வேண்டும் விடுதலை/தொடர்வண்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து

தொடர்வண்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து
படிப்படியாகத் தனித்தமிழ் நாட்டுப்
போராட்டத்தை முன்வைக்க வேண்டும்!


திம்புப் பேச்சு ஒருபுறம்! இலங்கையில் தமிழின ஒழிப்பு மறுபுறம்! இதுவா இராசீவின் அரச தந்திரம்? இங்குள்ள இந்திராக் கட்சியினர்க்கு இது விளங்கவில்லையா? நடுநிலைமை அணுகுமுறை என்று இப்படியா செயல்படுவது? இந்த ஓரவஞ்சனைக்குப் பெயர்தான் ஒப்புரவுப் பேச்சா? தன்மானமுள்ள எவனும் இதை ஒப்பமாட்டான். பொறுக்கித் தின்னும் இந்திராக் கட்சித் தலைவர் அவருக்குத் தன்மானம் இல்லாமல் இருக்கலாம். நிலையறிவு கூடவா இல்லாமல் போய்விட்டது? சிங்களக் கயவர் கொடுமை நாளுக்கு நாள் மிகுவது. திம்புப் பேச்சு தொடங்கியதிலிருந்து இக் கொடுமையைப் பற்றி இராசீவ் ஒருமுறை கூட வாயே திறக்கவில்லையே! அடிப்பவனைக் கண்டித்து பேச்சும் பேசாமல், அடி வாங்குபவனை ‘அமைதியாக இரு ஒத்துப்போ’ என்று கூறிவரும் கொடுமையை என்னென்பது? சிங்களத் தாக்குதலை மறைமுகமாக ஊக்கி விடுவதும், கொடுமை நிகழ்த்தச் செய்வதும், தமிழிழப் போராளிகளை அச்சுறுத்திப் பணியச் செய்வதும், வேறு வழியில்லாத ஒப்புதலுக்கு வற்புறுத்துவதுமே ஆகும்.

தமிழீழப் போராட்ட இயக்கத்தினரை நாடு கடத்தியது. தமிழினத்தின் மேல் தொடுத்த அச்சுறுத்தலே? உரிமைக்குப் போராடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதும், அதன்வழி நாட்டு நுழைவுப் போராட்டத்திற்கு மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதுமான அதிரடி மருத்துவ முறை, இங்குள்ள தலைவர்களின் நோக்கத்தைத் திசைதிருப்புகின்ற உத்திகளே!

தலைவர்களை வெளியேற்றி விட்டு, ‘இங்குள்ள தந்நலக்காரர்களால் தாம் பேச்சு தடைப்படுகிறது’ என்பதெல்லாம் கொடுமையான குற்றச்சாட்டு பேச்சு தொடங்கிய பின்னரும், இலங்கைக் கயவாளிகள் தங்கள் கொடுமைகளைக் கைவிடாமல் இருப்பது இந்திய அரசியல்காரர்களுக்குத் தெரியவில்லையா?

'டெசோ' நடத்திய தொடர்வண்டிப் போராட்ட விளைவைக் கூட, இங்குள்ள இந்திராக் கட்சித் தலைவர்கள் தில்லியில் போய், இராசீவ் காந்தியைச் சந்தித்ததால் ஏற்பட்ட விளைவு என்று திசை திருப்புவதை மக்கள் உணரவேண்டும். அதிகாரமும், விளம்பரமும் வாய்த் தித்திரிக்கமும் இருந்தால், கழுதையைக் கூடக் குதிரையாக விலைபோக்கிக் காட்டலாமே!

இந் நிலையில், சில தவிர்க்கவியலாத அழுத்தம் காரணமாகத் திம்புப் பேச்சில் தொடர்ந்து ஈடுபட விரும்பும் தமிழீழப் போராளிகள், தமிழீழம் ஒன்றே என்னும் தங்கள் குறிக்கோளில் சிறிதும் நெகிழ்ச்சி காட்டாமல் இருப்பது நல்லது. அதற்கிடையில், இந்தியாவின் பேச்சுக்கு ஒத்துழைப்புத் தர விரும்பினால், முதலில் பேச்சுரைக்கு மூல அடிப்படையாக, பேச்சுரை முடியும் வரை இரு தரப்பாரும் போராட்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்பதையே, இந்தியாவின் முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக வைக்கவேண்டும்.

கலைஞர் அவர்களின் இன்றைய ஈடுபாடு மிகவும் மதிக்கத்தக்கதும், போற்றிக் கொள்ளத் தக்கதும் ஆகும். போராடாமல் தமிழினம் எந்தப் பயனையும் பெற்றுவிட முடியாது. போராடித்தான் எதையும் பெறமுடியும் என்னும் நிலைவந்துவிட்ட பின், நாம் பின்வாங்க வேண்டியதில்லை. ஆனால், இடையில் குறுக்கிடும் எந்த அரசியல் நலனையோ, சலுகையையோ நாம் புறக்கணிக்க வேண்டும். கலைஞர், தொடர்வண்டிப் போராட்ட முடிவுபற்றியும், அடுத்த போராட்டத் தொடக்கம் பற்றியும், அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த, "உரிமைத் தமிழீழம்தான் ஈழத் தமிழர்களின் நலன் காக்கும் ஒரேவழி என்பது 'டெசோ'வின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்... தமிழ் ஈழத்தை ஆதரிப்பதும், ஈழத்தமிழர் நலனுக்காகக் கவலைப்படுவதும் பிரிவினைக் கொள்கை என்றான் நாங்கள் அந்தக் குற்றத்தை (குற்றமா அது? கொடுமை, நீக்கம், உரிமை மீட்பு குற்றமாகுமா? அதை ஏன் குற்றம் என்று கலைஞர் ஒப்புக்கொள்ள வேண்டும்?; செய்துகொண்டே இருப்போம்” என்று கூறியிருக்கும் கருத்தை தமிழர் அனைவரும வரவேற்க வேண்டும்; கலைஞர்கள் அவர்கள் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்" என்னும் திருக்குறளில் தன் வலிமை உணராமல் , தன் அளவு மீறிய வினையில் ஈடுபடுவது எவ்வளவு அறியாமையோ, அவ்வளவு அறியாமை மிக்கது, தன் வலிவை உணர்ந்தும் ஒருவர் அவ்வினையில் ஈடுபடாமல், செய்தக்க செய்யாமல், காலத்தை வீணாக்குவது என்பதை கலைஞர் உணர்தல் வேண்டும். தமிழினத்தின் உயிரை தம்மின் உயிராகக் கலைஞர் கருதவேண்டும். அரசியல் பதவிபெறும் முயற்சியில் அவ்வுயிர் வீணாய்ப் போவதைவிட, தமிழின உரிமை மீட்பு முயற்சியில் அதுபோவது அவர்க்கு எவருக்குமே இல்லாத வரலாற்றுப் பெருமை தருவதாகும். எனவே தமிழீழக் கொள்கையில் அவர் சிறிதும் தளர்ச்சிக் காட்ட வேண்டியதில்லை. நேற்று வந்த பழனியாண்டிகளின் அச்சுறுத்தலுக்கும் இளைஞர் இந்திராப் பேராயக் குட்டித் தலைவர்களின் மிரட்டல்களுக்கும் கலைஞர் அவர்கள் பின்வாங்க வேண்டியதில்லை. தங்கள் தந்நலத்துக்காகத் தமிழினத்தையே அடகு வைக்கத் துணிந்துவிட்ட அவ்வின நலக் கேடர்களின் குருட்டுப் போக்குக்கு ஓர் இறுதி முடிவு வரும்.

தனித்தமிழ் நாட்டுப் போராட்டத்தை அல்லது கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல இதுவே தக்க நேரம், அவ்வாறான ஒரு தக்கப் போராட்டத்தை கலைஞர் நேரம் பார்த்து அறிவிப்பாரானால், அவரைப் பின்பற்றித் தமிழகமே எழுச்சியுறுவது திண்ணம். அத்தகைய வீர வெற்றிப் போராட்டத்தை அவரே முன்னறிவிக்க வேண்டும். மற்றபடி உதிர்ந்து போகும் வெறும் அரசியல் சில்லுண்டி நலன்களுக்கு கருத்து செலுத்துவது அவர்க்குத் தாழ்ச்சியையே கொடுக்கும்.

நல்லாண்மை என்ப தொருவற்குத் தாம்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

- தமிழ்நிலம், இதழ் எண். 63, 1985