வேண்டும் விடுதலை/நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று!
ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று!
இந்தியத் தலைமையமைச்சர் தமிழினத்தைப் பொறுத்த அளவில் மிகமிக விழிப்பாகச் செயல்படுகிறார். எங்கு தமிழீழத்தில் விடுதலைப் போராளிகளின் கை ஓங்கி விடுமோ என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளார். தமிழீழத்தில் அமைதியை உண்டாக்க என்று ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் இந்தியப் படைகளைக் கொண்டு, மிகவும் கரவாக, விடுதலைப் புலிகளின் பேரெதிர்ப்பை ஒழித்துக் கட்டுகிற முயற்சியைச் செய்தார். புலிப்படையின் பெரும் பகுதியை மிகவும் கொடுமையாக அழித்தார். அமைதியை ஏற்படுத்த என்றும், ஆட்சியாளர்க்கு உதவுவது என்றும் படைகளை ஓர் அளவில் திரும்பப் பெறுவது என்றும் - அவர் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இலங்கைத் தமிழர்களுக்கு மாறானதாகவே இருந்து வருகிறது.
இலங்கையின் தலைமை நிலையில் செயவர்த்தனே மாறியதையும் பிரமதேசா வந்ததையும் கூட அவர் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே ஆக்கிக் கொண்டார். அண்மையில், இந்திய அரசின் எந்தத் தலையீடும் இன்றி, இலங்கை அதிபர் பிரமதேசாவும் விடுதலைப் புலிகளின் படிநிகராளிகளான அரசியல் கருத்தாளர், இலண்டன் பாலசிங்கமும், அரசியல் பிரிவுத் தலைவர் யோகியும், கிளிநொச்சி பகுதித் தலைவர் மூர்த்தி வலித்தும், லாரன்சும், திருவாட்டி பாலசிங்கமும் இலங்கை ஆட்சி அதிகாரப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுரையாடல் நடத்தியதில் கூட, இராசீவ், தமிழீழக் கோரிக்கைக்குச் சிங்கள அரசு எவ்வகையானும் இசைந்து விடக் கூடாது என்பதில் பிரமதேசாவிற்கு பல வகையான எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். எது எவ்வாறாயினும், தமிழர்களுக்கென்று தமிழீழம் என்றொரு தனிநாடு அமைந்துவிடாமல் இருக்க, இராசீவ் முன்கூட்டியே எத்துணை விழிப்பாகச் செயல்பட வேண்டுமோ அத்துணை விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இதுபோலவே கடந்த பிப்ரவரி தேர்தலில், தமிழ்நாட்டில், வேறு கட்சி ஆளுமைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இராசீவ் காட்டிய அக்கறையும், ஆர்வமும், சொல்லுந்தரமன்று. பின்னர், அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாகவும் வேறாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அந்நிலைக்கு மூப்பனாரே முழுக் காரணம் என்று காரணம் காட்டி, ஒருவாறு தமக்கு நேர்ந்த இழிநிலையையும் பழிநிலையையும் சரிகட்டிக் கொண்டதுடன், அடுத்து நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் அந்நிலை நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னர், வேண்டாம் என்று ஒதுக்கிய செயலலிதா அ.தி.மு.க. அணியைத் தம் கட்சியுடன் இணக்கப்படுத்திக் கொண்டார்.
அத்துடன் நில்லாது, தமிழ் நாட்டிலும், மற்ற சில, மாநிலங்களிலும், ஆட்சிக்கு வந்துவிட்ட எதிர்க் கட்சிகளின் வலிவையும் அதிகார நிலையையும் குறைககும் நோக்கத்துடனும், தம் ஆட்சி அதிகாரங்களை விரிவுபடுத்தும் எண்ணத்துடனும், கருநாடக அரசைக் கவிழ்த்ததுமன்றி, சிற்றூர்ப்புற ஐந்தாய (பஞ்சாயத்து) ஆட்சியை விரிவுபடுத்தவும் அவற்றுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும் இக்கால் ஆழமாகக் கருதி முடிவு செய்து செயல்பட்டு வருகிறார். அதற்கென ஆட்சியியல் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர விருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நடுவண் ஆட்சி எப்பொழுதும் இந்தியத் தேசிய இனங்களுக்கு மாறான ஆட்சியே! அதுவும் தமிழ்த் தேசிய இனத்திற்கு, வேறு எந்தத் தேசிய இனத்தை விட முற்றிலும் வேறான ஆட்சியே! இத்தனை மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும், தம் வல்லதிகாரத்தாலும், சூழ்ச்சிகளாலும் அடக்குமுறைச் சட்டங்களாலும், அடியோடு துடைத்து, அழித்து விட்டுத் தில்லியை ஆளும் முதலாளியமும் பார்ப்பணியமும் இணைந்து, என்றென்றும் தாங்களே தங்கள் பிறங்கடைகளே ஆண்டு வரலாம் என்று நன்கு திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு வருகின்றன. இத் தில்லுமுல்லுகளுக்கும் திருட்டு, சூழ்ச்சி, ஏமாற்றுத்தனங்களுக்கும் ஒட்டுமொத்தமாகத் தரப்படும் பெயர்களே இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசிய நீரோட்டம் என்பவெல்லாம். இவை என்னவோ உலகக் கண்ணோட்டம், மக்கள் நலம் கருதிச் சொல்லப்படுவனவாகச் செயல்படுவது இன்னொரு வகை ஏமாற்றே!
இந்நிலையில் நாமும் அதே உணர்வுடன் நம் நோக்கத்தை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது. நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று. இன நிலையில் ஆரியத்தையும், பொருள் நிலையில் முதலாளியத்தையும், மொழி, கலை, பண்பாட்டு நிலையில் இந்தி, சமசுக்கிருதத்தையும், ஆட்சி அதிகார நிலையில் வடநாட்டு வல்லதிகாரத்தையுமே ஆகும். இவ்வத்தனையும் இணைந்ததுதான் இந்திய ஒருமைப்பாடு என்றால், நாம் தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையையே முன்வைக்க வேண்டும். அதற்காகவே போராடவும் வேண்டும்.
— தமிழ்நிலம், இதழ் எண். 121, மே, 1989