வேண்டும் விடுதலை/பிரிவினை நோக்கித் தள்ளப்படுகிறோம்!




பிரிவினை நோக்கித்
தள்ளப்படுகிறோம்


“சீனம் மீண்டும் புகைந்து கொண்டுள்ளது ; பாக்கித்தான் மறுபடியும் குமுறிக் கொண்டுள்ளது” என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து இனி இந்திய அரசின் எச்சரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும். எச்சரிக்கைகளைத் தொடர்ந்து மீண்டும் பல புதிய சட்டங்கள் இந்திய ஒருமைப்பாட்டை வலுவுடையதாக்கும்; கை விடப்பட்ட பழைய சட்டங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பெற்று நடைமுறைக்கு வரும். இவற்றிற்கிடையில் "மக்கள் பசி பஞ்சத்தையும், பிற சிக்கல்களையும் பாராது, இந்திய நாட்டு ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்பது போன்ற வேண்டுகோள்கள் இங்குள்ள அமைச்சர்கள், தலைவர்கள், தொண்டர்கள் என்பவர்களின் வாய்களிலிருந்து அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். இப்படிப் பல மாதங்கள் வரலாற்றில் கழியும். மீண்டும் அமைதி; அதைத் தொடர்ந்து சலசலப்பு; என்ற படி இந்திய அரசியல் நாடகம் நடத்தப் பெற்று, அதில் ஒருமைப்பாட்டு நாட்டியம் ஆடப்பெற்று வருகின்றது. இந்நாடகத்திற்குள் நாடகமெனப் பீகார் உணவுப் பஞ்சம், மராட்டியத்தில் உள்ள சிவசேனை இயக்கம், அப்துல்லாவின் விடுதலை வேட்கை, சீக்கியரின் தனி நாட்டுக் கோரிக்கை, நாகர்களின் புரட்சிப் போராட்டம், காசுமீரத்தின் அவிழ்க்க முடியாத சிக்கல், வங்காளிகளின் உள்நாட்டு எழுச்சி, இந்திய இலங்கை ஏதிலிகளின் பரிமாற்றம், பருமிய - இந்தியரின் உடைமைப் போராட்டம், இன்னோரன்ன பற்பல துணைக் காட்சிகள், இக் காட்சிகளுக்கிடையிடையே தொங்க விடப்பெறும் திரைச் சீலைகளின் உள்ளிருந்து கொண்டு முழக்கப் பெறும் தேசிய இசை, இந்தி விளம்பரம் ஒருமைப்பாட்டின் பின்பாட்டு! இதுதான் இந்திய அரசியல்!

மூக்கு உள்ள வரை சளியும் போகாதது போல், இந்தியா உள்ளவரை அதன் வடகிழக்கு எல்லையில் பரந்து விரிந்துகிடக்கும் சீனாவும் அதன் வடமேற்கு எல்லையில் இணைந்து கிடக்கும் பாக்கித்தானும் அவற்றின் சலசலப்புகளும். முர முரப்புகளும் என்றைக்கும் போகா. இவ்வார்ப்பாட்டங்கள் உள்ளவரை இந்திய அரசியல் நாடகத்தில் என்றைக்கும் ஒரே கதைதான்! கதையின் வழக்கமான காட்சிகள் தாம். காட்சிகளுக்கு இடையே ஒரே பின்பாட்டுத்தான். எவருக்கும் இதில் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டா. வேண்டுமானால் பேச்சுக்காகக் கொஞ்சகாலம் நிகரமைக் கொள்கையைப் பேசலாம்; சிறிது காலம் பொதுவுடமைக் கொள்கைக்குத் துணைநிற்கலாம்; சில காலம் பேராயக்கட்சி அரசேற்கலாம்; சிலகாலம் பிறகட்சிகள் ஆட்சி செய்யலாம் ; ஆனால் இம்மாற்றங்களெல்லாம் நாடக நடிகையர், இசைக் குழுவினர் மாற்றங்கள் போல் நாடகக் கதைக்கும் காட்சிகளுக்கும் புறம்பானவையாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.

இந்தியாவின் இத்தகைய குழப்பங்கள் இந்திய மக்களையே மூச்சுத் திணற வைத்துக் கொண்டுள்ளன. இனி இவற்றைவிட இந்தியாவின் உள்ளீரலையே பற்றிக் கொண்டிருக்கும் நோய்கள் பல. அவை இங்குள்ள குல, சமய வேறுபாடுகள், தென்னாட்டு வடநாட்டுப் பார்ப்பனரின் உள்ளரிப்புகள், அவற்றின் அடியாக எழுந்த மூடநம்பிக்கைகள் முதலியவை. இவற்றைப் பற்றிய சிக்கலைத் தீர்ப்பதற்கு எந்த உலக ஒன்றிப்பும் முன்வராது. இச்சிக்கல்களுக்குள் அறிந்தோ அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கும் கட்சி பேராயக் கட்சி. வாகாகக் கிடைத்த இக்கட்சியின் சிணுக்கு துணிகளைக் கைகளில் பிடித்துச் சில பணக்கார முதலைகளும், சமயத் தலைவர்களும் எந்த அளவுக்கு இந்தச் சிணுக்குகளை அவிழ்த்து நூல்களை உருவிக் கொள்ள முடியுமோ, அந்த அளவில் உருவிக் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத ஒரு தந்திரப் போக்கு, உலக அரசியல், பொருளியல் அறிஞர்களுக்கே விளங்காத ஒரு புதிர். இவற்றிற்கெல்லாம் ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. அது தான் இந்நாட்டின் அரசியல் பொருளியல் அமைப்புச் சட்டம். இந்தச் சட்டத்தையே வங்காள விரிகுடாவிலோ, குமரிமாக் கடலிலோ கொண்டுபோய் வீசியெறிந்து விட்டு, புத்தம் புதிய சட்டங்களைப் புத்தம் புதிய மூளைகளைக் கொண்டு செய்வித்தால் ஒழிய, இந்தியாவின் அரசியல் நாற்றத்தைப் பனிமலையளவு சவர்க்காரம் கொண்டு, பசிபிக் மாக்கடல் அளவு தண்ணீர் விட்டுக் கழுவினாலும் தீர்த்துவிட முடியாது. ஏனென்றால் இந்தச் சட்டத்தை அமைத்தவர்கள் அறுவர். அதில் நால்வர் பார்ப்பனர்; ஒருவர் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் முசுலிம், அறுவரில் நால்வரால் ஒப்புக் கொள்ளப் பெற்ற சட்ட அமைப்புகளே இவ்விந்திய வரலாற்றையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களால் ஒப்புக் கொள்ளப்பெற்ற சட்ட அமைப்புகளின் இன்றியமையாத தந்திரச் சொற்களெல்லாம் பழங்கதைப் புளுகர்களான மநு, சாணக்கியர் முதலியோர் எழுதிய குலவேறுபாட்டுக் கொள்கை என்ற குட்டையில் ஊறிக் கிடந்த மட்டைகளே! எனவேதான் “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளவரை, இங்குக் குமுகாய உரிமைக்கு வழியில்லை; வழங்கப்பட்ட உரிமைகளும் குல, சமய அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளன; இவை இருக்கும் வரை இங்குள்ள மக்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளும், அரசியல் போராட்டங்களும் இருந்தபடியேதான் இருக்கும். நாமும் அவறிற்காகப் போராடிப் போராடி இறந்தபடியே தான் இருப்போம். இவ்விரண்டு நிலைகளுக்கும் உட்பட்டு நாம் செத்துக் கொண்டிருக்கும் இப் போராட்டமே நமக்கு வாழ்க்கையாக இருக்கும்” என்று சொல்கின்றோம். எண்ணிப் பார்ப்பவர்களுக்கு நாம் கூறுகின்ற இக்கருத்து எத்துணையளவு உண்மையானது என்று புரியாமல் போகாது. தெளிவாக விளங்கும். விளங்கிக் கொள்ளாதது அவர்களின் பின் தங்கிய நிலையைப் பொறுத்தது ஆகும்.

மேற்கண்ட வகையில் பெருத்த சிக்கலுக்குட்பட்டதான இந்திய அரசியல் அமைப்பில் நம் தாய் நிலமாகிய தமிழகம் ஆட்பட்டுத் தவிப்பது நம் போன்ற நெஞ்சினார்க்கு எத்துணைக் கவலை தருவதாக உள்ளது! இப்பொழுதுள்ள சூழ்நிலையில். இந்தியா ஒன்றாக இருக்கும் வரை பேராயக்கட்சிதான் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கும். அது பெரும்பான்மை பெறுகிறவரை வடநாட்டினர்தாம் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருப்பர். தென்னாட்டுக் காமராசரின் கை தென்னக அரசியல் பிடியை நெகிழ விட்டு விட்டதால், இனி அவரின் வடநாட்டுப் பிடியையும் தளர்த்தி விடுவதற்கு வடவர்கள் உறுதிபூண்டு விட்டனர். அவர் ஒருவராகிலும் தென்னாட்டவர்க்கு - குறிப்பாகத் தமிழர்க்குத் தீங்குதரும் வாடைக்காற்றுக்குத் தடுப்புச் சுவராக இருந்து வந்தார். அவரையும். இடித்துத் தள்ளிவிட வேண்டிய ஒரு கட்டாய நிலை இப்பொழுது வடநாட்டு அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவர் வழி நின்ற அரசியல் தடுப்பு நீக்கப்படுமானால், பேராயக் கட்சி இங்குள்ள ஓரிரு நாத்தடிப்புக்காரர்களின் வாய்க்கு வரகரிசியாக இருக்குமே தவிர, தமிழர்களின் உரிமை பறிபோகாமல் காக்கும் கைக்கேடயமாக இருக்காது என்பது அழுத்தத் திருத்தமாக நம்பலாம்.

மேலும் இந்தியாவில் பேராயக் கட்சி ஆட்சியில் உள்ளவரை மொழிச்சிக்கலை. இந்திச்சிக்கலை அது தீர்க்காது; தீர்க்க விரும்பாது. இந்திச் சிக்கல் உள்ளவரை பிற தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கு முகாமை காட்டப்பெறாது. பேராயக் கட்சி பெரும்பாலும் வடவரின் கைக் கோடரியாகவே இருக்கின்ற காரணத்தால், இந்திய அரசியல் அதிகாரங்கள் முற்றும் தில்லியிலேயே குவிக்கப்பட்டுக் கிடக்கும். அவற்றைப் பரவலாக்க வடவர் ஒரு போதும் இசையார். அதுவரை தமிழகத்தில் ஏற்படும் சிறுசிறு சிக்கல்களுக்கெல்லாம் (தமிழகப்பெயர் மாற்றம்: ஆகாசவாணி பெயர் நீக்கம் போன்றவற்றிற்கு) கூட 2000 கற்களுக்கு அப்பாலுள்ள தில்லிக்குப் போய்த்தான் முடிவுகாண வேண்டும். நம் தமிழக அமைச்சர்களும் உறுப்பினர்களும் எவ்வளவு பாடுபட்டாலும் தம் அரசியல் உரிமையை ஓர் அணுவளவுகூடத் தம் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பர். இவற்றைப் பற்றியெல்லாம் அரசியல் சட்டத்தில் மிகத் தெளிவாகவும், முன்னெச்சரிக்கையாகவும் எழுதிவைக்கப்பெற்றுள்ளது.

“எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் அதன் பகுதிகளைப் பிரித்தோ, பிற மாநிலப் பகுதிகளுடன் இணைத்தோ, பல மாநிலங்களை ஒன்றாக இணைத்தோ ஒரு மாநில அமைப்பைப் புதியதாக்கலாம். ஒரு மாநிலத்தின் பரப்பைக் குறைக்கவோ, கூட்டவோ, அதன் எல்லைகளை மாற்றவோ, பெயரை மாற்றவோ, செய்யலாம், இந்த மாற்றங்களைக் குடியரசுத் தலைவர் தம் இசைவுடன் கூடிய சட்ட மன்றத் தீர்மானத்தின் படி பாராளுமன்றம் செய்யலாம்” என்பது அரசியல் சட்டம்.

இந்நிலையில் அவர்கள் ‘காசி’ யை (வாரணாசி)யாக மாற்ற விரும்பு வார்களே தவிர, ‘மெட்ராசை’த் ‘தமிழக’மாக்க விரும்பார். இதுபற்றி அவர்கள் முன்பே எண்ணி முடிவு கட்டிக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பிற வடமாநிலங்களின் பெயர்களையெல்லாம் (காசுமிரி- காசுமிரம், பஞ்சாபி- பஞ்சாப், வங்காளி- வங்காளம்; ஒரியா- ஒரிசா, பீகாரி- பீகார்; குசாரத்தி- குசராத், மராத்தி- மகாராட்டிரம் என) மொழியடிப்படையில் பெயர் வைத்தவர்கள் தென் மாநிலங்களான தெலுங்கு வழங்கும் மாநிலத்தை ஆந்திரம் என்றும், மலையாளம் வழங்கும் மாநிலத்தைக் கேரளம் என்றும்; கன்னடம் வழங்கும் மாநிலத்தை மைசூர் என்றும்; தமிழ் வழங்கும் மாநிலத்தை மெட்ராசு என்றும் வைக்கின்ற பொழுதே தென்னாட்டினர்க்கு மொழியுணர்வும் இனவுணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று கருத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிகின்றது இல்லையா? இப்படிப்பட்ட மொழியுணர்வு ஏற்படக் கூடாதென்று கருதிக் கொண்டதற்குக் காரணம் பிராமணியமே! பொதுவாகப் பார்ப்பனர் இந்தியா முழுமையும் பரவியுள்ளனர் என்றாலும், அவர்களின் மிகுந்த வலிமை தென்னகத்திலேயே ஊடுருவி நிற்கின்றது. தென்னகத் திராவிடக் குடும்பத்தில், அவர்களின் வல்லாண்மை மொழியளவிலும், இன அளவிலும் இரண்டறக் கலந்து நிற்கின்றது. திராவிட மொழிகளான மலையாளம் தெலுங்கு, கன்னடம் முதலியவற்றிலிருந்து சமசுக்கிருதம் முற்றும் நீக்கப்படுமானால் அவற்றின் எஞ்சிய பகுதிகளெல்லாம் தமிழ் மொழியாக ஒளிவிடுவதை எவரும் மறுத்தோ, தடுத்தோ விடமுடியாது, எனவே தான் தென்னகத்தார்க்கு மொழியுணர்வு ஏற்பட்டுவிடக் கூடாதென்ற எண்ணம் வடவர்களை விடப் பிராமணர்களுக்கு மிக ஆழமாகப் பதிந்து கருவளவில் பொதிந்து நிற்கின்றது. இந்நிலையில் திராவிட மாநிலங்கள் எவற்றையும் மொழிப் பெயரிட்டுக் கூறுவதை எந்தப் பிராமணனும், வடவனும் ஒப்புக்கொள்ளான். அதற்கான சட்ட அமைப்புகளையும் அவர்கள் கைகளில் வைத்துக் கொண்டுள்ளனர் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

மேலும் அரசியல் அமைப்பு போன்றே இந்தியாவின் குமுகாய அமைப்பும் சிக்கல் வாய்ந்ததாகவே உள்ளது. எவரும் எந்தக் காலத்தும் இங்குள்ள வேறுபாடுகளையும், சமயப் பூசல்களையும் வேரறுத்து விடாதபடி சட்டத்தில் காப்புச் செய்யப்பட்டுப் பூட்டிடப் பெற்றுள்ளது. சமயச் சார்பற்ற அரசு என்று சொல்லளவில் கூறப்படுகின்றதே தவிர “சட்ட அமைப்பில் அந்தப்படியான ஒரு சொல் எந்த ஒரு வரியிலும் எழுதப்படவில்லை” என்று திரு. சி. பி. இராமசாமி உட்பட்ட பெருந்தலைப் பிராமணர்களே உரைத்துப் பெருமைப்பட்டுப் போயிருக்கின்றனர். இதன் உட்பொருள் என்னவெனின், “இந்தியாவிலிருக்கும் வரை இந்துச் சமயமும் இருக்கும் என்பதே!” இந்துச் சமயம் இருக்கும்வரை இங்குள்ளவர் இனம் இனங்களாவும், குலங்குலங்களாகவுமே பாகுபட்டுக் கிடப்பர் என்பது உறுதி. தமிழரும் அப் பாகுபாட்டில் என்றும் நாலாந்தர அடிமைகளாகவே கிடப்பர் என்பதும் அழிக்க முடியாத உறுதி. இந்நிலையில் குமுகாயத் துறையிலும் தமிழர் என்றென்றும் தம் உரிமைகளை இழந்தபடியே இருப்பர் என்பது தெளிவாகின்றது. பொருளியல் அளவில் தமிழகமும் பிற மாநிலங்களும் நடுவணரசின் அடிமையாகவே இருக்கும் என்பதை, அண்மையில் தமிழக முதலமைச்சர் திரு, அண்ணாத்துரை அவர்களுக்கு வட்டி நீக்கம் பற்றியும் அரிசியிழப்பு ஈட்டுத் தொகை பற்றியும் திரு. மொரார்சி தேசாய் விடுத்த விடையிலிருந்து நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு அரசியல், பொருளியல், குமுகாயவியல், மொழி பண்பாடு முதலிய அத்தனைத் துறைகளிலும் தமிழகம் தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்றதை எந்தக் கட்சி உண்மைத் தலைவரும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கமுடியாது. இச்சூழ்நிலையில் இந்திய அரசினரின் ஒருமைப் பாட்டு அமைப்பு மராட்டியரின் 'சிவசேனை’ இயக்கத்தாலும், வங்காளியரின் மொழியெழுச்சியாலும், நாகர்களின் விடுதலை வேட்கையாலும் அப்துல்லாவின் தளராத தன்னம்பிக்கையாலும் சிதறியடிக்கப்பட்டு வருகின்றது. இன்னும், “பலகோடி உருபாக்கள் இழப்பானாலும் இந்தி மொழியை நுழைத்தே தீருவோம்” என்று கொக்கரிக்கும் சேத் கோவிந்ததாசு போன்றாரின் வெறிக் கொள்கையும் தென்னவர்க்கு அமைதியும் ஆறுதலும் தருவதாக இல்லை. என்றும் வாய் வாளாத அரசியல் அடிமைகளாகத் தமிழர் கிடப்பதைவிட உரிமைப் போரிட்டுச் செத்துத் தொலைப்பதே மேல் என்று படுகின்றது. வடநாட்டினின்றும், வெளி நாடுகளினின்றும் தமிழ் இனம் துரத்தியடிக்கப் படுகின்ற நிலையில், தமிழனின் இருக்கின்ற கையளவு புகலிடமும் பறிக்கப் பட்டு விடுமோ என்று அஞ்சவேண்டிஉள்ளது. இந்தியக் கூட்டாட்சியால் தமிழனுக்குக் கிடைக்கின்ற ஊதியத்தைவிட மிகுதியாக இழக்க வேண்டியுள்ளது. அவன் இழந்த, இழக்கின்ற அரசியல் பொருளியல் குமுகாய உரிமைகளுடன், அவனின் மூலப் பொருள்களான தன்மானமும் பண்பாடும் வேறு பறிபோகின்றன. தமிழன் தான் இறப்பக் கொடுத்த வரலாறு ஏராளம்;ஈந்து ஈந்து அவன் தன் சிறப்பையே கெடுத்துக்கொண்டான்; அறவாழ்வையே ஏளனமாக்கி விட்டது தமிழனின் தன் மான இழப்பு! அவன் இனியும் ஏமாளியாக இருக்க விரும்பவில்லை. ‘சிவசேனை’ போன்ற இயக்கத்திற்குத் ‘தமிழ்ப்படை’ எவ்வகையிலும் தாழ்ந்ததன்று. மராட்டியத்தில் இருக்கும் தென்னாட்டவரை - தமிழரைவிட இங்குள்ள வடவர்கள் வலிந்தவர்களும் அல்லர். பொதிய வெற்பில் பொடியாக்கப்படும் அவர்தம் எலும்புகள், கன்னி மணலில் புதைக்கப்படுவது தமிழர்களின் மறுமலர்ச்சி வாழ்வின் தொடக்கமாக அமைவது பெருமைதரக் கூடியதே. தமிழன் தன்னை உணர்த்தக் காலம் வந்துள்ளது; நெடிதுயர்ந்த மடிதுயில் களைந்து, தமிழன் தெளிவடைந்து எழுந்துள்ளான். எழுந்ததும் தமிழக விடுதலைக் குரல் அவன் செவிகளில் படுகின்றது. பிரிவினை நோக்கி அவன் தள்ளப்படுகிறான். இடப்படும் ஆணைக்குக் காத்துக்கிடக்கும் இளைஞர் பட்டாளம் ஆட்சியினர்க்கு எச்சரிக்கை கொடுத்துப் புறப்படுகின்றது. வெற்றியை நோக்கி நடையிடட்டும் அதன் முனைப்பு!

- தென்மொழி, சுவடி : 5, ஓலை 5, 1967