வேண்டும் விடுதலை/நாடும் மக்களும்

நாடும் மக்களும்

"நாடென்ப நாடா வளத்தன ” - என்றார் பொய்யாமொழியார். மக்களெல்லாம் தம் உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய வற்றை வேறெங்கும் நாடிப் போகாமல், தன்னகத்தேயே வளம் கொழுவியதாய் அமைந்த ஒரு நிலப்பரப்பே, நாடு எனப் பெயர் பெறுவதாகும். ஆனால் இத்தகைய இயற்கைவளம் பொதுளியதாய் அமைந்த ஒருநாடு இக்கால் உலகில் வேறெங்கும் இல்லையாயினும், நம் பண்டைத் தமிழகப் பகுதி அவ்வாறிருந்தது என ஒங்கிப் பேசலாம்.

"உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே"- எனக் கூறி மாரி வண்கைப் பாரியாண்ட பறம்பு மலை இயற்கை வளம் மிக்கதாய் இருந்தது என்றார் கபிலர். ஆயினும் அத்தகைய வளங்கனிந்த நாட்டை நாம் காண்பதற்கரிதெனினும், அவ்வாறு வளம் மிக்கதாய் ஆக்கிக்கொள்ள வல்ல அறிவாற்றல் மிக்கோர் பலரும் உள்ளனர். அவ்வறிவாற்றலிற் சிறந்தோரை நாம் ஆளுநராகக் கொள்வோமாயின் நாமும் அவ்வளம் சான்ற நாட்டில் வதிந்து வாழ்வை நுகரலாகும்.

இனி இத்தகைய நாட்டை உண்டாக்க ஆளுநருமே அன்றி, மக்களும் உயர்ந்தோராய் இருத்தல் வேண்டும்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

புறம்


-என்றார் ஒளவை மூதாட்டியாரும். நாடாகட்டும், காடாகட்டும், பள்ளமாகட்டும், மேடாகட்டும், எங்கு மக்கள் நல்லவராக உள்ளனரோ, அந்த நிலமே நல்ல நாடு என்பது அவர் கருத்து.


“ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஒதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”

- என்று முதுமொழிக்காஞ்சி முழங்கும்.

ஒருநாட்டின் பெருமைக்கு, முதற்பெருங் காரணமாய் நிற்போர் அந்நாட்டு மக்களே.


பொய் அறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நல் மாந்தரொடு
-(மதுரைக் காஞ்சி)

விளங்கும் நாடே நாடெனப்படும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்பால், அவன் ஆண்ட உறையூரைப்பற்றி வெள்ளை நாகனார் என்னும் நல்லிசைப் புலவர்.


‘அரசெனப் படுவது நினதே பெரும!
.............................................................
நாடெனப் படுவது நினதே!’

- என்று பாடிப் பரவுகின்றார்.

அத்தகைய நன்மக்கள் வாய்ந்த ஒரு திருநாட்டை அரசும் நெறி திறம்பாமல் ஆளல் வேண்டும்.


“அறநெறி முதற்றே யரசின் கொற்றம்!
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங் கொல்லாது
ஞாயிற் றென்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ்சாயலும்”

உடையராய் ஆளுநர் இலங்க வேண்டும்.


“யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”

- என்று பண்டைத் தமிழரசர் எண்ணி,


“முதுவோர்க்கு முகிழ்ந்த கையினராகவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினராகவும

ஏரோர்க்கு நிழன்ற கோலினராகவும்
நேரோர்க்கு அழன்ற வேலினராகவும்”

-(சிறுபாணாற்றுப்படை)

ஊரை ஆண்டுத் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர். தண்டமிழ்ச்சான்றோர் பல்கிய பண்டைத் தமிழரசு அவ்வாறிருந்தது.


“அரசியல் பிழையாது அறநெறிகாட்டி
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது”

-(மதுரைக்காஞ்சி)

நடப்பதாகி

முறை வேண்டுநர்க்கும்
குறை வேண்டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கருளி

(பெரும்பாணாற்றுப்படை)

நீர் சூழ் தமிழகத்தைச் சீர் சூழ்ந்ததாக்கிய பண்டை அரசின் கீழ்தான். மாந்தர் இன்புற்று வாழ்ந்தனர், இவையெல்லாம் பழங்கதை!

இற்றைத் தமிழரசோ, ஒழுங்கற்றார் கையிற்றங்கியது. மக்கள் நலங்கருதாது, தன்னலங் கருதுவார் பின்புறத்திற் போயொடுங்கியது. இதுவேயுமன்றி, மக்களும் அரசு பிறழ்ந்த அடிவழித் தாமும் பிறழ்ந்தனர். மேனாட்டாரிடமிருந்து கற்க வேண்டுவன கல்லாது, கற்கக் கூடா நாகரிகமென்னுங் கொடுவழி பற்றிக் குலைந்து போகின்றனர் மக்கள்


“இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லதுவெஃகி வினை செய்வாரையும்”
(-பரிபாடல்)


“இலனென்னும் எவ்வம் உரையாமுன்
ஈயுங் குணமுடையாரையும் காண”

ஆவலாகவிருக்கின்றோம்.


“கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதுஉம் குறைகொடாது”
(பட்டினப்பாலை)

வாழும் வணிகரைக் காணோம்.


‘அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறும்’

(-மதுரைக்காஞ்சி)

அவையத்தைப் பார்க்கவும் கேட்கவும் விருப்பமுடைய வராகித் தேடுங்கால் பொய்மையும் புலையும், வெப்பச் சூழ்வும் கொண்ட அறமன்றம் நம் கண்களிற் படுகின்றது.

இத்துணை ஏற்றத் தாழ்வுக்கும் காரணம் என்னை ? என்னை ? என்று கடாவுவாரையும், கவலுறுவாரையும் கூடக் காணவியலவில்லை. ஊன்றிப் பார்க்குங்கால் நமக்குக் கிடைத்த முடிபுகள் இரண்டு.

இற்றைத் தமிழகத்தில்,

அரசுக்குத் தக்க குடிகளில்லை!
குடிகளுக்குத் தக்க அரசில்லை.

இவ்விரு குறைகளுள் ஒன்று நிறைவாயிருப்பினும், காட்டரசாகவோ, அன்றி நாட்டரசாகவோ இஃது இயங்க முடியும். ஈண்டோ, காடுமல்லாது, நாடுமல்லாது, மக்காளும், மக்களும் புகுந்த காடுங் கழனியுமாக வன்றோ காண்கின்றோம். நல்ல மக்கள் நல்லாட்சியை அமைத்தல் இயலும். அல்லது நல்ல ஆட்சி, நல்ல மக்களை, ஆக்கலும் இயலும் ஈண்டு நாம் பெற்ற தன்னரசாட்சியில் மக்களே ஆள்நரைப் பொறுக்குவதால் நல்ல ஆட்சி அமையாமைக்கும் அவரே காரணமாவார். இதற்குக் கல்லாமையைக் காரணங் காட்டுவாருமுளர்.

அதுவும் ஒரு காரணமேயன்றி, அதுவே முழுக் காரணமாகாதென்போம். அதற்கு வலித்தமும் காட்டுவோம்

கல்லாதவர் பெருகியிருப்பதாலேயே ஆள்நரைத் தெரிந்தெடுக்க இயலாதவராய் மக்கள் இருக்கின்றனர் என்பது உண்மையாயின் கற்றவர் என்பவர் எல்லோரும் ஒழுக்கமுடையவராயும், நெறியுடையவராயும் பிறர் நலம் பேணும் பெற்றியராயும் இயங்குகின்றனரோ? அவ்வாறில்லையே! கற்றவரில் நூற்றுக்குப் பதின்மர் தாமும் அவ்வாறில்லாதிருக்கக் கல்லாமையே ஆட்சிச் சிறப்பின்மைக்குக் காரணமாவ தெங்ஙன்?

ஆக இது பற்றி நாம் கொண்ட கருத்து என்னை யெனின் கற்றவர் மாட்டுமன்றிக் கல்லார் மாட்டும் திகழுவனவாகிய மக்கட்பண்பும், ஒழுக்க விழுப்பமும் இல்லாமைப் பொருட்டே நாடும். நாட்டை இயக்குகின்ற அரசும் சிறப்பாக நாம் இலக்கியங்களில் படிக்குமாறும். கேட்குமாறும் அமைய இயலவில்லை.

“என்னிழல் வாழ்நர் சென்னிழற காணாது


கொடியன்எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகு!”
(புறம்)

என்று சூளுரைக்கும் அரசையுங் காணமுடியவில்லை.


“யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே!”
(புறம்)

என்று பாடி மகிழ்வாரையும் காணற் கியலவில்லை.

இனி, ஒழுக்கத்தானும் பண்பாலும் கவலுறாமல் பொருளும், அரசுமே வாழ்வெனக் கொண்டு சிறக்கும் புறநாட்டார் எல்லா வற்றானும் பெருமையுறல் காண்கின்றோமே. அஃதெப்படியோ? என்று கேட்பார்க்குச் சில கூறுகின்றோம்.

மேனாட்டாரின் வாழ்வு எத்தகையது என்பதையும் நம் நாட்டாரின் வாழ்வு எத்தகையது என்பதையும் நன்றாக அறிந்து கொள்ளக் கருவிகளாயிருப்பன அவரவர் நாட்டு இலக்கியங்ளே!

மேன்னாட்டாரின் இலக்கியங்கள் யாவும் ஒழுங்கு ஒழுங்கு என்று அரற்றுவன. நம்நாட்டு இலக்கியங்கள் முற்றும் பசி பசி என்று அழுங்குவன. அவர்க்கு வயிற்றைப் பற்றிக் கவலையில்லை. வாழ்வைப் பற்றிய கவலையே மிகுவானது நமக்கு வாழ்வைப் பற்றிக் கவலையில்லை. வயிறு பற்றிய ஏக்கமே மிக இருந்தது.


“ஒரு நா ளுணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என்நோ வறியாய் இடும்பைகர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

என்று மேனாட்டார் யாரும் பாட இயலாது.

ஒழுக்கம் ஒழுக்கம் என்று முழக்கிய அன்னா கரினினாவும், ஒழுங்கற்றுப்போன கதையும் அதுபோன்றவையுமே அவரின் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. அவர்தம் சாகா இலக்கியங்கள் வாழ்வின் உண்மைப்பயன் காண ஏங்கியதாகவும் அது அங்குக் கிடைக்கவில்லை யென்றும் உலகப் பேரறிஞர் டால்ஃச்டாய் அடிகள் எழுதியுள்ளனர்.

ஆனால் இங்கோ,

“குப்பைக்கீரையை உப்பின்றி உனக்கி ஒருநாள் ஒருபொழுது’’ உண்டதாக இலக்கியங்கள் பேசுகின்றன.

இற்றைத் தமிழகத்திலும் மாந்தர் பசியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அதற்கொரு வழியும் காணவில்லை. ஒழுக்கத்தைப் பற்றியும், பண்பாடு பற்றியும் பேசிப்பேசிக் காற்று மண்டலத்தை கூற்று மண்டலமாக்குகின்றனர். ஆனால் அவ்வாறு நடப்போரையும் நடந்து காட்டுவாரையும் காணோம். ஆகலின் மக்கள் என்று பண்பாட்டில் சிறந்து விளங்குகின்றனரோ, அன்றே ஆட்சியும் நெறியிற் சிறந்து விளங்க இயலும். கற்றால் மட்டும் போதாது; கற்றவாறு நிற்கவும் மக்கள் பழகல் வேண்டும். இதுபற்றியே வள்ளுவர் ஒழுக்கம், பண்பு என்று முழங்குகின்றார்.

இன்று தமிழகங் காண்கின்ற நிலையில் மக்கள் செய்ய வேண்டுவனவும் ஆள்நர் செய்ய வேண்டுவனவும் நிறைய உள. இருவரும் முறையாக அவற்றைக் கடைப்பிடியாய் நின்றாற்று வாராயின் நம் தமிழகம் விரைந்து முன்னேறும். மக்கட்பிரிவும் சமயப்பிரிவும் அவற்றை வளர்க்கும் கொள்கையும், சட்டமும் உடனே நீக்கப்படல் வேண்டும். வெற்று ஆரவாரச் சிறுத்தொழில்களையும் பெருந் தொழில்களையும் தடைப்படுத்தி நாட்டை ஒரு உழவு நாடாக முதலில் அமைத்தல் வேண்டும். கைத்தொழில் நாடாகவும் உழவு நாடாகவும் ஒருங்கே ஆக்கி விடுதல் என்பது எவ்வாற்றானும் இயலாததொன்று, ஒரு கைத்தொழில் நாட்டிற்கு மிகுந்த பொருள் தேவை; உழவு நாட்டிற்கோ, மிகுந்த உழைப்புத் தேவை. நம்நாடு பொருளற்ற, நாடு மக்கட் பெருக்கம் மிகுந்த நாடாகிய இஃது உழைக்க முற்படுமானால் பொருள் தானே குவியும், மக்கள் ஒருங்கே இருந்து உழைக்கத் தடையாயிருப்பன சாதிகளும் சமயங்களும். ஆதலின் அவற்றை முதலில் ஒழுங்கு செய்து கொள்ளல் அரசின் தலையாய கடமை

இவ்வாறு, அரசினர் செய்யும் நல்வினைகட்கு மக்கள் எல்லாவற்றானும் துணையாக நிற்றல் வேண்டும். இவ்வாறன்றி இந் நாவலந் தீவையோ, தமிழகத்தையோ முன்னேற்றிவிட வேண்டுமென்று முனைவோர் நெல் குற்றிக் கைசலிப்பாரே ஆவர் என்பதை மீண்டும் கூறுகின்றோம்.

- தென்மொழி, இயல் : 1, இசை 5, 1959