொழுது கூறி வைக்கிறோம். ஆனால், உண்மைகள் காலத்தால் வலுப்பெறாமல் போகாது அன்றோ?

- தமிழ்நிலம், இதழ் எண். 55, ஏப்பிரல், 1985